காற்றின் மொழி
அத்தியாயம் 7
ஓவியா கருவுற்று இருக்க… வாசுவுக்கும் சென்னைக்கு வேலை மாற்றம் கிடைக்க, அவன் மனைவியோடு அங்கே தனிக் குடித்தனம் சென்றுவிட்டான்.
“நல்லவேளை ஓவியா தப்பிச்சா. இனிமேவாவது அவ அங்க போய் நிம்மதியா இருப்பா.” ஸ்வேதா சந்தோஷப்பட…
“நான் நினைக்கிறேன், சென்னைக்கு வேலையை மாத்தி கொடுக்கச் சொல்லி, வாசுதான் கேட்டிருப்பான். இங்க இருந்தா அவங்க அம்மா பொண்டாட்டியை இன்னும் ஆட்டித்தான் வைப்பாங்கன்னு அவனுக்குத் தெரியும். அதுதான் வேலையை மாத்திட்டு போயிட்டான்.” என்றான் நந்தா.
பிரசவம் முடிந்து, குழந்தை பெற்ற பிறகு, ஓவியா அங்கே வரட்டும் எனக் கஸ்த்தூரி தலைகீழ் நின்று பார்த்தார். ஆனால் வாசு ஒத்துக் கொள்ளவே இல்லை.
அவனுக்குத் தெரியும், பிரசவம் வரையும் அவர் ஒவியாவைத்தான் எல்லா வேலைகளையும் செய்யப் போடுவார் என்று.
மருமகள் மசக்கை என்று தெரிந்த பிறகும், கஷ்தூரி அவளை முன்பு போலவே வேலை வாங்க, அதுவும் வாசுவின் சகோதரி லீவுக்கு வந்திருக்க, அவளுக்கு அவள் குழந்தைகளுக்கு, காலையில் குடிக்கப் பால் முதற்கொண்டு, அவர்கள் இருக்கும் இடம் சென்று, ஓவியா கொடுக்க வேண்டும்.
ஓவியா சும்மாவே ஆள் மிகவும் ஒடுக்கம். இதில் அதிகமாக வேலை பார்த்து குழந்தைக்கு எதாவது ஆகி விட்டால்… அதுவும் தன்னைப் போல் குழந்தைக்கு எந்தக் குறையும் வந்துவிடக்கூடாது என வேறு, வாசுவுக்கு ஒரு அச்சம்.
அவன் அம்மா மாறமாட்டார் என்று தெரியும். அதனால்தான் வேலையை மாற்றிக் கொண்டு சென்றுவிட்டான்.
ஸ்வேதா ஒவியாவுக்காகச் சந்தோஷப்பட்டாள். ஆனால் இனி இவளுக்குப் பாவம் பார்ப்பது யார்?
வாசுவுக்குத் திருமணம் செய்த ஒரு வருடமாக, கஸ்தூரி எந்த வேலையும் பார்க்கவில்லை. உட்கார்ந்து கொண்டு மருமகளை நன்றாக வேலை வாங்கினார். இப்போது ஓவியா சென்றதும், வேலை பார்க்க உடம்பு வணங்கவில்லை.
கை வலிக்குது, கால் வலிக்குது என அக்காவிடம் வந்து புலம்புவர். “இவ தான் அக்கா, என் மகனுக்கு எதோ சொல்லிக் கொடுத்து, வேற ஊருக்கு இழுத்திட்டு போயிட்டா.” என மருமகளையும் வசை பாடுவார்.
சிவகாமி மனம் கேட்காமல் தங்கைக்குக் குழம்பு, பொரியல் என அவர் போகும் போது கொடுத்து அனுப்புவர். மகனும் இல்லாததால்… கணவர் வேலைக்குச் சென்றதும், கஸ்தூரி இப்போது தினமுமே இங்கே வந்துவிடுவார்.
“அம்மா, நீங்க தேவை இல்லாம இழுத்து வச்சுக்கிறீங்க. ஒரு அளவோட நிறுத்துங்க.” என நந்தா சொல்லி பார்த்து விட்டான்.
“அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்லை. பாவம் அவ, அவளுக்கே உடம்பு முடியலை. பையன் வேற கூட இல்லை.” இப்படி எதாவது சிவகாமி சாக்கு சொல்லுவார்.
ஸ்வேதா எதையும் கண்டுகொள்ளவில்லை. என்கிட்ட வராத வரை உங்களுக்கு மரியாதை என்பது போல இருந்தாள். சிவகாமி மதியம் சமையல் மட்டும்தான் செய்தார். மற்ற எல்லா வேலைகளையும் ஸ்வேதா செய்து விட்டு, அவள் அப்பா ஆபீஸ்க்கும் சென்று வந்தாள்.
நந்தா அவளை மிகவும் நன்றாகப் பார்த்துக் கொண்டான். அதனால் அவள் வேறு எதையும் பெரிது படுத்தவில்லை.
“முடியலைனா செய்யாத ஸ்வேதா. ஆள் வச்சுக்கோ.” என்பான். நந்தா ஸ்வேதாவை அதிகம் தாங்குவதைப் பார்த்து, அக்காவுக்கும் தங்கைக்கும் கடுப்பாக இருந்தது.
ஸ்வேதா எவ்வளவு நன்றாகச் சமைத்தாலும், சிவகாமி வாயில் இருந்து நன்றாக இருக்கிறது என்ற சொல், உதிரவே உதிராது.
“இது இப்படி இருந்திருக்கலாம், இதுல இதைப் போட்டிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.” என்றுதான் சொல்லுவார். மருமகள் சமையல் நன்றாக இருக்கிறது என ஒத்துக் கொள்ளவே மனம் வராது.
நந்தாவுக்கு அவர் செய்வது கடுப்பாக இருக்கும். இதற்கு அவர் ஒன்றும் சொல்லாமலே இருக்கலாம் என நினைத்துக் கொள்வான்.
“அம்மா, முதல்ல நல்லா இருக்குன்னு சொல்லுங்க மா… அப்புறம் எதாவது குறை இருந்தால் சொல்லலாம்.” என்றால், காதிலேயே வாங்க மாட்டார்.
அம்மாவுக்கும் சேர்த்து நந்தாவே, “நல்லா இருக்கு ஸ்வேதா.” எனச் சாப்பிடும் போது சொல்லி விடுவான்.
இவர் என்ன செய்தாலும் குறை தான் சொல்லுவார் என்ற எண்ணம் ஸ்வேதாவுக்குப் பதிந்து போய் விட… மாமியாருக்கு என்று எதையும் ஆசையாகச் செய்ய மாட்டாள். கடனே என்றுதான் செய்வாள்.
அதே ஒரு சின்னப் பாராட்டு அவரிடம் இருந்து வந்திருந்தால்… அவளுக்கும் செய்து கொடுக்க வேண்டும் என்ற அசை வரும். பாராட்ட கூட வேண்டாம், குறையாவது சொல்லாமல் இருக்கலாம் அல்லவா. குறை சொல்லாமல் இருக்க அவரால் முடியாது.
அந்த வார இறுதியில் முரளி வந்திருக்கிறான் என்று ஸ்வேதா பிரியாணி செய்தாள். முதல் முறையாக ஆம்பூர் பிரயாணி செய்திருந்தாள். சீரகசம்பா அரிசியில் முதல் முறையாகச் செய்வதால்… நீரின் அளவு தெரியாமல்… பிரியாணி கொஞ்சம் குழைந்து போய்விட்டது.
அரிசி குழைந்து இருந்தாலும், மசாலா எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்திருந்தால்… சுவை நன்றாகவே இருந்தது.
“கொஞ்சம் குழைஞ்சிச்சு…” எனச் சொல்லியபடிதான் அவளே பரிமாறினாள்.
“பரவாயில்லை அண்ணி, நம்ம வீட்டு ஆளுங்க தான… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.” என்றான் முரளி. ஆனால் சாப்பிட்டு பார்த்தவன், “டேஸ்ட் சூப்பரா இருக்கு அண்ணி.” என்றான்.
“குழைந்தாலும் நல்லா டேஸ்ட்டா தான் இருக்கு.” என்றான் நந்தாவும்.
“இது என்ன பிரியாணியா? தக்காளி சோறு மாதிரி இல்ல இருக்கு. கொஞ்சம் தேங்காய் கசகசா எல்லாம் ஊத்தி இருந்தா…நல்லா இருந்திருக்கும்.” என எப்போதும் போலச் சிவகாமி குறை சொல்ல,
எப்போதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஸ்வேதாவால், இன்று அப்படி இருக்க முடியவில்லை. இன்று அவளுக்கே நன்றாக வரவில்லை என மனதிற்குள் ஒரு எரிச்சல் இருக்க… அதை அதிகப்படுத்துவது போலச் சிவகாமி பேசி வைக்க,
“உங்களுக்குக் குறை மட்டும்தான் சொல்லத் தெரியுமா?” என ஸ்வேதா கேட்டே விட்டாள். சிவகாமியின் முகம் உடனே மாற,
“என்ன பேச்சு இது ஸ்வேதா?” என நந்தா வேறு அவளை அதட்டி விட,
“ஆமாம் எப்பவும் என்னையே சொல்லுங்க. என்ன பண்ணலும் குறை தான் சொல்றாங்க. அதை ஒன்னும் கேட்காதீங்க.” என்றவள், கோபமாக அறைக்குள் செல்ல,
“ஸ்வேதா…” என நந்தா அழைக்க அதைக் கண்டுகொள்ளாமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
முரளிக்குதான் தர்மசங்கடமாகப் போய்விட்டது. அதை உணர்ந்த நந்தா, “நான் பார்த்துகிறேன், நீ சாப்பிடு.” என்றவன், “அம்மா அவனுக்குப் பார்த்து எடுத்து வைங்க.” என்றவன், ஸ்வேதாவை பார்க்க சென்றான்.
ஸ்வேதா கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள். “ஏன் ஸ்வேதா இன்னைக்கு இப்படிப் பண்ற? அதுவும் முரளி வந்திருக்கும்போது. அவன் என்ன நினைப்பான்?” என அவன் கேட்டதும், எழுந்து உட்கார்ந்தவள்,
“சும்மா என்னையே சொல்லுங்க. எனக்கு இன்னைக்குப் பீரியட்ஸ் வேற, எவ்வளவு வலி தெரியுமா? அதோட நின்னு பண்ணேன். எனக்கே சரியா வரலைன்னு எரிச்சல், இன்னைக்கும் குறை சொல்லணுமா?”
“அவங்க குணம் தெரிஞ்சது தான உனக்கு.”
“ஆமாம் எப்பவும் நானே பொருத்து போகணும். சரி விடுங்க. நீங்க போய்ச் சாப்பிடுங்க.” என்றாள்.
“நீயும் வா.”
“நான் வரலை, எனக்கு வயிறு வலிக்குது. நான் தூங்கணும்.” என்றவள், மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டாள். இன்னும் அழுகை தான் வந்தது.
வெளியே முரளி வேறு இருப்பதால்… நந்தா மீண்டும் அங்கே சென்றான்.
அவனைப் பார்த்ததும், “நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு உன் பொண்டாட்டி இந்த ஆட்டம் ஆடுறா? நான் இனி இந்த வீட்ல வாயே திறக்கலை பா…நாம பேசினாலே குத்தம் தான்.” என்றார் சிவகாமி.
“அம்மா, நீங்க வேற ஆரம்பிக்காதீங்க. அவளுக்கு உடம்பு முடியலை. அதோட முரளி வந்தான்னு ஆசையா பிரியாணி செஞ்சு, அதுவும் நல்லா வரலைன்னு அவளுக்கு வருத்தம். இதுல நீங்களும் குறை சொன்னதும், அவளுக்குக் கோபம் வந்திடுச்சு. வேற ஒன்னும் இல்லை.”
“நான் என்ன விருந்தாளியா அண்ணா? அண்ணி ஏன் இப்படி முடியாத நேரத்தில கஷ்ட்டபட்டு செய்யணும். அதுவும் வெறும் பிரியாணி மட்டும் செய்யலை… முட்டை, சிக்கென் எல்லாம் பண்ணி இருக்காங்க.”
“ரொம்ப வருஷம் சமைக்கிறவங்களுக்கே சில நேரம் சொத்தப்பும். அதுவும் புதுசா ஒன்னு பண்ணும் போது, உடனே நல்லா வருமுன்னு எதிர்ப்பார்க்க முடியாது. ஆனா அண்ணி செஞ்சது நல்லத்தான் இருக்கு.” என்ற முரளி,
“அம்மா நீங்களும் கொஞ்சம் பார்த்துப் பேசலாம். இங்க என்ன போட்டியா நடக்குது. உங்ககிட்ட யாராவது கருத்து சொல்ல சொல்லி கேட்டாங்களா? அப்படியே எதாவது சொல்லணும்னாலும் அப்புறமா சொன்னா என்ன?” என்றான்.
“நானும் நிறையத் தடவை சொலிட்டேன் டா… அம்மாவும் கேட்க மாட்டேங்கிறாங்க. அவங்க அப்படித்தான் விட்டுட்டுன்னா, உங்க அண்ணியும் கேட்க மாட்டேங்கிறா?”
“ரெண்டு பேரும் இப்படி இருந்தா, இது எங்கப் போய் முடியப் போகுதோ?” என்றான் நந்தா வருத்தமாக.
முரளிக்கு அண்ணனை நினைத்துதான் கவலை. “அண்ணி சாப்பிடலையா?” என்றான்.
“நீ சாப்பிடு. நான் அவளுக்கு எடுத்திட்டு போறேன். அவளுக்கு உடம்பு வேற சரி இல்லை.”
“நீங்க போய் அண்ணியைப் பாருங்க அண்ணா, இது நம்ம வீடு, எனக்குச் சாப்பிட ஒரு சங்கடமும் இல்லை.” என்றவன், இன்னும் பிரியாணி வைத்துக் கொண்டு, டிவி முன்பு போய் அமர்ந்து கொண்டான்.
நந்தா ஒரு தட்டில் ஸ்வேதாவுக்கு உணவு எடுத்துக் கொண்டு, அதோடு தனக்கும் எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
“ஸ்வேதா எழுந்திரு.” நந்தா சொன்னதும் ஸ்வேதா எழுந்து உட்கார, நந்தா அவளுக்கு ஊட்டிவிட்டான்.
ஸ்வேதா மறுக்காமல் இரண்டு வாய் வாங்கியவள், “எனக்கு நானே சாப்பிட்டாதான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.” எனத் தட்டை பிடுங்கி வேகமாகச் சாப்பிட்டாள்.
நல்ல பசியில் இருந்திருக்கிறாள், அதோடு உடல்நிலையும் சேர்ந்து தான் அந்தக் கோபம் என உணர்ந்தவன், அவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
பசி அடங்கியதும் அவள் கோபமும் போய் விட, “முரளி நல்லா சாப்பிட்டாங்களா?” என்றாள்.
“எனக்கு எப்படித் தெரியும்? என்ன இருந்தாலும், நீ இன்னைக்கு நடந்துகிட்டது சரி இல்லை. அவனே எப்பவோ ஒரு தடவைதான் வரான். அவன் முன்னாடி போய் மாமியாரும் மருமகளும் இப்படி அடிச்சிகிறீங்க. அவன் என்ன நினைப்பான்.”
ஸ்வேதா எதோ சொல்ல வர, “உடனே உன்னை நினைக்கலைன்னு சொல்லாத. அவனும் அம்மாவை திட்டத்தான் செய்றான்.”
“எங்க அப்பா இருந்தா வேற மாதிரி ஸ்வேதா, இப்ப நாங்க என்ன சொன்னாலும், அது அம்மாவுக்குத் தப்பத்தான் தோணும். நாங்க அவங்களை ரொம்பவும் முறைச்சிக்க முடியாது, உனக்குப் புரியுதா? எங்களை விட்டா அவங்களுக்கு வேற யாரு இருக்கா சொல்லு.”
கணவன் சொல்வதில் இருந்த நியாயம் ஸ்வேதாவுக்குப் புரியாமல் இல்லை. அவளும் பொறுத்துப் போக வேண்டும் என்றுதான் நினைக்கிறாள்.
“சரி நான் இனிமே எதுவும் பேசலை. அவங்க என்ன சொன்னாலும் கண்டுக்கலை.” என்றாள்.
அவளை அணைத்தவன், “எனக்குத் தெரியுது ஸ்வேதா, உன்னோட கஷ்ட்டம். நான் உன்னைத்தான் சொல்ல முடியும் புரிஞ்சிக்கோ.” என்றான். சரி என்பதாக ஸ்வேதா தலையசைத்தாள்.
மாலை கடையில் வைத்து நந்தாவிடம் முரளி பேசினான்.
“அண்ணா, நான் வேணா இன்னும் கொஞ்சம் பெரிய வீடா பார்த்து, அம்மாவை என்னோட பெங்களூர் கூடிட்டு போகட்டுமா.” என்றான்.
“ஏன் முரளி அம்மாவை நான் நல்லா பார்த்திக்க மாட்டேன்னு நினைக்கிறியா?”
“ஐயோ அப்படி இல்லை அண்ணா. இங்க இருந்தா அம்மா அண்ணியோட பிரச்சனை பண்ணிட்டு இருப்பாங்க. அது தான் நான் வேணா கூடிட்டு போய் வச்சிக்கலாம்ன்னு கேட்டேன்.”
“வேண்டாம் முரளி, பொண்டாட்டி வந்ததும் அவங்களை விட்டுட்டேன்னு அம்மா நினைப்பாங்க.”
“அதோட இது அவங்க பழகின இடம். புது இடத்தில போய் இருக்க அவங்களுக்குக் கஷ்ட்டமா இருக்கும். இங்க இருந்தா கோவில், கல்யாணம், சொந்தகாரங்க வீடு, இது மாதிரி எங்கையாவது போவாங்க.”
“அங்க வந்தா அவங்க மட்டும் தனியா வீட்ல இருக்கணும். நீ காலையில போனா நைட் தான் வருவ. அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.”
“உனக்கு ஆசையா இருந்தா, நீ ஒரு பத்து நாள் வேணா, உன்னோட கூடிட்டு போய் வச்சுக்கோ. மத்தபடி அவங்க எப்பவும் எங்களோட தான்.”
“சரிண்ணா… நான் சும்மாதான் கேட்டேன். நீங்க எதுவும் மனசுல நினைச்சுக்காதீங்க.”
“சரி டா…” என்றான் நந்தா.
இரவு நந்தா முரளி சொன்னதை ஸ்வேதாவிடம் சொல்ல, அவளுமே முரளி தன்னைத் தப்பாக நினைத்துக் கொண்டானோ எனக் கலக்கம் அடைந்தாள்.
“இனிமே இந்த வீட்ல எதுவும் பேசக்கூடாது. நம்ம வேலையைப் பார்த்திட்டு இருக்கணும். யாரு என்ன சொன்னாலும், காதிலேயே வாங்கக் கூடாது.” என ஸ்வேதா மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்.
அவள் மட்டும் உறுதி எடுத்தால் போதுமா?
சிவகாமிக்கு மகன்கள் இருவரும் தன்னைப் பேசியதில் வருத்தம். ஆனால் நேரடியாக அதை அவளிடம் காட்ட முடியாமல், தங்கையோடு சேர்ந்து, நாடகத்தைச் சொல்வது போல, ஜாடை பேசிக் கொண்டு இருந்தார்.
அன்றும் கஸ்தூரி மருத்துவமனை செல்ல வேண்டிய நாள். அதனால் மாலை வரை இருந்தார். ஸ்வேதா ஹாலில் உட்கார்ந்து துணிகளுக்கு இஸ்த்திரி போட… அக்கா தங்கை இருவரும் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நாடகத்தில் மாமியார் மருமகளின் முகத்தில் மிளகாய் பொடியை எடுத்து தடவுவது போலக் காட்சி வர…
“பார்த்தியா நாட்டில என்ன எல்லாம் நடக்குதுன்னு. எப்படிப் பொல்லாத மாமியார் எல்லாம் இருக்காங்க பாரு.”
“ஆமாம் அக்கா, ஆனா பாரு ஒன்னும் செய்யாத நம்மைத்தான் கொடுமைகாரிங்கன்னு சொல்வாங்க. நாமும் இப்படித்தான் அக்கா இருந்திருக்கணும்.”
“நீ வேற, ஒன்னும் பண்ணும் முன்னமே, புருஷன்கிட்டே சொல்லி கொடுத்திடுறாளுங்க. அவனுங்களும் இவளுங்க பேச்சை கேட்டுட்டுதான் ஆடுறானுங்க.”
“நீ சொல்றது சரிதான் அக்கா. புருஷனை எப்படிக் கைக்குள்ள போடுறதுன்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்காளுங்க.”
ஏற்கனவே அந்தக் காட்சியைப் பார்த்துக் கொந்தளிப்பில் இருந்த ஸ்வேதா, இருவரின் பேச்சிலும் இன்னும் கொந்தளித்ததால்….“நாடகத்தை எல்லாம் உண்மைன்னு நம்புற உங்களை மாதிரி அறிவாளிங்களால தான், சேனல்காரங்க எல்லாம் கோடீஸ்வரனா இருக்காங்க.”
“இது மாதிரி எல்லாம் நிஜமா நடந்தா என்ன நடக்கும் தெரியுமா? ஜெயில்ல களி திங்க வேண்டியது தான். உங்களுக்கு அந்த ஆசை இருந்தா வேணா முயற்சி பண்ணிப் பாருங்க.” என நக்கலாகச் சொல்லிவிட்டு அவள் எழுந்து செல்ல,
சிவகாமி முகமும் கஸ்தூரி முகமும் இருண்டு போனது. சும்மா அவளை மிரட்ட இவர்கள் எதோ சொல்ல, பதிலுக்கு ஜெயிலில் வைத்து விடுவேன் என அவள் மிரட்டி விட்டு சென்றாள்.
சிவகாமி இதை மகனின் காதுக்குக் கொண்டு சென்றார். “நாங்க எதோ நாடகத்தில நடக்கிறதை எதேட்சையா சொன்னா, உன் பொண்டாட்டி ஜெயில்ல வைப்பேன்னு மிரட்டுறா.” என்றார்.
“நீங்களா மா எதேட்சையா சொல்லுற ஆளு. நீங்க அவளை மிரட்டி பார்க்க நினைச்சு இருப்பீங்க. பதிலுக்கு அவ போட்டு தாக்கி இருப்பா.”
“நாடகம் பார்த்தா வாயை மூடிட்டு பார்க்க வேண்டியது தான. இதுல பத்தாததுக்கு உங்க தங்கச்சி வேற. ஏன் அவங்களுக்கு அவங்க வீட்ல இருக்க முடியாதா?”
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் அவளை வம்பு இழுக்குறீங்க. என் பொண்டாட்டி அமைதியா போகிறவ எல்லாம் கிடையாது. பார்த்து இருந்துக்கோங்க , அவ்வளவுதான் சொல்வேன்.” என்றான்.
இரவு நந்தா அறைக்கு வந்ததும், அவர்கள் இப்படிப் பேசினார்கள், நான் பதிலுக்கு இப்படிப் பேசினேன் என ஸ்வேதா சொல்லிவிட்டாள்.
நந்தாவுக்கு அவளைப் பற்றித் தெரியும், தவறே செய்தாலும் ஸ்வேதா அவனிடம் மறைக்க மாட்டாள். கூட்டி குறைத்தும் சொல்ல மாட்டாள். என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்லி விடுவாள். அதனால் நந்தாவுக்கு மனைவி மீது மிகவும் நம்பிக்கை.
“நான் பார்த்துகிறேன், முடிஞ்சவரை நீ பேசாத. இனிமே சாயங்காலம் நீ நம்ம கடைக்கு வந்திடு. எனக்கும் உதவியா இருக்கும்.” என்றான்.
ஸ்வேதாவும் அவன் சொன்னபடி, மறுநாளில் இருந்து மாலையில் நந்தாவின் கடைக்குச் செல்ல ஆரம்பித்தாள்.
மாலையில் நந்தா முதலிலேயே சென்று இருக்க, ஸ்வேதா வேலை எல்லாம் முடித்து விட்டு, ஐந்து மணிப் போலக் கிளம்பினாள். “அத்தை, அவர் என்னை நம்ம கடைக்குக் கூப்பிட்டார். நான் வேலை எல்லாம் முடிச்சிட்டேன், போகட்டுமா ” என அவள் சிவகாமியிடம் கேட்க,
“எல்லாம் என்னைக் கேட்டுட்டு நடக்கிற மாதிரிதான். கல்யாணத்தில இருந்து எல்லாம் அவங்க இஷ்ட்டபடிதான் நடக்குது. என்கிட்டே எதுவும் சொல்ல வேண்டாம். நீ உன் புருஷன் சொல்றபடியே செஞ்சிக்கோ.” என்றார் கோபமாக.
“சரி அத்தை நான் போயிட்டு வரேன்.” என வெளியில் வந்தவளுக்கு, கல்யாணத்துக்கு இவங்க பார்க்கலையா.. அப்ப யாரு பார்த்தா என்ற கேள்வி ஸ்வேதாவுக்கு எழுந்தது.