Advertisement

சுகன்யாவின் எண்ணங்கள் மகளையே சுற்றியே வந்து கொண்டிருந்தது. அழகான பெண் அபர்ணா… அவளின் பருவ வயதில் இருந்தே… காதலிப்பதாகச் சொல்லி சில பேர் அவளிடம் கேட்டு இருக்கிறார்கள். அவளும் அவர்களை நாசுக்காக மறுத்து இருக்கிறாள்.


இன்று அவளே காதலில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறாள் என்றாள்… தன் காதல் நிறைவேறும் என ஏதோவொரு நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. அது பொய்க்கும் பட்ச்சத்தில் தன் மகள் அதை எப்படித் தாங்குவாள் எனக் கவலை கொண்ட சுகன்யா… மகளின் மனதை வேறு பக்கம் திருப்ப வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.


அவருக்கு அந்த வேலையை வைக்காமல்… அன்று இரவே அவரை அழைத்த அபர்ணா, “நான் மிஸ் இந்தியா” போட்டியில் கலந்துக்கப் போறேன் என்றாள்.


“என்ன திடிர்ன்னு? நீ இதுக்கு முன்னாடி எப்பவும் இது பத்தி பேசினது இல்லையே…” சுகன்யா சொல்வது உண்மைதான்.


அபர்ணா படிப்பது சென்னையில் புகழ் பெற்ற லயோலா கல்லூரியில். அங்குப் படிக்கும் விஷுவல் கம்யுனிகேஷன் மாணவர்கள் அவளைத் தங்கள் குறும் படத்தில் நடிக்கச் சொல்லி.. அழைத்துக் கொண்டே இருந்தனர்.


அபர்ணாவுக்கு ஆர்வம் இல்லாததால் மறுத்துக் கொண்டே வந்தாள். உடன் படிக்கும் தோழி ஒருத்தி மாடலிங் செய்யலாமே என யோசனை சொன்னாள். அது பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவள் கண்ணில், அழகி போட்டி தொடர்பான செய்தி பட… முயற்சி செய்வோமே என நினைத்தாள்.


அழகி போட்டியில் வெற்றி பெற்றால்….உடனே அவள் அந்தஸ்த்து உயர்ந்து விடாது. ஆனால் அது ஒரு அடையளத்தை அவளுக்குக் கொடுக்கும். அவள் செல்லும் மாடலிங் துறையிலும், அவளுக்குச் சிறப்பான வரவேற்ப்பு இருக்கும். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புக்கள் கிடைக்கும். அவள் நினைத்த உயரத்தை அவளால் எட்ட முடியும்.


மகள் சொன்ன விளக்கத்தைக் கேட்ட சுகன்யா, “ஐயோ மாடலிங்கா வேண்டாம்…” என்பது போல் எதுவும் சொல்லவில்லை.


“சினிமாவோ, மாடலிங்கோ தவறான துறை இல்லை… அங்கே நீ எப்படி நீயாவே இருக்கப் போறேங்கிறதுல தான் இருக்கு.”


“இந்தப் பீல்ட்க்கு வந்தாலே இப்படித்தான்…. அது போல இல்லாம…. இந்தத் துறையிலும் உன் திறமையால் மட்டுமே நீ முன்னேறி காட்டனும் அபர்ணா.” என்றார்.


அவள் அம்மா சொல்வது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.


“இந்த வருமானத்தை வச்சுதான் நான் சாப்பிட போறது இல்லை மா… என் சுய மரியாதையை இழந்துதான் ஆகணும்ன்னு ஒரு கட்டாயம் வந்தா… நான் இந்தப் பீல்ட்லையே இருக்க மாட்டேன்.”


“அப்படி நான் என்னை இழந்து எதையும் சாதிக்க மாட்டேன்.”


மகளின் இந்த உறுதிக்குப் பிறகுதான் சுகன்யாவுக்கு நிம்மதியாக இருந்தது. “இன்னும் ரெண்டு மாசம்தான், அம்மா அங்க வந்திடுவேன். அப்புறம் நான் உன் கூடவே இருப்பேன்.” என்றார்.


பிறகு தந்தை, தம்பி இருவருமே அவளுக்கு ஆதரவு தெரிவித்தனர். குடும்பத்தாரின் ஆதரவு கிடைத்த தெம்பில், இன்னும் அபர்ணா போட்டியில் வெல்வது பற்றித் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்தாள்.


அடுத்த வருடத்திற்க்கான போட்டிக்குத்தான் இப்போது அழைப்பு விடுத்து இருந்தனர். இன்னும் அவகாசம் இருக்கிறது… அதற்குள் அவள் தயார் செய்து கொள்ள வேண்டும்.


பணம் கொஞ்சம் அதிகம்தான் செலவு ஆகும். ஆனால் அவர்களால் முடியாதது இல்லை.


மறுநாளே மாடலிங் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் சேர்ந்து விட்டாள். போட்டிக்கு தேவையான உயரம் அவளுக்கு இருந்தது. ஆனால் உடல் எடையைக் குறைக்க வேண்டியது இருந்தது. அதற்கான உடற்பயிர்ச்சியும், உணவு கட்டுப்பாடும் செய்ய ஆரம்பித்தாள்.
எப்படி மேடையில் நிற்க வேண்டும், நடக்க வேண்டும் என அதற்கான பயிற்ச்சியும் ஒரு பக்கம் நடந்து கொண்டு இருந்தது.


ஒருநாள் அபர்ணா, நட்ச்சத்திர ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி செய்து கொண்டு இருந்தாள். உடல் வடிவமைப்புக்கு நீச்சல் பயிற்ச்சிக்கு முக்கியப் பங்கு உண்டு.


அதே ஹோட்டலுக்கு ராம் தன் வாடிக்கையாளர் சந்திப்புக்கு வந்திருந்தான். அவர்கள் சந்திப்பு முடிந்த பிறகு, அவனும் கார்த்திக்கும் அங்கேயே இருந்து, அந்த வருடத்திற்கான வரி கணக்கை சமர்பிக்க தேவையான கணக்கு வழக்குகள் சரி பார்த்தனர்.


அலுவலகம் என்றால்… எதாவது குறுக்கீடு இருக்கும், தவறு எதுவும் நேர்ந்து விடக் கூடாது என இது போல் வெளியேதான் சந்தித்துப் பேசுவது.


அன்று கணக்குளை சரிபார்த்து முடிய இரவு ஏழு மணி ஆகி விட… அதற்குள் இருவருக்கும் மண்டை காய்ந்துவிட்டது. எதாவது ஜில் என்று குடிக்கலாம் எனப் பழசாறு ஆர்டர் செய்து வந்ததும், இருவரும் எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றனர்.  


அவர்கள் நின்ற பால்கனி நீச்சல் குளத்தைப் பார்ப்பதை போல் இருந்தது. அபர்ணா தொப்பி அணிந்து இருந்ததால்… முதலில் ராம்மிற்கு அவளை அடையாலம் தெரியவில்லை.


பயிற்சி முடிந்து வெளியே வந்தவள், தலையில் இருந்த தொப்பியை எடுக்க… பிறகே ராம்மிற்கு அடையலாம் தெரிந்தது. நீச்சல் உடை அணிந்து இருந்தாலும், அதிலும் ஒரு கண்ணியம் இருந்தது. ஆள் இன்னும் மெலிந்து பார்க்க சிக்கென்று இருந்தாள். அவனால் பார்வையைத் திருப்பவே முடியவில்லை.

அங்கே போடபட்டிருந்த சாய்வு நாற்காலியில் இருந்த தனது ஹவுஸ் கோட்டை எடுத்து அணிந்து கொண்டவள், நீச்சல் குளத்தைச் சுற்றி நடந்து வந்தாள்.


வெகு நேரமாக ராம்மின் பார்வை ஒரே இடத்தில் இருக்க… கார்த்திக் திரும்பி பார்த்தான். அவன் பார்க்கும் போது, அபர்ணா தள்ளி சென்றிருந்தாள். அவனுக்கு அது அபர்ணா எனத் தெரியவில்லை… “பிகர் சூப்பரா இருக்கு இல்ல….” என்றான்.


“அது அபர்ணா…” ராம் சொன்னதும், கார்த்திக்கு புரை ஏறி விட்டது.


“ஐயோ ! சொன்னது தெரிஞ்சா காவு வாங்கிடுவாளே.” என்றவன், “இவளும் எங்க அண்ணியும் சேர்ந்து என்னை என்ன பாடு படுத்துறாங்க தெரியுமா?” என்றதும், ராம் அவனைப் பார்த்தான்.


“எப்படி டா?”


“அன்னைக்கு உன் தங்கை கல்யாணத்துல ரெண்டு பேருக்கும் அறிமுகம் பண்ணி வச்சேன். அன்னைக்கே செல் நம்பர் ஷேர் பண்ணிகிட்டாங்க போல… இப்ப ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்.”


“இத்தனைக்கும் அபர்ணா ஒருதடவை தான் வீட்டுக்கு வந்திருக்கா.. போன்லையே ரெண்டு பேரும் அவ்வளவு பேசிப்பாங்க. அப்ப நான் அங்க இருந்தா, ரெண்டு பேருக்கும் என்னைக் கலாய்கிறது தான் வேலை.”


“மிஸ் இந்திய கான்டெஸ்ட்க்கு வேற போறா போலிருக்கு… அண்ணிதான் அவளுக்கு அட்வைசர். எனக்கும் ஒரு வேலை கொடுத்தாங்க. அவளுக்கு அட்ரஸ் ப்ரூப் வேணுமாம். கொஞ்சம் சீக்கிரம் கிடைக்கிற மாதிரி செய்யச் சொன்னாங்க. யாரையாவது பிடிச்சு வாங்கணும்.”


கார்த்திக் சொன்ன விவரங்களை… ராம் கேட்டுக் கொண்டான். இருவரும் மீண்டும் ஒருமுறை மேலோட்டமாக கணக்குகளைச் சரி பார்த்துவிட்டுக் கிளம்பியவர்கள், தங்கள் காருக்காக ஹோட்டல் வரவேற்பு அறையில் காத்திருந்தனர்.


அபர்ணா குளித்து வேறு உடையில் அவர்கள் இருந்த பக்கம்தான் வந்து கொண்டிருந்தாள். அவள் இன்னும் ராம்மை பார்க்கவில்லை. தன்னைப் பார்த்தால்… இப்போது எப்படி நடந்து கொள்வாளோ என அவன் நினைக்க…


முதலில் கார்த்திக்கை பார்த்தவள், “ஹாய் கார்த்திக்…” என்றாள் உற்சாகமாக. அவனை நோக்கி வரும்போதுதான் உடனிருந்த ராம்மை கவனித்தாள். உடனே முகம் மாறினாலும் சமாளித்துக் கொண்டவள், ராம்மின் பக்கம் கூடத் திரும்பாமல் கார்திக்கோடு மட்டும் பேசினாள். அவனும் கைபேசியில் எதோ பார்ப்பது போல் அங்கிருந்து விலகி சென்றுவிட்டான்.


“நான் கேட்ட அட்ரஸ் ப்ரூப் என்ன ஆச்சு? டைமுக்கு கொடுக்கலைனா என்னோட அப்ளிகேஷன் ரிஜக்ட் பண்ணிடுவாங்க.”


“நீ பேங்க் அக்கௌன்ட் ஓபன் பண்ணாலே அதையே அட்ரஸ் ப்ரூபா கொடுக்கலாமே.”


“இல்லை அதை எடுத்துக்க மாட்டாங்களாம். ஆதார் கார்டு இல்லைனா எலெக்க்ஷன் கார்டு கேட்கிறாங்க. நான் எப்படி அது உடனே வாங்க முடியும்.”


“சரி நான் என்ன பண்றது பார்கிறேன்.”


இப்போது கார்த்திக்குக் குழப்பம். இருவருக்கும் அறிமுகம் செய்வதா வேண்டாமா என்று… ஏற்கனவே இருவருக்கும் ஒருவரையொருவர் தெரியும் என்பது வரை அவன் அறிவான். அதற்கு மேல் எதுவும் தெரியாது.


அவன் யோசிக்கும் போதே அபர்ணா கிளம்பி விட்டாள். “நான் போயிட்டு வரேன்.” என்றாள்.


“நீ எப்படிப் போவ? நான் உன்னை விடட்டுமா.” என்ற கார்த்திக்கிடம் மறுத்துவிட்டு, ராம்மின் பக்கம் கூடப் பார்வையைத் திருப்பாமலே கிளம்பி சென்றாள்.


அவளுடைய வலி கொஞ்சமும் குறையவில்லை… குறைந்திருந்தால் அவனிடம் ஒரு ஹாய்யாவது சொல்லி இருப்பாள்… எப்போதும் அவனைப் பார்க்கும் போது மலரும் முகம், இன்று தன்னைத் தவிர்த்த போது… ராம்மிற்கும் வலித்தது. ஆனால் நீ இதைத்தானே எதிர்பார்த்தாய். இப்போது அனுபவி என அவன் மனசாட்சி குத்தி காட்டியது.


ஒரு பக்கம் அவள் இப்படியே தன்னை வெறுத்து விட்டாள் நல்லது என்றும் தோன்றியது. இரண்டு வெவ்வேறு எண்ணங்களுக்கு இடையே அல்லாடி கொண்டிருந்தான்.


மறுநாள் கார்த்திக்கிடம் இருந்த அபர்ணாவின் புகைப்படம் மற்றும் முகவரியை ஆள் அனுப்பி வாங்கியவன், ஒரு மந்திரியை பிடித்து, நான்கு நாட்களுக்குள் அபர்ணாவுக்கு வாக்காளர் அடையாள அட்டை வாங்கி விட்டான்.


கார்த்திக்கின் அலுவலகத்திற்குச் சென்று அவன் அதைக் கொடுத்த போது…. “அடப்பாவி ! எப்படி டா?” என்றவனிடம்,


“இதே இப்ப எலெக்ஷன் டைம்ன்னு வச்சுக்கோ… அவனுங்களே வீடு தேடி வந்து கொடுத்திருப்பாங்க.” என்றான்.


“இதுல அவனுங்களுக்கு என்ன லாபம். அபர்ணா வோட் போட போகலைன்னு வச்சுக்கோ.”


“ஹே… அவ வோட்டை இவனுங்க போட்டுட்டு போயிடுவானுங்க. அதுக்குத்தான் புரிஞ்சுதா…”


“இதுதான் சர்கார் படத்துல வந்ததுல.”


“ஆமாம். இதை அவகிட்ட கொடுத்திடு. ஆனா என் பேர் வெளிய வரக் கூடாது. நீயே வாங்கினதா இருக்கட்டும்.”


நீலீமாவின் உறவுப் பெண் என்பதால் எனக் கார்த்திக் நினைத்துக் கொண்டான். அதனால் “அபர்ணா அவங்க அத்தை மாதிரி இல்லைடா, ரொம்ப நல்ல பொண்ணு.” என்றான்.


ராம் பதில் சொல்லாது கிளம்பி சென்றான். கார்த்திக் கொடுத்த வாக்காளர் அட்டையைப் பார்த்து அபர்ணாவுக்கு மிகவும் சந்தோஷம். அவளுக்கு அது மிகவும் முக்கியம். அவள் வெளிநாட்டில் வசித்ததால்… அவளிடம் முகவரி சான்று இல்லாமல் இருந்தது. இனிதான் ஒவ்வொன்றாக வாங்க வேண்டும். ஆனால் இந்தப் போட்டிக்கு அவசரமாகத் தேவைப்பட்டது.


“தேங்கஸ்… தேங்க்ஸ்…” எனப் பத்து முறையாவது சொல்லி இருப்பாள். ராம் தான் ஏற்பாடு செய்தது எனச் சொல்லிவிடலாமா என்று கூட நினைத்தான். ஆனால் ராம் குறிப்பாகச் சொல்லாதே எனச் சொல்லி இருந்ததால்… அவனால் சொல்லவும் முடியவில்லை.


“நித்யா அக்கா, உங்க கொழுந்தனார் பெரிய அப்பாடக்கர் தான். இப்ப ஒத்துகிறேன்.” எனச் சிரித்தாள்.


“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. அஞ்சு வருஷமா ஒன் சைட்டாவே லவ் பண்ணிட்டு இருக்கான். இவனை நீதான் மெச்சுக்கணும்.” என்றாள் நித்யா சலிப்பாக.


அப்படியா என்பது போல் அபர்ணா கார்த்திக்கை பார்க்க…


“உனக்கு அப்புறம் சொல்றேன்.” என்றான்.


“அஞ்சு வருஷமா எந்த நம்பிக்கையில காத்திட்டு இருக்கான்.” என வியந்தபடி சென்றாள்.


போட்டிக்கான தேர்வில் அவளுடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, முதல் தகுதி சுற்றில் அபர்ணா தேர்வு ஆகினாள்.






Advertisement