Advertisement

பனி சிந்தும் சூரியன்


அத்தியாயம் 20


மறுநாள் அலுவலகத்தில் அகிலாவை பார்த்த அபர்ணா வாழ்த்துக்கள் என்று சொல்ல… “இன்னும் கார்த்திக் முடிவு சொல்லலை அபர்ணா.” என்றாள்.


ஐயோ ! அண்ணனும் தங்கையும் சரியான அழுத்தம் பிடிச்சதுங்க என நினைத்துக் கொண்டாள்.


இரண்டு நாட்கள் சென்று நித்யாவிடம் இருந்து அபர்ணாவுக்கு அழைப்பு வந்தது.

“இங்க வீட்ல பெரிய கலவரமே நடக்குது. கொஞ்சம் வந்திட்டு போ.” என்றாள்.


“நான் எதுக்கு?”


“நீதானே மா கண்ணு, எல்லாம் ப்ளான் பண்ண. இப்ப என்ன ஒண்ணுமே சம்பந்தம் இல்லாத மாதிரி பேசுற? இங்க வீட்ல ஒரே சண்டை.” என்றாள்.


கல்லூரியில் இருந்து அலுவலகம் செல்லாமல், நேராகக் கார்த்திக் வீட்டிற்குச் சென்றாள். மதிய உணவு நேரம் என்பதால்… வீட்டு ஆண்களும் இருந்தனர். எல்லோருமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.


“வா… சாப்பிடு.” என அவளையும் உட்கார வைத்து பரிமாறினர்.


“கேட்டியா கதையை, கல்யாணம் பண்ணிக்கிட்டு, இவன் வீட்டோட மாப்பிள்ளையா போவானாம்.” எனக் கார்த்திக்கின் அம்மா சுஜா ஆரம்பித்து வைக்க…


“நீங்க எல்லாம் சம்மதிச்சாதான்.” என்றான் கார்த்திக்.


“அப்ப உங்களுக்குச் சம்மதம். நான் மட்டும் தனிக்குடித்தனம்ன்னு சொன்னா அந்த ஆட்டம் ஆடுவீங்க.”


“அண்ணி நீங்களுமா…” எனக் கார்த்திக் பரிதாபமாகப் பார்க்க…


“இதே நமக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருந்தா… அவளுக்குக் கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்ப மாட்டோமா… அப்படி நினைச்சுக்கோ சுஜா…” எனக் கார்த்திக்கின் அப்பா சொல்ல…


“நான் இதை லைக் பண்றேன் அங்கிள்.” என்றாள் அபர்ணா.


“அது பொண்ணுன்னா… பிறந்ததில இருந்தே வேற வீட்டுக்கு போறவன்னு மனசுல இருக்கும், பையன்னா அப்படியா?”


“ஆன்டி, இப்ப இருக்கிற காலத்தில பையன் என்ன பொண்ணு என்ன? அதெல்லாம் ஒரு காலம் வீட்டோட மாப்பிள்ளைன்ன குறைவா பார்க்கிறது. இப்ப காலம் மாறிடுச்சு… மகன் மருமகன் எல்லாம் ஒண்ணுதான்.”


“நீ சொல்றது உணமைதான். சில வீட்ல அவங்களுக்குப் பையன் இருக்காது அப்ப வீட்டுக்கு வர்ற மருமகனைதான் மகன் மாதிரி கூடவே வச்சுகிறாங்க. எங்க வீட்ல அப்படி இல்லை.. எங்க தொழில் ஒண்ணா இருக்கு… நாங்க ஒரே குடும்பமா இருக்கோம்.”


“பெண் குழந்தை இல்லை எனக்கு. வீட்டுக்கு வர்ற மருமகள்களைதான் மகள் போலத் தாங்கனும்ன்னு நினைச்சு இருந்தேன். நித்யாவும் என்னை மாமியாரா பார்க்கிறது இல்லை. இன்னொரு மருமகளும் அவளைப் போலவே வந்தாபோதும் எனக்கு.” என்றார் சுஜா நீளமாக.


“அகிலாவும் அப்படித்தான் ஆன்டி இருப்பாங்க.”


“அவளா? வரும்போதே கண்டிஷன் போட்டு வர்றா… அதுவும் என் பையனை என்கிட்டே இருந்து பிரிக்கப் பார்க்கிறா? அவ நித்யா மாதிரியா கிடையவே கிடையாது.”


“எனக்கு அந்த மாதிரி கண்டிஷன் போட்டு வர்ற யாரும் வேண்டாம். என் பையனுக்கு என்ன குறை? கண்டிஷன் போட்டு எல்லாம் அப்படி ஒன்னும் இந்தக் கல்யாணம் நடக்க வேண்டாம்.”


“சரி நீங்க சொல்ற மாதிரி இந்தக் கல்யாணம் நடக்க வேண்டாம். ஆனா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி, நீங்க இனிமே தொந்தரவு பண்ணக்கூடாது.” என்றான் கார்த்திக்.


“ஏன் சொல்லக் கூடாது? அவளை விட்டா வேற பெண்னே இல்லையா… நான் சொல்றது புரிஞ்சிக்கோ கார்த்திக்… அந்தப் பொண்ணு இந்தக் குடும்பத்துக்கு ஒத்து வரமாட்டா… ஏன் டா அவகிட்ட தொங்கிட்டு இருக்க நீ?”


“வேற பொண்ணு கூட வேண்டாம். நம்ம அபர்ணாவையே கல்யாணம் பண்ணிக்கோ… தங்கமாட்டம் இருக்கா…அவளும் நித்யாவுக்கும் ரொம்ப நல்லா ஒத்துப்போகுது. வீடும் கலகலப்பா இருக்கும். என்ன சொல்ற?”


சுஜா சொன்னதைக் கேட்டு அபர்ணா அதிர்ச்சியாக… “அம்மா…” எனக் கார்த்திக் கத்தியே விட்டான்.


“அபர்ணாவும் தான் லவ் பண்றா. அதுவும் அவ ரேஞ்சு என்னன்னு தெரியாம பேசாதீங்க மா?”


“என்ன பெரிய ரேஞ்சு? உன்னை விடப் பணக்காரனா அவன். பணத்தை மட்டும் வச்சு என்ன செய்யப்போறோம்.”


“அபர்ணா, நான் சொல்றது கேளு. இந்தக் காதல் எல்லாம் வயசுல நல்லா இருக்கும். அப்புறம் ஏன் டா காதலிச்சோம்ன்னு தோணும். அதுவும் என்னை மாதிரி மாமியார் கிடைக்கிறது எல்லாம் கஷ்ட்டம் யோசிச்சிக்கோ.” எனச் சுஜா சொல்ல… அபர்ணா கார்த்திக்கை பார்த்தாள்.


“ஓ… அபர்ணாவுக்கு ஆஃபர் வேற கொடுக்கறீங்களா நீங்க. இங்க நாங்க என்ன பேசிட்டு இருக்கோம், நீங்க என்ன பேசுறீங்க?” எனக் கார்த்திக் கொந்தளிக்க…


“இதுதான் என் முடிவு நான் சொல்லிட்டேன்.” என்றார் சுஜா.


சாப்பிட்டு முடித்து ஹாலில் வந்து அனைவரும் உட்கார… “ஆன்டி, நான் கொஞ்சம் பேசணும். நான் பேசினபிறகு நீங்க முடிவு பண்ணுங்க.” என்ற அபர்ணா சுஜாவின் அருகே அவர் கையைப் பற்றியபடி உட்கார்ந்தாள். நித்யா அவர்களுக்கு எதிரில் உட்கார… மற்றவர்கள் ஆளுக்கு ஒருபக்கம் நின்று அவள் பேசுவதைக் கவனித்தனர்.


“ஆன்டி, நீங்க ஒன்னு புரிஞ்சிக்கோங்க. உங்க மகனை உங்ககிட்ட இருந்து பிரிக்கவோ… இல்லை இந்தக் குடும்பத்தைப் பிடிக்காமலோ அவங்க இந்த நிபந்தனை போடலை….”


“உங்க எல்லோருக்குமே அகிலா குடும்பத்தில என்ன நடந்துன்னு தெரியும். அவங்க ரொம்பப் பாதிக்கபட்டிருக்காங்க. வெளிய பார்க்கிறதுக்கு இயல்பா இருந்தாலும், மனசு அளவுல ரொம்ப உடைச்சு போய் இருக்காங்க.”


“கணவன் மனைவி உறவு மேல எல்லாம் அவங்களுக்கு நம்பிக்கை வரமாட்டேங்குது. அம்மா மாதிரி நம்மையும் தூக்கி போட்டுடுவாங்களோன்னு பயம்தான் இருக்கு.”


“அவங்க பயத்துக்கு அவசியமே இல்லைன்னு என்னைக்கு அவங்களுக்கு நம்பிக்கை வருதோ… அப்ப அவங்களும் நித்யா அக்கா போலத்தான் இந்தக் குடும்பத்தில இருப்பாங்க. அதுவரை நீங்க கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும்.”


“இன்னொன்னும் தெரிஞ்சிக்கோங்க ஆன்டி. அகிலா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கலைனா, வேற யாரையும் பண்ணிக்க மாட்டாங்க. உங்க பையனும் அப்படித்தான். இதை பார்த்து உங்களுக்கு சந்தோஷமாவா இருக்கும் சொல்லுங்க.”


அபர்ணா பேசி முடித்ததும், அப்படி ஒரு கனத்த மௌனம் நிலவியது. “நீயேன் சுஜா ரொம்ப வருத்திக்கிற? அங்க நாலு நாள் இருந்தா… இங்க ரெண்டு நாள் இருக்கட்டும். கொஞ்ச நாள் போனா எல்லாம் சரி ஆகிடும்.” என்றார் அவரது கணவர்.


“அம்மா, அவன் இஷ்ட்டப்படி கல்யாணம் பண்ணிக்கட்டும் விடுங்க மா…” என்றான் மூத்தவன்.


“அத்தை நாம இத்தனை பேர் இருக்கோம், அவளை மாத்திடலாம். உங்க பையனும் அஞ்சு வருஷமா அந்தப் பெண்ணையே நினைச்சிட்டு இருக்கார் யோசிச்சு பாருங்க.” என்றாள் நித்யா.


இப்படி ஆளுக்கு ஒன்று சொல்ல… “நான் செய்யுற சமையல்ல கூட… என் பையனுங்களுக்குப் படிச்சதுதான் இருக்கும். பெரியவனுக்கு இது பிடிக்கும், சின்னவனுக்கு இது பிடிக்கும்ன்னு தான் பார்த்து பார்த்து செய்வேன். இனி ஒருத்தனுக்குப் பார்த்தா போதும்.”


“பெரியவனோட குழந்தைகளை வளர்க்கிற மாதிரி, சின்னவனோட குழந்தைகளையும் வளர்க்க ஆசைப்பட்டேன். அது முடியாது இல்ல.. பரவாயில்லை இருக்கட்டும்.”


“நீங்க எல்லாம் இவ்வளவு சொல்லும்போது, நான் மட்டும் பிடிவாதம் பிடிச்சு என்ன ஆகப்போகுது? உங்க எல்லார் இஷ்ட்டபடியே கல்யாணம் நடக்கட்டும்.” எனச் சொல்லிவிட்டு சுஜா எழுந்து உள்ளே சென்றார். அவரைச் சமாதானம் செய்ய அவரது கணவரும் சென்றார்.


அவர் சந்தோஷமாகச் சம்மதிக்கவில்லை. அது எல்லோருக்கும் புரிந்ததால்… மற்றவர்களும் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.


அம்மாவை இவ்வளவு கஷ்ட்டப்படுத்துகிறோமே எனக் கார்த்திக்கு இருந்தது. அவன் உடைந்து போய் உட்கார்ந்து விட…


“டேய் ! அம்மாவை பத்தி தெரியாதா உனக்கு, கொஞ்ச நாள்ல சரி ஆகிடுவாங்க.” என மகேந்திரனும்…


“நாங்க எல்லாம் இருக்கோம். அப்படியே விட்டுடுவோமா? அவ இந்த வீட்டுக்கு வரட்டும் பார்த்துக்கலாம்.” என நித்யாவும் கார்த்திக்கை தேற்றினர். அபர்ணா வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அலுவலகம் செல்லும் வழியில் ராம்மை அழைத்தவள், “நீங்க போட்ட கண்டிஷனால கார்த்திக் வீட்ல எவ்வளவு பிரச்சனை தெரியுமா?” என ஆரம்பிக்க,


“என்ன ஆச்சு?” ராம் பதட்டப்பட… அபர்ணா அங்கே நடந்ததைச் சொன்னாள்.


“நீங்க உங்க அம்மா, உங்க தங்கைக்குப் பார்க்கிற மாதிரிதானே…. கார்த்திக் அவங்க அம்மா, அவங்க குடும்பத்துக்காகப் பார்ப்பார்.”


“எனக்குப் புரியுது அபர்ணா.. ஆனா நீ எங்க நிலைமையும் புரிஞ்சிக்கோ.”


“உங்க நிலைமை புரியறதுனால தான். கார்த்திக் அம்மாகிட்ட அவ்வளவு தூரம் பேசினேன். ஆனா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கோங்க ராம். இதெல்லாம் அகிலாவுக்காகத்தான். அவங்க என்னைக்குக் கார்த்திக் வீட்டுக்கு முழு மனசோட போறாங்களோ, அன்னைக்கு நீங்க அவங்களைத் தடுக்கக் கூடாது.”


“கண்டிப்பா நான் தடுக்க மாட்டேன். நான் அவளுக்காகத் தானே இவ்வளவும் பண்றேன். அவ சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்.”


“இப்ப இப்படிச் சொல்லிட்டு… அப்புறம் பேச்சு மாறினீங்க… தொலைச்சிடுவேன் சொல்லிட்டேன்.” என அவனை மிரட்டி விட்டு அபர்ணா போன்னை வைத்தாள்.


‘நம்மையே ஒன்னு மிரட்டுது பார்.’ என ராம் அந்தப் பக்கம் சிரித்துக் கொண்டான்.


அதன்பிறகு ராமிற்கு நிறைய வேலைகள் இருந்தது. அவன் கார்த்திக்கின் அப்பாவோடு தொடர்பு கொண்டு பேசினான்.


அவர் தாங்கள் இந்த வாரம் சம்ப்ரதாயதிற்காக, பெண் பார்க்க வருவதாகச் சொன்னார். அப்போது மற்ற விஷயங்கள் பேசிக்கொள்ளலாம் என்றார்.


ராம் அன்று இரவு தான் ஸ்வர்ணாவிடம் அகிலாவுக்குக் கார்த்திக்கை பார்த்திருப்பது பற்றிச் சொன்னான். அவருக்கு ஆச்சர்யம் கூடவே பெரு மகிழ்ச்சி.


“உன் தங்கச்சி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாளா?” எனஅவர் நம்பாமல் கேட்டார்.


“நீங்களே அவகிட்ட கேளுங்க.” என்றவன், தங்கையைப் பார்த்து சிரிக்க… அகிலா முகத்திலும் வெட்கம் படர்ந்தது.


அதைப் பார்க்கவே ஸ்வர்ணாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. மகள் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து விடுவாளோ எனப் பயந்து கொண்டு இருந்தார்.


அவர்கள் இந்தவாரம் பெண் பார்க்க வருவதாக ராம் சொல்ல… “முதல்ல உன் பாட்டிகிட்ட சொல்லணும்.” என்றார் பரபரப்பாக…


“சொல்லலாம்… கொஞ்சம் உட்காருங்க உங்ககிட்ட பேசணும்.” என்றவன், “அம்மா, இது நம்ம வீட்ல வர்ற முதல் விசேஷம்… இதுல நீங்கதான் எல்லாம் செய்யணும். நான் வேற யார் செய்றதையும் விரும்பலை.” என்றான்.


“ஆமாம் மா எங்களுக்கு எல்லாம் நீங்கதான் செய்யணும்.” என்றாள் அகிலாவும். தன் பிள்ளைகளை நினைத்து ஸ்வர்ணாவுக்குப் பெருமையாக இருந்தது.


அகிலாண்டேஸ்வரி விஷயம் கேள்விபட்டதும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். என்கிட்டே சொல்லி இருந்தா, இன்னும் பெரிய இடமாவே பார்த்து இருக்கலாமே என்றார்.


“பாட்டி, வசதி முக்கியம் இல்லை… அகிலாவுக்குக் கார்த்திக்கைதான் பிடிச்சிருக்கு. அதுதான் முக்கியம்.” என்றான்.


இந்த வீட்லயே பெண் பார்க்கும் விசேஷம் வைத்துக்கொள்ளலாம் என அவர் சொல்ல.. ராம் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.


“பொண்ணுதானே பார்க்க வர்றாங்க. நீங்க மட்டும் வாங்க போதும்.” என்றுவிட்டான். அவன் சித்தப்பா குடும்பங்களைக் கூட அவன் அழைக்கவில்லை… அவர்களை அழைத்தால்… பிறகு தன் அப்பாவையும் அழைக்கவேண்டியது வரும் என்று… அவர்கள் வீடு வரை போதும் என்றுவிட்டான்.


விஷயம் ப்ரகாஷ் காதிற்குப் போன போது, மகன் எப்படியும் தன்னை அழைப்பான் என்றே எதிர்ப்பார்த்தார். ஆனால் ராம் அவரை ஒதுக்கிவிட்டதை பெரும் தன்னிரக்கமாக அவர் உணர்ந்தார்.


பெண் பார்க்கும்போது மனமே இல்லாமல்தான் சுஜாதா வந்தார். முகத்தைக் கூட உர்ரென்றுதான் வைத்து இருந்தார். அகிலாவுக்கு ஒன்றும் அவர்கள் புதியவர்கள் இல்லை.. அவள் வரப் போகத்தானே இருந்தாள்… பிறகு தங்கள் வீட்டிற்கு வந்து இருப்பதற்கென்ன என்ற கோபம் அவருக்கு. ஆனால் அவர் கோபம் எல்லாம் ஸ்வர்ணாவை பார்க்கும் வரைதான்.


ஸ்வர்ணா வந்து வாஞ்சையாகப் பேசியபோது… அவரால் கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை. நடப்பது நடக்கட்டும் என விட்டுவிட்டார்.


“சினிமாவுல வர்ற மாதிரி எல்லாம் வேண்டாம். நீ அவங்க வரும்போது ஹால்ல இரு.” என ராம் தங்கையிடம் சொல்லி இருந்தான். அதனால் அகிலாவும் வந்தவர்களை வரவேற்று உபசரித்தாள்.


அவள் எப்போதும் கலகலப்பாகப் பேசும் ரகம் இல்லை. அமைதியாகத்தான் இருப்பாள். அன்றும் அப்படித்தான் இருந்தாள். ஆனால் நித்யா விடவில்லை.. அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். நித்யாவுடைய மகன் அகிலாவோடு ஒட்டிக் கொண்டான்.


சுஜாதா அடிக்கடி கார்த்திக்கை பார்த்துக் கொண்டிருந்ததால்… அவன் அகிலா பக்கம் திரும்பக் கூட இல்லை… நல்லபிள்ளையாக ராம்மிடம் பேசிக்கொண்டு இருந்தான்.


கார்த்திக்கு இப்போதே மத்தளத்தின் நிலைதான் … இரண்டு பக்கம்மும் அடி உண்டு.


அவர்கள் கிளம்பியதும் பாட்டி நிச்ச்யமாவது அவர்கள் வீட்டில் வைக்கலாம் எனச் சொல்ல… ராம் மறுத்துவிட்டான்.


“அதுதானே நம்ம பூர்வீக வீடு. அங்கதான் வைக்கணும்.”


“வேண்டாம் பாட்டி… எங்க வீட்லயே வச்சுக்கலாம்.”


“ஏன் டா?”


“அங்க வச்சா எங்க அம்மா எதோ பத்தோட பதினொன்ணா தான் தெரிவாங்க, அதோட உங்க பையன் அவரோடரெண்டாவது பொண்டாட்டியோட கைகோர்த்திட்டு வெட்கமே இல்லாம வருவாரு. இது எங்க அம்மா வீடு. இங்க வேற யாரும் நுழைய முடியாது. அவங்கதான் ராணி மாதிரி இருக்கணும்.” என்றான்.


அன்றுதான் பேரன் மனதில் எரிந்து கொண்டிருக்கும் தீ பாட்டிக்குத் தெரிந்தது. அவன் இவ்வளவு தீவிரமாக இருப்பதைப் பார்த்தால்… இது எங்குப் போய் முடியுமோ எனக் கவலையாக இருந்தது.

Advertisement