Advertisement

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 11


மறுநாள் அபர்ணாவிடம் வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை… தனது பாட்டிக்காக இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொள்ளக் கூட முடியவில்லை.


இரண்டு நாட்கள் கவனித்த பாட்டி, அடுத்த நாள் அபர்ணா கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில், தனது மகளிடம் பேத்தியை பற்றிச் சொல்லிவிட்டார்.

மகளைப் பற்றிக் கேட்ட சுகன்யாவுக்குக் கவலையாக இருந்தது.
அப்பர்ணா அப்படிச் சட்டென்று உணர்வுகளைக் காட்டி விடுபவள் இல்லை. அவள் தந்தைக்குத் திடிரென்று உடல்நல குறைவு ஏற்பட… வீட்டில் எல்லோருமே சற்று அரண்டுதான் விட்டனர். அப்போது அபர்ணா மட்டும்தான் தைரியமாக இருந்தாள்.


“வயசானா உடம்புக்கு எதாவது வரத்தான் செய்யும். எப்பவும் ஒரே மாதிரி இருக்க முடியாது? இதுக்குப் போய் ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க?”


“இப்ப என்ன பிரச்சனைன்னு தெரியும். சரி பண்ணிக்கலாம் பா….இன்னைக்கு மெடிகல் பீல்ட் ரொம்ப அட்வான்ஸா இருக்கு. நாம கரெக்ட்டா ட்ரீட்மென்ட் எடுத்துக்கணும். அவ்வளவுதான். ”


அவள் சொன்ன தைரியத்தைக் கேட்டுத்தான் அவள் குடும்பத்தினர் தெளிந்தனர். அதுவரை இப்படி வந்து விட்டதே என அதையே நினைத்து வருந்தியவர்கள்… அடுத்து என்ன என அதன்பிறகு தான் யோசித்தனர்.


அபர்ணாவுக்கும் அவள் அப்பாவை நினைத்து கவலை இல்லாமல் இல்லை. இரவின் தனிமையில் அவளும் கண்ணீர் சிந்தி இருக்கிறாள். ஆனால் அதை மற்ற யாருக்கும் காட்டியது இல்லை.


ஸ்ரீகாந்திற்கு வந்தது இதயச் சம்பந்தமான பிரச்சனை என்பதால்… மருத்துவத்தோடு சேர்ந்து, உணவு கட்டுப்பாடும் அவசியம். அதற்காகச் சுகன்யா அவரை ரொம்பவே கட்டிபாட்டில் வைக்க… உணவுப் பிரியரான ஸ்ரீகாந்திற்கு… அது வேறு மன அழுத்தத்தைக் கொடுக்க… “இப்படி வாழுவதற்குச் சாவதே மேல்…” என்பது போல அவர் பேசி விட… சுகன்யா மிகவும் காயப்பட்டுப் போனார்.


தந்தை மற்றும் தாயின் பிரச்சனையை அறிந்த அபர்ணா… வலைத்தளத்தில் தேடி, ஆராய்ந்து, என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியம் என்பதைத் தெரிந்து கொண்டாள்.


ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதை விட… அளவு குறைவாகக், கூட ஒருமுறை சாப்பிடுவதில் தவறு ஒன்றும் இல்லை என எடுத்து சொன்னாள்.


எந்த உணவில் எவ்வளவு மாவு சத்து, புரதம், கொழுப்பு இருக்கிறது என ஒரு பட்டியலே தயார் செய்து கொடுத்தாள். கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதை விட… அதையும் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்வது ஒன்றும் தவறு இல்லை என்பதைக் கண்டறிந்தாள்.


அபர்ணா சொன்ன விகிதத்தில் உணவு கட்டுப்பாடு கடைபிடிக்க…. மறு மாதம் உடல் பரிசோதனையில் ஸ்ரீகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அவர் மனநிலையிலும் கூட…


ஸ்ரீகாந்திற்கு அங்கே வேலை பளு அதிகம். அதற்காகவே இந்தியா வர தீர்மானித்தனர். இங்கே வருவது போல் வருமானம் இருக்காது என ஸ்ரீகாந்த் தயங்க… “பணம் எப்ப வேணாலும் சம்பாதிக்கலாம் பா… ஆரோக்கியம் முக்கியம்.” என எடுத்துச் சொன்னதும் அபர்ணாதான்.


இப்படி எல்லோருக்கும் தகுந்த ஆலோசனை சொன்னவள், சின்ன விஷயத்துக்கு உடைந்து போவாளா என்ன? என்னவாக இருக்கும் எனச் சுகன்யாவுக்குத் தலை வெடித்தது.


மாலை வழக்கம் போல் வீட்டிற்கு வந்தவள், வீட்டை சுத்தம் செய்து, பாத்திரம் தேய்த்து வைத்தாள். பிறகு குளித்துவிட்டு வந்து, பாட்டி செய்த அடையைச் சாப்பிட்டு முடித்தாள். இதெல்லாம் வழக்கமாகச் செய்வதுதான்… ஆனால் எதாவது பேசிக்கொண்டோ.. அல்லது பாடிக்கொண்டோ இருப்பவள்… அமைதியாக இருந்ததுதான் உறுத்தலாக இருந்தது.


அடுத்த நாளுக்கான உடையைத் தயாராக எடுத்து வைத்து விட்டு வந்தவள், சிடியில் பாடலை ஒலிக்கவிட்டு, ஹாலில் இருந்த திவனில் லேப்டாப்போடு அமர்ந்தாள்.


அபர்ணாவுக்கு ஹாலில் இருக்கத்தான் பிடிக்கும் என்பதால்… பாட்டி உள்ளே அறையில் டிவியில் நாடகம் பார்த்துக் கொண்டு இருந்தார்.


அப்போது அபர்ணாவின் செல் அழைக்க… எடுத்துப் பார்த்தால் சுகன்யா, இரண்டு நாட்களாக அவரிடம் பேசவில்லை… இன்றும் எடுக்கவில்லை என்றாள்… அவர் உடனே கிளம்பி இங்கே வந்துவிடும் அபாயம் இருப்பதால்…. அபர்ணா போன்னை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள்.


“ஹாய் மா…”


“என்ன பிரச்சனை அபர்ணா?” சுகன்யா நேரடியாகக் கேட்டுவிட…


“எனக்கு என்ன பிரச்சனை வரப் போகுது…. நான் யாருக்கும் பிரச்சனை கொடுக்காம இருந்தா பத்தாதா?” அபர்ணா கேலியாகச் சொல்ல…


“அதைதான் நானும் கேட்கிறேன். நீ யாருகிட்ட பிரச்சனை பண்ண?” எனக் கேட்டார்.


எப்படிதான் நம்மைப் பத்தி இப்படித் தெரிஞ்சு வச்சிருக்காங்களோ என நினைத்தவள், பொய் சொல்லி எல்லாம் அம்மாவை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து.


“அது ஒரு லவ் மேட்டர். நான் ப்ரொபோஸ் பண்ணேன், அவன் ரிஜக்ட் பண்ணிட்டான்.” என்றாள்.


“யாரு? எப்படித் தெரியும் உனக்கு?”


“அது தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? போய்ச் சம்பந்தம் பேச போறீங்களா… அவன்தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டானே… விடுங்க.” என்றாள் அலட்சியமாக.


“ஏன் பிடிக்கலைன்னு காரணம் சொன்னானா?”


“அவனுக்கும் என்னைப் பிடிக்கும் மா…. அதுதான் எனக்குக் கோபமா வருது?”


“அப்புறம் என்ன காரணத்துக்கு வேண்டாம்ன்னு சொன்னான்.”


“வேற என்ன பணம்தான். அந்தஸ்த்துல நம்மை விட ரொம்ப… ரொம்ப மேல…”


“அப்படி அவன் சொன்னனா?”


“இல்லை… வேற எதுவும் காரணம் இருக்கிறதா எனக்குத் தோணலை…”


“அபர்ணா உனக்குத் தெரியும், நானும் உன் அப்பாவும் காதலுக்கு எதிரி இல்லை.”


“காதல்ல ரெண்டு பேர் பக்கம் இருக்க உணர்வுகளையும் மதிக்கணும். உனக்கு விருப்பம் இருக்குங்கிறதுக்காக, நீ அவனை வற்புறுத்தக் கூடாது. அவனுக்கு எத்தனையோ பிரச்சனை இருக்கலாம். அதெல்லாம் உன்கிட்ட சொல்லனும்ன்னு அவசியம் இல்லை.”


“உனக்குப் புரியுதா அபர்ணா”


“ம்ம்…புரியுது மா… ஆனா நம்ம சவுகரியத்துக்கு மனசை மாத்திக்க முடியாது இல்லையா?”


மகள் கேள்வியில் இருந்த நியாயமும் சுகன்யாவுக்குப் புரியாமல் இல்லை.


“நீ அவனைப் பார்த்துக் கொஞ்சநாள்தான் ஆகுது. இது வெறும் கவர்ச்சியா கூட இருக்கலாம். டைம் எடுத்துக்கோ… அவனுக்கும் டைம் கொடு.”


“யூ ஆர் ரைட் மா.”


அதன் பிறகும் வெகு நேரம் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். ராம் யார் என்று சொல்லவில்லையே தவிர… மற்ற அனைத்தையும் அபர்ணா சொன்னாள்.


ஏற்கனவே அம்மா அத்தை வீடு என்றால் அலறுவார்கள்… இதில் ராம் யார் என்று தெரிந்தால்… மொத்தமாக மூடு விழாதான் என அவளுக்குத் தெரியும். முதலில் ராம் சம்மதிகட்டும், பிறகு அம்மாவை சமாளிக்கலாம் என நினைத்து சொல்லவில்லை.


முதலில் யோசிக்காமல் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு… மனதில் ஆசையையும் வளர்த்துவிட்டு, பிறகு ஒத்துவராது என்பதற்கு, முன்னரே காதலை மறுப்பது நல்லது எனச் சுகன்யா நினைத்தார். அதனால் அவருக்கு ராம் மீது மரியாதையான எண்ணம் தான்.


தன் அம்மாவுடன் பேசியது மனதிற்கு ஆறுதலாக இருந்தாலும், ராம் தன்னை அந்தஸ்த்துப் பேதம் கருதியே நிராகரித்தான் என்ற வலி போகவில்லை. அதனால் என்ன வேலை செய்து கொண்டு இருந்தாலும்…. அது ஒரு பக்கம் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.


ஸ்வர்ணா ராம்முடன் பேசி நான்கு நாட்கள் ஆகிவிட்டது. அன்று அலுவலகத்தில் இருந்து திரும்பிவன், குளித்து உடை மாற்றிச் சாப்பிட அமர்ந்த போது, அம்மு வந்து உணவு பரிமாறினாள்.


ராம் சாப்பிடுவதில் கவனமாக இருக்க… “அண்ணா நான் ஒன்னு கேட்கட்டுமா?” என மெதுவாக அவள் ஆரம்பிக்க…


“புதுசா இது என்ன கேள்வி?” என ராம் தங்கையைப் பார்த்தான்.


“நீங்க அந்த அபர்ணாவைதான் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?” எனக் கேட்டே விட்டாள்.


“உனக்கு என்ன தோணுது?” ராம் திருப்பி அவளைக் கேள்வி கேட்க…


நாம கேட்டா பதில் சொல்லாம, இவன் என்ன பதில் கேள்வி கேட்கிறான் என அம்முவுக்கு எரிச்சலாக வந்தது. அது அவளது முகத்தில் தெரிய…


“சரி, இப்படி வேணா கேட்கிறேன். நான் அபர்ணாவை கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு ஓகேவா இல்லையா?” ராம் கேள்வியை மாற்றி போட்டான்.
சிறிது நேரம் யோசித்த அம்மு, “என்னைப் பத்தி பிரச்சனை இல்லை… ஆனா அம்மா… அவங்களுக்கு அபர்ணாவை பார்க்கும்போது கஷ்ட்டமா இருக்காதா?”


“நீயே அம்மாவுக்காக யோசிக்கும் போது. நான் யோசிக்க மாட்டேனா அம்மு. அம்மாவுக்கு இஷ்ட்டம் இல்லாதது நான் எப்பவும் செய்ய மாட்டேன்.”


அண்ணனின் பதிலில் சட்டென்று அம்முவின் முகம் மலர… அறை வாயிலில் நின்று இருவரும் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஸ்வர்ணாவின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது.


“அப்ப நீங்க அபர்ணாவை லவ் பண்ணலையா?” என அம்மு சந்தோஷப்பட… அதற்குப் பதில் சொல்லாமல், புன்னகையை மட்டும் பதிலாகத் தந்தவன்,

“அம்மாவை சாப்பிட சொல்லு.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.(எந்த கேள்வியை முதலில் கேட்கணும்ன்னு உனக்குத் தெரியலை அம்மு.)


அங்கே நீலீமா தன் அருகில் உறங்கும் ப்ரகாஷின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அன்று ஒருநாள் குடித்து விட்டு வந்து கோபமாகப் பேசினானே… அதற்கு மறுநாள் காலையே அவளிடம் வந்து மன்னிப்பு கேட்டு விட்டான்.


முதலில் நீலீமா அவனைக் கண்டுகொள்ளமல்தான் இருந்தாள். ஆனால் ப்ரகாஷ் முதலில் கொஞ்சி, பிறகு கெஞ்சி எனச் சமாதானம் செய்தார்.


அவர் செயலில் நீலீமா வெளியே சிரித்தாலும், தான் இன்னும் அவரின் உண்மையான குணத்தை அறிந்திருக்கவில்லையோ எனத் தோன்றியது. எப்போது வேண்டுமானாலும் அவரது மறுமுகத்தைத் தான் காண வேண்டியது இருக்கும் என அவளுக்குத் தெரியாமல் இல்லை.


அவளாகத் தேடிக் கொண்ட வாழ்க்கை இது. வரும் பிரச்சனைகளையும் அவள் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஆனால் இருவருக்கும் இடையே வரப்போகும் மனகசப்புக்கு தன் மகளே காரணமாக இருக்கப் போகிறாள் என அப்போது அவளுக்குத் தெரியவில்லை.

Advertisement