Advertisement

பனி சிந்தும் சூரியன்

அத்தியாயம் -2


மாப்பிள்ளை வீட்டினர் வந்ததும், வீடே பரபரப்பில் இருந்தது. அய்யர் வைத்து நிச்சயதார்த்தம் செய்தனர். தட்டு மற்றிக்கொண்டதும், மாப்பிள்ளையும் பெண்ணையும் அங்கிருந்த மேடையில் நிற்க வைத்து, எல்லோருக்கும் அறிமுகம் செய்தனர்.


சோனா தங்க நிறத்தில் காக்ரா சோலி அணிந்து இருக்க, அவள் வருங்காலக் கணவன்அவினாஷ், வெள்ளையும், சிவப்பும் கலந்த ஷெர்வானி அணிந்து இருந்தான்.


மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொள்ள, அவினாஷின் அம்மா சோனாவின் கழுத்தில் வைர மாலை அணிவித்தார். பிறகு அந்த வீட்டின் இளைய பட்டாளம் எல்லாம் சேர்ந்து மேடைக்குச் சென்றது.


முன்று அடுக்கில் ஒரு பெரிய கேக்கை கொண்டு வந்து வைக்க, அதை அவினாஷும், சோனாவும் சேர்ந்து வெட்டினர். இருவரும் ஒருவருக்கொருவர் கேக்கை ஊட்டிக்கொள்ள, மற்றவர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.


அடுத்தத் துண்டு கேக்கை கையில் எடுத்த சோனா, மாடி வளைவில் நின்றிருந்த ராமை மேடைக்கு அழைத்தாள். ராம் மாட்டேன் என்று சொல்ல, அவள் அவனை முறைக்க, ராம் சிரித்துக் கொண்டே மேடைக்குச் சென்றான்.


சோனா அவனுக்குக் கேக் ஊட்டிவிட, ராமும் ஒரு துண்டு கேக் எடுத்து சோனாவுக்குக் கொடுத்தவன், அதுவரை இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவினாஷ்க்குக் கை கொடுத்தான். பிறகு எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்தனர்.


சோனா அவள் பெற்றோருக்கு ஒரே பெண். ஆனால் சிறு வயதில் இருந்து ராம் மற்றும் அகிலாவுடன் சேர்ந்து வளர்ந்ததினால் தான் ஒற்றைக் குழந்தை என்ற எண்ணம் அவளுக்கு வந்தது இல்லை. அதுவும் அவளுக்கு ராம் என்றால் மிகவும் இஷ்ட்டம். அண்ணன் என்றால் உயிரையே விடுவாள்.


இளைய பட்டாளம் மேடையை விட்டு இறங்கியதும், வந்திருந்த உறவினர்கள் தம்பதிகளை வாழ்த்த சென்றனர். தோட்டத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்ததால், பலர் சாப்பிட செல்ல, வீட்டிற்குள் கூட்டம் குறைந்தது.


அஞ்சலி அபர்ணாவிடம் சென்றாள். “ஹப்பா ! என்ன கூட்டம்? கொஞ்ச நேரம் ப்ரீயா உட்காரலாம்.” என்றபடி, அபர்ணாவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.


“ஏன் மண்டபத்தில வைக்காம வீட்ல வச்சிருக்காங்க?”


“சோனா அக்கா கல்யாணம்தான், இந்தத் தலைமுறையில நடக்கிற முதல் விசேஷம். அதனால பாட்டி வீட்லதான் வைக்கணும்ன்னு சொல்லிட்டாங்க.”


அப்போதுதான் ராமின் நினைவு அபர்ணாவுக்கு வந்தது. “ராம் யாரு? சோனாவோட அண்ணனா, கேக் எல்லாம் ஊட்டி விட்டாங்களே.” எனக் கேட்டாள்.


“அண்ணன்தான் ஆனா கூடப் பிறந்த அண்ணன் இல்லை. இந்தக் குடும்பத்தோட மூத்த வாரிசு ராம்பிரகாஷ், இப்ப யாருன்னு புரியுதா?”


“மாமாவோட பேர்தானே பிரகாஷ். அப்ப உங்க அப்பாவோட முதல் மனைவியோட பையனா அவங்க. அதுதான் எனக்கு எங்கையோ பார்த்த மாதிரி இருந்தது.”


“ஆமாம், இந்த வீட்டின் இளவரசன். அப்படித்தான் பாட்டி சொல்வாங்க.” அஞ்சலி சொல்லும்போதே அவள் குரலில் இருந்த சலிப்பு வெளிப்படையாகத் தெரிய,

“உனக்கும் அவங்க அண்ணன் தானே உனக்கு அவங்களைப் பிடிக்காதா?” என அபர்ணா கேட்டாள்.


“யாரு அவன் எனக்கு அண்ணனா? என்னை எதோ விரோதியை பார்க்கிறது போலப் பார்ப்பான். அவனுக்கு மனசுல பெரிய மகாராஜான்னு நினைப்பு.”


“ஏன்?”


“அவங்க அப்பா எங்க அம்மாவை இரண்டாவதா கல்யாணம் பண்ணிகிட்டார் இல்லையா? அந்தக் கோபம். எனக்கும் அவனோட பேச பிடிக்காது. ஆனா எங்க அம்மா விடமாட்டாங்க. என்னைப் போய் எதாவது பேச சொல்வாங்க.அவங்களுக்காகத்தான் நான் அவனோட பேசுறேன்.”


“என்ன அவன் இவன்னு சொல்ற? அவங்க உன்னை விட ரொம்பப் பெரியவங்க இல்லையா?”


“ஆமாம் ரொம்பப் பெரியவன்தான்.” அஞ்சலி எரிச்சலாகச் சொல்லும்போதே, அவர்கள் இருவரையும் தேடி நீலீமா வந்துவிட்டார்.


“ரெண்டு பேரும் இந்தத் தனியா என்ன பண்றீங்க? வாங்க நாமமும் போட்டோ எடுத்திட்டு சாப்பிட போகலாம்.” என இருவரையும் அழைக்க, இருவரும் எழுந்து அவரைப் பின் தொடர்ந்தனர்.


மாடிப் படியில் முதலில் நீலீமா, அடுத்து அஞ்சலி கடைசியாக அபர்ணா இறங்க. கீழே நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்த ராம், அப்போதுதான் அபர்ணா அவர்களோடு இறங்கி வருவதைக் கவனித்தான்.


முதலில் கண்களில் இருந்த கேள்வி, பிறகு நீலீமா அபர்ணாவை தன் புகுந்த வீட்டினருக்கு அறிமுகம் செய்யும்போது, அவள் யார் என்பது தெரிந்து விட, அவன் முகம் முற்றிலும் மாறிவிட்டது.


அபர்ணா ராமையே பார்க்க, அவன் அவளைப் பார்ப்பதை கூடத் தவிர்த்தான். அவன் நீலிமாவின் முகத்தைப் பார்த்துக் கூட இதுவரை பேசியது இல்லை. பேச வேண்டிய சூழ்நிலை வந்தால் கூட, வேறு எங்கோ பார்த்துக் கொண்டுதான் பேசுவான்.


எல்லோரும் சேர்ந்துதான் சாப்பிட சென்றனர். ராம் அபர்ணாவின் பக்கம் கூடத் திரும்பவில்லை. பிரேமின் பிள்ளைகள் இருவரும்தான் அபர்ணாவிடம் பேசிக்கொண்டு இருந்தனர்.


“உங்களைப் பத்தி சொல்லுங்களேன்.” மமதி கேட்க,


“நான் சின்ன வயசா இருக்கிற போதே, நாங்க துபாய் போயிட்டோம். அப்பா அங்கத்தான் ஆடிட்டரா வேலை பார்க்கிறாங்க. நான் ஜர்னலிசம் அண்ட் மாஸ் கம்யுனிகேஷன்ல டிகிரி முடிச்சிருக்கேன். இங்க மேல படிக்க வந்திருக்கேன். எனக்கு ஒரு தம்பி இருக்கான். பேரு அருண். அவன் இப்ப ஸ்கூல் பைனல்ல இருக்கான்.”


“ஓ…சூப்பர்.”


அபர்ணா சொல்வதை ராமும் கேட்டுத்தான் இருந்தான். ஆனால் எந்த உணர்ச்சியையும் அவன் முகம் காட்டவில்லை.


அவினாஷ் வீட்டினர் சாப்பிட்டு கிளம்பியதும், ஹாலில் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர். அப்போது ராமிடம் வந்த சோனா “அண்ணா, நான் ஒன்னு சொல்வேன். நீங்க கண்டிப்பா செய்யணும்.” என்றாள்.


“என்னன்னு சொல்லு.”


“முதல்ல நீங்க செய்வீங்கன்னு சொல்லுங்க. அப்பத்தான் சொல்வேன்.”


“நீ முதல்ல என்னனு சொல்லு?”


“நான் என் கல்யாணம் முடிஞ்சு லண்டன் போயிடுவேன் இல்லையா… அதனால் நான் இங்க இருக்கிற கொஞ்ச நாள், நாம எல்லாம் சேர்ந்து இருக்கனும்ன்னு நான் ஆசை படுறேன்.”


“உனக்கு எப்ப பார்க்கனும்ன்னு சொல்லு நாங்க வர்றோம்.”


“அதெல்லாம் முடியாது. நீங்க இங்கயே தங்கணும்.”


“நான் அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்.”


“பெரியம்மா வேண்டாம்ன்னு சொல்ல மாட்டாங்க, எனக்குத் தெரியும் அண்ணா.”


“அவதான் ஆசைப்படுறா இல்லையா… நீதான் ஒத்துகிட்டா என்ன கண்ணா? அவ வெளிநாடு போயிட்டா, நாமும் அவளை நினைச்ச நேரம் பார்க்க முடியுமா? எனக்கும் என்னோட பேரன் பேத்திகளை ஒண்ணா வச்சு பார்க்கனும்ன்னு ஆசை இருக்காதா?”


“சோனா, பாட்டி இருவருமே வற்புறுத்த,” ராமிற்கு ஒத்துக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. அவன் அகிலாவை பார்க்க, அவள் சம்மதமாகத் தலையசைக்க, ராமும் சரி என்றான்.


“ஹே…” எனச் சோனாவோடு மற்றவர்களும் சேர்ந்து சந்தோஷ கூச்சல் போட்டனர்.  


சோனா தன் அத்தை பிள்ளைகளையும் அழைத்தவள், அஞ்சலியையும் தன் திருமணம் வரையில் இங்கே தங்க வேண்டும் என்றாள். அஞ்சலிக்கு ஆசைதான். ஆனால் அபர்ணாவை விட்டு வர யோசித்தாள். சோனா அபர்ணாவை தங்களோடு வந்து தங்கும்படி கேட்க, அவள் பதில் சொல்வதற்குள் நீலீமா, இருவரையும் அனுப்புவதாகச் சொல்லிவிட்டார்.


இதில் அகிலாண்டேஸ்வரிக்கு விருப்பம் இல்லை. ஆனால் அப்போது எதுவும் சொல்ல முடியாத நிலை. சோனாவின் புகுந்த வீட்டினர் லண்டனில் வசிப்பதால், நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் இடையே பத்து நாட்கள்தான் இருந்தது.


அந்த வார இறுதியில் இளையவர்கள் எல்லாம் சிந்திப்போம் என்று சொல்லி, விடைபெற்றனர்.


அபர்ணாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு வாரம் ஒரே வீட்டில் ராம் உடன் இருக்கப் போகிறோம் என்ற நினைவே அவளுக்கு இனித்தது.


இந்த விஷயம் அபர்ணாவின் அம்மா சுகன்யா காதிற்குச் சென்றபோது, அபர்ணா அந்த வீட்டிற்குச் சென்று தங்குவதில் அவருக்கு விருப்பம் இல்லை.


“அவங்க வீட்ல போய் நீ ஏன் தங்கணும்? அஞ்சலி போறது சரி. ஆனா நீ அங்க போய்த் தங்கினா நல்லாவா இருக்கும்.”


“ம்ம்… உங்களுக்கு இஷ்ட்டம் இல்லைனா நான் போகலை.”


“நான் உன் அத்தைகிட்ட பேசுறேன்.”


“சரி மா.”


சுகன்யா நீலிமாவிடம் சொன்ன போது, “கல்யாணம் வரையிலும் நாங்களும் இங்கயும் அங்கயுமாதான் அண்ணி இருப்போம். அபர்ணாவும் எங்களோட இருக்கப் போறா அவ்வளவுதான். இதுக்கு ஏன் நீங்க இவ்வளவு கவலைபடுறீங்க? நான் பார்த்துகிறேன் அண்ணி.” என்றபோது சுகன்யாவுக்கும் மறுக்க முடியவில்லை.


சென்னையில் அவர்களுக்கு ஒரு அபார்ட்மெண்ட் இருக்கிறது. அதை வாடகைக்கு விட்டு இருக்கிறார்கள். அந்த வீட்டினர் காலி செய்ததும், அபர்ணா அங்குச் சென்று விடுவாள். அதுவரை தான் அவள் அத்தை வீட்டில் இருக்கப் போவது.


தூரத்தில் இருப்பதால்… பெரிதாக ஒட்டு உறவு இல்லை. எப்போதோ ஒருமுறை நீலாமமாவும், அஞ்சலியும் துபாய் வந்து தங்கிவிட்டுச் செல்வார்கள். இவர்களும் இந்தியா வரும்போது, ஒருநாள் அவர்கள் வீட்டில் தலையைக் காட்டி விட்டுச் செல்வார்கள்.


நீலிமாவின் அண்ணன் ஸ்ரீகாந்திற்கு, அவள் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ததில் விருப்பம் இல்லை. அவர் தடுத்தும் அவர் தங்கை கேட்கவில்லை. அதனால் ஒரு அளவோடுதான் எப்போதும் வைத்துக் கொள்வார்கள்.


அபர்ணாவுக்குக் கல்லூரியில் சேரும் வேலை இருந்ததால்… வேறு வழி இல்லாமல்தான் இங்கே அனுப்பினர்.


சுகன்யா மகளுக்கு நிறைய அறிவுரை வழங்கினார். “அவங்க நம்மைப் போல இல்லை. பெரிய இடம், ஒரு அளவோட வச்சுக்கோ. அங்க எல்லோருக்கும் நம்மைப் பிடிக்கும்ன்னு சொல்ல முடியாது.”


“ஏன் மா பிடிக்காது. நாம என்ன பண்ணோம்?”


அபர்ணாவுக்கு அவள் அத்தை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்தது தெரியும். ஆனால் அது எப்படி? எந்தச் சூழ்நிலையில் நடந்தது என்று தெரியாது. கருத்து மாற்றத்தால், விவாகரத்தும் மறு திருமணமும் இந்தக் காலத்தில் சகஜம்தான். அது போலத்தான் அவள் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

மகளுக்கு மற்ற விஷயங்கள் தெரிவதில் சுகன்யாவுக்கு விருப்பம் இல்லை. அதனால்”அவங்க நம்மை மாதிரி இல்லை, ரொம்பப் பணக்காரங்க. நம்மைப் போல ஆட்களை எல்லாம் மதிக்க மாட்டாங்க. உனக்குப் பிடிக்கலைனா அங்க இருக்காத வந்திடு.” என்றார்.


“சரி மா.” என்றாள் அபர்ணா.


தன் அம்மா பேசியதை வைத்து அபர்ணாவுக்குமே அங்கே செல்வதற்கு இப்போது தயக்கமாக இருந்தது. இருந்தாலும், அங்குச் சென்றால்… ராம்மை பார்க்கலாம் என்ற ஒரு காரணமே மற்ற தயக்கத்தை விரட்டி அடித்தது.


நீலீமா ஷாப்பிங் சென்றபோது, அஞ்சலி, அபர்ணா இருவருக்குமே நிறைய உடைகள் எடுத்து வந்திருந்தார்.


“எனக்கு எதுக்கு அத்தை இவ்வளவு வாங்கினீங்க?”


“நீயே பார்த்த இல்லையா, அஞ்சலி பாட்டி வீடு எப்படி இருந்ததுன்னு. அதுவும் இப்ப கல்யாண வீடு. யாரவது வந்து போயிட்டே இருப்பாங்க. எப்பவும் நல்ல டிரஸ் பண்ணி இருக்கணும் சரியா?”


“ம்ம்… நான் வேணா போகாம இருந்திடட்டுமா அத்தை. அம்மாவுக்குக் கூட அவ்வளவா இஷ்ட்டம் இல்லை.”


“அஞ்சலி அங்க போயிட்டா, உனக்கு இங்க போர் அடிக்கும். உன் கூடத்தான் அஞ்சலி இருக்கா இல்ல… பயப்படாம போயிட்டு வா.”


அபர்ணாவுக்கு ஆசை தயக்கம் இரண்டுமே இருந்தது. ராம்மை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் செல்கிறாள். ஆனால் காயப்பட்டு வருவோம் என அப்போது அவளுக்குத் தெரியாது.


சனி அன்று இரவுதான் இவர்கள் இருவரும் அங்கே சென்றனர். ராம்மை தவிர மற்ற அனைவருமே அங்கு இருந்தனர். அபர்ணாவை பார்த்ததும் அகிலாண்டேஸ்வரியின் முகம் மாறியது. ஆனால் மற்றவர்கள் அவளை ஆவலாக வரவேற்றனர்.


அஞ்சலியின் அத்தை பெண் நேகாவுக்கும், அபர்ணாவின் வயதுதான். மனிஷ், மமதி, அகில், அஞ்சலி இவர்கள் எல்லோருக்கும் ஒன்று அல்லது இரண்டு வயது வித்தியாசம்தான். அதே போல அகிலாவுக்கும், சோனாவுக்கும் ஒரு வயதுதான் வித்யாசம்.


முதல் தளத்தில் இருந்த மணிஷின் அறையில் அகில் தங்கிக்கொண்டான். முன்றாவது தளம் முழுவதும், இவர்கள் எல்லோரும் ஆக்ரமித்துக் கொண்டனர். சோனாவின் அறையில் அகிலாவும், மமதியின் அறையில் அவளோடு நேகாவும், அஞ்சலி மற்றும் அபர்ணாவுக்கு ஒரு தனி அறையும், அது தவிர இன்னும் ஒரு அறை இருந்தது. அது ராமின் அறை. அவன் இங்கே இல்லையென்றாலும், வேறு யாரும் அந்த அறையை உபயோகிக்கப் பாட்டி அனுமதிக்க மாட்டார்.


ராம் அந்த வீட்டில் உரிமை கொண்டாட வேண்டும் என நினைத்தது இல்லை. ஆனால் அவனுடைய உரிமையை அகிலாண்டேஸ்வரி யாருக்கும் விட்டுத்தர மாட்டார்.


அஞ்சலியும், அபர்ணாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையில் சென்று பெட்டிகளை வைத்து விட்டு வந்ததும், எல்லோரும் கீழே ஹாலில் உட்கார்ந்துதான் அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர்.


இரவு உணவுக்குத் தந்தூரி ரொட்டி, பட்டர் நாண் என இரண்டு வகை இருக்க, அதே போல் தொட்டுக்கொள்ளவும் பன்னீர், சிக்கன் என இரண்டு வகை இருந்தது.


இரவு உணவு மட்டும் அந்த வீட்டில் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். மற்ற நேரங்களில் அவரவர் விருப்பம் போல் உணவு அருந்தலாம்.


பெரிய உணவு மேஜை, ஒரே நேரத்தில் இருபத்தியொரு பேர் அமர்ந்து சாப்பிடலாம். மேஜையில் தட்டு, கண்ணாடி டம்ளரில் தண்ணீரும் வைக்கப் பட்டிருந்தது. நிறையப் பேர் என்பதால்… பன்னீரும், சிக்கனும் நான்கு பெரிய கண்ணாடி குவளைகளில் அங்கங்கே வைக்கப்பட்டிருக்க, ரொட்டியும், நாணும் மட்டும் சுட சுட அவ்வபோது கொண்டு வரப்பட்டது.


எல்லோரும் சாப்பிட அமர்ந்த பின்னர்தான் ராம் வந்தான். அதுவும் பத்து முறை பாட்டியும், சோனாவும் போன் பண்ணிய பிறகுதான் வந்தான். வீட்டில் ஸ்வர்ணாவுக்குத் துணையாக அவருடைய பெற்றோரை உடன் வைத்துவிட்டு தான் வந்திருந்தான்.


அவனைப் பார்த்ததும், ஆளாளுக்கு அவனை வரவேற்க, “வா ராம் சாப்பிடலாம்.” என்றார் அகிலாண்டேஸ்வரி.


ராம்மை ஆவலாக எதிர்பார்த்தவர்களில், அபர்ணாவும் ஒருத்தி அல்லவா, அதனால் அவன் வந்ததும், “ஹாய் ராம்.” என்றாள்.


அகிலாண்டேஸ்வரி கேள்வியாக இருவரையும் பார்க்க, அபர்ணா ராம்மை பார்த்து புன்னகைக்க, அவன் சம்ப்ரதயதுக்கு “ஹலோ.” என்றான். பிறகு அவன் சித்தப்பா பிரேமின் அருகே உட்கார்ந்து அவரோடு பேச ஆரம்பித்தான். அபர்ணாவும் சாப்பிடுவதில் ஆர்வம் காட்ட, பாட்டியும் சாப்பிட ஆரம்பித்தார்.


எல்லோருமே அந்த வீட்டினர்தான் அபர்ணாவை தவிர, அவள் சாப்பிட சங்கடப்படப் போகிறாள் என நினைத்த காயத்ரி, “அபர்ணா, இது உன் வீடு போல, உனக்கு என்ன வேணுமோ, கேட்டு வாங்கிச் சாப்பிடு.” என்றார்.


“சரி ஆன்டி.” என அபர்ணா சொல்ல,


“வீட்டுக்கு வந்த விருந்தாளிகிட்ட உன் வீடுன்னு சொன்னா, உண்மையிலேயே அவ வீடுன்னு நினைச்சுக்கப் போறா.” என அகிலாண்டேஸ்வரி கேலியாகச் சொல்ல, அதைக் கேட்டு எல்லோருக்குமே ஒருமாதிரி ஆகிவிட்டது, ஏன் ராம் கூடச் சட்டென்று அபர்ணாவை பார்த்தான். ஆனால் அபர்ணா கோபித்துக் கொள்ளவே இல்லை.


“ஆண்டி சொன்னா இது என் வீடு ஆகிடுமா பாட்டி. என் வீடுன்னு நான் பீல் பண்ணனும். எனக்கு இங்க ஒரு ஸ்டார் ஹோட்டல் பீல்தான் வருது. வீட்டு பீல் வரலை. அதனால கவலைப் படாதீங்க, நான் பங்குக்கு எல்லாம் வரமாட்டேன்.” என்றாள்.


இது வீடு போல இல்லை. ஹோட்டல் போல உள்ளது என அவள் சொன்னது யாருக்கும் தவறாகப் படவில்லை. அகிலாண்டேஸ்வரி அப்படிப் பேசியதால் தானே, அவள் இவ்வாறு பதில் கொடுத்தாள்.


“ஏன் உங்களுக்கு வீடு போலப் பீல் வரலை. அப்படி இங்க இல்லாதது என்ன இருக்கும் உங்க வீட்ல.” மமதி கேட்க,


“நான் அப்படிச் சொல்லை மமதி. எங்க வீடு மொத்தமே எட்நூறு சதுர அடிதான் இருக்கும். நானே கிச்சனுக்குப் போய்ச் சாப்பாடு தட்டில எடுத்திட்டு வந்து, டிவி பார்த்திட்டுச் சோபாவில் உட்கார்ந்துதான் சாப்பிடுவேன். எங்கையாவது வெளிய ஹோட்டல் போனாத்தான், இப்படி டேபிள்ள உட்கார்ந்து சாப்பிடுறது. அதனாலதான் ஹோட்டல் பீல் வருதுன்னு சொன்னேன்.”


வசதியானவர்கள் என்று வளைந்து கொடுக்கவும் இல்லை. நான் இப்படித்தான் என அபர்ணா மனதிலிருப்பதைப் பேசுவது எல்லோருக்குமே ஆச்சர்யமாக இருந்தது. அப்படி எல்லோராலும் பேசிவிட முடியாது, அதுவும் இந்த வீட்டில் இருந்து கொண்டு பேசிவிட முடியாது.


கடைசியில் பல்பு வாங்கியது, அகிலாண்டேஸ்வரிதான். அதைப் பார்த்து மருமகள்கள் இருவருக்கும் மகிழ்ச்சியாக இருக்க, அவருக்கு அபர்ணாவை பிடிக்கவில்லை என்பதை இருவருமே புரிந்து கொண்டனர்.


அபர்ணாவுக்கும் அதே தோன்றியது. பாட்டிக்கு தான் இங்கு வந்ததில் விருப்பம் இல்லையோ என்று, அதற்கு மேல் அவளுக்குச் சாப்பாடு கூட இறங்கவில்லை. தட்டில் இருந்ததை வேகமாகச் சாப்பிட்டுவிட்டு, “நான் ரூமுக்கு போகட்டுமா.” என அஞ்சலியை பார்த்து கேட்டாள்.


“சரி…. நீ வேணா போய் ரெஸ்ட் எடு.”


“தட்டு என்ன பண்ணனும்?”


“இங்கயே வச்சிட்டு போ.”


அங்கிருந்த வாஷ் பேசினில் கைகழுவிக்கொண்டு, அவள் மாடிக்கு சென்று விட்டாள்.


படி வழியாகவே இரண்டாம் தளத்திற்கு வந்தவள், அறைக்குச் சென்று தன் பெட்டியை பிரித்து இரவு உடையை எடுத்து அணிந்து கொண்டாள். பல் துலக்கி முகம் கழுவியவள், அங்கிருந்த டிவியைப் போட்டுவிட்டு, கையில் ரிமோட்டுடன், கட்டிலில் படுத்துக் கொண்டாள்.


பார்வை டீவியில் இருந்தாலும், கவனம் அங்கு இல்லை. அம்மா சொன்னது போல, இங்கே வராமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டு இருந்தவள், அப்படியே உறங்கி விட்டாள்.


சாப்பிட்டதும் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்து மீண்டும் அரட்டையில் ஆழந்து விட்டனர். அபர்ணா மாடியில் தனியாக இருக்கிறாள் என்ற நினைவு ராம்க்கு மட்டுமே இருந்தது.


“இந்த அஞ்சலி அவளைப் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்கவில்லையே.” என்று அவனுக்கு இருந்தது.


“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் ரூமுக்கு போறேன். குட் நைட்.” என எல்லோருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான். பாட்டி ஏற்கனவே படுக்கச் சென்று இருந்தார்.


அவன் அறைக்குச் செல்வதற்கு முன், அபர்ணா இருந்த அறையின் கதவை தட்டினான். அந்த அறையை அவனால் யூகிக்க முடிந்தது. வழக்கமாக அஞ்சலி வந்தால் தங்கும் அறைதான்.


அவன் கதவை தட்டியும் எந்தப் பதிலும் வரவில்லை, மீண்டும் ஒருமுறை கதவை தட்டிவிட்டு, மெதுவாகத் திறந்து பார்த்தான். தலையனையைக் கட்டி பிடித்துக் கொண்டு அபர்ணா உறங்கிக் கொண்டு இருந்தாள்.


ரோஸ் நிற பனியன் துணியில் டி ஷர்டும், பேண்டும் அணிந்து இருந்தாள். பார்க்க வளர்ந்த குழந்தை போல் இருந்தாள். ஓடிக் கொண்டிருத்த டீவியை அணைத்தவன், ஏசியைப் போட்டுவிட்டு வெளியே வந்தான்.


இரவு சீக்கிரமே உறங்கியதால்… காலையில் அபர்ணாவுக்குச் சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது. பக்கத்தில் அஞ்சலி அசந்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவள் விழித்து விடாமல் கவனமாக எழுந்து சென்று பல் துலக்கி, முகம் கழுவிக்கொண்டு வந்தாள்.


கதவை திறந்து பார்க்க, வெளியே சோபாவில் அமர்ந்து, அகிலா பேப்பர் படித்துக் கொண்டு இருந்தாள்.


“ஹாய் குட் மார்னிங்.” என்றபடி அபர்ணா அவள் எதிரில் சென்று அமர்ந்தாள்.


பதிலுக்குக் குட் மார்னிங் என்றவள் மீண்டும் பேப்பர் படிப்பதில் ஆழ்ந்து விட்டாள். அபர்ணாவும் ஒரு பேபரை எடுத்து படித்தாள்.


எவ்வளவு நேரம் பேப்பர் படிப்பது, மீண்டும் அகிலாவை பார்த்தாள், அவள் பேசுவது போல் தெரியவில்லை. எழுந்து அறைக்குள் வந்துவிட்டாள்.


குளித்து வேறு உடை மாற்றி ஒப்பனை செய்யும் வரை கூட அஞ்சலி எழுந்து கொள்ளவில்லை. வயிறு வேறு பசித்தது. தானாகச் சென்று கேட்க ஒரு மாதிரி இருந்தது.


அஞ்சலியை சென்று எழுப்பினாள். “ஹேய் ! எவ்வளவு நேரம் டி தூங்குவ? ஒன்பது மணி ஆகுது எழுந்துக்கோ.”


“இன்னைக்குச் சண்டே தான. இன்னும் கொஞ்ச நேரம் தூங்க விடு அபர்ணா. எல்லோருமே லேட்டாத்தான் எழுந்துப்பாங்க.” என்றவள், மீண்டும் உறங்கி விட்டாள்.


இவள் இப்போதைக்கு எழுந்துகொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து, கையில் செல்லையும் பர்சையும் எடுத்துக் கொண்டு அபர்ணா வெளியில் வந்தாள். வராண்டாவில் யாரும் இல்லை. படி வழியாகக் கீழே வந்தவள், டைனிங் ஹாலை எட்டி பார்க்க, அங்கே அகிலாண்டேஸ்வரி இருந்தார்.


அவர் பார்ப்பதற்குள் வெளியே வந்து விட்டாள். “ஹப்பா எஸ்கேப்.” என நினைத்தவள், வாயிலை நோக்கி சென்றாள்.


அங்கிருந்த காவலாளியிடம், ‘எந்தப்பக்கம் சென்றால்… முக்கிய சாலை வரும்.’ எனக் கேட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். வீதியெங்கும் பெரிய பெரிய வீடுகள் தான். வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்து முக்கியச் சாலைக்கு வந்துவிட்டாள்.


அங்கே ஒரு பெரிய பேக்கிரியை பார்த்ததும், அங்கே சென்று என்ன கிடைக்கும், என்று கேட்க, கேக், பப்ஸ் இருக்கு. டிபன் மாதிரி வேணும்ன்னா நூட்லஸ், பிரட் ஆம்லேட் கிடைக்கும் என்றதும், ஒரு பிரட் ஆம்லேட், காபி எனச் சொல்லிவிட்டு, வெளியில் இருந்த சேரில் அமர்ந்து செல் போன்னை பார்க்க ஆரம்பித்தாள்.


அப்போது அந்தப் பக்கமாகக் காரில் வந்த ராம், இவளைப் பார்த்ததும் வேகத்தைக் குறைத்தான். அவன் தினமும் காலையில் நண்பர்களோடு சென்று பேட்மிட்டன் விளையாடுவான். இன்றும் அது போலச் சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தான்.


அபர்ணா கேட்டது வந்ததும், சாப்பிட ஆரம்பித்தாள். அவளைப் பார்த்தபடியே ராம் கடந்து சென்றான். இவள் அவனைக் கவனிக்கவில்லை.


ராம் மிகவும் கோபமாக இருந்தான். காரை கீழே பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மின்தூக்கியில் ஏறி மேல் தளத்திற்கு வந்தான். வெளி வராண்டாவில் நின்று அகிலாவும், சோனாவும் பேசிக்கொண்டு இருந்தனர்.


அவர்களைப் பார்த்ததும் கேட்ட முதல் கேளிவியே, ‘அஞ்சலி என்ன பண்றா?’ என்பதுதான்.


“அவ தூங்கிட்டு இருக்கா?”


“அவளுக்குக் கொஞ்சம் கூட அறிவு இல்லையா? அவ தானே அவ மாமா பொண்ணை இங்க கூடிட்டு வந்தா? அப்ப அவ தானே அவளைக் கவனிக்கணும்.”


“ஏன் என்ன ஆச்சு?” அகிலா கேட்க,


“முதல்ல அஞ்சலியை வர சொல்லு.” என்றான். சோனா சென்று அஞ்சலியை எழுப்பிக்கொண்டு வந்தாள்.


“எங்க உன்னோட மாமா பொண்ணு?” என அவன் அஞ்சலியை பார்த்து கேட்க, அவளுக்குத் தூக்க கலக்கத்தில் ஒன்றும் புரியவில்லை.


“யாரு?” எனக் கேட்டாள். ராம்க்குக் கோபம் வந்துவிட்டது.


“அபர்ணா எங்க?” எனச் சத்தமாகக் கேட்டான்.


“இங்கதான் எங்காவது இருப்பா?”


“அவ இங்க இல்லை.”


“இல்லையா…” அஞ்சலி பயந்து போய்ப் பார்க்க,


“அவளுக்கு பசி போலிருக்கு, அங்க பேக்கரியில போய்ச் சாப்பிடுறா.”


ராம் சொன்னதும், அகிலாவுக்குக் குற்ற உணர்வாகப் போய்விட்டது. காலையில் வெளியே வந்துதானே வெகு நேரம் அமர்ந்து இருந்தாள். தானும் அவளுக்குக் காபி வேண்டுமா என்று கூடக் கேட்கவில்லை என நினைத்தாள்.


“சோனா, நீயும் தானே அவளை இங்க கூப்பிட்ட. அப்ப அவளுக்கு என்ன தேவைன்னு பார்த்து செய்யணும். இல்லைனா இங்க எப்படின்னாவது சொல்லணும்.”


“நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி வெளிய போய்ச் சாப்பிடுறது, நமக்குதான் கேவலம்.”


“நம்மால கவனிக்க முடியலைன்னா, நாம கூப்பிட கூடாது. இது கூப்பிட்டு வச்சு அவமானப் படுத்துற மாதிரி.”

 

“சாரி அண்ணா, நான் அஞ்சலி பார்த்துப்ப்பான்னு நினைச்சு விட்டுட்டேன்.” என்றதும், ராமிடமிருந்து அஞ்சலிக்கு ஒரு முறைப்புக் கிடைத்தது.


“இனி இது போல நடக்காது.” எனச் சோனா சொன்னதும் தான் அமைதியானான்.

 

அப்போது அபர்ணா வந்துவிட, எல்லோரும் அவளையே பார்த்தனர். சோனா அவளே சென்று பேசினாள்.


“சாரிஅபர்ணா, உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன். காலையில ஆறு மணிக்கெல்லாம் இங்க ப்லாஸ்க்குள காபி கொண்டு வந்து வச்சிடுவாங்க. பக்கத்தில கப் இருக்கும், நீங்களே எடுத்துக் குடிச்சிக்கலாம். டிபன், லஞ்ச சாப்பிட நானே வந்து உங்களைக் கூடிட்டு போறேன்.”


“ஓகே தேங்க்ஸ்.” எனப் புன்னகைத்த அபர்ணா, அறைக்குள் செல்ல, அவள் பின்னே உள்ளே வந்த அஞ்சலி, “உன்னால எனக்குக் காலையிலேயே பாட்டு கிடைச்சுது.” என்றதும், அபர்ணா அவளைப் புரியாமல் பார்க்க, அஞ்சலி நடந்ததைச் சொன்னாள்.


“அம்மா தாயே ! என்னால நீங்க அண்ணனும் தங்கையும் அடிச்சிக்க வேண்டாம்.” என்றவள், பால்கனிக்கு சென்று, அவள் வீட்டில் குடி இருப்பவரை அழைத்தாள்.


“சார், எப்ப சார் வீடு தருவீங்க?”


“வர்ற வாரம் சனிக்கிழமை கண்டிப்பா குடுத்திடுறேன் மா.” என்றார்.


“அதுக்கு முன்னாடி கிடைக்காதா?” என அவள் கேட்டது, அடுத்தப் பால்கனியில் இருந்த ராம்க்கு கேட்டது. அவளும் விருப்பபட்டு இருக்கவில்லை, இங்கு இருந்து சென்று விட வேண்டும் என்றே நினைக்கிறாள் என அவனுக்கும் புரிந்தது.


காலை உணவு முடிந்ததும், ராம், அகிலா இருவரும் வெளியே சென்று விட்டனர். சோனா ஷாப்பிங் செல்ல, அவளோடு அபர்ணாவை அழைத்துச் சென்றாள். பகல் பொழுது இப்படிச் சென்று விட, அன்று இரவு உணவுக்கு மீண்டும் எல்லோரும் கூடினர்.


அன்றும் அபர்ணா வேகமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்துகொள்ள, “அபர்ணா, ஒரு நிமிஷம்.” என ராம் சொல்ல, அவள் அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.


“எல்லோரும் சாப்பிடும் போது, நீங்க மட்டும் எழுந்து போறதுதான் மேன்னர்ஸா.”


“மேன்னர்ஸ் இல்லைதான் எனக்கும் தெரியும். ஆனா நீங்க எல்லாம் சேர்ந்து சாப்பிடுற நேரம், உங்களுக்குள்ள பேசிக்க நிறைய விஷயம் இருக்கும், நான் விருந்தாளி தானே….. எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா இருக்கனும்ன்னு நினைச்சேன். வேற ஏதும் இல்லை.”


“நாங்க உங்களை இடைஞ்சலா நினைச்சா, உங்களைக் கூப்பிட்டிருக்க மாட்டோம்.”


“அப்படியா ! ஆனா எனக்குத் தெரியலை. நீங்களா தான் என்னோட முதல் நாள் பேசினீங்க. ஆனா அப்புறம் என்கிட்டே பேசவே இல்லை. அப்ப நான் என்ன நினைக்கிறது?”


மற்றவர்களுக்கு அவன் முதலில் பேசிவிட்டு, பிறகு ஏன் பேசாமல் இருந்திருப்பான் எனப் புரிந்தது.


“அது என்னோட தப்புத்தான். நீங்க எங்க வீட்டுக்கு வந்த விருந்தாளி. உங்களை நான் ஹர்ட் பண்ணது தப்புதான் சாரி.” ராம் சொல்ல, அபர்ணா மீண்டும் இருக்கையில் அமர்ந்தாள்.


“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.” எனச் சோனா அவள் தட்டில் அப்போது வந்த தோசையை வைத்தவள், “நீ, அண்ணா ரெண்டு பேரும் ஒரே மாதிரி. ரொம்பச் சூடு.” என்று சொல்ல, அபர்ணா புன்னகையுடன் சாப்பிட ஆரம்பித்தாள்.

Advertisement