Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 25



ராம் வெளிநாடு கிளம்புவதற்கு முன் பெண் பார்க்கும் படலத்தை முடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் வேகமாக ஏற்பாடுகள் நடந்தது. அவன் கிளம்பும் அன்றுதான் நாள் நன்றாக இருந்தது. அதனால் அன்று மாலை ஈ. சி. ஆர் ரோட்டில் இருந்த உணவகம் ஒன்றில், இரு குடும்பமும் சந்தித்துக் கொள்வதாக ஏற்பாடு.


ஸ்வர்ணா அகிலாவோடு பிரவீணாவும் செல்ல… ராம் அவர்களோடு செல்லவில்லை… தான் தனியே வந்துகொள்வதாகச் சொல்லிவிட்டான். அவன் பிறகு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றான். எல்லா நேரமும் கார் எடுக்க மாட்டான். சென்னையின் போக்குவரத்துக்கு இதுதான் அவனுக்கு வசதி.


கார்த்திக்கை உடன் வருகிறாயா என்று கேட்டதற்கு, அவன் வர மறுத்துவிட்டான். அவனுக்கு அபர்ணாவை தவிர வேறு யாரையும் ராம்மின் மனைவி என்ற ஸ்தானத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.


சுஷ்மிதா வீட்டில் அவளது பெற்றோர் மற்றும் சகோதரி என்று அவர்களும் கொஞ்சம் பேர்தான். மாலை நேரம் என்பதால்… வெளியே தோட்டத்தில் உட்கார்ந்து இருந்தனர்.


ராம் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டான். அவனைப் பார்த்ததும் இரு குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சி. பெண்ணின் அப்பா வரதராஜன் அவனைத் தன் குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்தார். சுஸ்மிதா சுடிதாரில் பாந்தமாக இருந்தாள். எப்போதும் அவள் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது. அது அவளுக்கு வசீகரத்தையும் தந்தது.


ஸ்வர்ணா தான் மருமகளைப் பார்த்துப் பூரிப்பில் இருந்தார். அதற்கு மேல் பிரவீணா இருந்தார்.


வரதராஜன் தான் பேசிக்கொண்டே இருந்தார். மற்றவர்கள் பேச சந்தர்ப்பமே கொடுக்கவில்லை. அவருடைய மனைவி அதற்குமேல்… சிற்றுண்டி ஆர்டர் கொடுக்கும்போது, உங்களுக்கு என்ன விருப்பம் என இவர்களிடம் கேட்கவே இல்லை.


அவரே எல்லம் சொன்னார். நிறையத்தான் சொல்லி இருந்தார். ஆனால் இவர்களைக் கேட்கவில்லை. அவராக முடிவு செய்து கொண்டார்.


எல்லாம் வந்து மேஜையே நிறைந்து விட்டது. எடுத்துக்கோங்க என உபசரித்தனர். ராம் பேரரை அழைத்துவிட்டு, அகிலாவுக்கு என்ன வேண்டும் எனக் கேட்க, அவள் மாதுளை ஜூஸ் கேட்டாள். தனக்கு ஆப்பிள் சாறு சொன்னான்.


ராம் ஆர்டர் கொடுத்ததைப் பார்த்த சுஷ்மிதாவின் அம்மா முகத்தில் கவனம் கூடியது. தன் கணவர் ஸ்வர்ணாவை அப்பாவி என்று சொன்னதும், அவர் பிள்ளைகளையும் எளிதாக நினைத்து விட்டார். சுஸ்மிதாவை பார்த்ததும் ராம் மயங்கி விடுவான் என நினைத்து இருந்தார்.


“நான் சாயந்திரம் நேரம் ஜூஸ் குடிப்பீங்கலோன்னு நினைச்சேன்.” எனச் சமாளித்தார்.


தாங்கள் பெண்ணுக்கு இப்படிச் செய்வோம் அப்படிச் செய்வோம் என அளந்து கொண்டு இருந்தனர். ராம் பொறுமை இழந்து கைகடிகாரத்தைப் பார்க்க…


“நீங்களும் சுஸ்மிதாவும் வேணா தனியா போய்ப் பேசிட்டு வாங்களேன்.” என வரதராஜன் சொல்ல…


“இல்லை இன்னொரு நாள் பார்க்கலாம். நான் கிளம்பனும். இப்ப போனாதான் ட்ராபிக்ல போய்ச் சேர சரியா இருக்கும்.” என்றவன், பேரரை அழைத்துப் பில்லுக்கு அவனே பணம் கொடுத்தான். தடுத்த வரதராஜனின் பேச்சை அவன் கேட்கவில்லை.


ராம் பொதுவாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்ள, “சரி நீங்க கிளம்புங்க, நாங்க அம்மாகிட்ட பேசிக்கிறோம்.” என்றார்.


“அகிலா ஒரு நிமிஷம் வா.” என ராம் அழைத்துக் கொண்டு சென்றான்.
அங்கிருந்து தள்ளி வந்ததும் , “நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அம்மா அவங்களுக்கு எந்த வாக்கும் கொடுக்காம பார்த்துக்கோ.” என்றான்.


“உங்களுக்குப் பிடிக்கலையா?”


“ரொம்ப டாமினேட் பண்றாங்க. நமக்கு ஒத்து வராது. ஆனா அம்மாவுக்குச் சொன்ன புரியாது. நீ எனக்குப் பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிடு. பார்த்துக்கோ கிளம்புறேன்.” என அவன் இரண்டு எட்டு எடுத்து வைக்க…


“அப்ப உங்களுக்குச் சுஷ்மிதாவை பிடிச்சிருக்கா?” என அகிலா குறும்பாகக் கேட்டாள்.


நின்று தங்கையைத் திரும்பி பார்த்தவன், “கார்த்திக் கிட்ட சொல்லி வை… அபர்ணா காதுக்கு இந்த விஷயம் போகக்கூடாதுன்னு.” ராம் சொன்னதும், அகிலா முகத்திலும் புன்னகை.


“அந்தப் பயம் இருக்கட்டும்.” என்றவள், அம்மாகிட்ட சீக்கிரம் சொல்லுங்க அண்ணா… இல்லன்னா இந்த அத்தை அடிக்கிற இன்னொரு கூத்து எல்லாம் என்னால பார்க்க முடியாது.”


“நான் ஊர்ல இருந்து திரும்பி வந்ததும் பேசுறேன். ஆனா அம்மா என்ன சொல்வாங்களோ.”


“முதல்ல கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருப்பாங்க. அபர்ணா வந்திட்டா அவ பார்த்துப்பா… அவளும் டாமினேடிங் தான். ஆனா யாருக்கும் கஷ்ட்டம் கொடுக்க மாட்டா.”


அபர்ணா அகிலாவிடம் வேலை செய்த நாட்களில் அவளது குணநலன்கள் அகிலாவுக்கு அத்துபடி. அதனால் அபர்ணா பற்றிய தனது எண்ணங்களில் மாற்றம் கொண்டாள்.


ஸ்வர்ணா செய்த ஒரே தவறு ராம் திருமணத்தில் காட்டிய அவசரம்தான். அவர் மட்டும் நிதானமாகச் செயல்பட்டு இருந்தால்… அவர் விரும்பியதே நடந்திருக்கும்.


நிறையப் பெற்றோர் அப்படித்தான். தங்களின் விருப்பு வெறுப்பு… தங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் எல்லாவற்றையும் பிள்ளைகள் மீது திணிப்பார்கள்.


தங்கள் விருப்பத்திற்கும் பெற்றவர்களின் விருப்பத்திற்கும் இடையே கிடந்து பிள்ளைகள் அல்லாடுவார்கள். இங்கும் அதேதான், ஸ்வர்ணா காட்டிய அவசரம், ராம்மை அபர்ணா பக்கம்தான் தள்ளியது.


அவனுக்கு ஷுஷ்மிதவை பார்க்கும் போது, அபர்ணாதான் மனதில் இருந்தாள். அவனுக்கு அந்த நொடி புரிந்துவிட்டது, தன்னால் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று.


இந்தப் பெண் பார்க்கும்படலம் ஒருவகையில் அவனுக்கு நல்லதே செய்து இருக்கிறது. மனதில் சஞ்சலத்தோடு வந்தான். இப்போது தன்  மனதை அறிந்துகொண்ட மகிழ்ச்சியில் செல்கிறான்.


ரொம்ப நேரமாக அகிலாவை காணோம் என ஸ்வர்ணா அவளைத் தேடி கொண்டு வந்தார். அதற்குள் அகிலாவே எதிரே வந்துவிட்டாள்.


“என்ன டி சொன்னான், உங்க அண்ணன்?”


“அண்ணனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கலையாம். அதனால நீங்க அவசரப்பட்டு எதுவும் பேசிட வேண்டாம்ன்னு சொன்னார்.”


“இந்தப் பெண்ணைப் பிடிக்கலையா? இதுக்கு மேல எல்லாம் இவனுக்கு எப்படிப் பொண்ணு தேடுறது.” எனப் புலம்பியவர், “இப்ப அவங்ககிட்ட என்ன சொல்றது?” எனக் கேட்க,


“நாங்க வீட்ல போய்ப் பேசிட்டு சொல்றோம்ன்னு சொல்லுங்க. அப்புறம் போன்ல சொல்லிக்கலாம்.” என்றாள் அகிலா.


இருவரையும் பார்த்ததும், “அப்புறம் கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்.” என வரதராஜன் ஆரம்பிக்க, அகிலாவுக்கு எரிச்சலாக வந்தது.


“அண்ணன் ஊர்ல இருந்து வந்ததும் பேசிட்டு சொல்றோம்.” எனப் பட்டும்படாமல் பதில் சொன்ன அகிலா, இப்பவே பேசிடலாமே என அவசரபட்ட பிரவீணாவை, அங்கிருந்து இழுத்துக் கொண்டு செல்ல படாது பாடுபட்டாள்.


காரின் அருகே வந்ததும், “இங்க பாத்ரூம் எங்க இருக்கு? நாம வீட்டுக்கு போக ரொம்ப நேரம் ஆகுமே.” என ஸ்வர்ணா கேட்க, அகிலா அவருக்கு அங்கே இருந்தே காட்டினாள்.


“அதோ அந்தப் பக்கம் இருக்கு, போயிட்டு வாங்க.” என்றவள், உடன் செல்லவில்லை. திரும்பப் பிரவீணா பெண் வீட்டினரிடம் பேச சென்றுவிட்டாள்… அதனால் அவருக்குக் காவலுக்கு அங்கயே நின்று கொண்டாள்.


ஸ்வர்ணாவின் நல்ல நேரமோ, கெட்ட நேரமோ… பாத்ரூமில் இருந்து வெளுயே வந்தவர், வழி தெரியாமல் மீண்டும் அவர்கள் உட்கார்ந்து இருந்த இடத்திற்கே வந்தார்.


பெண் வீட்டினர் இன்னும் அங்கிருந்து எழுந்து செல்லவில்லை. அவர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்கள் முன்பு செல்ல சங்கடப்பட்டு, பின் பக்கமாகவே சென்றுவிட நினைத்து நடந்தார். அந்த நேரம் இருட்டியும் விட்டதால்… அவரைக் கவனிக்கவும் வாய்ப்பு இல்லை.


“என்னவோ அந்தப் பையன் என்னைப் பார்த்ததும் மயங்கிடுவான்னு சொன்னீங்க. அவன் என்னைக் கண்டுக்கக் கூட இல்லை. ரொம்பப் பண்றான். அவன் தங்கச்சியோட தனியா பேச டைம் இருக்கு. என்னோட பேச இல்லையா?” சுஷ்மிதா கோபத்தில் வெடிக்க… ஸ்வர்ணாவின் நடை தன்னாலே நின்றது.


“சுஷ்மிதா, கொஞ்சம் பொறுமையா இரு. இப்பவே நாம கொஞ்சம் அவசப்பட்டுட்டோம். கல்யாணம் முடியிற வரை அவங்க இழுத்த இழுப்புக்குப் போகலாம். அப்புறம் எல்லாம் உன் இஷ்ட்டம்தான்.” வரதராஜன் சொல்ல…


“என்னால பொறுமையா எல்லாம் இருக்க முடியாது பா?” என்றாள்.   


“நல்ல சம்பந்தம் டா செல்லம். எவ்வளவு பெரிய இடம் தெரியுமா, கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் உன் சட்டம் தான். உனக்கு அவங்க வீட்ல இருக்கனுமா இரு, இல்லை நம்ம வீட்ல இரு. அப்படியும் வேண்டாமா தனிக் குடித்தனம் போயிடு.” என அவள் அம்மா அருமையான யோசனை சொல்ல… சுஸ்மிதா யோசித்தாள்.


“இந்தக் கொஞ்ச நேரத்திலேயே அவங்க தங்கையை அந்தத் தாங்கு தாங்குறார். கல்யாணம் பண்ணா நான்தான் அவருக்கு முதல்ல… என்னால அவர் அம்மா தங்கையைக் கொஞ்சுறது எல்லாம் பார்த்திட்டு இருக்க முடியாது. அதனால என்னால அவங்க வீட்ல எல்லாம் இருக்க முடியாது.”


“சரி உன் இஷ்ட்டப்படி பண்ணிக்கலாம். இப்ப அவங்க சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு போறது புத்திசாலித்தனம்.”


“சரி நான் வாயே திறக்கலை, நீங்க என்னவோ பண்ணிக்கோங்க.” என ஒருவழியாகச் சுஷ்மிதா வழிக்கு வர… அவர்கள் குடும்பம் அங்கிருந்து கிளம்பியது. செடிக்குப் பின்னால் இருந்த ஸ்வர்ணாவை அவர்கள் பார்க்கவில்லை.


ஸ்வர்ணா அங்கேயே ஆணி அடித்தது போல் நின்றுவிட்டார். உண்மை முகத்தில் அறைந்தது போல் இருந்தது. ராம்மிற்கு மனைவியாக வருபவள் தன்னுடன் அனுசரித்துப் போவாள் என இவர் எப்படி நினைத்தார்.


இந்தச் சுஷ்மிதா இல்லாமல் வேறு பெண்ணைப் பார்த்தாலும், அவளும் இப்படி இருக்க மாட்டாள் என என்ன நிச்சயம்?


பெண்ணைப் பெற்றவர்கள் தான் இன்றைக்குப் பாக்கியசாலிகள்… கேட்டால் பெண் பிள்ளைகளுக்குத் தான் பெற்றவர்கள் மீது பாசம் என்பார்கள். ஆனால் திருமணதிற்கு முன்பு எந்த ஆணும், தன் பெற்றவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை.


எல்லாவற்றிற்கும் சுயநலம்தான் காரணம். என் கணவன், என் பிள்ளைகள், என் பெற்றோர் போதும், கணவனைப் பெற்றவர்கள் தேவை இல்லை. டேய் பசங்களா,   நீங்களும் கொஞ்சம் வாயைத் திறந்து பேசுங்கடா.


ஆண்கள் மட்டும் யோக்கியம் என்று சொல்ல வரவில்லை. மனைவி குடும்பத்தை மதிக்காத ஆண்களும் இருக்கிறார்கள். முன்பு ஆண்கள் ஆடினார்கள். இப்போது பெண்கள் திருப்பிக் கொடுக்கிறார்கள்.


இருவருமே தங்கள் கடமையை உணர்ந்து நடந்தாலே போதும், வீண் பிடிவாதம், வறட்டுக் கெளரவம் பார்த்தே இன்று நிறையக் குடும்பங்கள் சிதறிக் கிடக்கிறது.


மருமகளை மகளாக நடத்த பெரியவர்களுக்குத் தெரியவில்லை… இதே நம்ம அம்மாவா இருந்திருந்தா… என விட்டுக்கொடுக்க இளையவர்களும் முன்வருவது இல்லை. இதுதான் இப்போது பெரிய சிக்கல். யார் கை ஓங்கி இருக்கிறதோ.. அவர்கள் மற்றவர்களை அடக்கி வைக்கவே பார்க்கிறார்கள்.


வாழு மற்றவர்களையும் வாழ விடு. இந்த எண்ணம் இருந்தாலே போதும், குடும்பங்கள் ஒற்றுமையாக இருக்கும்.


ஸ்வர்ணாவுக்கு இன்று பெரிய படிப்பினை கிடைத்தது. ராமிற்கு மனைவியாக வருபவள், தன்னை மதிப்பால் என்றோ… தன்னிடம் அன்பாக நடந்துகொள்வாள் என்றோ.. ஏன் ஒரே வீட்டில் இருப்பாள் என்றோ கூட, எந்தவித உத்தரவாதமும் இல்லை என்பதை நன்றாகப் புரிந்து கொண்டார்.


ரொம்ப நேரமாக அம்மாவை காணவில்லை என அகிலா அவரைத் தேடியே வந்துவிட்டாள். அகிலாவின் குரல் கேட்டதும், தெளிந்த ஸ்வர்ணா நடந்ததை அவளிடம் கூடச் சொல்லவில்லை.


ராம் கிளம்பி வெளிநாடு சென்றுவிட்டான். அவன் இல்லாத நாட்களில் ஸ்வர்ணா எப்போதும் சிந்தனையிலேயே இருந்தார்.


இரண்டு நாட்களாக அவருக்கு இடது பக்க தோளுக்கு அடியில் வலித்துக் கொண்டே இருந்தது. அன்று அவர் மட்டும் எப்போதும் பரிசோதனைக்குச் செல்லும் மருத்துவமனைக்குச் சென்றார்.


பரிசோதித்த மருத்துவர், இதயத்தில் பிரச்சனை என்றதும், ஸ்வர்ணா பயந்துவிட்டார்.


“ஆபரேஷன் பண்ணனுமா டாக்டர்.”


“இல்லைமா ஆரம்ப நிலைதான். இப்ப ஊசி போட்டுக்கோங்க, மாத்திரை எழுதி தரேன். கரெக்டா சாப்பிடுங்க. இனிமே உணவு கட்டுப்பாடு ரொம்ப அவசியம். நீங்க கண்டிப்பா வெயிட் குறைக்கணும். இதுலையே கண்ட்ரோல் பண்ணிட்டா… ஆபரேஷன் தேவைப்படாது.” என்றவர், மூன்று நாட்களுக்கு மட்டும் தினமும் வந்து ஊசி போட வேண்டும் என்றார்.


மாலைதான் ஸ்வர்ணா மருத்தவமனையில் இருந்து வீடு திரும்பினார். மிகவும் களைப்பாக இருந்தார். சாப்பிட்டு மாத்திரை போட்டுவிட்டு சீக்கிரமே படுத்துக் கொண்டார். அகிலா இரவு வந்ததால்…அவளுக்கு அம்மா மருத்துவமனை சென்றது பற்றி ஒன்றும் தெரியவில்லை.


மறுநாள் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றதும், யோசனையாகப் பார்த்த காரோட்டியிடம், “சத்து ஊசி போட வர சொல்லி இருக்காங்க. இன்னும் ரெண்டு நாள் போகணும்.”என்றதும், அவரும் நிம்மதி அடைந்தார்.


அதுவும் ஊசி போட்டுவிட்டு உடனே ஸ்வர்ணா வந்துவிட… அவரும் பெரிதாக எதுவும் இருக்கும் என நினைக்கவில்லை. அதனால் ராம்மிடம் அதைப் பற்றிச் சொல்லவேண்டும் என அவர் நினைக்கவில்லை.


ஏற்கனவே ஸ்வர்ணாவுக்கு நிறைய மன அழுத்தம் உண்டு. இதில் இப்போது உடம்பு முடியவில்லை என்றதும், ரொம்பவே உடைந்து போனார்.


தான் இன்னும் எத்தனை நாள் இருப்போமோ… மகன் இன்னும் நீண்ட காலம் வாழப்போகும் வாழ்க்கைக்குத், தான் ஏன் குறுக்க நிற்க வேண்டும்? அவனுக்குப் பிடித்த பெண்ணையே…. அது அபர்ணாவாக இருந்தாலும், அவன் திருமணம் செய்து கொண்டு வாழட்டும் என முடிவுக்கு வந்தார்.


சுஸ்மிதா வீட்டில் பையனுக்குச் சம்மதம் இல்லை என்று தகவல் சொல்லப்பட்டது. அவர்களுக்கு மேல் பிரவீணா தான் ஏன் என்று தவித்துப் போனார்.


ராம் வெளிநாட்டில் இருந்து திரும்பியதும், ஸ்வர்ணாவிடம் பேச தயங்கிக் கொண்டே இருந்தான். பிரவீணா மீண்டும் ஒரு வரன் கொண்டு வர…தான் பேச வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தான்.


“அம்மா, நான் அபர்ணாவை கல்யாணம் பண்ணிக்கட்டுமா?” என இவ்வளவுதான் கேட்டான். அதற்காகக் காத்திருந்தது போல… உடனே ஸ்வர்ணா ஒத்துக் கொண்டார். அவர் உடனே ஒத்துக் கொண்டதால்தான் ராமிற்குச் சந்தேகம் எழுந்தது. அவன் அவரை யோசனையாகப் பார்த்தான்.


இன்னைக்கே நம்ம சம்பந்தி அம்மாவை விட்டு அவங்க வீட்ல பேச சொல்லலாம் என்றார். ஏற்கனவே அவர் முடிவு செய்து வைத்திருந்தது.


சுஜாவிடம் ஸ்வர்ணா சொல்ல.. அவரும் மகிழ்ச்சியாக அபர்ணா வீட்டில் பேசும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆனால் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல, அபர்ணா வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை.


“வேண்டாங்க, எங்களுக்கு அவங்க ரொம்பப் பெரிய இடம். அதுவும் என்னைக்கு இருந்தாலும், அபர்ணாவை அவங்க நீலீமாவோட சேர்த்துதான் பார்ப்பாங்க. பின்னாடி தேவையில்லாம பிரச்சனை வரும்.”


“அவங்கவங்களுக்கு ஏத்த இடத்தில சம்பந்தம் பண்ணிகிறது எல்லோருக்குமே நல்லது.” என்றார் சுகன்யா. அதை ஸ்ரீகாந்தும் அமோதித்தார்.


“என்னங்க அவங்க இறங்கி வந்தா, நீங்க இப்படிப் பண்றீங்க? அபர்ணாவுக்காகப் பாருங்க. அவ எவ்வளவு ஆசைப்பட்டா?”


“அவ எவ்வளவு கஷ்ட்டபட்டான்னும் எனக்குத் தாங்க தெரியும். இப்பத்தான் என் பொண்ணு கொஞ்சம் தேறி வந்திருக்கா.. திரும்ப அவ மனசு உடைஞ்சா, என்னால தாங்க முடியாது.”


“ச்ச.. ச்ச… நாங்க இத்தனை பேர் அவளுக்கு இருக்கோம். அப்படி விட்டுடுவோமா… அதுவும் ஸ்வர்ணா ரொம்ப நல்லவங்க, அவங்க அபர்ணாவை நல்லா பார்த்துப்பாங்க. நீங்க கவலைப்படதீங்க.”


“எங்களுக்கு டைம் கொடுங்க. நாங்க யோசிக்கணும். அதுவும் இப்ப அபர்ணா எந்த எண்ணத்தில இருக்கான்னு தெரியலை… நாங்க அவகிட்ட பேசிட்டு சொல்றோம்.”


“சரி நல்ல முடிவா எடுங்க.” எனச் சுஜா விடைபெற்றார்.

அவர் வந்து அபர்ணா வீட்டில் பேசியதை சொல்ல… ஸ்வர்ணா என்ன செய்வது என்பது போலப் பார்த்தார்.


“அம்மா, அவங்க யோசிக்கட்டும் விடுங்க. நமக்கும் அகிலா கல்யாணம் இருக்கு. அது முடியட்டும் பார்க்கலாம்.” என்றான் ராம்.









Advertisement