Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 15


இரண்டு நாட்கள் அபர்ணா யாரோடும் பேசவில்லை… எப்போதும் எதோ ஒரு யோசனையில் அவள் இருக்க…. ஸ்ரீகாந்த் சுகன்யாவிடம் மகளைப் பற்றி விசாரித்தார். சுகன்யா கணவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.


“அவளுக்கு டைம் கொடு சுகன்யா. அபர்ணா நல்ல முடிவு எடுப்பா.” என்றார் ஸ்ரீகாந்த நம்பிக்கையாக.


இருந்த குழப்பத்தில் சுகன்யா மறந்தே விட்டார். அன்று அபர்ணா மிஸ் இந்தியா போட்டிக்கான, அடுத்தச் சுற்றுக்காகப் பெங்களூர் செல்ல வேண்டிய நாள். மாநில அளவில் தேர்ந்து எடுக்கபட்டால், அடுத்து ஒரு மாதம் மும்பையில் பயிற்சிக்கு பிறகு இறுதி சுற்றுதான்.


மகள் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து, “இன்னைக்கு நீ பெங்களூர்ல இருக்கணுமே… நீ போகலை.” என்றதற்கு,


“நான் போட்டியில இருந்து விலகிட்டேன்.” என அபர்ணா சாதரணமாகச் சொல்ல…


“ஏன்? நீ தானே இஷ்ட்டபட்டு போன… இப்ப எதுக்காக விலகின?” சுகன்யா கோபப்பட….


“எனக்குப் போகப் பிடிக்கலை…அதனால போகலை.” அபர்ணாவின் அலட்சியமான பதிலில் சுகன்யாவின் ரத்த அழுத்தம் எகிற…


“திமிரா உனக்கு… நீயா எப்படி முடிவு பண்ணலாம்? எங்ககிட்ட சொல்லனும்ன்னு கூட உனக்குத் தோணலையா?” சுகன்யாவின் சுருதி ஏறுவதைக் கவனித்த ஸ்ரீகாந்த், “அவளுக்கு இஷ்ட்டம் இல்லைனா விடு சுகன்யா.” என்றார்.


“இதுக்காக எவ்வளவு பணம் செலவு பண்ணி இருக்கா தெரியுமா? பணம் மட்டுமா, இவ்வளவு நாள் பட்ட கஷ்ட்டம் எல்லாம் வீணா போச்சே.” சுகன்யா புலம்ப… அபர்ணா வெறுமனே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


மகளைக் கவனித்த ஸ்ரீகாந்த், “நீ முதல்ல உள்ள வா…” என மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார்.


அறைக்குள் வந்ததும், அவர் கையை உதறிய சுகன்யா, “அவளுக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது.” எனக் காட்டமாகச் சொல்ல…


“அவ இடத்தில இருந்து யோசிச்சு பாரு. அவளால எப்படி இப்ப இந்தப் போட்டிக்கு போக முடியும்? மருந்துக்குக் கூட அவ முகத்துல சிரிப்பு இல்லை. அவளால முடியாதுன்னு அவளுக்குத் தெரிஞ்சிருக்கும், அதுதான் போயிருக்க மாட்டா.”


“பெரிய தெய்வீக காதலா? எதுக்கு இப்போ இவ்வளவு சோகம்.”


“அவளுடைய வலி அவளுக்கு… நீ இப்படிப் பேசுறது நல்லா இல்லை சுகன்யா.”


“அவளுக்கு ஒரு மாற்றமா இருக்கும்ன்னு நினைச்சேன். அவ எல்லாத்தையும் மறந்திட்டு சந்தோஷமா இருக்கணும்.” சொல்லும் போதே அவர் குரல் தழுதழுக்க…


“கண்டிப்பா சந்தோஷமா இருப்பா… கொஞ்சம் பொறுமையா இரு.” என மனைவிக்கு ஸ்ரீகாந்த் ஆறுதல் சொன்னார்.


அபர்ணா எப்போதும் போல் கல்லூரிக்கு சென்று வந்தாள். ஆனால் பழைய துள்ளளோ மகிழ்ச்சியோ இல்லை. வீட்டினர் அவளுக்கு எவ்வளவோ ஆறுதலாக இருக்க முயன்றனர். ஆனால் அவள் அதற்கு இடம் கொடுக்கவே இல்லை.


நித்யாவின் குழந்தை பெயர் சூட்டு விழாவுக்கு, சுஜாதா வீட்டுக்கு வந்து அழைத்ததால்… அபர்ணாவோடு சுகன்யாவும் சென்றார். ஒரு நட்ச்சத்திர ஹோட்டலில் விழா நடந்தது.


அங்கே சென்ற பிறகு அபர்ணா கொஞ்சம் பரவாயில்லை. நித்யாவோடும், கார்த்திக்கோடும் வாயடித்துக் கொண்டு இருந்தாள்.


“ஏன் போட்டியில இருந்து விலகின?” நித்யா கேட்க… அபர்ணா பதில் சொல்லாமல் குழந்தையைக் கொஞ்ச…


“வேற என்ன? கொழுப்பு” என்றான் கார்த்திக்.


அபர்ணா வேண்டுமென்றே ஈ என்று இளித்துக் காட்டினாள்.
“அப்படியே போட்டேனா தெரியும்.” கார்த்திக் விடுவதாக இல்லை.


“நான் போய்த் தோத்திருந்தா…அப்படி நினைச்சிக்கோங்க.” என்றாள் அபர்ணா.


உணவு நேரத்தில் ராம் உள்ளே நுழைந்தான். அபர்ணா அவனைக் கவனிக்கவில்லை. அவனும் அவளைப் பார்க்கவில்லை. குழந்தைக்கு வாங்கி வந்த நகையைக் கொடுத்தான்.


அவனால் அதிக நேரம் இருக்க முடியாது எனத் தெரிந்த கார்த்திக், அவனைச் சாப்பிட அழைத்துச் சென்றான். வழியில் யாரோ அவனிடம் பேச… “நீ போ வரேன்.” என ராம்மை அனுப்பி வைத்தான்.


ராம் சாப்பிட சென்றவன், தட்டை எடுக்கக் கைநீட்ட… அதே சமயம் மறுபக்கம் வந்த அபர்ணாவும் தட்டை எடுக்கக் கைநீட்டினாள். பிறகே இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர். தீ சுட்டது போல் உடனே கையைப் பின்னால் இழுத்தவள், அங்கிருந்து வேகமாக விலகி சென்றாள்.


அவள் அப்படிச் செய்ததும் ராம்மிற்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. நீ இதற்குத் தானே ஆசைபட்டாய் எனக் கேலி செய்த மனதை அடக்க முடியாமல் தவித்தான். அதற்குள் அங்கே வந்துவிட்ட கார்த்திக், “நீ சாப்பிடலை?” எனக் கேட்டதும், ராம் அவனுடன் சென்றான்.


இருவரும் தேவையானதை எடுத்துக் கொண்டு தள்ளி சென்றனர். கார்த்திக்கோடு பேசினாலும், ராம்மின் விழிகள் அபர்ணாவை தேடியது. அவள் ஒரு சேரில் அவனுக்கு முதுகு காட்டி அமர்ந்து இருந்தாள்.


கார்த்திக் எங்கே என்று கேட்ட மாமியாரிடம், அவன் ராம்முடன் இருப்பதாக நித்யா சொல்ல… அப்போது அருகில் இருந்த சுகன்யா, ராம்மின் பெயரை கேட்டதும் ஆர்வமானவர், “ராம் யார்?” என்று நித்யாவிடம் கேட்க… அவள் அங்கிருந்தே காட்டினாள்.


சிறிது நேரம் வேறு பேசிக்கொண்டு இருந்த ராம், “என்ன உன்னோட ப்ரண்ட் மிஸ் இந்தியா ஆகிட்டாங்களா?” என அபர்ணாவை கண்களால் காட்டிக் கேட்க…


“எங்க? அவதான் போட்டியில இருந்து விலகிட்டாளே.” என்றான் கார்த்திக்.


“ஏன்?”


“தெரியலை… எதுவும் சொல்ல மாட்டேங்கிறா. கொஞ்ச நாளா ஒருமாதிரி இருக்கா. பழைய அபர்ணா இல்லை.”


கார்த்திக் சொன்னதைக் கேட்டதும் ராம்மிற்கு வருத்தமாக இருந்தது. அவன் அபர்ணாவை பார்த்தான். தூரத்தில் இருந்து அவனைப் பார்த்துக் கொண்டே இருந்த சுகன்யாவிற்கு, அவன் அடிக்கடி அபர்ணாவை பார்ப்பதும் கண்களில் படாமல் இல்லை. அவர் திரும்பி மகளைப் பார்க்க…. அவள் இறுகி போய் அமர்ந்து இருந்தாள்.


அன்று இரவு உணவு நேரத்தில் கணவருக்குப் பரிமாறிக்கொண்டிருந்த சுகன்யா, “நான் இன்னைக்கு அந்த ராம்மை பார்த்தேன். அப்படியே அவங்க அப்பாவை பார்த்த மாதிரி இருக்கு. அவனுக்கும் அவங்க அப்பா புத்தி தானே இருக்கும். இவனும் ஒரு பெண்ணோட நிருத்திடுவான்னு சொல்ல முடியுமா?” என மகளின் முகத்தை ஓரக்கண்ணால் ஆராய்ந்தபடி சொல்ல… அபர்ணா உடனே முகம் மாறினாள்.


“இப்ப நீங்க எதுக்கு அவங்களைப் பத்தி பேசுறீங்க?” அவள் காட்டமாகக் கேட்க,


“அது என்னோட கருத்து நான் சொல்றேன், உனக்கு என்ன வந்தது?” எனச் சுகன்யா பதிலுக்குக் கேட்டார்.


“அவங்க அம்மா பட்ட கஷ்ட்டத்தைக் கூட இருந்து பார்த்திருக்காங்க. அதே கஷ்ட்டத்தை அவங்க இன்னொரு பொண்ணுக்கு தர மாட்டாங்க.” என உறுதியாகச் சொன்னவள், அங்கிருந்து எழுந்து சென்றாள்.


ஸ்ரீகாந்த மனைவியை முறைத்தார். “நீ இப்ப எதுக்கு அவளைத் தேவையில்லாம வம்பு இழுக்கிற?”


“உங்களுக்குத் தெரியாது, இன்னைக்கு அந்த ராம்மை பார்த்ததும் அவ எப்படி இருந்தா தெரியுமா?”


“என் பொண்ணு படுற கஷ்ட்டத்தை என்னால பார்க்க முடியலை. அவங்க மட்டும் நம்ம அபர்ணாவை நீலீமாவோட சேர்த்து பார்க்கும் போது, நானும் ராம்மை அவங்க அப்பா மாதிரி தானே நினைப்பேன்.”


“நம்ம வீட்டு பொண்ணு மட்டும்தான் தப்பு பண்ணாளா…. அவங்க பையன் ஒன்னும் தப்பே பண்ணலையா… அவருக்கு எங்க போச்சு அறிவு? பொண்டாட்டி பிள்ளைங்களைப் பத்தி அப்ப அவரு யோசிச்சாரா?”

“அன்னைக்கு அந்தப் பாட்டி கோவில்ல வச்சு என்கிட்ட எப்படிப் பேசினாங்க தெரியுமா? என் பொண்ணுக்கு எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கதான் தெரியும். யாரையும் கஷ்ட்ட்படுத்த தெரியாது.”


“என்னைச் சொல்லணும். நான் ஏன் அபர்ணாவை தனியா இந்தியா அனுப்பினேன். அவ அந்த வீட்டுக்கு போகாம இருந்திருந்தா… அவளுக்கு ராம் யாருன்னே தெரிஞ்சிருக்காது.”


சுகன்யா படபடவெனப் பொரிந்துவிட்டு உட்கார்ந்து அழுந்தார். “சுகன்யா ப்ளீஸ்… இப்படி அழாத கஷ்ட்டமா இருக்கு. எல்லாம் சரி ஆகிடும் நம்பு. அபர்ணா இப்படியே இருக்க மாட்டா… காலம் எல்லாத்தையும் மாற்றும்.”


அப்பா அம்மா பேசுவது அபர்ணாவுக்குக் கேட்காமல் இல்லை. தன்னால் பெற்றவர்கள் வருந்துகிறார்கள் எனப் புரிந்தது. அதனால் மறுநாளில் இருந்து இயல்பாக இருக்க முயன்றாள். அதைக் கவனித்த சுகன்யாவும் சற்று நிம்மதி அடைந்தார்.


“எனக்குக் காலேஜ் மத்தியானம் முடிஞ்சதும், நான் வேலைக்குப் போகப் போறேன்.” என அவள் அறிவித்த போது… பெற்றோர் இருவரும் சந்தோஷமேபட்டனர்.


அவள் வேறு எதிலாவது கவனம் செலுத்தினால்… அவளுக்கு நல்லது என நினைத்து. ஆனால் அவள் எங்கே வேலைக்குப் போகப் போகிறாள் எனத் தெரிந்தால்… இந்தச் சந்தோஷம் நிலைக்குமா தெரியவில்லை.


அஞ்சலி விஷயம் தெரிந்ததில் இருந்து நீலீமா, அவளைத் தனியாக எங்கும் விடுவது இல்லை. கல்லூரிக்கு கூடக் காரில் டிரைவர் போட்டே அனுப்பி வைத்தாள். ஆனால் அஞ்சலி இன்னும் உமேஷோடு தொடர்பில் இருந்தாள்.


முன்பு போல அவனோடு தனியாக எங்கும் வெளியில் செல்லவில்லை. அதற்குக் காரணம் நீலீமா இல்லை. ராம்மிற்குத் தெரிந்தால்… தொலைத்து விடுவான் எனப் பயந்தே சற்று அடங்கி இருந்தாள்.

அன்று அபர்ணாவின் கல்லூரி ஆண்டு விழா, சிறப்பு விருந்தினராக வந்த்திருந்தது, ஆதி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் எம்.டி ஆதித்யா. நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தது அபர்ணா.


சோனாவின் திருமணத்தில் சந்தித்த பிறகு இன்றுதான் அவளை மீண்டும் சந்திக்கிறான். விழாவுக்கான பிரத்யேக ஆடையில்… சரளமான ஆங்கிலத்தில்… அவள் அரங்கத்தில் இருந்த அனைவரையுமே கட்டி வைத்திருந்தாள்.


சாதரணமாக இதுபோன்ற விழாக்களில் பார்வையாளர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இங்கே அமைதியாகக் கவனித்துக் கொண்டு இருந்தது. ஆதியாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது.


அவனைப் பேச அழைத்த போது… “எப்படி இந்தப் பியுட்டி பேசும்போது அமைதியா இருந்தீங்களோ… அதே மாதிரி நான் பேசும் போதும் இருந்தா நல்லா இருக்கும்.

நான் வளவளன்னு பேசி உங்க பொறுமையைச் சோதிக்க மாட்டேன். அவங்க அளவுக்கு அழகா பேசலைனாலும், நானும் நல்லாத்தான் பேசுவேன்.” என அவன் ஆரம்பத்திலேயே கலகலப்பாக ஆரம்பிக்க…. பார்வையாளர்களுக்கும் அவன் பேசுவது சுவாரசியமாக இருந்தது.


அவன் மேற்கொண்டு பேசியதும் ரசிக்கும்படிதான் இருந்தது. அபர்ணாவுக்கு உண்மையில் அவனை ஏற்கனவே பார்த்தது நினைவு இல்லை. அன்றைக்கு அவள் கவனம் எல்லாம் ராம்மின் மீதுதான் இருந்தது.


இது போன்ற விழாக்களுக்கு வந்தால்….. சிறப்பு உரை ஆற்றிவிட்டு உடனே ஆதித்யா கிளம்பி விடுவான். இன்று விழா முடியும் வரை இருந்தான்.
கடைசியாக அவன் கிளம்பும் போது விழா கமிட்டியில் இருந்தவர்கள் அவனை வழியனுப்ப செல்ல… அவர்களோடு அபர்ணாவும் செல்ல வேண்டியதாக இருந்தது.

“அபர்ணா நாம ஏற்கனவே பார்த்திருக்கோம்.” ஆதித்யா சொல்ல, அபர்ணா எங்கே எனத் தெரியாமல் விழித்தாள்.


“ராம்மோட ரிலேடிவ் தான நீங்க. அவன் தங்கை கல்யாணத்துல பார்த்திருக்கோம் நினைவு இருக்கா…”


“ஆமாம். நியாபகம் இருக்கு.” என்றவளுக்கு, ஆதித்யா மட்டும் அல்ல… அன்று ராம்மோடு வாயடித்ததும் நினைவு வர… உடனே முகம் மாறினாள்.


“என்னங்க ரொம்பச் சோகம் ஆகிட்டீங்க? என்னைப் பார்க்க உங்களுக்கு அவ்வளவு கஷ்ட்டமாவா இருக்கு.”ஆதித்யா கேலியாகக் கேட்க, “போதும் உங்க பேச்சுத் திறமை எனக்குத் தெரியும்.” என்ற அபர்ணா முகத்திலும் புன்னகை அரும்பியது.


“நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க, சிரிச்சுகிட்டே இருங்க.”


“எதுக்கு எல்லோரும் என்னை லூசுன்னு சொல்லவா…” இந்தமுறை அபர்ணா சொன்னதற்கு ஆதித்யா வாய்விட்டுச் சிரித்தான்.


பேசிக்கொண்டே காரின் அருகில் வந்திருந்தனர். மற்றவர்கள் ஆதித்யாவிடம் விடைபெற்று கிளம்ப… அபர்ணாவும் விடைபெறும் நோக்கத்தில் அவனைப் பார்க்க…


“நீங்க இப்ப வீட்டுக்குத்தானே போறீங்க. என்னோட வாங்க நான் டிராப் பண்றேன்.” என அழைத்தான்.


“தேங்க்ஸ், என் ப்ரண்ட்ஸ் எனக்காக வெயிட் பண்ணுவாங்க. நான் வரேன்.” எனச் சொல்லிவிட்டு அவள் திரும்பி நடக்க…


“நாம இன்னொரு நாள் கண்டிப்பா மீட் பண்றோம்.” எனச் சொல்லிவிட்டு ஆதித்யா சென்றான்.


செல்லும் வழியில் அபர்ணாவின் நினைவுகளே அவனை ஆட்கொள்ள…. அவளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான்.யாரிடம் அவளைப் பற்றிக் கேட்பது எனத் தெரியவில்லை.


அதற்கான வாய்ப்பு அவனுக்கு மறுநாளே கிடைத்தது, தெரிந்தவர் ஒருவர் திருமணதிற்குச் சென்றவன், அங்கே ப்ரகாஷ் நீலீமாவை சந்தித்தான்.


அவர்களோடு நின்று உணவு அருந்தும்போது, அவன் எதேட்ச்சையாக சொல்வது போல்… முன்தினம் அபர்ணாவை கல்லூரியில் சந்தித்தது பற்றிச் சொல்ல… நீலீமா முகத்தில் பிரகாசம்.


“அபர்ணா என்னோட அண்ணன் பொண்ணு.” என நீலீமா பெருமையாகச் சொல்ல…


“ஓ… அப்ப அவங்க அழகு உங்ககிட்ட இருந்து வந்ததுன்னு சொல்லுங்க.” என ஆதித்யா ஒரு ஐஸ் மலையைத் தூக்கி வைக்க…அதை கேட்டு நீலீமா முகம் சிவக்க… ப்ரகாஷ் அதைக் கண்டு ரசித்தார்.


“சொல்லப்போனா அபர்ணா என்னைவிட அழகு.” நீலீமா சொன்னதற்கு ஆமோதிப்பாகத் தலையசைத்த ஆதித்யா மனதில் வேறு எண்ணங்கள் உதித்தது.







Advertisement