Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 21

மறுநாள் அலுவலகத்தில் சந்திக்கும்போது அகிலா அபர்ணாவிடம், தனக்கும் கார்த்திக்கும் திருமணம் நிச்சயம் ஆனது குறித்துச் சொன்னாள். ஆனால் இதில் அபர்ணாவுக்கு இருந்த பங்கு பற்றித் தெரிந்து கொண்டது போலக் காட்டிக்கொள்ளவில்லை.


“உனக்கு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும். உன் ப்ரண்ட் சொல்லி இருப்பார்.” என்று வேறு சொல்ல… அபர்ணா அமோதிப்பது போலப் புன்னைத்தாள்.


சுஜா அவளையும்தான் பெண் பார்க்க செல்லும் போது வர சொல்லி அழைத்தார். அபர்ணாதான் மறுத்து விட்டாள். இரவு கார்த்திக் அழைத்துப் பேசி இருந்தான்.


“நீ என்னோட ப்ரண்ட், நான் உனக்குத் தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்.” என்றான்.


ராம்மிடம் இருந்து அழைப்போ, ஏன் ஒரு மெசேஜ் கூட வரவில்லை. நன்றியை எதிர்ப்பார்த்து எதுவும் அவள் செய்யவில்லை. அதனால் அவளுக்கு அது ஏமாற்றத்தையும் தரவில்லை. ஆனால் அது அவனோட பேச ஒரு சாக்கு அவளுக்கு.


எப்போதும் போல அலுவலகம் சென்றாள். சிறிது நேரத்தில் அவள் பெயருக்கு பூங்கொத்து வர… யார் அனுப்பியது எனத் தெரியாமலையே அதை வாங்கிக் கொண்டு சென்றாள்.


அவள் இடத்திற்குச் சென்று யார் அனுப்பியது என ஆராய்ந்தாள். சிவப்பு நிற ரோஜாக்களால் ஆன பூங்கொத்து.. உள்ளே ஒரு கார்டு இருக்க… எடுத்து பார்த்தால்… முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஆதித்யா அனுப்பி இருந்தான்.


அவளுக்கு நாளை பிறந்தநாள் என்று அவனுக்கு எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. உண்மையிலேயே ராம்தான் அனுப்பி இருக்கிறான் என நினைத்து ஒரு நிமிடம் பரவ்சப்பட்ட்டு போனாள். அவன் இல்லை என்று தெரிந்ததும் சொத்தென்று ஆகிவிட்டது.


“ஏன் டி இப்படி நீயே எதிர்ப்பார்ப்பை வளர்த்து ஏமாந்து போற?” எனக் கேட்டுக் கொண்டாள். கஷ்ட்டப்பட்டு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.


தான் அனுப்பிய பூங்கொத்தை பார்த்து விட்டு கண்டிப்பாக அபர்ணா அழைப்பாள் என ஆதி நினைத்து இருக்க… அபர்ணா அழைக்கவே இல்லை.


இவளை இப்படியே விடுவது இல்லை என நினைத்தவன், காலையே அவளைப் பார்க்க சென்றான். குளித்துச் சுகன்யா வாங்கி வைத்திருந்த புதுச் சுடிதாரை அணிந்து கொண்டு… அவர் செய்திருந்த பூரியையும் கேசரியையும் உள்ளே தள்ளிவிட்டு, அபர்ணா கல்லூரிக்கு கிளம்பி சென்றாள்.


அவளுக்காக வாயிலில் காத்திருந்த ஆதித்யாவை, அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. பிறந்தாநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவன் கைகொடுக்க…

“உங்களுக்கு எப்படித் தெரியும்?” என ஆச்சர்யபட்டபடி அபர்ணா கைகொடுத்தாள்.


“நமக்கு ஒருத்தர் முக்கியன்னா, நாம அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்க மாட்டோமே .” என்றான்.


“இன்னைக்கு உன்னோட பிறந்த நாளுக்கு, நான் ட்ரீட் கொடுக்கிறேன். நைட் எட்டு மணிக்கு உன் ஆபீஸ்ல இருப்பேன்.” என அவன் சொல்ல..


“இன்னைக்கா முடியாது.” என அபர்ணா சொல்ல.. அதை அவன் காதிலேயே வாங்கவில்லை.


“நைட் எட்டு மணிக்கு, மறந்திடாத.” என்றவன், காரில் பறந்துவிட்டான்.
போன மாதம்தான் ஒருநாள் அவனுடன் இரவு உணவுக்கு வெளியே சென்று இருந்தாள். அதற்கே சுகன்யா திட்டினார். ஐயோ ! என்று இருந்தது அபர்ணாவுக்கு.


மதியம் அலுவலகத்திற்கு வந்தவளுக்கு ஆதித்யா நினைவு வர, ‘நட்பு பாராட்டினால்… ஒரு அளவில் நிற்காமல், ஏன் சலுகை எடுத்துக் கொள்கிறான் என எரிச்சலாக இருந்தது. அவனை உடனே அழைத்தாள்.


“எஸ் அபர்ணா சொல்லு.”


“இன்னைக்கு என்னால வெளிய வர முடியாது ஆதி.”


“ஏன்?”


“எங்க வீட்ல இந்த மாதிரி நாட்கள்ல நாங்க குடும்பமா சேர்ந்து கோவிலுக்கும், டின்னர் சாப்பிட ஹோட்டலுக்கும் போவோம். அதனால நான் வர முடியாது.”


“ஓகே… ஆனா இதுக்குப் பதில் இன்னொரு நாள் என்னோட வரணும்.”


“சரி…. ஆனா என்னைக்குன்னு நான்தான் முடிவு பண்ணுவேன்.”


“ஓகே…” என்றவன், யோசனையோடு போன்னை வைத்தான்.
அபர்ணா அன்று அலுவலகத்தில் இருந்து சீக்கிரமே கிளம்பி விட்டாள். எல்லோரும் சேர்ந்து காரில் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்றனர்.


“கொடுங்க பா நான் ஓட்டுறேன்.” என அபர்ணாதான் கார் ஒட்டிக்கொண்டு வந்தாள். கோவிலில் அதிகக் கூட்டம். இருந்தாலும் வரிசையில் நின்று சாமி பார்த்துவிட்டு வெளியே வந்தனர்.


“எந்த ஓட்டல் போலாம்.” என அபர்ணா கேட்க,


“முதல்ல ஜி. ஆர். டி போகலாம்.” என்றார் சுகன்யா.


“ஐ ! எனக்கு நகை வாங்கப் போறோமா?”


“உனக்குதான் வேற யாருக்கு. வயசு ஏறிட்டே போகுது கல்யாணம் பண்ண வேண்டாமா… ” என்றதும், அபர்ணாவின் குதுகுலம் முற்றிலும் வடிந்துவிட்டது.


சுகன்யா மகளுக்கு, கழுத்தை மறைப்பது போல… பத்துச் சவரனில் பெரிய நெக்லஸ் எடுக்க… “இவ்வளவு பெரிசா?” என அபர்ணா அலற… “அவளுக்குப் பிடிச்சதே வாங்கு மா.” என்றார் ஸ்ரீகாந்த்.


“இப்படிச் சொல்லி சொல்லித்தான்.. எல்லாமே அவ இஷ்ட்டத்துக்குச் சின்னச் சின்னதா வாங்கி வச்சிருக்கா…இனி கல்யாணம் பண்ணனும்… இவ சொல்றது எல்லாம் கேட்டுட்டு இருக்க முடியாது.” என்றவர், அவர் தேர்ந்தெடுத்த நகையே வாங்கினார்.


“எதோ பெரிசா வாங்காத மாதிரி பேசாதீங்க மா… ஆரமே பெரிசு பெரிசா ரெண்டு வாங்கி வச்சிருக்கீங்க.” என்றாள்.


நெக்லஸுக்கு பொருத்தமான காதணி வாங்கிவிட்டு… அதற்கு மேல் அபர்ணா கேட்ட எம்ரால்ட் பதித்த கைச்செயினும் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து பார்பிகியூ ஹோட்டலுக்குச் சென்றனர்.


தன் மக்கள் இருவரும் சாப்பிடவதை பார்த்த ஸ்ரீகாந்த், “சூப் குடிக்கலையா?” எனக் கேட்க,


“சூப் குடிச்சா வயிறு அடைச்சிடும் பா..” என்றவர்கள், கொண்டு வந்த ஸ்டார்ட்டர் எல்லாம் அமுக்கிவிட்டு, நேராக டெசர்ட் போய்விட்டனர்.
விதவிதமான கேக் மற்றும் ஐஸ்கிரீம் கொண்டு வந்து அவர்கள் இருவரும் சாப்பிட…


“ரெண்டும் விவரம்.” என்றார் சுகன்யா.


“நாமும் இவங்களைப் போலத்தான் மா சாப்பிடனும். வீட்ல தான் குழம்பு சாதம், பிரியாணி எல்லாமே சாப்பிடுறோமே… நமக்குதான் தெரியலை.” எனச் சிரித்தார் ஸ்ரீகாந்த்.


சாப்பிட்டு முடித்து விட்டு எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த அபர்ணா, “ராம்.” எனச் சத்தமாக அழைக்க… ஹோட்டலே அவள்பக்கம் திரும்பி பார்த்தது என்றால்… பக்கத்தில் இருந்த குடும்பத்தினரின் நிலை?


எதுக்கு இப்படிக் கத்துறா என்பது போலப் பார்த்தனர். ராம்மை பற்றிக் கேட்கவே வேண்டாம். அவனுக்கு ஒரு நொடி இருதயம் நின்று துடித்தது.


ராம் அப்போதுதான் உள்ளே நுழைந்து கொண்டிருந்தான். அவனுடைய நண்பர்கள் அபர்ணாவை பார்த்து விட்டு, “டேய் ! யாரு டா அது? செம்ம அழகா இருக்கா?” எனக் கேட்கும்போதே… அபர்ணா அவனை நோக்கி வந்திருந்தாள்.


“ஹாய் ராம்.”


“ஹாய் அபர்ணா. நல்லா இருக்கியா?”


“ம்ம்… அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க.” என அவள் சொல்ல… எதற்குச் சொல்கிறாள் என அவனுக்குப் புரியாதா என்ன? நண்பர்களிடம் சொல்லிவிட்டு, அவளோடு சென்றான்.


ராமை அவள் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்ய… அவன் ஸ்ரீகாந்திடம், அருணிடமும் கைகுலுக்கியவன், சுகன்யாவை பார்த்து வணங்கினான். பதிலுக்கு வணங்கியவர், அவனைப் பார்த்து புன்னகைத்தார்.


உட்காருங்க ஸ்ரீகாந்த் சொல்ல… அவர் அருகில் அவன் உட்கார, மற்றவர்களும் உட்கார்ந்தனர்.


“குடும்பத்தோட வந்திருக்கீங்க போலிருக்கு?”


“ஆமாம்…” என ஸ்ரீகாந்த் சொல்லும்போதே…


“இன்னைக்கு என்னோட பிறந்தநாள்…” அபர்ணா ஆர்வமாகச் சொல்ல… அவளுக்குப் பின்னே ஒன்று இல்லை மூன்று ஒளிவட்டங்கள் தெரிந்தது. அவனைச் சந்தித்த மகிழ்ச்சியை அவளால் மறைக்கவே முடியவில்லை. வாயெல்லாம் பள்ளுதான்.


“ஓ…” என ஆச்சர்யத்தைக் காட்டியவன், அவளை வாழ்த்தினான்.


“தேங்க்ஸ்.”


“வீட்ல அம்மா தங்கை எல்லாம் சவுக்கியமா?” ஸ்ரீகாந்த கேட்க,


“நல்லா இருக்காங்க”. என்றவன், ஸ்ரீகாந்திடம் அவர் வேலை பற்றிக் கேட்டுவிட்டு, அருணிடம் அவன் படிப்பை பற்றி விசாரித்தான். பிறகு அவன் விடைபெற…. அபர்ணாவின் முகம் வாட… அதைக் கவனித்தவன், மீண்டும் ஒருமுறை அவளை வாழ்த்திவிட்டுச் சென்றான்.


அபர்ணா சென்றதும் நண்பர்கள் குழு அவனைப் பிடித்துக் கொண்டது. அவனுடைய கல்லூரி நண்பன் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறான். அவன் ஏற்பாடு செய்த சந்திப்பு இது…


“ஹே… யாருடா அது?” நண்பன் ஒருவன் கேட்க, ராம் தன் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே, “தெரிஞ்சவங்க.” என்றான்.


“அதுதான் எங்களுக்குத் தெரியுமே… அந்தப் பொண்ணு யாரு டா? … உன்னை அப்படிக் கூப்பிடுறா? சம்திங் ஸ்பெஷல்?”


“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.” என்றான் செல்லைப் பார்த்துக் கொண்டே…


“பொய் சொல்லாத டா… அந்தப் பொண்ணு கண்ணுலதான் உன்னைப் பார்க்கும் போதே… காதல் தெரியுதே…” என்றதற்கு, ராம் பதில் சொல்லவில்லை.


இன்னொரு நண்பன், “டேய் ! பணக்கார பசங்களைப் பார்த்தா பொண்ணுங்க வழியிறது சகஜம் தான் டா… ஏன் அதைப் போய்ப் பெரிசா எடுத்துகிட்டு.” என்றதும், ராம்மிற்கு அமைதி காக்க முடியவில்லை.


“அவளைப் பத்தி தப்பா பேசாத.” என்றான்.


நண்பர்களுக்குப் புரிந்துவிட்டது. நண்பனுடைய காதலியோ, மனைவியோ… நம்ம பசங்க தங்கையாகத்தான் பார்ப்பார்கள். தங்கையைப் பற்றித் தவறாகப் பேசுவார்களா? வேறு பேச்சுக்கு மாறினர்.


அங்கே அபர்ணாவுக்குச் செல்லும் வழியில் சுகன்யாவிடம் இருந்து நன்றாக அர்ச்சனை கிடைத்துக் கொண்டு இருந்தது.


“ரொம்ப உணர்ச்சிவசப் பட்டுட்டோம் போல…” என நினைத்துக் கொண்டாள். ஆனால் அதெல்லாம் அபர்ணாவின் உற்சாகத்தைச் சற்றும் குறைக்கவில்லை… அவளுடைய பிறந்தநாளில் ராம்மை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் அவள் அதிலிருந்து வெளியே வரவில்லை.


வீட்டிற்குச் சென்றதும், தங்கள் அறைக்கு வந்த சுகன்யா, “முதல்ல இவளுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணனும். சும்மா நம்மகிட்ட காதுகுத்திகிட்டு இருக்கா… இன்னைக்கு அவனைப் பார்த்ததும் எப்படிக் கத்தினா… இவ அவனை மறப்பாளா… எல்லாம் சும்மா கதை.” என்றார்.


“நான் அவகிட்ட பேசுறேன். பார்ப்போம்.” என்றார் ஸ்ரீகாந்தும்.


அடுத்த மாதம் கார்த்திக் அகிலா நிச்சயம் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு மாப்பிள்ளை வீட்டினர், பெண்ணிற்கு வாங்க வேண்டும், பெண் வீட்டினர் மாப்பிள்ளைக்கு வாங்க வேண்டும்.


எதற்குத் தனித்தனியாகப் போக வேண்டும் சேர்ந்தே போவோம் என்றுவிட்டார் சுஜா… அவர் அபர்னவையும் அழைத்து இருந்தார். நான் என்ன ஆன்டி பண்ணப்போறேன். என்றதற்கு,


“சும்மா வா ஜாலி யா போயிட்டு வரலாம்.” எனச் சுஜாவும்,


“நீ வந்தா கார்த்திக்கையும், அகிலாவையும் நல்லா ஒட்டலாம்.” என நித்யாவும்,


“ராம் வர்றான், விருப்பம் இருக்கவங்க வரலாம்.” எனக் கார்த்திக்கும் ஆளுக்கு ஒன்று சொல்லினர். அபர்ணாவுக்கும் போகலாமே என்று தோன்றியது.


அபர்ணா மிகுந்த ஆவலாக அணிந்து செல்ல வேண்டிய உடையைத் தேர்வு செய்து கொண்டிருந்தாள். அலமாரியில் இருந்த உடைகள் எல்லம் கட்டிலுக்கு வந்துவிட்டது.


அவள் செய்யும் அளப்பரையைப் பார்த்த சுகன்யா, “நீ கண்டிப்பா அவங்க கூட ஷாப்பிங் போகனுமா.” என்றார்.


“ஏன் மா?”


“அதை நீ உன் மனசாட்சிகிட்டதான் கேட்கணும்.”


“நீ கார்த்திக்காகப் போறியா இல்ல.. ராம்மிக்காகப் போறியா? அது உனக்குத்தான் தெரியும்.” என்றுவிட்டு சென்றார்.


ராம்மை பார்த்தால்… தான் ஒரு நிலையில் இருப்பது இல்லை என்பதை அபர்ணாவும் உணர்ந்தாள். அவள் எதற்காக அகிலாவிடம் வேலைக்குச் சென்றாளோ… அது நல்லபடியாக முடிந்து விட்டது. இனிதான் விலகுவது தனக்கு மரியாதை என்பதும் புரிந்தது.


அபர்ணா அவர்களோடு ஷாப்பிங் செல்லவில்லை. அவள் வராதது சுஜாவுக்கு மிகுந்த வருத்தம். “இந்தப் பொண்ணு வரலைப் பாரு.” என வீட்டிற்கு வந்ததும் புலம்பிக்கொண்டு இருந்தார்.


இப்படி இருந்தால்… வேலைக்கு ஆகாது என்று உணர்ந்த கார்த்திக், அன்று அபர்ணா, ராம் பற்றி எல்லாவற்றையும் அவன் வீட்டினரிடம் சொல்லிவிட… கேட்ட அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம்.


“இது என்ன டா கதையா இருக்கு…. தென்னை மரத்தில் தேள் கொட்டினா.. பனை மரத்தில நெறி கட்டுது.”


“யாரோ என்னவோ செஞ்சா, அந்தப் பொண்ணு எப்படிப் பொறுப்பு ஆகும்?”


“அந்தப் பையன் அப்படியே அவங்க அப்பாவை உரிச்சு வச்சு பிறந்திருக்கான். அதுக்காக அந்த அம்மா தன் பையனை வேண்டாம்ன்னு சொல்லிடுமா?”


“அம்மா, எப்படி மா ! இப்படி லட்டு மாதிரி கேள்வி கேட்கறீங்க? நீங்கதான் மா அந்தக் குடும்பத்துக்குச் சரியான ஆளு.” கார்த்திக் குதூகலிக்க…


“முதல்ல உங்க கல்யாணம் நடக்கட்டும் டா… அப்புறம் நாம அவங்களை ஒரு கை பார்க்கலாம்.” என்றார்.


“ஆமாம் மா கல்யாணம் வரை வாயே திறக்க கூடாது. இல்லைனா அகிலாவே இந்தக் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிடுவா.” என்ற கார்த்திக், “அடியே பொண்டாட்டி ! என்னய்யா டி வீட்டோட மாப்பிள்ளையா இருக்கச் சொன்ன… இரு டி, ஏன் டா இவனை இருக்கச் சொன்னோம்ன்னு உன்னை நினைக்க வைக்கிறேன்.” என மனதிற்குள் அகிலாவிடம் சவால் விட்டான்.


மகனே இது மட்டும் அவளுக்குத் தெரிஞ்சிது, நீ காலி டா !

Advertisement