Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 17



அபர்ணா அகிலாவிற்காக வேலைக்குச் சேர்ந்திருந்தாலும், வேலையில் ஒன்றும் குறை வைக்கவில்லை. இயல்பிலேயே கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால்….வேலைகளை ஆர்வமாகவே செய்தாள். அகிலாவுக்கும் மிகவும் உதவியாக இருந்தாள்.


ஒரு வேலை கொடுத்தால்… அது முடியும் வரை அபர்ணா ஓயவே மாட்டாள். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும், இருந்து முடித்து விட்டே செல்வாள். இந்தக் குணம் உண்மையிலேயே அகிலாவுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.


அபர்ணா கடமைக்காக எதுவும் செய்து அகிலா பார்த்தது இல்லை. என்ன வேலை என்றாலும், இதுல புதுசா என்ன செய்யலாம் என்றே அவள் யோசனை இருக்கும். அவள் யோசிப்பது மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் யோசிக்க வைப்பாள்.


அவர்கள் இருக்கும் துறைக்கு அதுதான் மூலதனமே… மற்றவர்களை விடப் புதுமையாக நிகழ்ச்சிகள் செய்தால்தான்… மக்களை ஈர்க்க முடியும்.


அகிலாவுக்குத் தன் நிறுவனம் முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை. நல்ல தரமான நிகழ்ச்சிகளை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தான் எண்ணம். அதனால் அவள் டி அர் பி பற்றி எல்லாம் அவ்வளவு மெனெக்கெட மாட்டாள். ஆனால் அபர்ணா அப்படி விடும் ரகம் இல்லை.


“ஏன் நாம பின்னாடி இருக்கோம்?” என நூறு கேள்வி கேட்பாள்.


“என்னால மத்தவங்களை மாதிரி இறங்கிப் போக முடியாது புரியுதா?”


“உங்களை யாரு இறங்கிப் போகச் சொன்னா… நல்ல தரமான நிகழ்ச்சிகளையும் கொடுக்கிற விதத்துல கொடுத்தா… மக்கள் பார்க்கத்தான் செய்வாங்க.”


அகிலா முடியுமா என்பது போலப் பார்க்க… “முடியும், நாம பண்ணலாம்.” என்றாள் அபர்ணா நம்பிக்கையாக.


முதலில் திரைப்படப் பாடல்கள் ஒளிப்பரப்புச் செய்வதில்தான் மாற்றம் கொண்டு வந்தாள். நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுத்து வழங்கியோ அல்லது நேயர்கள் தொலைப்பேசியில் அழைத்து விருப்பமான பாடல்களைக் கேட்பதற்குப் பதில்…


நேயர்கள் ஸ்கைப் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் விருப்பமான பாடல் போட சொல்லி கேட்கலாம். அதுவும் தங்கள் முகம் சின்னத்திரையில் வரும், அதை உலகம் முழுக்கப் பார்க்க முடியும் என்றால்… கேட்கவும் வேண்டுமா… மக்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்ப்பு பெற்றது.


அதுவரை சிலரால் மட்டும் பார்க்கப்பட்டு வந்த அவர்கள் டிவி சேனல்… இன்று பலரும் அதில் வேறு என்ன நிகழ்ச்சிகள் வருகிறது என ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தனர்.


ஏற்கனவே ஒளிபரப்பரப்பாகி கொண்டிருந்த இதிகாச தொடர்கள், நாடகங்கள் போன்றவற்றின் இடைவேளையில், அந்த நிகழ்ச்சிகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு…சரியாகப் பதில் அளித்தோரில் மூவரை தேர்ந்தெடுத்து… அவர்களை நிலையத்திற்கு அழைத்து, பரிசுகளும் கொடுத்து, அதுவும் டிவியில் வேறு ஒலிபரப்பு செய்யப்பட… அவர்கள் தொடர்களைப் பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகியது.


“இப்படியெல்லாம் செய்யணுமா என்ன?” என அகிலா நினைக்க…


“முன்னாடி எல்லாம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் டிவி பார்ப்பதே பெரிசு. வாரத்தில ஒரு படம் இப்படித்தான் டிவியில வரும். ஆனா இப்ப அப்படியில்லை. நூறு டிவி சேனல்கள் இருக்கு… அதுவும் இருபத்தி நாளு மணிநேரம் எதாவது ஓடிட்டே இருக்கு.”


“இப்படி இருக்கிற சூழ்நிலையில மக்களை நம்ம பக்கம் பார்க்க வைக்கத்தான் இது எல்லாம் பண்றோம். முதல் கொஞ்ச நாளைக்குத்தான். தொடர்ந்து பார்க்க ஆரம்பிச்சிட்டா… அவங்களே விட மாட்டாங்க.” என்றாள் அபர்ணா.


அந்த வாரத்திற்கான டி அர் பியை பார்க்கும் போது அகிலாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்கள் சேனலுக்கு மவுசு ஏறியிருந்து.


அன்று அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருந்தது. அதனால் அகிலா பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டு இருந்தாள். அன்று பார்த்து அவளது கார் மக்கர் செய்ய… தங்கைக்குத் தோல் கொடுக்க அண்ணன் முன் வந்தான்.


“நான் உன்னை டிராப் பண்றேன். மெக்கானிக் வந்து பார்த்ததும், டிரைவர் உன் காரை கொண்டு வந்து ஆபீஸ்ல விடுவான்.” என்றதும், வேகமாக மண்டையை உருட்டியவளுக்குப் பிறகுதான் அபர்ணா அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்வது நினைவு வந்தது.


“வேண்டாம், நான் அம்மாவோட காரை எடுத்திட்டு போறேன். மெக்கானிக் வந்து பார்த்ததும், டிரைவர் வந்து என் காரை விட்டுட்டு, அம்மா காரை எடுத்திட்டு வரட்டும்.”


இதை அகிலா சாதாரணமாகச் சொல்லி இருந்தால் பரவாயில்லை… அவள் படபடப்பாகச் சொல்லி முடிக்க…. ராம் அவளைச் சந்தேகமாகப் பார்த்தான்.


இதற்கு ஏன் இவ்வளவு படபடப்பு என அவனுக்குப் புரியவில்லை.


“உனக்கு அந்தக் கார் பிடிக்காதேன்னு சொன்னேன்.” ராம் சொல்ல…


“ஒரு நாள் தானே அண்ணா. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.” என அகிலா சொன்னதும், ராம் சரி என்று அங்கிருந்து சென்றான்.


அவன் சென்றதும் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்த அகிலாவுக்கு, “கொஞ்சம் ஓவரா தான் போயிட்டோமோ… இன்னும் கொஞ்சம் விட்டிருந்தா.. நாமே உளறி இருப்போம் போல…” என நினைத்துக் கொண்டாள்.


அபர்ணா மதியம் போலத்தான் அலுவலகத்திற்கே வருவாள். ராம் வந்திருந்தாலும் அபர்ணாவை பார்க்க வாய்ப்பு இல்லை.


ஒருநாள் கார்த்திக் அவர்கள் சேனலுக்கு வந்திருந்தான். “என்ன இந்தப் பக்கம்?” என அபர்ணா தெரியாதது போலக் கேட்க,


“உன்னைத்தான் பார்க்க வந்தேன்.” என அசராமல் அவன் அடித்து விட… அகிலா அவனை முறைப்பாகவும், அபர்ணா அவனை நக்கலாகவும் பார்த்தனர்.


“என்னைத்தான பார்க்க வந்தீங்க, எனக்கு வேலை முடிஞ்சிடுச்சு. வாங்க போலாம்.” என அபர்ணா சொல்ல… கார்த்திக் இதைக் கண்டிப்பாக எதிர்பாக்கவில்லை. அவன் அகிலாவைத்தான் பார்க்க வந்திருந்தான். ஆனால் வேறு வழியில்லாமல் அபர்ணாவோடு சென்றான்.


காரில் அபர்ணா அவனைக் கேலியாகப் பார்த்து சிரிக்க… “இப்ப என்ன சிரிப்பு?” எனக் கேட்டான்.


“உங்களைப் பார்த்துதான் சிரிக்கிறேன். லவ் பண்ற பொண்ணைக் கரெக்ட் பண்ண கூடத் தெரியலை?” அபர்ணா சொல்ல…


“ஓ… உனக்கு ரொம்பத் தெரிஞ்சிசுதா?” எனக் கார்த்திக் பதிலுக்கு வார…


“என்னோட விஷயம் வேற….” என்றாள் அபர்ணா. அது கார்த்திக்கும் தெரியும்.


“ஆமாம் நான் யார்கிட்டயும் அகிலாவை லவ் பண்றேன்னு சொல்லலை? அப்புறம் உனக்கு எப்படித் தெரியும்?”


“நீங்க சொல்லலைனா என்ன? நாங்களே கண்டுபிடிப்போம்.” அபர்ணா காலரை தூக்கிவிட..


“நாங்களா… இன்னும் யாருக்கு தெரியும்.” கார்த்திக் பதட்டமாக,


“நித்யா அக்கா.” என்றாள் அபர்ணா.


“கடவுளே ! இனி உலகத்துக்கே தெரிஞ்ச மாதிரி.”


“சரி விடுங்க, அகிலா என்ன சொல்றாங்க?”


கார்த்திக் அவளின் மறுப்பிற்கான காரணங்கள் அனைத்தையும் சொன்னான். அகிலாவை போட்டுத்தாக்க எதாவது காரணம் கிடைக்காத என அபர்ணா காத்திருந்தாள்.


புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், வாரம் ஒரு குறும்படம் போடலாம் என முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் அதை இயக்கிய இயக்குனர், நடித்த நடிகர்கள் மற்றும் உடன்பணி புரிந்தோரின் பேட்டியும் வரும்.


இதன் மூலம் திறமை இருக்கும் புதியவர்களுக்குத் திரை உலகில் நுழைய வாய்ப்பு கிடைக்கும் என்ற நல்ல எண்ணத்தில், அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.


டிவி சேனலில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக அறிவிப்புச் செய்ய… நிறையப் பேர் தங்கள் குறும்படத்தை அனுப்பி இருந்தனர். அதில் சிறந்த படங்களைத் தேர்வு செய்யும் தேர்வு குழுவில் அபர்ணாவும் இருந்தாள்.


அவளைத் தவிர அந்தக் குழுவில் இன்னும் இருவரும் இருந்தனர். அதில் ஒரூவர் சென்று அபர்ணாவை பற்றி அகிலாவிடம் குறை சொன்னான்.


“மேடம், அந்தப் படம் அவ்வளவு நல்லா இருக்கு. நாங்க ரெண்டு பேரும் அதைச் செலக்ட் பண்ணா… அபர்ணா அதை வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க.”


“எவ்வளவு அருமையான கதை தெரியுமா… போட்டா அந்த நிகழ்ச்சி பிச்சிட்டு போகும். இந்தப் பொண்ணுக்கு எப்படி அதெல்லாம் தெரியும். அதுவே கத்துக் குட்டி… ஆனாலும் நீங்க அந்தப் பொண்ணுக்கு ரொம்ப இடம் கொடுக்குறீங்க மேடம். அதுதான் அந்தப் பொண்ணு ரொம்ப ஆடுது.”


அவன் சொன்னதைப் பொறுமையாகக் கேட்ட அகிலா, “அபர்ணா சொன்னா எதாவது காரணம் இருக்கும். நான் என்னன்னு கேட்கிறேன். நீங்க போங்க.” என்றதும், கோல் சொன்னவனுக்கு முகம் கருத்துவிட்டது.


அகிலா அந்தக் குறும்படத்தை அவளும் பார்த்தாள். உண்மையிலேயே அது மிகவும் நன்றாக இருந்தது. அதை ஏன் அபர்ணா நிராகரித்தாள் என்று புரியவில்லை. அவளையே அழைத்துக் காரணம் கேட்டாள்.


“அவர் எடுத்த படம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.” என்றாள் அபர்ணா.


“அப்புறம் ஏன் வேண்டாம்ன்னு சொன்ன?” என அகிலா புரியாமல் பார்க்க..

.
“அவனோட பின்புலம் சரி இல்லை… அவனோட அப்பா ஒரு கொலை பண்ணிட்டு ஜெயில்ல இருக்கார். அவனுக்குப் போய் எப்படி வாய்ப்பு கொடுக்கிறது.” என்றதும், இதெல்லாம் ஒரு காரணமா என்பது போல அகிலா பார்த்தாள்.


“அவங்க அப்பா என்னவோ பண்ணிட்டு போகட்டும். நமக்கு என்ன வந்தது அபர்ணா. நீ அவனை மட்டும் பாரு போதும்.” என்றாள்.


அபர்ணா மறுப்பாக எதாவது சொல்வாள் என்று பார்த்தாள். ஆனால் அவளோ சரி என உடனே ஒத்துக் கொண்டாள்.


அவளிடம் இருந்து மறுப்பை எதிர்பார்த்த அகிலா அவளை ஆச்சர்யமாகப் பார்க்க…


“நான் உங்களுக்காகதான் யோசிச்சேன். உங்களுக்கு ஒன்னும் இல்லைனா எனக்கும் ஒன்னும் இல்லை.” என்றாள்.


“நாம அந்தப் பையனோட திறமையைதான் பார்க்கணும், அவனோட அப்பாவை பத்தி நாம ஏன் கவலைப்படணும்? நிஜமா நான் உன்கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கலை.”


“ஓ… அப்படியா ! நீங்க உங்க அப்பாவை நினைச்சிட்டுக் கார்த்திக்கை வேண்டாம்ன்னு சொல்றீங்க இல்ல… அதனால நீங்க இந்த விஷயத்துலயும் அப்படித்தான் இருப்பீங்கன்னு நான் நினைச்சேன் சாரி.” என அபர்ணா சொன்னதும், அகிலாவுக்கு அப்படி ஒரு கோபம் வந்தது.


“நீ உன் வேலையை மட்டும் பாரு. என் சொந்த விஷயம் பேச நீ யாரு?” என அகிலா கத்தவே ஆரம்பித்து விட…


“நான் உங்க சொந்த விஷயத்துல தலையிடல… ஜஸ்ட் நீங்க அப்படி யோசிப்பீங்களோன்னு நினைச்சேன் அவ்வளவுதான்.” என்றாள்.


“உனக்கு நான் அதிகம் இடம் கொடுத்திட்டேன் அபர்ணா. உனக்கு இனிமே இங்க வேலை இல்லை. நீ போகலாம்.” என்றதும்,


“நான் உங்களைக் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சிடுங்க.” என்றவள், உடனே கிளம்பி விட்டாள்.


அவள் சென்றதும் அகிலா கார்த்திக்கு போன் போட்டு ஆடி தீர்த்து விட்டாள். அவன் என்ன சமாதானம் சொல்லியும் அவள் கேட்கவே இல்லை.


வீட்டிற்கு வந்தும் அகிலா இயல்பாகவே இல்லை. அன்று சாப்பிட்டு விட்டு வந்த ராம், ஹாலில் அவன் அம்மா அருகில் உட்கார்ந்து டிவி பார்த்தான். அவர்கள் டிவி தான் ஓடிக்கொண்டிருந்தது.


இரவு பத்து மணிக்கு குறிப்பிட்ட மாவட்டத்தைப் பற்றிய நிகழ்ச்சி ஒன்று வந்தது. அதில் அரசியல் இல்லை. அந்த மாவட்டத்தின் சிறப்பு… எப்படித் தோன்றியது என்ற வரலாறும், அதன் கீழ் வரும் ஊர்களைப் பற்றியுமான நிகழ்ச்சி.


சிறப்புகள் மட்டும் அல்ல… அந்த மாவட்டத்தின் பிரச்சனை, அதில் வசிக்கும் சாதனையாளர்கள்… திறமை இருந்தும் வறுமையில் சாதிக்க முடியாமல் போனவர்களை நேரில் கண்டு பேட்டிக் எடுக்கப்பட்டிருந்தது.


இறுதியில் தான் முக்கியமான விஷயமே இருந்தது. ஏழ்மை நிலையில் படிக்க முடியாமல் போன சிலரை தேர்ந்தெடுத்து, அவர்களின் கல்வி செலவை எஸ் . என் நிறுவனத்தின் பங்குதாரர் ராம் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டு, அதோடு அந்த நிகழ்ச்சி முடிந்தது.


பார்த்த ராமிற்கு ஆச்சர்யம் என்றால்… அகிலாவுக்கு அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சியை எடுத்ததில் முக்கியப் பங்கு அபர்ணாவுக்குத்தான். அரசியல் இல்லாம கூடச் செய்தி போடலாம் என இந்த நிகழ்ச்சிக்கு யோசனை சொன்னது அவள்தான்.


வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை மட்டும் வைத்து சேனல் நடத்துவது அகிலாவுக்கே குற்ற உணர்வாக இருக்க… அபர்ணா சொன்னதும் ஒத்துக் கொண்டாள். இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, எதோ நம்மால் முடிந்த நல்லது என நினைத்து இருந்தாள்.


கடைசியில் ராம்மை இழுத்துவிட்டது அவளுக்கே தெரியாது. அடிப்பாவி இப்படி மாட்டி விட்டுடாளே என அவள் நினைக்க… ராம் வந்து தங்கையின் தோளை சுற்றி அணைத்தவன், “சூப்பர் டா… நிஜமாவே ரொம்பப் பெருமையா இருக்கு. நல்ல விஷயம் பண்ற.” என்றான் பாராட்டுதலாக.


ஸ்வர்ணாவும் மகளைப் பெருமையாகப் பார்க்க… அகிலாவுக்கு ஒன்றும் சொல்ல முடியாத நிலை. ராம் அவன் அறைக்குச் சென்றுவிட, அவள் தலையில் கைவைத்துக் கொண்டாள்.


மறுநாள் அலுவலகம் வந்த அகிலாவுக்குப் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் மற்றும் பொது மக்களின் வரவேற்பும் கிடைத்து இருந்தது. அதனால் அந்த நிகழ்ச்சிக்கு விளம்பரதாரர்கள் கிடைத்தனர்.
அது மட்டும் அல்ல… அந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளைச் சுத்தப்படுத்திக் கொடுக்க… தன்னார்வ குழு ஒன்றும் முன் வந்தது.


வெறும் அரசியல் செய்திகளைக் கேட்டு மட்டும் என்ன பயன் இருந்தது. எல்லாவற்றிற்கும் அரசியல் வாதிகளை நம்பிக் கொண்டு இருந்தால்… இனி வேலைக்கு ஆகாது என மக்களும் புரிந்து கொண்டனர்.


இந்த நிகழ்ச்சி தொடர அபர்ணா கண்டிப்பாக வேண்டும். அகிலாவுக்கு வேறுவழியின்றி அவளை அழைத்தாள். அபர்ணாவும் வந்து அவளைச் சந்தித்தாள்.


“அபர்ணா, நீ இனி என் சொந்த விஷயத்தைப் பத்தி பேசுறது இல்லைனா… இங்க திரும்ப வேலையில சேர்ந்துக்கலாம்.” என அகிலாவே ஆரம்பித்து வைக்க… அபர்ணா விடுவாளா என்ன?


“ஓகே… எனக்கு என்ன வந்தது சொல்லுங்க. கல்யாணத்துக்காகக் கார்த்திக் அவங்க வீட்ல எவ்வளவு பேச்சு வாங்கினாங்கன்னு எனக்குத் தெரியும். இதனால அவருக்கும் அவங்க அம்மாவுக்கும் கூடப் பிரச்சனை.”


“நீங்க இவ்வளவு அலட்ச்சியபடுத்தியும் கார்த்திக் உங்களைச் சுத்தி வர்றாருனா, அவர் உங்க மேல எவ்வளவு அன்பு வச்சிருக்கணும்? அப்படி ஒரு அன்பு கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும்.”


“அந்த மாதிரி அன்பு எல்லோருக்கும் கிடைச்சிடாது. உங்களுக்குக் கிடைச்சு நீங்க மிஸ் பண்ணா… உங்களுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லைன்னு நினைச்கிக்க வேண்டியது தான்.”


“கார்த்திக்காக அவ்வளவு யோசிக்கிறியே? எப்பவாவது என் இடத்தில இருந்து யோசிச்சு பார்த்து இருக்கியா?”


“யோசிக்காம இருப்பேனா அகிலா? உங்க அப்பா போலச் சில பேர் இருக்கலாம். ஆனா எல்லோரும் அப்படித்தான்னு சொல்ல முடியுமா?”


“ஏன்? உங்க அண்ணன் உடம்பில உங்க அப்பா ரத்தம் தானே ஓடுது. அவரும் உங்க அப்பா மாதிரிதான் இருப்பாரா?”


அபர்ணா இப்படிக் கேட்டதும், “எங்க அண்ணாவை இழுக்காத சொல்லிட்டேன். இந்த உலகத்திலேயே எங்க அண்ணன் வெறுக்கிற முதல் ஆள் எங்க அப்பாதான். அப்புறம் எப்படி அவர் மாதிரி இருப்பார்?” என்றாள்.


“உங்க அண்ணன் மேல இவ்வளவு நம்பிக்கை வச்சு இருக்கீங்க… அதுல கொஞ்சம் கார்த்திக் மேலயும் வைங்க அகிலா.”


“ஏன் நடக்கப் போகாத ஒரு விஷயத்தை, அப்படி நடந்திடுமோன்னு நீங்களாவே கற்பனை பண்ணி, உங்களையும் கஷ்ட்டபடுத்தி, கார்த்திக்கையும் கஷ்ட்டபடுத்துறீங்க.”


“கார்த்திக்கோட உங்க வாழக்கை சந்தோஷமாவும் இருக்கலாம். ஏன் அந்த மாதிரி யோசிச்சு பார்க்க மாட்டேங்கறீங்க?”


அபர்ணாவின் கேள்வி அகிலாவை வேறு விதமாகவும் யோசிக்க வைத்தது. இதுவரை எப்போதும் ஒரு பக்கத்தை மட்டும்தான் யோசிப்பாள். அவள் யோசிக்கும் போதே அபர்ணா அங்கிருந்து சென்று விட்டாள்.
அடுத்த மாவட்டத்தைத் தேர்வு செய்து… படபிடிப்புத் தொடங்கிவிட்டது.


“உங்க அண்ணன் அந்தப் பசங்களுக்கு உதவி செய்றது ரெகார்ட் பண்ணி, அடுத்த வாரம் வர்ற பகுதியில போடணும். அவர்கிட்ட எப்ப ஷூட்டிங் பண்ண வசதி படும்ன்னு கேட்டுக்கோங்க.”


“ஆமாம் நீ யாரை கேட்டு ராம் அண்ணாவை இதுல இழுத்த?”


“அடுத்தவனை உதவுன்னு சொல்றதுக்கு முன்னாடி, நாம செய்யனும். உங்க அண்ணன் தானே உங்களுக்கு ஸ்பான்சர்… அதனாலதான்.”


“அவரு ஏற்கனவே நிறையப் பேருக்கு உதவி பண்ணி இருக்கார். ஆனா அதை வெளிப்படையா காட்டிக்க விரும்புவாரான்னு தெரியலை.”


“இதெல்லாம் வெளிய தெரியனும். அப்பத்தான் அவர் செய்றார், நாமும் செய்வோம்ன்னு இன்னும் சிலபேர் வருவாங்க. இதனால கொஞ்சம் பேருக்கு நல்லது நடந்தா, நல்லது தானே.”


அபர்ணா சொன்னதை அப்படியே ராம்மிடம் சொல்லிதான் அகிலாவால் அவனைச் சம்மதிக்க வைக்க முடிந்தது. ஆனால் அப்போதும் இதெல்லாம் செய்தது அபர்ணா என அவள் சொல்லவில்லை.


இரண்டு நாட்கள் சென்று, ராம் அகிலாவின் அலுவலகத்திற்கு வந்தான். உதவி பெறுபவர்களையும் வர செய்து, ராம் அவன் கையால் காசோலை கொடுப்பது படம் ஆக்கப்பட்டது.


அபர்ணா அன்று அலுவலகத்திற்கு வரவே இல்லை. அகிலாவுக்கு ஒரே தவிப்பாக இருந்தது. அதைக் கவனித்த ராம், “என்கிட்டே சொல்லாம நீயே என் பேரை சொல்லிட்டேன்னு வருத்தப்படுறியா? ஆனா அதுல எனக்குக் கோபமே இல்லை அகிலா. நீ நல்லதுதான் பண்ணி இருக்க.” என அவன் சொன்னதும், அவளுக்கு மேலும் குற்ற உணர்வு ஆகிவிட்டது.


“அண்ணா, உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். இந்த நிகழ்ச்சி நான் யோசிச்சது இல்ல… வேற ஒருத்தவங்க பண்ணது.” என்றாள்.


“ஓ… அப்படியா ! ஆனா நாம உதவி பன்றோம்ன்னு நீதானே சொல்லி இருப்ப?”


“அதுவும் நான் சொல்லலை.”


என்ன சொல்றா இவ என்பது போல் ராம் பார்த்தான்.


யாரு அது? அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக்கொள்வது. அதை எப்படி அகிலா அனுமதிக்கிறாள் என யோசித்தவன், சில நாட்களாக அகிலா ஒருமாதிரி இருப்பதும் நினைவு வந்தது.


“அவங்களை வர சொல்லு. நான் பார்க்கணும்.” என்றவன், அங்கேயே அலுவல் அறையிலேயே அமர்ந்து கொண்டான்.


அபர்ணாவின் பெயரை சொல்லவே, அகிலாவுக்குப் பயமாக இருந்தது. இத்தனை நாள் ஏன் மறைத்தாள் என்று கேட்டால் என்ன சொல்வது? தான் அண்ணனை நம்பாதது போல ஆகிவிடாதா?


அப்போது உள்ளே நுழைந்த அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், “மேடம், ப்ரோக்ராம் முடியும் போது, கிரியேட்டிவ் ஹெட்ன்னு அபர்ணா மேடம் பேர் போட்டுடலாமா?” எனக் கேட்டதும், ராமிற்கு அது யார் எனப் புரிந்துவிட்டது.


தன்னுடைய பெயரை தைரியமாக உபயோகிக்க அவளால்தான் முடியும் என நினைத்தவன், “நான் கிளம்புறேன் அகிலா.” என வாயிலை நோக்கி சென்றான்.


நடக்கும் போதே செல்லை எடுத்து அபர்ணாவின் எண்ணிற்கு அழைத்து இருந்தான்.


“ஹலோ…யாரு?”


“உனக்குத் தெரியாது? எதாவது நம்புற மாதிரி சொல்லு.” என ராம் சொன்னதும், அபர்ணாவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு, “தெரியாது. யாரு நீங்க?” எனக் கேட்டாள்.


“என் பேரு தெரியாது. ஆனா என் பேரை யூஸ் பண்ணிக்க மட்டும் தெரியும் போல…”


“நீங்கதான் அவ்வளவு காசு வச்சு இருக்கீங்க இல்ல… அதுல இருந்து கொஞ்சம் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவீங்க?”


“அதை நீ முடிவு பண்ணக்கூடாது. நான் முடிவு பண்ணனும். இனி என்னைக் கேட்காம எதாவது பண்ணிப்பாரு தெரியும்.”


“சரிங்க சார், சாரி.”


“ஆமாம் நீ எதுக்கு இங்க வேலைக்கு வந்த? இன்னும் எனக்குத் தெரியாம என்னென்ன நடக்குது?”


“உங்களுக்குத் தெரியாம என்னென்ன நடந்திட்டுதான் இருக்கு. அதை நீங்கதான் கண்டுபிடிக்கணும். நான் எப்படிச் சொல்ல முடியும்.”


“அபர்ணா…” என ராம் அதட்ட…


“நான் உங்களை மயக்கி கல்யாணம் பண்ணதான் இங்க வேலைக்கு வந்து சேர்ந்தேன் போதுமா? அப்படித்தானே நீங்க, உங்க குடும்பத்துல எல்லாம் நினைப்பீங்க. அப்படியே நினைச்சுக்கோங்க.” என்றவள், போன்னை வைத்து விட்டாள்.


அவள் கோபத்தில் பேசுகிறாள் என ராமிற்குப் புரியாமல் இல்லை. அன்று இரவு அகிலாவிடம் “அபர்ணா எப்போ வேலைக்குச் சேர்ந்தாள்?” என அவன் கேட்டதும்தான், ஸ்வர்ணாவுக்கும் விஷயம் தெரிய வந்தது.


அகிலா கார்த்திக் விஷயம் தவிர எல்லாவற்றையும் சொன்னாள். ராம் சென்றதும்,

“ஏன் இப்படிப் பண்ண அகிலா?” என ஸ்வர்ணா கேட்க,


“எனக்கு அவ எதுக்கு வேலைக்கு வரேன்னு சொன்னான்னு தெரிய வேண்டியது இருந்தது. அதனால்தான். ஆனா அவ அண்ணனுக்காக வரலை. அது எனக்குத் தெரியும் மா.”


“இன்னைக்கு அண்ணன் சேனலுக்கு வர்றாங்கன்னு அவளுக்குத் தெரியும். அப்படி இருந்தும் அவ வரலை.”என்றாள். மேலே இருந்து ராம் அதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தான்.


அபர்ணாவும் அகிலாவும் எதோ மறைக்கிறார்கள் என அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

Advertisement