Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 22


அபர்ணா அகிலாவிடம் வேலையை விடவில்லை. வேலையைப் பற்றி மட்டும் இருவரும் பேசியதால்… அங்குப் பிரச்சனையும் இல்லை.


கார்த்திக் அகிலாவின் நிச்சயதார்த்தம் ஏற்பாடு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. ராம்மும் ஸ்வர்ணாவும் நேரில் சென்று நெருங்கிய உறவினர்களை நிச்சயத்துக்கு அழைத்தனர். ப்ரகாஷ் நீலீமாவை மட்டும் அவர்கள் அழைக்கவில்லை.


பிரகாஷும் தலைகீழ் நின்று பார்த்தார். நிச்சயத்தை மண்டபத்தில் வைக்கச் சொல்லி… ராம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மண்டபம் என்றால்… பொதுவாகப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தார். வீட்டில் என்றால் எப்படி அழைக்காமல் செல்ல முடியும்?


“டேய் ! அவனும் வரட்டுமே டா…” என அகிலாண்டேஸ்வரி கேட்க,


“நான் அவரை வர வேண்டாம்ன்னு சொல்லவே இல்லையே… ஆனா அவர் மட்டும்தான் வரணும்.” என்றான் ராம் அழுத்தமாக. நீலீமா வராமல் நானும் வரமாட்டேன் என்றார் ப்ரகாஷ். அவர் வரவே வேண்டாம் என்றுவிட்டான் ராம்.
சுஜா முதலிலேயே அபர்ணாவிடம் சொல்லிவிட்டார். “நீ நிச்சயத்துக்குக் கண்டிப்பா.” வரணும்.” என்று.


“நிச்சயம் அவங்க வீட்ல நடக்குது, நான் எப்படி அவங்க கூப்பிடாம வர முடியும்?” என அபர்ணா மறுக்க…


“நீ எங்க பக்கம் புரியுதா.. அவங்க உன்னைக் கூப்பிடனும்ன்னு அவசியம் இல்லை. நாங்க கூப்பிட்டா போதும்.”


அபர்ணா இன்னும் யோசிக்க…


“நீ என் ப்ரண்டா வா” எனக் கார்த்திக்கும்,


“என்னோட மருமகளாதான் வர மாட்டேன்னு சொல்லிட்ட, மகளா கூட இருக்க மாட்டியா.” எனச் சுஜாவும் செண்டிமெண்டாகத் தாக்க…


“அம்மா அவங்க வீட்டுக்கு விட மாட்டாங்க.” என்றாள் அபர்ணா.


நிச்சயத்திற்கு அழைக்க வந்த சுஜாவிடம், தாங்கள் திருமணதிற்கு வருவதாகச் சுகன்யா சொல்ல… “சரி அபர்ணாவை மட்டுமாவது அனுப்பி வைங்க.” எனச் சுஜா அவரிடம் நேரடியாகவே கேட்க, சுகன்யா யோசித்தார்.


“நீங்க அனுப்பிவைங்க, நான் பார்த்துகிறேன்.” எனச் சுஜா பிடிவாதமாக இருக்க… சுகன்யாவும் அரை மனதாக ஒத்துக் கொண்டார்.


நிச்சயத்திற்கு அபர்ணா ரொம்பப் பகட்டாகவும் இல்லாமல்.. அதே சமயம் ரொம்ப எளிமையாகவும் இல்லாமல்… பார்க்க பளிச்சென்று இருப்பது போல… தந்த நிறத்தில் மிதமான தங்க நிற ஜரிகையால் நெய்த புடவையைத் தேர்ந்தெடுத்தாள்.


அரக்கு நிற பட்டு ரவிக்கை, அந்தப் புடவைக்கு எடுப்பாக இருக்க. காதில் பெரிய குடை ஜிமிக்கியும், கழுத்தில் சின்ன ஆரமும், ஒரு கையில் பெரிதான வளையலும், இன்னொன்றில் ப்ரேஸ்லெட் மட்டும் அணிந்து கொண்டாள். எல்லாம் துபாயில் வாங்கியவை.


தந்த நிற புடவைக்கு… பொன் மஞ்சள் ஆபரணம் எடுப்பாக இருந்தது.
கூந்தளை விரித்து விட்டு, இருபக்கம் கொஞ்சம் மட்டும் எடுத்து, நடுவில் கிளிப் மாட்டி இருந்தாள். முகத்திற்கு லேசான ஒப்பனை மட்டுமே. நெற்றியில் எப்போதும் வைப்பதை விட, சற்றுப் பெரிதாக அரக்கு நிறத்தில் வட்ட பொட்டு வைத்துக் கொண்டாள். அது அவளுக்குச் சற்று வித்தியாசமான தோற்றத்தை கொடுத்தது.


தயாராகி விட்டு கண்ணாடியின் முன்பு நின்று சரி பார்த்தவள், அங்கே வந்த அருணிடம், “டேய் ஐஸ், நான் பார்க்க எப்படி டா இருக்கேன்? அத்தை மாதிரி இல்லையே…” எனக் கேட்க, அவள் என்ன நினைக்கிறாள் என அருணுக்கா புரியாது.


நாம் சிறப்பானவர்கள் என நினைக்கும் ஒருவரோடு ஒப்பிடும் போது வரும் மகிழ்ச்சி… அதே நாம் குறைவாக நினைக்கும் நபரோடு ஒப்பிடும்போது வருவதில்லை. ஏன் சிலருக்குக் கோபம் கூட வரும்.


அக்காவின் பின் நின்று அவளின் இருபக்க தோளையும் பிடித்தவன், “இல்லை அப்பு… நீ நம்ம அப்பா மாதிரி.” என்றான் அழுத்தமாக. அதைக் கேட்டு அபர்ணாவின் முகமும் மலர்ந்தது.


பத்திரை பன்னிரண்டு தான் நிச்சயதார்த்தம். அபர்ணா தங்கள் காரிலேயே சென்றாள். ஸ்ரீகாந்த் இந்தியா வந்ததும் வாங்கிய கார்… அதனால் இன்னும் புதுப் பொலிவு இழக்காமல் இருந்தது.


பதினோரு மணிக்கு அங்கிருப்பது போல் அபர்ணா பார்த்துக் கொண்டாள். வெளியே இருந்து பார்க்கும் போதே, அந்த வீட்டின் பிரம்மாண்டம் அவளை மிரட்டியது. உள்ளே செல்லவே நடுக்கமாக இருந்தது.


வாயிலில் நின்றிருந்த உதவியாளர்கள்… “நீங்க கார் இங்க விட்டுட்டு போங்க மேடம். நாங்க இடம் பார்த்து நிருத்திக்கிறோம்.” என்றனர்.


காரில் இருந்து இறங்கியவள், ஒற்றையாக விட்டிருந்த சேலையின் முந்தானையைச் சரி செய்துவிட்டு, கொண்டு வந்த பூங்கொத்தை கையில் எடுத்துக் கொண்டாள்.


வீட்டிற்குள் செல்லவே அவ்வளவு பயமாக இருந்தது. அவளது இதயம் தடதடக்க… மெதுவாக நடந்து சென்றாள். சற்று முன்னர்தான் மாப்பிள்ளை வீட்டினர் வந்திருக்க… அவர்களோடு சேர்ந்து எல்லோரும் உள்ளே சென்று இருந்தனர். அதனால் வாயிலில் யாரும் இல்லை.


இப்படியே திரும்பி போய் விடுவோமா என நினைக்கும்போது கார்த்திக்கும், நித்யாவும் வெளியே வந்துவிட்டனர்.


“வா அபர்ணா.” என நித்யா அழைக்க…


“யாரிந்த கேரள பெண்குட்டி.” என்றான் கார்த்திக் சிரித்துக் கொண்டே.
அதுவரை இருந்த பதட்டம் வடிய… அபர்ணா முகத்தில் இப்போதுதான் மெல்ல புன்னகை எட்டி பார்த்தது.


“ரொம்பப் பயமா இருக்கு. நான் வேணா போயிடவா.” என அபர்ணா கேட்க, கார்த்திக் அவளை முறைத்தான். மூவரும் உள்ளே சென்றனர்.


ஹாலில் நிச்சயத்திற்குத் தாயர் செய்து கொண்டிருந்த சுஜா… அபர்ணா உள்ளே நுழைந்ததும் “வா அபர்ணா… இன்னும் காணோமேன்னு நினைச்சேன். சரியான நேரத்துக்கு வந்திட்ட.” என்றார் சத்தமாக…


அவள் பெயரை கேட்டதும் எல்லோரின் தலையும் அவள் பக்கம் திரும்ப… ஆனால் அபர்ணா யாரையும் பார்க்கவில்லை. அவள் சுஜாவை மட்டுமே பார்த்துக் கொண்டு, அவர் அருகில் செல்ல… அவளைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.


“இவ எங்க இங்க?” என்பது போல ராம்மின் வீட்டினர் பார்க்க… அடுத்த நொடி எல்லோரின் பார்வையும் ராம்மின் மீது சென்றது.


அவள் வருவாள் என ராம் ஓரளவு எதிர்ப்பார்த்து இருந்தான். அதனால் அவனுக்கு ஆச்சர்யம் இல்லை… ஏன் வந்தாள் என்பது போலவும் அவன் பார்க்கவில்லை… சாதாரணமாகப் பார்த்தான்.


“நீ எப்பவும் அழகுதான். இப்ப இன்னும் அழகா இருக்க… நீ வேணா பாரு எங்க சொந்தக்காரங்க உன்னைப் பெண் கேட்கப்போறாங்க.” என்றபடி சுஜா அபர்ணாவுக்குப் பூ வைத்துவிட்டார்.


“அப்படி யாரவது மாட்டினா… தள்ளி விட்டுடலாம் மா…” எனக் கார்த்திக் சொல்ல…


“ஏன் டா தள்ளி விடனும். அவளுக்கு இருக்கிற அழகுக்கு.. ராஜ குமாரன் வருவான் பாரு, அவளைத் தூக்கிட்டு போக….” சுஜா பெருமையாகச் சொல்ல…


“அம்மா, கூடிட்டு போவான்னு வேணா சொல்லுங்க. இவ இருக்கிற உயரத்துக்கும், வெயிட்டுக்கும் தூக்கிட்டு எல்லாம் போக முடியாது உருடிட்டுதான் போக முடியும்.” என்றான் கார்த்திக், அபர்ணா அவனை முறைக்க,


“எப்படி உன்னைப் பீப்பானு சொல்லாம சொல்றான் பாரு…” நித்யா எடுத்து கொடுக்க…


“விடுங்ககக்கா… இன்னைக்கு சார் மாப்பிள்ளை வேற… இங்க வச்சு அடிச்சா நல்லவா இருக்கும்? வீட்டுக்கு வரட்டும் பார்த்துக்கலாம்.” என்றாள் அபர்ணா.


“டேய் பையா ! நீயே உன்னை டேமேஜ் பண்ணிக்காத டா… எதுக்கும் உன் வாயை அடக்கியே வை…” எனக் கார்த்திக்கின் அப்பா ஈஸ்வர் சொல்ல… அங்கே ஒரு சிரிப்பொலி எழுந்து அடங்கியது.


அவர்கள் பேசி சிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அபர்ணா அந்தக் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கம் எனப் புரிந்தது.


நிச்சயம் ஆரம்பிக்கலாமா என அகிலாண்டேஸ்வரி கேட்டதும், “எங்க பக்கத்தில தாய் மாமன் தான் தட்டு மாத்திப்பாங்க.” என்ற சுஜா, தனது தம்பியை நடுவில் உட்கார வைக்க… ஸ்வர்ணாவிற்கு இருந்த மிகப் பெரிய கவலை தீர்ந்தது.


அவர் ராம்மின் மூத்த சித்தப்பா சித்தியை உட்கார வைக்கலாம் எனச் சொல்ல.. அதற்கு ராம்மமும் அகிலாவும் ஒத்துக்கொள்ளவில்லை. நீங்கதான் உட்காரனும் என்றனர். தனி ஒருவராகத் தான் எப்படித் தட்டு மாற்ற முடியும் என யோசனையில் இருந்தார்.


நல்லவேளையாகச் சுஜா அந்தக் கவலையைப் போக்கினார். ஸ்வர்ணா தனது அண்ணனை சபையில் உட்கார வைத்தார்.


நிச்சயபத்திரிக்கை வாசிக்கப்பட்டுத் தட்டு மாற்றிக்கொள்ளப்பட்டது. அபர்ணா அதுவரையில் கூட யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அகிலாவை அழைத்து அவளிடம் நிச்சயபுடவையைக் கொடுக்க… அவள் மாற்றிக்கொள்ள உள்ளே சென்றாள். அவள் வருவதற்காக எல்லோரும் காத்திருந்தனர்.


அபர்ணா குனிந்து அவள் செல்லையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவளது தோளை யாரோ தட்ட… அவள் யார் என்று பார்க்க.. சோனா அவள் பக்கத்தில் அமர்ந்தாள்.


“ஹாய் சோனா எப்ப வந்த?” அபர்ணா சந்தோஷமா அழைக்க…


“அது இருக்கட்டும், ரொம்பப் பெரிய ஆள் ஆகிட்டியா… யாரையும் நிமிர்ந்தே பார்க்க மாட்டேங்கிற.” என்றவள், அங்க பாரு என எதிரே காட்டினாள்.
எதிர்ப்பக்கம் இருந்த அகில், மனிஷ், மமதி அபர்ணாவை பார்த்து கையசைக்க.. பதிலுக்கு அபர்ணாவும் அசைத்தாள்.


“சொன்னது மாதிரி அகிலா கல்யாணத்துக்கு நீதான் முன்னாடி நிற்ப போலிருக்கே…” எனச் சோனா சொல்ல, அதிர்ந்த அபர்ணா, “அம்மா தாயே ! எதாவது கொளுத்தி போட்டுடாத…. எனக்கு உங்க சங்காத்தமே வேண்டாம்.” என்றாள்.


“உன்னைப் பார்த்தா அப்படித் தெரியலையே… நீயும் அண்ணாவும் ஒரே கலர்ல டிரஸ் எல்லாம் பண்ணி இருக்கீங்க. ஏற்கனவே ரெண்டு பேரும் பேசி வச்சிகிட்டீங்க தானே… ” என்றதும், திடுகிட்ட அபர்ணா… ராம்மை தேட…. அவனும் இவளைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.


இவள் பார்ப்பது அறிந்ததும், வா என்பது போல அவன் தலையசைக்க… அபர்ணா அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனும் தந்த நிறத்தில் குர்தா அணிந்து இருந்தான்.


அடப்பாவி ! உனக்கு வேற கலரே கிடைக்கலையா என அபர்ணா நொந்து கொண்டாள். இருவரும் பேசி வைத்து அணிந்தது போலத்தான் மற்றவர்களுக்குத் தோன்றும். என்ன தோன்றுவது ஏற்கனவே தோன்றிவிட்டது.


ராம்மின் சொந்தம், அவர்கள் இருவரையும் தான் ஆராய்ந்து கொண்டிருந்தது. ராம் அவளைப் பார்த்துத் தலையசைத்தது, அவள் பதிலுக்குப் புன்னகைத்தது என எல்லாமே கவனித்து இருந்தனர்.

சரி, இன்னைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு.


ஸ்வர்ணா வேலையாக இருந்ததால்… இதைக் கவனிக்கவில்லை. அவர் அபர்ணா வந்ததைப் பற்றிப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்குத்தான் அபர்ணா அகிலாவிடம் வேலை செய்வது முன்பே தெரியுமே…


அகிலா புடவை மாற்றிக்கொண்டு வந்ததும், சபை பரபரப்பானது. அகிலா மனப் பெண் அலங்காரத்தில் சர்வ லட்ச்சனமாக இருந்தாள். சுஜா நித்யாவுக்கு எவ்வளவு நகை போட்டாரோ… அதே போல அகிலாவுக்கும் செய்து கொண்டு வந்திருந்தார். அதை அவரும், நித்யாவும் அகிலாவுக்கு அணிவித்தனர்.


பெரியவர்கள் ஆசிர்வதித்ததும், கார்த்திக்கும் அகிலாவும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பிறகு இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுக்க… மற்றவர்கள் அங்கிருந்து விலகினர்.


அப்போதுதான் அபர்ணாவை கவனித்த அகிலா அவளைப் பார்த்தது புன்னகையுடன், “வா அபர்ணா.” என்றாள். அபர்ணா அவள் வாங்கி வந்த பூங்கொத்தை இருவரிடமும் கொடுத்துவிட்டு சென்றாள்.


உறவினர்கள் சாப்பிட செல்ல… அபர்ணாவும் சுஜாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள். அவள் முன்பே சொல்லி இருந்தாள். “நான் வருவேன், ஆனா அங்க சாப்பிட மாட்டேன்.” என்று.


அபர்ணா கார்த்திக்கின் தோழி என்று வைத்துக் கொண்டாலும், இந்தத் திருமணத்தில் அவளின் பங்கை அகிலாவும், ராம்மும் அறிவர். ஆனால் இருவருமே அவளை நிச்சயத்திற்கு அழைக்கவில்லை. பிறகு எப்படி அவர்கள் வீட்டில் அவள் சாப்பிடுவாள்.


அபர்ணா தள்ளி இருந்தே கார்த்திக்கிடம் விடைபெற… அதைக் கவனித்த அகிலா, “அபர்ணா சாப்பிடலையா?” எனக் கேட்டாள். கார்த்திக் பதில் சொல்லாமல் இருக்க… அவன் காதில் விழவில்லையோ என மீண்டும் கேட்டாள்.

“நீ அவளைக் கூப்பிட்டியா?” எனக் கார்த்திக் பதிலுக்குக் கேட்க,


“அம்மா என்ன நினைப்பாங்கன்னு தெரியலை கார்த்திக். அதனாலதான்.” என்றாள். கார்த்திக் எதுவும் பதில் சொல்லவில்லை.


உறவினர்களைக் கவனித்துக் கொண்டிருந்த ராம், கடைசியாகத்தான் அபர்ணா செல்வதைக் கவனித்தான். ஆனால் அவன் வாயிலுக்குச் செல்வதற்குள், அவர் காரில் ஏறி சென்றுவிட்டாள்.


தங்கள் வீட்டிற்கு வந்துவிட்டுச் சாப்பிடாமல் போகிறாளே என்று வருத்தமாக இருந்தது. நீ அவளைக் கூப்பிட்டியா? என அவனது மனசாட்சி கேள்வி கேட்க, அம்மாவுக்காக என நினைத்துக் கொண்டான்.


சம்பந்தி வீட்டினர் சாப்பிடும்போது, அபர்ணா அங்கு இல்லாததை ஸ்வர்ணாவும் கவனித்தார். பிறகுதான் அவள் ஏற்கனவே சென்றுவிட்டதை உணர்ந்தார்.


வீட்டிற்கு வந்த அபர்ணா, உடை மாற்றிவிட்டு, உணவு மேஜைக்குச் சென்று சாப்பிட என்ன இருக்கிறது என்று ஆராய்ந்தவள். அங்கே சாதம், சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல் இருக்க… அதைப் போட்டுக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தாள்.


“என்ன அப்பு, விசேஷத்திற்குப் போன அங்க சாப்பிடாம இங்க சாப்பிடுற?” அருண் துருவ…


“அங்க ஒரே வெஜ்ஜடா… சண்டே அன்னைக்கு வெஜ் சாப்பிட்டா சாமி குத்தம் ஆகிடாது.” என்றுவிட்டு, அவள் உணவை ஒரு கட்டுகட்ட… அங்கே போனாளே என்ன ஆனதோ எனக் கவலையில் இருந்த சுகன்யாவுக்கு மகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.


அவர்கள் வீட்டில் அழைக்காததால்… அங்கே சாப்பிட்டிருக்க மாட்டாள். மற்றபடி பெரிதாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பும் இல்லை. இல்லையென்றால் முகம் இப்படி இருக்காது என நினைத்துக் கொண்டார்.


அபர்ணாதான் அவர்கள் உறவினர்கள் யாரையும் நிமிர்ந்தே பார்க்கவில்லையே… அதனால் அவர்கள எப்படிப் பார்த்தார்கள் என்றும் அவளுக்குத் தெரியாது. ஒரு தடவை ஸ்வர்ணாவை எதேட்சையாக பார்க்கும்போது, அவரும் ஒன்றும் அவளை வெறுப்பாகப் பார்க்கவில்லை. அதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது.


தங்கள் பக்க உறவினர்கள் சாப்பிட்டு முடித்துக் கிளம்பியதும், கார்த்திக் குடும்பத்தினரும் கிளம்ப… கார்த்திக் மட்டும் இன்னும் சாப்பிட்டு இருக்கவில்லை.


“நீ அப்புறம் போயேன்.” ராம் சொல்ல… சுஜாவும் பிறகு வா எனச் சொல்லிவிட்டு சென்றார். கார்த்திக் அவர்களோடு வாயில் வரை வழியனுப்ப செல்ல… அகிலாவும் உடன் சென்றாள்.


“என்ன அத்தை இப்படிப் பையனை கழட்டி விட்டுட்டு வரீங்க?” நித்யா கேலி செய்ய…


“என்ன செய்றது? எப்படியும் கல்யாணம் முடிஞ்சு இந்த நிலைதான இப்பவே பழகிப்போம்.” என்றார் சுஜா. அவர் கேலியாகச் சொன்னாலும், அவர் குரலில் கேலி இல்லை… மாறாக ஒரு உள்குத்து இருந்தது. அதை அகிலாவும் உணர்ந்தாள்.


அவர்கள் சென்றதும், உள்ளே இருவரும் வரும்போது, “உங்க அம்மாவுக்கு நீங்க கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீட்ல இருக்கிறது விருப்பம் இல்லையா?”


“ஏன்? விருப்பம் இல்லைனா, நீ எங்க வீட்டுக்கு வந்திடுவியா.” என அவள் கேள்விக்கு, கார்த்திக் பதில் கேள்வி கேட்க,


“இல்லை…” என்றாள்.


பிறகு என்ன கேள்வி என்பது போல அவன் பார்க்க.. “அப்புறம் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.” என அவள் விடாமல் கேட்க,


“எங்க அம்மாவுக்கு என்னோட சந்தோசம்தான் முக்கியம். அதனால ஒத்துகிட்டாங்க.” என்றான்.


“இப்படிக் கஷ்ட்டப்பட்டு எல்லாம் யாரும் ஒத்துகிட்டு இருக்கவே வேண்டாம்.” அகிலா சொல்ல…


“நீ நாளைக்கு உன் பையனை இப்படி விட்டு கொடுப்பியான்னு நானும் பார்க்கத்தானே போறேன்.” என்றான் கார்த்திக் பதிலுக்கு.


அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே உள்ளே வந்திருக்க… சாப்பிட போங்க என இருவரையும் உணவருந்த அனுப்பி வைத்தனர். ராம் சாப்பிட வந்திவிட்டாலும் உணவு உள்ளே இறங்க மறுத்தது.


அருகில் இருந்த சோனா, என்ன என்பது போலப் பார்க்க…


“அபர்ணா சாப்பிடாமலே போயிட்டா…” என்றான் வருத்தமாக.


“அவ வீட்ல போய்ச் சாப்பிட்டு இருப்பா… நீங்க சாப்பிடுங்க. நம்ம அம்மு விசேஷம், நீங்க சாப்பிடலைனா… அவ மனசு கஷ்ட்டப்படாதா?”


“அபர்ணாதான் இந்தக் கல்யாணம் நடக்கக் காரணம். நான் அவளைக் கூப்பிட்டு இருக்கணும். ஆனா நான் கூப்பிடலை. எனக்கு அவளை மட்டும் எப்படிக் கூப்பிடுறதுன்னு யோசனை. அதுதான் கூப்பிடாம விட்டுட்டேன். அவளுக்கு என் மேல கோபம்.”


“அவளுக்குக் கோபம் எல்லாம் இருக்காது… கொஞ்சம் ரோஷம் அதிகம். விடுங்க கல்யாணத்துக்கு ஸ்பெஷல்லா கவனிச்சிடலாம்.” எனச் சோனா தமையனை தேற்ற… ராம் சாப்பிட ஆரம்பித்தான்.


“என்ன எல்லோரும் என் மேல செம காட்டதுல இருக்கங்களா?” அவன் சோனாவிடம் கேட்க,


“ஆமாம். அதுவும் பிரவீணா அத்தைதான் எல்லோரையும் ஏத்தி விடுறாங்க. அவங்களுக்கு நீங்க மேகாவை வேண்டாம்ன்னு சொன்ன கோபம் வேற…”


அதைக் கேட்டு ராமிற்குக் கோபமாக வந்தது. “அவங்க எதுவும் பேசாத வரை அவங்களுக்கு மரியாதை. பேசினா, நான் கண்டிப்பா இந்தத் தடவை பதிலுக்கு நல்லா கேட்டுடுவேன். பாட்டிக்காகக் கூடப் பார்க்க மாட்டேன்.”


“கேளுங்க அண்ணா… நீங்க கேட்டாத்தான் ஒரு பயம் வரும்.” என்றாள் சோனா.

Advertisement