Advertisement

புயலோ தென்றலோ – 9

 

இரவு எட்டு தான் என்றாலும் எங்கும் இருள். இருளுக்குப் பழக்கப்பட்டிருந்த விழிகளுக்குப் பார்வை தெரிந்தாலும், எப்புறம் செல்வதென்று கார்த்திக்கும் சவீதாவும் ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் மெள்ள மெள்ள நடந்துக்கொண்டிருந்தனர் .

 

யானை கூட்டம் சற்றுத் தொலைவில் தான். ஆனாலும் திட்டமாக எங்கிருக்கிறதென்று தெரியவில்லை. வேட்டு சப்த்தமும் ஓய்வது போலத் தோன்றவில்லை. பாவப்பட்ட மிருகங்களும் செவி பிளக்கின்ற ஒலியினாலும் திடீரென்று விண்ணில் முளைத்த ஒளியாலும் மிரள தொடங்கின.

 

“கார்த்திக், நாம இப்ப ரொம்பக் கவனமா இருக்கணு. ஆனா எல்லாப் பக்கமும் சத்தம் கேட்குது. கண்டிப்பா யானைகள் கூட்டமா தான் இருக்கும். எந்தப் பக்கம் போறதுன்னு தெரியல” என பதற்றத்துடன் சவீதா கூறியபடியே கார்த்திக்கின் கைகளை அழுந்த பற்றிக்கொண்டாள்.

 

“நீ டென்ஷன் ஆகாத. என் கூட வா. பாத்து மெள்ள நட. காலுல அடிவேற பட்டிருக்கு” என கூறியபடி ஆதரவாகவும் அணைவாகவும் பிடித்தபடி அழைத்துச் சென்றான்.

 

இருந்த அசாதாரணச் சூழல் காரணமாய்ச் செல்ல வேண்டிய பாதை விடுத்து வனத்திற்குள் எங்கெங்கோ நுழைந்துவிட்டிருந்தனர்.

 

“நம்ம போற பாத சரியா சவீ?”

 

“தெரியல கார்த்திக். எனக்கு இந்தப் பாதை புதுசா இருக்கு. ரொம்பத் தூரம் உள்ள வந்துட்டோம். இப்ப எப்படிப் போறது ?”

 

“பாக்கலாம். வெடி சத்தம் குறையுது. சீக்கிரம் போய்டலாம்.”

 

“இனி வெடி சத்தம் குறைஞ்சாலும் பெருசா பலன் இருக்காது. இந்த இருட்டுல பாதையை எப்படிக் கண்டுபிடிக்கிறது ? அதோட..” எனத் தொடங்கியவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் நடுநடுங்க தொடங்கினாள்.

 

“என்னாச்சு சவீ?”

 

“இங்க பாருங்க…நாம ரொம்பப் பெரிய ஆபத்துல மாட்டிகிட்டோம்” என்று கூற, சவீதா காட்டிய இடத்தில் டார்ச்சை காண்பிக்க, அங்கே பெரிய யானையின் காலடி தடம்!

 

யானைகள் நடமாடும் பகுதிக்கே வந்துவிட்டத்தை அறிந்த இருவருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டாலும் முதலில் சுதாரித்தவன் கார்த்திகே.

 

“ஒகே…கூல். என்கிட்டே ஒரு வழி இருக்கு. ஆனா எந்த அளவு அது நமக்குக் கை கொடுக்கும் தெரியல. முயற்சி செய்து பாப்போம்” எனக் கூறிக்கொண்டு இருந்த பொழுதே, மீண்டும் யானையின் பிளிறல் முன்னோக்கி வருவதைப் போன்று தோன்றியது.

 

அதற்கு மேல் தாமத்திக்காவன் தன்னுடைய கைபேசியில் வேகமாக எதையோ தேடி, ஒலிக்கச் செய்தான். கை பேசியின் சப்ததத்தை அதிகரிக்கவே, தேனீ கூட்டத்தின் ஒலி அந்த வனாந்திரத்தில் பிளக்க ஒலித்தது.

 

ஆம் ! கார்த்திக் தன்னுடைய கைபேசியில் ஒலிக்கச் செய்தது முன்பே பதிவு செய்து வைத்திருந்த தேனீக்களின் ஒலியை.

 

“கார்த்திக்” என்ற அழைப்பிற்கு, அவள் இதழ்மீது தன் கரம் பதித்து, பேசாதே என்பதாய் செய்கை செய்தான்.

 

அந்தத் திகிலூட்டும் நிலையிலும் கார்த்திக்கின் முதல் ஸ்பரிசம் அஃதாவது அவன் விரல் அவள் இதழ் தொட்ட முதல் ஸ்பரிசம், இருந்த சூழலை அடியோடு மறக்க செய்து இன்ப அதிர்வலைகளை அவளுள் ஏற்படுத்தியது.

 

மெள்ள அவனின் கைகளை விலக்கியவள் கார்த்திக்கின் முகத்தை நோக்க, அவனோ அதை உணர்ந்தார் போன்று தோன்றவே இல்லை.

 

அவள் முகம் பார்ப்பதை உணர்ந்தவன், “கொஞ்சம் பொறுமையா இரு சவீ. நாம இங்க இருந்து தப்பிச்சிடலாம்” என மிருதுவான குரலில் கூற, அப்போதுதான் மீண்டும் சுற்றம் உணர்ந்தாள்.

 

மீண்டும் அவளுள் பயம் தொற்றிக்கொள்ள, கார்த்திக்கோ, “நீ இங்க வெயிட் பண்ணு. கொஞ்ச கூட அசையாத ? நான் இதோ வந்திடுறே” எனக் கூற, செல்ல முயன்றவனின் கைகளை இறுக பற்றிக்கொண்டாள்.

 

“என்னாச்சு சவீ?”

 

“இல்லை அதுவந்து…நீங்க போகவேணாம்”

 

“சவீ! கண்டிப்பா இந்த இடத்தில எந்த ஆபத்தும் இல்லை. இதுக்குஅப்புற எந்தப் பாதையில போகணும்னு கொஞ்சம் முன்னாடி போய் பாத்திட்டு வரே. யானை நம்ம இருக்கிற இடத்திக்கு வரவே வராது. இந்தத் தேனீ சவுண்ட் இருக்குறவரைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் ஒரு டென் மினிட்ஸ்ல வந்திடுறேன்.

 

அப்போ தான் நாம இங்க இருந்து போகமுடியும். இந்த மொபைல் வச்சுக்கோ. கண்டிப்பா உனக்கு ஆபத்து வராது”

 

“ஆனா உங்களுக்கு வந்திடுமே! வேணாம். உங்களைத் தனியா விடமாட்டேன்”

 

“பாதை எங்க இருக்குனு இந்த இருட்டுல எப்படி தேட? ரொம்பச் சிரமம்! தெரியாத பாதையில நடக்கும்போது ஏதாச்சு ஆபத்தனா ? இல்ல சவீ!  என்னால முடியாது… ”

 

“எனக்கு வந்தா பரவாயில்லை. நானும் வரேன். உங்களைத் தனியா அனுப்பி ஏதாவது ஆச்சுன்னா இல்ல என்னால முடியாத கார்த்திக். தனியா உங்களை விடமுடியாது விடவுமாட்டேன்” என ஸ்திரமாகக் கூற இந்தச் சவீதா கார்த்திக்கின் கண்களுக்குப் புதிதாகத் தெரிந்தாள்.

 

“ஏன்?  ஏன் அப்படி என்னைத் தனியா விடமாட்ட ?”

 

“ஏன்னா எனக்கு என்னை விட நீங்க ரொம்ப முக்கியம்” எனச் சட்டென்று அவனைத் தடுக்கும் வேகத்தில் கூறிவிட, அவளை நெருங்கி வந்து நின்றான்.

 

“இதுக்கு மேலயும் பொய் சொல்லுவியா சவீ ??”

 

“என்ன சொல்றீங்க? பொய்யா ?”

 

“ஆமா! என்மேல உனக்கு காதலே இல்லனு”

 

“அது வந்து…” பேச்சற்று நின்றாள்

 

“சொல்லு! இந்த நிமிஷம் என்னுடைய எதிர்பாப்பு உன்னோட உண்மையான பதில் மட்டும்.”

 

“இருக்கு! ஆனா கார்த்திக் ?”

 

“இல்லை வேற எதுவும் சொல்லவேணா. என்ன உன்ட்ட இருந்து தூரமா பிரிகிற காரணம் எதா இருந்தாலும் தூக்கியெறிஞ்சிடு. அது எனக்கு வேணா. உனக்கு அந்த காரண வேணா. நாம இனி சந்தோசமா இருக்கப் போறோம்” என கூறியபடி அவன் கைகளை அவளிடம் நீட்ட, குழப்பத்துடனும் ஆவலுடனும் நிறைவுடனும் அவனுடைய கரத்தில் தன் கரத்தை இணைத்தாள்.

 

இருவருக்கும் மனம் நிறைந்திருந்தது!

 

கார்த்திக் இருக்கிறான் என்ற நினைவும் சன்னதியில் கிடைத்த ஆசியும் சவீதாவின் அலைப்புறுதலுக்கு முற்றுப்புள்ளி இட்டன.

 

“இந்த நிமிஷம் ரொம்பச் சந்தோசம இருக்கே சவீ! உனக்கு என்ன வேணு சொல்லு. எதுனாலும் கேளு. என்னடா இப்படி அர்த்தராத்திரில காட்டுக்குள்ள கேளுன்னு சொல்றானேன்னு பாக்காத. நீ என்ன கேட்டாலும், மாமா உனக்குக் கண்டிப்பா அதைத் தந்திடுவேன்”

 

“பச்… அதல்லா ஒன்னு வேணா கார்த்திக்” என லேசான புன்னைகையோடு மறுக்க, “இல்ல, எதாவது…எனக்காகா கேளே” என வற்புருத்தினான்.

 

“சரி கேக்குறே! நிலம எப்படி மாறினாலு நீங்க எதுக்காகவு மாறக்கூடாது எப்பயும் எதுக்காகவும் என்னைத் தனியாவிட்டு போய்டவே கூடாது கார்த்திக். நமக்கு பிரிவுன்னு ஒன்னு இருந்தா அது நானா உங்களை நிரந்தரமா பிரியிறதா மட்டும்தான் இருக்கணு ” என கனத்த குரலில் கூற, ஆதரவாக அவளைத் தோள் சாய்த்தான்.

 

அவனிடமும் கனமான அமைதி பிறந்ததைக் கண்ட சவீதா, சூழலை இலகுவாக்குவதற்காய், “ஆமாம் அதென்ன மாமா ? உங்களை நீங்களே சொல்லிக்கீறீங்க ?”

 

“நீ அப்படி என்னைச் சொல்லணும்னு தா ஆசை. ஆனா நீ தா சொல்ல மாட்டிங்கிறியே! அதா நானே சொல்லிக்கிறேன்”

 

மெல்ல சிரித்தவள், “ஓ இதுவேறையா ? ரொம்ப ஆசைதான்”

 

“ஏன் நான் ஆசைப்படக்கூடாதா? அப்படிக் கூப்பிட மாட்டியா ?”

 

“மாட்டேன்! கார்த்திக் னு தான் கூப்பிடுவே”

 

‘’உன்ன கண்டிப்பா நான் மாமானு சொல்ல வைக்கிறே பாரு”

 

“ஓ…பாக்கலாமே! இப்ப இந்த விஷயத்தை விட்டு இங்க இருந்து வெளியே போறத பாப்போமா. எனக்கு ரொம்பப் பசிக்குது கார்த்திக். நான் எதுவுமே சாப்பிடல. ”

 

“ஏன் சாப்பிடல?”

 

“அஃது… அது வந்து விரதம். கோவில் போயிட்டு வந்து சாப்பிடலாம்னு இருந்தேன்” என மெல்ல கூற, “ஏன் சவீ நீ இப்படி இருக்க ? இதெல்லாம் நம்புற ? நீ சாப்பிடாம இருந்த சரி ஆகிடுமா ? சரி விடு. உன் நம்பிக்கையை நான் எதுவும் சொல்லமாட்டேன். இப்ப மட்டுமில்லை, எப்பயும்.

 

ஆனா இனிமேல் சாப்பிடாம இருக்காத” எனக் கூறியபடி டார்ச்சை நாலாபுறமும் சுற்றி காண்பித்தான்.

 

“ஒகே கொஞ்ச தூரம் இப்படியே போவோம். இங்கேயிருந்து அதுக்குமேல எந்தத் திசையிலே போறதுன்னு முடிவு பண்ணிக்கலா” எனக் கூறியபடி அழைத்துச் செல்ல, சவீதா அவனுடனான அந்தத் திகில் பயணத்தை ரசித்தபடி நடந்தாள்.

 

கார்த்திக்கும் அப்படியே!

 

அவளுடைய கரத்தோடு கரம் கோர்த்து நடப்பதே அப்படியொரு அலாதியான நிறைவை அவனுக்குத் தந்தது.

 

தனிமை தனிமை தனிமை என்ற நிலை மாறி தனக்கென ஓர் உறவு என்ற பலம் அவனுள். அதே எண்ணம் தான் சவீதாவினுள்ளும். முற்பிறவிகளில் நம்பிக்கை கொள்ளாதவர்களாயினும் இது முன்ஜென்ம பந்தமோ என எண்ணம் கொண்டனர்.

 

“கார்த்திக் எனக்கு ஒரு சந்தேகம்? தேனீ சத்தத்துக்கு யானைக்கு என்ன சம்மந்தம் ? இந்தச் சவுண்ட் நீங்க போட்டதுல இருந்து யானையோட பிளிறல் பக்கத்துல எங்கேயுமே இல்லையே!

 

இஃது எப்படி ?”

 

“ஹே உனக்குத் தெரியாதா என்ன? சிம்பிள் மேட்டர் தான். யானைக்கு இந்த சவுண்ட் அலர்ஜி. இன்னும் சொல்ல போனா கிட்டவே வர பயப்படு”

 

“ஆனா உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்க ரிசெர்ச் பண்றீங்களா ? ஆமாம் நீங்க என்னை வேலை பாக்குறீங்க ?

 

நடக்கிறதெல்லாம் பிலிம் போல இருக்கு. யாருனே தெரியாம இருக்கிற ஒருத்தர் மேல காதல் வரும்னு நான் இதுவர கற்பன கூடச் செஞ்சதில்லை.

 

இப்படியெல்லா என்னோட வாழ்க்கையில நடக்கும்னு வேற யாரவது சொல்லியிருந்தா நா கண்டிப்பா நம்பி இருக்கமாட்டேன்”

 

“நிஜம் தான் படமா வருது சவீ. நம்மள சுத்தி நடக்கிற சம்பவங்கள அடிப்படையா வச்சு அவுங்க கற்பனை சேர்த்து தான் படம் எடுக்குறாங்க.

 

நம்மல போலச் சட்டுன்னு வாழ்க்கை நிறையப் பேருக்கு மாறியிருக்கு. காதலே மாற்றம் செய்யக்கூடியது தான்! என்னோட அப்பா அம்மாக்கு கூட. அவுங்களும் காதல் கல்யாணம்தானா. ஜாதி மதம் அந்தஸ்த்துன்னு எதுவுமே பாக்காத காதல் அவுங்களுக்குள்ள.

 

ஹ்ம்ம் நா என்ன பன்றேன்னு தெரியாதுல. ஒரு கவர்மெண்ட் ஜாப்ல இருக்கேன். பெங்களூரு தான் எனக்கு ஆபிஸ். இங்க ஒரு வேலையா வந்தேன். மத்த விவரமெல்லாம் உனக்கு நான் அப்புற சொல்லுறேன்.

 

இப்ப பசிக்கிதுன்னு சொன்னீயே!

 

வா அதுக்கான ஏற்பாட பாக்கலாம்” என்ன கூறியபடி அவளை ஒரு மரத்தடியில் நிறுத்தினான்.

 

“என்ன பண்ண போறீங்க?”

 

“நீ கொஞ்சம் உக்காரு. நான் இந்த மரத்திலிருந்து பழம் பறிச்சு தரே. ஆனா உனக்குப் பிடிக்குமா ? பிடிக்காதான்னு தெரியலையே” எனத் தயக்கத்துடன் மேல்நோக்கி பார்த்தான்.

 

ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் கிளை பகுதியில் அதிக எடையுடன் கூடிய முள்நாறி பழம் நிறைந்து காணப்பட, சட்டென்று தோன்றியவனாகச் சவீதாவை அந்த மரத்தை விட்டு சற்று தள்ளி நிறுத்தினான்.

 

“எவ்ளோ வெய்ட்? இந்தப் பழ பறிக்கிறப்ப விழுந்த ஆள் அவுட் போல. நீ சேபா தள்ளி நின்னுக்க” என எச்சரித்தபடியே அவனே தொடர்ந்து, “அதோட இங்க என்ன எதோ வித்தியாசமான வாட அடிக்கிது. பலா பழத்துல இப்படியொரு வித்தியாச வாடையா? எங்க ஊருல மணக்க தானே செய்யும்” எனத் தனக்குள் பேசுவதைப் போல மெல்ல முணுமுணுத்துக்கொண்டான்.

 

சவீயோ சிறு புன்முறுவலுடன், “நீங்க இத என்ன பழம்னு நினைச்சீங்க ?

 

“ஏன் பாத்தாலே தெரியுதே! பலா பழம்”

 

“அதா இல்ல. இது துரியான் பழம். நம்ம தமிழ் மொழியில சொல்லனும்னா முள்நாறி பழம். பொதுவா டுரியோன்னு சொல்லுவாங்க. நீங்க நினைக்கிறது போல இதை ஈஸியா பறிக்க முடியாது. இந்தப் பழம் காய்கிற காலங்கள்ல இந்த டுரியோன் காடு ரொம்ப ஆபத்தானது. இந்தப் பழம் விழுந்தா ஆளே அவுட்டு.

 

நம்ம இதைப் பறிக்க வேண்டா. பறிச்சாலும் இதை உடைக்கிறதுக்கு பாத்து பண்ணனும். தெரிஞ்சவங்கதா உடைக்க முடியு. கூரான கத்தி வச்சு அந்தப் பழத்தோட சுழி போல இருக்க அடிபாகத்துல குத்தி நெம்பி எடுக்கணு.

 

மரத்துல ஏறி பறிக்க முடியாது. நிறைய எறும்பு இருக்கு.

 

இத்தன கஷ்டப்பட்டுப் பறிச்சாலு உங்களுக்கு இந்தப் பழம் பிடிக்காது. ஏன்னா இதோட வாசன உங்களுக்குப் பிடிக்கலை தான!

 

நிறையப் பேருக்கு இந்த வாசன பிடிக்காது. இதை நாத்தம்னு சொல்லி சாப்பிடமாட்டாங்க. நிறைய நாட்டுல இந்தப் பழத்தை தடை பண்ணியிருக்காங்க இந்த ஸ்மெல் காகவே. சிங்கப்பூர்ல இந்தப் பழத்தை ட்ரைன்ல கொண்டு போகத் தடை இருக்கு.

 

ஆனா இந்த ஸ்மெல் பிடிச்சவங்க சாப்பிட்டா ரொம்ப நல்லது. கர்ப்பமா இருக்கப் பொண்ணுங்க கூடப் பிடிச்சவங்க சாப்பிடுவாங்க. இதுல நிறையச் சத்து இருக்கு. எனக்கு இந்தப் பழம் ரொம்பப் பிடிக்கும்.” எனக் கூறிக்கொண்டே அந்த இடத்தைவிட்டுக் கார்த்திகை அழைத்துச் சென்றிருந்தாள்.

 

“செம்ம ஆளுதான் நீ. நிறைய விஷயம் தெருஞ்சு வச்சிருக்க. என் பொண்டாட்டி பிரில்லியண்ட் போலவே!”

 

“அடடா! ரொம்ப ஓட்டாதீங்க! நான் சாதாரண விஷய தான் சொன்னே. ஆமாம் நீங்க இன்னும் எப்படி யானைக்குத் தேனி சப்தம் பிடிக்காதுன்னு கண்டுபிடிச்சீங்க சொல்லவேயில்லையே ? ”

 

“அட நான் எங்கம்மா கண்டுபிடிச்சேன்? அது நம்ம ரயில்வேல பாலோவ் பண்ற விஷயம். ரயில் கிராஸிங் அப்போ நிறைய யானைங்க உயிர் இழக்கிறதுனால, அங்க ட்ரைன் வரதுக்கு முன்னாடி இந்தச் சவுண்ட் போட்டுவிட்டருவாங்க. தேனீ சத்தம் கேட்டா யானைங்க ட்ராக்ல இருந்து கிட்டத்தட்ட 600 அடி தள்ளி போய்டும். பக்கத்துல வராது.

 

இதை வச்சு யானை உயிர் இழக்கிறத குறைச்சிருக்காங்க. அதே மெத்தட்தான் நான் நம்மல காப்பாத்திக்க யூஸ் பண்ணி பாத்தேன். எப்பயோ சும்மா டவ்ன்லோட் பண்ணி வச்சே. இப்ப யூஸ் ஆகியிருக்கு. தேங் காட்” எனக் கூற, மெச்சுதலாகக் கார்த்திகை பார்த்துவைத்தாள்.

 

இப்படியாக இருவரும் பொதுவான விஷயங்களையும் பிடித்தமான விஷயங்களையும் பரிமாறியபடி மெல்ல மெல்ல இரவை கழித்தனர். பாதித் தூரம் நடந்தவர்கள் அதற்குமேல் முடியாதவர்களாக ஓரிடத்தில் இளைப்பாறினார்.

 

அவர்களின் பொழுது இனிமையாக இருந்தது. கார்த்திக் சவீயின் கணத்தை வர்ணமாக்கினானோ சவீ கார்த்திக்கின் நொடிகளை அழகாக்கினாளோ அவ்விருவரும் அறியார். ஆனால் கரைந்த கரைகின்ற துளிகள் இதமாய் இருவருக்கும் குளிர்ந்து.

 

ரசித்தனர்! வாழ்ந்தனர்!

 

பொழுது விடிய மீண்டும் பயணத்தைத் தொடர அவள் கால் வலி உணர்ந்து கைகளில் ஏந்த முயன்றவனைத் தடுத்தவள், “இல்லை கார்த்திக், நா நடந்தே வரே” என எங்கோ பார்த்துக்கொண்டு கூற அவள் கன்னம் செம்மை பூசியிருந்தது.

 

இந்தச் செம்மை கார்த்திக்கிற்குப் புதிது. அவளது நாணம், கார்த்திகை பித்துக் கொள்ள வைத்தது.

 

“நவ் ஆல்சோ யூ ஆர் கில்லிங் மீ சவீ” எனக் கிறங்கிய குரலில் கூற, சவீதா சற்று முன்னனாக்கி நடக்கத் தொடங்கினாள். அவளது அதரத்தில் இளநகை ஒன்று மென்மையாகப் படர்ந்திருந்தது.

 

ஏதேதோ பேசியபடி இருவரும் டீன் வயதில் இருப்பவர்களைப் போன்ற உற்சாகத்தில் பரபரப்பில் சந்தோசத்தில் மூழ்கியிருந்தனர்.

 

காதலில் மூழ்கியிருந்தனர்! காதல் அவர்களை மூழ்கடித்திருந்தது!

 

“ஏன் சவீ? இவ்ளோ தூரம் வந்துட்டேன். வீடு வரை வந்து விடமாட்டேனா?”

 

“இல்ல கார்த்திக். நம்ம உறவ இந்த ஊரு பாக்கும் போது புனிதமாதா பாக்கணும். இப்போ நானே போய்க்கிறேன். நீங்க பாத்து போங்க” எனக் கூறி சென்றவளை தடுத்துக் கையனைவில் வைத்துக்கொள்ளத் துடித்த அவன் இதயத்தை அடக்குவது கார்த்திக்கிற்குப் பெரும்பாடாய்ப் போனது.

 

கார்த்திக் எதிலும் அதிரடியானவன் தான்! தன் தாய்க்கொரு பழிச்சொல் என்று சொன்னதும் வீட்டை விட்டு அதிரடியாய் வெளியேறினான். தன்னுடைய பணியிலும் அஞ்சாதவன் அதிரடியானவன் !

 

இப்பொழுது அவனுடைய காதலிலும் அதிரடியாய் சவீதாவின் சம்மதம் பெற்றிருந்தவன், அடுத்ததொரு அதிரடியான செயலில் இறங்க முடிவுக்கட்டியிருந்தான்.

 

அன்றைய நாள் முழுவதும் மீண்டும் கார்த்திக் சவீதாவை சந்திக்க முயலவே இல்லை. சவீதாவும் அவன் வருவானா எனப் பிற்பகலுக்குப் பின் தேட தொடங்கியிருந்தாள். தான் கூறியிருந்ததை மறந்தவளாய்! அவளுடைய தேடலிற்கு விடையாய் மறுநாள் காலையில் வந்தவன், அவளை அழைத்துக்கொண்டு மடிகேரி சென்றிருந்தான்.

 

“எங்க போறோ கார்த்திக்?”

 

“என்மேல நம்பிக்க இருந்தா வா” என்ற வார்த்தைகள் அதன் பிறகு சவீதாவை மௌனி ஆக்கிவிட, சென்ற பிறகே கார்த்திக்கின் அதிரடியான ஏற்பாட்டாய் அறிந்து கண்கள் விரிய நின்றிருந்தாள்.

 

Advertisement