Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 18


அபர்ணா சொன்னது போல் நடந்து கொண்டாள். அவள் கார்த்திக்கை பற்றி எதுவும் அகிலாவிடம் பேசவில்லை. அவள் உண்டு அவள் வேலை உண்டு என்று இருக்க… அகிலாவும் தனது வேலையில் கவனம் செலுத்தினாள்.


சில நாட்கள் அமைதியாகச் சென்றது. எல்லாம் சரியாகச் சென்றாலும் அகிலாவுக்குதான் மனதிற்குள் எதோ சரி இல்லை என்று தோன்றியது. என்ன என்று யோசிக்கும்போது…. கார்த்திக் இப்போது எல்லாம் அவளை அழைப்பதும் இல்லை… சந்திக்க வருவதும் இல்லை.


அன்று அபர்ணா மீது இருந்த கோபத்தை, அப்படியே கார்த்திக் மீது காட்டி இருந்தாள். “உங்களுக்குத் தூது போகத்தான் அபர்ணாவை இங்க வேலைக்கு அனுப்பி வச்சீங்களா? உங்க நினைப்பு ஒருநாளும் நடக்காது.” என இஷ்ட்டதிற்குப் பேசி இருந்தாள்.


அவ்வளவு பேசிவிட்டு இப்போது தானாக அழைத்துப் பேசவும் தயக்கமாக இருந்தது. இப்படியே யோசித்துக் கார்த்திக்கை அழைப்பதையும் தள்ளி போட்டுக்கொண்டு இருந்தாள்.


அபர்ணா ஒருநாள் நித்யாவை பார்க்க சென்றிருக்க… கார்த்திக் அவளை நேரடியாகக் கத்தினான்.


“உன் வேலை என்ன? வந்தோமா வேலையைப் பார்த்தோமான்னு இல்லாம… நீயேன் எங்க விஷயத்துல தலையிடுற?”
கார்த்திக் பேசியதை கேட்டு, அபர்ணா முகம் மாற… உடனே நித்யா பதில் பேசினாள்.


“ஆமாம் உனக்கு என்ன வந்தது அபர்ணா? இப்படியே ரெண்டு பேரும் முடிவு எடுக்காம காலத்தைக் கடத்திட்டே இருக்கட்டும். இதனால கஷ்ட்டப்படுறது யாரு? அவரோட அம்மாதானே உனக்கு என்ன வந்தது?” என்றதும், கார்த்திக் மௌனமானான்.


“புண்ணு ஆரணும்னா அறுவைசிகிச்சை செஞ்சுதான் ஆகணும். வலிக்கு பயந்து கீறி விடலைனா… புண்ணு சீல் வச்சிடும் கார்த்திக். இப்ப நான் அதைத்தான் பண்றேன்.”


“அதைப் பண்ண நீ யாருன்னு கேட்காதீங்க. நானும் எதோ வகையில அவங்களுக்குப் பாதிப்பு உண்டாக்கிடுவேன்னுதான் என்னை ராம் நிராகரிச்சார். அதனால எனக்குத் தலையிட உரிமை இருக்கு.”


“சாரி அபர்ணா.” என்றான் கார்த்திக்.


“உங்க சாரி எனக்கு வேண்டாம். நீங்க கொஞ்ச நாள் அகிலாவோட பேசாம இருங்க போதும். மத்தது நான் பார்த்துகிறேன்.”


“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் நான் அவளோட பேசுறதா இல்லை. உன்னாலதான் என்கிட்டே சண்டை போட்டா…. ஆனா உன்கிட்ட பேசி திரும்ப வேலைக்குக் கூப்பிட்டா இல்லை. ஆனா என்கிட்டே மட்டும் இன்னும் பேசவே இல்லை.”


“சரி இந்தக் கோபத்தை இப்படியே கொஞ்ச நாள் பிடிச்சு வைங்க. நான் சொல்ற வரை நீங்க அவங்களோட பேசக்கூடாது.” என்றாள் அபர்ணா.


“என்ன செய்யப்போற அபர்ணா?” நித்யா கேட்க,


“செயய்யப்போற இல்லை செய்யப்போறோம். உங்க ஹெல்ப் கண்டிப்பா எனக்குத் தேவை நித்யா அக்கா.”


“கண்டிப்பா செய்றேன் அபர்ணா, கார்த்திக்காக இல்லை… என்னோட மாமியாருக்காக நான் கண்டிப்பா செய்றேன்.”


அகிலா ரொம்பவும் யோசித்து, நாள் கடத்தி, கார்த்திக் அழைக்கவே இல்லை என்றதும், அவளே அவனை அழைத்தாள். ஆனால் கார்த்திக் அவளது அழைப்பை ஏற்கவில்லை.


அன்று புதிதாகத் தொடங்கப்போகும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி அகிலாவும் அபர்ணாவும் பேசிக்கொண்டு இருந்தனர். மேஜைக்கு அடியில் செல் போன்னில் இருந்து நித்யாவுக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டு…. நல்லபிள்ளை போல் அபர்ணா இருக்க… அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் நித்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஒன்றும் தெரியாது போல அபர்ணா எடுத்து பேசினாள்.


“சொல்லுங்க நித்யா அக்கா. எப்படி இருக்கீங்க?”


“நீதான போன் பன்ன. இப்ப என்னைக் கேட்கிற?”


“நான் நல்லா இருக்கேன். ஆமாம் எதுக்குப் போன் பண்ணீங்க?”


“அதையும் நீயே சொல்லு?”


“கார்த்திக்கு பொண்ணு பார்க்க போறீங்களா? எப்ப?”


“கார்த்திக்கு பொண்ணு பார்க்க போறோமா? சரி போயிடலாம்.”


“கார்த்திக் ஓகே சொல்லிட்டாரா?”


“சொல்லிட கில்லிடபோறான்.” நித்யா அந்தப்பக்கம் அலுத்துக்கொள்ள…


“இன்னும் சொல்லலையா… ஓ… பெண்ணை நேர்ல பார்த்தா பிடிக்குமா? எதுக்கும் நல்லா அவர்கிட்ட கேட்டுக்கோங்க. இல்லைனா எல்லோருக்கும் டைம் வேஸ்ட் தானே.”


“இப்ப நீ என்ன சொல்ல வர?”


“சரி போயிட்டு வந்ததும் எனக்குப் போன் பண்ணுங்க.” அபர்ணா சொல்ல…


“முன்னாடியே என்ன பேசனும்ன்னு சொல்ல மாட்டியா?” என்றுவிட்டு நித்யா வைத்தாள்.


அகிலாவோடு தனியாக இருப்பது வெகு அபூர்வம். அதனால்தான் சமயம் கிடைத்ததும் அபர்ணா நித்யாவுக்கு அழைத்தாள். பேசி முடித்ததும் நல்லபிள்ளை போல… அபர்ணா வேலையைப் பார்க்க… அகிலாவுக்குத்தான் முள்ளின் மீது அமர்ந்திருப்பது போல இருந்தது. அபர்ணா முன்பு எதையும் கட்டிக்கொள்ள முடியாத நிலை.


அதன்பிறகு இரண்டு நாட்கள் கடந்த நிலையில், பெண் பார்க்க போனது என்ன ஆனது என்று ஒன்றும் தெரியவில்லை. எதோ வேலை இருப்பது போல அகிலா அபர்ணாவை தேடி செல்ல… தூரத்தில் அவள் வருவதைக் கவனித்த அபர்ணா, நித்யாவுக்கு மிஸ்டு கால் கொடுத்தாள்.


அகிலா கேட்க வேண்டுமே என்று அபர்ணாவிடம் எதோ கேட்க, சரியாக அந்த நேரம் நித்யா அழைத்துவிட்டாள்.


“என்ன நித்யா அக்கா?”


“ஏய் கொன்னுடுவேன் உன்னை?” நித்யா திட்ட… அதைக் கேட்டு சிரித்த அபர்ணா, “நிச்சயத்துக்குத் தானே புடவை வாங்க போறீங்க? நீங்க போயிட்டு வாங்க. எனக்கு ரொம்ப வேலை இருக்கு. என்னால இப்ப வர முடியாது.”


“என்னது நிச்சயம் வரை போயிட்ட?”


“சரிக்கா நீங்க போயிட்டு வாங்க.” என்றவள், போன்னை வைக்க… அகிலாவுக்கு இப்போது நடிக்க முடியவில்லை.


“யாருக்கு நிச்சயம்?” என அவள் கேட்டே விட…


“நீங்கதான் பெர்சனல் விஷயம் பேசக்கூடாதுன்னு சொன்னதா நியாபகம்.” என்றாள் அபர்ணா அலட்சியமாக, அகிலா அவளை முறைத்துவிட்டு சென்றாள். ஆனால் உடனே கார்த்திக்கை அழைத்தாள். அவன் எடுக்கவில்லை என்றதும் மீண்டும் மீண்டும் அழைத்தாள். ஆனால் அவன் எடுக்கவே இல்லை.


கார்த்திக் இதுபோலச் செய்ததே கிடையாது. கார்த்திக் கல்யாணத்திற்குச் சம்மதித்து விட்டான் போல… அதனால் தான் தன் அழைப்பை எடுக்கவில்லை என நினைத்துக் கொண்டாள்.


கார்த்திக்கிடம் எத்தனையோ முறை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, அவளே சொல்லி இருக்கிறாள். ஆனால் இன்று அது நிஜமாக நடக்கும்போது…. மனம் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது.

 

கார்த்திக் தன்னை மறந்து வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யத் தயாராகிவிட்டதை, இன்னும் அவளால் நம்பமுடியவில்லை.


கார்த்திக் அபர்ணாவை அழைத்துக் கேட்டான். “என்ன பண்ணி வச்சிருக்க நீ? அகிலா என்னைக் கூப்டிட்டே இருக்கா… இதுக்கு மேல என்னால அவளோட பேசாம இருக்க முடியாது. அடுத்தத் தடவை அவ கூப்பிட்டா, நான் போன் எடுத்திடுவேன் சொல்லிட்டேன்.”


“நோ… கார்த்திக் இப்பத்தான் வெண்ணைத் திரண்டு வருது. தாழியை உடைச்சிடாதீங்க ப்ளீஸ்…”


“நானா பண்ண மாட்டேன் அவ கூப்பிட்டா.. கண்டிப்பா பேசுவேன்.” எனச் சொல்லிவிட்டு கார்த்திக் வைக்க… இப்ப என்ன செய்வது என அபர்ணா யோசித்தாள்.


மறுநாள் அகிலாவிடம் சென்ற அபர்ணா, “நீங்கதான கார்த்திக்கை வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னீங்க. ஆனா இப்ப அவர் மனசு மாறி சம்மதிக்கும் போது… எதுக்கு உங்களை நியாபகப்படுத்துற மாதிரி அவருக்குப் போன் பண்றீங்க?” எனக் கேட்க… அது அகிலாவின் தன்மானத்தைச் சுட்டுவிட்டது.


“நான் வாழ்த்து சொல்றதுக்காகப் பண்ணேன். இனி மேல் பண்ணலை.” என்றாள் பட்டென்று.


அகிலா கார்த்திக்கோடு பேசினால்…மொத்த காரியமும் கெட்டுவிடும். கார்த்திக் அவளிடம் எல்லாம் பொய் என உளறிக் கொட்டினால்… திரும்ப அகிலா முருக்கிகொள்வாள். அதனால்தான் அபர்ணா இப்படிப் பேசினாள். அவளுக்கே கஷ்ட்டமாகத்தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.


பாரேன் தான் அழைத்ததைக் கூட அபர்ணாவிடம் கார்த்திக் சொல்லி இருக்கிறான். அப்போது அவள் சொல்வது உண்மை தானே… அதற்குள் தன்னை மறந்துவிட்டு கார்த்திக் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத் தயாராகிவிட்டனா? இவ்வளவுதான் இவனது காதலா  என அகிலா கோபம் கொண்டாள்.


வெறும் கோபம் மட்டும் அல்ல… வருத்தம், ஏமாற்றம், கவலை எல்லாம் சேர்ந்து அவளை அலைகழித்தது. அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னை மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதையும் அவள் அறியவில்லை… எதையோ பறிகொடுத்தது போல் இருந்தாள்.


சில நாட்களாகத் தங்கையைக் கவனித்த ராம்மிற்கு அவளது மாற்றம் கண்கூடாகத் தெரிந்தது. அகிலா இப்படி இருந்து அவன் பார்த்ததே இல்லை. எல்லாம் இந்த அபர்ணா வந்ததில் இருந்துதான் என நினைத்துக் கொண்டான். அவனுக்கு அபர்ணா எதோ காரணமாகத்தான் அகிலாவிடம் வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள் எனப் புரிந்தது.


மறுநாள் இரவு அபர்ணா வேலை முடிந்து வீடு திரும்பும்போது…ராம் அவனின் காரில் அவளுக்காகக் காத்திருந்தான்.


“உன்னோட பேசணும் காரில் ஏறு.” என்றதும்,


“உங்ககிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை.” என அபர்ணா அவனைக் கடந்து செல்ல…


“அபர்ணா ப்ளீஸ் அகிலாவுக்காக.” என்றதும், அபர்ணா சென்று காரில் ஏறினாள்.


ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை சாலையில் ராம் காரை நிறுத்த, இருவரும் காரில் இருந்து இறங்கி நின்றனர். அபர்ணா அவனது காரின் முன் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டு, “என்ன பேசணும்?” என நிதானமாகக் கேட்டாள்.


“அகிலா ஏன் ஒருமாதிரி இருக்கா?”


“இதை ஏன் என்கிட்டே கேட்டுகறீங்க? உங்க தங்கச்சிகிட்ட கேளுங்க.”


“நீ வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் இப்படி இருக்கா… நீதான் அவளுக்கு எதோ குடைச்சல் கொடுக்கிற?”


“உங்களுக்கு ரொம்பத் தெரியும் பாருங்க.”


“ஆமாம் எனக்குத் தெரியும், நீதான் காரணம்.”


“நான் இல்ல காரணம். உங்க தங்கை கார்த்திக்கை லவ் பண்றாங்க. அவரை ஏத்துக்கவும் முடியலை… விடவும் முடியலை… அதனாலதான் அப்படி இருக்காங்க.”


அபர்ணா உண்மையைப் போட்டு உடைத்து விட… ராம் சிறிது நேரம் பேச்சிழந்து நின்றுவிட்டான்.


“சரி எவ்வளவு நாளா இது நடக்குது?”


“நாலு வருஷம்ன்னு கேள்விபட்டேன்.”


“சரி இப்ப அவங்களுக்குள்ள பிரச்சனை வர நீதானே காரணம்.” ராம் சரியாகச் சொல்லிவிட… அபர்ணா ஆமாம் என்றாள்.


“என்ன நடந்தது சொல்லு? அகிலா ஏன் இப்படி இருக்கா?” என்றதும், அபர்ணா எல்லாவற்றையும் சொல்லிவிட…


“நீ பெண்ணா இல்லை ராட்சஸியா டி… அவளைப் போட்டு இந்தப்பாடு படுத்தி இருக்க. இனி நான் பார்த்துகிறேன்.” என்றான் ராம். அபர்ணா எதுவும் பதில் சொல்லவில்லை. அவள் காரில் இருந்து இறங்கி சாலையில் நடக்க…


“ஏய் இப்ப தனியா எங்கப் போற? நான் உன்னை வீட்ல விடுறேன்.”


“உங்க உதவி எனக்குத் தேவையில்லை… நான்தான் பொண்ணு இல்லை ராட்சஸின்னு சொல்லிடீங்க இல்ல… எனக்கு ஒன்னும் ஆகாது.” என்றாள். சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கிவிட…


“வெறும் ராட்சஸியா இருந்தா பரவயில்லையே, அழகான ராட்சஸியா வேற இருந்து தொலையிறியே…அதுக்குதான் சொல்றேன் வா…” ராம் சிரிக்க…


“உங்களுக்கு என் மேல எவ்வளவு நல்ல எண்ணம் இருக்குன்னு எனக்குத் தெரியும். நீங்க ஒன்னும் சமாளிக்க வேண்டாம்.” என்றாள் அபர்ணா.


“உன்மைதான… இல்லைனா அகிலாவுக்கு நீ ஏன் இவ்வளவு பார்க்கணும்.” அவன் வேண்டுமென்றே சீண்ட… அது புரியாமல் அபர்ணா அவனுக்கு வலிக்க திருப்பிக் கொடுத்தாள்.


“ஹலோ… நான் அகிலாவுக்கு உதவி பண்ணா… நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிப்பீங்கன்னு நான் இதைப் பண்ணலை. எங்க அத்தை செஞ்ச தவறுக்கு என்னையும் பொறுப்பு ஆக்கினீங்க இல்லையா? அதனாலதான் அவங்க செஞ்ச தவறால பாதிக்கபட்ட அகிலாவுக்கு உதவி பண்ண நினைச்சேன் அவ்வளதுதான்.”


ராம் அவளை நம்பாமல் பார்க்க… “இப்ப இந்த உலகத்திலேயே நான் அதிகமா வெறுக்கிறது உங்களைத்தான். உங்களைப் பார்க்க முடியாம இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.” என்றவள், திரும்பி நடக்க… அவள் கோபத்தில் பேசுகிறாள் எனத் தெரிந்தபோதும், ராமிற்கு மனம் வலித்தது.


அப்போது ஒரு கார், அபர்ணாவின் அருகே வந்து நிற்க… ராம்தான் என நினைத்து அவள் பார்க்க… வந்தது ஆதித்யா.


“நான் உன்னை வீட்ல விடவா அபர்ணா.” ஆதி கேட்க,


இங்கிருந்து தனியாகச் செல்லவும் முடியாது. அப்போது ராம்மோடு செல்லவும் அவளுக்கு விருப்பம் இல்லை… அதனால் ஆதித்யா கேட்டதும் ஒத்துக்கொண்டு காரில் ஏறினாள். ராம் அவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். அதித்யா அவனிற்குக் கையசைத்துவிட்டுச் சென்றான்.


சிறிது நேரம் காரில் மௌனம் நிலவ… “அபர்ணா, உனக்கு ராம் யார்?” என அவன் திடிரென்று கேட்க,


“நான் அவர் சிஸ்டர் கன்சர்ன்லஸ் வேலை பார்கிறேன். எனக்கும் அவருக்கும் வேற ஒன்னும் இல்லை.” என்றாள் அபர்ணா.


ஆதித்யாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. இதிலேயும் ராம்மிடம் தோற்று விடுவோமோ எனப் பயந்து போய் விட்டான். இனியும் காலம் தாழ்த்த கூடாது. நினைத்ததை முடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

 

Advertisement