Advertisement

புயலோ தென்றலோ – 5

 

சுற்றும் முற்றும் வேகமாகப் பார்வையை ஓட்டியவன் அவ்விருவர்களைத் தவிர வேறு எவரும் அவனுடைய பார்வையில் படாது போகவே பிரம்மையாக இருக்கக் கூடுமோ எனச் சிந்திக்கத் தொடங்கிய பொழுதே, சவீதா அவனின் கவனத்தை ஈர்த்தாள்.

 

“அப்புறம் கார்த்திக், என்ன வேலையா இந்தப் பக்கம் வந்தீங்க ? எங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணியதால் உங்களுக்கு வேலை கெட்டு போயிடுச்சோ ?”

 

“ஹ்ம்ம் சவீ? என்ன சொன்ன ?”

 

அவனின் கேள்விக்கு மீண்டுமொருமுறை அதே கேள்வியைச் சவீதா கூற, “என் ஒர்க் இம்பேக்ட் ஆனதுக்கு வருத்தமா ? இல்லை நான் எப்ப கிளம்புவேன்னு யோசனையா ?” என மிகச் சரியாகக் கார்த்திக் சவீதாவின் எண்ணத்தைப் பிடித்துவிட்டான்.

 

“எதுக்குச் சவீ ? ஏன் வந்ததிலிருந்து இப்படிச் சர்க்காஸ்டிக்கா பேசுற. நான் உன்ன வேற ஆளா பார்க்கல. ஆனா எதுக்கு என்ன இப்படித் தள்ளி வைக்கிற. தள்ளி வைக்கிறது கூட ஒகே. ஆனா ஏன் அவமான படுத்துற ?

 

நீ என்னை உள்ள கூப்பிட்ட முறையே வேண்டா வெறுப்பாத்தான் இருந்தது.

 

வந்து கொஞ்ச நேரம் கூட ஆகல, எப்ப கிளம்புவன்னு மறைமுகமா கேட்குற ? உனக்கு விருந்தோம்பல் தெரியலையா ? இல்லை உன்கிட்ட பேசுற தகுதி எனக்கில்லனு நினைக்கிறியா ?

 

ஒருவேளை எல்லாப் பொண்ணுங்ககிட்டையும் போய்ப் பேசுற தேர்ட் ரேட் ஆள்-னு என்ன சீப்பா நினைச்சுட்டியா? ” எனச் சட்டென்று ஏகத்திற்கும் குதிக்க, அத்தனை கோவம் அவனுள் வருவதற்குக் காரணம் அவனே அறியான். பாவம் சவீதா என்ன செய்வாள்? ஸ்தம்பித்தாள் !

 

சில முறை சந்திப்பும் ஓரளவு சமூக விசாரிப்புகளும் பேசுச்சுகளுமே இவ்விருவரிடையே இந்நாள் வர நிகழ்ந்திருக்க, தான் ஏன் சவீதாவிடம் இத்தனை உரிமையோடு கோபப்படுகிறோம் எனச் சிந்திக்கத் தொடங்கினான்.

 

“வாட் ஹேப்பண்ட் டு மீ. சவீதா கேட்ட கேள்விக்கு எஸ் அம் பிஸினு இங்க இருந்து கிளம்பிருக்கலாமே ? நிஜமாவே அவள் சொன்னது போல நீ தேடி வந்த ஆள இந்நேரம் கோட்ட விட்டுருப்ப.

 

எதுக்காக நீ இப்ப வந்த?

 

கார்த்திக் நீ ஒரு சிபிஐ, நீ மடிகேரில ஸ்டே பண்ணியிருக்கிறதும், இருப்புப் பால்ஸ் வந்ததும், இதோ இப்போ குட்ட வில்லேஜ் வந்ததும் அந்தக் கேஸ் விஷயமா.

 

சட்டத்திற்கு விரோதமா நடக்குற பணபரிமாற்றத்தை கையும் களவுமா பிடிக்கத்தான் நீ இங்க வந்திருக்க. இங்கேயிருந்து கண்காணிச்சு ஆதாரத்தோடு பிடிக்கணும். இது ரொம்பச் சவாலான கேஸ்-னு நீயே கேட்டு வாங்கிட்டு, இப்படி இங்க சம்மதமே இல்லாம பட்டாம்பூச்சிய பார்த்துகிட்டு இருக்க ?

 

பூள்….

 

கிளம்பு உடனடியா கிளம்பு.” எனக் கார்த்திக்கின் மனசாட்சி அவனிடம் கூற, அவன் கிளம்பும் நொடியில் அவ்விருவரை பிணைத்திருந்த விதி மீண்டும் கார்த்திகை காதல் வலையில் சிக்க வைத்தது சவீதாவின் குரலில்.

 

“கார்த்திக் சாரி. ப்ளீஸ் ஏன் கோவப்படுறீங்க? நான் உங்களை அப்படி நினைக்கல. உங்க மீது தவறான எண்ணம் இருந்திருந்தா நம்முடைய சந்திப்பு இத்தனை நாள் தொடர்ந்திருக்கவே இருக்காது. அதோட நான் இதுவரை எந்தவொரு ஆண்களையும் உள்ள அனுமதித்ததே கிடையாது. நீங்கதான் முதல் முறையா வந்திருக்கீங்க ?

 

உங்கள நான் இங்கிருந்து அனுப்ப நினச்சதற்குக் காரணம் நம்பிக்கை இல்லாம இல்ல. என் மீது இந்த ஊர் மக்கள் வச்சிருக்க நம்பிக்கையைக் காப்பாற்றத்தான்” என அவசர அவசரமாகக் கார்த்திக்கின் கோபத்தைச் சமன் செய்வதற்காகத் தன்னிலை விளக்கம் அளித்தாள்.

 

கார்த்திக்கின் கோபம் சவீதாவை பாதித்தது உண்மையே. பாதிப்பின் காரணம் அவள் மனம் அறிந்ததா? அதை அவள் அறியாள்.

 

ஆனால் அவனின் கோபம் அவளுக்கு வலியை கொடுத்தது. வலியை கொடுத்தவனின் வலியை போக்கும் எண்ணம் கொண்டவளாய் தன்னைப் பற்றிக் கூற விழைந்தாள்.

 

தான் யாருக்கும் சளைத்தவள் அல்ல. யாருடைய பரிதாபமும் அனுதாபமும் வேண்டாம் எனத் தன்னைப் பற்றிய எந்தவொரு விஷயத்தையும் வெளி ஆட்களிடம் பேசாதவள் கார்த்திக்கிடம் பேச துணிந்தாள். அதற்கான காரணம் இன்றளவில் கூடச் சவீதாவினில் அறுதியிட்டு கூற இயலாது.

 

அவளின் விளக்கத்திற்கு மறுமொழி கூறாது நின்றவனிடம், “சொல்றேன் கார்த்திக். என்னோட செயலுக்கான காரணம்.

 

இந்த வீட்ல என்கூட யார் இருக்காங்கனு தெரியுமா ?”

 

“எதற்குக் கேக்குற ? உன் குடும்பம் தான் இருக்கும்” எனத் தோள்களை அலட்சியமாகக் குலுக்கியபடி கூற, நீர் திரையிட விழியுடன் உறைந்த மெல்லிய இதழ் சிரிப்புடன் ‘இல்லை’ என்று தலை ஆட்டினாள்.

 

அவளுடைய நிலையைப் பார்த்த கார்த்திக் சற்றே தன்னுடைய அலட்சியம் கோபம் என அனைத்தையும் விட்டொழித்தபடி, “நீ என்ன சொல்ற ? உன்கூட யாரு இருக்கிறது சவீ ?”

 

“தனிமை” கூறிய சவீதாவின் குரல் விரக்தியுடன் ஒலித்தது.

 

“என்ன ?”

 

“அட கார்த்திக். அதெல்லாம் ஒண்ணுமில்லை. எனக்குப் பழகிடுச்சு. சின்ன வயசுலயே என் சொந்தங்களை இழந்துட்டேன். அன்று சொன்னேனே, ஆரத்தி அணைஞ்சதுனு, அப்போதான் நான் ஆரத்திக்காட்ட என் குடும்பமே ஒரு திருமண நிகழ்வுக்கு மங்களூரு போனாங்க.

 

தீபம் அணைஞ்சபோது சாதாரணமா தான் இருந்தேன். ஆனா அவுங்க நிரந்தரமா திரும்பிவரமாட்டாங்கனு தெரிஞ்ச நொடி தான் அணைஞ்சது ஆரத்தி தீபமில்லை, என் வாழ்க்கையின் தீபம் னு புரிஞ்சது.

 

அன்றிருந்து இப்போ வரையிலும் இந்த வீடு இருளில் தான் மூழ்கியிருக்கு.

 

இந்த வீடும் சின்னக் காபி தோட்டமும் எனக்குன்னு அவுங்க விட்டு போன சொத்து. அப்போ எனக்கு 14 வயசு. என்ன போலவே சொந்தங்கள் ஏற்றுக்க வழியில்லாத பாட்டி ஒருத்தவங்க எனக்குப் பாதுகாப்பா இங்க வந்தாங்க. அவுங்களும் இந்தக் கிராமம் தான். என்னோட 21 வயசுவரைக்கும் அவுங்க தான் எனக்குப் பாதுகாப்பு.

 

என் வாழ்க்கையில இனி அவுங்க மட்டும்தான் அப்படினு நான் நினைக்கிற சமயம் மறுபடியும் தீபம் அணைஞ்சது. அன்னைக்கு மறுபடியும் நான் இழக்க நேரிட்டது. அது பாட்டியோட மரணம்.

 

என்ன தனிமையிலிருந்து காப்பாத்திக்கத் தான் இந்தப் பட்டர்ப்ளை பார்க்.

 

காபி தோட்டத்தைக் குத்தைகைக்கு விட்டு அதுல வர பணத்துலதான் நான் வாழ்ந்திட்டு இருக்கேன். இப்போ கொஞ்ச நாள் முன்னாடிதான் இந்தப் பட்டர்ப்ளை பார்க் பிசினஸ் ஆரம்பித்தேன்.

 

முதலில் என் அப்பா அம்மா கூடப் பட்டர்ப்ளை பிடிச்சேன் பிறகு பாட்டிகூட இப்போ நான் மட்டும். எனக்கு அதுங்கள விட்டா வேற சொந்தமில்லை. ரொம்பவே கஷ்டமாத்தான் இருந்தது, ஆனா இப்போ இல்ல.

 

என் மேல இந்த ஊர் மக்கள் மரியாதை வச்சிருக்காங்க. நான் அனாவசியமா அதைக் கெடுத்துக்க விரும்பல. அதுனாலா தான்….” எனத் தான் கூற வந்ததை முழுவதுமாக முடிக்காது திணற, பழைய நினைவுகள் கிளறப்பட்டதால் தன்னைப் போல அவளுடைய கண்களில் கண்ணீர் பெறுக தொடங்கியிருந்தது.

 

உருண்டோடி அவள் கன்னம் சேர, இத்தனை நேரம் அமைதியாய் அவளுடைய கதையைக் கேட்டுக்கொண்டிருந்த கார்த்திக்கின் கைகள் சட்டென்று நீண்டு அவள் கண்ணீரை துடைத்தெறிய இருந்த நொடியில் தான் சவீதா அந்த வார்த்தைகளைக் கூறினாள்.

 

“நீங்க என்ன செய்ய வந்தீங்க கார்த்திக்? இதெற்கெல்லாம் ஆள் நான் இல்ல. எந்தவொரு பரிதாபமும் அனுதாபமும் என நெருங்க ஆயுதமாகாது.நெருங்க நினைக்காதீங்க. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்” எனக் கூறியவள் கார்த்திக்கின் முகம் காண விரும்பாதவளாய்த் திரும்பிக்கொள்ள, இம்முறை கார்த்திக் கோபப்படவில்லை. சற்று நிதானமாகச் செயல்பட்டான்.

“வெல், ரொம்ப சரியா சொன்ன சவீ. அனுதாபமும் பரிதாபமும் உன்ன நெருங்க ஆயுதமாகாது.

சரியாதான் சொல்லிருக்க.

 

ஆனால் கல்யாணம் ?

 

எஸ் ஏன் எதற்கு எப்படி எப்போ எதுவுமே தெரியாது. இது காதலா ? இதுதான் காதலா அப்படினு கூடத் தெரியாது. நீ கேட்டாலும் என்கிட்ட பதில் இல்லை.

 

ஆனா உன்கூட என்னுடைய நேரங்கள் இருக்கணும்னு தோணுது. உன் கண்ணுல வர கண்ணீரை என் கைகள் துடைக்கணும்னு தோணுது.

 

அதுக்கு நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” எனச் சட்டென்று மனதில் தோன்றியதை தோன்றியபடியே கூறிவிட, சவீதா ஸ்தம்பித்தாள்.

 

இவனின் திடீர் அன்பு தாக்குதலில்  நிலைகுலைந்தவள் கோபமே கொண்டாள். கோபத்தில் கண்கள் கலங்கி சிவந்தன.

 

” நீ அழாத சவீ. நான் இப்போ கிளம்புறேன். நீ யோசிச்சு சொல்லு”

 

அவள் கன்னத்தில் வழிந்த நீரானது இன்றும் கார்த்திக்கின் மனதில் ஈரமாய் உணரச்செய்தது. அன்றும் போல் இன்றும் காத்திக்கின் மனம் இனம் புரியா வலியில் சிக்கியது. கைகளை அழுந்த தன் சிகைக்குள் நுழைத்தவன் கோதியபடியே நிகழ்காலத்திற்கு வெறுப்புடன் வந்து சேர்ந்தான்.

 

“நீ நான் பார்த்த சவீதாவவே இருந்திருக்கக் கூடாதா ? பொய்யா இருந்தாலும் நான் சந்தோசமா இருந்தேன். உண்மை கசக்கும்னு தெரியும் ஆனா சாகடிக்கும்னு இப்போ தான் தெரியிது சவீ” என மனதிற்குள் எண்ணியவன், “ச்ச… மறுபடியும் அவளை நினைக்காதே. மறுபடியம் ஏமாறாதே” என ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றத்துடன் எண்ணத்தை ஓட்டினான்.

 

அதே தடுமாற்றத்துடன், கால் போன போக்கில் செல்ல, அங்கே விக்ரமிடம் சவீ ஏதோ காரசாரமாய்ப் பேசிக்கொண்டிருப்பதைப் போன்று தோன்ற வேகமாக விரைந்தான்.

 

என்ன ஏதென்று தெரியாத போதும் அவனின் பணி அவன் கண்முன் நின்ற போதும் அவளின் மீதான கோபம் அப்படியே தகித்த போதும் ஏனோ அவளின் பதற்றமும் இறுக்கமான முகபாவமும் அவனுள் பதற்றத்தை ஏற்படுத்தியது.

 

அவனின் விழிகள் அவளின் முகத்திலும் மேடிட்டிருந்த வயிற்றிலும் ஒரு கணமே பதிந்தது. விரைந்து அவளின் அருகே செல்ல துடித்த கால்களுக்குத் தடை போட்டு, “சவீ, டென்ஷன் ஆகாத. எதுக்கு இவ்ளோ டென்ஷன் ?” எனத் தன்னையும் மீறி கார்த்திக்கின் உதடுகள் உச்சரித்திருந்தன.

 

கார்த்திக் எப்போதும் அப்படியே!

 

நிதானம், ஆழ்ந்த சிந்தனை, தொலைநோக்கு எண்ணம், யூகங்கங்கள் என அனைத்தும் அவனிடம் இருந்தாலும் அனைத்து காரியத்தியலும் அஃது அவனின் பக்கபலமாய் இருந்தாலும், சவீ என்ற இரண்டெழுத்தில் அவைகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.

 

சவீ எப்படி அவன் வாழ்வில் வந்தாள், இத்தனை சீக்கிரம் எப்படி அவனை ஆள தொடங்கினாள் என எதுவும் தெரியாது. பிடித்தமின்மை வெறுப்பு என அனைத்தும் இருந்தாலும் மீண்டும் சவீ என்ற இரண்டெழுத்து அவனை மீறிய செயல்களைச் செய்யத் தூண்டும் சக்தி கொண்டனவாக இருந்தன.

 

அதீத கோபம் அதீத காதல் அதீத வெறுப்பு அதீத துக்கம் அனைத்தையும் அவனுள் ஏற்படுத்தும் சக்திகொண்டவள் சவீதா. கார்த்திக்கின் சவி!

 

வேகமாக விக்ரமை விடுத்து கார்த்திக்கின் புறமாகத் திரும்பியவள், “இதோ இதுக்குத் தான். இந்தச் சவீதா என்ற அழைப்புக்குத்தான். நான் உங்களோட சவீதா இல்ல. சக்தி.

 

மறுபடியும் மறுபடியும் சவீதா சவீதானு எதற்காக என்னைக் கூப்பிடறீங்க? உங்க பிரண்டகிட்டையும் சொல்லிட்டேன். ஆனாலும் அவர் கேக்குறதா இல்லை” என அடக்கப்பட்ட கோபத்துடன் அவள் கூற, “சாரி கார்த்திக், நான் வேணும்னு கூப்பிடல. பழக்கத்துல வந்திடுச்சு.

 

இவுங்க பட்டர்ப்ளைஸ் கூடப் பேசிட்டு இருந்தாங்க. தனியா பீல் பன்றாங்க போலன்னு சும்மா பேச வந்தேன். வாய் தவறுதலா சவீதானு கூப்பிட்டேன். ரொம்ப டென்சன் ஆகிட்டாங்க” என அவனும் முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு கூற, கார்த்திக் நிதானம் கொண்டான்.

 

“இதோ பாருங்க கார்த்திக், நீங்க நினைக்கிறது நடக்காது. நான் சவீதா கிடையாது. இனியொருமுறை , இனியொருமுறை சவீதா னு என்னைக் கூப்பிட வேண்டாம்” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்த திருத்தமாய்க் கூறிவிட்டு விக்ரமின் மீது அனல் பார்வை வீச, விக்ரம் தன்னிச்சையாய் ஓர் அடி பின் நகர்ந்தான்.

 

அவள் சென்ற பின்னும் கார்த்திக் அவளையே பார்த்தபடி, “நீ சவீதா தான் சக்தியில்லைனு நான் நிரூபிக்கிறேன்” என வாய்விட்டு கூற, விக்ரம் இடை புகுந்தான்.

 

“பாஸ், என்ன இந்தப் பொண்ணு இவ்ளோ கத்துறாங்க. அம்மாடியோ…. நல்லவேளை சரியான நேரத்துல நீங்க என்னைக் காப்பாத்துடீங்க. தேங்க்ஸ். நீங்க சொல்றது போல இந்தப் பொண்ணு சக்தியில்லை சவீதானு மட்டும் புரூப் பண்ணிடீங்கன்னா நான் ரொம்பச் சந்தோச படுவேன் ஜி.

 

வந்த நாளிருந்து என்ன மட்டும் வச்சு செயிது. வாங்குனதை திருப்பிக் கொடுக்கவேணாம். சவீதானு மட்டும் புரூப் ஆகட்டும். அப்புறம் இருக்கு” எனத் தன்னுடைய காதுகளைத் தேய்த்தபடி அங்கிருந்து செல்ல, கார்த்திக்கின் உதடுகள் அடுத்து செய்யவிருந்ததை உச்சரித்தன.

 

“நீ என்னிடமே உன் நாடகத்தை அரகேற்றியா ? உன் வேஷத்தை கலைக்க நீயே வழி காமிச்சிட்ட.

 

பட்டர்ப்ளைஸ் கூடத் தானே கொஞ்சம் முன்னாடி பேசிகிட்டு இருந்த.

 

அந்தப் பட்டர்ப்ளைஸ் வச்சே உன் முகமூடியை எடுக்குறேன்” எனக் கூறிக்கொண்டான்.

 

Advertisement