Advertisement

புயலோ தென்றலோ – 7

 

“என்ன ஜி சொன்னீங்க? கொலையா ? கொலை கேஸ் விசயமாவா நாம இங்க வந்திருக்கோம்” என விக்ரம் வினவ, ஆம் என்பதாய் தலை அசைத்தான்.

 

“ஆனா நீங்க எப்படி ஜி? நீங்க எக்கனாமிக் அபன்ஸ் ல தானே இருந்தீங்க ? ”

 

“ஆமாம் நீ சரியாதான் சொல்லுற, பிசினஸ், ஸ்டாக், பேங்க் இப்படி இதுல நடக்குற பண மோசடி சம்மந்தமான விஷயங்களை மட்டும் தான் டீல் பண்ணிட்டு இருந்தேன். ஆனா இந்தக் கொலை நடந்து நான்கு மாதத்திற்கு மேலாகக் கூட எந்த வலுவான துப்பும் கிடைக்காத காரணத்தினால் என்ன ஸ்பெஷல் கிரைம் டிவிஷன்க்கு மாத்திருக்காங்க.

 

நம்ம ஹையர் ஆபிசர் பெர்சனலா மூவ் பண்ணினாரு. ஆனா அவர் சொன்னதுனால மட்டும் நான் இதுக்குச் சம்மதம் சொல்லல. இன்னொரு காரணமும் இருக்கு. அது சவீதா” எனக் கூற, விக்ரம் அமைதியாக நின்றிருந்தான்.

 

“ஜி நீங்க குட்ட வில்லேஜ் போயிருந்தப்ப, சவீதாவை மீட் பண்ணினது எனக்குத் தெரியும். என்கிட்டையும் ஒருமுறை இன்றோ பண்ணுனீங்க. நீங்க லவ் பண்ணினதும் தெரியும். ஆனா அப்போ அவுங்க உங்க காதலை அக்ஸ்ப்ட் பண்ணிக்கல.

 

பட் நீங்க கண்டிப்பா சேர்ந்திடுவீங்கன்னு நினச்சேன். பிறகு நீங்களும் எதுவும் சொல்லல. நானும் எதுவும் கேட்டுக்கல. ஆனா அதுக்குள்ள இவ்ளோ நடந்திடுச்சா ?

 

சவீதா கொலை கேஸ்ல சம்மந்தப்பட்டிருக்காங்கனு என்னால நம்பவே முடியலை. எனக்கு எதுவுமே புரியலை ஜி. என்னதான் நடக்குது ?

 

இங்க சக்தின்னு சொல்றவங்க சவீதா போலவே இருக்காங்க. இந்தச் சக்தி கன்சிவாவும் இருக்காங்க. இவுங்க கழுத்துல தாலி போல ஒரு செயின் பார்த்தேன். ஆனா அவுங்க கணவர் எங்கணும் தெரியலை.

 

எனக்கு எதை இதோட லிங்க் பண்றதுனே புரியலை. என்னதான் நடந்துச்சு ஜி” என்ற கேள்வியில் கார்த்திக் ஏழு மாதங்கள் பின்னோக்கி சென்றான்.

 

அடுத்தடுத்து வந்த நாட்கள் சவீதாவிக்குக் குழப்பத்துடனும் கார்த்திக்கிற்கு ஒரு வித எதிர்பார்ப்புடனும் கழிந்தது. அவன் வந்த பணி நிறைவை எட்டிவிட, அதை ஒரு தொகுப்பாக வரையறுத்து மேலிடத்திற்கு அனைத்து தகவல்களையும் ஆதாரத்துடன் மின்னஞ்சல் அனுப்பியவன், மடிகேரியிலிருந்து தன்னுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு குட்ட கிராமத்திற்கு அருகே உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்க தொடங்கினான்.

 

சவீதாவின் மீதுள்ள காதல் வளர்ந்துகொண்டே போனது. அவனின் காதல் அவளைக் கண் எட்டும் தொலைவிலிருந்து ரசிப்பத்தில் தொடங்கி அவளுடைய சின்னச் சின்னச் சந்தோசங்களின் மூலம் உயிர் வாழ தொடங்கியது.

 

தற்காலிகமாய் விடுப்பெடுத்திருக்க அதுவும் அவனின் காதலிற்குத் துணை புரிந்தது.

 

நான்கைந்து நாட்கள் அவளை எட்டநின்று தன் பார்வை வட்டத்திற்குள் கொண்டுவந்திருந்தவன், இப்போது அவள் கண்ணெதிரில் நின்றிருந்தான்.

 

மிக அருகில் அவளின் எதிராய் நின்றிருக்க, வந்திருந்தவனை அறியாது கண்களை மூடி கடவுளிடம் கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல இமை திறக்க, அவளுடைய விழிகள் சந்தித்ததோ கார்த்திக்கின் பழுப்பு நிற விழிகள்.

 

சில நிமிடங்கள் அவனின் கண்களைக் கனவில் காண்பதை போன்று பாத்தவள், வேறெதுவும் அந்நொடி தோன்றாதவளாய் நின்றிருந்தாள். அவனின் புருவங்கள் மேலுயர்ந்து என்ன என்பதாய் செய்கை செய்யும்வரையிலும் தன்னை மறந்த நிலை தான் சவீதாவிடம்.

 

“என்ன சவி? இப்படிப் பாக்குற ? மாமா மேல உனக்கும் காதல் வந்துடுச்சா ? ”

 

“கார்த்திக் இது போல என்னிடம் பேச வேணாம்னு முன்னாடியே சொல்லியிருக்கேன். இது சரி வராது” எனக் கூறி நடைபோட, கார்த்திக் அவள் பின்னோடு சென்றான்.

 

“ஏன் சரி வராது? உன்னிடம் காரணம் இருக்கா?”

 

“ஏன் நமக்குள்ள சரிவரும்னு சொல்ல உங்ககிட்ட காரணம் இருக்கா?”

 

“என்கிட்ட காரணம் இருக்கு சவீ. நம்ம காதல்”

 

“காதல்? ஒருதலை காதல் கூடக் காரணமாகுமா?” என இதழை ஏளனமாய் வளைத்துக் கேள்வி எழுப்பினாள்.

 

“ஒருதலை காதல் னு உன்னுடைய வாய்தா சொல்லுது, ஆனா உன்னுடைய கண்ணு

\]\7என்கிட்ட வேற ஒன்னு சொல்லுதே” என மர்ம புன்னைகையுடன் கூற, அவன் விழிகளைச் சில நொடிகள் சவீதாவின் கண்கள் இமைக்க மறந்து பார்த்தன.

 

“நான் சொல்லல, உன்னுடைய கண்ணு வேற ஒன்னு சொல்லுதுனு” என மீண்டும் விஷமமாகக் கூற, சட்டென்று தன் பார்வையை வலுக்கட்டாயமாக மாற்றிக்கொண்டாள்.

 

அதற்குமேல் அங்கே நிற்கமுடியாதவள் கார்த்திக்கின் அடுத்தக் கேள்விக்கு நில்லாது ஓட்டம் பிடித்திருந்தாள். கார்த்திக்கின் சிரிப்பு அவளைப் பின்தொடர அவனே அவள் பின்னோடு வருவதைப் போன்ற எண்ணத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.

அன்றிலிருந்து மிகவும் கவனமாகக் கார்த்திகை தவிர்த்தவள், வெளியே செல்வதைக் கூடியவரை நிறுத்தியேவிட்டாள்.

 

சவீதாவை காணாதவன் தான் தவித்துப் போனான். ஏதாவது காரணம் கொண்டு அவளைக் காணும் வாய்ப்பை ஏற்படுத்தவே விக்ரமை விடுமுறைக்கென்று குட்ட கிராமத்திற்கு அழைத்திருந்தான்.

 

“என்ன ஜி? ஆச்சர்யமா இருக்கு ? எப்பயும் ஒர்க்கையே சாப்பாடாவும் தூக்கமாவும் சந்தோசமாவும் நினைக்கிற ஆளு, இப்ப லீவு எடுத்து என்ஜாய் பண்றத பாத்தா எதோ விஷயம் இருக்கும் போலவே.

 

என்ன விஷயம் என்கிட்டே சொல்ல கூடாதா ?”

 

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை விக்ரம். சும்மாதான் கூப்பிட்டே, இங்க இருப்புப் பால்ஸ் ரொம்பப் பேமஸ். பார்க்க அப்படியொரு அழகு. அதான் உன்னையும் கூப்பிட்டே”

 

“நிஜமாவா ஜி? என்னால நம்பவே முடிலையே!”

 

“வேற என்ன? வேற என்ன இருக்கப் போது?”

 

“அதை நீங்கதான் ஜி சொல்லணும்”

 

“சொல்லலாம் சொல்லலாம். இப்ப என்கூட வா” என விக்ரமை இழுத்துக்கொண்டு வெளியேறினான்.

 

“அட என்ன பாஸ், பால்ஸ் போறோம்னு எதோ வீட்டுக்கு கூப்பிட்டு வந்திருக்கீங்க?”

“இங்க இருக்கப் பட்டர்ப்ளைஸ் கார்டன் பாரு. எவ்ளோ நல்லா இருக்கு…இதை பத்தி கொஞ்சம் டீடெயில்ஸ் கலைக்ட் பண்ணு. நான் கொஞ்சம் தள்ளி இருக்கேன்” எனக் கூறிக்கொண்டு இருக்கும் பொழுதே தற்செயலாய் வெளியே வந்த சவீதா அவர்களைப் பார்த்துவிட, சிறு தடுமாற்றத்துடன் கார்த்திக் புன்னைகைத்தான்.

 

அவனின் தடுமாற்றம் விக்ரமிற்குப் புதியது. ஏன் கார்த்திக்கிற்குமே புதிதே.

 

எதற்கும் எதற்குமே தடுமாறாதவனைக் காதல் தடுமாறவும் வைத்தது தடம் மாறவும் வைத்தது. அன்றிலிருந்து இன்றுவரை சவீதாவென்றால் அவனின் மனம் அவன் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

 

அவளின் முடிச்சிட்டப் புருவங்கள் குற்றம் சாட்டுவதாய்க் கார்த்திக்கின் மீது நிலைக்க அவசரமாக, “சவீ இவன் என் நண்பன் விக்ரம். அவனுக்கு அவன் பிளேஸ்ல பட்டர்ப்ளை கார்டன் வைக்கணுமாம். அதைப் பத்தின டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண வந்திருக்கான்” எனக் கூற, விக்ரமோ சூழல் புரியாமல், “என்கிட்ட எங்க ஜி பிளேஸ் இருக்கு ?” எனக் கேட்டு வைக்க, சவீதா ஒரு கண்டன பார்வையைக் கார்த்திக் மீது செலுத்தினாள்.

 

அதற்குள் கார்த்திக்கின் கண்ணசைவு விக்ரமை எட்டிவிட, “ஆமாம் ஆமாம் ஜி, அங்க அங்க ஒர் இடம் எனக்கு இருக்கே. நானே மறந்து போய்ட்டேன் பாருங்களே.

 

சாரிங்க. எனக்குக் கொஞ்சம் ஹியரிங் பிரச்சனை. எனக்கு ஜி சொன்னது சரியா கேட்கல. நான் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண தான் வந்தேன்” எனக் கூற,

 

“நல்லது மிஸ்டர் விக்ரம். கண்டிப்பா நான் உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்ணறேன். பட் இப்ப கொஞ்சம் அவசரமான வேலை இருக்கு. நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. நான் உங்களுக்கு இன்னொருநாள் விவரிக்கிறேன்”

 

‘அப்பாடா தப்புச்சோம். இல்லனா இதைக் கேட்டு நம்ம என்ன பண்ண போறோம்’ என மனதிற்குள் எண்ணியவன், “ஒகே சுயர்” என வெளியே கூறிவிட்டு, “கிளம்பலாமா ஜி ?” என வினவினான்.

 

“விக்ரம் நீங்க தப்பா நினக்கலான, நான் கார்த்திக்கிட்ட இரண்டு நிமிஷம் பேசலாமா? தனியா ”

 

“கண்டிப்பா மிஸ்.சவீ. சாரி உங்க நேம்? சவீ தான ?”

 

“சவீதா! என்ன சவீனு கூப்பிட வேணாம். சவீதானு சொல்லுங்க விக்ரம்”

 

“ஒகே டன். யூ கேரி ஆன்” எனக் கூறி நாகரீகமாகச் சற்று எட்ட நின்றான்.

 

விக்ரமோ தள்ளி வந்த பிறகு அவ்விருவர் பேசும் விதத்திலிருந்து ஓரளவு சவீதாவின் கோவத்தை உணர்ந்துக்கொண்டான். அவளின் விழி மொழியிலும் உடல் மொழியிலும் கோவம் இருந்ததே ஒழிய வெறுப்பு அறவே இல்லை.

 

கார்த்திக்கின் இந்தப் புதிய பரிமாணம் காதலென்று காட்டிக்கொடுக்க, சவீதாவிடம் கார்த்திக்கின் மீது வெறுப்பில்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

 

‘சரி அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்’ என்ற சிந்தனை மட்டுமே விக்ரமிடம்.

 

“கார்த்திக்…” என்ற குரல் அடக்கப்பட்ட கோபத்துடன் சவீதாவிடம்.

 

“ஒன் செக் சவீ. நீ என்ன சொல்லவனு எனக்கே தெரியும். நீ தேவை இல்லாம மறுபடியும் சொல்லி டென்ஷன் ஆகவேணாம்.

 

கார்த்திக் நமக்குள்ள இது செட் ஆகாது. மறுபடியும் என்ன பாக்கவோ பின்தொடரவோ வேண்டாம். இந்த ஊருக்குள்ள எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. அதைக் கெடுத்துடாதீங்க.

 

அதானே?” என அலட்சியமாகக் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி வினவ, “இல்லை” என ஸ்திரமாகக் கூறினாள்.

 

“வாட்? அஃது இல்லையா ? அப்போ என்ன சொல்ல வந்த ? மே பீ மாமான்கிட்ட காதலை சொல்ல வந்தியா ? நான் தான் சொதப்பிட்டேனா ?” எனக் கார்த்திக் யோசனையாக வினவ,

 

“இன்னொரு தடவ நா, நானே உங்க பேரை சொல்லி கூப்பிடாம நீங்க வந்தீங்கனா, அதுக்கப்பற நடக்குற விபரீதத்திற்கு நான் பொறுப்பில்லை.

 

உங்களை இதுக்குப் அப்புற என் கண் முன்னாடி நான் எப்பவும் பாக்க கூடாது. கூடவே கூடாது.

 

உங்க அன்பு மேல எனக்குத் துளியும் நம்பிக்கையில்லை. ஒருவேளை உங்க அன்புமீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நீங்க என் கண் முன்னாடி இனி வராதீங்க. வரவே வராதீங்க” என ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக அழுத்தி உச்சரிக்க, கார்த்திக் அவளின் தீவிரத்தில் சற்று ஸ்தம்பித்தான்.

 

ஆனால் மறு நொடியே, அவளை விடவும் தீவிரம் நிறைந்தவனாய், “சரி இன்னைலிருந்து உன் கண் முன்னாடி நான் வரவே போறதில்லை. ஆனா, நீ உன் வாயால என்ன ஒருமுறை, ஒரே முறை கூப்பிட்டாலு போதும். உன் முன்னாடி மட்டுமில்லை உன் வாழ்க்கையிலையும் நிரந்தரமா வந்திடுவேன்.

 

அதுக்கப்பறம் எப்பயுமே நீயே நினைச்சாலு என்னை உன் வாழ்க்கையிலிருந்து அனுப்பவே முடியாது”

 

“ஏன்? எதுக்கு இந்தப் பிடிவாதம் ? விரும்பாத பொண்ண இப்படி நிர்பந்திக்கலாமா ?” எனச் சற்றே இளகிய குரலில் சவீதா வினவ

 

“நிச்சயமா கூடாது. அந்தத் தப்பை ஒருபோதும் நான் செய்ய மாட்டேன். அப்படி என் அம்மா என்னை வளர்க்கவில்லை.

 

என்னை விரும்புற பொண்ணு என்னை விலக்கி, விலகி போக நினைக்கிறாள். அதனால அவளை விளக்காம பாத்துகிறதும் பாதுகாக்குறதும் என்னுடைய கடமை.”

 

“நான் விரும்புறேன்னு உங்களுக்கு எப்படி நிச்சயம்? ”

 

“பாரு இப்ப கூட ஆதாரம் தான் கேட்குறியே தவிர ஆணித்தரமா காதல் இல்லனு சொல்லல”

 

“ஏன் என்னால சொல்ல முடியாதுனு நினைக்குறீங்களா?”

 

“உன்னால சொல்ல முடுஞ்சாலும் அஃது உண்மையில்லை. ஏன்னா, உன் கண்ணுல நான் பல முறை உன் நேசத்தைப் பார்த்திருக்கிறே.

 

இப்பவரைக்கும் நான் என்ன தொழில் பண்ணுறேன்னு நீ கேட்கல. நான் யாருனும் கேட்கல. என்னைப் பற்றி எந்தத் தகவலும் முழுசா தெரியிறதுக்கு முன்னாடியே நீ உன் தோட்டத்துக்கு என்னை அனுமதிச்ச. பல வருஷமா யாரையுமே உள்ளே விடாத நீ என்னை எதுக்காக உள்ளவிட்ட ?

 

அது மட்டு இல்லை. நான் அன்னைக்கு நீ என்னைச் சரியா ட்ரீட்பண்ணலன்னு கோவப்பட்டதும் எதுக்காக உன்னுடைய பழைய வாழ்க்கையைச் சொல்லி என்னைச் சமாதானம் செய்யணும். நான் கோவப்படக்கூடாது வருத்தப்படக்கூடாதுனு எதுக்காக நீ மறக்க நினைக்கிற கசப்பான சம்பவங்களை எனச் சமாதானம் செய்ய மறுபடியும் நினச்சு பார்த்து சொல்லி வேதனை படணும். என் கோவமும் சோகமும் உன்ன எதுக்காகப் பாதிச்சது?

 

அவ்ளோவு ஏன்? நீ கோவில்ல கண் மூடி நின்ன போது நான் உன் கண் முன்னாடி வந்து நின்னும் கூட எதுக்காக நீ சுயநினைவுக்கு வராம என் கண்ணை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்த ?

 

இப்போ கொஞ்சம் நேரம் முன்னாடி என்கிட்ட கடுமையா பேசுனியே. அதே விஷயத்தை விக்ரம் இருக்கும் போதே சொல்லியிருக்கலாமே. என் நண்பன் முன்னாடி நான் அவமானம் படக்கூடாதுனோ அல்லது நம்ம விஷயம் மூணாமனுஷனுக்கு தெரியக்கூடத்துனோ இஃது இரண்டுல எதோ ஒன்ன மனசுல வச்சுத்தானே என்ட  தனியா பேசணும்னு சொன்ன. உண்மையா ? இல்லையா ?

 

இஃது எல்லாத்தையும் கூட விட்டுரு. இப்ப பாத்த விக்ரம் உன்னைச் சவீனு சொன்னதும் வேண்டாம் சவீதானு சொல்லுங்கன்னு சொல்றியே. ஏன்? எதற்காக என்ட மட்டும் இதுவரை ஒருமுறைகூட உன்னைச் சவீ னு கூப்பிட வேண்டாம்னு சொல்லவே இல்லை. காரணம் என்ன?

 

உன்கிட்ட இத்தனை கேள்வி கேட்க எனக்குக் கேள்விகள் இருக்கு. ஆனா அதற்கான பதில் தான் உன்கிட்ட இல்லை.

 

உன்கிட்ட பதில் இல்லாமல் போனதுக்குக் காரணம் உன்கிட்ட காதல் இருக்கு. என்மேல அன்பு இருக்கு. சரி நான் நீ சொல்ற விஷயத்திற்கே வரேன்.

 

இனி நீ கூப்பிடாமல் நான் வரவே மாட்டேன். அப்படி நீ என்னைக் கூப்பிட்டா அதக்குப் பிறகு நான் உன்னைக் கல்யாணம் பண்றத உன்னால கூடத் தடுக்க முடியாது” எனக் கூறிவிட்டு நிற்காமல் சென்றுவிட, கார்த்திக்கின் அதிரடியான அன்பில் சவீதாவின் உறுதி ஆட்டம் காண தொடங்கியது.

 

அன்றிலிருந்து சவீதாவின் கண்களில் கார்த்திக் விழவே இல்லை. அழகாக விடிந்த வெள்ளி, சவீயின் மனதில் அலைப்புறுதலை உண்டாக்க, கார்த்திகை இத்தனை நாட்கள் காணாததும் சேர்ந்து ஒருவித கனத்தைக் கொடுத்தது.

 

அவனை முதன் முதலில் சந்தித்த காட்டு முருகன் கோவிலிற்குச் செல்வோம் என்று எண்ணம் கொண்டவள், சுற்றும் முற்றும் பார்த்தபடியே மெல்ல காட்டுவழி இருப்பு நீர்வீழ்ச்சியை அடைந்திருந்தாள். நீர்வீழ்ச்சிக்கு மறுப்புறமே கோவில்.

 

நீர்வீழ்ச்சிக்குச் செல்வதற்கு மரத்தினாலான ஒர் தொங்கும் மரப்பாலம் மட்டுமே வழி. அழகிய நீர்வீழ்ச்சி தான் என்றாலும் அதன் தொலைவும் சரியான போக்குவரத்து வசதியும் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகள் வருவது சொற்பமே. அதுவும் அன்று வெள்ளி பிற்பகல் ஆதலால், மாலை நெருங்கும் வேளையில் அங்கே மனித நடமாட்டம் இருப்பது அரிதே.

 

இன்றோ மனித வாடையே அண்டாத பூமியாய் அந்த அழகிய இடம் காட்சி தந்தது.

 

அவள் கூறியதை போன்றே கார்த்திக் அவளின் கண்களில் தென்படவே இல்லை. இருப்பினும் அவன் அவளுடனே இருப்பதைப் போன்றதொரு பிரம்மை அவளுள். மெல்ல மெல்ல பாலத்தைக் கடக்க, அவள் எதிர்பாராமல் அந்த விபத்து நேரிட்டத்து.

 

சட்டென்று மரபலகையொன்று உடைந்துவிட, சவீதாவின் கால்கள் பாலத்திற்குள் மாட்டிகொண்டந்து. ஒரு கால் வெளியேவும் ஒரு கால் உடைந்த மரபாலத்தின் இடுக்கிலும் நன்றாகச் சிக்கி கொள்ள, உடைந்த மரபாகங்கள் அவள் கால்களில் கீறி மாட்டிக்கொண்ட கால்களில் இரத்தத்தை வரவழைத்தன.

 

‘ஆ’ என்ற வலி முணங்கள்களுடன் மெல்ல காலை உருவ முயல முடியாது தோற்றாள். ஒரு புறம் வலியும் மறுபுறம் கவிழ்ந்து வரும் இரவுமென இரண்டும் அவளிற்கு வஞ்சகமின்றித் திகிலூட்டின.

 

‘கார்த்திக்’ ‘கார்த்திக்’ என நெஞ்சம் படபடக்க, அவளது எண்ணங்களோ, “நீ இங்க இல்லைதான். ஆனாலும் இங்க பக்கத்துல இருக்கிறது போல இருக்கு. நான் உன்னைக் கூப்பிடப்போறதில்லை. என்னுடைய சுயநலத்திற்காக உன்னை நான் இங்க அழைக்க மாட்டேன்.

 

நீ நிஜமா என்ன இந்த நிலையில பார்த்தன கண்டிப்பா வந்திடுவ. பட் அப்படி வந்தால் உன்னோட அன்பு பொய் ஆகிடும். இப்போ  உன் அன்பு உண்மைன்னு நிரூபிக்க நான் கூப்பிடாமல் வரமாட்டேன்னு இருப்பியா ? இல்லை உன் அன்பு பொய்யானாலும் பரவாயில்லைனு இங்க வந்திடுவியா கார்த்திக்” என ஓட, அதே நிலையில் தான் கார்த்திக்கின் மனநிலையும்.

 

Advertisement