Advertisement

தென்றலோ புயலோ – 3

 

“நீங்க முதலில் இங்கிருந்து கிளம்புங்க” என்ற பதட்டமான குரல் அவளிடம்.

 

“எதற்காக இத்தனை பதற்றம்?”

 

“நீங்க தெரிஞ்சுதான் பேசுறீங்களா? தீபம் அணைஞ்சிடுச்சு. நீங்க ஆரத்தி எடுக்குற சமயத்தில. இது நிச்சயம் அபசகுனம். நம்ம இரண்டு பேருக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாது போனாலும் முதல் சந்திப்பில் இப்படி ஆனது நெருடலான விஷயம் தான். நீங்க இருட்டுறதுக்குள்ள கவனமா உங்க வீட்டுக்கு போங்க” என விறுவிறுவென்று கூறியவள் அத்தோடு நில்லாமல் ஆரத்தி தட்டை கோவிலில் வைத்துவிட்டுக் கண் இமைக்கும் நேரத்தில் அடர்காட்டுக்குள் புகுந்து மறைந்தும் விட்டாள்.

 

அவள் சென்ற திசையைப் பார்த்துக்கொண்டிருந்த கார்திக்கிற்கோ ஏதும் விளங்கவில்லை.

 

“என்ன பொண்ணு இவ, மலை காட்டுக்குள்ள காற்றுக்கா பஞ்சம்? தீபம் இந்தக் காற்றிலே கொளுந்து விட்டு எறியிறது தான் அபூர்வம். அணைந்து போறது சாதாரணம் தானே. இதற்கெதற்குப் பேய் பிசாசா கண்டது போல ஓடுறா?” என எண்ணத்தை ஓட்டியபடி தன் இருப்பிடத்திற்கு நடையை கட்டினான்…

 

சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கார்த்திக் அந்தப் பெண்ணைச் சந்தித்தான், தற்செயலாகவே.

 

“ஹாய், என்ன தெரியிதா? ஏன் அன்றைக்கு அப்படி ஓடின. உன்னோட பெயர் கூட இறுதிவரை சொல்லவே இல்லையே” என எங்கோ சென்றுவிட்டு வந்துகொண்டிருப்பவளை இடைமறித்தான்.

 

“உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும்?” என வீம்பாக அப்பெண் மறுகேள்வி எழுப்பினாள்.

 

“பெயரை எதற்குக் கேட்பாங்க. உன்னைப் பெயர் சொல்லி கூப்பிடத்தான்”

 

“அறிமுகம் இல்லாதவங்க என் பெயரை சொல்லி கூப்பிடவேண்டாம். புரியுதா?”

 

“நான் எப்போமா உன்னோட பெயரை கேட்டேன்? நீயா ஏதேதோ உளறுறீயே” என விஷம சிரிப்புடன் கார்த்திக் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு வினவ, “என்னது எப்போ கேட்டிங்களா? இப்போ கேட்டீங்க, இதுக்கு முன்னாடியும் காட்டுக்கோவிலில் கேட்டிங்க? இல்லையென்று பொய் சொல்றீங்களா ?”

 

“பார்த்தாயா? அப்படினா என்ன உனக்கு முன்பே பரிக்ஷயம் இருக்கு. அப்படித்தானே ? பிரகதெற்கு அறிமுகம் இல்லாதவங்ககிட்ட பெயர் சொல்லமாட்டேன்னு சொல்லுற” எனத் தன்னுடைய ஆள்காட்டி விரலால் வலபிருவத்தை நெருடியபடி வினவ, ஏதும் சொல்லாமல் நின்றவள், பிறகு தயங்கியபடி, “இதோ பாருங்க சார், எனக்குச் சொல்ல தோணல. அதோட அந்தத் தீபம் அணைஞ்ச பிறகு ஏதோ சென்டிமெண்டா எனக்குச் சரியாப்படல. அதுனால விட்டுவிடுங்களேன்” என இறங்கிய குரல் கூற கார்திகேயனிற்குத் தற்போது தான் அவளைப் பற்றி அறியும் ஆசை வேர்விட்டது.

 

முதல் முதலில் அவளைக் காட்டுக்கோவிலில் சந்தித்தபோது ஓர் அறிமுகத்திற்காகவே பெயரை விசாரித்தான். அன்றே அவள் கூறியிருந்தால் ஓர் ஸ்நேகித புன்முறுவலோடு அதோடு அவளை மறந்தே கூடச் சென்றிருப்பான். ஆனால் அவளின் விசித்திர செயல் அவளின் முகத்தை மனதில் பதியவைத்தது. இருந்தும் அவளைத் தேடவோ பின்தொடரவோ எண்ணம் கொள்ளவில்லை. அவனுடைய பணிக்கு அது ஒத்தும் வராது. மீண்டும் சுற்றலா பயணியைப் போல ரகசிய கண்காணிப்புக்கு வருகின்ற சமயத்தில் தான் அவர்களின் இரண்டாம் சந்திப்பு நிகழ்ந்தது.

 

அவள் தன்னை ஒதுக்கியும் ஒளித்தும் கொள்ள முற்பட, அவளை அறியவும் வெளிக்கொணரவும் கார்த்திக்கின் நெஞ்சம் எண்ணம் கொண்டது. அவள் இவனிடமிருந்து ஓட நினைத்ததனால் இவனுள் அவளைப் பிடிக்கும் எண்ணம் துளிர்விட்டது.

 

“என்ன மேடம் நீங்க? பார்த்தால் படிச்ச பொண்ணு போல இருக்கீங்க. ஆனா சாதாரணமான விஷயத்திற்குப் போய் இவ்ளோ ஹைப் கொடுக்குறீங்களே. இந்த மலை காத்துல தீபம் அணையிறது இயற்கை” என அலட்சியமாகத் தோள் குலுக்கியபடி கார்த்திகேயன் கூற, அப்பெண் சட்டென்று ஆவேசமானவள் போல், “இல்லை! இஃது இயற்கையும் இல்லை சாதாரணமும் இல்லை” எனக் கூறியபடி கண் கலங்க நின்றாள்.

 

மேலும் அவளே தொடர்ந்து, “இது போல முன்பொருமுறை தீபம் அணைஞ்சிருக்கு. அந்த நேரம் நான் வாழ்க்கையில மிகப் பெரிய இழப்பை சந்திச்சிருக்கேன். என்னோட உறவை நிரந்தரமா இழந்துட்டேன். நீங்க யாருனு எனக்கு அறிமுகம் இல்லனா கூட, அன்னைக்கு நடந்த விஷயம் மறுபடியும் நடந்திட கூடாதுனு தான் நான் சொல்றேன். புரிஞ்சிக்கோங்க. இஃது அபசகுனம் தான்”

 

“நான் ஒன்னு சொல்லவா? நிதானமா இருங்க. தீபம் அணையிறது அபசகுனம் இல்ல. அற்புத சகுனம். நம்ம பார்க்கிற பார்வையில தான் எல்லாமே இருக்கு.

 

நீங்க சொல்றது போலவே இருந்த ஒன்றை நீங்க இழந்திருக்கீங்கனு வச்சுக்குவோம். நமக்குள்ளேதான் ஏதுவும் இல்லையே. அப்போ தீபம் அணையிறதுனால என்ன நடந்திடும்? வேணும்னா, நமக்குள்ள இருக்க அறிமுகமற்றவர்கள் அப்படிங்கிற உறவு அழிந்து, அறிமுகமானவர்கள் அப்படியிங்கற புது உறவு துளிர்க்கலாம்.

 

ஆக, என்ன பொறுத்தவரை தீபம் அணைஞ்சது நல்ல சகுனம்ங்க. அதுனாலதான் உங்க அறிமுகம் எனக்குக் கிடைச்சிருக்கு. போங்க இன்னைக்கு உங்களுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும்” எனக் கூறியபடி கார்த்திக் ஒரு மென் சிரிப்புடன் அவளைக் கடந்து செல்ல, வினோதமான உணர்வுக்குள் அப்பெண் சிக்கிக்கொண்டாள். இரொண்டொரு நாட்களாக அலைபாய்ந்துக்கொண்டிருந்த அவளது இருதயத்தின் ஆட்டத்தைத் தளையிட்டு நிறுத்தி ஆறுதலை அளித்தன கார்த்திக்கின் வார்த்தைகள். செல்கின்றவனைப் பார்த்துக்கொண்டு நின்றவள், சட்டென்று நினைவுவந்தவளாக ஓர் முடிவெடுத்தாள். அது அவனுடைய கேள்விக்கான பதிலை அளிப்பது.

 

சிலதூரம் சென்றிருந்தவனை அழைத்து, “ஹெலோ, என் பெயர் சவீதா” எனக் கூறிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

 

“சவீதா” கார்த்திக்கின் உதடுகள் அவளுடைய பெயரை மென்மையாக முதல் முறையாக உச்சரித்தன.

 

அந்த அழகான நினைவுலகில் வாழ்ந்துக்கொண்டிருந்தவனைச் சட்டென்று வால்பாறை முல்லை வனத்திற்குள் இழுத்து வந்தன பிரகாஷின் வார்த்தைகள். “சக்தி, சீக்கிரம் வா. சக்தி எங்க இருக்க ?”

 

பூஜை அறையில் அனைத்தும் தயார் நிலையிலிருக்க, பிரகாஷ் சக்தியை அழைத்துக்கொண்டிருந்தான். தன்னுடைய கனமான வயிற்றைப் பிடித்தபடி சக்தி சமையலறையிலிருந்து வந்தவள், “கூப்டீங்களா?” என உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட குரலில் வினவினாள். அவ்வாறு வினவிய போதும் சற்று தூரத்தே நின்றுகொண்டிருந்த கார்த்திக்கின் மீதே பார்வை பதிந்திருந்தது.

 

“எனச் சக்தி? புதுசா கேக்குற. உனக்கு என்னாச்சு. நீ தானே பூஜை முடிச்சிட்டுதான் சாப்பிடணும்னு சொல்லிருக்க. ஒரு நாளோட ஆரம்பம் பூஜையில் இருந்து தான் ஆரம்பிக்கணும் சொன்னது நீ தானே?. அதோட கொஞ்சம் முன்னாடி நீ தானே முருகன் பாட்டு பாடின. ஆனா பாடி முடுச்சிட்டு ஆரத்தி காட்டாமலே போயிட்ட ” என ஆச்சர்யமும் குழப்பமும் நிறைந்த குரலில் பிரகாஷ் கேள்வி எழுப்ப, “இல்லை, எனக்கு அது நினைவு இருக்கு. நானே அதுக்காகத் தான் வந்தேன். அடுப்புல பால் இருந்தது. அதான் போனேன்” எனச் சமாதானமாகக் கூறினாள்.

 

ஆனால் அவள் அன்று பூஜையை மட்டுமல்ல தன்னையே மறந்துவிட்டாளென்பது தான் மெய். தன் சுயத்தை மறக்கடிக்கும் சக்தி கொண்டவனைத் தான் அந்நொடி சக்தியும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் பார்வை போகின்ற திக்கை கவனித்த பிரகாஷ், கார்திகேயனையும் விக்ரமையும் அழைக்க, அவ்விருவரும் ஆரத்தியில் கலந்துகொள்ள வந்தனர்.

 

பூஜையறையில் நிரம்பியிருந்த தெய்வங்களுக்குத் தீபாராதனை செய்தவள், ஆரத்தி தட்டுடன் ப்ரகாஷிடமும் விக்கிரமிடமும் நிற்க, அவர்கள் தொட்டு ஒற்றிக்கொள்ள, அடுத்தது கார்த்திகேயனின் முறையாகிற்று.

 

அவனுடைய பழுப்பு நிற கண்களைச் சந்திக்கத் துணிவில்லாதவள் முகம் ஏறிடாமல் கார்த்திக்கிடம் தீபத்தட்டை காண்பிக்க, கார்த்திகேயனின் கைகள் நீண்ட கணம், தீபம் அணைந்திருந்தது. அன்று நடந்த அதே சம்பவம் இன்றும். இதை எதிர்பாராத சக்தி, தன்னையும் மீறிய செயலாய் கார்த்திக்கின் விழியோடு தன் விழியை உரையாடவிட, அவனின் கண்களில் என்ன கண்டாளோ, சக்தியின் பார்வை மங்களாகிற்று. நீர் திரை முற்றிலுமாக அவளுடைய பார்வையைத் தடுத்திருக்க, கார்த்திக்கின் பழுப்பு நிற கண்களைக் காணுவதற்காக இமைத்தட்டினாள். கண்ணீர் முத்துக்கள் அவள் கன்னத்தில் உருண்டோடி நிலம் சேர்ந்தன.

 

இதைப் பார்த்த கார்த்திக் ஏதோ சொல்லவதற்கு முனைய பிரகாஷ் இடை புகுந்தான். “சக்தி என்ன இது ? இப்ப எதுக்குக் கண்கலங்குற?”

 

“அஃது, அதுவந்து, ஆரத்தி அணையிறது அபசகுனம்” என்ற வார்த்தைகள் மெல்ல மெள்ள அவளது உதடித்திலிருந்து வெளிவந்தன.

 

“தீபம் அணையிறது அபசகுனம் இல்ல. அற்புத சகுனம். நம்ம பார்க்கிற பார்வையில தான் எல்லாமே இருக்கு. என்ன பொறுத்தவரை தீபம் அணைஞ்சது நல்ல சகுனம் தான்” என்ற வார்த்தைகள் கார்த்திக்கின் வாய்மொழியாக வர, அவனின் வார்த்தைகளைக் கேட்டவள் சட்டென்று ஆரத்தி தட்டை நழுவவிட்டாள்.

 

சக்தியின் காதில் மீண்டும் மீண்டும் கார்த்திக்கின் வார்த்தைகளே ஒலித்தன. ப்ரகாஷிற்கும் விக்ரமிற்கு நிகழ்வது புரியாது போனாலும், தீபம் அணைந்தது தற்செயலென்று மட்டும் புரிந்தது. ஆனால் அதன் பிறகும் சக்தி எதற்காக இத்தனை பதற்றத்துடன் தட்டை நழுவவிட்டாள் என்று மட்டும் புரியவே இல்லை. இருவரும் தம் தம் மனதிற்குள் மட்டும் இக்கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்க, கார்திகேயனோ வெகுநிதானமாய் விழுந்த தட்டை எடுத்து பூஜை அறையில் வைத்துவிட்டு அவளைக் கடந்து சென்றான்.

 

தன்னை மெள்ள சமன் செய்து கொண்டவள், உணவு மேஜை நோக்கி செல்ல, மூவரும் இவளுக்காகவே காத்திருந்தனர் போலும். அஃதாவது அது பிரகாஷின் வேலை என்பதைச் சக்தி பார்த்ததும் புரிந்துகொண்டாள். இவள் கருவுற்றிருக்கிறாள் என்று அறிந்த நாள் முதலாய், சக்தி உண்ணாது பிரகாஷ் உண்ணமாட்டான். பிரகாஷ் உண்ணாது, விக்ரமும் கார்த்திகேயனும் மேஜை நாகரிகம் கருதி காத்திருக்கின்றனர் எனப் புரிந்துகொண்டவள், அவர்களுக்கும் பாரிமாறிவிட்டு தானும் அமர்ந்தாள்.

 

என்ன முயன்றும் சக்தியால் ஒரு கவளத்தைக் கூட அன்று உண்ணமுடியாது போவதற்குக் காரணமானவன் மட்டும் நன்றாக உணவை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தான். கார்த்திக் மறந்தும் இவள் புறம் திரும்பவில்லை, ஆனால் சக்தியினால் அவன் புறம் தவிர வேறு சுற்றமே பதியவில்லை. அவன் எழுந்தே சென்றுவிட்ட பிறகும், அவன் அமர்ந்திருந்த நாற்காலியில் பார்வையைப் பதித்தபடி உணவில் அவளுடைய விரல்கள் கோலமிட்டன.

 

கார்த்திக்குடன் விக்ரமும் சென்றுவிட, சக்தியிடம் மெள்ள பிரகாஷ் பேச்சை தொடங்கினான்.

 

“என்ன ஆச்சு சக்தி? என் தம்பி வந்ததிருந்து நீ சரியில்ல. எனக்குப் புரியுது, அன்னைக்கு நடந்த சம்பவம் உண்ண ரொம்பப் பலவீனம் ஆக்கிடுச்சு. ஆனா அதுக்காக, நீ அதையே யோசித்து யோசித்துப் பார்க்கிற எல்லாரிடமும் இருந்து நீ ஒதுங்கிக்கிற. அதற்குக் காரணம் உன்னோட பயம். அந்தப் பயத்தை முதலில் தூக்கிப்போடு. அஃது உன் குழந்தைக்கு நல்லது இல்ல. நீ இந்த மாசம் செக் அப் போனியா ?” என அவளுக்குச் சமாதானம் கூறியபடி ஆறுதலாக வினவ, இல்லையென்பதாய் தலை அசைத்தாள்.

 

“ஹ்ம்ம் தெரியும். அதுனாலதான் உன்னோட தோழியை வர சொல்லியிருக்கேன். இப்ப அந்தப் பொண்ணு வர நேரம் தான். கொஞ்சமாவது சாப்பிட்டு நீ போய்ட்டுவந்திடு” எனப் பிரகாஷ் கூறிக்கொண்டிருக்கும்போதே வந்து சேர்ந்தாள், பூர்ணிமா.

 

முல்லைவனத்திற்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவள். அவளும் செல்வந்தரின் மகளே. இன்னும் சொல்லவேண்டுமென்றால், முல்லைவனத்திற்கு அருகிலிருக்கும்  அனைத்து வீடுகளும் பிரம்மாண்டத்தின் மறுபெயராய் வசதிபடைத்தவர்கள் வாழும் பகுதி.

 

பூரணி மனோதத்துவம் மேற்படிப்பிற்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவள். பார்ப்பதற்குத் துடுக்காகவும் அதே நேரம் அவளுடைய படிப்பிற்கு ஏத்தாற்போன்று மிகவும் மனபக்குவத்துடனும் சிந்திக்கக் கூடியவள். சமீபகாலமாகத்தான் சக்தியை அவளுக்குப் பரிக்ஷயம். இருப்பினும் சக்தியுடனான நட்பு அவளுக்கு முக்கியமான ஒன்றே. அவளைத் தான் சக்தியுடன் அனுப்புவதற்காகப் பிரகாஷ் வரவழைத்திருந்தான்.

 

“ஹாய் சக்தி” என்று உள்நுழையும்போதே ஆர்பரித்துக்கொண்டே வந்தவள், நேராக சக்தியிடம் சென்று, “என்ன நீ இவ்ளோ லேட்டா சாப்பிடற? எத்தனை முறை சொல்லியிருக்கேன். சரி ஒழுங்கா முழுவதையும் சாப்பிடு. பிறகு நான் உன்ன கூட்டிட்டு போறேன்” எனக் கூற, சக்தியோ சுத்தமாகச் சாப்பிடும் மன நிலையில் இல்லாதவளாய், “இல்லை பூரணி. என்னால சாப்பிடமுடியல. நம்ம கிளம்பலாம்” என மறுத்துக்கூறியும், அதைக் காதில்போட்டுக்கொள்ளாமல் “சாப்பிடற” என்று ஒருவிரல் நீட்டி கண்டிப்பு காட்ட, சலிப்புடன் சக்தி உண்ண தொடங்கினாள்.

 

“ஒகே நீங்க பார்த்துக்கோங்க. நான் எஸ்டேட் வர போய்விட்டுவரேன்” எனக் கூறியபடி பிரகாஷ் கிளம்ப, அங்கே ஆஜரானான் விக்ரம்.

 

சக்தியிடம் பேசவேண்டிய ஆர்வத்தில் வந்தவன் அங்கே புதிதாய் பூத்திருந்தவளை கண்டு விழிவிரித்தபடி அவர்களை நெருங்க, முடிச்சிட்ட பிருவங்களுடன் இருவரும் அவனை ஏறிட்டனர்.

 

“ஹாய் சவீதா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். ஆனா இவுங்க முன்னாடி பேசலாமா தெரியல. சோ நான் அப்புறம் வரேன்” எனத் தன்னுடைய வருகைக்கு விளக்கத்தைக் கூறி விலகி போக எண்ண, “இவள் என்னோட பிரண்ட். சோ நீங்க எதுவானாலும் சொல்லுங்க. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நான் சவீதா இல்ல சக்தி.

 

வந்த முதல் நாளே, உங்களோட நண்பர் கூட என்னைச் சவிதானு கூப்பிட்டதா நியாபகம். ஆனா என்னோட பெயர் அது இல்ல. சக்தி. இது தான் என்னோட உண்மையான பெயர். இதை உங்ககிட்டையும் சொல்லிக்கிறேன், அவர்கிட்டயும் சொல்லிடுங்கனு சொல்றேன். சரியா ?” எனப் படப் படவெனப் புரிய, விக்ரமோ அவளின் முகம் பாவம் கொண்டு விரல்களை ஆட்டி ஆட்டி பேசுவதிலும் மிகவும் காரசாரமான வார்த்தைகளைக் கூறிக்கொண்டிருக்கிறாள் என்று புரிய, வார்த்தைகள் மட்டும் சிலது அவன் செவி சேர்ந்தும் சிலது காற்றில் கரைந்தும் முழுவதுமாக உள்வாங்க முடியாமல் முழித்தான்.

 

“சவீதா ஏன் இவ்ளோ ஸ்பீட். கொஞ்சம் பொறுமையா பேசுங்க. நான் சாதாரணமாகத் தானே பேசுனேன். நீங்க எதற்கு இப்போ முக்கியமான விஷம், வயர்னு ஏதேதோ சொல்றீங்க. இதுல நான் ஜி கிட்ட என்னைச் சொல்லணும்னு சொல்றீங்க ?

 

அவரைத்தான் உங்களுக்கு நல்லா தெரியுமே ? பிறகதெற்கு நான் அவர்கிட்ட சொல்லணும், நீங்களே சொல்லிடவேண்டியது தானே” என்று குழப்பத்தோடு கூற, சக்தி இவனின் கூற்றுப் புரியாமல் விழித்தான்.

 

இவன் என்னைச் சொல்றான் என்பது போன்ற பாவனையே அவளிடம். ஆனால் பூரணி கண்டுகொண்டாள், விஷயம் என்பதை விஷமென்றும் பெயர் வயரென்றும் அவன் புரிந்துகொண்டுள்ளான் என்பதை அறிந்து உள்ளுக்குள் மெல்லியதாகச் சிரிப்பலை தோன்றினாலும், அவனுடைய குறையை எண்ணி அதை வெளிக்காட்டாது, “சக்தி, கொஞ்சம் பொறுமையா இரேன். அவர் என்ன சொல்லவராருனு பொறுமையா கேளேன்” எனக் கூற, “இல்ல பூரணி. இனியொரு முறை நான் ஏமாற தயாரா இல்ல. இல்லவே இல்ல, எத்தனை பொய் எவ்ளோ பெரிய ஆபத்து, எத்தனை அவமானம். இதற்கு மேலும் நான் வரவங்க போறவங்க சொல்றத நம்பணுமா ?” என ஆங்காரமாக வினவ, “சரி சரி கூல்டவுன், நீ டென்ஷன் ஆகாத, அஃது உன் பேபி க்கு நல்லதில்லை” எனக் கூறவே, அது சக்தியிடம் சற்றே பலனளிக்க, கோவத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தவள், நிதானித்து, “இதோ பாருங்க, எனக்கு உங்களையும் தெரியாது, குறிப்பா உங்களுடைய நண்பரையும் தெரியாது. நீங்க சாரோட கெஸ்ட். அவ்ளோதான் எனக்குத் தெரியும். என்கிட்ட பேச முயற்சிக்க வேணாம். மறுபடியும் சொல்றேன் நான் சக்தி, உங்களோட சவிதா இல்ல” எனக் கூறி விடுவிடுவென்று உள் செல்ல, இம்முறை விக்ரம் எதுவும் பேசாது கார்த்திகேயனை நோக்கி சென்றான்.

 

உள்ளே சென்றவள், மருத்துவக் குறிப்புகளோடு பூரணியுடன் கிளம்பிவிட, கார்த்திக் முதல்தளத்தின் பலகணி வழி அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

முல்லை வனத்தின் பெரிய கேட் திறக்கப்பட்டு அவர்கள் செல்லும் வண்டி முழுவதுமாக மறையும்வரை அதில் பார்வையைப் பதித்திருந்தவனை, கார்த்திகேயன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்க, ஜி என்ற விக்ரமனின் அழைப்பு அவனை விக்ரமின் புறமாகத் திருப்பியது.

 

“சொல்லு விக்ரம்”

 

“ஜி, இப்போ உங்களோட அண்ணனும் இல்ல, அந்தச் சவீதா, இல்லை இல்லை அந்தச் சக்தி பொண்ணும் வீட்ல இல்லை. அதுனால நம்ம கொஞ்சம் பிரீயா பேசலாமா ?”

 

“சொல்லு விக்ரம், என்ன விஷயம்”

 

“அட ஜி, அந்தச் சக்தி பொண்ணு கூட உங்களைப் போலவே விஷம் னு தான் சொல்லுச்சு”

 

அவன் சொல்லவருவதைப் புரிந்துகொண்ட கார்த்திக், “அஃது விஷமில்ல, விஷயம் அதாவது செய்தின்னு சொல்லிருப்பா” என விளக்கமளிக்க,

 

“ஓ அதுனாலதான் அந்தப் பொண்ணு ரொம்பக் கோவப்பட்டுச்சோ” எனச் சற்றுச் சத்தமாகச் சிந்திக்க,

 

“என்ன நடந்தது?” என்ற கார்த்திக்கின் கேள்வியில், முழுவதுமாக அவனுக்குப் புரிந்ததைக் கூற, என்ன நடந்திருக்கும் என இவனால் யூகிக்க முடிந்தது.

 

“ஆனா ஜி இந்தப் பொண்ணு இவ்ளோ கோவப்படும்னு நான் நினைக்கவே இல்ல. அம்மாடியோ. ஆனா கோவத்துக்கான காரணம்தான் புரியல ஜி”

 

“உண்மை இருக்கிறவங்ககிட்டையும் கோவமிருக்கும், உண்மைய மறைகிறவங்ககிட்டையும் கோவமிருக்கும்” என எதையோ மனதில் வைத்துக் கார்த்திக் கூற,

 

“எதுவானாலும் ஜி, ஆனா அந்தப் பொண்ணுக்கு அவ பேபி மேல ரொம்பக் கேர். அந்தப் பொண்ணோட பிரண்ட், பேபிக்காக டென்சன் ஆகாதனு சொன்ன உடனே, அவ்ளோ நேரம் கோவப்பட்டவங்க சட்டுனு எல்லா எமோஷன்ஸ் கண்ட்ரோல் பண்ணிட்டாங்க. ரியல்லி ஷி வில் பீ எ குட் மதர்”

 

“யாருக்கு தெரியும் விக்ரம். சவீதா சக்தினு வேஷம் கட்டுறத போல இதுவும் வேசமா இருக்கலாம். நிஜமான அக்கறை அந்த குழந்தை மேல இருக்க வாய்ப்பே இல்ல. அப்படியிருந்திருந்தா அந்த குழந்தையோட அப்பகூடத்தானே இவ இருந்திருக்கணும்”

 

“ஜி அந்த அப்பா மேல எதாவது பால்ட் இருக்குமோ என்னவோ”

 

“ஆமாம் சரிதான் நீ சொல்றதும். பால்ட் அந்தக் குழந்தையோட அப்பமேல தான். அத சரி பண்ண இப்போ ஒரு வாய்ப்பு அமைஞ்சிருக்கு. அந்தக் குழந்தை பிறக்குறவரைக்கும் தான் அந்தச் சவீதாவோட சக்தி நாடகம் அரங்கேறும்.

 

நான் முடிவுபன்னிட்டேன், இந்த நாடகத்தோட கிளைமாக்ஸ் நாம வந்தவேளையை முடிகிறது மட்டுமில்ல, அந்தக் குழந்தையை அதோட அப்பகூடச் சேர்த்துவைக்கிறதுதான்” என வெளியே கூறியவன், தன் மனதிற்குள், “எனக்குக் குழந்தை வரப்போகுதுன்னே என்கிட்ட மறச்சு கண்காணாம வந்து ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்ட சவீ. உன்னுடைய பொய் வேஷத்திற்கான முடிவு என் குழந்தை என் கைக்கு வருகிற நாள்வரைக்கும் மட்டுமே” என மனதினுள் திடமான முடிவை திட்டமாய் எடுத்துக்கொண்டான்.

 

Advertisement