Advertisement

 

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 27


வரவேற்பில் ஒரு பக்கம் மாப்பிள்ளை வீட்டின் சார்பில் நித்யா, மகேந்திரன் மற்றும் அவர்கள் உறவினர்கள் நின்றிருக்க… மறுபக்கம் சோனா அவளது கணவர் அவினாஷும் நின்றிருந்தனர். ராம் அவர்களை விட்டு சற்று தள்ளி… ஆனால் முன்னால் தெரிவது போல நின்றிருந்தான்.


“வா… அபர்ணா.” என்ற நித்யா “போ… உனக்கு உள்ள நல்லா அர்ச்சனை இருக்கு. கார்த்திக் உன் மேல செம கோபத்தில் இருக்கான்.” என்றாள். அபர்ணா நித்யாவோடு பேசிக்கொண்டிருக்கும்போது, ராம் அவளது குடும்பத்தினரை வரவேற்று உள்ளே அனுப்பி இருந்தான்.


அபர்ணா அடுத்து சோனா இருந்த பக்கம் செல்ல… “ஏன் அபர்ணா இப்படிப் பண்ற?” என்றாள்.


அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வந்த ராம், “சரி வந்துட்டாளா விடு.” என்றவன், “வா அபர்ணா.” என்றான் அவள் பக்கத்தில் வந்து நின்று.


வேறுவழியில்லாமல் அபர்ணா அவனை நிமிர்ந்து பார்க்க… ஆள் எப்போதும் போல் அசத்தலாகத்தான் இருந்தான். ஆனால் கண்களில் அப்படி ஒரு சோர்வு. சரியான உறக்கம் இல்லை எனப் பார்த்ததும் தெரிந்தது. அலைச்சலில் மெலிந்தும் இருந்தான். எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தாலும், அவர்கள் சரியாகச் செய்கிறார்களா எனப் பார்க்க வேண்டியதே பெரிய வேலையாக இருந்தது.


எப்போதுமே அபர்ணா ராம்மை பார்த்துவிட்டாள், தன் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டாள். இப்போதும் அவனைப் பார்த்ததும், பறந்த மனதை அடக்கப் பெரும் பாடாக இருந்தது. ‘அபர்ணா நீ கோபமா இருக்க…கெத்தா இரு… கெத்தா இரு…’ என அவளுக்கு அவளே மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.


அவனைப் பார்த்தது புன்னகைப்போமா வேண்டாமா என்பது போல் அவள் பார்க்க… அவள் எண்ணம் புரிந்து, ராம் சிரித்து விட்டான்.


“நான் உள்ள போறேன்.” என அபர்ணா திரும்ப,


“ஒழுங்கா இங்க இரு.” என்றாள் சோனா.


“நான் போய் அகிலாவையும், கார்த்திக்கையும் பார்த்து ஹாய் சொல்லிட்டு வரேன்.” என்றவள், ராம்மை பார்த்து முறைத்துவிட்டு சென்றாள்.


“இரு நானும் வரேன்.” என்ற சோனா உடன் சென்றாள்.


“ஆமாம் அண்ணனும் நீயும் நிஜமாவே பேசுறது இல்லையா?”


“ஏன் கேட்கிற?”


“நீங்க ரெண்டுபேரும் எப்படி மாட்சிங்கா டிரஸ் மட்டும் பண்றீங்க?”


சோனா சொன்னதும் அபர்ணா சட்டென்று திரும்பி ராம்மை பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். மரூன் நிறத்தில் சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும், கோட்டும் அணிந்து இருந்தான்.


ஆமாம் ஒரே நிறம் என நினைத்தவள், அவன் முகத்தைப் பார்க்க… என்ன எனப் பார்வையாலையே கேட்டான். ஒன்றும் இல்ல எனப் பதிலுக்குத் தலையசைத்தவள், ‘அவனோட பேசாத… நீ அவன் மேல கோபமா இருக்க.’ என மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு சென்றாள்.


உள்ளே சென்றபோது ஸ்வர்ணா அவள் பெற்றோரோடு பேசிக் கொண்டு இருந்தார். அபர்ணா அவர்கள் அருகில் செல்ல.. அவளைப் பார்த்து “வா அபர்ணா.” என்றவர், “உன்னைப் பாட்டிதான் ரொம்ப நேரமா கேட்டுட்டு இருந்தாங்க. அவங்களைப் போய்ப் பாரு.” என அவளை அனுப்பி வைத்தார்.


பாட்டி முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். இவளைப் பார்த்ததும் புன்னகையுடன் அருகில் அமர்த்திக் கொண்டார்.


“எப்ப ஊர்ல இருந்துவந்த?”


“நேத்து வந்தேன் பாட்டி.”


“இந்தப் புடவையில அழகா இருக்க.. ஆனா பட்டு புடவை கட்டி இருக்கலாம். உனக்கும் ராம்முக்கும் தான் கல்யாணம்ன்னு அரசல்புரசலா எல்லார் காதுக்கும் போயிருக்கும். உன்னைத்தான் பார்ப்பாங்க.” என்றார்.


“நாளைக்குக் கட்டிக்கிறேன் பாட்டி.” அபர்ணா நல்லவிதமாகவே பதில் கொடுக்க… சரி என்பதாக அகிலாண்டேஸ்வரி புன்னகைத்தார்.


“நாங்க போய் அம்முவை பார்த்திட்டு வரோம்.” எனச் சோனா அவளை அழைத்துக் கொண்டு சென்றாள்.


அகிலாவின் அறைக்குச் சென்றால்…. அவள் பிஸியாகத் தயார் ஆகிக்கொண்டு இருந்தாள். அந்தப் பரபரப்பிலும் ‘ஹப்பா வந்திட்டுயா.’ என்பது போல் பார்த்தவள், வா அபர்ணா.” என்றாள்.


“ஹாய் அபர்ணா அக்கா.” மமதி சொல்ல…” பதிலுக்கு அபர்ணாவும் ஹாய் என்றாள்.


சுமாவும் காயத்ரியும் அவளோடு இருந்தனர். “வா மா மருமகளே…. உனக்கு நாங்க மூன்னு மாமியார் ஞாபகம் இருக்கட்டும்.” எனக் காயத்ரி மிரட்டுவது போலச் சொல்ல…


“அவ ஒருத்தி போதும் உங்க மூன்னு பேருக்கும்.” என்றாள் அகிலா பதிலுக்குச் சிரித்துக் கொண்டு.


அதைக் கேட்டு எல்லோருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. “அண்ணா அபர்ணாவை பார்த்தாங்களா?” அகிலா அக்கறையாகக் கேட்க,


“ம்ம்… அவர் நல்லா பார்த்திட்டு, மிச்சம் மீதிதான் நமக்கு உள்ள அனுப்பி இருக்கார்.” என்ற சோனாவின் கையைப் பிடித்து அபர்ணா கிள்ளினாள்.


“என்னத்தை அப்படிப் பார்த்து இருக்கப் போறான். கழுத்திலிருந்து கை வரை மூடி இருக்கா…” காயத்ரி அலுத்துக் கொள்ள…


“இதோ இந்தப் பக்கம் பாருங்க.” எனச் சோனா அபர்ணாவை திருப்பினாள்.


போட் நெக் ரவிக்கைதான். ஆனால் முதுகின் நடுவில் பெரிய ஓவல் வடிவத்தில் கத்தரித்து வேலைப்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதனால் அபர்ணாவின் வெண் நிற முதுகு பளிச்சென்று தெரிய…


“எதோ கொஞ்சம் பரவாயில்லை.” என்றார் சுமா.


“என்ன இப்படிப் பேசுறாங்க?” என அபர்ணா திகைத்து போய் விழிக்க, அகிலா அவளைப் பார்த்து சிரித்தாள். அவளையும் தான் நேற்றில் இருந்து ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.


“அஞ்சலி வந்தாச்சா?”


“இவ ஒருத்தி அப்ப இருந்து அதையே கேட்டுட்டு இருக்கா.. அவதான் வரமாட்டேன்னு சொல்லிட்டாளே.”


அகிலா கேட்டதற்குச் சுமா நொடித்தார். “நானும் போன் பண்ணி கூப்பிட்டேன்.” என்றாள் சோனா.


“சரி நாங்க போய்க் கார்த்திக் பார்த்திட்டு வரோம்.” என்றதும், “மாமாவை பார்க்க நானும் வரேன்.” என மமதி அவர்களோடு தொத்திக் கொண்டாள்.
மூவரும் கார்த்திக் அறை நோக்கி சென்றனர்.


கார்த்திக் கடைசி முறையாகக் கண்ணாடியில் தன்னைச் சரி பார்த்துக் கொண்டு இருந்தான். ஐவரி நிறத்தில் புல் சூட் அணிந்து இருந்தான். உடன் அவன் நண்பர்கள் சிலர் இருந்தனர்.


அபர்ணாவை பார்த்ததும், “இதோ மேடம் வந்துட்டாங்களே…” என்றான் நக்கலாக.


சுஜா வேலையாக இருந்தவர், யாரென்று பார்க்க, அபர்ணாவை பார்த்ததும் மகிழ்ச்சியுடன் அவளை வரவேற்றார்.


அபர்ணா கார்த்திக்கை பார்த்து புன்னகைக்க, “நான் உன் மேல செம காண்டுல இருக்கேன். பல்லைக் காட்டின, தட்டி கையில கொடுத்திடுவேன். கீழ ஒருத்தன் இருப்பனே, இளிச்சவாயன், அவன்கிட்ட வேணா வச்சுக்கோ.” என்றதும், அபர்ணாவும் பதிலுக்குக் கத்த ஆரம்பித்து விட்டாள்.


“என்ன மாப்பிள்ளைன்னு பார்த்தா ரொம்ப ஓவரா பண்ற?”


“சரி சரி, நீங்க ரெண்டு பேரும் அப்புறம் சண்டை போடுங்க. இப்ப டைம் ஆச்சு.” எனச் சுஜா குறுக்கே வர… அபர்ணா கார்த்திக்கை தள்ளிக் கொண்டு கண்ணாடியின் முன்பு சென்று நின்றாள்.


அதைப் பார்த்த கார்த்திக், “அதெல்லாம் நீ நல்லாத்தான் இருக்க.” என்றான்.


“எனக்குத் தெரியும், நீ உன் வேலையப் பாரு.” என்றாள் அபர்ணா. இருவரும் பேசுவதைப் பார்த்து சோனாவும், மாமதியும் சிரித்துக் கொண்டனர்.


“உங்க ரெண்டு பேருக்கும் நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா?” எனச் சுஜா பீடிகை போட… இருவரும் அவரைப் பார்த்தனர்.


“இனிமே நீங்க ரெண்டு பேரும் அண்ணன் தங்கச்சி. அதனால இனிமே அதுக்கு எத்த மாதிரி பேசுங்க.” என்றார்.


“இவன் எனக்கு அண்ணனா?” அபர்ணா முகத்தைச் சுளிக்க…


“ஆமாம், இனி நீ இவனை அண்ணன்னுதான் கூப்பிடணும்.” என்றார்.


“அண்ணா சொல்லு, அண்ணா சொல்லு…” எனக் கார்த்திக் அவளை வேண்டுமென்றே வெறுப்பேற்றினான். இருவரும் அண்ணன் தங்கை என அழைத்துக் கொள்ளவில்லையே தவிர… மனதில் இருவரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருந்தனர்.


சுஜா சோனாவோடும், மமதியோடும் பேசிக்கொண்டு இருந்தார். “உன் தங்கச்சிக்கு எங்களை அறிமுகம் செய் டா மச்சான்.” எனக் கார்த்திக்கின் நண்பர்கள் வேறு நச்சரிக்க ஆரம்பிக்க…


“டேய் ! இது அவ ஆளுக்குத் தெரிஞ்சுது, உங்களைக் கொன்னுடுவான் டா.” என்றான்.


அப்போது கார்த்திக் ரெடியா எனக் கேட்டு ராம் வந்தான். அபர்ணா கண்ணாடியில் கவனமாக இருப்பது போலக் காட்டிக்கொண்டாள்.


“ராம், எப்ப உங்க கல்யாணம்?” என்ற சுஜாவிடம்,


“சீக்கிரமே வச்சிடலாம் அத்தை.” என்றான் ராம்.


“யாரு பொண்ணு?” அபார்ணா நக்கலாகக் கேட்க,


“டேய் ! இந்த லூசு பொண்ணு வேண்டாம். வேற நல்ல பொண்ணா பார்க்கலாம்.” என்றான் கார்த்திக்.


“நீ சும்மா இரு கார்த்திக்.” என்ற சுஜா, “ஏன் அப்படிக் கேட்ட?” என்றார் அபர்ணாவை பார்த்து,


“என்னைக் கல்யாணம் பண்ணிக்க என்னைத்தானே கேட்கணும். என்னைக் கேட்கவே இல்லை. ஆனா ஊரெல்லாம் சொல்லி ஆச்சு.” அபர்ணா தன் ஆதங்கத்தைக் கொட்ட…


“ஆமாம் போன் எடுக்க மாட்டா, அப்புறம் எப்படிக் கேட்கிறது?” எனக் கார்த்திக் முனங்க.


“அவ சொல்றது கரெக்ட் தான பா… நீ அவளைத் தானே முதல்ல கேட்டு இருக்கணும். தப்பு உன் மேலதான். அதனால நீ இப்ப என்ன பண்ற? எங்க எல்லார் முன்னாடியும் கேளு. அதுதான் உனக்குத் தண்டனை.” என்றார் சுஜா.


அதெல்லாம் கேட்க மாட்டான் என நினைத்து அபர்ணா அலட்சியமாக நிற்க, அந்த நேரம் பார்த்து மகேந்திரன், நித்யா, சுகன்யாவும் உள்ளே நுழைந்தனர்.


அங்கே சுவற்றில் ஓட்டியிருந்த சிவப்பு ரோஜாவில் ஒன்றை பறித்துக் கொண்டு வந்த ராம், அபர்ணாவின் முன்பு ஒரு காலில் மண்டியிட்டு, பூவை நீட்டியபடி “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா அபர்ணா.” எனக் கேட்டே விட்டான்.


சுற்றி இருந்தவர்கள் போட்ட ஓ… என்ற சத்தத்தில் மண்டபமே அதிர்ந்தது. வெளியில் இருந்தவர்கள், கீழே இருந்தவர்கள், மணப்பெண்னின் அறையில் இருந்தவர்கள், எல்லாம் என்ன சத்தம் என்று இவர்கள் இருந்த அறையின் பக்கம் பார்த்தனர்.


அபர்ணாவுக்கு முகம் குங்கும்மாகச் சிவந்து விட்டது. அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. ராம் இப்படிச் செய்வான் என்று… ராம்மின் கைப்பற்றி எழுப்பியவள், “முதல் நீங்க இங்க இருந்து போங்க.” என அவனைப் பிடித்து வெளியில் தள்ளினாள்.


“ஹே நீ பதில் சொல்லு. அப்பத்தான் போவான்.” கார்த்திக் சொல்ல…


“ஆமாம்.” என்று ராம்மும் பிடிவாதம் பிடித்தான்.


அபர்ணா கையெடுத்து கும்பிட்டு, “எனக்கு ஓகே தான் போங்க.” என்றதும், ராம் சிரித்துக் கொண்டே, அவள் கையில் பூவை கொடுத்துவிட்டுச் சென்றான். உடன் கார்த்திக்கும் மற்றவர்களும் சென்றனர். சுஜா சுகன்யாவை அழைத்துக் கொண்டு சென்றார்.


“என்ன இங்க என்னனவோ நடக்குது.” என்ற நித்யாவிடம், சோனா நடந்ததைச் சொன்னாள்.


அபர்ணாவுக்கு உடல் வெலவெலத்துப் போய், கைகால் நடுங்கவே ஆரம்பித்து விட்டது. இவன்கிட்ட போய்த் தேவையில்லாமல் வாயைக் கொடுத்தோமே என நொந்து கொண்டாள்.


அங்கே அகிலா இருந்த அறைக்கு ஓடிய மமதி. “அகிலா அக்கா, ராம் அண்ணா, அபர்ணா அக்காவை எல்லார் முன்னடியும் ப்ரொபோஸ் பண்ணாங்க தெரியுமா?” என இங்கு நடந்த கதையை ஒலிப்பரப்பினாள்.


ராம் தன்னைத் திருமணதிற்குக் கேட்டது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால்… இன்னொருபுறம் இப்படி எல்லார் முன்னாடியும் வைத்து மானத்தை வாங்கி விட்டானே என்று இருந்தது.


சிறிது நேரம் சென்று போகலாமா எனக் கேட்ட சோனாவுடன் நடந்தாலும், அவள் யாரையும் நிமிர்ந்தே பார்க்கவில்லை. அவள் பெற்றோர் இருந்த இடம் தேடி சென்றாள். அங்கே சுகன்யா ஸ்ரீகாந்திடம் காதில் எதோ சொல்லிக் கொண்டு இருந்தார்.


அபர்ணா சென்று அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். மேடையை விட்டு பார்வையை இந்தப்புறம் அந்தபுறம் நகர்த்தவில்லை. மேடை அலங்காரம் அவ்வளவு அழகாக இருந்தது. கார்த்திக்கும் அகிலாவும் கண் நிறைந்த ஜோடியாக, மேடையில் நின்று கொண்டிருந்தனர்.


வரவேற்பு ஆரம்பிக்கும் போதே… உணவு அறையும் திறந்து விட்டனர். விருந்தினர் கூட்டமாக ஒரே இடத்தில் தங்காமல் பார்த்துக் கொண்டனர். விதவிதமான இனிப்பு வகைகள். இலையில் வைத்து வீணாக்க வேண்டாமே என்று சிறு சிறு கிண்ணங்களில் வரிசையாக வைத்திருந்தனர். யாருக்கு என்ன பிடித்தாமோ எடுத்துக் கொள்ளலாம்.


ராயல் வெட்டிங் என்பார்களே அது போலத்தான் நடந்தது. ராம் இந்தப்பக்கம் அந்தப்பக்கம் என்று பம்பரமாகச் சுழன்றாலும், அபர்ணாவையும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வான். அவள் பொம்மை போல ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது… பார்க்க சிரிப்பாக இருந்தது.


அவளை ரொம்ப டென்ஷன் படுத்திவிட்டோம் எனப் புரிந்தது. பின்னே கேள்வியாகக் கேட்டுக் கொண்டு இருந்தால்…. கல்யாணம் முடியும் வரை இவளை பேசவே விடக்கூடாது என நினைத்தான்.


ஓரளவு கூட்டம் குறைந்ததும், தன்னை அழைத்த சோனாவிடம் சென்றாள். அப்போது எதிரே ஆதித்யா வர, அபர்ணாவின் முகம் மாறியது. அவன் அவளிடம் பேச வந்ததைக் கண்டுகொள்ளாமல், அவனைக் கடந்து சென்றாள்.


எதோ தவறு செய்து விட்டு, மன்னிப்பை வேண்டுவது போல, ஆதித்யாவின் பார்வை இருக்க… அவனை முழுதாக வெறுத்துவிட்ட பார்வை அபர்ணாவுடையது. இதைப் பார்த்த ராமின் புருவம் உயர்ந்தது. அவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதை அவன் அறிவான்.

Advertisement