Advertisement

புயலோ தென்றலோ – 22

 

வாழ்க்கையில் துன்பமென்ற ஒன்றே அறியாதவனுக்குக் காலம் கொடுத்த அத்தனை அதிர்ச்சிகளையும் கடந்து வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியிருந்தது. அன்னையையும் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். கூடவே ஒரு செவிலியரும் அவரைப் பார்த்துக்கொள்ள. சவீதாவின் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் தவித்தவன், தற்செயலாக அவளைச் சந்தித்ததாகக் கூறிவிட்டு வேறெதுவும் தனக்குத் தெரியாது என்று முடித்துக்கொண்டான்.

 

அவளைப்பற்றி எதுவுமே அவனுக்குத் தெரியவுமில்லை தான். கூர்கில் இருந்து அழைத்து,வந்தது மட்டும் தானே அவனுக்கும் தெரியும். இருந்தும் மனம் கேளாமல் தவித்தான். முன்பிருந்த பிரகாஷாக இருந்திருந்தால் இவ்வாறு சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் காலமும் காலம் தந்த காயங்களும் அவனை மிகவும் மாற்றியிருந்தது. மாறியுமிருந்தான்!

 

சவீதாவிற்காக ஒரு முறை கூர்க் சென்று பார்த்தவன், அவளைக் குற்றவாளி போல நினைத்துப் போலீஸ் தேடி கொண்டிருக்க, மீண்டும் அவளைக் கூர்க் அழைத்து வரும் எண்ணத்தைக் கைவிட்டிருந்தான். அதே சமயம் அவளுடைய கேள்விகளுக்கும் பதில் கூற இயலவில்லை. ஆதாலால் பத்துத் தினசரிகளில் மட்டும் இவளின் புகைப்படத்தை போட்டு விளமபரம் செய்திருந்தான். ஊர் முழுவதும் பிரசுரம் செய்தால், அதுவே அவளுக்கு ஆபத்தாகிவிடக் கூடுமோ என்றே இவ்வாறு செய்திருந்தான்.

 

தெரிந்தோ தெரியாமலோ அவளை இந்தக் கேசில் இவன் இழுத்துவிட்டு பெரும் பாவத்தைச் சம்பாதித்து வைத்திருக்க, மேற்கொண்டு அவன் கூர்கில் விசாரித்ததில் அவள் அனாதை என்றும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டாளென்றும், கணவனும் வெளியூருக்கு சென்றவன் திரும்பவில்லை என்றும் கூறவே பிரகாஷ் இன்னும் குன்றிப் போனான். அவளைக் குறைவின்றி மரியாதையுடன் நடத்தினான். அதிலும் அவள் கர்ப்பவதி என்று தெரிந்த பின் இன்னும் இன்னும் வாடினான். ஆனால் அதிலிருந்து வெளிவரத்தான் அவனால் முடியவில்லை.

 

“இப்ப கூட இதெல்லாம் ஏன் சொல்றேன்னா? உனக்குத் தெரியாம செஞ்ச பாவத்துக்கும் சக்திக்கு தெருஞ்சு செஞ்ச பாவத்துக்கும் என்னால முடுஞ்ச பரிகாரம். அதான். அதுனாலதான் வெண்பா வோட கடைசி ஆசைய கூட ஒதுக்கீட்டு சொல்லுறேன்.

 

எங்க வேணும்னாலும் சொல்றேன்” எனத் தலை கவிழ்ந்தபடி பிரகாஷ் கூற, அவன் முன்னிலையிலே கார்த்திகேயன் தன்னுடைய மேலதிகாரியை கைபேசியில் அழைத்தான்.

 

“சார், அந்த அருண் கொலை கேஸ் முடுஞ்சிடுச்சு. கொலை பண்ணினது ஒரு பொண்ணு. அந்தப் பொண்ணு பேரு வெண்பா. கணவன் மனைவியை ஏதோ சாக்கு சொல்லி கொலை செய்யப்பட்ட அருண் கூர்க் வரவச்சிருக்கான். அந்தப் பொண்ணு கல்யாணம் ஆன பொண்ணுன்னு தெருஞ்சும், அவளுக்கு இஷ்டமில்லாத போதும், தன்னோட காட்டேஜ் வரவச்சு தப்பா நடக்க ட்ரை பண்ணிருக்கான்.

 

அந்தப் பொண்ணு தன் ஆசைக்கு இணங்காம மறுக்க, மல்லுக்கட்ட அதுல அந்தப் பொண்ணு வயித்துல கத்தியால குத்திட்டான். அங்க வந்த அந்தப் பொண்ணோட கணவன், பொண்டாட்டிய காப்பாத்த அருண கட்டையால தற்காப்புக்காக அடிச்சிருக்காரு.

 

அதுக்குப் பிறகு அருண் அந்தப் பொண்ணோட கணவரையும் கொலை செய்யப் போக, இந்தப் பொண்ணு கத்தியெடுத்து அருண குத்திடுச்சு.  இதுவும் தன்னுடைய கணவனைக் காப்பாத்த வெண்பா செஞ்ச தற்காப்பு நடவடிக்கை தான்.

 

இது தான் நடந்திருக்கு. பொண்டாட்டிய காப்பாத்த அந்தப் புருஷன் ஆஸ்பத்திரிக்கு போறவழியில வெண்பா இறந்துட்டாங்க. இதுக்கெல்லாம் நேரடி சாட்சி சவீதா…

 

மத்த விவரங்களையும் வெண்பா பாடியோட போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்டோட வரேன். சவீதா அப்புற வெண்பாவோட கணவன் பிரகாஷயும் நேர்ல ஆஜர் பண்றேன்” எனப் பேசிவிட்டு தொலைபேசியின் அழைப்பை துண்டிக்க, பிரகாஷ் கை எடுத்து கும்பிட்டான். அவன் கண்கள் கலங்கியிருந்தது. வேறெதுவும் பேசும் நிலையில் அவனில்லை. பேசவேண்டிய அவசியமும் அங்கில்லை. வெண்பாவின் பாத்திரம் இனி பிறரால் இழிவாகப் பார்க்கப்படப்போவதில்லை. மானத்தைக் காட்கும் முயற்சியில் உயிர்விட்டவள் என்றே இந்த உலகம் என்றென்றும் சொல்லும்.

 

சவீதாவின் மனம் கூடக் கார்த்திக்கின் மீதிருந்த கோபத்தையும் மீறி நிம்மதி கொண்டது. கார்த்திக்கின் செயல்கள் அப்படி அவளை எண்ண வைத்திருந்தது. வெண்பா இறந்தேவிட்டிருந்தாலும் அவளுடைய மானம் காப்பற்ற பட்டதில் சவீதாவிற்கு நிம்மதி.

 

***

ஓடிற்று, அதோ இதோவென்று முழுதாக மூன்று மாதங்கள் நிறைவுபெற்றிருந்தது. பிரகாஷிற்குக் குறைந்த காலத் தண்டனையே! சிறையிலிருந்தான். அவனின் வேண்டுகோளுக்கிணங்க, சவீதா வசுந்தராவிற்குத் துணையாக முல்லை வனத்திலே இருந்தாள். அவ்வப்போது பெங்களூரிலிருந்து வந்து வந்து போய்கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

 

அவன் வந்தாலும் போனாலும் அதெதுவும் சவீதாவை பாதித்தாகத் தெரியவில்லை. ஆனாலும் கார்த்திக் வருவதை நிறுத்தவில்லை. சவீதாவிற்காகவும் தன் குழைந்தைக்காக மட்டுமில்லாமல் வசுந்தராவிற்காகவும் வர தொடங்கியிருந்தான்.

 

ஆனால் சவீதாவின் பாரா முகம் அவனைப் பாடாய்ப் படுத்தியது. அன்று கார்த்திகேயன் வந்திருந்த நேரம் குழைந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனை சென்றிருந்தாள் போலும். எப்போதும் பெரிதாக வந்து வரவேற்றதில்லை தான். ஆதலால் இம்முறை அவள் வீட்டில் இல்லாததுகூட அவனுக்குத் தெரியவில்லை. சொந்த மனைவியே ஏதோ அந்நியனிடம் நடப்பதை போல நடந்துகொள்வது அவனை மெல்ல மெல்ல கொள்ளத் தொடங்கியிருந்தது.

 

“ஐயா! அம்மா ஆஸ்பத்திரி போயிருக்காங்க..பாப்பாவை தூக்கிட்டு. ஏதோ தடுப்பூசி போடணுமா. உங்களுக்குக் காபி கொண்டுவரவா ?” என வந்து நின்றாள் வள்ளி.

 

“இல்ல வேணாம்” எனத் தன்னுடைய அறையை நோக்கி சென்றான். பின்பு அவனின் குழந்தையை எங்கே தூக்கி கொண்டு சென்றாள் என்பதை அறிந்துகொள்ளவே வேலைக்கார பெண்ணின் தகவல் தேவை படுகிறதே. வரும் காலங்களில் தன் குழந்தையாவது தன்னிடம் பேசுமா என்றெண்ணி விட்டத்தைப் பார்த்துப் படுத்திருந்தான்.

 

நினைக்க நினைக்க வேதனை மட்டுமே மிஞ்சியது. தன் தாயின் புகைப்படத்தின் முன் நின்றவன் அப்படியே மண்டியிட்டு வாய்விட்டு கதறி அழ தொடங்கினான். இப்படி அவன் அழுது அவனே பாத்திருக்கமாட்டான். தனிமை ஒரு மனிதனை விரக்தியின் உச்சத்தை அடையவைக்கும் என்பதற்குச் சாட்சியாய் நின்றான்.

 

பதவி பேர் புகழ் பணம் என்று எதுவும் கார்த்திக்கின் தனிமையைப் போக்கவில்லை. மனைவியின் பாராமுகமும் சிந்திக்காமல் அவள் மீது இவன் கொண்ட சந்தேகமும் வலிக்க வலிக்க அவனுக்குத் தண்டனை கொடுத்தது. குழந்தையைப் பார்க்க அவள் தடுக்கவில்லை தான், அதே நேரம் நினைத்த நேரம் உரிமையாகச் சென்று குழந்தையைப் பார்க்கும் உரிமையையும் வழங்கவில்லை.

 

“அம்மா, ஏமா என்ன விட்டு நீயும் அப்பாவும் போனீங்க. எனக்கு இப்ப நீ வேணுமா… உன் மடில தல வச்சு படுத்துக்கணுமா. நா பண்ணினதெல்லாம் உண்ட சொல்லி அழணும் போல இருக்கு மா.

 

நீ உயிரோட இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. நீ சரியான நேரத்துல சரியான புத்திமதி சொல்லிருப்ப.

 

பொண்டாட்டிய நம்பனும்னு நம்பிக்கை தான் வாழ்க்கைனு எனக்குப் புரிய வச்சிருப்ப. நா நிதானமா யோசிக்காம போனது எவ்ளோ பெரிய தப்பு. திரும்பவும் சவீதாவோட நம்பிக்கையை என்னால வாங்க முடியுமான்னு தெரியவே இல்லையே மா.

 

ஒருவேளை நா இப்படியே இருந்திடுவேனா ?” எனக் கூறி வாய்விட்டு அழுதவன், அப்படியே தரையில் சுருண்டு படுத்தான்.

 

ஆண்கள் அழமாட்டார்கள் என்று யார் சொன்னது. இன்னமும் சொல்லப்போனால் மனதளவில் ஆண்களே பெண்களை விட மென்மையானவர்கள். தனக்கென்ற சொந்தம் தன்னை உதறும் பொழுது அதை ஏற்கமுடியாமல் தவிப்பவர்கள். உலகமே எதிர்த்தாலும் எதிர்த்து நிர்ப்பவனும் அவனே, நேசித்தவளின் சிறு பாராமுகத்தையும் ஏற்க முடியாதவனும் அவனே.

 

காதலித்த போதும், அவள் சம்மதத்திற்காகக் காத்திருந்த போதும் கூட உணர்ந்திராத தவிப்பை இப்போது உணர்ந்திருந்தான். சவீதா, உணரவைத்திருந்தாள்.

 

ஒரு போதும் யாரிடமும் எதையும் எளிதாகப் பகிராதவன் இன்றும் தனிமையிலிருப்பதாய் நினைத்து மனதிலிருந்த அத்தனை அழுத்தத்தையும் கொட்டிவிட, அனைத்தையுமே குழைந்தையுடன் சவீதா அறையின் வாயிலருகில் நின்று கேட்டிருந்தாள். அவனின் அறையைக் கடந்தே அவளுடைய அறைக்குப் போகவேண்டும். அப்படிச் சாதாரணமாகக் கடந்து சென்றவள் கார்த்திக்கின் அம்மா என்றழைத்த குரலில் இருந்த வலியை உணர்ந்து திடுக்கிட்டாள். அப்படியே அவன் பேச பேச உள்ளுக்குள்ளே இவளும் அழ தொடங்கியிருந்தாள்.

 

இப்படி இவள் வந்ததையோ இத்தனை நேரம் தன்னைக் கவனித்துக் கொண்டிருந்ததையோ உணராதவன் சவீதாவின் நினைவிலேயே இன்னமும் அதே நிலையில் தான் இருந்தான்.

 

சவீதாவின் கால்கள் அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமலே அவனை நெருங்கியது. குழந்தையை மெத்தையில் மெல்ல படுக்கவைத்தவள், அவனருகே அமர்ந்தாள். மெல்ல அவனுடைய தலையை எடுத்து தன் மடியில் வைக்க, அவளின் தொடுகையில் உணர்வு பெற்றான். மெல்ல நிமிர்ந்து தன் மனைவியைப் பார்த்து ஏதோ பேசவந்தான். ஆனால் அவளுடைய இதழ்கள் எதுவும் பேசவில்லை. மௌனமாகவே இருந்தது. அவளுடைய விழிகளில் ஒரு துளி நீர் உருண்டு திரண்டு அவன் இதழ் மீது விழுந்தது.

 

அது அவனை மேற்கொண்டு எதுவும் பேசவேண்டாம் என்று உணர்த்தியதோ. கார்த்திக்கின் இதழ்களை மனைவியின் கண்ணீர் மௌனியாக்கிவிட, அவனின் பழுப்பு நிற விழிகள் அவளுடன் ஆயிரமாயிரம் கதைகள் பேசின.

 

அந்த விழி பாஷையில் மன்னிப்பு இருந்தது. காதல் இருந்தது. ஏக்கமும் இருந்தது.

 

அங்கே வார்த்தைகள் தேவை இல்லாமல் போனது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “சவீ…என்ன..” என்று கார்த்திகேயன் மன்னிப்பை வேண்ட இதழ் பிரிக்க, சட்டென்று அவனுடைய முரட்டு இதழ்களை மிகவும் வன்மையாகச் சவீதாவின் இதழ்கள் மூடியிருந்தன.

 

இத்தனை நாள் அவள் பட்ட ரணத்திற்கும் அவனின் கனமான நிமிஷங்களுக்குப் பரிசாகவோ தண்டனையாகவோ அந்த இதழ்களின் யுத்தம் தொடர்ந்தது. எத்தனை நேரம் நீடித்திருந்தது என்று இருவருக்கும் புரியாத நிலையே! அவ்விருவரும் சுயத்திற்கு வந்தது அவர்களின் செல்ல மகளின் அழுகை குரலிலே.

 

அவசரமாக விலகியவர்கள் வேகமாக இருவரும் ஒரு நொடியில் குழந்தையின் அருகே சென்று ஒன்றுபோலாகவே இருவரும் குழந்தையைத் தூக்க முனைய, அது அவர்களின் எண்ணப்போக்கை காட்டியது. இருவரும் சிரித்துக்கொண்டே சேர்ந்தே தூக்கி கொஞ்சினர்.

 

“குழந்தையைத் தாங்க, நான் சரியா பிடிக்கிறேன் இன்னும் அவளுக்குக் கழுத்து சரியா நிக்கல” ‘என முகம் நிறைந்த சிரிப்புடன் வினவ, “முடியாது! முடியாது! இத்தனை நாளா பயந்து பயந்து தூங்குவேன். இப்போ தான் ரொம்ப ரொம்பச் சந்தோசமா தூக்குறேன். விடுடி, என் பொண்ண நா தூக்குறேன்” என்று கூற, “அதெல்லாம் முடியாது! என் பொண்ணு என் கைல தான் இருப்பா” என அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பொருட்டு, அவனோடு வீம்புக்கென்று வம்பு வளர்த்தாள்.

 

ஆனால் அவனோ, “இனி சும்மா கூட உண்ட சண்டை போடமாட்டேன். என்னால உண்ட இனி ஒருநிமிஷம் கூடப் பேசாம இருக்க முடியாது சவீ” எனக் காதலாகக் கூறியவன், “உன் கைல இருந்தாலும் என் பொண்ண நா தூக்குவேன்” என அவள் கண்ணோடு கண் கலந்து கவி பேசினான்.

 

அவனின் பார்வையில், அந்தப் பழுப்பு நிற விழி கொண்ட மாயக்காரனின் காதலில் கரைந்தபடி, “அதெப்படி ?” என வினவ, “இப்படி….” என்று கார்த்திக் கூறினான்.

 

அப்பொழுதுதான் சவீதா உணர்ந்தாள், அவளுடைய கைகளில் குழந்தை அணைவாய் இருக்க, அவளோ தன்னுடைய கார்த்திக்கின் கைகளில் இருந்தாள். இவள் குழந்தையை எத்தனை பத்திரமாய்ப் பிடித்திருந்தாளோ அத்தனை பத்திரமாய்க் கார்த்திக்கும் சவீதாவை கைகளில் ஏந்தியிருந்தான்.

 

அவனுடைய காதலும் காதல் பரிசும் இப்போது அவன் கைகளில்…..

 

வண்ணத்துப் பூச்சி பெண்ணவள்

வாழ்வை வண்ணங்களால் பூசினால்

வாழ்வே முடிந்துவிட்டதாய்

தவிக்கும் வேளையில்

வா வாழ்ந்துதான் பார்த்துவிடுவோம்

இன்னொருமுறை

ரசித்து உணர்ந்து

வாழ்ந்து தான் பார்ப்போமே

என்று மடித்தாங்கி கொண்டாள்.

 

என்ற வரிகள் கார்த்திகேயனின் மனதில் நிறைந்திருந்தது.

 

இத்தனை மாதங்களாய் புயலாய் சுழற்றியடித்தவள் இன்று தென்றலாய் மடிதாங்கி நிற்க, இத்தனை நாட்கள் அவளைக் காணும் போதெல்லாம் புயலோ தென்றலோ என்ற குழப்பம் தீர்ந்து ‘புயலின் தென்றல் அவள்’ என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

 

ஊடலில் புயலெனவும் கூடலில் தென்றலெனவும் இருப்பவளே தன் காதலி எனப் புரிந்துக்கொண்டான்.

 

அவர்களின் வாழ்க்கையும் மிகவும் வண்ணமயமாகவே நகரத்தொடங்கியிருந்தது குந்தவையுடன். ஆம் அவர்களின் செல்ல மகளின் பெயர் குந்தவை. அந்த வண்ணங்களோடு வண்ணங்கள் சேர்ப்பது போல, விக்ரம் தனக்கென்று ஒரு துணையைத் தேடிக்கொண்டான். பூரணி படிப்பை முடித்துக் கோயம்பத்தூரிலே பணியில் அமர்ந்திருந்தாள். பிரகாஷும் வெளியே வந்திருந்தான். இப்போதலாம் வசுந்தராவின் உடலில் கூடச் சற்று முன்னேற்றம் தெரிந்திருந்தது.

 

அவர்களின் வாழ்வு சுபமாகவே செல்ல நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

 

Advertisement