Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 19


மறுநாள் மாலை அகிலாவை அழைத்த ராம், “அம்மு, நாம டின்னருக்கு வெளியப் போகலாமா? நீ ப்ரீ தானே?” எனக் கேட்க,


“ப்ரீ தான் அண்ணா… அம்மாவும் தானே.” என்ற தங்கையின் கேள்விக்கு, “இல்லை நாம ரெண்டு பேர் மட்டும் போகலாம். நான் ஒரு எட்டு மணி போல உன் ஆபீஸ்க்கு வரேன்.” என ராம் வைத்துவிட்டான்.


எதோ தனியாகப் பேச வேண்டும் என்றுதான் அண்ணன் அழைக்கிறான் என அகிலாவுக்குப் புரியாமல் இல்லை. என்ன பேசப்போகிறார் என அதையே யோசித்துக் கொண்டு இருந்தாள்.


ராம் தங்கையை அழைத்துக் கொண்டு ஒரு நட்ச்சத்திர ஹோட்டலுக்குச் சென்றான். அங்குதான் கூட்டம் இருக்காது. எந்தக் குறுக்கீடும் இல்லாமல் பேசலாம் என நினைத்தான்.


இருவரும் ஒதுக்குபுறமாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர். முதலில் சூப்பும், ஸ்டார்டரும் சொன்னவன், அது வரும் வரையில் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டு இருந்தான்.


ஆர்டர் கொடுத்த உணவு வகைகள் வந்ததும், தானே அழைப்பதாகச் சொல்லி… சர்வரை அனுப்பி வைத்தான்.


“அம்மு, நான் கார்த்திக்கை உனக்குக் கல்யாணம் பேசலாம்ன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?” எனக் கேட்டதும், அகிலாவுக்கு ஒரே யோசனை. அண்ணன் தெரிந்து கேட்கிறானா அல்லது தெரியாமல் கேட்கிறானா எனத் தெரியவில்லை.


அவள் சூப்பை அருந்தாமல் கிளறிக்கொண்டே இருந்தாள்.


“உன்னைத்தான் கேட்கிறேன் அம்மு. உனக்குக் கார்த்திக்கை பிடிச்சிருக்கா இல்லையா?”


இப்போதும் அகிலா பதில் சொல்லவில்லை.


“நீ அம்மா மாதிரி உனக்கும் ஆகிடும்ன்னு பயப்படுற, எனக்கு அது புரியுது. கல்யாணத்துக்கு அப்புறம் நீ அவங்க வீட்டுக்கு போக வேண்டாம். நான் கார்த்திக்கிட்ட பேசுறேன். அவன் நம்ம வீட்ல இருக்கட்டும்.”


“நான் உன் கூடவே இருப்பேன். அப்புறம் அவன் எப்படி மாறுறான்னு நானும் பார்கிறேன்.”


ராம் இவ்வளவு சொன்னதும்தான் அகிலா வாய் திறந்தாள். “கார்த்திக் இதுக்கு ஒத்துப்பாங்களா?”


“நான் ஒத்துக்க வைக்கிறேன். உனக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமா? அதை மட்டும் சொல்லு.”


“ம்ம்…” என்றவளுக்குப் பிறகுதான் நியாபகம் வந்து, “கார்த்திக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்கு.” என்றாள் கவலையாக.


அது அபர்ணா சொன்ன கதை என அவனுக்குதான் தெரியுமே.


“கார்த்திக் என்னோட ப்ரண்ட் அவனுக்கு நிச்சயம் பண்ணா எனக்குச் சொல்ல மாட்டானா? நீ எதோ அரைவேக்காடு சொன்னதை நம்பாத… வேணா கார்த்திக்கையே கேளு.” என்றான்.


(டேய் ராம் ! இதை மட்டும் அபர்ணா கேட்கணும்… உன்னை ஒருவழியாக்கிடுவா.)


அதன்பிறகுதான் அகிலாவின் முகம் மலர்ந்தது. அதைப் பார்த்து ராமின் முகமும் கனிந்தது. இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்கள்.

ராம் அகிலா காதலை பற்றித் தெரிந்து கொண்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. கார்த்திக் அவன் பார்த்த மாப்பிள்ளை என்பது போலவே அகிலாவிடம் காட்டிக் கொண்டான்.

அபர்ணா இவ்வளவு தூரம் அவளுக்கு விபூதி அடித்திருந்ததால்தான்… ராம் சொன்னதும் அகிலா திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாள். அது அவனுக்கும் தெரியும்.


அன்று இரவு வீடு திரும்பியதும் ராம் அபர்ணாவுக்கு நாளை சந்திக்க முடியுமா எனக் கேட்டு மெசேஜ் அனுப்பினான்.


‘நாளை முடியாது.’ எனப் பதில் வந்தது.


“ஏன்?”


“அதை உங்ககிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்லை.”


“சரி எப்ப பார்க்கலாம். நீயே சொல்லு.” என ராம் இறங்கி வர…


“நாளைக்கு மறுநாள் பார்க்கலாம்.” என்றாள்.


“எங்கே எப்போது சந்திப்பது.” என அவன் அனுப்ப…


“ஓகே குட் நைட்.” எனப் பதில் வந்தது.


ஒரு வார்த்தை கூட அவள் அதிகம் பேசவில்லை. நிஜமாவே நம்மை வெறுத்துட்டா போல என நினைத்துக் கொண்டான்.


மறுநாள் எதற்கும் சென்று பார்ப்போம் எனச் சேனலுக்கு வந்தான். அவன் கார் வந்து நிற்கும்போது, அபர்ணா ஆதித்யாவின் காரில் ஏறிக்கொண்டு இருந்தாள். அவள் ராம்மை பார்க்கவில்லை.


‘ஓ… இதனால்தான் இன்று சந்திக்க முடியாது.’ என்று சொன்னாளா என நினைத்தவனுக்கு, மனதிற்குள் ஏமாற்றம் பரவுவதைத் தடுக்க முடியவில்லை.


மறுநாள் சொன்ன இடத்தில் இருவரும் சந்தித்தனர். முதலில் ராம் வந்து காத்திருந்தான் பிறகுதான் அபர்ணா வந்தாள். அவள் வந்து காரில் ஏறியதும், கார் வேகமெடுத்தது.


“சொல்லுங்க எதுக்கு வர சொன்னீங்க.” அபர்ணா நேரடியாக விஷயத்துக்கு வர… ராம்மும் தாமதிக்கவில்லை.


“அகிலா கார்த்திக்கை கல்யாணம் பண்ண ஒத்துகிட்டா.”


“ரொம்ப நல்லது. அப்புறம் என்னை எதுக்கு வர சொன்னீங்க?”


“அவ இவ்வளவு தூரம் மனசு மாறினதுக்கு நீதான் காரணம். நீ இன்னொரு உதவியும் பண்ணனும்.”


“என்ன உதவி?”


“அகிலா கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்கச் சில கண்டிஷன்ஸ் இருக்கு.”


“என்ன அது?”


“கல்யாணத்துக்கு அப்புறம் கார்த்திக் எங்க வீட்லதான் இருக்கணும். நான் அகிலாவை அவங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்.”


“ஏன்?”


ரொம்ப எளிதான கேள்வி. ஆனால் பதில் சொல்வது அவ்வளவு சுலபமாக இல்லை. சிறிது நேரம் ராம் பேசவே இல்லை. பிறகு காரை ஓரம் கட்டி நிறுத்தினான்.


“என் தங்கச்சி, என் கண் முன்னாடி இருக்கணும். அவ யார் முன்னாடியும் கூனிக் குறுகி நிற்கிறது எனக்குப் பிடிக்காது.”


அபர்ணாவுக்கு அவன் பேசுவது வேடிக்கையாக இருந்தது. பாசம் அவன் கண்ணை மறைக்கிறது என்று நினைத்தாள்.


“பார்க்கத்தான் பெரிய ஆள் நீங்க. ஆனா சின்னக் குழந்தை மாதிரி நடந்துகறீங்க.”


“என்ன குழந்தை மாதிரி நடந்துகிறாங்க?” ராம் எரிச்சலாக,


“இப்படி நடக்கவே போகாத ஒரு விஷயத்துக்காக அண்ணனும் தங்கையும் ஏன் இப்படிப் பயப்படுறீங்கன்னு புரியலை?”


அபர்ணா இதைச் சாதாரணமாகத்தான் சொன்னாள்… ஆனால் கேட்ட ராம் அவள் கழுத்தை பிடித்து இருந்தான்.


“உனக்குப் புரியாது ஏன் தெரியுமா? நீ அந்தக் கஷ்ட்டத்தை அனுபவிக்களை… நாங்க அனுபவிச்சிருக்கோம். எங்க அம்மா மனசு நொந்து கண்ணீர் விட்டதை, நாங்க நேர்ல பார்த்திருக்கோம்.”


“எங்க குடும்பத்தில எங்க அம்மாவை தவிர எல்லோருக்கும் எங்க அப்பாவை பத்தி தெரியும். அவங்க எல்லாம் எங்க அம்மாவை பரிதாபமா பார்த்தாங்க.”


“எங்க அம்மாக்கு அது ஏன்னு புரியவே இல்லை. உண்மை தெரிஞ்ச போது அவங்க எவ்வளவு கூனிக் குறுகி போனாங்க தெரியுமா?”


“ஓடி விளையாட வேண்டிய வயசுல.. எங்க அம்மா எதாவது செஞ்சுப்பாங்கலோன்னு பயத்துல நான் எத்தனை நாள் தூங்கினது இல்லை தெரியுமா?”


“இதெல்லாம் நீ அனுபவிச்சிருக்கியா?”


ஒவ்வொரு வாக்கியத்திற்கும் ராம் அவள் கழுத்தை பிடித்து அழுத்த… இன்னைக்கு இவன் கையாளதான் சாகப்போறோம் போலிருக்கு என அபர்ணா நினைத்தாள்.


அவள் பொறுக்க முடியாமல் “வலிக்குது ராம்.” என்றதும்தான், வேகமாகக் கையை உருவினான்.


சிவந்திருந்த அவள் கழுத்தை பார்த்துவிட்டு உண்மையிலேயே பதறிப் போனான்.


“சாரி அபர்ணா… நான் எதோ ஆத்திரத்துல இப்படிப் பண்ணிட்டேன். நீயாவது சொல்லி இருக்கக் கூடாது.” என்றவன்,


“வலிக்குதா… டாக்டர்கிட்ட போகலாமா…” எனக் கேட்க…


“அவ்வளவா வலிக்கலை… ஆனா சிவந்திருக்கு.” என்றாள் கண்ணாடியில் தன்னை ஆராய்ந்து கொண்டே….


சுற்றிலும் பார்த்தவன், “அதோ அங்க ஒரு கடை இருக்கு. அங்க ஐஸ் தண்ணி கிடைக்கும்.” என்றவன் காரை எடுத்தான்.


கடையின் முன்பு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன், வரும்போது கையில் ஜில் தண்ணீர் இருந்தது. தன் கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்து அபர்ணாவின் கழுத்தில் வைத்தான்.


“கொஞ்ச நேரம் பிடிச்சிக்கோ.” என்றவன், மீண்டும் சென்று பழசாறு வாங்கி வந்தான்.


அபர்ணா முதலில் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு பழசாரை எடுத்து அருந்தினாள்.


“வலிக்குதா..” ராம் கவலையாகப் பார்க்க…


“அதுதான் தண்ணி குடிச்சுப் பார்த்தேன். ஒன்னும் ஆகலை வெளி காயம்தான்.”


“ரொம்பச் சாரி அபர்ணா.”


“எத்தனை தடவை சாரி சொல்வீங்க. இந்தாங்க இந்த ஜூஸ் குடிங்க.” அபர்ணா கொடுத்த பாட்டிலை வாங்கி ராம் குடித்தான்.


அபர்ணா மீண்டும் கைக்குட்டையை நனைத்துக் கழுத்தில் வைத்துக் கொண்டாள்.


“போகலாமா?” ராம் கேட்க, அபர்ணா சரி என்றாள்.
திரும்பி வரும் வழியில் இருவரும் எதுவும் பேசவில்லை. டிராபிக் வேறு அதிகமாக இருந்தது.


நேரம் இரவு ஒன்பதை கடந்து இருந்தது. அபர்ணா சீட்டில் காலை மடக்கி வைத்து சாய்ந்து அமர்ந்து இருந்தாள். அவளைப் பார்த்த ராம், “பசிக்குதா சாப்பிடுறியா?” எனக் கேட்க,


“இல்லை வேண்டாம், வீட்ல அம்மா செஞ்சு வச்சிருப்பாங்க.” என்றாள்.
அவள் வீட்டிற்குச் சற்று முன்பே காரை நிறுத்தியவன், அவள் பக்கம் நெருங்கி வந்து கழுத்தை ஆராய்ந்தான். அபர்ணா கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.


“இன்னும் கொஞ்சம் சிவப்பாதான் இருக்கு.” ராம் சொல்ல…


“சரி ஆகிடும் நான் பார்த்துகிறேன்.” என்றவள், காரில் இருந்து இறங்க கதவின் மீது கைவைத்தபடி அவனைப் பார்த்தவள், “ராம் நான் ஒன்னு சொல்லட்டா.” என்றாள்.


“என்ன?”


“இனிமே நாம தனியா பார்த்துக்க வேண்டாம்.”


அபர்ணா வேறு அர்த்தத்தில் சொல்ல… ராம் அதை வேறு விதமாகப் புரிந்து கொண்டான்.


“சாரி அபர்ணா… ரியலி சாரி.”


“நான் இதுக்காகச் சொல்லலை…” எனக் கழுத்தை காட்டியவள்,


“நானும் எல்லா உணர்ச்சியும் இருக்கிற சாதாரணப் பொண்ணுதான். நாம இவ்வளவு நெருக்கமா இருந்தா… என்னால எப்படி உங்களை விட்டுட்டு இருக்க முடியும்.”


“நீங்க வேணும்ன்னு தான் தோணுது ராம்.” என்றாள் பரிதாபமாக.
அவள் சொன்னதில் இருந்த நியாயம் ராமிற்குப் புரிந்தது. அவனும் அதே நிலையில் தானே இருக்கிறான். அவன் பேசவே இல்லை.


“நான் கார்த்திக்கிட்ட பேசுறேன். இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்.” என்றவள், காரில் இருந்து இறங்கி அவனைப் பார்த்து புன்னகையுடன் கையசைத்தாள்.


ராம்மும் உடனே காரை எடுத்துக்கொண்டு செல்லவில்லை. அபர்ணாவும் உடனே வீட்டிற்கு வரவில்லை. அவள் அங்கிருந்த பார்க்கில் அமர்ந்து இருந்தாள்.


இன்னும் மகளைக் காணவில்லையே எனப் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த சுகன்யாவின் கண்ணில் இருவரும் பட்டனர். மனம் கொஞ்சம் சமன்பட்ட பிறகே இருவரும் சென்றனர்.


அபர்ணா யாரோடும் பேசாமல் குளித்து உடைமாற்றிச் சாப்பிட அமர்ந்தாள். அவள் சாப்பிடும் வரை சுகன்யா எதுவும் பேசவில்லை.


“கொஞ்சமாவது பெரியவங்க பேச்சை கேட்கணும். பார்த்தா, பழகினா கஷ்ட்டமா இருக்கும்ன்னுதான் அங்க வேலைக்குப் போக வேண்டாம்ன்னு சொன்னேன்.”


“அம்மா, ப்ளீஸ் போதும் உங்க அட்வைஸ். அகிலா கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க. கார்த்திக்கிட்ட ஒரு ஹெல்ப் ராம் கேட்க சொன்னாங்க. அதுக்குதான் பார்க்க வந்தாங்க போதுமா?” என்றவள், எழுந்து கைகழுவ சென்றாள்.


அவள் அறை பால்கனிக்கு சென்று கார்த்திக்கை அழைத்தாள்.


“ஹாய் அபர்ணா, நானே உனக்குப் போன் பண்ணனும்ன்னு நினைச்சேன். என்னதான் நடக்குது? அகிலாவும் போன் பண்றது இல்ல… நான் வேணா பண்ணட்டுமா?”


“இப்பத்தான் ராம் சொன்னாங்க. அகிலா உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டாங்க.”


“ஏய் நிஜமாவா… என்னால நம்பவே முடியலை… தேங்க்ஸ் அபர்ணா.”


“ரொம்பச் சதோஷப்பட்டுக்காதீங்க…..முழுசா கேட்டுட்டு பேசுங்க.”


“நீங்க வீட்டோட மாப்பிள்ளையா இருக்க ஒத்துகிட்டாதான் இந்தக் கல்யாணம் நடக்கும்.”


“ஏன் அபர்ணா?”


ராம் எதனால் அப்படி நினைக்கிறான் என அபர்ணா விரிவாகச் சொல்ல… அவர்கள் நிலையில் இருந்து யோசிக்கும்போது, அவர்கள் கேட்பது அப்படி ஒன்றும் தவறு இல்லை என்றே கார்த்திக்கு தோன்றியது. ஆனால் அவன் வீட்டில் ஒத்துக்கொள்ள வேண்டாமா?


எதற்கும் அகிலாவிடம் பேசி பார்க்கலாம் என நினைத்தவன், “ரொம்பத் தேங்க்ஸ் அபர்ணா, நீ இல்லைனா அகிலா கண்டிப்பா இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்க மாட்டா. எனக்கு அது தெரியும்.” என்றான்.


“நான் உங்களுக்காக மட்டும் இதைப் பண்ணலை கார்த்திக். யாரோ செய்த தவறுக்கு வேற யாரோ ஏன் தண்டனை அனுபவிக்கணும். இனியாவது அந்த வீட்ல எல்லோரும் சந்தோஷமா இருக்கட்டும்.”


“ம்ம்.. நீ சொல்றது சரிதான்.”


அபர்ணாவிடம் பேசி முடித்துவிட்டு, கார்த்திக் அகிலாவை அழைத்தான்.

 

“ஹாய் அம்மு.”


“என்ன கோபம் எல்லாம் போயிடுச்சா?”


“கோபம் எல்லாம் இல்லை… இப்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கேன். நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம், நினைச்சு பார்க்கவே சந்தோஷமா இருக்கு.”


“ம்ம்… ஹாப்பியா?”


“கண்டிப்பா… ஆனா எதோ கண்டிஷன் எல்லாம் போட்டிருக்க மாதிரி இருக்கே…” கார்த்திக் மெதுவாகக் கேட்டுப்பார்க்க…


“நீங்க அதைப் பத்தி அண்ணன்கிட்டதான் பேசணும்.” என்றாள் அகிலா பட்டென்று…


“நான் அவன்கிட்ட பேசுறேன். ஆனா உன்னோட விருப்பம் என்னன்னு எனக்குத் தெரியனும்.”


“எங்க அண்ணனோட விருப்பம்தான் என் விருப்பம். அதுல ஒன்னும் மாற்று கருத்து இல்லை.”


இந்த விஷயத்தில் அகிலா கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க மாட்டாள் எனத் தெளிவாகக் கார்த்திக்குப் புரிந்தது. கடைசிவரை கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பம். இப்போது அவனே அதை எப்படி மீறுவது?

Advertisement