Advertisement

 

பனி சிந்தும் சூரியன்



அத்தியாயம் 10



ஐந்து மாதங்களுக்குப் பிறகு…


நகரை விட்டு தள்ளி இருந்த தன் தோழியின் வீட்டுக்கு சென்றுவிட்டு அபர்ணா வீடு திரும்பிக்கொண்டு இருந்தாள். பேருந்து ஒரு மேம்பாலத்தில் செல்லும் போது, பக்கவாட்டில் இருந்த மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை பார்த்துக்கொண்டே வந்தாள்.


புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடம் அது. மென்பொருள் நிறுவனத்துக்கானது என அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தது.


நிறையத் தளங்கள் இருக்க… மேலிருந்து ஐந்து அல்லது ஆறாவது தளத்தில் வெளிப்பக்கமாக இருந்த பால்கனி போன்ற இடத்தில், சில பேர் கட்டிடத்தைப் பார்த்தபடி நின்று பேசுவது அவளது கண்ணில் பட்டது.


மேம்பாலத்தின் நடுவில் பேருந்து சென்றபோது, கட்டிடம் இன்னும் பார்வைக்கு நன்றாகத் தெரிய… சாதரணமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை கூர்மை ஆகியது.


அங்கு நின்று பேசிக்கொண்டிருந்தவர்களில் ராம்மும் ஒருவன். அது ராம் தான் என்று உறுதி ஆகும் வரை விடாது பார்த்துக் கொண்டே வந்தாள். பேருந்து மேம்பாலத்தின் இறக்கத்தில்… இடை சாலையில் செல்ல… அங்கேயே பேருந்தை நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள்.


இத்தனை நாட்கள் மனதிற்குள் நடத்திய போராட்டங்கள், கட்டுப்பாடுகள் எல்லாம் ராம்மை பார்த்த நொடி… எதுவுமே அவளுக்கு நினைவு இல்லை. அவனைப் பார்க்க வேண்டும் அது ஒன்றே எண்ணமாக இருக்க…. இடைசாலை வழியாகவே அந்தக் கட்டத்தை நோக்கி வேகமாக நடந்தாள்.


அது இருந்தது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம். வழியெங்கிலும் இது மாதிரி பெரிய கட்டிடங்கள் தான் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஓட்டமும், நடையுமாக அவள் அந்தக் கட்டிடத்தை அடைந்த போது, கட்டிட வேலைக்காக இருந்த தற்காலிக மின்தூக்கியில் ராம் கீழே இறங்கிக் கொண்டு இருந்தான்.


உடன் வந்தவர்களுடன் பேசிக்கொண்டே வந்தவனுக்கு, அபர்ணாவை பார்த்ததும் அதிர்ச்சியில் இதயத்தின் ஸ்வரம் தப்பி போனது என்னவோ உண்மை. அந்த இடத்தில், அந்த நேரத்தில் அவளை எதிர்பார்த்திருப்பானா என்ன?


நாம்தான் தவறாகப் புரிந்து கொண்டோமோ என அவன் கூர்ந்து நோக்க… அபர்ணாதான் வந்து கொண்டிருந்தாள். திடிரென்று அவன் பேச்சை நிறுத்தியதும், உடன் வந்தவர்கள் அவனைப் புரியாமல் பார்க்க…. மின்தூக்கியும் தரை தளத்தைத் தொட்டிருந்தது.


“சரி நான் சொன்ன மாதிரி பண்ணிடுங்க. நாளைக்குப் பார்ப்போம்.” என உடன் வந்த இன்ஜினியர்களை அனுப்பியவன், அபர்ணா வருவதற்காக அங்கேயே காத்திருந்தான்.


வியர்வையில் முகம் பளபளக்க, மூச்சு வாங்க எதிரில் வந்து நின்றவளை… ஆர்வம் இல்லாத பார்வை பார்த்தான்.


“என்ன அபர்ணா இந்தப் பக்கம்? இங்க யாரவது தெரிஞ்சவங்களைப் பார்க்க வந்தியா?”


“நல்லவேளை என்னை யாருன்னு கேட்கலை.” என அபர்ணா புன்னகைக்க… ராம்முக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அவனைத்தான் பார்க்க வந்திருக்கிறாள் எனத் தெரியும். அவன் அவளைத் தள்ளி வைக்க முயல்வதை அவளும் கண்டு கொண்டாள்.


“பஸ்ல போகும்போது பார்த்தேன். இந்தப் பில்டிங் நல்லா இருந்தது. அதுதான் வாங்கலாம்ன்னு வந்தேன். எவ்வளவு கோடி?”
அலட்சியமாகப் பேசினாலும், அவள் கண்களில் வலி தெரிந்தது. அதைப் பார்த்தவனுக்கும் மனம் வலித்தது.


“நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணலை. நீங்க உங்க வேலையைப் பாருங்க. நான் இந்தப் பில்டிங் பார்த்திட்டு போறேன்.” என அபர்ணா அவனைக் கடந்து செல்ல… அவனுக்குப் பேச்சு கூட வரவில்லை, சரி என்பதாகத் தலையசைத்தவன், தன் காரை நிறுத்தி இருக்கும் இடம் நோக்கி சென்றான்.


கார் அருகில் வந்துவிட்டாலும், அபர்ணா அங்கு இருக்கும் போது, அவன் மட்டும் எப்படிக் கிளம்பி செல்வான்.


சில பல நிமிடங்கள் கடந்தும், அவள் வரவில்லை என்றதும், அவளைத் தேடிக் கொண்டு மீண்டும் கட்டிடத்திற்குள் சென்றான்.


கட்டிட வேலை செய்பவர்கள் அனைவரும் வட இந்தியர்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் வேலை செய்பவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் இந்த இடம் பாதுக்காபானது இல்லை.


ராம் உள்ளே சென்றபோது, அபர்ணா ஜன்னல் பக்கம் நின்று வெளியே பார்த்துக் கொண்டு நின்றாள்.


“அபர்ணா…” ராம் அழைக்க… மெதுவாகத் திரும்பியவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.


“கிளம்பலையா?”


“எனக்குப் போயிக்கத் தெரியும், நீங்க போங்க.” பதில் வெடுக்கென வந்தது.


“இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டிடும். இங்க இருக்கிறது அவ்வளவு சேப் இல்லை. சொன்னா புரிஞ்சிக்கோ..”


அபர்ணா பதில் சொல்லாது, வெளியே நடக்க, ராம்மும் அவள் பின்னே சென்றான்.


அவள் அவன் காரை தாண்டி செல்ல… “அபர்ணா, நீ தனியா நடந்து போக வேண்டாம். கார்ல ஏறு, நான் கொண்டு விடுறேன்.” அவன் சொல்ல… ஆத்திரமாக அவன் பக்கம் திரும்பியவள்.


“இப்ப என்ன திடீர் அக்கறை? அங்க இருந்து உங்களைப் பார்த்திட்டு ஓடி வந்தேன்.” சற்று தள்ளி இருந்த மேம்பாலத்தைக் காட்டியவள், “யாரை பார்க்க வந்தேன்னு கேட்கறீங்க. ஆம்பிளைங்க லவ் பண்றேன்னு சொல்லலாம். பொண்ணுங்க பின்னாடி சுத்தலாம். அவங்களை ஹீரோவா பார்ப்பீங்க. அதே பொண்ணுங்க காதலை சொன்னா உங்களுக்குத் தப்பானவங்க இல்லை.”


“நானும் உங்களை மாதிரி பணக்காரியா இருந்திருந்தா.. இன்னும் கொஞ்சம் மரியாதையா பார்த்து இருப்பீங்க.”

 

“நான் எல்லாம் உங்களுக்கு சைட் அடிக்க மட்டும்தான்.”  


அபர்ணா அவனை அவ்வளவு குற்றம் சொல்லியும், தன்னை நியப்படுத்தும் விதமாக அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.


“வர தெரிஞ்ச எனக்கு, போகவும் தெரியும்.” அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே… அங்கு வேலைப் பார்பவர்கள் ஒரு கும்பலாக உள்ளே நுழைந்தனர். அவர்கள் அந்தக் கட்டிடத்தில்தான் தங்கி இருக்கிறார்கள்.


விடுமுறை நாள் என்பதால்… வெளியே சென்றுவிட்டு வந்தனர். அதில் சிலர் தள்ளாடியபடி வர… அவர்களுக்குள் வாக்குவாதம் வேறு… அபர்ணாவை பார்த்ததும், அவர்கள் தேங்கி நிற்க, பக்கத்தில் நின்ற ராம்மை கூட அவர்கள் கவனிக்கவில்லை.


அவர்களின் பார்வை ராம்மிற்குக் கோபத்தைக் கொடுக்க… “ஏறு அபர்ணா.” என்றான் அதட்டலாக.


அவளுக்கும் அவர்கள் பார்வை கிலியை கொடுத்திருக்க… வீராப்பு காட்டும் நேரம் இதுவல்ல என உணர்ந்தவள், காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். ராம் மறுபக்கத்தில் அமர்ந்து காரை எடுத்தான்.


கார் கட்டிடத்தை விட்டு வெளியே வரும்வரை அமைதியாக இருந்தவள், “ச்ச… எப்படிப் பார்க்கிறானுங்க. இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் எதுக்கு வேலைக்கு வச்சு இருக்கீங்க?”


அபர்ணா எரிச்சலை ராம்மிடம் காட்ட… அவன் அவளைப் பார்த்துவிட்டு பார்வையைச் சாலைக்குத் திரும்பினான்.


“இவ்வளவு பெரிய கட்டிடத்தைக் கட்ட எவ்வளவு பேர் வேணும் தெரியுமா… ஆயிர கணக்குல இருக்காங்க. நான் ஒவ்வொருத்தரையும் இன்டர்வியூ பண்ணி எடுக்க முடியாது. எனக்கு வேலை நடக்கணும். எவ்வளவு பணம் இதுல போட்டிருக்கோம் தெரியுமா? ஒருநாள் வேலை நின்னா கூட எனக்கு நஷ்ட்டம்தான்.”


அவன் சொன்னது கேட்டதன் அடையாளமாக அபர்ணா தோளைக் குலுக்க…

“உன்னை யாரு இங்க வர சொன்னது? இனிமே இப்படி லூசு மாதிரி பண்ணாத.” என்றான்.


“நான் லூசுதான் உங்களைப் போய்ப் பார்க்க வந்தேன் பாருங்க.” என்றாள் அவளும் பதிலுக்கு.


எப்போதும் ஆறு மணிக்கு வீட்டிற்கு வருபவள், அன்று வரவில்லை என்றதும், அவளது பாட்டி செல்லுக்கு அழைத்தார்.


“கொஞ்சம் லேட் ஆகிடுச்சு பாட்டி. இன்னும் ஒரு மணி நேரத்தில வந்திடுவேன்.” என்றவள், செல்லை வைத்துவிட்டு. “என்னை அந்தப் பஸ் ஸ்டாப்ல விட்டுடுங்க.” என்றாள் ராம்மிடம்.


அவன் காது கேட்டது போலவே இல்லை. அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் டிராபிக் இல்லை. மேம்பாலத்தில் அவனது கார் சீறிப்பாய்ந்தது. அபர்ணாவால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது. சிறிது நேரத்தில் ராமிற்கு மனிஷிடம் இருந்து செல்லில் அழைப்பு வந்தது.

“அண்ணா எங்க இருக்கீங்க?” அவன் பதட்டமாகக் கேட்க, ப்ளுடூத் வழியாக இணைக்கபட்டிருந்ததால்… அபர்ணாவுக்கும் அவன் பேசியது கேட்டது.


குரலில் இருந்த பதட்டத்தை இருவருமே கவனித்தனர்.


“நான் இப்பத்தான் நம்ம சைட்ல இருந்து வந்திட்டு இருக்கேன். ஏன் டா சொல்லு?”


“இங்க ஒரு எமெர்ஜன்சி… நீங்க உடனே இங்க வர முடியுமா?”


“என்ன ஆச்சு?”


“அது போன்ல சொல்ல முடியாது. நீங்க நேர்ல வாங்க. ப்ளீஸ் சீக்கிரம் வாங்க. எனக்கு ரொம்ப டென்ஷனா இருக்கு.”


“சரி சொல்லு எங்க வரணும்?”


அவன் சொன்ன விலாசத்தைக் கேட்டதும், ராமிற்கு இன்னும் குழப்பமாகிவிட்டது. “இரு கொஞ்ச நேரத்தில் வந்திடுவேன். எதுனாலும் நான் வர்ற வரை வெயிட் பண்ணு.” என்றான்.


மேற்கொண்டு ராம் எதுவும் கேட்பதற்குள் மனிஷ் வைத்து விட்டான்.


மனிஷ் இவ்வளவு பதட்டம் கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையில் இருவருமே இருந்தனர். சோதனைக்கு என்று அதன்பிறகு ஒவ்வொரு சிக்னலிலும் நிற்க வேண்டியதாக இருந்தது.”


மீண்டும் மணிஷின் எண்ணிற்கு முயற்சி செய்தால்… அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. அது இருவருக்கும் இன்னும் பதட்டத்தைக் கொடுத்தது.


அவன் சொன்ன விலாசத்தைச் சென்று அடைந்தபோது… நன்றாக இருட்டிவிட்டது. இருவரும் காரில் இருந்து இறங்க… அந்த வீடே இருளில் முழ்கி கிடந்தது.


“இந்த இடம் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” அபர்ணா கேட்க,


“இது எங்க கம்பனி கெஸ்ட் ஹவுஸ் தான். வெளிநாட்டில இருந்து எங்க வாடிக்கையாளர்கள் வந்தா இங்கத்தான் தங்க வைப்போம்.”
விருந்தினர் வீடே ஒரு குட்டி மாளிகை போல் அழகாக இருந்தது.


“தனிப்பட்ட முறையில் ப்ரண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்கிறது கூட இங்க நடக்கும். அது மாதிரி வந்த இடத்தில எதாவது பிரச்சனை ஆகிடுச்சான்னு தெரியலை. மனிஷ் கொஞ்சம் குடிப்பான். அதுதான் கவலையா இருக்கு.”


அபர்ணாவுடன் பேசியபடி ராம் கேட்டை திறந்து கொண்டு வீட்டின் உள்ளே சென்றவன், வாயில் கதவில் கைவைக்க, அதுதானே திறந்து கொண்டது. உள்ளே கும்மிருட்டு.


இருவரும் உள்ளே கால் வைத்த நொடி, டமால் என ஒரு பெரிய சத்தம் கேட்க, அபர்ணா பயத்தில் அலற… ராம் அவளது கரத்தை பிடிக்க… அந்த நேரத்தில் விளக்குகள் அனைத்தும் பளிரென்று ஒளிர… டப்… டப்… என ஒலிக்கு இடையில்…. இருவர் மீதும் வர்ண காகிதங்கள் கொட்டியது.


“ஹாப்பிப் பர்த்டே ராம் அண்ணா.” எனக் கத்தியபடி அவன் வீட்டின் வானரப்படைகள் மறைவிலிருந்து வெளியே வந்தது. கூடவே வீட்டின் மற்ற உறுப்பினர்களும் வந்தனர். பிரகாஷின் இன்னொரு குடும்பம் மட்டும் இல்லை.


ராம்மின் பிறந்த நாள் இன்று…. இவர்கள் அவனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைக்க… அவனுடன் அபர்ணாவும் இருப்பதைப் பார்த்து, இப்போது இவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தனர். யாருடைய அதிர்ச்சி பெரிதென்று சொல்லவே வேண்டாம்.


“ஹே… அபர்ணா.” என இளையவர்கள் மகிழ… காயத்திரியும், சுமாவும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். சித்தப்பாக்கள் இருவரும் அவனது தனிப்பட்ட விஷயத்தில் எப்போதுமே தலையிட மாட்டார்கள். அதனால் ஆச்சர்யம் மட்டுமே. ஆனால் அதிகமாக அதிர்ந்தது அகிலாண்டேஸ்வரி பாட்டியும், ஸ்வர்ணாவும் தான்.


இருவரையும் ஜோடியாகப் பார்த்ததால்… அவர்கள் கற்பனை குதிரை தறிகெட்டு ஓடியது.


இன்னும் அபர்ணாவுக்குப் படபடப்பு நிற்கவில்லை. அவளைப் பார்த்து மனிஷ் சிரிக்க… “எருமை…. இது சர்ப்ரைஸா…. எனக்கு நெஞ்சு வலி வந்திருக்கும். “ என்றவள், அவனை அடிக்கத் துரத்த…


“நீ வர்றது தெரியாது அபர்ணா… இல்லைனா இன்னும் கொஞ்சம் ப்ளான் பண்ணி இருப்போம்.” என்றான் அவன்.


அதைக் கேட்டு அனைவருமே சிரிக்க… ராமிற்கும் சிரிப்பு வந்தது.


“அண்ணா, வாங்க வந்து கேக் வெட்டுங்க.” என மமதி அழைக்க…. அகில் ஒரு பெரிய கேக்கை கொண்டு வந்து மேஜையில் வைத்தான்.
தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த ஸ்வர்ணாவை ராம் அருகில் அழைத்தான்.

“அம்மா… வாங்க.” ஸ்வர்ணா அருகில் வந்ததும், ராம் கேக்கை வெட்டி, தன் அம்மாவுக்கு வாயில் கொடுத்தவன், அம்முவிடம் மற்றவர்களுக்குத் தட்டில் வைத்துக் கொடுக்கச் சொன்னான்.


“பாட்டி…” என அகிலாண்டேஸ்வரியின் அருகில் சென்று, அவர் காலில் விழுந்து வணங்கினான்.


“நல்லா இரு கண்ணா.”


“நானே இன்னைக்கு உங்களைப் பார்க்க வரணும்ன்னு தான் இருந்தேன். அதுக்குள்ளே இந்த வாலுங்க என்னவோ பண்ணிடுச்சுங்க.”


அவன் சொன்னதை அவர் அமைதியாகக் கேட்டுக்கொண்டாலும், அவர் என்ன நினைப்பார் என அவனால் ஊகிக்க முடிந்தது. அவன் அபர்ணாவோடு சுற்றியதாகத்தான் நினைத்துக் கொண்டு இருப்பார்.


அம்மு கொடுத்த கேக்கை வாங்கிய அபர்ணா, அவளை நலம் விசாரித்தாள்.

இளையப் பட்டாளம் அபர்ணாவை தனியாகத் தள்ளிக் கொண்டு சென்றது.


“ஹே… நீயும் அண்ணாவும் எப்படி ஒண்ணா வந்தீங்க?” மமதி விசாரணையை ஆரம்பிக்க,


“இதெல்லாம் கேட்பாங்களா…. அண்ணாவோட பிறந்த நாள், அதனால அவங்க எதாவது ப்ளான் பண்ணி இருப்பாங்க. நாமதான் நடுவுல டிஸ்டர்ப் பண்ணிட்டோம்.” மனிஷ் சொல்ல…


“அப்படினா ரெண்டு பேருக்கும் சம்திங்… சம்திங்கா.” என்றான் அகில்.


அவன் தலையில் தட்டிய அபர்ணா, “மண்ணாங்கட்டி. உங்க அண்ணன் எனக்கு லிப்ட் கொடுத்தார். இந்த மனிஷ் மட்டும் போன் பண்ணி டென்ஷன் பண்ணலைனா… நான் இந்த நேரம் ஒழுங்கா வீட்டுக்கு போய் இருப்பேன்.” என்றவள்,


“எல்லாம் உன்னாலதான். ஒழுங்கா வந்து எனக்கு ஆட்டோ பிடிச்சு கொடு…” என அவனை இழுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.
அவள் யார் அழைத்தும் அங்கு வரவில்லை… அதனால் யாரிடமும் சொல்லிக்கொள்ளவும் இல்லை.


அவள் செல்வது ராம் கண்ணில் படாமல் இல்லை. இன்றைக்கு எந்த அளவுக்கு அவளைக் காயப்படுத்தினோம் என்பதை அவன் அறிவான். இனி அவள் தன் பக்கம் கூடத் திரும்ப மாட்டாள் எனத் தெரியும். அவனும் அதைத்தான் விரும்பினான். ஆனால் அது சந்தோஷத்திற்குப் பதில் இரண்டு மடங்காக வலியை கொடுத்தது.


அவனின் முகம் வாடுவதை அகிலாண்டேஸ்வரியும், ஸ்வர்ணாவும் கவனித்துக் கொண்டுதான் இருந்தனர். அவர்கள் இருவரும் வேறு மாதிரி நினைத்துக் கொண்டனர்.


ஆட்டோவில் பயணம் செய்தாலும், பார்த்த காட்சிகள் எதுவும் கவனத்தில் பதியவே இல்லை. கதவு திறந்து விட்ட பாட்டியிடம் கூட எதுவும் பேசாமல் உள்ளே சென்றாள்.

 

இதே மற்ற நாட்களாக இருந்தாள்…. இந்நேரம் பொரிந்து தள்ளி இருப்பாள்.


“உங்க அம்மா ரெண்டு தடவை போன் பண்ணிட்டா. நீ வந்துட்டியன்னு கேட்டு.” என்றவரிடம், “நீங்களே நான் வந்துட்டேன்னு சொல்லிடுங்க. நான் நாளைக்குப் பேசுறேன். தலை வலிக்குது. காலையில எழுந்து வேலை பண்றேன். நீங்க எதுவும் பண்ணாதீங்க.” எனச் சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விட்டாள்.


பாட்டிக்கே ஆச்சர்யமாக இருந்தது. அலைந்ததில் அலுப்பாக இருக்கலாம் என நினைத்துக் கொண்டார்.


குளிக்கத் தேவையானது எடுத்துக் கொண்டு, குளியல் அறைக்குள் சென்று கதவை சாற்றிவிட்டு, ஷவரை திறந்து விட்டவள், அங்கேயே தரையில் உட்கார்ந்து அப்படி ஒரு அழுகை.


அபர்ணா இப்படியெல்லாம் ஒருநாளும் அழுதது இல்லை. அங்கே அழவைத்தவனும் மகிழ்ச்சியாக இல்லை. மகிழ்ச்சியை மட்டும் தருவது அல்ல காதல்… வலியையும் சேர்த்து தான் அனுபவிக்க வேண்டும்.

Advertisement