Advertisement

தாமரை மரம்

 

பொன்னி என்றும் போல் அன்றும் ஒருவித பரபரப்பு கலந்த மிரட்சியுடன் அவ்விடத்தைக் கடக்கமுயன்றாள். எப்பொழுதும் போல் இப்பொழுதும் அந்தச் சிறுமியின் கால்கள் பின்னிக்கொண்டன. அந்த இடம் சூனியக்காரி ஒருத்தியால் சபிக்கப்பட்டதென்று ஊர்மக்கள் கூற கேட்டு வளர்ந்தவள். அந்தப் பாதையைக் கடப்பதற்கு முன்னதாக ஆயிரம் முறை தயங்குபவள், பாதைக்குள் நுழைந்த மறுகணமே பயமரியாத ஆட்டுக்குட்டியாய் வேலிதாண்டி ஓட்டம்பிடிப்பாள்.

 

பொன்னியின் மிரட்சிக்கு காரணம் அவ்வப்போது விரிஞ்சிபுர மக்களின் கற்பனையோ கட்டுக்கதையோ ஆனால் தொடர்ந்து தாமரை மரத்தை பற்றிய செய்திகள் உலா வந்துகொண்டே இருந்தன. தாமரை மரத்தில் பேய்யொன்று தொங்குவதாக மோர்காரி ஒருத்தி சொல்லி செல்ல, விரிஞ்சிபுர கோவில் வாயிலில் கடைபோட்டிருக்கும் பூகோந்தை அன்னம்மா ஒப்பாறி ஒலி கேட்குதென்று கதை பரப்பிக்கொண்டிருந்தாள்.

 

சிலர் தாமரை மரத்தில் சூனியம் உள்ளதென்றும், இன்னும் சிலர் சாபம் நிறைந்திருக்கிறதென்றும் தன் போக்கில் கதைகளைப் புனைந்துக்கொண்டிருந்தனர். ஏதோவொரு மர்மம் அந்த மரத்தில் நிறைந்திருக்கச் செங்கொற்றை மலர்கள் சொரிந்து நிரம்பிக்கிடக்கும் மரத்திற்குத் தாமரை மரமென்று பெயர்வந்திருந்தது. தாமரை மரம், அப்படிதான் ஊர்மக்கள் கூறிவந்தார்கள்.

 

வேலிமுழுவதும் முற்கள் நிறைந்த பிரண்டை கொடி சுற்றியிருக்க, பாதிச் சிதைத்தும் மீதி தளர்ந்தும் காணப்பட்டது அந்த இரண்டடுக்கு பழைய வீடு. நிச்சயமாக அது வீடுதான், அந்த நிலையிலும் உயிர்கள் வாசம் செய்யத் தகுந்த இடமாகவே கருதப்பட்டது. வலைபின்னும் சிலந்திகளுக்கும் , சிலந்திகள் வலையில் சிக்கிக்கொள்ளும் பூச்சிகளுக்கும், பூச்சிகளைப் பிடித்துண்ணும் பல்லிகளுக்கும், பகலில் பதுங்கிக்கொள்ளும் ஒரு சில வெளவால்களுக்கும் அந்த வீடு இன்னும் உயிர்ப்புடன் காணப்பட்டது. தன்னுடைய ஆயுட்காலம் குன்றினாலும் பல உயிர்கள் உல்லாசமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு அந்த இடிந்த வீடு நிமிர்ந்து நின்றுக்கொண்டுதானிருந்தது.

 

உடைந்த ஓடுகளைத் தாங்கி நின்ற வீட்டு சுவரின் அருகே மலர்ந்த பூநிறைந்த தாமரை மரம் கொன்றை மலர்களை உதிர்த்து அந்த வீட்டிற்குச் சற்றும் சம்மந்தமற்ற வகையில் மலர்ந்து நின்றது. ஆளரவமற்ற மயானப்பகுதியாய் பிம்பமளிக்கத் தனிமையும் மர்மமும் தாமரை மரத்தை சூழ்ந்திருந்தாலும் ஆந்தைகளின் அலறலுடன் சேர்ந்து அவ்வப்போது பொன்னியின் சிரிப்பொலியும் சிலவருடங்களாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.

 

கருவேலங்காடும் கற்றாழை கள்ளியும் மண்டிக்கிடந்த முற்காட்டிற்குச் செல்ல பொன்னி பேராவல் கொள்வதால் சித்தம் கலங்கிய சிறுமியோ என்று சிலர் தமக்குள் முணுமுணுக்கத் தொடங்கினர். அன்னையும் அக்கம் பக்கமும் பார்ப்பவரும் கேட்பவரும் என யாவரும் என்னவெல்லாமோ கூறியும் பொன்னியின் புத்தியில் எதுவும் பதியவில்லை. அந்த வீட்டையும் மரத்தையும் பின்னி பிணைந்த கதைகள் ஏராளம். மோஹினி வாழுமிடம் என்றும், விரிஞ்சிபுர ஜமீனிற்குச் சொந்தமான வீட்டில் ஜமீன்தாரை வேரோடு அழிக்க மலையாள மாந்திரகன் மந்திரித்த தகடை வைத்துள்ளான் என்றும், கன்னி பெண் மரத்தில் தூக்கிட்டு தொங்கிவிட்டாள் என்றும், பெண்களை அடியோடு அழிக்கும் வீடென்றும் எனப் பற்பல கதைகள் கற்பனை வளம் குன்றாமல் வலம் வந்தன. ஏதோ ஓர் இடுகாட்டு கிழவன் அந்த மரத்திற்கு சொல்லிய பெயரே தாமரை. அவன் கூறியே அந்த மரத்திற்குத் தாமரை மரம் என்ற பெயர் ஊர்மக்களுக்குப் பரிச்சயம். மெய் அறிய அக்கிழவனும் இல்லை, இருந்திருந்தாலும் கூறியிருப்பான என்பது தெளிவுமில்லை.

 

அத்தனை கதைகளைக் கேட்டபிறகும் இவள் வயதை ஒத்த சிறுமிகளின் நேரத்தை பாண்டியாட்டமும் பல்லாங்குழியும் ஆக்ரமித்திருக்க, பொன்னியின் மனதை மட்டும் தாமரை மரம் ஆக்கிரமித்திருந்தது.

 

இன்று ஒரு பொய் நாளை ஒரு பொய் நாளை மறுநாள் வேறொரு பொய். புதுப் புதுப் பொய்கள் வஞ்சகமில்லாமல் பொன்னியினுள் மலர்ந்துக்கொண்டே இருந்தன அத்தனையும் தாமரை மரத்தை பார்ப்பதற்காக மட்டும்.

 

கதைகளை எண்ணத்தில் கொண்டு பொன்னி தயங்கினாலும் பிரண்டை வேலியை தாண்டும்வரைமட்டுமே அவை. தாண்டிவிட்டால் வெடிவைக்கப்பட்ட குன்றை போலத் தயகங்களும் தகர்ந்துவிடும். அலறுகின்ற ஆந்தை ஒலி பொன்னிக்கு தன் சிரிப்போடு போட்டிபோடும் குழந்தையை நினைவூட்டும். மிரட்சியால் அங்குமிங்கும் சிதறி சிறகுவிற்கும் வெளவால் குட்டிகளோ பொன்னிக்கு வேடிக்கை காட்டுவதற்காகவே பிறப்பெடுத்ததாய் நினைத்துக்கொள்ளுவாள். ஆள் அண்டாத ஜமீன் வீடோ தனக்கு விளையாட்டு பொருளாய் பார்க்கத்தொடங்கினாள். பொன்னியின் பொழுதுகள் யாவும் தாமரை மரமும் தாமரை மரத்தின் சுற்றமும் மட்டுமே.

 

விரிஞ்சிபுரம் மட்டுமல்லாமல் அதைச் சுற்றியும் தாமரை மரத்தின் கதைகள் பரவத்தொடங்கின. மரத்திலிருந்து காத தூரத்திற்கு அப்பால் அவ்வழியாகச் சென்ற ஏதோவொரு ஓட்டை வாகனமொன்று நின்றுவிட அதற்கும் காரணமாகி போனது தாமரை மரம். தடியுடன் நடந்த தள்ளாத கிழவனொருவன் அம்மரத்தை தாண்டிவந்து வீடடைந்தவன் மறுநாள் நிரந்தரத் தூக்கத்தில் ஆழ்ந்துவிட அதற்கும் காரணமாகி போனது தாமரை மரம். ஊதக்காற்றுக்கும் தாமரை மரம், நடுநிசி நாய்களின் ஊளைக்கும் தாமரை மரம். இப்படியாகத் துலங்காத விஷயங்களின் துவக்கமாகவும் முடிவாகவும் தாமரைமரம் காரணமானது. மெல்ல மெல்ல அந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டுக்கொண்டே சென்ற நேரம், தன்னுடைய ஆக்டிவாவை இயக்கிபடி தாமரை மரத்தை பற்றிய கேள்வியோடு பெண்ணொருத்தி விரிஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

 

புரளி கிளப்ப ஆள் கிடைத்துவிட்ட மட்டற்ற மகிழ்ச்சியில் சிலர், மரத்தை பற்றிப் பேசினால் மரணம் நேருமோ எனச் சிலர், நமக்கெதற்கு வம்பென்று ஒதுக்கம் கொள்ளும் இன்னும் சிலர். நாலு திசைகளிலும் நானூறு கதைகள் உருவெடுத்தன.ஆனால் உண்மையைத் தேடிவந்த பெண்ணுக்கு சிலபல உளறல்கள் மட்டுமே மிச்சமாய்.

 

தாமரை மரத்தை பார்க்கவேண்டும் என்று கூறியவளை, வேற்றுகிரகவாசியை போல பார்த்துவைத்த விரிஞ்சிபுர மக்கள், ஆளாளுக்கு ஏதோவொரு சோலி இருப்பது போன்று சொல்லிச்சென்றனர்.

 

அட்டையாக ஒட்டி கடைதெருவோரை நச்சரிக்க, தேநீர்கடை மாரிமுத்து பொன்னி போகின்ற வழியைக் காண்பித்ததோடு ஒதுங்கி கொள்ள முயல, அடுத்தக் கேள்வியொன்றை தயார்நிலையில் வைத்திருந்தாள். தாமரை மரமென்று பெயர் வர காரணமென்ன என வேதாளமாய்க் கேள்வி எழுப்ப சலிப்பியுடன் பொன்னி உட்பட மெய்யான ஜமீன் மர்மம் யாருக்கும் தெரிய சாத்தியமில்லை என்றும் எழுபது வருடங்களுக்கு முன்பாக நடந்த ஏதோ ஒரு துர்சம்பவம் மட்டும் பின்னணியில் உள்ளதெனப் போகிற போக்கில் சொல்லி சென்றார்.

 

சிறிமியானாலும் சிநேகிதம் பிடித்தபடி பொன்னியின் பாதையில் புதியவள் செல்ல ஆங்காங்கே சிலர் தங்களுக்குள் ரகசியம் பேசி ஒதுங்கிக்கொண்டனர். சில சுள்ளிகள் அவளது பாதங்களைக் காலனியை தாண்டி பதம் பார்க்க, சில கருவேல மூற்களோ இடது முழங்கையைக் கீறி ரத்தம் சுவைத்தது. விண்ணென்று வலித்தபோதும் தாமரை மரத்தை நெருங்க நெருங்க புதியவள் நெஞ்சில் அளவிடமுடியா அலாதியான பேராவல் எழுந்தவண்ணம் கூச்சலிட, நடையின் வேகத்தைப் பொன்னியின் ஓட்டத்திற்கு ஈடுகொடுத்தாள்.

 

எப்பொழுதும் போல் பிரண்டை வேலியை தாண்டுவதற்கு முன் கால்களைக் கட்டிப்போட்ட பொன்னி வீட்டினுள்ளிருந்து வெளியேறிய வெளவாலொன்றை பார்த்து புன்னகைத்தபடி முன்னேற, விசித்திரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தாள் புதியவள். வீட்டின் உரிமையாளர் வாவென்று அழைத்ததை போன்றதொரு பாவனை பொன்னியின் முகத்தில்.

 

முற்றமும் உப்பரிகையும் கொண்ட ஈரடுக்கு வீட்டை பார்த்தபடி உள்நுழைய, சாரிசாரியாகச் சென்றுகொண்டிருந்த எறும்புக்கூட்டம், தன் பாதையில் ஏற்பட்ட இடையூறால் புதியவளை நோக்கி எரிச்சல் பார்வையுடன் கலைந்து வேறுபாதை எடுத்தது. புழுதிநிறைந்த காற்று செருமலை ஏற்படுத்த ஒட்டடைகளை ஒதுங்கியபடி முன்னேறியவளின் கண்களுக்கு வீட்டினுள் நடமாட்டம் தென்பட்டது.

 

திரள்திரளான நீண்ட கேசம் விரிந்தாட, நிலம் தொடும் பாவாடையுடன் அள்ளி செருகிய தாவணியுடன் அவள் நின்றுகொண்டிருந்தாள். பார்ப்பதற்கு அழகோவியமாய்ச் சிரிப்பிலாத சிலையாய் நின்றவளை நடுத்தரவயதை கொண்ட ஒருவன் ஏசிக்கொண்டிருந்தான்.

 

இரண்டொரு வாரத்தில் கப்பம் வரவில்லையென்றால் கட்டிலுக்கு வரும்படி கட்டளைகள் வர, கண்ணீருடன் நின்றவள் முற்றத்தைத்தாண்டி கொள்ளைக்கு ஓடினாள். சாடியவன் தலைப்பாகை அணிந்தபடி குதிரை பூட்டிய மூடுவண்டியில் கிளம்பிவிட மீண்டும் அந்த வீடு அமைதியில் ஆழ்ந்தது. அழுதழுது ஓய்ந்தவள் கொள்ளையிலிருக்கும் செங்கொன்றை மரத்திடம் கண்ணீரால் மொழிபேச, மரமும் மலரால் மறுமொழி பேசியது.

 

உப்புநீர் கன்னக்குழியில் வழிய, அதே கன்னக்குழியில் அவள் ஊர் காளையர்கள் வீழ்ந்து வாழ்வதற்குப் போட்ட போட்டியில் பெருமைகொண்டவள் இன்று கப்பத்திற்காகத் தாசியாக வந்ததை எண்ணி எண்ணி வெதும்பிக்கொண்டிருந்தாள். ஒதுக்குபுறமான ஜமின்வீட்டிற்குத் தான் வந்ததையே ஜமீன் முன் நிர்வாணமாய் நின்றதாய் கூசி கூனி குறுக கண்களைத் துடைத்தபடி ஜமீனின் பண்ணையாட்கள் புடைசூழ முகமறைத்து  மார்கபந்தீஸ்வரர் கோயில் சென்று வந்தாள். கோவில் செல்லவது வழக்கமானது போல் கோவில் குளத்தில் தாமரையொன்றை கொய்வது வழக்கமாகிட ஜமீன் வீட்டிற்குத் திரும்புகின்றவளின் கைகளில் எப்போதும் தாமரை.

 

அல்லும் பகலும் நகர்ந்திட மரமும் மார்கபந்தீஸ்வரரும் துணையாயினர். கோவிலிலுள்ள அர்த்த சந்திர நேரம்காட்டும் கல் அவளின் இறுதி நாளின் அருகாமையை நாள்தோறும் காட்டிட, கற்பை காப்பாற்றிக்கொள்ள அவள்வீட்டாரிடமிருந்து கப்பம்வந்தபாடில்லை.

 

அன்றும் கோவில்சென்று தாமரையுடன் வண்டியேற, நீண்ட கூந்தல் கண்ட வெள்ளைக்காரன் மாட்டுவண்டியை மறித்திட பண்ணையாள் ஒருவன் காமப்பார்வையுடன் ஜமீன்தாருக்கு பிறகு உங்களுக்கொருநாள் விருந்துக்கென்று சொல்லி செல்ல, அக்கம் பக்கம் சென்ற ஆண்களோ ஆட்டத்தில் பங்குண்டா எனப் பார்த்துவைக்க வாழும் ஆசையை விட்டொழித்தாள்.

 

அவளைத் துகிலுரியும் இரவுக்காகத் துச்சாதனாய் காத்திருந்த ஜமீன்தாரை, அவள் உயிர் உறியும் எமனாய் அரளி முந்திக்கொள்ள, சலிப்புடன் இடுகாட்டு சாத்தையனுக்குச் சொல்லியனுப்பினர்.

 

உயிரற்ற உடலை ஏமாற்றத்துடன் ஜமீன் கண்கள் பார்க்க, பரிதாபத்துடன் சாத்தையன் கண்கள் பார்த்தன. வந்தநாள் முதலாய் நாள்தோறும் தனிமை போக்கிய செங்கொன்றை அவளது சடலத்துடன் தனித்து நின்றது. சாத்தையன் சடலத்தைத் தூக்க, அவள் கைகளிலிருந்த தாமரையொன்று மரத்தடியில் வீழ்ந்தது. தினந்தோறும் வைத்த தாமரைகள் சருகாகச் சிதறிக்கிடக்க ஜமீன் வீட்டில் அவளது வாழ்நாள் கணக்காகப் புதியதும் மண்ணோடு சேர்ந்தது.

 

சம்பவத்திற்குப் பின் ஜமீன் வெகுநாட்கள் அந்த வீட்டிற்குத் தலைகாட்டவில்லையென்றாலும், மீண்டும் பெண்களை இழுத்துவர ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு காரணங்கள். ஒவ்வொருமுறையும் வந்த பெண்கள் வந்தது போலவே சென்றனர். ஜமீனின் உடலில் பாதிப்போ கப்பம் வந்ததோ என்ன முயன்றும் ஜமீனின் நாட்டம் ஈடேறவேயில்லை. எந்தக் கற்பு களவாடலும் பின்னெப்போதும் இப்போதுவரை இல்லவே இல்லை, அந்த வீட்டில்.

என அனைத்தும் பிம்பங்களாகப் புதியவளின் கண்களுக்குத் தோன்றி தோன்றி கண்ணாம்பூச்சி காட்ட, வெறுமையாய் இருந்த அவளது மனதில் வெற்றிக் குடிகொண்டது போலப் பிரம்மை. காட்சிகளாக விரிந்த நியாபகங்கள் சரேலென்று பொன்னியின் குரலால் நிறைவுபெற்றது.

 

இது தான் அக்கா இந்தத் தாமரை மரத்தோடு கதை. உனக்கு வேறெதுவும் தெரியனுமா ?” பொன்னியின் குரல் விசித்திரமாக ஒலிக்க, ஏழு வயது சிறுமிக்கு எழுவது வருட கதையின் மர்மங்கள் தெரிந்தது எவ்வாறோ, பொன்னியின் குரலை தன் கண்கள் காட்சியாகக் கண்டதெப்படியோ என்ற எண்ணத்துடனே, “அந்தப் பெண்ணுடைய பெயர் ?” என இறுதி கேள்வி எழுப்ப, புதியவளின் கைபேசி சிணுங்கியது.

ஹெலோ, நாளைக்கு நியூஸ் தாமரை மரம் தான். நீங்க இன்போர்மேசன் கலெக்ட்

பண்ணிடீங்களா ?” என்ற கேள்வி எதிர்முனையில், பொன்னியின் பதிலோ எதிரில், “சமுத்திரா. அந்தப் பொண்ணோட பெயர்

பெயரை கேட்டுத் தொலைபேசியில் கவனத்தைத் தவறவிட்ட புதியவளை எதிர்முனையில், “சமுத்திரா ஆர் யூ தேர்?” என்ற கேள்வி நடப்பிற்கு இழுத்து வந்தது.

 

மறுமொழி கூறாது தொலைபேசியை அனைத்தவளின் விழிகள் குழப்பத்துடன் செங்கொன்றை மரத்தை ஏறிட, தாமரையொன்று அவள் மீது விழுந்தது.

Advertisement