Advertisement

புயலோ தென்றலோ – 4

 

மருத்துவமனையிலிருந்து வரும் வழியெங்கும் மருத்துவர் கூறிய வார்த்தைகளே சக்தியிடம் ஓடிக்கொண்டிருந்தது.

 

“என்னமா? இந்த முறை ப்ரெஸ்ஸர் ஜாஸ்தி இருக்கு. இப்படி இருக்கிறது குழந்தைக்கு நல்லது இல்ல. எதையும் யோசிக்காதீங்க, மனச அலட்டிக்காதீங்க.

 

வாழ்க்கையில பிரச்சனை இருக்கும் தான். அது நம்ம வருங்காலத்தைப் பாதிக்கிறதும் பாதிக்காது போறதும் சரி. ஆனா நம்ம டென்ஷன் நம்முடைய வருங்காலக் குழந்தையை எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது. அத மனசுல வச்சுக்கோங்க” என்ற வார்த்தைகள் அவளின் காதுகளில் ரீங்காரமிட, அதைத் தொடர்ந்து பூரணி, “சக்தி நான் சொன்னேன்ல. இதெல்லாம் தேவை இல்லாத டென்சன். உன் பேபிய தவிர வேறெதையும் யோசிக்காத. அவுங்க ரெண்டு பேரும் உன்ன டிஸ்டர்ப் பண்ணினா நீ ப்ரகாஷிக்கிட்ட சொல்லிடலாம்” எனக் கூற மெளனமாக வந்துக்கொண்டிருந்தாள்.

 

“சக்தி நீ எப்படியிருக்கியோ அதே போலத்தான் உன் பேபியும் இருக்கும். நீ சந்தோசமா இருந்தால் அதுவும் சந்தோசமா இருக்கும். நீ கவலையா இருந்தால் அதுக்கும் உன்னோட உணர்வுகள் பிரதிபலிக்கும்”

 

“ஓ…..”

 

“என்ன ஓ? நீ என்ன யோசிக்கிற ?”

 

“நீ சொல்லியதை தான். என் சந்தோசம் என் துக்கம் போல என்னோட தையிரியமும் என் குழைந்தையிடம் பிரதிபலிக்கும் தானே ?”

 

“ஆமாம் நிச்சயமா!”

 

“நான் முடிவுபன்னிட்டேன் பூரணி”

 

“என்ன சொல்ற சக்தி?”

 

“ஹ்ம்ம் நான் இப்ப ஓடி ஒளியிறத போல என் குழந்தை இருக்க வேணாம். இருக்கக் கூடாது. ஆணோ பெண்ணோ எதுவாகினும் ரொம்பத் தையிரியமா இருக்கணும். அந்தக் கைனகாலஜிஸ்ட் சொன்னதைக் கேட்டதானே.

 

நம்முடைய பிரச்சனையை நம்மைப் பாதிக்கலாம் ஆனா நம்ம குழைந்தையை நெருங்கவிடக்கூடாது. எனக்கு எல்லாமே என் குழந்தைதான். அதுனால நான் மாறவேண்டிய சூழல் வந்திடுச்சு.

 

ஒளிஞ்சு பிரயோஜனம் இல்ல.

 

நான் பார்த்துகிறேன்” எனத் தீவிரமாகப் பேசியவளை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள் பூரணி.

 

அவர்கள் சென்றுவர, செய்தி பிரகாஷை எட்டியிருந்தது. சக்தியின் மனஉளைச்சலுக்கான காரணத்தை அவன் வினவ அவளோ சொல்வேனா என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள். இந்தத் தகவல் கார்திகேயனையும் எட்டியிருக்க அவனை அறியாமல் ஓர் பதற்றம் அவனுள் சூழ்ந்துகொண்டது மறுக்கமுடியாத உண்மை.

 

“நான் என்ன செய்துவிட்டேன்? என்ன செயவிருந்தேன் ? எப்படி மறந்தேன் ? இவளின் மீதிருந்த வெறுப்பும் என் பணியின் மீதிருந்த விருப்பும் என் குழந்தையிடம் நான் கொள்ளவேண்டிய அக்கறையை மறக்கவைத்துவிட்டதே.

 

இல்லை, இனி என் குழந்தையின் நலனே முதன்மை.

 

அதற்காகச் சவீதாவை நான் மன்னிக்கவும் இல்லை என் கடமையை மறக்கவும் இல்லை” எனத் தனக்குள்ளாக ஏதேதோ சமாதானம் சொல்லிக்கொண்டான்.

 

ஆனால் உண்மை, அவனின் குழந்தையின் நலமே அவன் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தது. உரவற்றவனுக்கு உரவொன்று வருமென்றால் உலகமே அது தானே.

 

அந்த நிலையில் தான் அன்றும் இருந்தான். அவனது உலகமே சவிதாவாக! இன்றும் அதே நிலையில் தான் ஆனால் இன்று அவன் உலகம் சவீதாவின் வயிற்றில் வளரும் தன் குழந்தை மட்டும்தான் எனச் சொல்லிக்கொண்டான். உண்மையில் சவீதா அவன் வாழ்வில் இனி இல்லவே இல்லையா என்பது அவனாலே இனம் காணமுடியாத சூழலில் சிக்கிக்கொண்டான்.

 

அதே எண்ணத்துடன் பலகணியிலிருந்து தன் அறை நோக்கி செல்ல பின்நகர, சட்டென்று அவனுடைய இருதயம் ஒரு கணம் நின்று துடித்தது. காரணம் கார்த்திக் சக்தியின் மீது மோதவிருந்தான். தன்னுடைய வயிற்றை அணைவாய் பிடித்தபடி சட்டென்று பின்நகர்ந்து கனல் விழியைக் கார்த்திக்கின் மீது தணல் வீச, கார்திக்கிற்கோ அவளின் முகம் காணும் யோசனையே இல்லாது, மேடிட்டிருந்த வயிற்றைப் பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

மோதவில்லை என்ற உணர்வு வரவே அவனுக்குச் சில நொடிகள் பிடிக்க, சிறு ஆசுவாசமான மூச்சொன்றை உரக்க வெளியிட்டான். தன் குழந்தை பாதுகாப்பாகவே இருக்கிறதென்பதை விழிகளால் உறுதிசெய்தவன் மெல்ல அவளுடைய முகத்தை ஏறிட்டு பார்க்க, இவனின் செய்கையால் கோவத்தில் முகம் கோவையாய்ப் பழுத்திருக்க, அதீத கோவமும் இவனுடைய செயலும் அவள் கண்களில் நீரை வெளியேற்றி இருந்தது.

 

ஆம் கோவப்படும் நொடியில் அவள் கண்கள் கலங்கிடும் பழக்கம் கொண்டவள்.

 

கண்கள் பிரசவித்த கணீர் கன்னம் வழி தவழ, அவனின் இருதயம் உடைய தொடங்கியது. அவள் கண்ணீரை தன் கை கொண்டு தாங்கிட விழைந்தவனாய் கார்த்திக்.

 

கார்த்திக்கின் கைகள் மெல்ல சக்தியின் கன்னம் நோக்கி உயர, அவன் பழுப்பு நிற கண்களைப் பார்த்துநின்றவள் இவனின் செய்கையால், சட்டென்று அவனுடைய கரத்தை தட்டிவிட்டவள், “நீங்க என்ன செய்ய வந்தீங்க கார்த்திக் ? இதெற்கெல்லாம் ஆள் நான் இல்ல. எந்தவொரு பரிதாபமும் அனுதாபமும் என நெருங்க ஆயுதமாகாது.

 

நெருங்க நினைக்காதீங்க. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்” எனச் சீற, அவள் கண்ணீர் பார்த்து அவளின் பால் சாய்ந்த மனமானது மீண்டும் இருக மூடிக்கொண்டது.

 

மூடப்பட்ட இதயத்திற்குள் ஓயாது அவளுடைய வார்த்தைகள் ஒலியெழுப்ப, மெள்ள மெள்ள அந்த வார்த்தைகள் அவனுக்குப் பழையதை நினைவூட்டின.

 

இதே வார்த்தைகளை இதே இதழ் அன்றும் கோவம் கலந்த கண்ணீருடன் உச்சரித்தது.

 

“நீங்க என்ன செய்ய வந்தீங்க கார்த்திக்? இதெற்கெல்லாம் ஆள் நான் இல்ல. எந்தவொரு பரிதாபமும் அனுதாபமும் என நெருங்க ஆயுதமாகாது.

 

நெருங்க நினைக்காதீங்க. இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்”

 

ஆம், கூறியவள் சவிதா.

 

குடகு மலை இருப்பு நீர்வீழ்ச்சியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் அமைந்திருந்த குட்ட கிராமம், கர்நாடக மாநிலத்தின் மற்றொரு வரப்பிரசாதமே.

 

ஆர்ப்பாட்டமில்லாத அழகை தன்னுள் புதைத்து வைத்திருந்த அக்கிராமம் சுற்றுலாத்தளங்களுக்கு மிக அருகில் இருந்தமையாலும் மாசு இல்லாத சூழலாலும் இரைச்சல் இல்லாத மெல்லிசையாய் மனதை வருடும் அழகை கொண்டிருந்தது. அங்கு ஒரு சில ரிசார்ட்களும் மற்றவை அனைத்தும் அப்பகுதி வாழ் மக்களின் இல்லங்களுமே நிறைந்து காணப்பட்டது.

 

மலை விவசாயத்தை நம்பி உள்ளோர்களும், சுற்றியுள்ள சுற்றுலா தளங்களில் பணிபுரிவோர்களுமே அங்கு வசித்து வந்தனர். நெருக்கடி இல்லாத கணிசமான இடைவெளியில் அமைந்த வீடுகள், ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பசுமை தோட்டங்களும் வண்ண வண்ண பூக்களும் இதமான குளிரும் சூழ்ந்திருக்க, அந்தத் தெருவில் மிகவும் விசித்திரமாக ஒரு வீட்டின் தோட்டத்தில் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்து காணப்பட்டன.

 

வண்ணத்துப்பூச்சியை அடையாளமாய்க் கூறுகிறோம் என்றால் அங்கு ஒன்றோ இரண்டோ அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் சிறகை விரித்து அங்கும் இங்கும் பறந்தபடி வண்ண பூக்களுடன் போட்டியிட்டுத் தங்கள் வண்ண சிறகுகளை விரித்தபடி படபடத்தன.

 

அவ்வழியாக வந்த கார்த்திக்கின் கவனத்தையும் அந்த வீடும், வண்ணத்துப்பூச்சிகளின் கூட்டமும் கவர்ந்தத்தில் ஆச்சர்யமொன்றுமில்லை. அடக்கமான சிறு வீடே. வீட்டை சுற்றி தோட்டம் மட்டுமே பெரிது. ஒரே படுக்கை அறையோ அல்லது மிஞ்சிப்போனால் இரண்டோ அவ்வீட்டில் இருக்கக் கூடும். அதைத் தவிர, தோட்டத்தைப் பார்க்க பெரிய பலகணி. அலங்கார ஓடு வேயப்பட்ட ஓரடுக்கு வீடு. சிறிய வீடே ஆகிலும் அந்த வீட்டின் அழகு வெகுவாகப் பார்ப்போரை ஈர்த்துவிடும். அத்தனை ரம்யமான காட்சியைத் தோட்டமும் வண்ணத்துப்பூச்சிகளும் அவ்வீட்டிற்கு அளித்திருந்தன.

 

தன்னையும் மீறிய செயலாய் கார்த்திக்கின் கால்கள் அந்தத் தோட்டத்தைச் சுற்றி வேலிபோடப்பட்டிருந்த மரக்கதவை திறக்க முயல, சவீதாவின் குரல் உள்ளிருந்து வெளிவந்தது.

 

“யாரது?” என்ற கேள்வியுடன் தோட்டத்தின் மறுபக்கத்திலிருந்து சவீதா வர, அங்கே கார்த்திகை எதிர்பாராதவள் முதலில் அதை முகத்தில் காட்டி பிறகு சற்றே தெளிந்து “வாங்க, நீங்க எப்படி இங்க?” என்ற கேள்வியுடன் முன் நின்றாள்.

 

ஆம் சவீதாவும் கார்த்திக்கும் அன்றைய தினத்தின் பிறகு ஏற்பட்ட நான்கைந்து சந்திப்புகளின் மூலம் முகம் பார்த்து புன்னைகையுடன் பேசும் அளவிற்கு முன்னேறியிருந்தனர். இருப்பினும் தற்சமயம் வரை சவீ தன்னைப் பற்றிய எந்தவொரு தகவலையும் பரிமாறிக்கொள்ளவில்லை. அன்று கார்த்திக் கூறியதை போன்று சவீதாவின் நீண்டநாள் கனவொன்று அன்றே நிறைவேறிவிட, அவளுடைய பார்வையிலும் உள்ளத்திலும் கூட மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆதலால் தான் கார்த்திக்கோடு சற்றே தெளிந்த முகத்துடன் அவளால் பேச முடிந்தது.

 

“ஹாய் சவீ? நீ இங்குதான் இருக்கியா ?”

 

“ஹ்ம்ம் கார்த்திக், ஆனா உங்களுக்கு நான் இங்க இருக்கிறது தெரியாதா? தற்செயலா வந்தீங்களா ?”

 

“ஆமாம், நீ தான் என்கிட்டே வார்த்தைகளை எண்ணி எண்ணி பேசுவியே. பிறகெப்படி எனக்குத் தெரியும்னு எதிர்பார்க்கிற ? வேறொரு வேலையாய் வந்தேன். ஆனா நீ இப்போகூட உள்ள கூப்பிட மாட்ட போலியே ?” எனக் கேட்டவன் கேட்ட பிறகே எதற்காக இக்கேள்வியை முன்வைத்தோம் என்று சிந்தித்தான். சிந்தித்தும் பிடிபடாது போக, அதே சிந்தனையோடு அங்கிருந்து புறப்பட நினைக்க, அவனைத் தடுத்தாள் சவீதா.

 

கார்த்திக்கின் இந்தச் சிந்தனைக்கான காரணத்தை அவனுடைய மதி வேணுமென்றால் அறியாது போகலாம் ஆனால் மனம் ? அதற்குத் தெரியுமே! ஆனால் மனமறிந்து என்ன செய்வது ? மதியும் மனதின் ஆசைக்குச் செவி சாயிக்கவேண்டுமே.

 

அவளுடைய அறிமுகம் சாதாரணமாக இருந்தாலும், அடுத்தடுத்து வந்த நாட்களில் எந்தவொரு வலுவான காரணமுமின்றி அவளின் பால் கார்த்திக்கின் மனம் சரிய தொடங்கியிருந்தது. காதல்வர காரணம் அவசியமா என்ன ? இல்லவே இல்லை! அவர்களுக்குள் மலர்ந்தது நட்பு என்றெண்ணி அவன் இருக்க, அப்பூவோ காதலின் சுகந்தத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது.

 

“அப்படியில்ல கார்த்திக். நான் யாரையும் வீட்டிற்குள் அனுமதிக்கிறதில்ல. இதை நான் ரொம்ப வருசமா கடைபிடிக்கிறேன். ஆனாலும் உங்களை அப்படியே வழியனுப்பவும் மனமில்லை. சோ நீங்க உள்ள வாங்க. இப்பயும் வீட்டுக்குள்ள கூப்பிட முடியாது. நம்ம தோட்டத்துல இருக்கலாம்.

 

நீங்க இங்க இருங்க, நான் உங்களுக்குக் காபி கொண்டுவரேன்” என அழைக்க, கார்த்திக்கோ, “இவள் என்ன சொல்கிறாள் ? உள்ளே வா என்றா? அல்லது உள் நுழைந்தாலும் வீட்டிற்குள் வரும் எண்ணம் கொள்ளாதே என்றா? இப்படியுமொரு விசித்திர விருந்தோம்பலா? வேணாம் கார்த்திக் நீ கண்டிப்பா போகணுமா என்ன ? ஆமாம் போகணும். சவீதா அழைக்காமலே போனாலும் கூடத் தவறில்லை. அவள் உனது மனதிற்கினியவள் தானே ? என்ன மனதிற்கினியவளா ? இஃது எப்போ இருந்து?” இவ்வாறு கார்த்திக்கின் மனம் மாற்றி மாற்றிச் சிந்தனையை ஓட்ட, அவன் கட்டுப்பாடும் மதியின் கட்டளையுமின்றிக் கால்கள் சவீதாவின் வண்ணத்துப்பூச்சி தோட்டத்திற்குள் நுழைந்திருந்தது.

 

அவன் சிந்தனையிலிருந்து வெளிவர, அவன் முன் சவீதா காபியுடன் நின்றாள்.

 

“என்னடா இது? நம்ம எப்ப உள்ள வந்தோம் ? என்னதான் நடக்குது ?” எனக் கார்த்திக் தனக்குத் தானே கேள்வி எழுப்ப, “குடிங்க கார்த்திக்” என்ற சவீயின் குரலில் கலைக்கப்பட்டான்.

 

“ஹ்ம்ம் சுயர். நைஸ் இந்தக் காபியும் அப்புறம் இந்தப் பட்டர்ப்ளை பார்க்கும் (Butterfly Park)”

 

“ஹ்ம்ம் தேங்க்ஸ்”

 

“எப்படி இவ்ளோ பட்டர்ப்ளைஸ் உன்னோட வீட்ல மட்டும்? பொதுவா இது போலப் பார்க் ஜூ அல்லது பயோலொஜிக்கல் சென்டர் ல தானே இருப்பது வழக்கம்.

 

வீட்லயே பட்டர்ப்ளை பார்க் ரொம்ப வித்தியாசமான அழகான செயல். நான் வேறவொரு வேலையாதான் இங்க வந்தேன். உன்னோட வீட்டை அலங்கரிச்சிருந்த இந்த வண்ணத்துப் பூச்சிகள் தான் நான் உன் வீட்டை பார்க்கவும் நீ என்னைப் பார்க்கவும் காரணமாச்சு.

 

அதுனாலதான் உன் வீடும் தெரிஞ்சது, உன்னோட காபியும் கிடைச்சது. சோ தேங்க்ஸ் டு பட்டர்ப்ளைஸ்” எனக் கூறி மெல்லிதாகச் சிரித்தபடி பார்வையைத் தோட்டத்தைச் சுற்றி சுழலவிட்டான்.

 

“நீங்க சொல்றது சரிதான். ஆனா எனக்கு இது பிடிச்சிருக்கு. எனக்குப் பிடிச்சவிஷயத்தை என்னோட பணியாகவும் செய்யலாம்னு.

 

என்னோட சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்தப் பட்டர்ப்ளைஸ் தான் துணை. அதுனால என்னோட படிப்பையும் நான் வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றிப் படிக்கிறதையே தேர்வு செஞ்சேன்.

 

முதலில் பயாலஜி அதுல லெபிடோப்டெராலஜி (Lepidopterology ).

 

இதுல தான் எனக்கு மனநிறைவு இருக்கும்னு தோணிச்சு. என்னோட சூழலை அழகா மாத்த என்னோட தோட்டத்தை மாற்றினேன். அப்புறம் இந்த விஷயம் ஊருக்குள்ள பரவவும் எல்லாரோட பாராட்டும் வாழ்த்தும் கிடைச்சது. இதையே நான் தொழிலாகவும் செய்யலாம்னு முடிவுசெஞ்சேன். வாழ்த்து கிடைச்சது போல இதைப் பண்றதுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கல. ரொம்ப ரொம்பத் தேடி அலைஞ்சு, அன்று உங்ககிட்ட பேசுனேன் இல்லையா ? நீங்க கூட தீபம் அணைந்தது அபசகுனம் இல்ல அற்புத சகுனம்னு சொன்னீங்களே. அன்றுதான் எனக்கு ஒரு பெரிய காண்ட்ராக்ட் கிடைச்சது.

 

இங்க ஓர் அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் ஒரு ரிசார்ட் இருக்கு. அங்க டூரிஸ்ட் இன்ட்ரெஸ்ட் சீக் பண்ண பட்டர்ப்ளை பார்க் கன்ஸ்ட்ரக்ட் பண்ண போறாங்க. அதோட மொத்த பொறுப்பும் இப்போ என்னோடது.

 

எனக்கு இப்ப ரொம்பச் சந்தோசமா இருக்கு” என உணர்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்க கூறிக்கொண்டிருந்தாள்.

 

“கொயட் இண்ட்ரஸ்டிங்.

 

பட்டர்ப்ளைஸ் க்கு படிப்பா ? ஆச்சர்யமா இருக்கு. நான் இதுநாள் வர ஜூவாலஜிக்கல் ஸ்டூடன்ட் பார்த்துகிற விஷயம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள ஒரு படிப்பே இருக்கும்னு எதிர்பார்க்கல.

 

ரொம்ப வித்தியாசமான ஆர்வம்.

 

அதோட ரொம்ப அழகான வேலை. இயற்கையோடும் அழகோடும் உறவாடும் பணி. பேசாம நானும் இந்தப் பட்டர்ப்ளைஸ் வளர்த்துக்கிட்டு இங்கயே தங்கிடலாம் போல. கண்டிப்பா இஃது ஈசி ஜாப் கூட. கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் பூக்கள் இருந்தால் போதும் தானே.

 

பெருசா நம்ம எதுவும் செய்யவேண்டாம் இல்லையா சவீ?

 

“ஹெலோ ஹெலோ என்ன அவ்ளோ ஈஸியா சொல்றீங்க. பட்டர்ப்ளை கார்டன் அவ்ளோ சுலபம் இல்லை. கஷ்டமில்லாத எந்த வேலையுமில்லை. இஷ்டத்தோடு செய்யும்போது கஷ்டம் தெரியாது. அப்படிவேனும்னா சொல்லலாம்.

 

இந்தப் பார்க்க உருவாக்க எத்தனை விதிமுறை இருக்கு தெரியுமா ? எவ்ளோ விஷயங்கள் கன்சிடர் பண்ணனும்னு தெரியுமா ? சொல்றேன் கேளுங்க.

 

வண்ணத்துப்பூச்சி வளர்க்க,

சூரிய ஒளி நிறைஞ்ச இடமாகவும் அதிகம் வெயில் பாதிக்காத இடமாகவும் வடிவமைக்கணும்.

காற்று அதிகமா வீசாதவாறு ஷெல்டர் போடணும்

பட்டர்ப்ளைஸ்க்கு நெக்டர் பிளான்ட்ஸ் (Nectar Plants) அதாவது பூக்களும் மகரந்த தூள்களும் தேன்களும் நிறைந்த செடிவகைகளை வைக்கணும்

அதுலயும் வருஷம் முழுவதும் பூக்குறது போலச் செடிவகைகளைச் சேகரிக்கணும்.

அதாவது நாலு பருவத்துக்கும் குறையாத பூக்கள், வெயில் காலத்தில் பூக்கின்ற பூ மழை காலத்தில் பூக்காது. இதைச் சமன் செய்ய இரண்டு பருவ நிலையிலும் பூக்குறது போல இரண்டு ரகச் செடிகளை நடணும். இதே போலவே நாலு பருவத்திற்கும் கொத்துக் கொத்தா பூக்குறது போல அதிகளவிலான செடிகளைப் பயிரடனும்.

 

அதுக்குப் பிறகு கேட்டர்பில்லர் அதாவது வண்ணத்துபூச்சியோட முந்தின நிலை, அதற்கான உணவிற்காக ஹோஸ்ட் பிளான்ட் (Host Plants) வளர்க்கணும்.

 

இதுலயும் ஒவ்வொரு விதமிருக்கு. குறிப்பிட்ட வகை வண்ணத்துப்பூச்சிகள் குறிப்பிட்ட செடிகளில் தான் உணவு தேடும். சரியான செடிகளை நாம தேர்வு செய்யலைன்னா முட்டைகள் வண்ணத்துப்பூச்சியா மாறாது. ரோஸ் எலுமிச்சை காரட் முட்டைகோஸ் சூரியகாந்தினு ஒவ்வொரு தாவரத்திற்கு ஒவ்வொரு வகை வண்ணத்துப்பூச்சி முட்டையிடும். அதோட கேட்டர்பில்லர் ரொம்பத் தூரம் தாண்டி இறை தேட முடியாது. அதுனால அந்தச் செடிகளை நம்ம அருகருகே நடவு செய்யணும்.

 

கேட்டர்பில்லர்க்கான செடிகளில் மற்ற வண்டுகளோ பூச்சிகளோ நாசம் செய்யாம பார்த்துக்கணும். அப்படி மற்ற பூச்சிகள் அதைச் சாபிட்ரீச்சுனா, கேட்டர்பில்லர்க்கு போதிய உணவு இல்லாம அழிஞ்சி போய்டும்.

 

வண்ணத்துப்பூச்சிகள் அதிக அளவுல வருவதற்கு அதை ஈர்க்க மஞ்சள் சிவப்பு ஆரஞ்சு நிற பூக்கள் அதிக அளவுல இருக்கணும்.

 

பூச்சிகள் அமர்ந்து இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே கூழாங்கற்களும் பளிங்கிக்கற்களும் நிரப்பி வைக்கணும். அந்தக் கற்கள் இருக்கிற இடத்தில் சூரிய கதிர் படுவது போலவும் அமைக்கணும்.

 

அதற்குத் தேவையான தண்ணீர் வசதிக்குச் சின்னத் தடாகம் பராமரிக்கணும்

 

ரொம்ப முக்கியம் பூச்சி கொல்லி உபயோக படுத்தவே கூடாது. இத்தனை விஷயங்கள் செஞ்சாதான் இந்தப் பட்டர்ப்ளை கார்டன் உயிரோட இருக்கும்” எனச் சுவாரசியமாக ரசித்துக் கூறியவளுக்குச் சற்றே மூச்சுவாங்க, அவளுடைய அதீத ஈடுப்பாட்டிலும் அவளுடைய கண்ணசைவிலும் தன்னை மறந்து நின்றிருந்தான் கார்த்திக்.

 

“ஹெலோ கார்த்திக்? என்ன ஆச்சு ?” என்ற கேள்வி சவீதாவிடமிருந்து வரும்வரையிலும் கூடக் கார்த்திக் அவளுடைய விழிகளையே பார்த்திருக்க, அவளும் கார்த்திக்கின் விழியை முதல் முறையாக ஆழ்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.

 

இதற்கு முன்னரும் பார்த்திருந்தாலும் கூட, ஏனோ இன்று தான் முதல் முறை அவனுடைய பழுப்பு நிற விழிகளைப் பார்ப்பதை போன்றதொரு பாவனை அவள் விழியிலும் மொழியிலும். சில நிமிடங்கள் தான் இந்தப் பார்வை பரிமாற்றம். சட்டென்று சுதாரித்தவள், தன்னுடைய விழியைப் பிரித்துக்கொள்ள, அவனும் சுயத்திற்கு வந்திருந்தான்.

 

சட்டென்று ஏதோ தோன்ற, அவன் உள்ளுணர்வு தங்கள் இருவரை தாண்டியதொரு மூன்றாம் ஆள் அங்கே இருப்பதைப் போன்று தோன்ற, வேகமாகச் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினான். அவன் எண்ணம் நிஜமே.

 

இரு விழிகள் மறைவாய் நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்ததென்னவோ உண்மைதான்.

 

Advertisement