Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 28



“என்ன சோனா எதுக்குக் கூப்பிட்ட?”


“பாட்டி போய் அஞ்சலியை கூப்டிட்டு வர சொன்னாங்க. நீயும் வா.”


“நான் எதுக்கு?”


“ராம் அண்ணாதான் உன்னைக் கூடக் கூடிட்டுப் போகச் சொன்னாங்க.”
இவளை எதுக்குப் போகச் சொல்கிறான், அபர்ணாவுக்குப் பயங்கிற கோபம், அவள் திரும்பி ராம்மை பார்க்க, அவன் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தான். அபர்ணா விடாமல் அவனைப் பார்க்க…. இவள் பக்கம் பர்ர்வையைத் திருப்பினான். இவள் அவனை முறைத்து பார்க்க… எதற்கு முறைக்கிறாள் எனத் தெரியும்,


“போ…” என்றான் பார்வையால்… அபர்ணா சென்று சுகன்யாவிடம் சொன்னாள்.


“பாரு அவங்க இந்த நிலையிலும் அஞ்சலியை விட்டுக் கொடுக்கலை இல்லையா… நீ அதுக்கு உண்மையா சந்தோஷப்படணும். எல்லாரும் ஒண்ணா இருந்திட்டு, அவளை மட்டும் விட்டா நல்லா இருக்காது. நீ போயிட்டு வா.” என்றார்.


அபர்ணா சோனாவுடன் மனிஷும் சென்றான். உடன் டிரைவர் வேறு. முக்கியச் சாலைகள் வழியாகச் செல்லாமல் கிளை சாலை வழியாகச் சென்றதால்… பதினைந்து நிமிடத்தில் அங்கு இருந்தனர்.


“நீங்க ரெண்டு பேரும் போங்க. நான் இங்கயே இருக்கேன். பத்து நிமிஷத்தில வந்திடனும்.” என்றான் மனிஷ்.


இருவரும் உள்ளே செல்ல, நீலீமாவும் அஞ்சலியும் ஹாலில்தான் இருந்தார்கள். இருவரையும் பார்த்து வாருங்கள் எனச் சொல்லவில்லை.


“புதுசா கொஞ்சம் பேர் வந்ததும், நாங்க எல்லாம் வேண்டாதவங்க ஆகிட்டோம் போல…” எனச் சோனாவை பார்த்துக் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு நீலீமா கேட்க, அவளுக்கு நடுங்கி விட்டது.


“அப்படியெல்லாம் இல்லை சித்தி. நான் அஞ்சலியை கூப்பிடத்தான் செஞ்சேன்.” என்றாள் சோனா. அவள் நீலீமாவை சித்தி என்றுதான் கூப்பிடுவாள். அதுவும் பிரவீணா பழக்கியது தான்.


அடுத்து அபர்ணாவை பார்த்து, “பணக்கார சம்பந்தம் கிடைச்சதும், உங்க அப்பாவும் கூடப்பிறந்த தங்கையை மறந்திட்டார். என்கிட்டே ஒரு வார்த்தை கூட இந்தக் கல்யாணத்தைப் பத்தி சொல்லலை.”


“எல்லோரும் சேர்ந்திட்டு ஆடுறீங்க இல்ல… ஆடுங்க, நானும் எவ்வளவு நாளுன்னு பார்க்கிறேன்.” என்றாள் ஆத்திரமாக.


தன் அத்தையின் திறமையைப் பார்த்து அபர்ணா வாய்யடைத்து போய் நின்றுவிட்டாள். தவறை எல்லாம் இவர் செய்துவிட்டு, எப்படி இவரால் அப்படியே மற்றவர்கள் மேல் தூக்கிப் போட முடிகிறது என ஆச்சர்யமாக இருந்தது.


“பாட்டி அஞ்சலியை கூடிட்டு வர சொன்னாங்க.” என்ற சோனாவிடம்,


“அவ வர மாட்டா..” என்றாள் திமிராக.


இப்போது என்ன செய்வது என்பது போலச் சோனா அபர்ணாவை பார்க்க, மீண்டும் நீலீமா ஆரம்பித்தாள்.


“ஒருத்தன் திட்டம் போட்டு எல்லாத்தையும் நடத்திட்டு இருக்கான் இல்லையா… அந்த ராம், அவனுக்கு ஒருநாள் நான் யாருன்னு காட்டுறேன்.” என்றாள் காட்டமாக.


ராம்மை சொன்னதும் அபர்ணாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “நீங்கதான் அத்தை இப்படிச் சொல்றீங்க. ஆனா ராம் அப்படி ஒன்னும் உங்க மேல வஞ்சம் வச்சிட்டு இருக்க மாதிரி தெரியலையே. ஏன் யாருமே அந்தக் குடும்பத்தில அப்படி இல்லை.”


“அகிலா அஞ்சலி வரலையான்னு எத்தனைதடவை கேட்டாங்க தெரியுமா?” என்றவள்,


“அன்னைக்கு நைட் அஞ்சலியை இங்க கொண்டு வந்து விட்டதுதான் நான். ஆனா அஞ்சலியை ஹோட்டல்ல இருந்து கூடிட்டு வந்தது ராம்தான்.”


“அவர் நினைச்சிருந்தா அந்தப் பிரச்சனையைப் பெரிசாக்கி எல்லார்கிட்டயும் சொல்லி இருக்கலாமே. அவர் அப்படிச் செஞ்சாரா என்ன?” எனக் கேட்டதும், சோனா இது என்ன புதுக் கதை என்பது போல் பார்க்க, நீலீமா திரும்பி அஞ்சலியை முறைத்தாள்.


“அதெல்லாம் நீ பேசக் கூடாது. அது எப்பவோ நடந்தது.” என அபர்ணாவின் வாயை அடைக்கும் முயற்சியில் நீலீமா இறங்க, அப்போது பிரகாஷின் கார் உள்ளே நுழைய…. நீலீமா சட்டென்று பேச்சை மாற்றினாள்.


“அஞ்சலி நீ போய்க் கிளம்பு. நாளைக்குத் தேவையான டிரஸ் எடுத்து வச்சுக்கோ. பத்து நிமிஷத்துல ரெடி ஆகணும்.” என்றாள்.


“அபர்ணா, நீயும் சோனாவும் போய் அஞ்சலிக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்றதும், திடீர் மாற்றத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என அபர்ணா யோசிக்கும் போதே, ப்ரகாஷ் உள்ளே நுழைய, காரணம் புரிந்து விட்டது.


நீலீமா சொன்னதும் சோனாதான் உள்ளே சென்றாள். அபர்ணா அங்கேயே சோபாவில் சட்டமாக அமர்ந்தாள்.


“என்ன அதுக்குள்ள வந்துடீங்க?” நீலீமா புன்னகை முகமாகக் கேட்க,
பார்த்துக் கொண்டிருந்த அபர்ணாவுக்கு இவருக்கு எத்தனை முகம்தான் என்று தோன்றியது.


“முக்கியமானவங்க எல்லாம் வந்திட்டு போயிட்டாங்க. அதுதான் கிளம்பி வந்துட்டேன்.” என்றவர், அபர்ணாவை பார்த்து, “வா அபர்ணா.” என்றார்.


“அவங்க அஞ்சலியை கூடிட்டு போக வந்திருக்காங்க.”


“தெரியும், வெளியே மனிஷ் இருக்கான்.”


“சரி நீங்க போய் டிரஸ் மாத்துங்க. நான் அஞ்சலியை அனுப்பி வச்சிட்டு வரேன்.” ப்ரகாஷ் உள்ளே சென்றுவிட, நீலீமா அபர்ணாவை பார்க்க… இதெல்லாம் ஒரு பொழப்பா என்பது போல…. அவள் கேவலமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் பார்வை சுருக்கென்று நீலீமாவின் மனதை தைத்தது. அந்த நேரம் அஞ்சலி வந்துவிட…..அபர்ணா அந்த வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டாள்.


திரும்பக் காரில் வரும் போது மௌனம் மட்டுமே. ஆளுக்கு ஒரு மன நிலையில் இருந்தனர்.


திரும்ப மண்டபத்தில் வந்து இறங்கும் போது… யாரையோ வழியனுப்பியபடி ராம் வெளியில்தான் இருந்தான். முதலில் காரில் இருந்து இறங்கிய அஞ்சலி, அவனைப் பார்த்து முறைத்தபடி செல்ல…. அவன் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.


அடுத்து அபர்ணா சோனா இருவரும் வர… அவன் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான். ஆனால் நின்று பேச அவனுக்கும் நேரம் இல்லை. இவர்களுக்கும் மூட் இல்லை.


அபர்ணாவுக்காகத்தான் அவளது பெற்றோர் காத்திருந்தனர். அவள் வந்ததும் சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விட்டனர். மறுநாள் காலை சீக்கிரமே வந்துவிடும் படி சொல்லி அபர்ணாவை அனுப்பி வைத்தனர்.


காரில் ஏறியதும், ராம் எங்காவது தென்படுகிறானா என அபர்ணா தேடினாள். அவன் உள்ளே இருந்தான் போல… ஏமாற்றம்தான் கிடைத்தது.இன்றைக்கு அவள் வாழ்க்கையில் மாறக்க முடியாத நாள். ஆனால் அது முடிந்த விதம் தான் எரிச்சலைக் கொடுத்தது.


“எல்லாம் இவனாலதான். என்னை ஏன் போகச் சொன்னான்?” என நினைத்தாள்.


“அது உன்னோட அத்தை மா..எங்கையோ அனுப்பின மாதிரி பேசுற. உன் அத்தை வீட்டுக்குத்தான் அனுப்பினான்.” என மனம் கேலி பேசியது.


சோனா காயத்திரியிடம் நீலீமா பேசியதை சொல்லி இருக்க… அவருக்குப் பயங்கிற கோபம். எல்லோரும் அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வந்து அமர்ந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் மாடிக்கு சென்று இருந்தனர்.


“இங்க பாருங்க அத்தை, உங்களுக்கு உங்க பேத்தி வேணும்ன்னா நீங்க நீலீமாகிட்ட நேரடியா பேசுங்க. என் பெண்ணை அங்க அனுப்புற வேலை எல்லாம் வேண்டாம்.”


“அவ நிக்க வச்சுக் கேள்வி கேட்பா. என் பொண்ணு பதில் சொல்லனுமா?”


“முதல்ல அவ யாரு? அவளுக்கு என்ன தகுதி இருக்கு?” எனக் காயத்ரி விட்டு விளாசினார். அங்கே அஞ்சலி இருக்கிறாள் என்று கூடப் பார்க்கவில்லை.


“எல்லோரும் இருந்திட்டு அஞ்சலி மட்டும் இல்லைனா நல்லா இருக்காதுன்னு தான் சொன்னேன். இனிமே எதுனாலும் நானே நேரடியா பார்த்துகிறேன்.” என்றார்.


அகிலாண்டேஸ்வரியுமே ஆரம்பத்தில் அஞ்சலியிடம் தள்ளிதான் இருப்பார். ஆனால் அஞ்சலி அவரை விட மாட்டாள். அவளாக வழிய வந்து பாட்டி பாட்டி எனக் கொஞ்சும் போது, அவளும் பேத்தி தானே என இவரும் பாசம் கொண்டார்.


“இப்ப எதுக்குக் கோவிச்சிக்கிற காயத்ரி? நம்ம வீட்ல ஒரு விசேஷம் நடக்கும்போது, நாம போக முடியலையேன்னு ஆதங்கத்துல கேட்டிருப்பா.. நீ ஏன் இதைப் பெரிசு பண்ற?” பிரவீணா நீலீமாவுக்குப் பரிந்து கொண்டு வர…


“அண்ணி போதும் நிறுத்துங்க. இதெல்லாம் உங்களால தான். யாரை எங்க வைக்கனுமோ அங்க வச்சிருக்கணும். ராம் சொன்னது சரிதான். உங்க பேச்சை கேட்டு ஸ்வர்ணா அக்கா மனசு நோக பண்ணோம் இல்லையா.. எங்களுக்கு இது வேண்டும்தான்.”


யாருக்குமே தன் அம்மாவை பற்றிப் பேசும்போது வலிக்கும் தானே… அதே நிலைதான் அஞ்சலிக்கும். ராம் அகிலாவிற்குக் கண்ணைக் காட்ட… அவள் அஞ்சலியை அழைத்துக் கொண்டு சென்றாள்.


“எல்லோரும் போய்ப் படுக்கலாமா… காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்.” என ராம் சொன்னதும், அனவைரும் களைந்து சென்றனர்.


ராம் சோனாவை தனியே அழைத்து என்ன நடந்தது எனக் கேட்டுக்கொண்டான். மனிஷ் மம்தியிடம் அஞ்சலியை தனியே விடாதீர்கள் என்றான்.

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்றனர்.


வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றிப் படுக்கத்தான் நேரம் சரியாக இருந்தது. காலையில் அபர்ணாவை சீக்கிரமே எழுப்பி, சுகன்யா அவளைக் கிளப்பிக் கொண்டு இருந்தார்.


சுகன்யா அபர்ணாவுக்கு வகுடு எடுத்து, தலைவாரிக்கொண்டே பேச்சுக் கொடுத்தார்.


“நேத்து உங்க அத்தை வீட்டுக்கு போனியே, அங்க என்ன நடந்தது?” என்றதும், அபர்ணா எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அதோடு முன்பு நடந்ததையும் சொன்னாள்.


“அத்தை ஏன் மா இப்படிப் பண்றாங்க? நிமிஷத்துக்கு ஒரு மாதிரி மாறிட்டு இருக்காங்க?”


“ஒரு வகையில உங்க அத்தை பாவம்தான். அவ நினைச்சது எதுவுமே நடக்கலை. ப்ரகாஷ் கல்யாணம் ஆனவருன்னு தெரியாம காதலிச்சா…. தெரிஞ்ச பிறகு விலகி இருக்கணும். அதுதான் அவ செஞ்சதுலையே
பெரிய தப்பு.”


“ப்ரகாஷ் டைவர்ஸ் பன்னபோறேன்னு சொன்னதை நம்பி குடும்பம் நடத்தி குழந்தையும் பெத்துகிட்டா.”


“ஆனா இவங்க நினைச்ச மாதிரி நடக்கலை. ஸ்வர்ணா இதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க. அவங்க புகுந்த வீட்லயும் அவங்களுக்குச் சப்போர்ட் பண்ணதுனால…. இவங்க எண்ணம் நிறைவேறலை.”


“ப்ரகாஷ் மட்டும் தான் அவளுக்கு இருக்க ஒரே பிடிப்பு. அதை விட்டுட்டா அவ ஒன்னும் இல்லாம போயிடுவா… அதனால்தான் இந்த வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கா.”


“கல்யாணம் பண்ணி பனிரெண்டு வருஷம் குடும்பம் நடத்தின மனைவியை விட்டு போக முடியும்னா? அவர் நீலீமாவையும் விட எவ்வளவு நேரம் ஆகும். அந்தப் பயத்துலதான் உங்க அத்தை பிரகாஷை எங்கையும் தனியா விடுறது இல்லை.”


“சில நேரம், அந்த நிமிஷ கஷ்ட்டத்தை யோசிச்சு, நாம தவறான வழியில போயிடுறோம். ஆனா எடுத்த தவறான முடிவால.. வாழ்க்கை முழுதும் நாம கஷ்ட்டப்படனும். அதுக்கு இப்ப கஷ்ட்டபட்டலும் பரவாயில்லைன்னு சரியான வழியில போறது நல்லது.”


பேசிக்கொண்டே சுகன்யா மகளுக்குத் தலைவாரி முடித்து இருந்தார். அவள் ஒப்பனை செய்து முடித்ததும், இலை பச்சையில் சிவப்பு நிற பார்டர் வைத்த புடவையை மகளுக்குக் கட்டி விட்டார்.


புடவையின் மேல் பக்கம் சின்னப் பார்டரும், கீழே அரை அடிக்கு பெரிய பார்டரும் வைத்த புடவை. ரவிக்கை முழுவதுமே பட்டு ஜரிகைதான்.


“என்னமா இவ்வளவு பெரிசா இருக்கு. நான் எப்படி இதைத் தூக்கிட்டு நடப்பேன்.” என்ற அபர்ணாவின் கவலையைப் பார்த்து சுகன்யாவுக்குச் சிரிப்பு வந்தது.


இவ்வளவு பெரிய பட்டு உடுத்திவிட்டு, அதற்குப் பொருத்தமான நகைகள் போடா விட்டால் எப்படி?


கழுத்தில் பெரிய ஆரம் மற்றும் ரூபி கற்கள் பதித்த நெக்லஸ், காதில் பொருத்தமான பெரிய காதணி. கையில் ரூபி வளையல்களுக்கு நடுவில் தங்க வளையல்கள் எனத் தங்க தாரகையாக அபர்ணா ஜொலிக்க… அங்கே வந்த அருண், “அப்பு உனக்கா இன்னைக்குக் கல்யாணம்.” எனக் கேட்க,


“ரொம்பக் கிராண்டா இருக்கேனா, நான் மாத்த போறேன்.” என்றாள்.


“அபர்ணா, போற இடத்துக்கு ஏத்த மாதிரி டிரஸ் பண்ணனும். நேத்து எல்லோரும் கிராண்டா இருந்தாங்க. நீ மட்டும் தான் சிம்பிள்லா இருந்த. அவங்க வீட்டு மருமகள் எப்படி இருக்கணுமோ அப்படி இரு. நாலு பேருகிட்ட அவங்க காட்ட வேண்டாமா.”


சுகன்யா அதட்டலாகச் சொல்ல… அபர்ணா சமாதானம் ஆகாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருக்க…


“அழகா இருக்க. டென்ஷன் இல்லாம இரு.” என்றார். ஆனால் அவளை டென்ஷன் பண்ணவே அங்கே இரு ஜீவன்கள் காத்திருக்கே… அவர்களை என்ன பண்றது?

Advertisement