Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 23



ராம் சாப்பிட்டுவிட்டு வந்ததும், அதற்காகவே காத்திருந்தது போலப் பிரவீணா ஆரம்பித்தார். “என்னப்பா நீ அவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டியா? பெரியவங்களை எல்லாம் மதிக்க மாட்டியா?” என அவராகவே வாய் கொடுத்து மாட்டினார். அதற்காகவே காத்திருந்த ராம், அவரைப் பிடித்துக் கொண்டான்.


“யாரை நான் மதிக்கலை? சொல்லுங்க.” என அவன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அதிகாரமாகக் கேட்க, அகிலாவோடு பேசிக்கொண்டிருந்த கார்த்திக் வந்து ராம் அருகில் உட்கார்ந்தான்.


என்ன இவன் தோரணையே சரி இல்லையே என நினைத்த பிரவீணா, “சரி வீட்டு மாப்பிள்ளை வேற இருக்காரு. நாம அப்புறம் பேசுவோம். ” என நழுவ பார்க்க…


“கார்த்திக் என்னோட ப்ரண்ட்தான். அவனுக்கு நம்ம குடும்பத்தைப் பத்தி நல்லாவே தெரியும். நீங்க சொல்ல வந்ததைச் சொல்லுங்க.” என்றான் ராம்.


“உங்க அப்பாவை நீ உன் தங்கை நிச்சயத்துக்கு முறையா கூப்பிட்டிருக்க வேண்டுமா? வேண்டாமா?”


“ஓ… நான் அவரைக் கூப்பிடனுமா, இது அவரோட பொண்ணு நிச்சயம். அவர்தான் எல்லோரையும் கூப்பிடணும். ஆனா அவரோட இந்த நிலைமைக்கு யார் காரணம்? நீங்களே சொல்லுங்க.”


“அதை விடு, அது எப்பவோ நடந்தது. உங்க அப்பாவும் நீலீமாவும் நம்ம வீட்ல நடக்கிற எல்லா விஷேசத்துக்கும் வர்றது தானே… அதே மாதிரி இங்கயும் வந்தா என்ன ஆகப்போகுது?”


“பாட்டி வீடு எல்லோருக்கும் பொது, அவங்க அங்க வர்றதை பற்றி நாங்க எதுவும் சொல்ல முடியாது. அதனாலதான் நாங்க ஒதுங்கி இருந்தோம். இங்க அப்படி இல்லை. இது எங்க அம்மா வீடு. இந்த வீட்டுக்குள்ள கண்டவங்களும் நுழைய முடியாது.”


“ஓ… நீலீமா வரக் கூடாது. ஆனா அவளோட அண்ணா பொண்ணு வரலாமா… நீயும் அவளை வான்னு கூப்பிட்ட தானே? அவ மட்டும் என்னப்பா ஸ்பெஷல்?”


“அந்தச் சின்னப் பொண்ணைப் பத்தி நீங்க பேசாதீங்க. அவளுக்கு இருக்கிற மனசு கூட ,இந்த வீட்ல யாருக்கும் இல்லை.”


“என்னப்பா அப்படி அவளுக்குப் பெரிய மனசு இருக்கு? எங்களுக்கு இல்லாதது.”


“உங்களுக்குப் புரியாது அத்தை, எங்க அம்மாவோட வேதனை புரிஞ்சிருந்தா, அந்த நீலீமாவோட சேர்ந்திட்டு நீங்க ஆட்டம் போட்டிருப்பீங்களா?”


“அவங்க வந்தா நான் என்ன பண்ண முடியும்?”


“சும்மா நடிக்காதீங்க அத்தை. நீங்கதான் ஆரம்பிச்சு வச்சது. எனக்குத் தெரியும். நீங்கதான் சித்திகளையும் தூண்டிவிட்டு நீலீமாவை எல்லா விசேஷத்துக்கும் கூப்பிட வச்சீங்க. இல்லைன்னு யாரையாவது சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்.”


ராம் பேசிவிட்டு சுற்றிலும் பார்க்க… அங்கே கனத்த மௌனம் நிலவியது. காயத்திரியும் சுமாவும் தலைகுனிந்தனர். பிரதாப்பும், பிரேமும் தங்கள் துணையை இது உங்களுக்குத் தேவையா என்பது போலப் பார்த்தனர்.


“உங்க அப்பா எப்படியும் கல்யாணம் பண்ணிகிட்டார். நாங்க பேசாததுனால மட்டும் மாறவா போகுது?”


“கண்டிப்பா மாறாது. ஆனா அவர் செஞ்சது தப்புன்னு, அவரை நீங்க உணரவே விடலை. இப்பவரை தான் செஞ்சது சரிங்கிற மாதிரியே அவர் திமிரா இருக்காருன்னா.. அதுக்குக் காரணம் நீங்க எல்லாம்தான்.”


“தன் கணவன் தன் கண்ணு முன்னாடியே இன்னொரு பெண்ணோட சந்தோஷமா வளம் வரும் போது… எங்க அம்மாவுக்கு எப்படி இருந்திருக்கும்? அதைப் பத்தி நீங்க யாரவது யோசிச்சு இருக்கீங்களா?”


“அது எப்படி யோசிப்பா மாப்பிள்ளை. நானும் உங்க அப்பாவை மாதிரி எவளையாவது இழுத்திட்டு வந்திருந்தா வேணா, உங்க அத்தைக்குப் புரிஞ்சிருக்கும்.” எனப் பிரவீணாவின் கணவர் தனது ஆதங்கத்தைச் சொல்ல…


“இப்ப நீங்க ஏன் குறுக்க வர்றீங்க? அவனைப் பேச விடுங்க.” எனப் பிரவீணா தன் கணவரிடத்தில் எரிந்து விழுந்தார். ராம் மேலும் தொடர்ந்தான்.


“அந்த நீலீமாவோட ஆட்டம் போட்ட உங்களுக்கு, அபர்ணாவை பத்தி பேச என்ன தகுதி இருக்கு?”


“அவ இங்க வரணும், வரக் கூடாதுன்னு சொல்ற ஒரே அதிகாரம் எங்க அம்மாவுக்கு மட்டும்தான் இருக்கு. வேற யாருக்கும் கிடையாது.”


“கல்யாணம்னாலே வெறுத்த அகிலா, இன்னைக்குக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா அதுக்குக் காரணம் அபர்ணாதான். அப்படி இருந்தும், நானோ அகிலாவோ அவளை இந்த விசேஷத்துக்குக் கூப்பிடவே இல்லை. எதுக்காக? அம்மாவுக்காகத்தான். அவங்க மனசு கஷ்ட்டப்படுமோன்னுதான் கூப்பிடலை.”


மனதிலிருந்தது எல்லாம் ராம் பேசிவிட்டான். ஆனால் அவன் பேசியது, அவனுக்குச் சாதகமாக அல்லாது பாதகமாகத் திரும்பியது. அந்தோ பரிதாபம் !


“சரி நாங்க செஞ்சது எல்லாம் தப்புதான் ஒத்துகிறேன். நீதான் உங்க அம்மாவுக்காக இவ்வளவு பார்க்கிறியே? அப்ப அவங்க பார்க்கிற பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ… அப்ப உண்மையிலேயே உங்க அம்மாவும் சந்தோஷப்படுவாங்க. நீ உங்க அம்மாமேல வச்சிருக்கப் பாசம் உண்மையானதுன்னு நானும் நம்புறேன்.”


பிரவீணா சொன்னதைக் கேட்ட ராம் யோசிக்கவே இல்லை. “அம்மா, உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கிறதுதான் சந்தோஷம்ன்னா? நீங்க பொண்ணு பாருங்க மா, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.” என உணர்ச்சி வேகத்தில் வாரத்தையைக் கொட்டிவிட்டான்.


இந்த ட்விஸ்ட்டை கார்த்திக் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனுக்கு மிகுந்த அதிர்ச்சி, அவனுக்கு மட்டும் இல்லை அகிலா, சோனா எல்லோரும் சற்று அதிர்ந்துதான் போய் விட்டனர்.


தான் சொன்னதன் அர்த்தத்தை உள்வாங்கியதும்தான், என்ன பேசிவிட்டோம் என நினைத்து ராம்மும் அதிர்ந்து போனான். தனக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள்… அவளுக்கு அவன் உறுதி எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் அவன் மனசாட்ச்சிக்கு தெரியும், அவன் அவளை விரும்புவது.


அவன் இறுக்கமான முகத்தோடு அங்கிருந்து எழுந்து மேலே அவன் அறைக்குச் செல்ல… கார்த்திக் எழுந்து தோட்டத்துப் பக்கம் சென்றான். அவனுடன் அகிலாவும் சென்றாள்.


“நான் உங்க வீட்டோட இருக்க ஒத்துகிட்ட இன்னொரு காரணம் என்ன தெரியுமா? அபர்ணா. நான் இங்க இருந்தா, உங்க அம்மாவுக்குப் புரிய வைக்கிறது ஈஸின்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள உங்க அண்ணன் இப்படி உளறி வச்சிட்டான்.”


“இப்ப நான் எப்படி அபர்ணாவை பார்ப்பேன்?”


அகிலாவுக்கும் வருத்தம்தான். அபர்ணா இதை எப்படித் தாங்கிக் கொள்வாள் எனக் கவலையாக இருந்தது.


“நான் கிளம்புறேன்.” என்றவன், மற்றவர்களிடமும் விடைபெற்றுச் சென்றான். நிச்சயம் நடந்த மகிழ்ச்சி அவனுக்குச் சுத்தமாக இல்லை.


“அண்ணி, இதுவரை நடந்தது பத்தி பேசி என்ன ஆகப்போகுது சொல்லுங்க. இப்ப உங்க பையன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான். நாம பொண்ணு பார்க்க ஆரம்பிப்போம். எதையும் சூட்டோட்ட முடிச்சிடனும், ஆறப்போட்டா தள்ளிட்டே போயிடும்.”


“சரி நீ சொல்றது போலவே பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்.” என்றார் ஸ்வர்ணா.


இவர்கள் பேசுவது எல்லாம் அகிலாண்டேஸ்வரிக்கு மகிழ்ச்சியாகவே இல்லை. பேரன் சந்தோஷமாகக் கல்யாணத்திற்குச் சம்மதிக்கவில்லை என அவருக்குப் புரிந்தது.


ராம்மின் அறைக்குச் சென்ற சோனா, “அண்ணா, நீங்க ரொம்ப அவசரப்பட்டுப் பேசிட்டீங்க.” என்றாள்.


“நான் அவசரப்பட்டுப் பேசி இருக்கலாம். ஆனா அம்மாவோட விருப்பம் இல்லாம என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.”


“எனக்குத் தெரியும், என்னோட விருப்பம் நடக்காது. அம்மாவாவது சந்தோஷமா இருக்கட்டும். அபர்ணாவும் இனிமேலாவது என்னை மறந்திட்டு அவ வாழ்க்கையைப் பார்ப்பா.”


“எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரணும் இல்ல…இன்னைக்கு வந்துச்சுன்னு நினைச்சிப்போம்.”


சோனாவிற்குப் பேச்சே வரவில்லை. சரி என்பதாகத் தலையசைத்தவள், கீழே இரங்கி சென்றாள்.


வீட்டிற்கு வந்ததும் பிரவீணா அன்று நடந்ததை ப்ரகாஷ் மற்றும் நீலீமாவிடம் ஒலிபரப்புச் செய்து விட்டார். இல்லையென்றால் அவரது தலை வெடித்து விடாது.


ப்ரகாஷ் யோசனையில் இருந்தார். அவர் மேலும் யோசித்து, அவருக்குக் குற்ற உணர்வு அதிகமானால், அது யாரை பாதிக்கும் என நீலீமாவுக்கு நன்றாகத் தெரியும்.


“கல்யாணத்துக்கு நீங்க மட்டும் போயிட்டு வாங்க. நீங்க எனக்காகப் பார்க்காதீங்க.” என்றார் பெரிதாக விட்டுக் கொடுப்பது போல… பிரகாஷும் உடனே குளிர்ந்து விட்டார்.


கார்த்திக் வீட்டிற்குச் சென்று நடந்ததைச் சொல்ல… “என்ன டா நாம ஒன்னு நினைக்க… வேற ஒன்னு நடக்குது. அந்தப் பொண்ணு இதை எப்படி டா தாங்கும். மனசுல நிறைய ஆசை வளர்த்து வச்சிருக்கே.” எனச் சுஜா கவலை கொண்டார்.


வீட்டிற்கு வந்ததும் பிரதாப்பும், பிரேமும் தங்கள் மனைவியைத் திட்டி தீர்த்து விட்டனர்.


“இதுக்குத்தான் பொம்பளைங்க கொஞ்சமா ஆடனும். ராம் மட்டும் கோவத்துல பிசினஸ் விட்டு போனான்னு வை… நஷ்ட்டம் அவனுக்கு இல்லை நமக்குதான்.”


“இன்னைக்கு எஸ். என் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பார்த்து நமக்குப் பிசினஸ் தரலை… ராம்மை வச்சுதான் பிசினஸ். இன்னொன்னு நம்ம குடும்பத்துலையும் எதாவது ஒண்ணுன்னா, அவன்தான் வந்து முதல்ல நிர்ப்பான்.”


“இனிமேலாவது புரிஞ்சு நடந்துக்கோங்க.” என எச்சரித்து விட்டு சென்றனர்.


மறுநாள் அலுவலகம் வந்த அகிலா, அபர்ணாவை பார்ப்பதையே தவிர்த்தாள். அபர்ணாவுக்கு அது ஒன்றும் தெரியவில்லை. அவள் பாட்டுக்கு வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.


மூன்றாம்நாள் நாள் அபர்ணாவே சோனவை அழைத்தாள். சோனாவிற்கு எடுக்கவே தயக்கமாக இருந்தது.


“சொல்லு அபர்ணா.”


“என்ன மேடம்? நீயாவே கூப்பிடுவேன்னு பார்த்தேன். கூப்பிடவே இல்லை.”


“கொஞ்சம் பிஸியா இருந்தேன்.”


“எப்ப திரும்ப லண்டன் போற?”


“அகிலா கல்யாணம் தேதி முடிவு பண்ணதும் போகலாம்ன்னு இருக்கேன். மண்டபம் கிடைக்கிறது பொறுத்துதான்… ரொம்ப நாள் இருந்தா போயிட்டு வருவேன்.. இல்லைனா கல்யாணம் முடியுற வரை இங்கயே இருந்திடுவேன்.”


“உன் அவினாஷ் எப்படி இருக்கார்? அவர் நிச்சயத்துக்கு வரலையா?”


“அவர் கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லிட்டார்.”


“ஓகே… அப்புறம் வேற என்ன? நான் அன்னைக்கு விசேஷத்துக்கு வந்தது ஒன்னும் பிரச்சனை ஆகலையே?”


அதுவரை கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லிக் கொண்டிருந்த சோனாவுக்கு, இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அபர்ணாவிடம் சொல்லலமா வேண்டாமா என யோசித்தாள். ராம் அவன் முடிவை சொல்லிவிட்ட பிறகு, அதுவும் அவனுக்குப் பெண் வேறு பார்க்க ஆரம்பித்து விட்டனர். இனியும் மறைப்பதால் என்ன பயன்?


சோனா இவ்வளவு நேரம் எடுக்கும் போதே, அபர்ணாவுக்கு எதோ நடந்திருக்கிறது எனப் புரிந்தது.


“என்ன ஆச்சு? ஸ்வர்ணா அத்தை எதுவும் சொன்னாங்களா?”


“ஸ்வர்ணா பெரியம்மா எதுவும் உன்னைப் பத்தி பேசலை.”? என்றவள், அன்று நடந்ததை ஆரம்பத்தில் இருந்து சொல்ல தொடங்கினாள்.


அவளுக்கு நேராக அபர்ணா முகம் பார்த்து சொல்லத் தயக்ககமாக இருந்தது. அதனால் கைபேசியில் சொல்லி விடலாம் என நினைத்தாள்.


சோனா சொல்லச் சொல்ல, அபர்ணாவுக்குக் கேட்க ஆச்சர்யமாக இருந்தது. நம்ம ஆளுக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுமா? எனப் பெருமை வேறு பட்டுக் கொண்டாள்.


கடைசியாகப் பிரவீணா பேசியதையும், அதற்கு ராம் சொன்ன பதிலையும், சொல்லி முடித்ததும், அந்தப் பக்கம் சத்தமே இல்லை.


“அபர்ணா இருக்கியா?”


“ம்ம்.. உங்க அண்ணன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டார். அதைதானே சொல்ல வர…”


“அபர்ணா, எனக்குப் புரியுது உனக்கு எவ்வளவு கஷ்ட்டமா இருக்கும்ன்னு. இதுல ராம் அண்ணனை குற்றம் சொல்லவே முடியாது. அன்னைக்குச் சூழ்நிலை அப்படி.”


“நான் அவரைக் குற்றம் சொல்லலையே… அவர் என்னை எப்பவும் லவ் பண்றேன், கல்யாணம் பண்ணிகிறேன்னு எல்லாம் சொன்னதே கிடையாது.”


என்ன பேசுவது எனத் தெரியாமல் சோனா திகைக்க…


“ஓகே சோனா, உங்க அண்ணனுக்கு நான் வாழ்த்து சொன்னேன்னு சொல்லிடு.” என்றவள், போன்னை வைத்துவிட்டாள்.


அலுவலகத்தில் இருந்து வந்து இன்னும் வீட்டிற்குக் கூடச் செல்லவில்லை. கீழே நீச்சல் குளத்தின் அருகில் இருந்துதான் அழைத்து இருந்தாள். சோனாவிடம் பேசி முடித்ததும், அந்த இடத்திலேயே அப்படியே உட்கார்ந்து விட்டாள்.


இது இப்படித்தான் முடியப் போகிறது என அபர்ணாவுக்கும் தெரியும். இருந்தாலும், மனதின் வலி தாங்க முடியாது போல இருந்தது. யாரும் இல்லாத தனிமை…. அதனால் சுதந்திரமாகக் கண்ணீர் விட முடிந்தது.


எதையோ பெரிதாக இழந்துவிட்டது போல் தோன்றியது. அழுகை என்றால் அப்படியொரு அழுகை. மனதில் இருந்த காதலையும் கண்ணீரில்  கரைக்க முயன்றாளோ என்னவோ…

Advertisement