Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் – 14


கணவர் நிற்பதை உணர்ந்த சுகன்யா, “கல்யாணம் எப்படி நடக்கும், கல்யாணம் மாதிரித்தான் நடக்கும்.” என விளையாட்டு போலவே சமாளிக்க முயன்றார்.


“ஜோக் அடிக்கிறதா நினைப்பா? சிரிப்பே வரலை…” அபர்ணா முகத்தைச் சுளிக்க…


“உனக்குக் காலேஜ்க்கு டைம் ஆகலையா… போய்க் கிளம்பு.” என்றவர், தன் கணவரின் பக்கம் பார்த்து, “உங்களுக்கும் டிபன் எடுத்து வைக்கட்டுமா..” எனக் கேட்க, “ம்ம்…” என முனங்கிவிட்டு ஸ்ரீகாந்த் அங்கிருந்து விலகி சென்றார்.


அபர்ணாவுக்கும் கல்லூரிக்கு நேரமானதால்… பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற எண்ணத்தில் அங்கிருந்து சென்றாள்.


காலை அலுவலகம் வந்த ராம், ப்ரகாஷ் வரும் நேரத்திற்கு, எதோ வேலை இருப்பது போல்… தன் அறையில் இருந்து வெளியே வந்து நின்று கொண்டான்.


வழக்கம் போலவே பிரகாஷும் நீலீமாவும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். நீலீமா சொன்ன எதற்கோ ப்ரகாஷ் சிரித்தபடி வந்தார். ‘அஞ்சலி விஷயம் தெரிந்திருந்தால்… இவர் இப்படிச் சிரிச்சிட்டு இருப்பாரா?’ எனக் கேள்வி ராம்முக்கு எழுந்ததும், நீலீமாவை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான்.


அவன் அவளை எப்போதும் நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். இன்று அவன் பார்வையில் இருந்த எதோ ஒன்று நீலீமாவுக்குப் பயத்தைக் கொடுக்க… அவள் மீண்டும் தன் கணவனின் பக்கம் பார்வையைத் திருப்பினாள்.


அன்று ஒரு புது நிறுவனம், தரையில் போடும் டைல்ஸ் கற்களை எடுத்துக் கொண்டு அலுவலகம் வந்திருந்தனர். ப்ரகாஷ் அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தார். உடன் நீலீமாவும் இருந்தாள்.


அவர்கள் சென்றதும், அந்த டைல்ஸ் கற்களைக் கையில் எடுத்த நீலீமா, “பார்க்கவே ரொம்ப ரிச்சா இருக்கு. இப்ப நாம பண்ணிட்டு இருக்க ப்ராஜெக்ட்க்கு யூஸ் பண்ணிக்கலாம்.” என்றாள். பிரகாஷும் சரி என்றார்.


மீட்டிங் ஹாலில் இருந்துதான் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே வந்த ராம், டைல்ஸ் ஒன்றை கையில் எடுத்து பார்த்தவன், அதைக் கீழே போட… அது இரண்டாக உடைந்துவிட்டது. அவன் ஒன்றும் பலமாகக் கூடப் போடவில்லை… சாதாரணமாகத்தான் விட்டெறிந்தான்.அதற்கே உடைந்து விட்டது. ராம் நீலீமாவை கேலியாகப் பார்க்க… அவள் முகம் கருத்தாள்.


“அழகா இருக்கிறது முக்கியம் இல்லை, தரமானதாவும் இருக்கணும்.” என ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி சொன்னவன், “உங்க ஆலோசனை எல்லாம் வீட்டோட நிறுத்திக்கோங்க. இங்க கொண்டுட்டு வந்தா… நான் சும்மா இருக்க மாட்டேன்.” என அவன் நீலீமாவை எச்சரிப்பது போல் பேச…


“ராம், இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுற? அது நீலீமாவோட கருத்து, நாம எப்படியும் தரத்தை பரிசோதனை பண்ணித்தான் பார்க்க போறோம்.”


“உங்களுக்கு அது நியாபகம் இருந்த சரிதான்.” என்றுவிட்டு அவன் வெளியே செல்ல… இன்று இவனுக்கு என்ன ஆனது என்பது போல் ப்ரகாஷ் பார்த்தார்.


“அவன் எப்படி என்கிட்டே அப்படிப் பேசலாம்?”


“உனக்குத் ராம் பத்தி தெரியும். இங்க வேலையா நினைச்சு அவன் எதையும் செய்யமாட்டான். இது அவனோட பேஷன். இதுல ஒரு சின்னக் குறை வந்தாக் கூட அவனால பொறுத்துக்க முடியாது.”


“அதுக்காக அப்படிப் பேசுவானா?”


“நீ இங்க கணக்கு சரி பார்ப்ப… அதோட நிறுத்திக்கோ… இதுல எல்லாம் நீ தலையிடாத.” எனச் சொல்லிவிட்டு ப்ரகாஷ் எழுந்து செல்ல… நீலீமாவுக்கு விழுந்த முதல் அடி இது.


அந்த வாரம் வியாழக்கிழமை சுகன்யா சாய் பாபா கோவிலுக்குச் சென்றவர், சாமி தரிசனம் செய்துவிட்டு, படி இறங்கிகொண்டு இருந்தார். நிறையப் படிகள் இல்லை… சலவைக் கற்களால் ஆன சிறிய படிகட்டுகள்தான்.


அப்போது அவர் எதிரே வயாதான பெண்மணியும், நடுத்தர வயதில் ஒரு பெண்மணியும் படி ஏறிக்கொண்டு இருந்தனர். அதில் வயதான பெண்மணி நடை தடுமாறி விழப் போக…. சுகன்யா வேகமாகச் சென்று அவர் விழாமல் தாங்கி பிடித்தார். பின் அவரும் சேர்ந்து அந்தப் பெண்மணி படி ஏற உதவி செய்தார்.
மேலே வந்ததும் அங்கிருந்த கற்களால் ஆன இருக்கையில் அவரை உட்கார வைத்தனர்.


“ரொம்ப நன்றி.” என்றவரை பார்த்த சுகன்யா திடுக்கிட்டுப் போனார். அது ப்ரகாஷின் முதல் மனைவி ஸ்வர்ணா என அப்போதுதான் அவருக்கு அடையாளம் தெரிந்தது.
அதற்குள் உட்கார்ந்திருந்த அகிலாண்டேஸ்வரிக்கும் சுகன்யாவை அடையாளம் தெரிந்து விட… அவர் முகம் மாறியது.


ப்ரகாஷ் நீலீமா விவகாரம் தெரிந்த போது, அவர் நீலீமாவை பற்றி விசாரித்து ஸ்ரீகாந்த, சுகன்யா இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து பேசினார்.


அப்போது அங்கே வந்த ஸ்வர்ணாவின் கண்கள் அழுதழுது வீங்கி இருந்தது. அவரைப் பார்க்கவே சுகன்யாவுக்குக் கஷ்ட்டமாக இருந்தது. அந்த நிலையிலும், இவர்கள் எதாவது நமக்கு நல்லது செய்து விடமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அந்த விழிகளில் தெரிந்தது.


கண்டிப்பாக நாங்கள் எதாவது செய்கிறோம் எனச் சொல்லிவிட்டுத்தான் கணவன் மனைவி இருவரும், நீலீமாவை பார்க்க சென்றனர். பிறகுதான் நீலீமா கர்ப்பமாக இருப்பது இவர்களுக்குத் தெரியம். இருந்தாலும் தங்கையைத் தன்னுடன் வந்துவிடும்படி ஸ்ரீகாந்த அழைத்துப் பார்த்தார்.


ப்ரகாஷ் நீலீமாவை விட்டுத்தர மாட்டேன் எனப் பிடிவாதம் பிடித்தார். என்ன ஆனாலும் தான் ஸ்வர்ணாவுடன் சேரப்போவது இல்லை என உறுதியாக இருந்தார்.


இவர்களால் முடிந்த மட்டும் பேசி பார்த்துவிட்டு, பின்னர் ஒன்றும் முடியாமல்தான் ஸ்ரீகாந்தும், சுகன்யாவும் இந்த விஷயத்தில் இருந்து கனத்த மனதுடன் விலகினர்.


அதன் பிறகு இத்தனை வருடங்கள் சென்று இன்றுதான் மீண்டும் இவர்களைச் சந்திக்கிறார். அவர்களைப் பார்த்ததும் சுகன்யாவுக்கு மிகவும் குற்ற உணர்வு ஆகிவிட்டது.


“என்னை மன்னிச்சிடுங்க மா…” சுகன்யா சொல்ல… ஸ்வர்ணாவுக்கு இன்னும் அவர் யார் என்று தெரியவில்லை. அதனால் அவர் புரியாமல் பார்க்க…


“எதுக்கு மன்னிப்புக் கேட்கிற சுகன்யா? உன் நாத்தனார் இந்த அப்பாவி பெண்ணின் வாழ்க்கையைக் கெடுத்ததுக்கா… இல்லை இப்ப உன் பொண்ணு மிச்சம் மீதி இருக்கிற இவளோட சந்தோஷத்தையும் அழிக்கப் பார்க்கிறாளே அதுக்கா?”


அகிலாண்டேஸ்வரி நிதானமாகக் கேட்க, கேட்ட சுகன்யவுக்குத்தான் தலை சுற்றி விட்டது. முதலில் ஒன்றும் புரியாமல், அவரும் அந்தக் கல் பெஞ்ச்சிலேயே அமர்ந்து விட்டார்.


“ராம் உங்க பையனா?” அவர் ஸ்வர்ணாவை பார்த்து கேட்க. அதற்குள் சுகன்யா யார் என்று புரிந்து கொண்ட ஸ்வர்ணாவும் ஆம் என்றார்.


“கடவுளே ! இதனால்தான் அபர்ணா ராம் யார் என்று தன்னிடம் சொல்லவில்லை என நினைத்தவர், “அம்மா, நீங்க முன்னாடி என்கிட்டே ஒரு உதவி கேட்டீங்க. ஆனா அப்போ அதை என்னால செய்ய முடியலை… வெறும் எங்க பெண்ணா இருந்திருந்தா அடிச்சு கூட இழுத்திட்டு போயிருந்திருப்போம். எங்களுக்கு விஷயம் தெரிஞ்ச போது, எல்லாமே எங்க கை மீறி போயிடுச்சு.”

“இப்ப அப்படியில்லை… அபர்ணாதான் ராம்மை விரும்புறேன்னு சொல்லிட்டு இருக்கா… ஆனா ராம் சொல்லலை.”


“அபர்ணாவுக்கு அவங்க அத்தையைப் பத்தி எதுவும் தெரியாது. தெரிஞ்சா அவ கண்டிப்பா உங்க நிலைமையைப் புரிஞ்சிப்பா.. நான் அவகிட்ட பேசுறேன்.”


“என் பெண்ணால, உங்களுக்கு எல்லாம் ரொம்ப மன உளைச்சலா இருந்திருக்கும். அதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுகிறேன்.” என்றவர், மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்.
வழியெங்கிலும் இதை அபர்ணாவிடம் எப்படிச் சொல்லப் போகிறோம் என யோசித்தபடி சுகன்யா சென்றார்.


நித்யாவுக்குப் பெண் குழந்தை பிறந்திருந்தது. அவளைப் பார்க்க அபர்ணா அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தாள். அவளைப் பார்த்தும் அதுவரை உடனிருந்த அவளது மாமியார், “அபர்ணா நீ கொஞ்ச நேரம் பார்த்துக்கோ, நான் நடந்திட்டு வரேன். ” என வெளியே சென்றுவிட்டார்.


“நீங்க ஆசைப்பட்டபடியே பெண் குழந்தை பிறந்திடுச்சு ஹாப்பியா?”


“ம்ம்… ரெண்டுமே பையன்னா இருந்தா போர். அதுவும் ரொம்ப அடிச்சிக்கோங்க. இதுங்களுக்கு யார் பஞ்சாயத்து பண்றது?”


நித்யா அலுத்துக்கொள்ள… அபர்ணா அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.


“எங்க அத்தை சொல்வாங்க, இவரும், கார்த்திக்கும் ரெண்டு பேருமே பையன் இல்லையா… எப்ப எவன் மண்டை உடையும்ன்னு பயந்திட்டே இருப்பாங்களாம்.”


“அவ்வளோ அடிச்சுப்பாங்களா ரெண்டு பேரும். ஆனா இப்ப பார்த்தா ரொம்பச் சாதுவா இருக்காங்க.”


“இப்ப ரெண்டு பேரும் ரொம்ப ஒத்துமைதான். கல்யாணம் பண்ணினாலும் தனிக்குடித்தனம் மட்டும் போயிட கூடாது. எப்பவும் ஒன்னத்தான் இருக்கனும்ன்னு ரெண்டும் பேசி வச்சிருக்கு.”


“நான் விளையாட்டுக்கு, உங்க அண்ணனை தனியா கூடிட்டு போறேன்னு சொன்னா, கார்த்திக்கு அப்படிக் கோபம் வரும். அதுக்கு மேல என் வீட்டுகாரருக்கு, தனிக்குடித்தனம் போகணும்ன்னா நீ தனியாத்தான் போகணும்ன்னு சொல்வார்.”


நித்யா சொன்னதைக் கேட்டு சிரித்த அபர்ணா, “கார்த்திக் ஒரு பெண்ணைச் சீரியஸா லவ் பண்றாங்கன்னா நம்பவே முடியலை இல்லை…” என்றாள்.


“எனக்கு அது யாருன்னு தெரியும்.” நித்யா சொல்ல, அபர்ணாவின் ஆர்வம் அதிகரிக்க…


“யாரு நித்யா அக்கா அது?” எனக் கேட்டாள்.


“அகிலான்னு நினைக்கிறேன்.”


அகிலாவின் பெயரைக் கேட்டதும், அபர்ணாவுக்கு ஆச்சர்யம் ஆகிவிட்டது.


“உங்களுக்கு ஆனா உறுதியா தெரியாது இல்லையா?”


“நீ நல்லா ரெண்டு போரையும் கவனி, கார்த்திக் அகிலா இருக்கிற இடத்தில தான் இருப்பான். ரெண்டு பேரும் தனியா நிறையப் பேசுவாங்க. அவங்களுக்குள்ள அப்படி என்ன இருக்கும் பேசிக்க… நீயே சொல்லு.”


‘சரி அப்படியே இருந்தாலும், உங்க ரெண்டு குடும்பத்துக்கும் நல்ல பழக்கம் இருக்கு. அகிலா ஏன் கார்த்திக் அண்ணாவை மறுக்கனும்.”


“அவளோட அப்பா அம்மா போல ஆகிடும்ன்னு பயப்படுறாலோ என்னவோ?”


“அவங்க டிவர்ஸ் பண்ணிக்கிட்டா… அதுக்காக எல்லோரும் அப்படியே இருப்பாங்களா என்ன?”


“அவங்க டிவர்ஸ் பண்ணலை அபர்ணா.” நித்யா சொல்ல, அபர்ணாவுக்கு முகம் மாறிவிட்டது.


“சாரி அபர்ணா, அவர் ரெண்டாவதா கல்யாணம் பண்ணிகிட்டது உன்னோட அத்தையை இல்லையா? ஆனா எனக்குத் தெரிஞ்சு அவருக்கு முதல் மனைவியோட டிவோர்ஸ் ஆகலை.”


“பிறகு எப்படித் தனது அத்தை அவரைத் திருமணம் செய்து கொண்டார்.” என நினைத்த அபர்ணாவுக்கு, அன்று புரியாத ராம்மின் பேச்சு இன்று புரிவது போல் இருந்தது.


அதற்கு மேல் யோசிக்க விடாமல், கார்த்திக்கும், அவனது அம்மா சுஜாவும் உள்ளே நுழைந்தனர்.


“இந்தா ஜூஸ் எடுத்துக்கோ.” எனச் சுஜா கொடுத்த ஜூசை அபர்ணா எடுத்துக் கொண்டாள்.


“இங்க பாருங்க நீங்க ரெண்டு பேரும்தான் சாட்சி. இப்ப இவங்க அண்ணாவுக்கும் ரெண்டு குழந்தைகள் வந்தாச்சு. இன்னும் ஆறு மாசம் முடிஞ்சதும், நான் இவனுக்குப் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவேன். இதுக்கு மேல என்னால பொறுத்திருக்க முடியாது.” எனச் சுஜா அழுத்தம் திருத்தமாகச் சொல்ல…


“எப்பப் பாரு கல்யாண பேச்சுதான். இதுக்குத்தான் வீட்டுக்கு வரவே பிடிக்கலை.” எனக் கார்த்திக் எரிச்சல்பட,


“பார்த்தியா இவனை… நான் இன்னும் எவ்வளவுநாள் பொறுத்திருக்கனும்ன்னு நினைக்கிறான். நான் சாகிற வரைக்குமா?” சுஜா ஆத்திரப்பட…


“அம்மா…” எனக் கார்த்திக்கும், “ஏன் அத்தை இப்படிப் பேசுறீங்க?…” என நித்யாவும் சொல்ல… சுஜா அங்கிருந்து வெளியே சென்றார்.

 


“நீ உன் காதலிக்காகக் காத்திருக்கலாம் கார்த்திக். ஆனா கொஞ்சம் உங்க அம்மாவை பத்தியும் யோசிச்சு பாரு.” என்றாள் நித்யா.


கார்த்திக் அங்கிருந்து செல்ல…. இதில் எதிலும் தலையிட முடியாமல் அபர்ணா பார்த்துக் கொண்டு இருந்தாள். சிறிது நேரம் சென்றே அவள் கிளம்பினாள்.


அபர்ணா அவளுக்கு இருந்த மற்ற வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பும் வழியில், கார்த்திக்கையும், அகிலாவையும் பார்த்தாள். கார்த்திக் தான் கோபமாகப் பேசிக்கொண்டு இருந்தான். அகிலா அவள் காரில் சாய்ந்து நின்று அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.


நித்யா சொன்னது சரிதான். கார்த்திக் விரும்புவது அகிலாவைத்தான் என இப்போது நன்றாகப் புரிந்தது. இருட்டு நேரம் என்பதால்… ஆட்டோவில் இருந்த அபர்ணாவை, அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.


“கார்த்திக்கை போய் ஏன் அகிலா மறுக்க வேண்டும்.” என யோசித்தபடி சென்றாள்.


வீட்டில் சுகன்யா மிகவும் சோர்ந்து போய் இருந்தார். “உடம்பு முடியலையா மா…” என அபர்ணாவும் திரும்பத் திரும்பக் கேட்டு விட்டாள். தற்கு அவர் சரியாகப் பதில் சொல்லவில்லை.


ஸ்ரீகாந்த் சாப்பிட்டுப் படுத்ததும், “உன்னோட பேசணும் அபர்ணா.” என்றபடி சுகன்யா வந்து அமர்ந்தார்.


“சொல்லுங்க மா…” என்றவள், மடிக்கணினியை மூடி வைத்தாள்.


“நீ ராம் யாருன்னு எனக்குச் சொல்லலை…. ஏன் மறைச்ச அபர்ணா?”


“உங்களுக்கு எப்பவுமே அத்தை வீடுனாலே அலர்ஜி… அதனாலதான் மா சொல்லலை…”


“அது தெரிஞ்சும் ஏன் அபர்ணா ராம் மேல அசையை வளர்த்துகிட்ட?”


“நான் அவங்களைப் பார்க்கும்போது எனக்கு அவங்க யாருன்னு தெரியாது மா… பார்த்ததும் எனக்கு அவங்களைப் பிடிச்சுது. அவங்களுக்கும் தான். ஆனா அப்புறம் அவங்க மனசை மாத்திகிட்ட மாதிரி என்னால மாத்திக்க முடியலை.”


“எதோ வலுவான காரணம் இருக்கப் போய்த் தானே ராம் உன்னை மறுக்கிறான். அது உனக்குப் புரியலையா?”


“முன்னாடி புரியலை, இப்ப கொஞ்சம் புரியுது. நீங்க அத்தையைப் பத்தி சொல்லாத வரை எனக்கு எதுவுமே முழுசா புரியாது.”


“உன் அத்தையைப் பத்தி நான் உன்கிட்ட தப்பா சொல்லக் கூடாது. ஆனா எனக்கு வேற வழியில்லை.” என்றவர், நீலீமா பிரகாஷை எங்கே சந்தித்தார், எப்படி அவர்கள் திருமணம் முடிந்தது என எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டு மகள் முகத்தையே பார்த்தார்.


கணவன் மனைவிக்கு இடையே மணமுறிவு ஏற்பட்டு, சட்டப்படி விவகரத்துச் செய்து, வேறு திருமணம் செய்து கொள்வது சாதரணமாக நடப்பதுதான். ஆனால் இங்கே அப்படி இல்லை… ப்ரகாஷ் ஸ்வர்ணா இடையே நீலீமா வந்ததினால்தான்… இந்தப் பிரிவு… அதுவும் சட்டப்படியானது அல்ல…


அபர்ணா சுவற்றை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து இருந்தாள். அவள் என்ன நினைக்கிறாள் என்றே சுகன்யாவுக்குப் புரியவில்லை. ஆனால் தன்னுடைய முடிவை அவளுக்குத் தெரியபடுத்தி விட வேண்டும் என நினைத்தார்.


“உன் அத்தையின் காதலால் ஒரு குடும்பமே உடைந்து போச்சு. திரும்ப நீ உன் பங்குக்கு அங்க எந்தக் குழப்பத்தையும் செய்யாத…. அதை நான் கண்டிப்பா அனுமதிக்க மாட்டேன்.”


“ஸ்வர்ணாவோட இடத்தில இருந்து யோசிச்சு பாரு. அவர் கணவரை பிரிய காரணமா இருந்த நீலீமா குடும்பத்துல இருந்து வர்ற பெண்ணை, எப்படி அவங்க மருமகளா ஏத்துக்க முடியுமா?”


“தன் அம்மாவை இன்னும் நோகடிக்க ராம்தான் விரும்புவானா. அவனால உன்னை எப்படிக் கல்யாணம் பண்ணிக்க முடியும் அபர்ணா. அதனாலதான் நீ யாருன்னு தெரிஞ்ச பிறகு அவன் விலகி இருக்கான்.”


“புரிஞ்சிக்கோ அபர்ணா, ராம் உனக்கு வேண்டாம்.”


அதுவரை எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டவள், “இதுல என்னோட தப்பு என்ன மா?” எனக் கண்ணீருடன் கேட்ட போது, சுகன்யாவின் தாய் உள்ளம் பதறவே செய்தது.


சுகன்யா பார்த்துக் கொண்டு இருந்தபோதே, அபர்ணா அங்கிருந்து எழுந்து சென்றாள். அவள் என்ன முடிவு எடுத்தாளோ?

Advertisement