என் கண்ணா… மயில் பீலியில் ஒட்டிக்கொண்ட மகரந்தத் துகளாய் என் மனம் விட்டு விலகாமல் நீ இருப்பதும் தகுமோ? இது விதி என்று ஒருவன் செய்த சதி ஆகுமோ? மறந்தேனும் இந்த ஜென்மத்தில் உன்னை மறப்பேன் என்றால் அது மரணப்படுக்கையில் நான் கண்மூடும் கணம் என்று அறியுமா…? என் கண்ணா…!!
தன் முன்னால் வந்து நின்ற காரில் அமைதியாக ஏறி அமர்ந்த அவளின் மனம் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஏதும் செய்யமுடியாத தன் நிலையை நினைத்து தானே நோவதைத் தவிர வேறேதும் செய்ய இயலவில்லை அவளால்… இதுவரை தன் வாழ்நாளில் அடுத்து என்ன என யோசிக்க வேண்டிய தேவை அவளுக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் இன்று ஏனோ…? மனம் புழுவாய் துடிக்க அது எதையும் தன் முகத்தில் காட்டாதவாறு அமர்ந்திருந்தாள். அமைதியாக… நினைவுகள் பின்னோக்கி சென்றது… எங்கே தவறினோம்…
கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருந்த அவள் எதிரில் ஒரு உருவம் தெரிய கண்களை நன்றாக திறந்து பார்த்தவளை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருந்தது அந்த உருவம். சுற்றிலும் தன்னை சார்ந்தவர்கள் இருப்பதை உணர்ந்தவள் அவர்களை பார்க்க… அவர்கள் அனைவரும் இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் யாரும் எதுவும் பேசவுமில்லை. அவளை நெருங்கி வந்து கொண்டிருந்தவனை தடுக்கவும் இல்லை. அவள் தன் சுற்றத்தாரை பார்த்ததைக் கண்டு சிரித்துக் கொண்டே அவளை நெருங்கியவன் அவளுக்கு மிக அருகில் வந்து நிற்க அந்த நேரம் யாரோ அவன் கையில் எதையோ கொண்டு வந்து தந்தார். அவளை பார்த்துக் கொண்டே அவன் கையில் உள்ளதை பார்க்க அது பேப்பரால் சுற்றப்பட்டு இருந்தது. பிரித்து பார்த்தவன் அதிலிருந்த குங்குமத்தை தன் கையில் எடுத்தபடி மீண்டும் அருகில் நெருங்கி நிற்க ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது அவளுக்கு…
அருகில் வந்து நின்றவன் நிதானமாக அவளை ஏறிட்டு பார்த்து “இந்த குங்குமம் என்னைக்கும் என் நியாபகமா உன்கூடவே இருக்கட்டும்” என்று கூறியபடி குங்கும பொட்டலத்தை அவள் கையில் திணித்தவன் அவள் நெற்றியிலும் குங்குமத்தை வைத்துவிட… பதறியபடி எழுந்து உட்கார்ந்தாள் ராதா. ‘ச்சு… கனவா…?’ என நினைத்தவள்… ‘கனவா இருந்தாலும்; நல்லாயிருந்துச்சு’ என நினைத்தபடி கனவு தந்த மகிழ்ச்சியுடன் எழுந்து சென்றாள். ‘கனவில் வந்த முகம் முழுதாய் நினைவில்லையே? ம்…. எப்புடி இருந்தான்’ என யோசித்தவள் ‘என்னயிருந்தாலும் அத்தன பேருக்கு முன்னாடியும் தைரியமா பொட்டு வச்சுவிட்டானே’ என நினைத்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
அன்றும் எப்போதும் போல தன் வேலைக்கு கிளம்பியவளுக்கு ஏனோ மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. பூஜையறைக்கு சென்றவள் சாமி கும்பிட அங்கு வந்த மகிழேந்திரன் “அம்மா பாத்து” எனவும் “என்ன பாட்டு வேணும் செல்லக்குட்டிக்கு…” என கேட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்க்க அங்கிருந்த கண்ணனை காணும்போது கனவில் குங்குமம் கொடுத்தவன் நினைவுவந்தது… சிரித்துக்கொண்டே பாட ஆரம்பித்தாள்…
கண்ணனைத் தேடி வந்தேன் நான் வெண்ணையைக் கொண்டுவந்தேன்…! செவி கொடுத்திருந்தேன் நான் விருந்தாவனத்தில்…. செவி கொடுத்திருந்தேன் நான் விருந்தாவனத்தில்… கால் வலையோசை தா…. கண்ணா கை வலையோசை தா… கண்ணனைத் தேடி வந்தேன் நான் வெண்ணையைக் கொண்டுவந்தேன்…!! கால் சலங்கை ஒலித்ததே… கண்ணன் வருகின்றான் என நினைக்கின்றேன்… வெண்ணையை கொடுத்துவிட்டு என்ன கேட்க வேண்டும்… என் மனம் துடிக்கின்றது என்ன நான் கேட்பது கண்ணா… கண்ணா… கண்ணனை பார்க்கவில்லையே!! எல்லாம் கண்ணனின் லீலையல்லவா…? கண்ணனைத் தேடி வந்தேன் நான் வெண்ணையைக் கொண்டுவந்தேன்…! கை வலையல் ஒலித்ததே… கண்ணன் குலலோசை நான் கேட்டேன்! தாமதம் ஏன் கண்ணா என்னிடம் நீ வர கண்களில் நீர்வழிய… நீவர வேண்டினேன் கண்ணா… கண்ணா… காணக் கிடைக்கவில்லையே… எல்லாம் கண்ணனின் மாயை யல்லவா…? கண்ணனைத் தேடி வந்தேன் நான் வெண்ணையைக் கொண்டுவந்தேன்…!
பாடி முடித்தவள் “ஓ.கேவா…?” என கட்டைவிரல் உயர்த்தி கேட்க… “ஓ.கே” என்றான் தன் மழலை மாறா குரலில் அந்த சிறுவன். மனநிறைவுடன் கிளம்பியவள் தன் மகனிடம் “குட்டிப்பையா உங்களுக்கு என்ன வேணும்” என அவன் உயரத்திற்கு முட்டி போட்டு குனிந்தபடி கேட்க…
“ம்மா… ப்பூ…” என தன் கையை வாயருகில் வைத்து சைகை செய்தான் அந்த ஒன்றரை வயது சிறுவன்.
“ம்… சரி. அம்மா ப்பூ வாங்கிட்டு வர்றேன். நீங்க போய் சவிதாகிட்ட இந்த சாக்லேட்ட பிரிச்சு தரச்சொல்லி சாப்பிடுங்க” என கூறியபடி தன் கைப்பையிலிருந்து ஒரு மில்கிபாரை எடுத்துக் கொடுக்க… வேகமாக ஓடினான் அந்த சின்ன பையன். “ஏய்… அம்மாவுக்கு பாய் சொல்லல” என இவள் கேட்க நின்று பார்த்தவன் மீண்டும் ஓடிவந்து “பாயி…” என கையை ஆட்டி தன் மழலை மொழியில் கூறி கன்னத்தில் தன் இதழை ஒற்றி எடுக்க…
“ம்… போ” என முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள். திருப்பிய முகத்தை அழுந்த பற்றி தன்புறம் திருப்பியவன் அழுத்தமாக தன் இதழை அவள் கன்னத்தில் பதித்து “ம்மா” என்ற சத்தத்துடன் எடுக்க தன் கன்னக்குழி தெரிய சிரித்தவள் “பாய்” எனக்கூறி விடைபெற…
“அம்மாகிட்ட என்ன வேணும்ன்னு சொல்லிட்டியாடி செல்லம்” என்றபடி வந்தார் அவளின் தாயார்.
“ம்…” என குட்டி தலையாட்ட… “பப்புள்ஸ் கேட்டான்மா” என்றபடி வெளியேறி சென்றாள் ராதா.
பேருந்திற்காக காத்திருந்து தன் அலுவலகம் வந்து சேர ஒருமணி நேரம் முழுதாக முடிந்துவிட… அரக்கப்பறக்க வந்து அலுவலகத்தை திறந்தவளை வரவேற்றார் பக்கத்திலிருந்த பார்லர் பெண்மணி.
“என்ன ராதி… இன்னைக்கு இவ்ளோ லேட்” என கேட்க…
“லேட்லாம் இல்லையேக்கா. மணி ஒன்பது தானே” என்றவள் நேரத்தை பார்த்துவிட்டு “நீங்கதான் இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க. டெய்லி பதினோரு மணிக்கு தானே கடை திறக்கனும்ன்னு பத்து மணிக்கு மேல எழறீங்கன்னு அண்ணன் டைம மாத்தி வச்சுட்டாரோ” என கிண்டலடிக்க…
“ச்சு… ஒரு அம்மா வர்றேன்னு சொன்னாங்க. சரின்னு வந்து வெயிட் பண்ணிட்டு இருக்கேன். ஒரு மணி நேரமாச்சு… இன்னும் வரல” என சற்று எரிச்சலுடன் கூற….
“பத்மாக்கா. பொறுமை ரொம்ப முக்கியம். ஒருமுறை இந்த மாதிரி அவங்ககிட்ட எரிச்சலா பேசுனீங்கன்னா அடுத்து இந்த பார்லர்;விட்டா இன்னொன்னுன்னுட்டு போயிட்டே இருப்பாங்க. சோ… அப்பப்ப ப்ரீத் இன் ப்ரீத் அவுட் பண்ணிக்கிட்டே இருங்க” என கூற…
“ம்… நல்லாதான் இருக்கும் நீ மட்டும் எப்புடி சிரிச்சுக்கிட்டே இருக்க” என ஆச்சர்யமாக கேட்க…
“படைக்கும்போதே கடவுள்கிட்ட என்ன அழவைக்காம சிரிக்கவைக்கிற இடத்துக்கு அனுப்பனும். அப்புடின்னா உனக்கு டெய்லி நெய் விளக்கு ஏத்துறேன்னு டீல் பேசிட்டு வந்தேன் அதான்” என குறும்புடன் கண்சிமிட்டி சொல்ல…
“ப்ச்… சொல்லேன் நானும் கொஞ்சம் தெரிஞ்சுப்பேன்ல. உங்க அண்ணனையும் சமாளிக்கலாம். எது சொன்னாலும் ஏன்டி மூஞ்சிய காட்டுறேன்னு கேக்குறாரு. சொல்லேன்” என ஆர்வமாக கேட்க…
“அதுவாக்கா… அதோ அந்த கடையில சொக்குப்பொடி விக்கிது. நீங்களும் ட்ரை பண்ணுங்க. அண்ணன் நைட் வந்ததும் மேல தூவிடுங்க அப்பறம் பாருங்க” என கேலி செய்ய…
“ம்… உனக்கும் ஒரு நாள் கோபம் வரும் அப்ப பாத்துக்குறேன்” என…
“பாக்கலாம்”
“உன்ன மாதிரி நானும் எங்கயாவது வேலைக்கு போயிருக்கலாம். இங்க பாரு பார்லர் ஓபன் பண்ணி” என பெருமூச்சுடன் கூற…
“வேலைக்கு போனா இவ்ளோ காசு வராதேக்கா…” என சிரித்துக் கொண்டே கூற…
“ஆமாமா… என அவள் கூறியதை ஆமோதித்தவர் “பாரேன். என்கூட பேசிக்கிட்டே போர்ட எடுத்துவச்சு கடைய சுத்தம்பண்ணி… வாசல்ல தண்ணி தெளிச்சுட்ட… நான் அப்புடியே நின்னுட்டு இருக்கேன். நீ மட்டும் எப்புடி இப்புடி இருக்க. இந்த கடைய பாரு. திறந்து ஆறு மாதம்தான் ஆகுது. இந்த ஆறு மாதத்துல யாராவது வந்து கடை கணக்கு வழக்ககூட பாக்கல. நீ ஒருத்தியேதான் பாக்குற” என்றார் பத்மா.
“அக்கா அதுக்கெல்லாம் ஒரு முகராசி வேணும்க்கா” என சிரித்தபடி கூற…
“நீ கணக்க மாத்தி எழுதிட்டா என்ன பண்ணுவாங்க” என கேட்க…
“அக்கா… இது கவர்மெண்ட் இ சேவை மையம். இதுல யாரோட பணமும் கிடையாது. சோ அவங்க பெருசா கேர் பண்ணனும்ன்னு அவசியம் கிடையாது அண்ட் கணக்க மாத்துனா ஈசியா கண்டுபிடிச்சுடலாம்” என கூற… அவர் கூறிய பெண்மணி வரவும் சரியாக இருந்தது.
“சரி அந்தம்மா வந்துட்டாங்க. அப்பறம் பாப்போம்” என கூறி பத்மா கிளம்பி விட… ராதா அலுவலகத்தினுள் நுழைந்தாள். ‘ம்… இன்னைக்கு செகண்ட் சாட்டர்டே. யாரும் வரமாட்டாங்க. சரி படம் பார்ப்போம்’ என நினைத்து யூடியூபை ஓபன் செய்ய… முன்னாடி வந்து நின்றது அலைபாயுதே படம். அதை ஓடவிட்டு பார்த்துக் கொண்டிருந்தவளின் மொபைல் ஒலிக்க எடுத்துப் பார்க்க ராதாவின் தோழி செல்வி அழைக்க உற்சாகமாக எடுத்து “ஹலோ” என…
“என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப குஷியா இருக்கீங்க போல” என செல்வி கேட்டாள்.
“ம்… ரொம்ப. ஆனா காரணம்தான் என்னன்னு தெரியல”
“ம்… ஏன்டி என் வீட்டதாண்டி தான் பஸ்ஏற போகனும். ஒரு தடவயாச்சும் என்ன வந்து பாத்துட்டு போறியா…? இல்ல போன்தான் பண்றியா…? எரும எப்பபாத்தாலும் நான்தான் உனக்கு கால்பண்றேன்” எனவும் ராதா சிரித்தபடி “கொஞ்சம் பிசி. இப்ப நீ கால்பண்ணா என்ன…? நான் கால்பண்ணா என்ன?” என கூற
“எதாவது சொல்லி சமாளி. சரி உன்கூட ஒருஆள் பேசனும்ன்னு சொன்னாங்க இரு கால் கனெக்ட் பண்றேன்” என கான்பரன்ஸ் காலில் போடப்போக “ஏய் ஏய் யாருன்னு சொல்லு” எனவும் “பொறு போட்டுடுறேன். நீயே யாருன்னு கண்டுபிடி” என கான்பரன்ஸ் கால் ஆக்டிவேட் செய்ய…
“ஹலோ” என்றது ஒரு ஆணின் குரல்
“ஹலோ” என ராதா கூறியதும் “நான் நீங்க காலேஜ் படிக்கும் போது உங்கள ரோட்ல நின்னு பாப்பேன்” என… “ஓ… அப்படிங்களா சார். உங்க பேர் என்னன்னு சொல்றீங்களா?” என கேட்க…
“என் குரலவச்சு என்ன கண்டுபிடிக்க முடியலையா” என…
“ம்… யாரு? யாரு?” என ஒரு நிமிடம் யோசித்தவள் “ஏய் சத்தியமா தெரியலப்பா. யாருன்னு நீங்களே சொல்லிடுங்க” என…
“என்னது தெரியலையா? உன்னல்லாம் பிரண்டுன்னு சொல்லவே கேவலமா இருக்குடி” என செல்வி கூற…
“அது… ஒரு பெரிய கேப் விழுந்துருச்சா… சோ… லிட்டில் கன்பியூசன் ஏதாவது க்ளுவாச்சும் குடுங்கப்பா” என ராதா கேட்க
“ம்… எட்டு வருசத்துக்கு முன்னாடி மீட் பண்ணுனோம்” என அந்த ஆண் குரல் நக்கலுடன் கூற…
“ம்… போடா. நான் நம்மகூட படிச்சதுல நெறய பேர அந்த எட்டு வருசத்துக்கு முன்னாடி பாத்ததுதான். க்ளு குடுக்குறானாம் க்ளு” என அலுத்துக்கொள்ள…
“சரிசரி இன்னொரு க்ளு” என செல்வி கூறவும்
“ம்க்கும்… அது என்னம்மா ஒரே ஸ்கூல்ல படிச்சோம்ன்னா” என கிண்டலாக கேட்க
“அது இல்ல… நம்ம முன்னாடி பெஞ்ச்” எனவும் கடகடவென முன்பெஞ்சில் அமர்ந்திருந்த நான்கு நபர்களின் பெயரை சொல்ல… “ம்… அதுல ஒருத்தன் தான்” என்றாள் செல்வி மீண்டும்
“ம்… யாரது…?” என மீண்டும் இவள் குழம்ப…
“உன் பேப்பர பிடுங்கி எக்ஸாம் எழுதுனேனே”
“அடப்பாவி இதல்லடா மொதல்ல சொல்லியிருக்கனும். வீரா தான” என “அப்பா ஒருவழியா கண்டுபிடுச்சுட்ட” என்றனர் மற்ற இருவரும்.
ராதா சிரிக்கவும் “சிரிக்காத. உனக்கு எவ்ளோ க்ளு குடுக்க வேண்டி இருந்துச்சு” என செல்வி கேட்க
“ஏய் எட்டு வருசம் கேப்மா. கொஞ்சம் கஷ்டம்தான்” என சொல்லி பேசி சமாதானபடுத்தி பழைய கதைகளை பேசிக்கொண்டிருக்க ஒன்றரை மணி நேரம் எப்படி போனதென்று தெரியாமல் பறந்து சென்றது.
“ஏய் பாப்பா கல்யாணமாகிடுச்சா” என வீரா கேட்க…
“பாப்பாவுக்கு எப்படி கல்யாணம் நடக்கும். இன்னும் இல்ல. பாத்துட்டு இருக்காங்க” என ராதா கூற…
“ஏய் இந்த பாப்பான்ற பேரே மறந்து போச்சுல” என செல்வி சொல்ல
“ஏன்…? பாப்பா, பால்டப்பா, அமுல்டின் எல்லாமே இருக்கு. இன்னும் உன் குரல்கூட மாறல. பாப்பா மாதிரிதான் இருக்கு” என வீரா கூற…
“ஏய் குரல் மட்டும் இல்ல. நானும் மாறல. அப்புடியேதான் இருக்கேன்” என ராதா கூற…
“ஆமாமா நாமலாச்சும் முகம் வெயிட் இப்புடி எதுலையாச்சும் மாறியிருப்போம். ஆனா ராதாவ நம்ம ஸ்கூல் யூனிபார்ம் போட சொன்னா இன்னும் அப்புடியேதான் இருப்பா” என செல்வி கூற…
“நான் உன்ன பாத்தேன் ராதா. உன் ஆபிஸ் முன்னாடி யாரோ ஒருத்தர்கூட இறங்குன. ஒரு குட்டிபையன் வேற இருந்தான் பேசலாம்ன்னு நினைச்சேன். நீ பேசுவியோ மாட்டியோன்னு வந்துட்டேன்” என…
“அது என் அண்ணன்டா. அந்த குட்டிபையன் என் மகன்” என ராதா சாதாரணமாக கூற…
“ஏய் இப்பதான் கல்யாணமாகலைன்னு சொன்ன அதுக்குள்ள உன் பையன்ற” என அதிர்ச்சியுடன் கேட்க…
“லூசு. அக்கா பையன் கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மான்னுட்டு ஓடி வந்துட்டான்” என…
“சரி சொல்லித்தொல” என ராதா கூற “உன்ன பொண்ணு பாக்க வரும்போது உன் அக்காபையன் அம்மான்னு வந்து கட்டிபிடிச்சா எப்புடி இருக்கும்” என கூற…
“சூப்பரா இருக்கும்” என கூறி செல்வி சிரித்தாள்.
ராதா அமைதியாக இருக்க “நல்லாயிருக்கும்ல ராதா” என கேட்டான் வீரா.
“ம்… இதுதான்பா அம்மாவ கல்யாணம் பண்ணபோற அப்பான்னு காட்டுனா இன்னும் நல்லாயிருக்கும்” என கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு இளைஞன் கதவை திறந்து உள்ளேவர “கஸ்டமர் வற்றாங்க நான் அப்பறம் பேசுறேன்” என கூறி கட்செய்தாள் ராதா.
ராதா ராணி – தன் பெயருக்கேற்றார் போல ராணியாய் வாழும் ராதா. அப்பா செல்வம் அம்மா சுகந்தி. அக்கா சவிதா அவள் கணவன் சுரேஷ். சுரேஷ் தன் வேலை காரணமாக வருடத்தில் பாதி நாட்கள் சவிதாவை தன் மாமனார் வீட்டில்விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிட… அவர்கள் புதல்வன் மகிழேந்திரன் ராதாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான். ராதாவின் அண்ணன் சுரேந்தர். பேங்கில் மேனேஜராக பணிபுரிகிறான். வீட்டில் இருக்க போர் அடிப்பதால் வேலைபார்க்கிறேன் என பக்கத்து டவுனில் வந்து பணிபுரிகிறாள் ராதா. அவர்கள் வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை என்றாலும் தன் மகள் ஆசைப்படுகிறாள் என விட்டுவிட்டனர் அவள் பெற்றோர். ஆனால் “இந்த வேலையில எப்ப பிரச்சனை வருதோ அப்ப இந்த வேலைய விட்டுறனும்மா” என அவள் தந்தை கூறியிருக்க இவளும் சரியென தலையாட்டி இருந்தாள்.
இன்று அந்த பிரச்சனை தன் எதிரில் இருப்பது தெரியாமல் “என்னண்ணா வேணும்” என கேட்க…
“பேபி அண்ணன்னு எல்லாம் கூப்பிடாத. கால் மீ சுந்தர்” என கூற… அவனை வேற்று கிரகவாசி போல பார்த்தவள் “என்ன வேணும்” என சுருக்கமாக கேட்க…
“போலீஸ் பைன் பே பண்ணனும்” என…
சலானை வாங்கியவள் அந்த அரையடி கூந்தலும் கிழிந்த ஜீன்ஸ_ம், மேலே இரண்டு பட்டன் போடாத சட்டையும் அவன் மீது வந்த மதுவாடையும் பார்க்க நவநாகரீகமான பணக்கார இளைஞனாக தெரிந்தவனை ஏனோ பார்த்ததும் முகம் சுளிக்கத் தோன்றியது ராதாவிற்கு.
தன் போனை எடுத்து காதில் வைத்தவன் “ஷாலு வேர் ஆர் யூ?” என… எதிர்முனை என்ன கூறியதோ உடனே டென்சனானவன் “ஷாலு டோன்ட் பீ ஜோக். கோகுலபத்தி உனக்கு நல்லாவே தெரியும். நீ திடீர்னு இப்புடி சொன்னா செம்ம டென்சனாகிடுவான்” என… எதிர்முனை ஏதோ கூற ராதாவை ஒரு மாதிரி பார்த்தவன் “சரி… இங்க நான் பாத்துக்கிறேன்” என கூறி வெளியேற…
“எக்ஸ்க்யூஸ்மீ உங்க சலான் அண்ட் ரெசிப்ட்” என ராதா அவனை அழைக்க…
“ஜஸ்ட் ஒன் செகன்ட் பேபி. இதோ வந்துடுறேன்” என நிற்காமல் சென்றுவிட… ராதாவிற்கு காலையிலிருந்து இருந்த இதமான மனநிலைமாறி கோபம் வர ‘ரிலாக்ஸ் ரிலாக்ஸ்’ என தனக்குள்ளே கூறிக்கொண்டு தன்னை கட்டுப்படுத்தி அமைதியாக அமர்ந்திருந்தாள் ராதா.
சிறிது நேரத்தில் உள்ளே வந்தவன் “பேபி கேன் யூ ஸ்டே ஒன் நைட் டூ மை பிரண்ட்” என… கீழே விழுந்த பேனாவை எடுக்க போன ராதா குனிந்தபடியே தன்னை ஆசுவாசபடுத்தி எழுந்தவள் “சாரி. நாட் இன்ட்ரஸ்டட்” என்றாள் அமைதியுடன்… ஏதோ கூற வந்தவனை தடுத்தவள் தன்னிடம் இருந்த பேப்பரை அவனிடம் நீட்டிவிட்டு “போங்க” என கதவை கை காண்பிக்க… ஒரு நொடி தயங்கியவன் வேகமாக வெளியேறி சென்றுவிட்டான்.
‘சுந்தராம் சுந்தர் வெளக்கமாத்துக்கு பட்டுகுஞ்சம். இதுல இந்த வெளக்கமாற அண்ணன்னு கூப்பிடக்கூடாதாம். என்ன பாத்து என்ன கேள்வி கேட்டுட்டான். ச்சே…’ என மனதினுள் பொறுமியவள் தன் கையை எதிரிலிருந்த கம்ப்யூட்டர் டேபிளின் மீது குத்திக்கொள்ள… அப்போது கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஒரு இளைஞன்.
இருந்த எரிச்சலில் “என்ன வேணும்” என பட்டென கேட்டாள்.
“ஒரு ஜெராக்ஸ்” என அவன் தன் லைசென்ஸை எடுத்து நீட்ட… அதை வாங்கி ஒரு காப்பி போட்டவள் அவனிடம் நீட்டி “ரெண்டு ரூபா” என்றாள். அவன் ஐந்நூறு ரூபாயை எடுத்து கொடுக்க “சில்றை இல்ல. மாத்திட்டு வந்து குடுங்க” என்றாள் ராதா.
“பரவாயில்ல. ஐநூறு என்ன ஐயாயிரமே குடுக்கலாம்” என அவன் கூறவும் அவனை நிமிர்ந்து பார்த்தாள் ராதா. இவள் பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல தன் பற்கள் அனைத்தையும் காட்டி புன்னகைக்க… இவ்வளவு நேரம் ‘பொறுமை… பொறுமை’ என கட்டிவைத்த பொறுமை பறந்தோட அவன் கையில் அவள் கொடுத்த நகலை பறித்து கிழித்து குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு “இப்புடியே ஸ்ட்ரைட்டா போனீங்கன்னா ஒரு தாத்தா ஜெராக்ஸ் கடை வச்சுருக்காரு… போயி.. ஐயாயிரமில்ல அம்பதாயிரம் கூட கொடுங்க” என்றாள் அடக்கப்பட்ட ஆத்திரத்துடன்…
“கௌம்புங்க… எனக்கு உங்க பணமும் தேவையில்ல நீங்க இங்க ஜெராக்ஸ் எடுக்கனும்ன்னு அவசியமும் இல்ல” என கூறி அமர…
“இவ்ளோ சீன் ஆகாது ஸ்வீட்டி என்கூட வந்தா இங்க குடுக்குற சம்பளத்தவிட அதிகமாவே தருவேன். நீ மாதம் முழுக்க சம்பாதிக்கிறத ஒரே நாள் சம்பளமா வாங்கிக்கலாம் என்கிட்ட” என…
“இன்னொரு வார்த்த பேசுன…” என தன் விரலை சுண்டி பத்திரம் காட்டி அவள் கூற…
“இப்புடி நெறய பொண்ண பாத்துருக்கேன் ஸ்வீட்டி. அப்பறம் அவங்க என்னவிட்டு போகமாட்டேன்னு தவிச்சதையும் பாத்திருக்கேன். சோ… ஓவர் ரியாக்ட் பண்ணாம நீயே வந்தா நல்லாயிருக்கும்” எனவும் மொத்த பொறுமையும் காற்றோடு பறந்து போனது ராதாவிற்கு.
“அவுட்” என்றாள் தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து அமர்ந்தபடி…
“கம்ஆன் ஸ்வீட்டி” என ராதாவின் கையை பற்றினான் அந்த இளைஞன். தன் கையை பிடித்த அடுத்த வினாடி எதிரில் இருந்தவனின் கன்னத்தில் இடியென இறக்கினாள் தன் கரத்தை ராதா.