Advertisement


பனி சிந்தும் சூரியன்


அத்தியாயம் – 1


சென்னை அழ்வார்பேட் போட் கிளப் ஏரியாவில் வீடுகள் அனைத்தும் பிரம்மண்டமாகத்தான் இருக்கும், அதிலும் குறிப்பாக நந்தவனம் என அந்த இடத்திற்குப் பொருத்தமாகப் பெயரிடபட்டிருந்த வீடு, இன்னும் ஆடம்பரமாகக் காட்சி அளித்தது. ஏன் அந்தத் தெருவே விழாக்கோலம் கொண்டு இருந்தது எனச் சொல்லிவிடலாம்.


அந்த வீடு மட்டும் அல்ல, தெருவெங்கும் வரிசையாகச் சர விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்த இடமே பூலோக சொர்க்கம் போல் காட்சி அளித்தது.


வீதியிலேயே இப்படியென்றால்… உள்ளே கேட்கவே வேண்டாம். சரம்சரமாக மின்சார விளக்குகள் அந்தப் பிரமாண்டமான வீட்டை ஜொலிக்க வைக்க, வீட்டின் உள்ளேயும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஹாலின் மத்தியில் வட்டமாகச் சிறிய அழகான மேடை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது.


வரவேற்பு அறையிலிருந்து அழாக வடிவமைக்கபட்டிருந்த படிக்கட்டுகளில் மேலேறி சென்றால்… இடது பக்கம் வரிசையாக அறைகள் இருந்தது. வலது பக்கம் தேக்கு மரத்தில் அழகான வேலைபாடுகள் செய்யப்பட்டிருந்தது. அங்கு நின்று பார்த்தால்… கீழே இருக்கும் ஹால் மொத்தமும் தெரியும். அதே போல் அதற்கு மேலும் ஒரு தளம் இருந்தது.


கீழே ஹாலின் இடதுபுறம் சென்றால்… பெரிய டைனிங் ஹாலும், அதற்கு அடுத்து சமையல் அறையும் இருந்தது. வலதுபுறம் இரண்டு பெரிய படுக்கை அறைகள் இருந்தது.

வெளியே பெரிய தோட்டமும், பின்புறம் வேலை ஆட்கள் தங்கிக்கொள்ள இடமும் இருந்தது.

வீட்டை எல்லாம் நன்றாகவே சுற்றி பார்த்துவிட்டோம். ஆனால் இன்னும் வீட்டு ஆட்கள் யாரையும் தான் காணவில்லை. நாம சொன்னது கேட்டுவிட்டது போல… கண்ணாடியால் அமைந்த மின்தூக்கி தரைதளத்திற்கு வர… அதன் கதவு திறந்தது.


அன்று நடக்கும் விழாவிற்கு முதல் ஆளாக வந்தது, அந்த வீட்டின் மூத்த தலைமுறையைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி அம்மாள். முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல் உபாதைகளால், சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தாலும், இன்னும் கம்பீரம் குறையாத தோற்றம்.


முதல் வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்ததும், அதுவரை உடனிருந்த உதவியாளரை, செல்லும்படி பார்வையினாலையே அறிவுறுத்தினர். உதவியாளர் சக்கர நாற்காலியை கொண்டு சென்றதும், இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்தார்.


சந்தன நிற புடவையில், மெலிதாகச் சிவப்பு நிற கரையிட்ட பட்டு புடவையும், காதில் பெரிய வைர தோடும், கழுத்தில வைரமுகப்பு வைத்த முத்து மாலையும், கைகளில் வைர வளையல்கள் அணிந்து, முகத்திற்கு லேசான ஒப்பனை செய்து சந்தானம் வைத்திருந்தார்.


நேரம் இரவு எழு மணியை நெருங்க, தன் கைபேசியில் இளைய மகனை அழைத்தார்.


அம்மா எதற்காக அழைப்பார் என ஊகிக்க முடியாதா என்ன? அதனால் அவர் கேள்வி கேட்கும் முன்பே பதில் வந்தது.


“அம்மா இதோ வந்துட்டே இருக்கோம்.”


“விருந்தாளிங்க வர நேரம் ஆச்சு. அவங்க வரும்போது வரவேற்க யாரும் இல்லைனா நல்லா இருக்குமா?”


“தெரியும் மா… இதோ வந்துட்டோம்.” எனப் பிரதாப் போன்னை வைக்க,

“நமக்கு வரத் தெரியாதா? அதுக்குள்ள உங்க அம்மாவுக்கு என்ன அவசரம்?” என்ற காயத்ரி, கண்ணாடியில் தன் அலங்காரத்தைச் சரிபார்த்தபடி இருந்தார்.


“அவங்களை எதுக்குக் குறை சொல்லுற, விசேஷம் நம்ம பொண்ணுக்கு. அப்ப நாமதானே முன்னாடி நின்னு எல்லாம் செய்யனும்.”


“சரி ஆரம்பிக்காதீங்க, வாங்க போகலாம்.”


பிரதாப் கருப்பு நிற கால் சட்டையும், வெள்ளை நிறத்தில் சட்டையும், அதன் மேல் அதே நிற ஓவர் கோட் அணிந்து இருக்க, காயத்ரி சந்தன நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த அழகான வேலைப்பாடு செய்யப்பட்டிருந்த பட்டு புடவையை அணிந்து இருந்தார்.


இவர்கள் மட்டுமல்ல அந்தக் குடும்பத்தினர் எல்லோருமே அதே நிறத்தில்தான் உடை அணிந்து இருப்பார்கள். இந்த நிறம் என்று ஏற்கனவே பேசி வைத்து இருந்தனர்.


பிரதாப் தன் மனைவியோடு சென்று அம்மா அகிலாண்டேஸ்வரி முன்பு நிற்க, அவர் இருவரையும் எடைபோடுவது போல் பார்த்தார்.


“நீ கொஞ்சம் நகைகளைக் கம்மி பண்ணி இருக்கலாம். உன் பொண்ணு கூட இவ்வளவு நகை போடலை.”


அகிலாண்டேஸ்வரி சொன்னதற்குக் காயத்ரி எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.


“சரி ரெண்டு பேரும் போய் வர்றவங்களைக் கவனிங்க.” என இருவரையும் அனுப்பி வைத்தார்.


“நான் எவ்வளவு நகை போட்டிருந்தா, உங்க அம்மாவுக்கு என்ன? எதாவது என் மூட் அவுட் ஆகிற மாதிரி பேசுறதே வேலை. நம்ம பொண்ணு நிச்சயதார்த்தம் நான் கிராண்டா இருக்க வேண்டாமா?”


“சரி விடு.” எனப் பிரதாப் மனைவியைச் சமாதானம் செய்தபடி சென்றார்.


அவர்கள் சென்றதும் மின்தூக்கியின் கதவு மீண்டும் திறக்க… இந்த முறை அதிலுருந்து ஒரு கூட்டமே வந்தது. எல்லாம் அந்த வீட்டின் வாரிசுகள்தான். அவர்களோடு வீட்டின் மூத்த மருமகள், ஸ்வர்ணாம்பிகையும் வந்தார்.


“வா ஸ்வர்ணா, சோனாவை பார்த்தியா?”


“பார்த்துட்டேன் அத்தை.” என்ற ஸ்வர்ணாவும் தன் மாமியார் போலவே பட்டுபுடவை அணிந்து இருந்தார். பார்டர் மட்டும் சற்றுப் பெரிதாக இருந்தது.


ஸ்வர்ணாவுக்குச் சற்று கனத்த சரீரம். அவருக்கு ஐம்பது வயதுதான் ஆகிறது. ஆனால் பார்க்க அறுபது வயது தோற்றத்தில் இருந்தார். மனது சந்தோஷமாக இருந்தால்தான், உடலை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமிருக்கும்.


அவரைப் பார்க்க அகிலாண்டேஷ்வரிக்குக் கஷ்ட்டமாக இருந்தது. அவரின் வேதனை அறியாதவரா என்ன?


“இங்க உட்காரு ஸ்வர்ணா, என மருமகளைத் தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டார்.”


மீண்டும் மின்தூக்கியின் கதவு திறக்க, இந்த முறை வந்தது, அகிலாண்டேஸ்வரியின் கடைசி மகன் பிரேம்குமார், மருமகள் சுமா.


“நீங்களே இவ்வளவு லேட்டா வந்தா… அதுவும் இதே வீட்டுக்குள்ள இருந்திட்டு வர இவ்வளவு நேரம். போய் வர்றவங்களைக் கவனிங்க.” என அகிலாண்டேஸ்வரி அவர்களை விரட்ட,


“உங்க அம்மாவுக்கு மூத்த மருமகளைதான் பிடிக்கும்.” எனச் சுமா தன் கணவரிடம் குறைபட….


“அவங்க மட்டும்தான் எங்க அம்மா பார்த்துக் கொண்டு வந்த மருமகள்.” எனப் பிரேம்குமாரும் சிரித்துக்கொண்டே சொல்ல, சுமா அவரை முறைத்தார். ஆனால் அதில் சுத்தமாகக் கோபம் இல்லை.


விருந்தினர் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, அந்த வீட்டின் பெண் வாரிசு பிரவீணா தன் கணவர் சரண் மற்றும் பிள்ளைகளுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.


“நீயும் விருந்தாளி மாதிரி நேரத்துக்கு வர….” அகிலாண்டேஸ்வரி மகளையும் விட்டுவைக்கவில்லை.


“இவர் வர லேட் ஆகிடுச்சு மா….” என்றவர், ஸ்வர்ணாவின் பக்கம் பார்த்து, “நீங்க அப்பவே வந்துடீங்களா அண்ணி?” என விசாரிக்க….


“நான் சாயங்காலமே வந்துட்டேன்.” என்றார் அவரும் பதிலுக்கு.
பிரவீனா தன் மற்ற அண்ணிகளிடம் பேச செல்ல, ஸ்வர்ணா பார்வையால் தன் மகளை அழைத்தார்.


தாய் அழைத்ததும் வந்த அகிலா, பாட்டியின் பெயரை கொண்டிருப்பதால்… எல்லோரும் அவளை அம்மு என்றே அழைப்பார்கள்.


அம்மு தங்க நிற சுடிதாரில், சிவப்பு நிற துப்பட்டாவை ஒரு பக்கமாகப் போட்டிருந்தாள். சற்று புசினார்போல உடல்வாகு. ஆனால் வெகு கலையான முகம். அவள் அம்மாவை போலவே…

பேத்தியை ரசித்துப் பார்த்த பாட்டி, “அடுத்து உனக்கும் உங்க அண்ணனுக்கும்தான் கல்யாணம்.” என்றதும், அம்முவின் முகம் மாற,


“நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க மாட்டேன் பாட்டி.” என்றாள்.


“இனி நீ கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னா, உனக்கு என்கிட்டே நல்லா உதைகிடைக்கும். உனக்குப் பண்ணிட்டுதான் சோனாவுக்குப் பண்ணி இருக்கணும்.”


“நான் அவங்களையும் குறை சொல்ல முடியாது, சோனாவுக்கும் இருபத்திஅஞ்சு வயசு ஆகுது. உனக்கு இருபத்தியாறு… இனியும் உன் கல்யாணத்தைத் தள்ளி போட முடியாது. நான் சொன்னா சொன்னதுதான்.”


“நீங்க சொல்லிட்டே இருங்க பாட்டி, ஆனா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு என்னோட கம்பெனியை நல்ல இடத்துக்குக் கொண்டு வரணும். அது மட்டும் தான் என்னோட நினைப்பு.” என்ற அம்மு ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தில் வருகிறாள்.


“இப்படித்தான் நானும் சொல்லி பார்த்துட்டேன் கேட்க மாட்டேங்கிறா.” ஸ்வர்ணா கவலையாகச் சொல்ல,


“நான் பார்த்துகிறேன், நீ கவலைப்படாதே. அவ நாம சொன்னாத்தான் கேட்கமாட்டா, அவங்க அண்ணன் ராம் சொன்னா கேட்பா.”


“அவன்தான் சொல்ல மாட்டேங்கிறானே, தங்கச்சி கேட்டான்னு ஒரு டிவி சேனலை வாங்கிக் கொடுத்திருக்கான். இவளும் முழு நேரமும் அங்கதான் இருக்கா.”


“எல்லாம் நேரம் வரணும். கல்யாண யோகம் வந்திட்டா, யார் தடுத்தாலும் நிக்காது.” அகிலாண்டேஸ்வரி மருமகளுக்குச் சொல்வது போல, தனக்கும் சொல்லிக்கொண்டார். ஆனால் மனதிற்குள் மிகுந்த கவலை அவருக்கும் உண்டு.

“சரி அத்தை நான் கிளம்புறேன். அம்மு நீ அண்ணாவோட வந்திடு.”


“சரி மா…” என்றவள், தன் சித்தப்பா மற்றும் அண்ணன் பிள்ளைகளுடன் இணைந்து கொண்டாள்.


மருமகள் கிளம்பியதும் மாமியாரின் முகம் மாறினாலும், அவரால் தடுக்கவும் முடியவில்லை.


“சரி ஸ்வர்ணா போயிட்டு வா.” என்றார்.


ஸ்வர்ணா மற்ற யார் கவனத்தையும் கவராமல், அங்கிருந்த மின் தூக்கியில் பேஸ்மென்ட் சென்று, அவருக்காகக் காத்திருந்த காரில் எரிக் கொண்டார்.


தன் அம்மாவிடம் வந்த பிரவீனா, “அண்ணி கிளம்பிட்டாங்களா?” என்றதும், அவர் ஆமாம் என்று சொல்ல, தன் செல்லில் மூத்த சகோதரனை அழைத்தவர், “அண்ணா, அண்ணி கிளம்பியாச்சு. நீங்க வாங்க.” என்றாள்.


“வந்துட்டே இருக்கோம்.” எனப் பிரகாஷ் பதில்சொல்ல, பேசிக்கொண்டே பிரவீனா தன் தாயை பார்க்க, அவர் அவளை முறைத்து பார்த்தார். ப்ரவீனவுக்கு ஒரு நொடி சர்வமும் நடுங்கிவிட்டது.


முதலில் கோபமாக முறைத்த அகிலாண்டேஸ்வரியின் பார்வை, பிறகு வேதனையைக் காட்டியது. யாரோ உறவினர் அவரிடம் பேச வர, தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைத்தார்.


சிறிது நேரத்தில் அந்த இடத்தில் சலசலப்பு அதிகரிக்க, அகிலாண்டேஸ்வரிக்கு பார்க்காமலே யார் வருவது என்று தெரியும். மூத்த மகன் பிரகாஷும் ,அவனது இரண்டாவது மனைவி நீலிமாவும் தான் என்று. அவர் நினைத்தது போல், அவர்கள்தான் வந்தனர்.


சந்தன நிறத்தில் அழகான வேலைபாடுகள் அமைந்த டிஸைனர் புடவையில், அங்கங்கே சிவப்பு நிற கற்கள் பதித்து இருக்க, காதில் பெரிய வைரத் தொங்கட்டானும், கழுத்தில் வைர நெக்லஸ், வைர வளையல், ஏன் போட்டிருந்த கொண்டையைச் சுற்றிய பேண்டில் கூட வைர கற்கள் பதித்து இருக்க… நீலீமா நளினமாக நடந்து வந்தாள். அவளைப் பூலோக ரம்பை என்று சொன்னால் மிகை ஆகாது.


அவளோடு நெருக்கமாக நடந்து வந்த பிரகாஷ், நல்ல உயரமும், அதற்கேற்ற உடல்வாகுடன் இருந்தாலும், இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் நன்றாகவே தெரிந்தது.


வரும் வழியில் இருந்த உறவினர்களை எல்லாம் பார்த்து பேசியபடி வந்த நீலீமா, மாமியாரின் அருகில் வந்ததும், குனிந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டாள்.


“நல்லா இரு. எங்க அஞ்சலியை காணோம்.”


“வரா… வெளிய நின்னு நேகாவோட பேசிட்டு இருக்கா.”


சிறிது நேரம் சென்றே அஞ்சலி வர, அவளுடன் இணைந்து இன்னொரு புதிய இளம்பெண்ணும் நடந்து வந்தாள். அஞ்சலி தங்க நிறத்தில் காக்ரா சோலி அணிந்து வர, அந்த இன்னொரு பெண் சேலையில் இருந்தாள். அவள் இருந்த உயரத்திற்கும், மெலிதான உடல் வாகுக்கும், புடவை அவளுக்கு எடுப்பாக இருந்தது.


அவளைப் பார்த்த அகிலாண்டேஸ்வரிக்கு அவ்வளவு திகைப்பு, அருகில் இருந்த மகனிடம், “டேய் ! எனக்குத் தெரியாம உனக்கு இன்னொரு பெண்ணும் இருக்கா?” என அவர் நக்கலாகக் கேட்க, அதைக் கேட்ட பிரகாஷ் பதறி விட்டார்.


“அம்மா, அவ நீலீமாவோட அண்ணன் பொண்ணு அபர்ணா. துபாயில இருக்காங்களே அவங்க பொண்ணு.”


“ஓ…” என்றார் இன்னும் திகைப்பு விலகாமல். பின்னே அவள் பார்பதற்கு நீலீமா ஜாடையில் இருந்தாள். அச்சு அசல் என்று சொல்ல முடியாது. ஆனால் அஞ்சலி கூட அவள் அம்மாவை போல அவ்வளவு அழகு இல்லை. அபர்ணா அவள் அத்தையை விடவும் அழாக இருந்தாள். அவளின் உயரம் இன்னும் அவளுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது.


“பாட்டி….” என அகிலாண்டேஸ்வரியின் கன்னத்தில் அஞ்சலி முத்தமிட, அவள் முகத்தை வருடிவிட்டவர், அபர்ணாவை பார்க்க, அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.


இவ்வளவு அழகை வைத்துக் கொண்டு, இவள் யார் குடும்பத்தைக் கலைக்கப் போகிறாளோ என்றே அகிலாண்டேஸ்வரிக்கு முதலில் தோன்றியது. அதனால் அவர் அபர்ணாவை வரவேற்கவோ, ஏன்? வரவேற்புக்குரிய பார்வையைக் கூடக் கொடுக்கவில்லை.


“பாட்டி, இவங்க யார் தெரியுமா, எங்க மாமா பொண்ணு அபர்ணா. துபாயில இருந்து வந்திருக்காங்க. இனி இங்கத்தான் இருக்கப் போறாங்க.” என அஞ்சலி அபர்ணாவை அறிமுகம் செய்ய….


அவள் சொன்னது கேட்டது போலக் கூட அகிலாண்டேஸ்வரி காட்டிக்கொள்ளவில்லை. “நீ போய்ச் சோனா ரெடியான்னு பார்த்திட்டு வா.” என அவளை அனுப்பி வைத்தார். உடனே அஞ்சலி குதித்துக் கொண்டு ஓட… மாமியார் நடந்துகொள்வது மருமகளுக்குப் புரிந்தது.


“அஞ்சலி, அபர்ணாவையும் உன்னோட கூடிட்டு போ.” என அனுப்பி வைத்தார்.
இருவரும் படி வழியாகவே இரண்டாம் தளத்திற்குச் சென்றனர்.

அகிலாண்டேஸ்வரி பேசாததை அபர்ணா பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
சோனாவின் அறைக்கு அஞ்சலி செல்ல, அபர்ணா தான் வெளியவே இருப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பக்கம் அறைகள் என்றால்.. மறுபக்கம் இருந்த தேக்கு வளைவில் நின்று கீழே ஹாலை பார்த்துக் கொண்டு இருந்தாள்.


அந்த இடமே வெகு நிசப்தமாக இருந்தது. இதழ்களுக்குள் ஒரு பாடலை முனங்கியபடி புடவையைச் சரி செய்து கொண்டிருந்தவள், திடிரென அருகில் இருந்த மின் தூக்கியின் கதவு திறந்ததால்… திடுக்கிட்டுப் போய்ப் பார்த்தாள்.


அவளின் திகைத்த தோற்றத்தை பார்த்தபடி வெளியே வந்தவனோ… யார் இது என்பது போலப் பார்த்துக் கொண்டு இருந்தான். பிறகுதான் அவளின் பார்வையில் இருந்த திடுக்கிடலை கவனித்த்தான்.


“சாரி, பயந்துடீங்களா?”


ஆமாம், இல்லை என்று இரண்டுவிதமாகவும் அபர்ணா தலையசைக்க…. பார்த்தவனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது. அவள் யார் என்று தெரிந்தால்… இப்படிச் சிநேகமாகச் சிரித்து இருக்க மாட்டானோ என்னவோ?


அவனின் விரிந்த புன்னகையைப் பார்த்தவளுக்கோ மற்றது எல்லாம் மறந்தே போய்விட்டது. அவனின் சிரிப்பு அவளை வசீகரித்தது. அப்போதுதான் அவனை முழுவதுமாகப் பார்த்தாள்.


நல்ல உயரமும் அதற்கு ஏற்ற உடல் எடையுடன் முகத்தில் லேசான தாடியும் வைத்து இருந்தான். அவனது தோற்றம் விழாவுக்கு வந்தவன் போல இல்லை. பார்க்க களைப்பாகக் காணப்பட்டான். ஆனால் அப்போதும் ஆள் கவர்வது போல இருந்தான்.


“நான் ராம்.” என அவன் கைநீட்ட,


“அபர்ணா.” என இவளும் கைகொடுத்தாள்.


எப்படி இவளை நமக்கு இவ்வளவு நாள் தெரியாம இருந்தது. சோனாவோட ப்ரண்டா இருக்குமோ…. என அவனாகவே நினைத்துக் கொண்டான்.


“கீழ எல்லோரோட இருக்கலாமே, ஏன் தனியா இருக்கீங்க?”


“இல்லை, எனக்கு இங்க அவ்வளவா யாரையும் தெரியாது.” அபர்ணா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சோனாவின் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்க,


“சாரி, நான் போய் ரெடி ஆகணும். ஏற்கனவே லேட்.” என்றவன், இன்னொரு அறைக்குள் சென்றான்.


அஞ்சலிதான் வெளியே வந்தது. “வா அபர்ணா..” என அவள் படி இறங்க, முதல் தளத்திற்கு வந்ததும், “நான் இங்கயே இருந்து பார்க்கிறேன்.” என அபர்ணா சொல்ல, அஞ்சலி சரி என்று அவளை விட்டு சென்றாள்.


அந்தத் தளத்தில் சில இருக்கைகள் போடபட்டிருக்க, அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். இன்னும் சிலரும் அங்கு இருந்தனர்.


ராம் வேகமாகக் குளித்துத் தயாராகிக் கீழே சென்றான். அவனைப் பார்த்ததும் அந்த வீட்டின் இளையபட்டாலம் அவனைச் சூழ்ந்து கொண்டது. அவன் சிவப்பு நிற சட்டையும், வெள்ளை நிறத்தில் பேண்ட் மற்றும் கோட் அணிந்து இருந்தான்.


அதை வைத்தே அபர்ணாவுக்கு அவன் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் முக ஜாடையும் பரிட்சையமாக இருந்தது. அஞ்சலி வந்த பிறகு அவனைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்வோம் என நினைத்தாள்.


ராம் சென்று தனது பாட்டியை பார்க்க, “வந்திட்டுயா கண்ணா, நீ வந்ததும் தான் இந்த வீடே நிறைஞ்சு இருக்க மாதிரி இருக்கு.” எனப் பேரனின் கன்னம் வழித்தவர், அவன் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டார்.


அதை அந்த வீட்டின் இளைய தலைமுறையினர் ஆசையாகப் பார்க்க, அஞ்சலியின் முகம் மட்டும் மாறியது. இப்படித் தன்னை ஒருநாளும் பாட்டி கொஞ்சியது இல்லை என நினைத்தாள்.

“ஸ்வர்ணா இப்ப கொஞ்ச நேரம் முன்னாடிதான் கிளம்பினா.”

“தெரியும் பாட்டி, அம்மா போன் பண்ணாங்க.”


அப்போது பிரகாஷும், நீலிமாவும் வர, ராமின் முகம் கடினமாகியது. அவன் அங்கிருந்து செல்லப் பார்க்க, பிரகாஷும், நீலிமாவும் அவனிடம் வலிய பேச, அவர்கள் கேட்டதற்குப் பதில் சொன்னவன், அங்கிருந்து விலகி சென்றான்.


ராம் அதன்பிறகு கொஞ்சம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் இருந்தான். பிறகுதான் அவனுக்கு அபர்ணாவின் நினைவு வந்தது. அவள் எங்கே என்பது போலப் பார்வையால் தேடினான். கீழே அவள் இல்லை என்றதும், அவன் தலையை உயர்த்தி மேலே பார்க்க, அபர்ணாவும் அவனைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

இருவரின் பார்வையும் தழுவ, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். முதல் சந்திப்பிலேயே ஒருவர் மீது மற்றவருக்கு ஈர்ப்பு உண்டானது என்னவோ உண்மை. ஆனால் வரும் காலங்களில் அந்த ஈர்ப்புக் காதலாக மாறுமா?


Advertisement