Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 26



இரவு எட்டு மணிக்கு அகிலாவின் அலுவலகத்திற்குக் கார்த்திக்கும் ராம்மும் வந்திருந்தனர். இன்னும் திருமணதிற்கு இரண்டு மாதங்கள்தான் இருந்தது. திருமண ஏற்பாடுகளைப் பற்றிப் பேசிவிட்டு, பேச்சு அபர்ணாவின் பக்கம் திரும்பியது.


“என்ன டா இது? நீங்க ஒத்து வந்தா… அவங்க ஒத்து வர மாட்றாங்க. அந்த எருமை வேற போன் எடுக்க மாட்டேங்குது. என்ன பண்ணுமோ தெரியலை.” எனக் கார்த்திக் அபர்ணாவை திட்ட…


“அவ இங்க இல்லை. பெங்களூர்ல இருக்கா…” என்றான் ராம்.


“நீ பேசினியா அவகிட்ட…”


“இல்லை.. ஆனா எனக்குத் தெரியும். அவ அங்க ஒரு விளம்பர கம்பெனியில வேலை பார்க்கிறா.”


“இதெல்லாம் தெரிஞ்சு வச்சிரு… ஏன் நீ ஒரு போன் பண்ணி பேச வேண்டியது தான?”


“நீங்க பண்ணியே எடுக்கலை… நான் பண்ணி எடுப்பாளா? என் மேல கொலை வெறியில இருப்பா…”


“என்ன டா உன் ஜாதகம்? இவ்வளவு நாள் உங்க அம்மா, இப்ப அபர்ணாவா?” கார்த்திக் நொந்து கொள்ள…


“நீங்க பண்ணா எடுப்பாளோ என்னவோ… போன் பண்ணிதான் பாருங்களேன் அண்ணா.” என்றாள் அகிலா.


சரி என அபர்ணாவுக்கு அழைத்துப் பார்க்க, அவள் எடுக்கவில்லை.


“மெசேஜ் போட்டு பார்போம், என்ன ரியாக்ஷன் வருதுன்னு பார்க்கலாம்.” என்றவன், வாட்’ஸ் அப்பில் “ஹாய் பொண்டாட்டி” என அனுப்பி வைக்க… உடனே பதில் வந்தது.


அதைப் பார்த்துவிட்டு ராமிற்குச் சிரிப்பு தாங்கவில்லை. “என்ன டா?” என்ற கார்த்திக்கிடம் செல்லை காட்டினான்.


அவளிடமிருந்து பதிலுக்கு வரிசையாகச் செருப்புப் படம் வந்திருந்தது.

“என்ன எனக்கும் சொல்லுங்க?” என்ற அகிலாவிடம்,


“சொன்னா உங்க அண்ணன் மானம் போயிடும் பரவாயில்லையா?” என்றான் கார்த்திக் சிரிப்புடன்.


“செம கோபத்தில இருக்கா… இப்ப என்ன பண்றது?” என ராம் யோசிக்க,


“அவ கால்ல விழுந்திடு. வேற வழியே இல்லை.” என்றான் கார்த்திக்.


“அதுக்காவது அவ நேர்ல வரணும்ல.” என்ற ராம்மை திகைத்து நோக்கிய கார்த்திக், “டேய் ! நான் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டா… நீ நிஜமாவே அந்த ஐடியால தான் இருக்கியா.” என்றவனைப் பார்த்து ராம் சிரித்தான்.


“எங்க கல்யாணத்துகாவது வருவாளா?” என்ற அகிலாவிடம் “கண்டிப்பா வருவா.” என்றவன், மற்ற இருவரிடம் விடைபெற்று வெளியில் வந்தான்.


வண்டியில் ஏறுவதற்கு முன்பு மீண்டும் செல்லை பார்த்தவன், சற்றுக் குறும்பு தலை தூக்க… பதிலுக்கு உதடுகளாக அனுப்பி வைத்தான். அதனுடைய அர்த்தம் முத்தம் தானே… “எங்களை மட்டும் டென்ஷன் பண்ற இல்லை. நீயும் கொஞ்சம் டென்ஷன் ஆகு டி.” என நினைத்துக் கொண்டான்.


அவன் எதிர்ப்பார்த்தது போல அவளிடம் இருந்து பதிலேதும் வரவில்லை.
கார்த்திக், சோனா ஏன் அகிலா கூட அழைத்துப் பார்த்துவிட்டாள் அபர்ணா யாருடைய அழைப்பையும் எடுக்கவே இல்லை. அழைப்பை ஏற்காததால்… அனைவரும் வாட்’ஸ் அப்பிலும் தகவல் அனுப்பி வைத்தனர். அபர்ணா அவர்களுக்குத் தந்த பதில் மௌனம் மட்டுமே.


“தப்பு என் மேலதான். உன் கோபம் நியாயம்தான். நீ இப்ப சந்தோஷமா இருக்கேன்னு மட்டும் சொல்லு. நான் விலகிடுறேன். ஆனா உன்னையே நீ கஷ்ட்டபட்டுத்திட்டு மட்டும் இருக்காத.” என ராம் இன்னொரு நாள் அனுப்பி வைத்தான்.

அதற்கும் பதில் வரவில்லை. ஆனால் அவள் எல்லாவற்றையும் பார்க்கிறாள் எனத் தெரிந்தது.


திருமணதிற்கு ஒரு மாதம் முன்பு ராம் பத்திரிகை வைக்க ஆரம்பித்தான். தொழில் சார்ந்த நண்பர்களுக்குப் பத்திரிகை கொடுக்கும் பொறுப்பை. தனது சித்தப்பாக்கள் இருவருக்கும் கொடுத்து விட்டான். ஆனால் அவர்களிடம் இருந்து அந்தப் பொறுப்பை ப்ரகாஷ் வாங்கிகொண்டார்.


“எனக்கு இதாவது கொடுங்க.” என அவர் சொன்னதும், அவர்களும் விட்டுவிட்டனர். ராமிற்குத் தெரியும் அவனும் கண்டுகொள்ளவில்லை.


தன் பெண்ணின் திருமணதிற்குப் பிரகாஷ்தான் உரிமையாக எல்லாம் செய்ய வேண்டும். ஆனால் மற்றவர்களிடம் இருந்து கேட்டு வாங்கிச் செய்யவேண்டிய நிலையில் இருக்கிறார். இதை விடக் கேவலம் உண்டா என்றுதான் ராமிற்குத் தோன்றியது.


சில உறவினர்களுக்கு வைக்க ஸ்வர்ணா, சுமா, காயத்திரி மற்றும் பிரவீணா சென்றனர். முக்கியமான உறவினர்களுக்கு வைக்கும் போது ராம்மும் ஸ்வர்ணாவும் சென்றனர்.


அப்படி ஒருநாள் இருவர் மட்டும் பத்திரிகை வைத்துக் கொண்டிருக்கும்போது, “அம்மா, அபர்ணா வீடு இங்க பக்கத்தில்தான். நாம அவங்க வீட்டுக்கும் வச்சிட்டு போயிடலாமா?” எனக் கேட்டான்.


கண்டிப்பாக அவர்களையும் அழைக்க வேண்டும் தானே… அதனால் ஸ்வர்ணாவும் சரி என்றார். அவர் நினைத்திருந்தால்… நீ மட்டும் போயிட்டு வா எனச் சொல்லி இருக்கலாம். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. அவர் மகனுக்காக விட்டுக் கொடுத்தார். அதையும் முழு மனதாகத்தான் செய்தார்.


மணி அப்போது மாலை ஏழு, ஸ்ரீகாந்த் வீட்டில் இருப்பார் என்றே ராம் அந்த நேரம் சென்றான். அவன் எதிர்பார்த்தது போல ஸ்ரீகாந்த் வீட்டில்தான் இருந்தார்.


திடிரென்று இருவரையும் பார்த்ததும், அபர்ணாவின் பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சிதான். இருவருக்கும் படபடப்பாக இருந்தது. அவர்களை  வரவேற்று ஹாலில் உட்கார வைத்தனர். சத்தம் கேட்டு அருணும் வந்துவிட்டான்.


சுகன்யா குடிக்கத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க… தாய் மகன் இருவரின் பார்வையும் வீட்டை ஆராய்ந்தது. அபார்ட்மென்ட் என்றாலும் பெரிதாக இருந்தது. ஹாலை ஒட்டி டைனிங் ஹாலும், பால்கனியும்  இருந்ததால்… நல்ல விசாலமாக இருந்தது. சுகன்யா வீட்டை நேர்த்தியாக வைத்திருந்தார்.


முக்கியமானவர்களுக்கு மட்டும் வெள்ளித் தட்டில் வைத்துதான் பத்திரிக்கையே கொடுத்தனர். அதே போல் வெள்ளி தட்டில் பழங்கள் மற்றும் இனிப்புகள் வைத்து… அதன்மேல் தங்க நிறத்தில் விலை உயர்ந்த பத்திரிக்கையும் வைத்து ராம் ஸ்வர்ணாவிடம் கொடுக்க… அவர் அதை அபர்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து, திருமணதிற்கு அழைத்தார்.


பத்திரிகை கொடுத்துவிட்டு அவர்கள் கிளம்ப, “நீங்க சாப்பிட்டுத்தான் போகணும். அதுதான் நான் காபி, டீ எதுவும் கொடுக்கலை. பத்து நிமிஷம் உட்காருங்க.” என்ற சுகன்யா, அவர்கள் பதிலை எதிர்ப்பார்க்காமல் சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.


ஸ்ரீகாந்த உட்காருங்க எனச் சொல்ல… மறுத்துவிட்டு சென்றால்… தவறாகத் தோன்றும் என்பதால்… தாய், மகன் இருவரும் மீண்டும் சோபாவில் அமர்ந்தனர்.


சுகன்யா பரபரப்பாகச் சமைக்க ஆரம்பித்தார், ஏற்கனவே சப்பாத்திக்கு மாவு பிசைந்து, பன்னீர் தொக்குச் செய்து வைத்திருந்தார். அதோடு கொஞ்சம் கேசரியும், தேங்காய் சட்னியும், கார சட்னியும் செய்தார்.


சீக்கிரமே சமையல் முடித்து அவர் உணவு மேஜையில் அடுக்க… ஸ்வர்ணா எழுந்து அங்கே சென்றார். அவருக்கு ஒரு இருக்கையைக் காட்டி உட்கார சொன்னவர், பீங்கான் தட்டுக்களை எடுத்து துடைக்க ஆரம்பித்தார்.


தயங்கித் தயங்கி ஒரு வழியாக ஸ்வர்ணாவே கேட்டுவிட்டார். “அபர்ணா எங்க? வீட்டுக்கு வர ரொம்ப லேட் ஆகுமா?” என்று.


அவரே அபர்ணாவை கேட்டதும், சுகன்யாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “அவ இங்க இல்ல, பெங்களூர்ல வேலை பார்க்கிறா. மாசம் ஒரு தடவைதான் சனி ஞாயிறுக்கு இங்க வருவா.” என்றார்.


“ஓ… எப்ப போனா?”


“அவ மூன்னு மாசமா அங்கதான் இருக்கா.”


அப்போது அங்கே வந்த ஸ்ரீகாந்த, “கொடுமா நான் துடைச்சு வைக்கிறேன். நீ வேற வேலை இருந்தா பாரு.” என மனைவி கையில் இருந்த துணியை வாங்கிக் கொண்டார்.


அவர்களுது ஓபன் கிட்சன் தான். சுகன்யா சென்று சப்பாத்தி சுட கல் வைத்துவிட்டு, மாவு தேய்க்க ஆரம்பித்தார்.


சுகன்யாவை பார்க்கும் போது ஸ்வர்ணாவுக்கு அவரையே ஒரு இருபது வருடங்கள் முன்பு பார்ப்பது போல இருந்தது. இப்படித்தான் அவரும் சுறு சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருப்பார்.


அங்கங்கே செய்து தொங்க விட்டிருந்த கை வேலைகளைப் பார்த்து, “நீங்க வீட்டை நல்லா வச்சிருக்கீங்க.” என்றார் சுகன்யாவிடம்.


“அதெல்லாம் அபர்ணா செஞ்சது. அவளுக்கு இது எல்லாம் ரொம்பப் பிடிக்கும். சும்மாவே இருக்காது வாலு. அந்த ஹாலை என்ன பாடு படுத்தி வச்சிருக்கா பாருங்க.”


அவர்கள் அங்கே பேசிக் கொண்டிருக்க, இங்கே அருணிடம், “உங்க அக்காவை கொஞ்சம் வெறுப்பேற்றலாமா?” எனக் கேட்ட ராம், அவனுடன் செல்பி எடுத்தான்.


அருனின் செல்பேசியிலும் எடுத்து, “நீயே உங்க அக்காவுக்கு அனுப்பி வை.” என்றான் அருணிடம்.


“உங்க அக்கா உங்ககிட்ட எல்லாம் நல்லா பேசுறா தானே…” எனக் கேட்க,


“அப்பா அம்மாகிட்ட நல்லா பேசுற மாதிரி காட்டிக்கிறா” என்று அருண் உண்மையைச் சொல்ல…


“என்கிட்டே பேசவே மாட்டேங்கிறா.” என்றான் ராம். எதோ எடுக்க வந்த சுகன்யா அதைக் கேட்டு இருந்தார்.


சிறிது நேரத்தில் சுகன்யா சாப்பிட அழைக்க… இருவரும் எழுந்து சென்றனர். முதலில் எல்லோருக்கும் கேசரி பரிமாறி விட்டு, சுகன்யா தோசை சுட்டுக் கொண்டு வந்தார்.


தோசை பிறகு சப்பாத்தி என அவர் பரிமாற… “எதுக்கு இத்தனை பண்ணீங்க?” என்ற ராம்மிடம்,


“முதல் தடவை எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. இது கூட இல்லைனா எப்படி? இதுவே கம்மிதான்.” என்றார் ஸ்ரீகாந்த.


அவர்கள் சாப்பிட்டு முடித்துக் கிளம்ப, “வாங்க குங்குமம் வாங்கிக்கங்க.” எனச் சுகன்யா ஸ்வர்ணாவை அழைத்துக்கொண்டு டைனிங் ஹாலில் இருந்த பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ஸ்வர்ணாவிடம் ஒன்று கேட்க வேண்டியது இருந்தது.


ஒரு சின்ன வெள்ளித் தட்டில், மஞ்சள் குங்குமம் சிமிழ்களை வைத்து சுகன்யா நீட்ட… ஸ்வர்ணா மஞ்சள் குங்குமம் எடுத்து வைத்துக் கொண்டார்.


“கார்த்திக் அம்மா வீட்ல வந்து பேசுனாங்க. அபர்ணாவை உங்க பையனுக்குக் கேட்டு. உங்களுக்கு இதுல மனப்பூர்வ சம்மதமா?”


“நான்தானே அவங்களை உங்ககிட்ட பேச சொன்னேன். சம்மதம் இல்லாம எப்படிச் சொல்வேன்.” என ஸ்வர்ணா புன்னகைக்க, அதன்பிறகுதான் சுகன்யாவுக்குத் திருப்தியாக இருந்தது.


“உங்களுக்கு விருப்பம்ன்னா எங்களுக்கு அபர்ணாவை உங்க பையனுக்குக் கொடுக்கச் சம்மதம்தான்.” எனத் தங்கள் சம்மதத்தைச் சுகன்யா நேராக ஸ்வர்ணாவிடமே சொல்லிவிட்டார்.


கேட்டிருந்த அனைவருக்குமே மகிழ்ச்சி, ஸ்வர்ணாவை நினைத்துதான் சுகன்யா பதில் சொல்லாமல் இருந்தார்.


“அபர்ணாவுக்கு விருப்பம் தானே….” ராம் கேட்க,


“அதை நீங்களே அவகிட்ட கேட்டுக்கோங்க.” எனச் சுகன்யா புன்னகைக்க… அதற்கு ராம்மின் முகம் போன போக்கை பார்த்து, அவரது புன்னகை மேலும் விரிந்தது.


அன்றைய நாள் நன்றாகவே சென்றது, வீட்டிற்கு வந்த ராம் அதன் பிறகு வெளியில் செல்லாமல் வீட்டில்தான் இருந்தான். அன்று ஏனோ அவனுக்குப் பாட்டுக் கேட்க தோன்றியது.


உயிரே படத்தில் வரும்,
“பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே
ஓடோடி வா

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும் கண்ணீர்
வழிகின்றதா நெஞ்சு நனைகின்றதா
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா

காற்றில் கண்ணீரை ஏற்றி
கவிதைச் செந்தேனை ஊற்றி
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே
ஓடோடி வா…
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத்தேடிப்பார்த்தேன்

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா”


இந்தப் பாடல் வரிகள் அப்படியே அவனுடைய தற்போதைய உணர்ச்சிகளை வெளிபடுத்த… அதை அப்படியே அபர்ணாவுக்கு அனுப்பி வைத்தான். பாடலோடு சேர்த்து வரிகளையும் அனுப்பி இருந்தான்.


முதல் முறையாக அப்போதுதான் அபர்ணா மௌனம் களைந்தாள்.


“நேர்ல வரேன் பேசிக்கலாம்.” எனப் பதில் வந்தது.


“நீ என்ன பேசப்போற? எனக்கு இல்லைன்னு பதில் சொல்லப் போறேன்னா, இங்க  வராத… அங்கயே இருந்திடு. என்னோட தலையெழுத்து இதுதான்னு நினைச்சு, நானும் இப்படியே இருந்திட்டு போறேன்.” என அனுப்பி வைத்தவன், அதோடு செல்லையும் அனைத்து போட்டுவிட்டான்.


மறுநாள் பார்க்கும் போது அபர்ணாவிடம் இருந்து எந்தப் பதிலும் வந்திருக்கவில்லை. அவளுக்குத் தான் வேண்டுமா வேண்டாமா எதுவும் அவனுக்குத் தெரியவில்லை… நேரில் வரட்டும் பார்த்துக்கலாம் என விட்டுவிட்டான்.


அவனுக்குப் பிறகு கல்யாண வேலையே சரியாக இருந்தது. அகிலாவின் கல்யாணத்தை வெகு விமர்சையாகச் செய்ய நினைத்தான். செலவை பற்றி அவன் யோசிக்கவே இல்லை. எவ்வளவோ கஷ்ட்ட பட்டுவிட்டாள் தங்கை, இந்தக் திருமணம் அவளுக்குச் சந்தோஷத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைத்தான்.


திருமணதிற்கு எல்லோருக்குமே புடவைகள் எடுத்து இருந்தனர். அதே போல் எல்லோருக்கும் எடுத்துவிட்டு அஞ்சலிக்கு மட்டும் எடுக்காமல் இருக்க மனம் வரவில்லை. அதனால் அவளுக்கும் எடுத்து அகிலாண்டேஸ்வரியிடம் ஸ்வர்ணா கொடுத்தார்.


அப்போது தான் அகிலாண்டேஸ்வரி ஒரு விஷயம் சொன்னார். “ப்ரகாஷ் நீலீமா தப்புப் பண்ணாங்கதான். ஆனா நாம யாரும் அஞ்சலியை வெறுக்கலையே… அவளுக்கு இதுல சம்பந்தம் இல்லைன்னு தானே நினைச்சோம்.”


“நீலீமாவோட சொந்த பொண்ணு, அஞ்சலியையே நாம தள்ளி வைக்காத போது, அபர்ணா மேல ஏன் வெறுப்பு வந்தது? அவ கொஞ்சம் அவங்க அத்தை சாயல்ல இருக்கிறதுனால அப்படி நினைச்சிட்டோமோ?”


“நானும் கொஞ்சம் குழம்பி, உன்னையும் குழப்பிட்டேன் ஸ்வர்ணா. நீ எதுவும் மனசுல வச்சுக்காத. உன் நல்ல மனசுக்கு, அபர்ணா உனக்கு நல்ல மருமகளா இருப்பா பாரு.” என்றார்.


வீட்டுக்கு திரும்பும் வழியில் மாமியார் சொன்னதையே ஸ்வர்ணா யோசித்துக் கொண்டு வந்தார். அவர் என்றுமே அஞ்சலியை வெறுத்தது இல்லை. அவ இவங்களுக்குப் பெண்ணா பிறந்ததைத் தவிர என்ன செய்தாள்? என்றுதான் தோன்றும். ராம் அகிலா கூட அவளிடம் விழுந்து பழக மாட்டார்களே தவிர, அவளை விலக்கி வைத்ததும் இல்லை.


அத்தை சொன்னது போல… அபர்ணா நீலீமா ஜாடையில் இருந்ததால்… ஆரம்பத்திலேயே அவளைத் தப்பான கண்ணோடத்திலேயே பார்க்க நேரந்ததும் புரிந்தது.


அகிலாண்டேஸ்வரி அஞ்சலியை அழைத்துப் புடவையைக் கொடுத்த போது, அவள் வாங்க மறுத்தாள்.


“எங்க அம்மாவை அவங்க ஒதுக்கி வைக்கும் போது, நான் மட்டும் எப்படிப் பாட்டி கல்யாணத்துக்குப் போவேன்? எங்க அம்மா வரலைனா நானும் வரலை.” என்றாள்.


பிள்ளைகளிடம் தாயை பற்றித் தவறாகச் சொல்லவே கூடாது. அந்த எண்ணத்தில்தான் இதுவரை அகிலாண்டேஸ்வரி அஞ்சலியிடம் எதுவும் சொன்னது இல்லை. இப்போதும் தவறாகச் சொல்லவில்லை.

“உனக்கு நிறையத் தெரியாது அஞ்சலி. பெரியவங்க சண்டை பெரியவங்களோட போகட்டும். நீ சின்னப் பொண்ணு… நீ எல்லாரோடவும் ஒத்துப் போ.” என்றார். ஆனால் அஞ்சலி முடியவே முடியாது எனக் கோபமாகச் சென்று விட்டாள்.


திருமணதிற்கு முன்தினம் வரவேற்பு. ப்ரகாஷ் செல்வதற்கு முன் அஞ்சலியை அழைக்க… அவள் வர மறுக்க… அவளைப் போகச் சொல்லித்தான் நீலிமாவும் சொன்னாள்.

அஞ்சலி வீம்பாக வர முடியாது எனச் சொல்லிவிட்டாள். பிரகாஷும் கிளம்பி சென்றுவிட்டார். எல்லோரும் அங்க இருப்பாங்களே… அகிலா அக்காவின் வரவேற்பில் இருக்க முடியவில்லையே எனத் தவித்தும் போனாள்.


ஏழு மணிக்கு வரவேற்பு. சரியாக ஆறு ஐம்பதுக்கு, ஸ்ரீகாந்தின் கார் உள்ளே நுழைந்தது. முதலில் முன் பக்கத்தில் இருந்து அவரும், சுகன்யாவும் இறங்க… பின் பக்கத்தில் இருந்து அபர்ணாவும், அருணும் இறங்கினர்.


சிவப்பு நிற ரவிக்கையில் முழு வேலைப்பாடு செய்து இருக்க… கருப்பு நிற டிசைனர் புடவையில் அட்டகாசமாக நடந்து வந்தாள் அபர்ணா.


அதுவரை வருவாளோ மாட்டாளோ எனக் கொஞ்சம் இறுக்கமாகவே நடமாடிக்கொண்டிருந்த ராம்மின் முகத்தில், சட்டென்று ஒளி வெள்ளம் பாய்ந்தது.


கால் முளைத்த நிலவாக நடந்து வரும் தன் தேவதையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

Advertisement