Advertisement

பனி சிந்தும் சூரியன்

 

அத்தியாயம் 13


ஸ்ரீகாந்திற்கு இங்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. ஆனால் சிறிது நாட்கள் ஓய்விற்குப் பிறகு, வேலையில சேர்வதாக இருந்தார். அருண் கல்லூரியில் சேர்வதற்காகக் காத்திருந்தான்.


சுகன்யா குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வீட்டிலேயே இருந்து விட்டார். இங்கே வேலைக்கு எதுவும் முயற்சி செய்யவில்லை. அவரது அம்மாவும் உடன் இருந்தார்.


நீலீமா அவர்கள் வீட்டில் ஒருநாள் இவர்களுக்கு விருந்து கொடுத்தாள்.

அபர்ணாவை பார்த்ததும் அஞ்சலிக்கும் அழகி போட்டியில் பங்கேற்கும் ஆசை வந்தது. அவள் அதை வெளிபடுத்த, அவள் பெற்றோரும் அடுத்த வருடம் பங்கேற்க சம்மதம் கொடுத்தனர்.


அபர்ணா அடுத்தச் சுற்றிலும் முன்னேறி, தமிழ்நாட்டின் சார்பில் மிஸ். இந்திய போட்டியில் பங்கேற்கும் மூவரில் ஒருவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டாள்.


அதற்கு அடுத்து தென் இந்திய அளவில் நடக்கும் சுற்றிற்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.


அபர்ணாவை தவிர மற்ற அனைவரும் திருச்சிக்கு சென்று சில நாட்கள் தங்கி வர சென்றிருந்தனர். திருச்சிதான் அவர்களுது சொந்த ஊர்.


வழக்கம் போல் இரவு உணவு முடிந்ததும், மடிக்கணினியுடன் உட்கார்ந்த அபர்ணா, அவளது வேலையில் கவனமாக இருக்க… அவள் செல்போன் அழைத்தது.


எடுத்து பார்த்தால் தெரியாத எண். யாராக இருக்கும் என யோசித்தபடி எடுத்தவள், “ஹலோ…” எனக் குரல் கொடுக்க…


“அபர்ணா…” குரல் அழுத்தமாக வர, உடல் ஒருமுறை தூக்கிவாரி போட்டது. அடுத்த வார்த்தை கேட்டதும் மயக்கமே வந்துவிட்டது.


“நான் ராம்.”


நிஜமாக ராம் தானா என்ற சந்தேகத்தில் பேச்சே வரவில்லை.


“ஹலோ இருக்கியா?”


“இருக்கேன் சொல்லுங்க.”


“உங்க அப்பா, அம்மா யாரையாவது கூடிட்டு இந்த ஹோட்டல் வந்திடு.” என ஒரு நட்ச்சத்திர ஹோட்டலின் பெயரை சொன்னான்.


“எதுக்கு?”


“நீ வா சொல்றேன். உடனே வா…” என வைத்து விட்டான்.
எதற்கு இந்த நேரத்தில் வர சொல்கிறான், என ஒருமாதிரி படபடப்பு ஆகிவிட்டது.

 

வேகமாக உடையை மாற்றியவளுக்கு, பிறகுதான் வீட்டில் யாரும் இல்லை என்பது நியாபகம் வந்தது. போன் செய்வோமா என நினைத்தவள், வேண்டாம் அங்க போய்ப் பார்த்துக் கொள்ளலாம் எனக் கிளம்பி விட்டாள்.

 

இவள் ஹோட்டலை அடைந்தபோது தான், ராம்மும் தனது பைக்கில் உள்ளே நுழைந்தான். அவன் வண்டியை நிறுத்துவிட்டு வருவதற்காகக் காத்திருந்தவளின் பார்வை அவனிடமே.

 

வீட்டில் அணியும் எளிமையான ஆடையில் நடந்து வந்தான். அப்போதுதான் குளித்திருப்பான் போல… கேசத்தில் இன்னும் ஈரம் மிச்சம் இருந்தது. தாடையில் இருந்த லேசான தாடி, இன்னும் அவனின் வசீகரத்தை அதிகப்படுத்த… தூங்கும்போது கூட அழகா இருப்பான் போல என நினைத்துக் கொண்டாள்.  


இவளைப் பார்த்ததும், “உங்க வீட்ல யாரும் வரலை…” என எதிர்ப்பார்த்த கேள்வியை அவன் கேட்க,


“எல்லோரும் ஊருக்கு போயிருக்காங்க.” அவள் தயங்கியபடி சொல்ல, “சரி வா…” என அவளை அழைத்துக் கொண்டு நடந்தவன், வரவேற்பு பகுதியை அடைந்ததும், அங்கே நின்ற ஒருவனிடம் சென்று எதோ பேசிவிட்டு வந்தான்.


மின் தூக்கியில் நுழைந்து ஐந்தாவது தளத்தின் எண்ணை அழுத்தியவன், “அஞ்சலி இங்க ஒரு அறையில இருக்கா….” அபர்ணா எதற்கு என்பது போல் பார்க்க.. “தனியா இல்லை கூட ஒரு பையன் இருக்கான். ரொம்ப மோசமானவன்.” கேட்ட அபர்ணா அதிர்ச்சியில் விழிகளைப் பெரிதாக விரிக்க,


“கீழே பார்த்த இல்ல… என்னோட ப்ரண்ட். அவன்தான் எனக்குப் போன் பண்ணி சொன்னான்.”

 

“ரெஸ்டாரன்ட்ல தான் இருந்து பேசிட்டு இருந்திருக்காங்க. கிளம்பிடுவாங்கன்னு பார்த்தா…. அவன் இங்க ரூம் புக் பண்ணி இருக்கான் போல…  ரெண்டு பேரும் ரூமுக்கு போறதை பார்த்திட்டு எனக்குப் போன் பண்ணான்.”


என்ன டா இது? இப்படி ஒரு கேவலமான கதையா இருக்கு என அபர்ணா முகம் சுளிக்க…

“நீ அவளை அவங்க வீட்ல போய் விட்டுட்டு… இங்க என்ன நடந்ததுன்னு அவ அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு வா…”


“இதை நீங்களே பண்ணி இருக்கலாமே…”


“அஞ்சலி நான் சொன்னா கேட்க மாட்டா. அதோட நான் அவங்க கூடப் பேச மாட்டான்.”


யார் கூடப் பேசமாட்டான் என அபர்ணாவுக்கு இன்னும் புரியவில்லை… அதற்குள் ஐந்தாவது தளத்திற்கு வந்து, அந்த அறையின் முன் நின்றிருந்தனர்.


ராமிற்குக் கதவை தட்டவே சங்கோஜமாக இருக்க… இரண்டு முறை இப்படியும், அப்படியும் நடந்துவிட்டான். அவனைப் பார்த்து அபர்ணாவுக்கு இன்னும் படபடப்பு அதிகம் ஆகியது.


பிறகு முகத்தை அழுந்த துடைத்து விட்டு, அவன் கதவை தட்ட, கதவை திறக்க ஆனா சில நிமிடங்களுக்குள்.. உள்ளே என்ன நடக்கிறதோ என இருவருக்கும் படபடப்பு ஆகிவிட்டது.


கதவு திறக்கும் சத்தம் கேட்க, இருவரும் நிமிர்ந்து நின்றனர். கதவை திறந்தவனும் ராம்மை எதிர்பார்க்கவில்லை. அவன் அதிர்ந்து நிற்கும் போதே, ராம் அவனைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான். அபர்ணாவும் அவன் பின்னே சென்றாள்.


முன் அறையில்தான் அஞ்சலி இருந்தாள். அதைப் பார்த்ததும்தான் ராம்மிற்கு மூச்சே வந்தது.


“இந்த நேரத்தில இங்க என்ன பண்ற?”


அண்ணனை எதிர்ப்பார்க்காத அஞ்சலியும் அதிர்ந்துதான் போயிருந்தாள்.


“பேசிட்டு இருக்க வந்தேன்.”


“பேசிட்டு இருக்க ரூம் போடுவாங்களா?” ராம் இந்தக் கேள்வியைக் கேட்டதும், அஞ்சலிக்குக் கோபம் வந்துவிட்டது.


அவள் உண்மையாக உமேஷ் சொன்ன பொய்யை நம்பித்தான் வந்திருந்தாள்.


“நீங்க நம்பனும்ன்னு எனக்கு அவசியம் இல்லை. முதல்ல நீங்க யாரு என்னைக் கேள்வி கேட்க.” அஞ்சலி எடுத்தெறிந்து பேச…


“அபர்ணா, உன் அத்தைக்குப் போன் பண்ணி அஞ்சலி எங்கன்னு கேளு.” என்றான் ராம். அதைக் கேட்டதும் அஞ்சலியின் முகம் வெளுத்தது.


அபர்ணா தன் செல்லில் இருந்து நீலீமாவை அழைத்தாள்.  ஸ்பிகரில் போட்டுத்தான் பேசினாள்.


“என்ன அபர்ணா? இந்த நேரத்தில போன் பண்ற? எதவும் பிரச்சனையா?”


“இல்ல அத்தை, அஞ்சலிகிட்ட பேசணும், அவ நம்பர் எடுக்கலை…. அவகிட்ட கொடுக்கறீங்களா அத்தை.” என அபர்ணா தெரியாதது போலக் கேட்க,


“அவ ப்ரண்ட் வீட்டுக்குப் படிக்கப் போயிருக்கா…. காலையிலதான் வருவா.” என்றாள் நீலீமா.


“சரி அத்தை, நான் நாளைக்குப் பேசிக்கிறேன்.” என அபர்ணா போன்னை வைத்து விட்டாள்.


ராம் அஞ்சலியை முறைக்க…. உமேஷ் இப்போது சீறி எழுந்தான்.
“இங்க பாரு, இது எங்க பெர்சனல் விஷயம். நீ ஏன் தலையிடுற?”


ராம் வாயால் பதில் சொல்லாமல், உமேஷின் மூக்கில் ஒரு குத்து விட்டான். அவனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வர… அஞ்சலிக்கு இன்னும் கோபம் வந்தது.

“நீங்க யாரு அவரை அடிக்க…”


“நீ இங்க இருந்து கிளம்பலைனா, அவனுக்கு அடி விழுந்திட்டே இருக்கும். முதல்ல இங்க இருந்து கிளம்பு.” ராம் அஞ்சலியை பார்த்து சொல்ல..


“முடியாது. நீ சொல்றதை நான் கேட்க முடியாது.” எனப் பதிலுக்கு அஞ்சலி கத்த… அபர்ணாவுக்குப் படபடப்பாக இருந்தது.


“அஞ்சலி ப்ளீஸ் கத்தாத. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா அசிங்கமா இருக்காதா.” அபர்ணாவின் குரலில் பயம் இருக்க, ராம் அவளைப் பார்த்தான்.


அவள் அம்மாவோ, அப்பாவோ உடன் வருவார்கள், இவளை வரவேற்பு அறையில் விட்டுவிட்டு, அவர்களை அழைத்து வந்து பேசலாம் என்றுதான் நினைத்து இருந்தான்.


அபர்ணாவை பார்க்க அவனுக்குப் பாவமாக இருக்க… “அஞ்சலி முரண்டு பண்ணாம கிளம்பு… இல்லைனா உங்க அம்மாவை வரவைக்க வேண்டியதா இருக்கும்.” என்றதும், அஞ்சலி உமேஷை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவள் பையை எடுத்துக் கொண்டு வந்தாள்.


இவர்கள் வெளியேறியதும், உமேஷ் கோபத்தில் கதவை அறைந்து சாற்றினான்.


செல்லும் வழியில் ராம் அஞ்சலியை அர்ச்சனை செய்து கொண்டே வந்தான்.

“உனக்கு எதாவது மயக்க மருந்து கலந்து கொடுத்து, அவன் உன்னை எதாவது பண்ணியிருந்தா… என்ன ஆகும் உன் நிலைமை? கொஞ்சமாவது அறிவு வேண்டாம். படிச்சிருக்கத் தான… எத்தனை நியூஸ் இதுமாதிரி வருது.”


“பகல்ல பேச முடியாதா உனக்கு. ராத்திரியில ரூம் போட்டுத்தான் பேசணுமா.”


“முதல்ல சித்தப்பாவைதான் கூப்பிட நினைச்சேன். ஏற்கனவே அந்த வீட்ல யாரும் உன்னை மதிக்க மாட்டாங்க. இன்னும் கேவலமா போயிருக்கும் உன் நிலைமை.”

“அதுக்குத்தான் உன் மாமா குடும்பத்துல இருந்து வர சொன்னேன். இனியாவது ஒழுங்கா இரு.” என்றான்.


ஹோட்டலில் இருந்த டாக்ஸியை அழைத்து, அஞ்சலி ஏறுவதற்காகக் காத்திருந்தவன், அபர்ணா ஏறும் முன் அவள் கைபிடித்து நிறுத்தினான்.


அவள் என்ன என்பது போலப் பார்க்க, அங்கிருந்து விலகி நடந்தவன், உடன் வந்தவளிடம், “இங்க என்ன நடத்துச்சுன்னு உன் அத்தை மாமாகிட்ட சொல்லு. ஆனா நான் இருந்ததா சொல்லாத… நீயே பார்த்ததா சொல்லு.”


‘ஏன் இவன் இருந்ததைச் சொல்லக் கூடாது.’ எனக் கேள்வி தோன்றினாலும், அவன் எதோ காரணமாகச் சொல்கிறான் என உணர்ந்தவள், சரி எனத் தலையாட்டிவிட்டு சென்றாள்.


அபர்ணா இந்த நேரத்திற்கு எதற்குப் போன் செய்து அஞ்சலியை கேட்கிறாள் என நீலீமாவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவள் மகளின் எண்ணிற்கு முயன்றாள். அஞ்சலி எடுக்கவில்லை.


அபர்ணாவும், அஞ்சலியும் டாக்ஸியில் வந்து இறங்க, சத்தம் கேட்டு நீலீமா ஜன்னல் வழியாகப் பார்த்தாள். இருவரும் சேர்ந்து வரும்போதே… எதோ நடந்திருக்கிறது எனப் புரிந்தது. உள்ளே ப்ரகாஷ் மது அருந்திக்கொண்டு இருந்தார்.


அவரின் கவனம் சிதையாமல் வெளியே வந்தவள், வீட்டின் வாயிலுக்கு முன்பே இருவரையும் தடுத்து நிறுத்தி, என்ன நடந்தது எனக் கேட்க, அபர்ணா நடந்ததைச் சொல்ல…. அஞ்சலிக்கு ஒரு அறை கொடுத்தவள், “உள்ளே போ.” என்றாள்.


அஞ்சலி உள்ளே சென்றதும், “சரி நான் பார்த்துகிறேன் அபர்ணா. நீ வேற யார்கிட்டயும் சொல்லாத,” என்றவள், உள்ளே சென்று விட்டாள். அபர்ணாவை உள்ளே கூட அழைக்கவில்லை. பிரகாஷிற்கு விஷயம் தெரிவதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அதனால் அபர்ணாவை உள்ளே அழைக்கவில்லை.


அப்போதே நேரம் பத்து மணிக்கும் மேல். இப்போது எப்படிச் செல்வது, வந்த டாக்ஸி வேறு சென்றுவிட்டது. அபர்ணா வெளியே நடந்தபடி, செல்லில் டாக்ஸிக்கு முயல…. ராம் சற்று தள்ளி தனது பைக்கில் அமர்ந்து கொண்டு இருந்தான். அவன் அவர்களை தொடர்ந்து வந்தது அவளுக்குத் தெரியாது.


வண்டியின் ஹரன் சத்தம் கேட்டு, அபர்ணா பார்க்க… ராம் வா என  தலையசைக்க, அவள் விரைந்து அவனிடம் சென்றாள். “ஏறு…” என்றவன், அவள் ஏறி அமர்ந்ததும், வண்டியை திருப்பிப் பறக்க விட்டான். அபர்ணாவுக்கு வயிற்றில் பூச்சி பறந்தது.


“கொஞ்சம் மெதுவா போங்களேன்.” என்றதும், வண்டியின் வேகத்தைக் குறைத்தான்.


“என்ன சொல்லிட்டியா?”


“அத்தை மட்டும்தான் இருந்தாங்க. நான் சொன்னதை கேட்டு, அஞ்சலியை அடிச்சாங்க. அப்புறம் நான் பார்த்துகிறேன்னு சொல்லி, வெளியவே வச்சு பேசி அனுப்பிட்டாங்க.”


“ம்ம்” என்று மட்டும் சொன்னான்.


அபர்ணாவுக்குக் கேட்க நிறையக் கேள்விகள் இருந்தது. இவனிடம் கேட்டால்… பதில் வருமா என்று தெரியவில்லை. அவனும் பார்க்க இறுகி போய் இருந்தான். கண்டிப்பாகப் பதில் வராது.


அவனோடு இருக்கும் நேரத்தையாவது அனுபவிப்போம் என்ற நினைத்தவள், நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். எதிர் காற்று முகத்தில் வந்து அடிக்க, அதைக் கண் மூடி ரசித்தாள்.


பக்கவாட்டு கண்ணாடி வழியாக அவள் முகம் பார்த்தவன், “என்ன?” என்றான்.

“உண்மையிலேயே உங்களோட வண்டியில போறேன்னான்னு நம்ப முடியலை. இப்படியே போயிட்டே இருந்தா நல்லா இருக்கும்.” என்றாள் குதுகுலமாக.


“ஆரம்பிச்சிட்டியா ! என்னோட ஓட்டிக்க, எதாவது சாக்கு கிடைக்குமான்னு பார்த்திட்டே இருப்பியா…”


“நான் உன்னைத் தெரியாம சைட் அடிச்சுத் தொலைச்சிட்டேன். நான் சைட் அடிச்ச பெண்ணை எல்லாம் கல்யாணம் பணிக்கனும்ன்னா, இந்நேரம் எனக்குப் பத்துக் கல்யாணமாவது நடந்திருக்கும். தெரியுமா…”


“உங்க குடும்பத்துல எல்லோருமே இப்படித்தான் இல்லை. பணக்கார இடம்ன்னா வந்து ஒட்டிபீங்க. யாரு மாட்டுவான்னு பார்த்திட்டே இருப்பீங்களா?”


ராம் பேசிக்கொண்டே செல்ல…அபர்ணாவிடம் இருந்து பதில் இல்லை. அவன் பக்கவாட்டு கண்ணாடி வழியாகப் பார்க்க…. அவள் கண் கலங்கி முகம் சிவந்து இருந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும், அதிகம் பேசி விட்டோம் என புரிந்தது.  

அவன் வண்டியை அவள் அபார்ட்மெண்ட் உள்ளே விட…. “ நிறுத்துங்க.” என்றவள், வண்டியில் இருந்து இரங்கி, அவன் முன்பு வந்து நின்றாள்.


“நான் உங்களோட அதிகமா பேசி பழகினது இல்ல… அப்படியிருந்தும் ஏன் உங்களைப் பிடிக்கும்ன்னு எனக்குத் தெரியாது.”


“நானும் நீங்க வேண்டம்ன்னுதான் நினைப்பேன். ஆனா ஒவ்வொரு தடவை உங்களைப் பார்க்கும்போதும், எனக்கு இன்னும் அதிகமாத்தான் உங்களைப் பிடிச்சிருக்கு.”


“நீங்க என்னை வேணும்ன்னே காயப்படுத்திப் பார்க்கனும்ன்னு பேசுறீங்க. அது எனக்குப் புரியுது. ஆனா உங்களுக்கும் என்னைப் பிடிக்கும். அது எனக்குத் தெரியும்.”


“நீங்க என்னைப் பார்க்கும் போது, பேசும் போது, என் கை பிடிக்கும் போது, அதுல இருக்கிற சொந்தத்தை நான் உணர்ந்து இருக்கேன்.”


இதைச் சொல்லும்போதே அடக்கி வைத்திருந்த கண்ணீர் சிந்திவிட, அதை அவனுக்குக் காட்ட பிடிக்காமல் முகத்தைத் திருப்பியவள், “போங்க… உங்க வீடு நிறைய அடுக்கி வைக்க, பணமும் நகையும் கொண்டு வர பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருங்க.”


அபர்ணா சொல்லிவிட்டு அவனைத் திரும்பி பார்க்காமல் செல்ல… அவளைப் பார்த்ததும் அங்குக் காவலில் இருந்தவர், இரவு நேரம் என்பதால்…அவள் கூடவே வீடு வரை சென்றார்.  


ராம் அங்கேயே நின்று, அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தான். இன்றைக்குத் தான் நடந்து கொண்ட முறையை அவனாலேயே மன்னிக்க முடியாது. இவன் கூப்பிட்டுதான் அவள் வந்தாள்.

அவனுக்கு வேறு யாரை அழைப்பது என்று தெரியவில்லை. அவனுக்கு அவ்வளவு அவகாசமும் இல்லை. அவன் வீட்டில் தெரிந்தால்…. பெரிய பிரச்சனை ஆகும்.

அவன் அப்பாவை அழைத்துச் சொன்னாலும் ஒரு ப்ரோஜனமும்  இருக்காது… குடித்துவிட்டு இந்நேரம் மட்டையாகி இருப்பர் என்று தெரியும்.

சின்னப்பெண் பெயர் கெட்டுவிட்டால்… அவளது எதிர்காலம் என்ன ஆகும் என யோசித்துதான், அபர்ணாவை தொடர்பு கொண்டான். நீலீமாவோடும், ப்ரகாஷோடும்அவனுக்குப் பேசவே பிடிக்காது. இதில் இதையெல்லாம் அவன் எப்படி அவர்களிடம் சொல்லுவான்.

அஞ்சலிக்கு ரெண்டு அறை விட்டு, அவனால் கிளப்பி இருக்க முடியும். ஆனால் அவள் பழகிக்கொண்டு இருப்பவன் சாதாரண ஆள் இல்லை. வீட்டிற்குத் தெரியாது என்ற தைரியத்தில், மீண்டும் அவனோடு சுற்றுவாள். அவள் செய்தது அவள் வீட்டினருக்கு தெரிய வேண்டும் என நினைத்தான்.


வீட்டிற்கு வந்த அபர்ணா ஹாலில் இருந்த திவானிலேயே படுத்துக் கொண்டாள். கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.


ராம்மிற்கு அவன் தந்தையோடும், நீலீமாவோடும் சுமுகமான உறவு இல்லை எனப் புரிந்தது. ஆனால் அஞ்சலி மீது அக்கறை இருக்கிறது. அவள் எப்படியோ போகட்டும் என அவனால் விட முடியவில்லை. அப்படி என்ன பிரச்சனை இவர்களுக்குள்? என வெகு நேரம் யோசித்தவள், அப்படியே உறங்கிவிட்டாள்.


காலை வீட்டின் அழைப்பு மணி அடிக்க… கண்களைத் திறக்கவே முடியவில்லை. கஷ்ட்டப்பட்டு எழுந்து கதவை திறந்தவள், வெளியே சுகன்யாவை பார்த்ததும், முகம் மலர்ந்தாள்.


“அம்மா, இன்னைக்கு வரேன்னு சொல்லவே இல்லை. எங்க அப்பா?”


“டாக்ஸிக்குப் பணம் கொடுத்திட்டு இருந்தார். நான் முன்னாடி வந்திட்டேன். அருணும் பாட்டியும் அங்கேயே இருக்காங்க. கொஞ்ச நாள் கழிச்சி வருவாங்க.” என்றவர்,

 

அப்போதுதான் மகளின் முகத்தைக் கவனித்து விட்டு, “கண்ணெல்லாம் வீங்கி இருக்கு… அழுதியா அபர்ணா?” என்றதும்,


“ஆமாம் அழறாங்க. நான் யாரையாவது அழ வைக்காம இருந்தா சரி.” என சமாளித்து விட்டு, குளியல் அறைக்குள் சென்று நுழைந்து கொண்டாள்.
மகளை சந்தேகமாக பார்த்தபடி சுகன்யா நின்றார்.


வெகு நேரம் சென்றே அபர்ணா குளித்துவிட்டு வந்தாள். மகளைப் பார்த்ததும் சுகன்யா டிபன் கொண்டு வந்தார்.

 

அவர் கொடுத்த தட்டை வாங்கிகொண்டு, அங்கேயே நின்று சாப்பிட்டவள், “அம்மா, அத்தை கல்யாணம் எப்படி நடந்தது?” எனக் கேட்க, சுகன்யா திடுக்கிட்டு போய் மகளைப் பார்த்தார். அங்கே வந்த ஸ்ரீகாந்தின் முகமும் அதைக் கேட்டதும் மாறியது.

Advertisement