Advertisement

பனி சிந்தும் சூரியன்



இறுதி அத்தியாயம் 1



ராம் கொஞ்சம் அகிலாண்டேஸ்வரியிடம் கடுமையாகப் பேசியது போலவே அபர்ணாவுக்குத் தோன்ற, “நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க பாட்டி. பசங்களுக்கு அவங்க அப்பாதான் ஹீரோ. ராம்க்கு இன்னும் அவங்க அப்பா அப்படிப் பண்ணதை ஏத்துக்க முடியலை.” என்றாள் சமாதானம் செய்யும் விதமாகவே.


“இதை நீ எனக்குச் சொல்லனுமா? எனக்கு அவனைத் தெரியாதா?” என்றார் அவரும் நயமாகவே.


இவர்கள் இருவரும் பேசியதை ஸ்வர்ணா வெளியே நின்று கேட்டே இருந்தார். விழா முடிந்து வீட்டிற்கு வந்ததும், அபர்ணா ராம்மை திட்டினாள்.


“உங்களுக்கு உங்க அப்பா மேல கோபம்ன்னா அதை அவர்கிட்ட காமிங்க. ஏன் உங்க பாட்டிகிட்ட காம்மிக்கிறீங்க. அவங்களுக்கு எவ்வளவு வயசு ஆகுது? தப்பே செஞ்சாலும் அவங்க பிள்ளையைப் பத்தி அவங்ககிட்ட பேசினா கஷ்ட்டமா இருக்காதா.”


“இனி நான் அவங்க கிட்ட அப்படிப் பேசலை…” என்றான் ராம்.
ராம் ரிஷியுடன் அறைக்குச் சென்றுவிட, அபர்ணா ஸ்வர்ணாவிடம் நடந்ததைச் சொன்னாள்.


“அகிலாவை விட இவர்தான் அத்தை மனசு அளவுல ரொம்பப் பதிக்கப் பட்டிருக்கார். மாமா உங்களுக்குப் பண்ணதை இவரால இன்னும் கூட மறக்க முடியலை.” என்றாள். ஸ்வர்ணா யோசனையில் இருந்தார்.


நீலீமாவிற்கு வாழ்க்கையே வெறுத்து போய் விட்டது. மகளும் சொன்ன பேச்சை கேட்கிறாள் இல்லை. கணவரும் வாய்க்கு வந்ததைப் பேசிவிட்டு செல்கிறார்.
விழாவுக்குச் சென்று விட்டு வந்ததில் இருந்து, ப்ரகாஷ் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே இருந்தார்.


“அங்கே எல்லோரும் சந்தோஷமா இருக்காங்க. ஆனா இந்த வீட்ல என்னால நிம்மதியா கூட இருக்க முடியலை.” என அவர் கோபமாகக் கத்த.


“அங்கேயே வேணா நீங்கும் போங்களேன். உங்களை யாரும் தடுக்கலை.” என நீலீமாவும் கோபத்தில் பதிலுக்குக் கத்த,


“என்னால போக முடியாதுன்னு திமிர்ல சொல்றியா?”


“திமிர்ல எல்லாம் சொல்லலை. போய்ப் பாருங்க தெரியும்?” என்றாள் கிண்டலாக.


“உங்களை நம்புறதுக்கு, இன்னும் அவங்க எல்லாம் இளிச்சவாயன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? ராம் உங்களைக் கழுத்தை பிடிச்சு வெளிய தள்ளுவான்.”


அதுவரை வீரமாகப் பேசிக் கொண்டிருந்த ப்ரகாஷ், இதைக் கேட்டதும் துவண்டு போய்ச் சோபாவில் உட்கார…


“உங்களை நம்பி வந்ததுக்கு, என்னைக் கேட்க கூடாத கேள்வி எல்லாம் கேட்டுடீங்க இல்லை.”


“என்னோட சுயத்தை இழந்து, சுயமரியாதை இழந்து, அதோட நீங்க பண்ண தவறுக்கு எல்லாம் சேர்த்து, நான் கெட்ட பேர் வாங்கினேன்.”


“வாழ்க்கையில ஒரு நிமிஷம் சறுக்கினா… காலம் முழுக்க நிம்மதி இல்லாம போயிடும்ன்னு, எனக்கு நல்லா புரிய வச்சுடீங்க.”


“ஸ்வர்ணா அக்காவுக்காவது நல்ல பிள்ளைகள் இருக்காங்க. அதாவது அவங்களுக்கு நிம்மதி. ஆனா எனக்கு என் பொண்ணும் சரி இல்லை.”


“ரெண்டு பேரும் என்னவோ பண்ணுங்க. உங்களுக்கு என் கூட இருக்கனுமா இருங்க. இல்லை போகனுமா போங்க. நானா உங்களைப் போன்கன்னு சொல்ல மாட்டேன்.”


“ஏற்கனவே குடும்பத்தைப் பிரிச்சவன்னு பேர் வாங்கிட்டேன். இனி புருஷனை துரத்தி விட்டேன்னு பேர் வாங்க தயாரா இல்லை.”


“ஆனா நான் இனி எதுக்கும் உங்களை நம்பி இருக்கிறதாவும் இல்லை.” என்றவள் உள்ளே சென்று விட, நீலீமா பேசியதை அஞ்சலியும் கேட்டு இருந்தாள். தன்னால் தான் பெற்றவர்களுக்கு இடையே பிரச்சனை எனப் புரிந்தது.


நான்கு நாட்கள் சென்று, வீட்டினர் எல்லோரும் இருக்கும் போது, ஸ்வர்ணா, “ராம் நான் உங்க அப்பாவை விவாகரத்து பண்ணலாம்ன்னு இருக்கேன்.” என்றார்.


இப்போது என்ன திடிர்ன்னு என எல்லோரும் பார்க்க, “இத்தனை வருஷமா வெளியில் அவர் வேண்டாம்ன்னு இருந்தாலும், மனசுல அவரைத் தூக்கி சுமந்திட்டே இருந்திட்டேனோன்னு நினைக்கிறேன்.”


“அவர் என்ன என்னை வேண்டாம்ன்னு சொல்றது. நான் சொல்றேன், இனி பெயர் அளவுல கூட எனக்கு அவர் வேண்டாம்.” என்றார் உள்ளிருந்து அழுத்தமாக.
ஸ்வர்ணா முகத்தில் வருத்தமோ, கவலையோ துளி கூட இல்லை. தோற்றத்தில் ஒரு நிமிர்வு, ஏன் சற்றுக் கர்வமாகக் கூட இருந்தார்.


ராம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் முகத்தில் எல்லை இல்லாத நிம்மதி தெரிந்தது. அகிலாவும் அப்படியே இருந்தாள். ஸ்வர்ணா அபர்ணாவை பார்க்க, உங்கள் முடிவு சரி என்பதாக, அவள் அவரைப் பார்த்து நிறைவாகப் புன்னகைத்தாள்.


அன்று மாலை ஸ்வர்ணா, ராம், அபர்ணா மற்றும் ரிஷியுடன் பெரிய வீட்டிற்குச் சென்றனர். அகிலாண்டேஸ்வரியிடம் சொல்லி ஏற்கனவே ப்ரகாஷ் நீலிமாவை அங்கே வரவழைத்து இருந்தனர்.


வீட்டின் சின்ன உருப்படிகளை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு, பெரியவர்கள் எல்லோரும் ஹாலில் இருந்தனர்.


ஸ்வர்ணா அகிலாண்டேஷ்வரியிடம் தான் பேசினார். “அத்தை, உங்க பிள்ளை அன்னைக்கு டைவர்ஸ் கேட்டபோது, நான் மட்டும் இருந்திருந்தா எப்பவோ அவரைத் தலை முழுகிட்டுப் போயிருப்பேன். ஆனா எனக்கு ரெண்டு பிள்ளைங்க இருந்தாங்க. உங்க பிள்ளை வேணா அவருக்கு ரெண்டு பிள்ளைகள் இருந்ததை மறந்திருக்கலாம். ஆனா என்னால முடியலை. அதனால அப்போ நான் விவாகரத்துக்குச் சம்மதிக்கலை.”


“ஆனா இனி உங்க பிள்ளையோட பெயர் அளவுல கூட நான் சேர்ந்திருக்க விரும்பலை. அதனால நான் விவகரத்து கொடுக்கிறேன்.” என்றவர், தான் கையெழுத்து இட்ட விவாகரத்துப் பத்திரத்தை அங்கிருந்த மேஜையில் வைத்தவர், “எனக்கு எந்த ஜீவனாம்சமும் வேண்டாம். அவரோட சொத்தும் எங்களுக்கு எதுவும் வேண்டாம்.”


“என் பிள்ளை சம்பாதிக்கிறது எங்களுக்குப் போதும்.” என்றவர், அடுத்துச் செய்ததுதான் எல்லோரையும் இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஸ்வர்ணா தன் தாலியை கழட்டி, அந்தப் பத்திரத்தின் மீது வைத்தார்.


அதை பார்த்து ப்ரகாஷ் நீலீமா இருவரும் அழுதே விட, ஸ்வர்ணா திரும்பி செல்ல, அவர் முன்பு வந்து நின்ற ப்ரகாஷ், “நீ அன்னைக்கு விவகரத்து கொடுத்திருந்தா எனக்கு எதுவும் பெரிசா தெரிஞ்சிருக்காது. ஆனா இன்னைக்கு நீங்க எல்லாம் வேணும்ன்னு நான் நினைக்கும் போது, கொடுக்கிறியே… ரொம்ப வலிக்குது ஸ்வர்ணா.” என்றார்.


“நம்ம ரெண்டு பேருக்குள்ள எப்பவோ முடிஞ்சு போச்சு. நான் எப்பவும் உங்க பிள்ளைகளை உங்களோட பேச வேண்டாம்ன்னு சொன்னது இல்லை. இப்பவும் அவங்க உங்களை மன்னிச்சா, எனக்கு ஒன்னும் இல்லை.”


ஸ்வர்ணா சொன்னதைக் கேட்ட ப்ரகாஷ் திரும்பி ராம்மை ஏக்கமாகப் பார்க்க,

“நீங்க செஞ்சது தவறுன்னா மன்னிக்கலாம். நீங்க செஞ்சது துரோகம். அதை எங்களால ஒருநாளும் மன்னிக்க முடியாது.” என்றான்.


“அம்மா, நீங்களாவது இவன்கிட்ட சொல்லுங்க மா…” என ப்ரகாஷ் அகிலாண்டேஸ்வரியை பார்க்க,


“இனி நான் என்னடா சொல்றது? அவதான் தாலியை கழட்டி கொடுத்திட்டாளே… இதை எல்லாம் நீதான இழுத்து வச்ச… இப்ப அனுபவி. என்னை இந்தக் கொடுமை எல்லாம் பார்க்க வச்சிட்டியே.” என்றார் கண்ணீருடன்.
கடைசியாக நீலீமா எழுந்து வந்தாள். “என்னை மன்னிச்சிட்டேன்னு ஒரு தடவை சொல்லிடுங்க அக்கா. இல்லைனா நான் செத்தா கூட எனக்கு நிம்மதி இருக்காது.” என்றாள்.


“ச்சி பைத்தியம் மாதிரி பேசாத. உன்னை மன்னிக்க ஒண்ணுமே இல்லை. நீ இல்லைனா இவர் வேற ஒருத்தியை கொண்டு வந்திருப்பார். இவர் ஒழுங்கா இருந்திருந்தா, நீ ஏன் எங்களுக்கு நடுவுல வந்திருக்கப் போற. எனக்கு உன் மேல கோபமே இல்லை.”


“இனியாவது நீ உரிமையான பொண்டாட்டியா வாழு.” என்றார் ஸ்வர்ணா தெளிவாக.


மன்னிப்பே கூடச் சில நேரம் பெரிய தண்டனையாக மாறிவிடும். இப்போது நீலீமாவுக்கு அப்படித்தான் இருந்தது. அவர்கள் யார் முகத்தையும் பார்க்க முடியாமல் கூசிப் போனாள்.


ப்ரகாஷ் ராம்மின் கையில் இருந்த ரிஷியை ஏக்கமாகப் பார்க்க, அவரை மதியாமல், ராம் ஸ்வர்ணாவை அழைத்துக் கொண்டு வெளியில் சென்றான்.  வாழ்க்கையில் தோற்றது ஸ்வர்ணா அல்ல ப்ரகாஷ் தான்.


ஸ்வர்ணா காரில் ஏறும் முன், அனைவரையும் திரும்பி பார்த்து புன்னகைத்தார். அதில் எனக்கு ஒன்னும் வருத்தம் இல்லை, நான் ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறேன் எனக் காட்டுவது போல இருந்தது.


ராம் அவரிடம் ரிஷியைக் கொடுத்து விட்டு காரை எடுக்க, அவன் பக்கத்தில் அபர்ணா அமர்ந்தாள். அந்தக் குடும்பம் அங்கிருந்து லேசான மனதோடு சென்றது.
ஸ்வர்ணா இப்போது மிக லேசாக உணர்ந்தார். அவருக்குச் சிரிப்புக் கூட வந்தது. காரில் இருந்து இறங்கிய தாயின் மகிழ்ச்சியான முகத்தைப் பார்த்து அகிலாவும் சந்தோஷபட்டாள்.


எங்க அம்மாவை எங்க அப்பா விட்டுட்டார் என்பதுதான் இரு பிள்ளைகளின் வருத்தமே… இப்போது, எங்க அம்மா அவரை வேண்டாம்ன்னு தூக்கி போட்டுடாங்க என்றானதில், இருவருக்கும் மகிழ்ச்சியே.


அபர்ணாவுக்கு ஸ்வர்ணா உள்ளுக்குள் வருந்துகிறாரோ என ஒரு கவலை. அதனால் அவரைத் தனியே விடாமல் அவரோடு எதாவது கதை அடித்தபடி இருந்தாள்.


“இன்னைக்கு நாம நம்ம ஹோம் தியேட்டர்ல படம் பார்க்கலாம்.” என அவள் சொல்ல, எல்லோரும் சரி என்றனர்.


ரஜினிகாந்தின் பேட்டை படத்தை ஓடவிட்டு, எல்லோருமாக உட்கார்ந்து பார்த்தனர். தனக்காகத்தான் செய்கிறாள் என ஸ்வர்ணாவுக்குப் புரியாமல் இல்லை.


மறுநாள் மாமியார் மருமகள் மட்டும் சமையல் அறையில் இருந்தனர். “நீ என்னையே பார்க்காத. நான் நல்லாத்தான் இருக்கேன். என் பிள்ளைங்க முகத்தில் இப்பதான் ஒரு சந்தோஷம் இருக்கு. நான் இந்த முடிவை முன்னாடியே எடுத்து இருக்கணும். ஏனோ எனக்கு அப்ப தைரியம் வரலை.”


“உன்னாலதான் நான் இன்னைக்கு இவ்வளவு தைரியமா, நம்பிக்கையா இருக்கேன். நல்லவேளை வேற எதோ நினைச்சு உன்னை நான் வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா…”

அவர் பேசும் போது இடையில் நுழைந்த அபர்ணா, “நான்தான் உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லணும் அத்தை. நீங்க இப்படி ஒரு திடமான முடிவு எடுத்ததினாலதான், உங்க பையன் ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கார். இல்லைனா இன்னும் கொஞ்ச நாள்ல. உங்க பையனுக்குப் பிபி வந்திருக்கும்.”என அவள் சிரித்துக் கொண்டு சொல்ல,


“அது என்னவோ உண்மைதான்.” என்றார் ஸ்வர்ணாவும் புன்னகையுடன்.

அந்தக் குடும்பத்தில் அன்பு இருந்தது, நம்பிக்கை இருந்தது, அதோடு புரிதலும் இருந்தது.  அதனால் அங்கே இனி மகிழ்ச்சிக்கு குறைவு இருக்காது.




 

Advertisement