Advertisement

புயலோ தென்றலோ – 8

 

கார்த்திக், சவீதாவின் தீர்க்கமான வார்த்தைகளிற்குப் பின் அவள் கண்முன் வருவதைத் தவிர்தானே ஒழிய அவன் கண்பார்வையிலிருந்து சவீதாவை விலக்கவில்லை, விலகவும் அனுமதிக்கவில்லை.

 

கார்த்திக்கின் ஒரு மாத விடுப்பு குதிரையின் வேகத்தில் இருபது நாட்களை எட்டியிருந்தது. எஞ்சியிருக்கும் பத்து நாட்களே அவனால் குட்ட கிராமத்தில் இருக்க முடியும். அதற்குள் திடம் நிறைந்த சவீதாவின் நெஞ்சை வீழ்த்தும் வழியைத் தேடி அலைந்துகொண்டிருந்தான்.

 

அப்பொழுது தான் சவீதாவிற்கு நேரிட்டது அந்த விபத்து.

 

சற்று இடைவேளை விட்டே அவளைப் பின்தொடர்ந்து வந்தவனுக்கு முதலில் அவள் கால்கள் சிக்கிக்கொண்டது புலப்படவில்லை. கால் இடறி விழுந்துவிட்டாளென்று எண்ணியவன் பதற்றம் கொண்டாலும் சமாளித்து எழுந்துவிடுவாளென்றே மறைந்து மறைந்து அவள் அருகில் வர முனைய, அப்போது தான் கவனித்தான், பாலத்தின் உடைந்த பகுதியில் அவள் கால்களில் ஒன்று சிக்கியிருப்பதையும், முகத்தில் தெரிந்த அவளது வலியையும்.

 

அந்த நிலையிலும் அவள் சமாளித்து எழவே முயல்வதை அறிந்தவன், தான் சென்றால் அதை அவள் எவ்வாறு எடுத்துகொள்வாளென்று ஒரு நொடியே எண்ணினான்.

 

அந்த நொடியில் தான் சென்றால், அவள் அழைக்காமல் சென்றதனால் தன்னுடைய அன்பை பொய்யென்று முடிவுகட்டிவிடுவாளா ? இல்லை என்னுடைய வருகையின் பிடித்தமின்மையின் காரணமாய் விபரீதமாய் ஏதேனும் முடிவை எடுத்து விடுவாளா ? என்றெல்லாம் ஒரே நொடியே எண்ணினான்.

 

மறுநொடியே, தன் அன்புக்குரியவளிற்கு ஆபத்தில் உதவாமல் தன்னுடைய அன்பை மெய்யென்று நிரூபணம் செய்வதில் அந்த அன்பே பொய்யாகா கூடுமோ என எண்ணம் கொண்டவனாய் சட்டென்று அவள் முன் நின்றான்.

 

அந்த நொடி, கார்த்திக் சவீதாவின் முன் வந்த, அந்த ஒரு நொடி தன்னுடைய காதல் பொய்யென்று அவள் கூறினால் கூட அதைச் சற்றும் இலட்சியம் செய்யாதவனாய் தான் கார்த்திக் இருந்திருப்பான். காரணம் அவள் கண்களில் தெரிந்த வலி. கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டு ஆங்காங்கே இரத்தம் துளிர்த்திருந்தது.

 

அவள் கண்ணில் வலி, இருளை நினைத்துப் பயம், கார்த்திகை கண்டதால் நம்பிக்கையுடன் கூடிய சிறு நிம்மதி என்ற மூன்றும் மாறி மாறி பிரதிபலிக்க, அவள் கண்கள் பிரதிபலித்த நிம்மதிக்காக எதையும் செய்யும் முடிவை கொண்டான் கார்த்திக். எதையும் எதை வேணுமென்றாலும் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்பட்டான்.

 

மெல்ல சிக்கிக்கொண்ட அவள் பாதத்தை வெளியே எடுத்தவன், கைத்தாங்கலாக அவளைத் தூக்கினான். வலியில் அவள் முகம் சுருங்க, கார்த்திக்கின் மனம் துடித்தது. அந்த நிலையிலும் கார்த்திக்கின் கைகளை உதற முயன்றவளை தடுத்து அவளுடைய கரத்தை இருகப்பற்றியபடி மெல்ல மெல்ல அந்த மரபாலத்தைக் கடந்து நீர்வீழ்ச்சியின் அருகே அழைத்துச் சென்றான்.

 

சற்று எட்டவே அவளை நிறுத்தியவன் சிறு பாறையின் மேல் அமரவைத்துவிட்டு, கைகளில் நீரை ஏந்திவந்து அவள் காயம் பட்ட இடத்தில் ஊற்றி அவள் பாதத்திற்குச் சற்றே மேல் கழுவுவிட்டான். சில்லிட்ட நீர் காயத்திற்குச் சற்றே இதத்தையும் எரிச்சலையும் ஒருங்கே தர, காயத்தைச் சுத்தப்படுத்தி மர சிலாம்புகள் செருகியிருந்ததை மெதுவாகவும் அவளுக்கு வலிக்காதவாறும் மெல்ல மெள்ள உருவினான்.

 

“ஏன் இதெல்லாம் பண்ற கார்த்திக்?”

 

“என்ன பன்னினேன்?”

 

“இப்போ இந்த நிமிஷம் எனக்கு வலிக்குமோனு உங்களுக்கு வலிக்குது பாருங்க. அதைத் தான் சொல்றேன். காயப்பட்ட எனக்கே வலிக்காத அளவு குத்திருக்கச் சிலாம்புகளை எடுக்குற விதத்திலிருந்து கேக்குறேன்”

 

“எப்பவும் எல்லாத்துக்கும் விளக்கம் சொல்ல முடியாது சவீ”

 

“ஹ்ம்ம்ம்…”

 

“இப்போ எழுந்து நில்லு. இப்ப கொஞ்சம் பெயின் கொறஞ்சிருக்கா ?”

 

“பெட்டர் கார்த்திக். தேங்க்ஸ்!”

 

“பாத்து ரொம்ப அழுத்தம் கொடுக்காம நட”

 

“கார்த்திக்,

 

உங்ககிட்ட ஒன்னு கேட்கவா ?  எனக்குத் தோணிச்சு நீங்க பக்கத்தில தான் இருக்கீங்கன்னு. கார்த்திக் அப்படிங்கிற ஒருவார்த்தை உங்களை என்ட்ட கொண்டு வரும்னு. பட், நான் கூப்பிட மாட்டேன். கூப்பிடாம நீங்க வந்தா உங்க அன்பு பொய்னு நான் முடிவு செஞ்சிடுவேன்.

 

இந்த நிலையில் வருவீங்களா ? மாட்டிங்களானு யோசிச்சேன். ஆனா வந்துடீங்க.

 

இப்போ என்ன சொல்றீங்க கார்த்திக் ?”  என வினவ, கார்த்திக் இதை எதிர்பார்த்தே வந்திருந்தான். இந்தக் கேள்வியையும் இதன் விளைவையும்.

 

“ஓ இப்படி நான் வருவேன்னு எதிர்பார்த்திருக்க? அப்படி நான் வந்தா என்னை எப்படிச் சமாளிக்கணும்னு கூட முன்னாடியே யோசிச்சிருக்க. எப்படி இந்த நிலையிலையும் இதையெல்லாம் கஷ்டப்பட்டு யோசிச்சிருக்க? இந்த வலி வேதனையிலும் அத்தனை தூரம் கஷ்டப்பட்டு யோசிக்கிற அளவுக்கு நான் அத்தனை முக்கியமா ?” என்ற கேள்வி கிண்டலா இல்லை நிஜமாகவே வினவுகிறானா எனப் பிரித்துப் பார்க்க முடியாத தொனியில் ஒலிக்க, அதை இனம் காண முடியாதவள், “நான் ஒன்னும் ரொம்பச் சிரமப்பட்டு யோசிக்கல. ‘கார்த்திக்’ னு உங்க பெயர் வந்ததுமே நீங்க முன்னாடி சொன்ன டயலாக்ஸ் எல்லாம் அதுவா கண்முன்னாடி வருது.

 

அவ்ளோ பிலிமி டயலாக்ஸ்” என அவளும் எள்ளலா மெய்யா என இனம் காண முடியாத வகையில் அதே தொனியில் பதில் கொடுத்தாள்.

 

இதற்கு அவனிடம் சப்த்தமான சிரிப்பு மட்டுமே. அவனுடைய சிரிப்பு அவளது முகத்தில் கோபத்தையும் கோபத்தை மீறியதொரு குழப்பத்தையும் கொடுத்தது.

 

“இப்போ எதுக்கு இப்படிச் சிரிக்கிறீங்க?”

 

அதற்கும் கார்த்திக்கிடம் பதிலில்லை. ஒரு மரத்தின் மீது சாய்ந்தபடி கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி, “கண்டிப்பா சொல்லனுமா ?”

 

“ஆமாம். நிச்சயமா சொல்லணும் ”

 

“வெல், சொல்லிடலாம்” என மீண்டும் புன்னைகைத்தவன், அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தான். அந்தப் பார்வை அப்படியொரு அசாத்திய பார்வை…

 

நீ என்னவள் என்றதொரு பாவனை அதில்! அதில் அவள் சுகமாய் அமிழ தொடங்கினாள்.

 

ஆளையே சாய்த்துவிடும் என்பார்களே. அதைப் போன்றதொரு பார்வை கார்த்திக்கிடம். சவீதாவின் எஃகு மனம் அவன் பழுப்பு நிற காந்த விழிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது.

 

புருவத்தை மேலுழுப்பி வளைத்து என்னவென்று பார்வையால் வினவ, சட்டென்று சுதாரித்துக்கொண்டவள், “என்னைக் கேட்டா ? எதுக்கு இப்படி லூசுத்தனமா சிரிக்கிறீங்கன்னு நீங்க தான் சொல்லணும்” என அலட்சியமாகத் தோள்களைக் குலுக்கினாள்.

 

“சொல்லிடறேன். நம்ம கல்யாணம் எப்போனு சீக்கிரம் சொல்லிடறேன்” என அவளை நெருங்கி வந்து கூற,

 

காலில் பட்ட ரணத்தையும் மறந்து ஓரடி பின்நகர்ந்தாள்.

 

“என்னை உளறல் இது? ” எனச் சீறினாள்.

 

“உளறல் இல்லை. உண்மை ! ”

 

“நான் கூப்டாம நீங்க வந்து உங்க அன்பை பொய்யுன்னு நிரூபிச்சுடீங்க. அப்படியிருக்க உங்களுக்கு எப்படி இவ்ளோ திமிரு?”

 

“கூப்பிடாமலா வந்தேனா? இல்லையே. நீ கூப்பிட்டனாலதா வந்தே”

 

“இது முழுப் பொய். நான் உங்களை வாய் திறந்து கூப்பிடவே இல்லை”

 

“வாய் திறந்தா மட்டும் தான் கூப்பிட முடியுமா? உன் மனசுல நீ என்னைக் கார்த்திக்கின் எப்ப நினைச்சியா அப்போவே நீ என்னைக் கூப்பிட்டுட்ட.

 

வார்த்தையும் ஓசையும் சேர்ந்து வந்தா தான் மூன்றாம் மனுஷங்களுக்கு நம்ம கூப்பிடறது கேட்கும். ஆனா இதயம் ஒன்னா இருக்கும் போது நீ மனசுல நினைக்கிறதும் எனக்குக் கேட்கும்.

இந்த காட்டுல யாருமே இல்லாத இடத்துல எதுக்கு என்னுடைய பெயர் உனக்கு நினைவு வந்தது?

என்னை உன் மனசு கூப்பிட்ருச்சு.

என் மனசுக்கு அது கேட்ருச்சு.

 

இங்க வார்த்தைகள் தேவை இல்லை சவீ. நம்ம அன்பு போதும். நீ நினைக்கிறது நான் உணருவதற்கு நான் நினைக்கிறத நீ புருஞ்சுக்கவும்.

 

நான் சொன்னபடி , நான் உன் கண் முன்னாடி வந்துட்டா அதுக்கு அப்புற உன்னோட வாழ்க்கையிலையும் நிரந்தரமா வந்திடுவேன்னு சொன்னேனே. அதுனால தான் நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்றேன்னு சொன்னே” என நிதானமாகப் பதில் கூற, சற்று முன் தன் மனதில் நினைத்ததை அவனிடம் கூறிய தன்னுடைய முட்டாள் தனத்தை எண்ணி நொந்துக்கொண்டாள்.

 

சில நொடிகள் சவீதா மௌனமானாள்.

 

பிறகு மெள்ள மெள்ள சுதாரித்துக்கொண்டு, “இந்தப் பேச்சு வேணாம் கார்த்திக். ஏன் இப்படி இத்தனை அதிரடியா இருக்கீங்க ? என்னைக் கல்யாணம் பண்றதுக்கு என்கிட்டையே இப்படித் தான் பேசுவீங்களா ?”

 

“எனக்குக் கெஞ்ச பிடிக்காது சவீ. அதே போல என்னைப் பிடிக்காத பொண்ணுகிட்டையும் நான் இப்படிப் பேசல. என்னை உனக்குப் பிடிக்கும். நீ என்னை வேண்டாம்னு சொல்றதுக்குக் கண்டிப்பா என்னை ரொம்பப் பிடிச்சது தான் காரணமா இருக்கும்.

 

ஆனா அதை நான் என்னனு தெருஞ்சுக்க விரும்பலை. எதுவா இருந்தாலும் தூக்கிபோற்று” என ஸ்திரமாகக் கூறினான்.

 

கார்த்திக் சவீதாவினுள் ஆச்சர்யத்தை விதைத்தான். விசித்திரமானவனாய் தைரியமானவனாய் அன்பானவனாய் ஆளுமை நிறைந்தவனாய் பாதுகாவலனாய் சில நேரங்களில் பிடிவாதம் நிறைந்த குழந்தையாய் அவளுக்கு அவன் தெரிந்தான்.

 

சில நாட்கள் தான் அறிமுகம். ஆனால் அவளின் ஆழ்மனதை அப்படியே படிக்கிறான். எப்படிப்பட்ட காதல் இவனது என்ற எண்ணம் தான் தற்சமயம் சவீதாவினுள்.

 

கார்த்திக்கின் ஸ்திரம் சவீதாவை ஸ்தம்பிக்கவைத்தது! ஸ்தம்பித்தாள் !

 

சவீதாவின் மௌனம் கார்த்திகை அசைத்தது! ஆட்டுவித்தது! வேரோடு பிடியிங்கியெறிந்தது!

 

“இட்ஸ் கில்லிங் சவீ. இப்படி மௌனமா இருந்து ஏன் என்னைக் கொல்லுற”

 

“கார்த்திக் இப்போ நான் எதுவும் பேசவோ புரிய வைக்கவோ விரும்பலை. நான் இப்ப கண்டிப்பா காட்டு முருகன் கோயிலிக்குப் போகணும். ப்ளீஸ்….”

 

அவளின் குரலில் என்னைக் கண்டானோ வேறெதுவும் பேசாது, அவள் கரத்தை ஆதரவாய் பற்றி அவளுடன் இணைந்து நடக்க முற்பட்டான்.

 

“இல்ல நானே போய்டுவேன் கார்த்திக்”

 

“இப்போ எதுவும் பேசவேணாம் சவீ. உன்ன இப்படியே விட்டு போகமுடியாது. போகவும் மாட்டேன்” என்ற வார்த்தை மிகவும் உறுதியாய் ஒலிக்க, அந்தத் தொனியில் சவீதாவினால் அதற்கு மேல் மறுப்பு கூற முடியவில்லை.

 

ஆறு மணிக்கு முன்பாகவே மலை பகுதி ஆதலால் இருள் நன்றாகக் கவிழ்ந்திருந்தது! அவனிடமிருந்த சிறு டார்ச் ஒளி பாதைக்கு உயிரூட்ட அவளின் கரம் பிடித்து அழைத்துச் சென்றான்.

 

இருவரின் கரம் மட்டும்மல்லாமல் இதயமும் இணைந்தே பயணித்தது. ஆனால் அதைக் கார்த்திக்கிடம் வெளிக்காட்ட சவீயின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மங்கலான ஒளி இதமான குளிர் கண்ணை மகிழ்விக்கும் பசுமை இதயம் தேடும் துணையென்று அவர்களின் நடை பயணம் என்றும் இனிப்பவையாக மாறிப்போனது.

 

இருந்தாலும் சவீதாவின் மனம் அவனின் கரத்தில் தன் கரம் பதிந்திருப்பதை ரசிப்பதா தவிர்ப்பதா என எண்ணிக்கொண்டிருந்தது.

 

“கோவில் வந்திடுச்சு. நீ போயிட்டு வா. நான் இங்க இருக்கிறேன்”

 

“ஏன் நீங்க வரவில்லையா?”

 

“எதுக்கு? மறுபடியும் நீ தீபம் காட்டுவ. உனக்குன்னு காத்து அடிக்கும். மறுபடியும் உன் கற்பனை வளரும். இதெல்லாம் எனக்குத் தேவையா? வேண்டா தாயே! நீ போ” என எங்கோ பார்த்துக்கொண்டு கூற, அவளோ நாக்கை மெள்ள கடித்தபடி கோவில் நோக்கி சென்றாள்.

 

அநேகமான நாட்களில் அர்ச்சகர் இல்லாதது போல் அன்றும் இல்லை. பெரிதாக மக்கள் அக்கோவிலிற்கு வராத காரணத்தினால் ஒரு சில நாட்கள் மட்டுமே அர்ச்சகர் வருவது வழக்கம். அவர் வராத நாட்களில் சவீதா, காலையிலே அவர் இல்லம் தேடி சென்று சாவி வாங்கி வருவது வழமை. இன்றோ அவர் காலையிலே பூஜையை முடித்திருக்க, அவர் வீடு சென்று சாவி பெற்றிருந்தாள். தீபம் ஏற்றி பூஜை முடித்து ஆரத்தி எடுத்தாள்.

 

ஆரத்தியை சன்னதி முன்பே வைத்து, இமை மூடி ஆழ்ந்த பிரார்த்தனையில் இலயித்தவள் இமை திறந்து, ஆரத்தி நோக்கி கைகளைக் கொண்டு செல்ல, சட்டென்று அவள் கரத்துடன் மற்றொரு கரம் இணைந்தது.

 

கார்த்திக்கின் கரம் ஆராத்தியில் தன் கரத்தோடு இணைந்திருக்க, முருகனுக்கு வைத்து அலங்கரித்திருந்த காட்டு ரோஜாவோன்று கீழ் வீழ்ந்து நல்ல சகுனத்தைக் காட்டியது.

 

சவீதா இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லையென்று விரிந்த அவளுடைய அகன்ற விழிகள் கூறியது.

 

நிஜமா? ஆம் நிஜமே!

நிச்சயம் இறைவனின் ஆசியே!

 

என்ற பாவனைகளைச் சவீதாவின் முகம் மாற்றி மாற்றிப் பிரதிபலித்தது. மகிழ்ச்சி நிம்மதி அதோடு ஓர் எதிர்பார்ப்பு எனப் பற்பல உணர்ச்சிகளைக் கண்கள் காட்ட, இவளின் உணர்வுகள் பிடிப்பட்டாலும் அதற்கான அர்த்தம் தெரியாதவனாகவும் தெரிந்துகொள்ளப் பிரியப்படாதவனாகவும் நின்றிருந்தான்.

 

அவன் அறிவான் நிச்சயம் இதன்பின்னால் ஏதேனும் அவளுடைய கற்பனை கலந்த நம்பிக்கை இருக்குமென்று. தன் காதலை மறுப்பதற்கும் காரணம் முதல் நாள் தீபம் அணைந்ததே இருக்குமென்றும், அதைப் போலவே இன்றும் இதை வைத்து ஏதுனும் கற்பனை செய்துகொள்வாளென்றும்.

 

அவளுடைய நம்பிக்கையை அவன் மதிக்காமல் இல்லை. அதை நேரம் வீண் நம்பிக்கை வாழ்வை வீணாக்குவதை ஏற்றுக்கொள்ளாதவன். விதியை மதியால் வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவன்.

 

“என்ன சவீ? முருகனே நம்ம ஆசிர்வதிச்சிட்டாரா ?

 

இது போல விஷயத்துலவிஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா உன்னோட பார்வையிலிருந்து சொல்லுறே. நான் தனியா ஆரத்தி எடுக்கும் போது அணைஞ்ச தீபம், இப்போ உன்கூடச் சேர்ந்து எடுக்கும் போது ஆசீர்வாதமா தெரியுது.

 

உன்னோடான என் வாழ்க்கை நிச்சயமா நல்லா இருக்கும்.

 

எனக்கு நம்பிக்கை இருக்கு.” எனக் கூற சவீதாவின் முகம் நிகழ்ந்த விஷயங்களாலும் கார்த்திக்கின் அருகாமையினாலும் சற்று தெளிந்து காணப்பட்டது.

 

நிலவை மறைத்த மேகம் விலகுவதைப் போல மனதை அழுத்திய பாரம் மெள்ள மெள்ள விலகத் தொடங்கியது. சன்னதியை பூட்டியவள் அவனுடன் சேர்ந்து நடக்க, அவள் மனதில் மெலிதாய் வானவில் தோன்றியது.

 

அவள் மனதை வானமும் பிரதிபலித்தோ ? வர்ணங்கள் நிறைந்த வானவில்லாய், வாணவேடிக்கைகள் வர்ணஜாலங்களைக் கொண்டிருந்தன! சப்த்தங்கள் செவி பிளக்க, விதவித வான் கோலங்கள் கண்களுக்கு விருந்தாக !

 

“கிராக்கர்ஸ்? என்னைச் சடனா இங்க பட்டாசு வெடிக்கிறாங்க” எனப் பொதுவாக வினவினான்.

 

“இங்க பக்கத்துல இருக்கிற ரிசார்ட் எதுலயாச்சும் வி.ஐ.பி ஸ் சம்பத்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கலாம். இது போல எப்பவும் நடக்காது. எப்பையாவது பண்ணுவாங்க.

 

பட் இப்ப பண்ணினது நமக்கு ஆபத்தைக் கொண்டுவராம இருக்கணு” எனப் பதற்றத்துடன் கண்களைச் சுற்றத்தில் சுழல விட்டாள்.

 

“நீ என்ன சொல்ற சவீ?”

 

கார்த்திக்கின் வினாவிற்கு விடையாய் பெரிய பெரிய பிளிறல்கள் அங்கே கேட்க தொடங்கியது.

இல்லை முழங்க தொடங்கியிருந்தது!

 

Advertisement