Advertisement

 

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 16


தன்னைச் சந்திக்க அபர்ணா வந்திருக்கிறாள் எனத் தகவல் கிடைக்க… எதற்குத் தன்னைப் பார்க்க வேண்டும் என அகிலாவுக்கு ஒரே குழப்பம். இருந்தாலும் வர சொல்லி அனுப்பினாள்.


“ஹாய் அகிலா…” எனப் புன்னகையுடன் உள்ளே நுழைந்தவளை பார்த்து, “வா அபர்ணா.” என வரவேற்றாள்.


தனக்கு எதிரே இருந்த இருக்கையை அகிலா காட்ட, அதில் அபர்ணா அமர்ந்து கொண்டாள்.


“உங்க ஆபீஸ் ரொம்ப நல்லா இருக்கு.”


“தேங்க்ஸ், திடிர்ன்னு என்ன ஆபீஸ் பக்கம் வந்திருக்க.”


“நான் வேலைக்குப் போகலாம்ன்னு இருக்கேன். சரி வெளியில தேடுறதுக்கு, தெரிஞ்சவங்ககிட்ட வேலை பார்க்கிறது நல்லது இல்லையா…” என்றவள், தன்னுடைய சான்றிதழ்களை எடுத்துக் கொடுத்தாள்.


அகிலா மேலோட்டமாகத் தான் பார்த்தாள். அபர்ணாவின் படிப்பு அவர்கள் துறையைச் சார்ந்ததுதான். அவள் நல்ல மதிப்பெண்களும் பெற்றிருந்தாள்.


சான்றிதழ்களைப் பார்த்து விட்டு நிமிர்ந்தவள், “எல்லாம் ஓகே தான். ஆனா நீ என்கிட்டே வேலை கேட்கிறதுதான் ஆச்சர்யமா இருக்கு.” என்றாள்.


“ஏன்?” எனக் கேட்டாள் அபர்ணா.


தோளை வெறுமனே குலுக்கிய அகிலா… சிறிது நேரம் பதில் சொல்லவில்லை.


“நீ நிஜமாவே இங்க வேலை பார்க்கத்தான் வந்திருக்கியா?”


“உங்களுக்கு அதுல என்ன சந்தேகம்?”


“ராம் அண்ணா இங்க வர மாட்டாங்க அபர்ணா.” அகிலா மனதில் நினைத்ததைச் சொல்லிவிட…


“உங்க அண்ணனை பார்க்க நான் ஏன் இங்க வரணும்? உங்க அண்ணன் ஆபீஸ்ல என்னால வேலை வாங்க முடியாதுன்னு நினைக்கிறீங்களா?”


கண்டிப்பாக அபர்ணா நினைத்தால் முடியும். அதுதான் பிரகாஷும், நீலீமாவும் இருக்கிறார்களே…


“சரி நான் யோசிச்சு சொல்றேன்.” அகிலா சொன்னதை ஏற்று, அபர்ணா அங்கிருந்து விடைபெற்றாள்.


அகிலாவுக்கு ஒரே குழப்பம். அபர்ணாவை வேலைக்கு எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? யாரிடம் கேட்பது என யோசித்தவள் கார்த்திக்கை அழைத்தாள்.


“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். எப்ப பார்க்கலாம்?”


அவளே அழைத்துப் பேச வேண்டும் என்றதும், கார்த்திக்கின் கற்பனை குதிரை தறிகெட்டு ஓட…. “இப்பவே பார்க்கலாமே.” என்றான் ஆர்வமாக.


அவனின் ஆர்வத்தை உணர்ந்தவள், “இல்லை, எனக்கு ஒரு குழப்பம் அதுதான் தெளிவு படுத்திக்கலாம்ன்னு நினைச்சேன்.” என்றதும், கார்த்திக்கு சப்பென்று ஆகிவிட்டது.


“நான் மட்டும் என்ன? நீ லவ் சொல்ல போறேன்னா நினைச்சேன்.” எனத் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு அவன் பேச…


இவன்கிட்ட போய்ச் சொன்னேன் பாரு என அகிலா கடுப்படைந்தாள்.
மாலை முதலில் அகிலா வந்துவிட்டாள். பிறகுதான் கார்த்திக் வந்தான்.


“சாரி லேட் ஆகிடுச்சு.”


“பரவாயில்லை…” அகிலா சொல்லும்போதே அவள் ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்துவிட…


“நீங்க வர்றதுக்குள்ள ஆர்டர் பண்ணிட்டேன்.”


கார்த்திக்கு பிடித்த உணவு வகைகள்தான் ஆர்டர் செய்திருந்தாள். ‘இதெல்லாம் கரெக்ட்டா தெரிஞ்சு வச்சிருக்கா… ஆனா என்னைப் பிடிக்குமான்னு கேட்டா இல்லைன்னு சொல்லுவா.’ என மனதில் நினைத்தவன், வெளியில் ஒன்றும் சொல்லவில்லை.


அவனுக்கும் நல்ல பசி… அதனால் முதலில் கொஞ்சம் வயிற்ருக்கு போட்டுவிட்டே… அவளிடம் எதற்கு வர சொன்னாள் எனக் கேட்டான்.


“இன்னைக்கு அபர்ணா ஆபீஸ்க்கு வந்திருந்தா?”


“அபர்ணாவா…” எனக் கார்த்திக் இழுக்க…


“உங்க ப்ரண்ட் அபர்ணா.” என்றவள், ப்ரண்ட் என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி சொல்ல…கார்த்திக் அவளை முறைத்தான்.


“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் அவ என் ப்ரண்ட்தான். சரி அவ உன்னை எதுக்குப் பார்க்க வந்தா?”


“எங்க சேனல்ல வேலை கேட்டு வந்தா.” என்றதும் கார்த்திக் யோசித்தான்.


“அபர்ணாவை நீலீமாவோட ஏன் சேர்த்து பார்க்கிற? அவளுக்குத் தகுதி இருந்தா வேலைக் கொடு.”


“நான் அதுக்கு மட்டும் யோசிக்கலை…” என்றவள், மேலே சொல்ல தயங்க…வேறு எதற்கு எனக் கார்த்திக் புரியாமல் பார்த்தான்.


“நிஜமாவே உங்களுக்குத் தெரியாதா?”


“என்ன தெரியாதா? கொஞ்சம் புரியிற மாதிரி பேசுறியா?”


“அபர்ணா லவ் பண்றது ராம் அண்ணாவைத்தான்.”


“என்னது?” எனத் திடுகிட்டவன், ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்த்த போது… இருக்கலாம் என்றே தோன்றியது.


“அவ லவ் பண்றா சரி…. ஆனா உங்க அண்ணன்?”


“அம்மாவுக்கு எந்தக் கஷ்ட்டத்தையும் கொடுக்க மாட்டேன்னு ராம் அண்ணன் சொல்லி இருக்காரு.”


“அப்புறம் ஏன் வேலை கொடுக்க யோசிக்கிற? அபர்ணாவை பார்த்தா உங்க அண்ணன் மயங்கிடுவாருன்னு பயமா?” வேண்டுமென்றே கார்த்திக் சீண்ட…


“ஹலோ… என் அண்ணனை பத்தி எனக்குத் தெரியும். நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.”


“அப்படியா ! அப்ப வேலை கொடுக்க ஏன் யோசிக்கிற?”
கார்த்திக் பேசியதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அகிலா அபர்ணாவுக்கு வேலை கொடுக்கத் தீர்மானித்தாள்.

“சரி இப்ப நம்ம விஷயத்துக்கு வா… என்ன முடிவு பண்ணி இருக்க?”


“நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிட்டேன்.”


“நானும் அதை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.”


“நமக்குள்ள நல்ல பிரண்ட்சிப் இருக்கு. அதைக் கல்யாணம் பண்ணி நான் கெடுத்துக்க விரும்பலை. நாம எப்பவும் இப்படி இருக்கலாம் கார்த்திக்.”


“நமக்கு இருக்கிற பொறுமை எல்லாம் என் அம்மாவுக்கு இல்லை. நான் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கிற கோபத்தில, அவங்க இப்போ என்னோட சரியா பேசுறது கூட இல்லை.”


“உங்களை யாரு கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு சொன்னா…. நீங்க பண்ணிக்கோங்க.” என்றதும், கார்த்திக்கு அப்படி ஒரு கோபம் வந்தது. விருட்டென்று எழுந்தவன், அகிலாவை திரும்பியும் பார்க்காமல் சென்றான்.


விரும்புகிறவர்களைக் காயப்படுத்தும் போது காயப்படுத்துவர்களுக்கும் வலிதான். கார்த்திக் அனுபவிக்கும் அதே துன்பத்தை அகிலாவும் அனுபவித்தாள்.


அபர்ணா வேலை கிடைத்துவிட்டதை மகிழ்ச்சியுடன் வீட்டினரிடம் பகிர்ந்தாள். சுகன்யா அப்போதே இனிப்புச் செய்து எலோருக்கும் கொடுத்தார்.


“எங்க வேலை?” என வீட்டினர் விசாரித்த போது,


“எஸ். என் சேனல்ஸ்.” என்றாள் மறைக்காமல். ஆனால் அது யாருடையது என்று சொல்லவில்லை.


எல்லோரும் வெளியே சென்றதும், சுகன்யா வலைதளத்தில் எஸ். என் சேனல்ஸ் பற்றித் தெரிந்துகொள்ளத் தேடியவருக்குப் பலத்த அதிர்ச்சி… அது யாருடையது என எல்லா விவரமும் வந்துவிட்டது.


“வரட்டும் அவ…” என மனதிற்குள் பொருமிக்கொண்டு இருந்தார்.


அபர்ணா அன்றே வேலையில் சேர்ந்துவிட்டாள். அகிலாவுக்கு அவள் என்ன எண்ணத்தில் வேலைக்கு வருகிறாள் எனப் புரியவில்லை… அதனால் அவளைக் கண்காணிக்கும் வகையில், அவள் தனக்குக் கீழே பணிபுரியும்படி பார்த்துக் கொண்டாள். அதுவே அவளுக்குத் தொல்லையாகப் போகிறது என அப்போது அவளுக்குத் தெரியவில்லை.


அபர்ணா வீட்டிற்க்கு வந்தபோது சுகன்யா முகத்தைத் தூக்கி வைத்தபடி வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.


இரவுக்குச் சப்பாத்தியும் பன்னீரும் செய்து இருந்தார். அபர்ணாவுக்கு அவர் தட்டில் இரண்டு வைத்துக் கொடுக்க.. அவள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் கேட்டாள்.


“பன்னீர் தொக்கு உங்களை மாதிரி யாருமே பண்ண முடியாது மா… இன்னொரு சப்பாத்தி வைங்க.” என அவள் தட்டை நீட்ட…


“உனக்கு அவ்வளவுதான். இப்படி வாயுக்கு வக்கனையா வடிச்சுப் போட்டுத்தான் உனக்குக் கொழுப்பு அதிகமாகிடுச்சு.”  


அதுவரை அடக்கிவைத்திருந்த கோபத்தைச் சுகன்யா காட்டிவிட… அபர்ணாவின் முகம் மாறியது.


“என்ன சுகன்யா இது? உன் கோபத்தை அவ சாப்பாட்டுலையா காட்டுவ….” என ஸ்ரீகாந்த அதட்ட… சுகன்யாவும் தன் தவறை உணர்ந்து, இன்னும் இரண்டு சப்பாத்தியை எடுத்து அபர்ணா தட்டில் வைக்க… செல்ல… அவள் தட்டை எடுத்துக் கொண்டு கைகழுவ சென்றாள்.


“அபர்ணா சாப்பிடு வா…” ஸ்ரீகாந்த் சொல்ல…


“வேண்டாம் எனக்கு எதுவும் வேண்டாம். வர வர நான் என்ன செஞ்சாலும் இந்த வீட்ல குற்றமா தான் பார்க்குறீங்க. வேணா சொல்லிடுங்க, நான் வீட்டை விட்டுக் கூடப் போயிடுறேன். அப்ப யாருக்கும் என்னைப் பார்க்க வேண்டாம்.” என்றவள், அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.


சுகன்யாவுக்கு அழுகையாக வர… அவர் அங்கேயே சேரில் உட்கார்ந்து விட்டார்.


“சாப்பிட்டிட்டு இருந்தவளை போய் இப்படியா பேசுவ… பாவம் குழந்தை, சாப்பிடாமலே போயிட்டா. இந்த வயசுல தான் வாயிக்கு ருசியா சாப்பிட முடியும். இப்ப என்னால எல்லாம் சாப்பிட முடியுதா?” என ஸ்ரீகாந்த தன் ஆதங்கத்தை சொல்ல… சுகன்யாவுக்கு மேலும் அழுகை பொங்கியது.


இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அருண் சென்று அபர்ணாவின் அறை கதவை தட்ட…


“என்னைக் கொஞ்சம் நிம்மதியா தூங்கவாவது விடுறீங்களா?” என அவள் குரல் மட்டும் வந்தது.


“விடு அருண்… இனி என்ன சொன்னாலும் அவ சாப்பிட மாட்டா.” என்றார் ஸ்ரீகாந்த.
சுகன்யாவும் சாப்பிடாமல் எல்லாவற்றையும் எடுத்து வைக்க… “என்னை எல்லோரும் சேர்ந்து நிம்மதி இல்லாம பண்ணனும்ன்னு முடிவு பண்ணிடீங்களா?” ஸ்ரீகாந்த கோபப்பட… சுகன்யா உட்கார்ந்து சாப்பிட்டார்.


காலையில் எழுந்த அபர்ணா சீக்கிரமே கல்லூரிக்கு கிளம்பி சென்றுவிட்டாள். வீட்டில் பச்சை தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. மதியம் கல்லூரியில் இருந்து அப்படியே சேனலுக்குச் சென்றுவிட்டாள்.


அபர்ணாவுக்கு என்று இன்னும் தனியாக வேலை கொடுக்கப்படவில்லை. அவள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு இருந்தாள். அவர்கள் சேனலில் செய்திகள் வாசிக்கபடுவது இல்லை.


அவர்களின் டிஆர்பியை பார்த்துக் கொண்டிருந்த அபர்ணா, “ஒரு நாளுக்கு ரெண்டு தடவையாவது நியூஸ் வாசிக்க வைக்கலாமே… வயசானவங்க செய்தி கேட்க விரும்புவாங்களே?” என்றாள்.


“நீ சொல்றது உண்மைதான். ஆனா நியூஸ் போட்டா நிறைய விஷயங்களைச் சமாளிக்க வேண்டியது வரும். அரசியல் இல்லாம நியூஸ் இல்லை.. ஆளுங்கட்சி பத்தி நியூஸ் போட்டா பிரச்சனை… அப்புறம் நாம பிரச்சனை வராத நியூஸ்ஸா தேடி பார்த்து போடணும். எதுக்கு அதுக்குப் போடவே வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்.”


இப்போது நாட்டின் நிலை அப்படித்தான். உண்மையாக மக்களுக்குத் தெரியவேண்டிய செய்திகள் வருவதே இல்லை. சினிமா நட்ச்சத்திரங்களின் அந்தரங்கங்கள் தான் இன்று பெரிய செய்தியாக வெளியே வருகிறது. அதைப் போடுவதற்குப் போடாமலே இருக்கலாம்.


இரவு அபர்ணா வீட்டிற்குச் செல்லும் வழியில் அவளுக்கு அருணிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.


‘அம்மா அப்பா ரொம்பப் பீல் பண்றாங்க. அப்பாவோட ஹெல்த் நினைச்சு பாரு.’ என அருண் அனுப்பி இருந்தான். எரிச்சலாக இருந்தாலும் அதில் இருந்த உண்மை புரியவே…. கஷ்ட்டப்பட்டுத் தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள முயன்றாள்.


யாராவது எதாவது கேட்டால், கேட்டதற்குப் பதில் சொன்னாள். இரவு உணவை அவளாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சென்று டிவியின் முன்பு அமர்ந்து சாப்பிட்டாள். அதைப் பர்ர்த்து பெற்றோர் மனது கொஞ்சம் சமாதானம் ஆகியது.


சாப்பிட்டு விட்டு வந்த ஸ்ரீகாந்த, சோபாவில் மகளின் அருகே உட்கார… அபர்ணா தந்தையின் மடியில் படுத்துக் கொண்டு டிவி பார்த்தாள். சுகன்யா கணவரிடம் ஜாடை காட்டிக் சிரித்தார்.


“நீ என் பெண்ணை ரொம்ப வம்பு இழுக்கிற… நல்லாயில்லை சொல்லிட்டேன்.” என்றதும்,


“ஆமாம் பா… உங்க பொண்டாட்டி கொஞ்சம் ஓவரா தான் போறாங்க. சொல்லி வைங்க.” என்றாள் மகளும்.


“ஓ… நீ உங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி குறை சொல்றியா? நான் உன்னைப் பத்தி சொல்லட்டுமா?” என்றபடி சுகன்யா வந்து எதிரில் இருந்த சோபாவில் அமர…அபர்ணா அவரைப் பார்த்து உதடு சுழித்தாள்.


“உங்க பொண்ணுக்கு ரொம்ப வக்காலத்து வாங்குறீங்களா… அவ எங்க வேலைக்குப் போறான்னு கேளுங்க.”


ஸ்ரீகாந்த மகளைப் பார்க்க… அபர்ணா சோம்பல் முறிக்க…. மேலும் தொடர்ந்த சுகன்யா, “எந்தக் குடும்பத்தோட சாவகசமே வேண்டாம்ன்னு நினைச்சோமோ, அங்கேயே வேலைக்குச் சேர்ந்திருக்கா… எதுக்குன்னு கேளுங்க?” என்றார்.  


“நான் என்ன ராம்மோட ஆபீஸ்லையா வேலை பார்க்கிறேன். அகிலாவோட ஆபீஸ்ல தானே… இதுல நீங்க டென்ஷன் ஆக என்ன இருக்கு?”


“உனக்கு ஒரு டென்ஷனும் இல்லை, எல்லாம் எங்களுக்குத்தான். உனக்கு வேலைக்குப் போக வேற இடமே இல்லையா? அங்க ஏன் போன?”


“நீங்கதானே சொன்னீங்க மா, அத்தையால அந்தக் குடும்பமே சிதைஞ்சு போச்சுன்னு… அதுதான் என்னால முடியுற வரை சரி செய்யலாமேன்னு நினைச்சேன்.”


“அதை ஏன் நீ செய்யனும்? நமக்கு அதுக்கும் என்ன சம்மந்தம்?”


“எனக்குச் சம்மதம் இருக்கிறதா நினைச்சுத்தானே… ராம் என்னை மறுத்தார். அதையேத்தானே அவர் குடும்பமும் நினைச்சது. நீங்களும் அதைதான் சொன்னீங்க.”


“அத்தை செஞ்ச தவறுல எனக்கும் பங்கு இருக்கும்ன்னு நீங்க எல்லாம் நினைக்கும் போது…. அப்ப சரி செய்யுற உரிமையும், கடமையும் எனக்கு இருக்கு.”


மகள் பேசுவதில் இருந்த நியாயம் பெற்றோருக்குப் புரிந்தது.


“ஆனா நீ இதுல என்ன செய்ய முடியும் அபர்ணா?”


“என்னால அகிலாவையாவது கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்க முடியும். கார்த்திக் ரொம்ப நல்லவங்க… அவங்க ரெண்டு பேரும் சேரணும்.”


“நிஜமாவே நீ அதுக்காக மட்டும்தான் அங்க போறியா?”


“நீங்க எல்லோரும்தான், நான் ராம்மை கல்யாணம் பண்ணிகிறது நியாயம் இல்லை… அது ஸ்வர்ணா அத்தைக்குச் செய்யுற துரோகம்னு நினைக்கிறீங்களே…”


“அப்புறம் நான் மட்டும் வேற நினைச்சு என்ன ஆகப் போகுது?”
இதைச் சொல்லும் போது, அபர்ணா குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை… எல்லாவற்றையும் வெறுத்து விட்டது போல் பேசினாள். அதை உணர்ந்த பெற்றோர் வருந்த, அருண் உற்ச்சாகமாக வேறு சொன்னான்.


“ஸ்வர்ணா அத்தை அபர்ணாவை மருமகளா ஏத்துக்கிட்டா… வேற யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க இல்ல…” என்றதும், அபர்ணா திரும்பி தன் தம்பியை முறைக்க…


“டேய் ! அது எல்லாம் கனவுல கூட நடக்காது. போய் வேற வேலையைப் பாரு.” என்றபடி சுகன்யா எழுந்து செல்ல…


“விடு அப்பு… நீ மருமகளா வர அந்த வீடு கொடுத்து வைக்கலை….” என அருண் தன் தமக்கையைத் தேற்ற…


“ஆமாம் டா ஐஸ்… லாஸ் அவங்களுக்குத்தான் நமக்கு இல்லை.” என்ற அபர்ணாவும் புன்னைத்தாள்.


“ஒரு என்டர்டைன்மென்ட் சேனல்லை போய் வேண்டாம்ன்னு சொல்றாங்களே… நீ இருந்தா வீடு எப்படி ரகளையா இருக்கும்ன்னு அவங்களுக்குத் தெரியலை அப்பு.”


“ம்ம்…. ஆமாம் ஐஸ். அவங்க எல்லாம் வீடு நிறையப் பணத்தை வச்சிக்கிட்டு… நிம்மதி இல்லாம இருக்கிற கூட்டம். எனக்கு அந்த மாதிரி வீட்டுக்கு போகவே வேண்டாம்.”


“கரெக்ட் அப்பு…. உனக்கு ஒரு ராஜகுமாரன் வருவான் பாரேன். இந்த ராம்மை விட அழகா, வசதியா…” என்றபோது அதற்கு மட்டும் அபர்ணா பதில் சொல்லவில்லை.


மௌனமாகிவிட்ட தமக்கையை அருண் பார்க்க… “நான் தூங்கப்போறேன்.” என்றுவிட்டு அபர்ணா அறைக்குள் சென்றாள்.


சுகன்யா தன் கணவரை வருத்தமாகப் பார்க்க… “உடனே எல்லாம் மறந்திட முடியாது சுகன்யா…இப்ப அவளுக்கு இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு புரிஞ்சிருக்கு…. இனி யதார்த்தத்தைப் புரிஞ்சிகிட்டு மெல்ல மாறுவா.” என்றார் ஸ்ரீகாந்த.


தன் கணவரின் நம்பிக்கையைத் தானும் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த சுகன்யாவும், அவர் வேலையைப் பார்க்க சென்றார்.

Advertisement