Advertisement

 


ராம் சொல்வதும் சரிதான் என்று ஸ்வர்ணாவுக்குத் தோன்றியது. ஆனால் இந்தச் சம்பந்தத்தை விடவும் மனசில்லை.


“சரி நீ இந்தப் பொண்ணு பார்த்து ஓகே வான்னு சொல்லு. நாம அம்மு கல்யாணம் முடிஞ்சா பிறகே பேசலாம்.” என்றார்,


“நான்தான் சொல்லிட்டேன் இல்ல… உங்களுக்குப் பிடிச்சா ஓகே. எனக்கு யாருனாலும் சம்மதம்தான்.” எனச் சொல்லிவிட்டு போட்டோ பார்க்காமலே சென்றுவிட்டான்.


ஒரு போட்டோ பார்த்து பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை. என்ன இவன் இப்படிப் பண்றான் என ஸ்வர்ணா நினைக்க… அகிலாவுக்கு அண்ணனின் நிலை புரிந்தது.


“அம்மா, அண்ணாவுக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க மா… அவர் மனசு கல்யாணத்துக்குத் தயார் ஆக வேண்டாமா.” என்றாள்.


“அவன் தானே பொண்ணு பாருங்கன்னு சொன்னான்.”


“சொன்னாரு மா, ஆனா…” என்று இழுத்தவள், தைரியத்தைத் திரட்டி, அண்ணனுக்கு அபர்ணாவை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் மா…” எனச் சொல்லியே விட்டாள்.


“என்னது?” என முதலில் அதிர்ந்தவர்,


“நீ முதல்ல அபர்ணாவை வேலைக்குச் சேர்த்த, அப்புறம் அவ நிச்சயத்துக்கு வீடு வரை வந்திட்டு போனா… அடுத்து உங்க அண்ணன் பொண்ணு பாருங்கன்னு சொன்னான். இப்ப நீ ஒரு கதை சொல்ற.”


“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உங்களுக்கு? அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்திட்டு நாடகம் போடுறீங்களா?”


“ஐயோ அம்மா ப்ளீஸ், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அபர்ணாவும் கார்த்திக்கும் பிரிண்ட்ஸ் அதனாலதான் நிச்சயத்துக்கு வந்தா… அதுவும் இப்ப அவ என்கிட்டே வேலை செய்யலை… வேலை விட்டு போயிட்டா.”


“நான் எனக்குத் தோணுனது சொன்னேன்.”


“இப்ப நான் என்ன பண்ணட்டும்? பொண்ணு பார்க்கவா வேண்டாமா?”


“பாருங்க மா..” என்றவள், விட்டால் போதும் என்று அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அறைக்கு வந்ததும் தலையிலேயே அடித்துக் கொண்டாள். “நிஜமாவே நமக்குக் கொஞ்சம் டேலன்ட் கம்மிதான். இதே அபர்ணாவா இருந்தா… இந்நேரம் பேசியே கவுத்து இருப்பா…நாம நல்லா சொதபிட்டோம்.”


ஸ்வர்ணா பொறுமையாகப் பார்ப்போம் என்றுதான் நினைத்தார். ஆனால் அகிலா பேசியதில் உஷாராகிவிட… அதற்கு மேல் பிரவீணா இருந்தாள்.
அவர் பெண் வீட்டில் ஜாதகம் பொருந்தி இருப்பதாகச் சொல்ல… அதோடு சேர்ந்து உங்க பொண்ணு அப்படி அழகா இருக்கா… இப்படி அழகா இருக்கா… எங்க ராம்முக்கு ரொம்பப் பொருத்தம் என அவர் சரளமாக அடித்து விட… பெண்ணைப் பெற்றவர் நேரிலேயே வந்துவிட்டார். அதுவும் ராம் வீட்டில் இருக்கும் போதே…


அவர் வந்திருப்பதாகத் தகவல் வந்ததும், அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டு இருந்தவன், அவன் அறையில் இருந்து வந்தான்.


அவர் அறிமுகம் செய்துகொள்ள… வேறு எதற்கோ வந்திருப்பதாக நினைத்து ராம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தான். அவர் மட்டும் வரவில்லை, கூடவே அவருடைய நண்பரையும் அழைத்து வந்திருந்தார்.


பெரிய ஆள் வேறு எதற்கு வந்தார் என எப்படிக் கேட்பது என யோசனையில் ராம் இருந்தான். ஸ்வர்ணாவே இப்படி நேரில் வந்து நிற்பார் என எதிர்ப்பார்க்கவில்லை.

 


“நம்ம பொண்ணு சுஷ்மிதா உங்களை மீட் பண்ண ரொம்ப ஆர்வமா இருக்கா… வீட்டுக்கு தான் வரணும்ன்னு இல்லை. நீங்க ரெண்டுபேரும் வெளிய கூடச் சந்திச்சுப் பேசிக்கலாம். உங்களுக்கு எப்படியோ அப்படி.” என்றதும், ராமிற்குத் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.


அதற்குள் ஸ்வர்ணா “அவன் தங்கை கல்யாணம் முடிஞ்சதும் பார்க்கலாம்ன்னு சொன்னான். அவன் தான் எல்லாம் செய்யணும்.” என்றார்.


“பேஷா செய்யட்டும். நம்ம வீட்டு கல்யாணத்துல நாங்க எல்லாம் பார்த்துப்போம், உங்களுக்கு ஒரு வேலையும் இருக்காது.” என்றார் உடன் வந்த நண்பர்.
இப்போதுதான் ராமிற்கு இவர்கள் எதற்கு வந்திருகிறார்கள் என்று புரிந்தது. அவன் முகம் இறுகியது.


“நல்ல விஷயம் தள்ளிப் போட கூடாது. இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை உங்களுக்குத் தோது படுமா.” என அவர்களாகவே முடிவு செய்ய… ராம் பட்டென்று அங்கிருந்து எழுந்து கொண்டான்.


“சாரி, எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. இந்த வாரம் நான் வெளிநாடு போறேன். போயிட்டு வந்து பார்க்கலாம். நாங்களே உங்களுக்குத் தகவல் சொல்றோம்.” என அவன் கத்திரித்தது போலப் பேச… அதற்கு மேல் உட்கார்ந்திருக்க முடியாமல், அவர்களும் எழுந்து விடைபெற்று சென்றனர்.


வெளியே சென்றவர்கள், “இந்தப் பையனோட அத்தை சொன்னா மாதிரி எதுவும் இல்லையே… பையன் பிடி கொடுத்தே பேச மாட்டேங்கிறான்.” எனப் பேசிக்கொண்டே சென்றனர்.


அவர்களுக்குத் தங்கள் பெண் மீது அவ்வளவு நம்பிக்கை. சுஷ்மிதா அவ்வளவு அழகாக இருப்பாள். அவளைப் பார்த்துவிட்டு யாரும் வேண்டாம் எனச் சொல்ல மாட்டார்கள் என எண்ணத்தில் வந்துவிட்டனர். ஆனால் ராம் இன்னும் அவளது புகைப்படத்தைப் பார்க்கவில்லை.


“என்ன மா இது? நான்தான் உங்ககிட்ட அவ்வளவு சொன்னேனே.” என ராம் ஸ்வர்ணாவை பார்க்க…


“நான் அவங்களை வரசொல்லலை… சரி இப்ப அவங்க வந்ததுல என்ன தப்பு? நல்ல இடமா தெரியுது. நாம இப்ப பேசி வச்சுப்போம். கல்யாணத்தைத் தள்ளி பண்ணிக்கலாம்.” என ஸ்வர்ணா சற்று பிடிவாதமாகவே பேச…


“சரிமா உங்க இஷ்ட்டம்.” எனச் சொல்லிவிட்டு ராம் அங்கிருந்து சென்றான். குரலில் சுரத்தே இல்லை. அவனைப் பார்க்க அகிலாவுக்குப் பாவமாக இருந்தது.
ஸ்வர்ணா தன் மாமியாரிடம் பெண் வீட்டினர் வந்தது பற்றிச் சொல்லிவிட்டு, எப்போது பெண் பார்க்க போகலாம்? எனக் கேட்க…


“நீ கொஞ்சம் அவசரப்படுறியோன்னு தோணுது ஸ்வர்ணா… அவனுக்கு இஷ்ட்டமான்னு நல்லா கேட்டுக்கோ…அவனைப் பார்த்தா கல்யாணத்துக்கு விருப்பம் இருக்கிற மாதிரி தெரியலை.. நான் செஞ்ச தப்பை நீயும் செய்யாத.” என்றவர்,


“உங்க வசதிப்படியே பெண் பார்கிறது வச்சுக்கோங்க.” என்றார்.
அவருக்கு எதோ மனதுக்குச் சரியாகவே படவில்லை.


“அண்ணாவை பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு. என்னால எதுவும் பண்ண முடியலை.” எனக் கார்த்திக்கிடம் அகிலா புலம்பினாள்.


“படிச்ச பொண்ணு நீ… நீயே உங்க அம்மா மாதிரி நமக்கும் வாழ்க்கை இருந்திடுமோன்னு பயப்படுற. அப்ப உங்க அம்மா எப்படி இருப்பாங்க? அவ்வளவு ஈஸியா அவங்களை மாத்த முடியாது.”


கார்த்திக் வீட்டில் வந்து சுஜாவிடம் சொல்ல, “சரி நான் அகிலாவை பார்க்கிறது போல, அவங்க வீட்டுக்கு போறேன். நீ அகிலா அங்க லேட்டா வர்ற மாதிரி பார்த்துக்கோ.” என்றவர், மறுநாளே சம்பந்தி வீட்டுக்கு சென்றார்.


“வாங்க சம்பந்தி அம்மா.” என ஸ்வர்ணா அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்க…


“நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதான் இருக்கும், அதனால சும்மா அண்ணின்னே கூப்பிடுங்க.” என்றவர், “இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா, அகிலாவை பார்த்திட்டு, அவளுக்குப் பூ வச்சிட்டு போகலாம்ன்னு வந்தேன். எங்கதுல இது ஒரு வழக்கம்.” என்றார்.


“ஓ… அப்படியா, அவ இப்ப வந்திடுவா?” என்றவர், சம்பந்திக்கு விருந்து உபச்சாரம் செய்தார்.


“இதுக்கு மேல சாப்பிட முடியாது. உட்காருங்க பேசிட்டு இருப்போம்.”


“நானும் கார்த்திக்கு எத்தனையோ பொண்ணு பார்த்தேன், கடைசியில அகிலாவைதான் அவனுக்குப் பிடிச்சிருக்குன்னு தெரியாம போச்சு.”


“என் மருமகளும் அபர்ணாவும்தான் கண்டுபிடிச்சு சொன்னாங்க.”


“பெரிய இடமாச்சேன்னு நானும் யோசிச்சேன். ஆனா பையனுக்குப் பிடிச்சிடுச்சே… அதுவும் கல்யாணத்துக்கு அப்புறம் அவன் உங்க வீட்ல இருக்க ஒத்துக்கிட்டாதான் அகிலா கல்யாணத்துக்கு ஒத்துப்பேன்னு சொல்ல… நான் கூட எதுக்கு அப்படிச் செய்யணும். வேற இடம் பார்ப்போமேன்னு தான் நினைச்சேன்.”


“உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? எனக்கு அபர்ணாவைத்தான் எங்க கார்த்திக்கு பண்ணனும்ன்னு ஆசை. ஆனா அவளே கார்த்திக்கு வக்காலத்து வாங்கி, இந்தக் கல்யாணத்துக்கு என்னை ஒத்துக்க வச்சிட்டா.”


“நம்ம பசங்க சந்தோஷம்தானே நமக்கு முக்கியம். பிடிவாதம் பிடிச்சு என்ன சாதிக்கப் போறோம் சொல்லுங்க.” என வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல… பதமாகப் பேசினார். ரொம்பவும் பேசவும் பயமாக இருந்தது. அதனால் இன்னைக்கு இவ்வளவு போதும், என நிறுத்திக் கொண்டார்.


“அகிலா அப்படி ஒரு கண்டிஷன் போட்டது எனக்குத் தெரியாதுங்க. நான் அவகிட்ட பேசுறேன்.”


“ஐயோ ! அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க. அவ முழு மனசோட எங்க வீட்டுக்கு வந்ததான் எங்களுக்குச் சந்தோஷமா இருக்கும். யாரும் வற்புறுத்தி அவ வர வேண்டாம். அவளுக்கா தோணும் போது வரட்டும்.”


“இப்ப என்ன நாங்க வந்து கார்த்திக்கை பார்த்திட்டு போறோம். அவ மனசுல எதோ சங்கடம். நீங்க ஒன்னும் அவளைக் கேட்டுக்க வேண்டாம். எல்லாம் சரி ஆகிடும்.” என்றவர், பிறகு வேறு விஷயங்கள் பேசிக் கொண்டு இருந்தார்.


அகிலா வந்ததும், அவளிடம் வெள்ளி தட்டில் வாங்கி வந்த புடவை, பழங்கள் மற்றும் இனிப்புகள் என வைத்துக் கொடுத்தார். அவள் உடைமாற்றி வந்ததும், அவளுக்குத் தலையில் பூ வைத்துவிட்டு கிளம்ப… ஸ்வர்ணா சாபிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்றதும், இருந்து சாப்பிட்டு விட்டே சென்றார்.


சுஜா வந்துவிட்டு சென்றபிறகு, ஸ்வர்ணாவுக்கு ஒரே யோசனை… அவர் சொல்ல வந்த விஷயம் புரிந்துகொள்ள முடியாதவர் இல்லை. அவர் அபர்ணாவை தாங்கிப் பேசுவது புரிந்தது.


ராம் அபர்ணாவை திருமணம் செய்தால்… தன்னால்அவளோடு பொருந்தி ஒரே வீட்டில் இருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏனோ வர மறுத்தது.
வேண்டாம், நாம் அவனுக்குப் பார்த்த பெண்ணே இருக்கட்டும் என முடிவு செய்து கொண்டார்.

 

Advertisement