Advertisement

புயலோ தென்றலோ – 21

 

“இதென்ன புதுக் கதை? மாட்டிகிட்டதும் அடுத்த நாடகமா ?” எனக் கார்த்திக் சந்தேகப்பார்வையோடு வினவ, ஆனால் பிரகாஷோ வெகு நிதானமாகப் பதிலளித்தான்.

 

“இல்ல! நான் பொய் சொல்லல. இப்ப சொல்ல போறது மட்டும் தான் நிஜம். இத கூட நீ சிபிஐ னு சொல்லல. உன் வாழ்க்கையை நான் கெடுத்துட்டேனேன்னு குற்ற உணர்ச்சில தான் சொல்லுறேன். முன்னாடி பண்ணின தப்புக்கு பிராய்ட்சித்தம்னு கூட வச்சுக்கலாம். உன் பொண்டாட்டிய உன்ன விட்டுப் பிரிச்ச பாவத்துக்குத் தான் இத பண்ணுறேன்.

செத்து போனவளோட மானத்த காப்பாத்த உயிரோட இருக்கப் பொண்ண கஷ்டப்படுத்திட்டேன். அதுக்காக மட்டும் தான்” எனக் கூறியபடியே பிரகாஷ் நடந்ததை விவரிக்கத் தொடங்கினான். காட்சிகள் பிரகாஷின் பார்வையில் விரிய தொடங்கின.

 

வெண்பா….

 

பிரகாஷின் மனைவியின் பெயர். கோயம்புத்தூருக்கு சென்றவன் அவளை எங்கோ கண்டுவிட்டு, கல்யாணம் என்று ஒன்று செய்துகொண்டால் அது வெண்பாவை மட்டும் தான் என உறுதியாகக் கூறிவிட, பிரகாஷின் தாயும் வெண்பாவை விசாரிக்க, ஓரளவு வசதி படைத்த இடமாகவே இருக்கச் சந்தோஷமாகவே சம்மதம் தெரிவித்தார்.

 

மின்னல் வேகத்தில் பெண் வீட்டாரின் காதுக்குச் செய்தியை கொண்டு போக, இவர்களின் ஆஸ்தியும் அந்தஸ்தும் ஒரே வாரிசு என்ற தகுதியும் அவர்களை உடனே தலை ஆட்ட வைத்தது. ஆனால் அனைவரும் தவறியது வெண்பாவின் விஷயத்தில்.

 

பிரகாஷ் உட்பட அவளின் விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. அதிலும் வெண்பாவின் வீட்டில் கேட்கவே பிரியப்படவில்லை. காரணம் சில மாதங்களாக வெண்பாவின் போக்கு அவர்களுக்குப் பிடித்தமில்லை.

 

யாரோ ஒருவனோடு ஆங்காங்கே இவள் சுற்றி திரிய அது இவர்களின் காதுக்கும் எட்டியிருந்தது. அவனைப் பற்றி விசாரித்துப் பார்க்க, அவன் அருண் என்றும் பணபலமும் அரசியல் செல்வாக்கும் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தின் வாரிசென்றும், அவர்களது தொழில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் இருக்கிறதென்றும் அறிந்துகொண்டனர்.

 

அதோடு அவர்கள் அறிந்துகொண்டது, பெண்களின் விஷயத்தில் மிகவும் மோசமானவன் என்று. ஆகவே சிறிது நாட்களாகவே வெண்பாவிடம் இதைப் பற்றிப் பேச, ஆனால் அருணின் காதல் மொழி அவளைக் கண்திறவாமல் செய்துவிட, கண்ணிருந்தும் காதல் குரிடியாக வாழ்ந்துவந்தாள்.

 

பெற்றோர்களின் அறிவுரை வேப்பங்காயாய்ப் போனது. வேண்டுமென்றே சதி செய்து தங்களின் தெய்வீக காதலை பிரிப்பதாய் எண்ணியிருந்தாள்.

 

இவளின் போக்கை உணர்ந்தவர்கள், அவளிடம் தெரிவிக்காமலே திருமணத்திற்கான ஏற்பாடை செய்திருந்தனர். அதற்கு முக்கியக் காரணம் பிரகாஷ். அவன் தாய் பணத்தாசை பிடித்தவளாய் இருந்தாலும் மகனை ஒழுக்கத்துடன் வளர்ந்திருந்தாள். பிரகாஷிற்குப் பணத்தாசை இல்லை தான் எனினும் பெரிதாக எதிலும் தலையிட மாட்டான். வீட்டிற்குள்ளே ஒதுக்கம் காட்டுபவன். அப்படிதான் அன்று கார்த்திக்கின் கஷ்டத்தில் பங்கெடுக்காமல் ஒதுங்கி நின்றிருந்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு அதில் பேசவேண்டும் என்று தோன்றவே இல்லை.

 

இதில் பிரகாஷிற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ கூற எதுவுமில்லை. அது அவனின் இயல்பு. அவன் அப்படிதான்.

 

ஆதலால் கார்த்திகேயனை எந்த அளவு பாதித்திருக்கும் என்பதை உணராதவனாகவும் யூகிக்காதவனாகவும் இருந்தான். ஆனால் இன்றைய பிரகாஷ் அப்படி இல்லை. வெண்பாவின் மரணம் அவனுள் மாற்றத்தை தந்திருந்தது. தன் அன்னையின் நிலை அவனுக்குப் பொறுப்பை உணர்த்தியிருந்தது.

 

வெண்பாவின் மீது கட்டுப்பாடுகள் திணிக்கப்பட, அவள் கூட்டை உடைத்து வெளியே செல்ல முயல அப்போது தான் அவள் அதிர்ந்தாள். காரணம் அருண் எங்குத் தேடியும் கிடைக்க வில்லை. எத்தனை முயன்றும் அவனைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. போதாதென்று விசாரித்த இடமெல்லாம் அவனைப் பற்றிய தவறான கருத்துக்கள் வெளிவர, மெல்ல மெல்ல அவனைப் பற்றிய சிந்தனையிலிருந்து வெண்பா வெளியே வந்தாள்.

 

வீட்டில் நடக்கின்ற திருமண ஏற்பாடு தெரிந்து அதை ஏற்கவுமில்லை மறுக்கவுமில்லை. அதையே அவர்கள் சாதகமாகக் கொண்டு ஓர் நல்நாளில் ஊர் உறவு சூழ அழகான திருமண வைபோகத்தை இருவீட்டாரும் நடத்தி முடித்தார்கள்.

 

திருமனதினத்தன்று உறவுகள் சூழ, பிரகாஷின் அருகாமையில் வெண்பா அமர்ந்திருக்க, உறவு பெண்களின் கிண்டல் கேலியில் மனம் இலயிக்காமல் அமர்ந்திருந்தாள். அப்போது தான் நீண்ட நாட்களுக்கு பிறகு கைபேசி திரையில் ஒலித்த அருணின் பெயரை பார்த்தாள்.

***

நினைத்தவளோடு திருமணம் முடிந்துவிட்ட ஆனந்தத்தில் பிரகாஷின் மனம் நிரம்பியிருந்தது.

 

பிடித்தே திருமணம் செய்திருந்தாலும் எத்தனையோ முறை வெண்பாவிடம் பேசவேண்டும் எனக் கேட்க, அவளின் பெற்றோர் பிடிவாதமாக மறுத்திருந்தனர். ஆதலால் வெண்பாவிடம் பிரகாஷ் இதுவரை ஒருமுறை கூடப் பேசியிருக்கவில்லை.

 

தாலிகட்டும் போதும் பந்தியிலுமென அவன் அவ்வ போது மெல்ல பேசிக்கொண்டே தான் இருந்தான். ஆனால் வெண்பா குனிந்த தலை நிமிராமல் போக, அதை வெக்கமென்று எண்ணி அதற்கும் பூரிப்படைந்தான்.

 

தன்னைக் கண்டு ஒரு பெண் நாணம் கொள்கிறாள் என்பதை நினைக்க நினைக்க அவனுள் ஆண்மை மலர்ந்தது. தன்னையே தனக்குப் புதிதாகக் காண்பித்த வெண்பாவை அவனுக்கு இன்னமும் பிடித்தது. ஆயிரம் கனவுகளோடும் ஆசைகளோடும் அன்றைய இரவுக்காகக் காத்திருந்தான்.

 

இருள் இத்தனை வண்ணமயமாக இருக்குமென்றே அவனுக்கு அன்று தான் தெரிந்தது. அவளிடம் நிறைய நிறையப் பேச வேண்டும் என எண்ணிக்கொண்டே உள்ளே போக இவள் அவனுக்கு முன்னதாகவே அறையிலிருந்தாள். ஆனால் இவன் எதிர்பார்த்தது போல அல்லாமல், அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

 

அதைப் பார்த்ததும் இவனுக்கு முதலில் ஏமாற்றமே. பிறகு மெல்ல தன்னைச் சமன்செய்துகொண்டு, அயர்வாக இருப்பாள் புது இடம் எனத் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு தூங்குபவளை ரசித்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.

 

விடியலென்னவோ அழகாகத் தான் மறுநாள் விடிந்தது. பிரகாஷிற்கும் அப்படிதான் தோன்றியது. காலையில் எழுந்தவள் தட்டு தடுமாறி, “எனக்குத் திகிடுதிப்புனு கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க. இப்போ கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில நான் இல்ல. அதுனால எனக்கு டைம் வேணும். ஒருவேளை உங்களால காத்திருக்க முடியாதுனா…” என இழுக்க, அவன் அதற்கு முன்னதாகவே, “கண்டிப்பா! எனக்கும் அப்படிதான் தோணிச்சு. உன்கூட நல்லா பழகி ரொம்ப ரொம்பக் காதலிச்சு அதுக்கு அப்புற சேர்ந்து வாழணும்னு தோணிச்சு வெண்பா..நீயும் அப்படிதான் யோசிச்சிருக்க. நா எவ்ளோ நாள் வேணுனாலும் காத்திருப்பே” எனக் கூற, வெண்பா எதுவும் கூறாமல் அறையை விட்டு வெளியேறினாள்.

 

இப்படியே நாட்கள் மாதங்களாக, வெண்பா அருணியிடம் வார்த்தைகளைப் பேச எண்ணி கொண்டிருந்தாள். ஆனால் பிரகாஷ் அவள் பேசும் ஓரிரு வார்த்தைக்கே தவமிருந்தான். உருகி உருகி காதலிப்பார்கள் என்று சொல்வார்களே. அப்படித் தான் பிரகாஷும் காதலித்தான். ஆனால் அவனின் அம்மாவிற்கு வெண்பாவின் இந்தச் செயலில் பிடித்தமில்லை. ஏதேனும் அவர் சொல்ல வாயெடுத்தால் பிரகாஷ் முந்திக்கொண்டு, “அம்மா, அவ ரொம்பச் சைலன்ட் டைப். நீ எதுவும் சொல்லிடாத” என ஆரம்பித்து, “அவ அப்படியிருக்கனால தான் இதுவரைக்கும் மாமிய மருமகளுக்குள்ள சண்டை வரல. இல்லனா இந்நேர என்ன காயவிட்டிருப்பீங்க” எனக் கிண்டாலாகச் சொல்லி செல்ல, அவனின் அன்னையும் அமைதி ஆகிவிடுவார்.

 

ஒரு நாள் அவன் கொடைக்கானல் செல்லவேண்டும் வேலை விஷயமாக எனக் கூற, வெண்பா வேகமாகத் தலை அசைத்து வழி அனுப்பினாள். அவனும் கொடைக்கானல் சென்றுவிட்டு, கிளம்பும் தருவாயில் உடன் வந்தவர் அவரின் வேலை பொருட்டுக் கூர்க் எஸ்டேட்டிற்கு இவனைக் கட்டாயப்படுத்தி அழைக்க, இங்கும் நாலு நாள் என்றெண்ணி வந்த வேலை இரண்டே நாளில் நிறைவு பெற்றதால், அவருடனே கூர்க் செல்ல தயாரானான்.

 

கூர்க் சென்றவன் வெண்பாவிற்கும் தன் அன்னைக்கும் அழைக்க அழைப்பு எடுக்கப்படாமலே போக, என்ன ஏதென்று தெரியாமல் குழப்பத்திலிருந்தான். அவனிடம் உதவிகேட்டவருக்கு உதவிவிட்டு இனி கிளம்பவேண்டியது தான் என அவன் எண்ண, வருகின்ற வழியில் வெண்பா செல்வதைப் பார்த்துவிட்டான்.

 

“வெண்பா போலவே இருக்கா…வெண்பா தானா?” எனத் தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டவன், “வெண்பா..” என அழைக்க அது அவள் காதில் விழவில்லை…. அவள் விறுவிறுவென்று ஏதோ ஒரு பெரிய கதவிற்குள் நுழைய, அந்த வாட்சமேனும் ஏதோ பழக்கப்பட்டவளை போன்று உள்ளே அனுமதித்தான்.

 

உள்ளே போறதா வேண்டாமா எனச் சிந்தனையை ஓட்டியபடி அங்கேயே நிற்க, அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சவீதா தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு கையொப்பம் போட்டு செல்ல, இவனுக்கோ சந்தேகம்.

 

மிகவும் பழக்கப்பட்டது போல வெண்பாவின் சாயலை கொண்ட அப்பெண் சென்றது ஏதோ நெருடலாகப் பட, தன் மனைவியின் கைபேசிக்கு அழைத்தான். ஆனால் அது இம்முறை அணைத்துவைக்கப்பட்டிருந்தது.  பிறகு தன் நண்பனுக்கு அழைத்தவன் அவனுடைய செல்வாக்கை பயன்படுத்தி, தன் மனைவியின் கை பேசி இறுதியாக எப்போது எங்கே இயங்கியது என்ற தகவலை விசாரிக்க அடுத்தப் பத்து நிமிடங்களில் அது அவனுக்கு வந்து சேர்ந்தது.

 

அந்தப் பதில், “கடைசியா இவுங்க கர்நாடக நம்பற்கு பேசிருக்காங்க. அதுவும் கூர்க்ல இருந்து. டவர் அப்படித் தான் காமிச்சிருக்கு” எனக் கூற, மேற்கொண்டு எதையுமே சிந்திக்க அவசியமோ அவகாசமோ இன்றி வேகமாக அங்கே செல்ல, அவனின் நல்ல நேரமாக அந்த வாட்ச்மன் இல்லாது போனது இன்னமும் அவனுக்கு வசதியாகப் போனது.

 

இவன் ஒரு வழியாக அந்த இடத்தை அடைய, அதற்கு இணையாக மற்றொரு வழியில் சவீதா சென்றிருந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.

 

வெண்பா ஒருவனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, பிரகாஷ் செல்வதற்குள் அவளைச் சுவற்றோடு ஒட்டி கழுத்தை நெறிக்க முயல, வெண்பாவின் கைகள் மேஜையைத் துளாவி கையில் அகப்பட்ட கத்தியை எடுத்திருந்தது. அனைத்தையும் கண்ணாடி கதவின் வழியாகப் பார்த்திருந்தவன் கதவை திறக்கமுடியாமல் பிரகாஷ் போராடினான். பிறகு வேகமாகத் தோட்டத்தில் கிடந்த எதையோ எடுத்தான். அது என்னவென்றெல்லாம் அவன் உணரவில்லை. கைகளில் அகப்பட்டதை எடுத்து ஒரு கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள், வெண்பாவின் கையிலிருந்த கத்தியை பார்த்துவிட்ட அருண்,  ஆத்திரத்தில் அதைப் பிடிங்கி வெண்பாவின் வயிற்றில் இறக்கியிருந்தான். கத்தி குத்து விழவும் பிரகாஷ் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது. வெண்பா இரத்தவெள்ளத்திலும் இன்னமும் அருணின் கைப்பிடியிலேயே இருக்க, அருணை தான் வைத்திருந்த பொருள் கொண்டு வேகமாக மண்டையில் ஓங்கி அடித்திருந்தான். அடித்துவிட்டு அதைத் தூக்கி எறிந்துவிட்டு வெண்பாவை அருணின் கைகளிலிலிருந்து பிரித்தெடுக்க முயன்றான்.

 

பிரகாஷ் எறிந்த கட்டை, வெளியே சென்று விழ அங்கே வாச்மேனை காணாமல் வெண்பாவை காப்பற்ற வந்துகொண்டிருந்த சவீதாவை பதம் பார்க்க அவள் மயங்கி விழுந்தாள். இதைப் பிரகாஷ் அப்போது சுத்தமாகக் கவனிக்கவில்லை.

 

பிரகாஷின் எண்ணம் முழுக்க வெண்பா மட்டுமே.

 

அருணை விட்டு வெண்பாவை பிரிக்கவிருந்த கடைசி நொடி ஆவென்ற அலறலுடன் அருண் சாய்ந்திருந்தான். எண்ண நடந்தது என்று பிரகாஷ் பார்க்க, வெண்பாதான் தன் வயிற்றில் செறுகி இருந்த கத்தியை எடுத்து தன் பலம் முடிந்த மட்டும் கொண்டு அருணை குத்தியிருந்தாள்.

 

மண்டையில் அடிப்பட்டிருந்ததால் அதிக இரத்தம் வழிய அதோடு இப்போது கத்தி குத்தினாலும் இரத்தம் பெருகி வெகு விரைவாகவே அருண் மயக்கம் அடைய தொடங்கினான்.

 

அவனைப் பிரகாஷ் கவனிக்கும் நிலையில்லை. ஆனால் வெண்பா அவனை மட்டும் தான் கவனித்துக்கொண்டிருந்தால் அந்த நிலையிலும்.

 

அவள் இதழ்களில் திருப்தியான சிறு முறுவலொன்று அந்த வலியிலும் தோன்றியதோ தெரியவில்லை.

 

“வெண்பா…ஐயோ எவ்ளோ இரத்தம்? என்ன ஆச்சு ? நீ எப்படி இங்க வந்த ? மொத, மொத ஆஸ்பத்திரி போலா வா. கார், கார வெளிலயே விட்டுட்டே. இங்கயே இரு எடுத்திட்டு வரே. இது உன்னோட பர்ஸ் தானே. இங்க உன் பொருள் எதையும் விட்றாத.” என அவளை அந்த அறையை விட்டு அழைத்து வந்து உக்காரவைத்துவிட்டு காரை எடுத்து வந்தான்.

 

“பிரகாஷ், இங்க ஒரு பொண்ணு மயங்கி கிடைக்கா. இந்தச் சண்டையில தான் அடிபட்டிருக்கும் போல. நாம காப்பாத்தணும்” எனத் திக்கி திணறி கூற, முதலில் மனைவியை ஏற்றியவன், பின்பு அவளையும் காரில் ஏற்றிவிட்டு ஏற, “நா உங்கட்ட பேசணும் பிரகாஷ்” என அரை மயக்கத்தில் பேசிக்கொண்டிருந்தாள் வெண்பா.

 

“வெண்பா..” என்று ஏதோ சொல்ல வந்தவனைத் தடுத்தவள், “நா முழுசா பேசிடறேன். என்ன யாருமே எங்க வீட்ல பேச விட்டதே இல்ல. உங்கட்ட இதுவரைக்குப் பேசணுன்னு தோணல. இப்பயாச்சு பேசிக்கிறேனே” எனக் கூற, “சொல்லு வெண்பா, என்ன வேணுனாலு சொல்லு. கண்ண மட்டு மூடிடாத, சீக்கிர ஹாஸ்பிடல் போய்டலாம்” எனக் கூற, ஒரு விரக்தி சிரிப்போடு, “எனக்குக் கல்யாணத்துல விருப்பும் இல்ல உங்க மேல வெறுப்புமில்ல. விருப்பமும் இல்ல. அப்படிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” எனத் தொடங்கியவள், அடுத்து நடந்தவைகளை மெல்ல மெல்ல சொல்ல தொடங்கினாள்.

 

காட்சிகள் வெண்பாவின் பார்வையில் விரிய தொடங்கியது.

 

கல்யாணம் நடந்தன்று மீண்டும் அருணின் அழைப்பு வரவே, அவனை இனி மறுபடியும் அழைக்க வேண்டாமென்று கண்டிப்புடன் கூறத்தான் சென்றாள், ஆனால் அருணின் கண்ணீர் கலந்த காதல் வசனங்களும் தேன் தடவிய வார்த்தைகளும் வெண்பாவை குழப்பத்தில் ஆழ்த்தியது.

 

அவன் காணாமல் போகவில்லையென்றும், தன்னை அவளின் ஆட்கள் தான் யாரோ அடைத்து வைத்திருந்ததாகவும் கூறவே, இவள் மெல்ல மெல்ல கரைய தொடங்கினாள். இன்னமும் அவளையே நினைத்து நினைத்து உருகுவதாகவும், அவள் இல்லையென்றால் உயிர் வாழ்வே மாடென்றும் கூறவே அடியோடு சாய்ந்தாள்.

 

“இப்போ என்ன பண்றது அருண்? எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு ?”

 

“அதுனால என்ன வெண்பா? நா உன்ன உண்மையா காதலிக்கிறே. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னைக்கிருந்தாலும் நான் உன்ன என்னோட மனைவியா கூட்டிட்டு போய்டுவேன்”

 

“நிஜமாவா? ஆனா  பிரகாஷ் ?”

 

“அவன்தா நம்ம காதல் பிரியிறதுக்கே காரணம். நீ அவனுக்காக யோசிக்கிறியா ? ”

 

“இல்ல அப்படியில்ல. சரி எப்போ வர?”

 

“இப்போ முடியாது. உங்க வீட்ல எங்க அப்பாவரைக்குத் தகவலை கொண்டு போய்ட்டாங்க.அவரு என வெளிநாட்டுக்கு அனுப்பிவச்சிட்டாரு. நா வர கொஞ்ச மாசம் ஆகும். அதுனால அதுவரை நீ அங்கேயே இரு.

 

என்ன தேடி வந்தாலும் நா இங்க இருக்க மாட்டேன். நானே அப்பப்ப உனக்குப் போன் பண்றே. அதுவரைக்கு யாருக்கும் குறிப்பா உங்க வீட்டாளுங்களுக்குச் சந்தேக வராம நடந்துக்கோ”

 

“சரி, வச்சிடறேன். யாரோ வர போல இருக்கு”

 

“ஒரு நிமிஷம். என்ன ஏமாத்திட மாட்டில வெண்பா? என்னோட வெண்பாவாவே என்கிட்ட வந்திடுவல. ஒருவேல நீ வராட்டி அப்புற என் பொணத்த தான் பாப்ப”

 

“என்ன நம்பு அருண். நா எப்பயும் உன் வெண்பா மட்டும் தான்” எனக் கூறி சென்றவள் அடுத்து வந்த நாட்களில் பிரகாஷிடமிருந்து ஒதுங்கி சில வாரத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோ வருகின்ற அருணின் அழைப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினாள்.

 

அதே வேளை, பிரகாஷின் உண்மையான அன்பும் அவளைத் தேளாய்க் கொட்டியது. அவனை ஏமாற்றும் ஒவ்வொரு நொடியையும் அவஸ்தையாக உணர்ந்தாள். தன்னால் பிரகாஷின் வாழ்வு பாழாவதை ஏற்க முடியவிலை. அருணை தவிர வேறொருவனை மனதால் நினைக்கவும் முடியவில்லை.

 

எப்போதடா இங்கிருந்து செல்வதென்று நேரம் பார்க்க, அருணிடமிருந்து நற்செய்தி வந்தது. அவன் இந்தியா திரும்பி விட்டானாம். அடுத்து இரண்டு தினங்களில் தன்னைக் கூர்கில் உள்ள குறிப்பிட்ட ரிசார்ட்டில் வந்து சந்திக்கும் மாறு கூறியிருந்தான். அங்கேயே கல்யாணம் செய்துகொள்வோம் என்றும் கூறியிருக்க, கிளம்பிவிட முடிவு செய்தாள்.

 

அதற்குக் காரணம் பிரகாஷும் தான். பொய்யான நம்பிக்கையைக் கொடுத்து அவனை இன்னமும் ஏமாற்ற அவளால் இயலவில்லை. அதே சமயம் பிரகாஷ் கொடைக்கானல் போறதாகக் கூற, அதைப் பயன்படுத்தி வெளியேற முடிவெடுத்தாள்.

 

ஆனால் அப்படியே எதுவும் சொல்லாமல் சென்றால் நிச்சயம் தன்னைத் தேடுவார்களென்றும், அதே போலப் பிரகாஷும் தன் நினைவில் வேறு கல்யாணம் பண்ணாமல் வாழ்ந்திட கூடுமென்றும் நினைத்தவள், தன்னைத்தானே கீழாகக் காட்ட முடிவெடுத்தாள்.

 

தன்னுடைய மாமியாரிடமிருந்து தன் நாடகத்தை அரேங்கேற்ற முடிவெடுத்தாள். துணிகளைப் பெட்டியில் அடுக்கி வெளியே கிளம்பத் தயாராக இருந்தவளை எதிர்கொண்ட அவள் மாமியார், “எங்கம்மா போற ? உங்க அம்மா வீட்டுக்கா? பிரகாஷ்ட்ட சொல்லிட்டியா ?”

 

“ஏன்? உங்க புள்ளகிட்ட சொல்லிட்டு தான் பண்ணணுமோ ?”

 

“ஏன் இப்படிப் பேசுற வெண்பா?”

 

“வேற எப்படிப் பேசணும்?”

 

“அவ உனக்குத் தாலிகட்டின புருஷன். கொஞ்சமாச்சும் மரியாத தெரியுதா உனக்கு ?”

 

“மரியாதையா எதுக்குக் கொடுக்கணும்? என் பணத்துக்காகத் தானே கட்டினீங்க. அப்புற என்ன ? உங்களுக்கெல்லாம் இதுவே ஜாஸ்தி”

 

“இதோ பாரு வெண்பா…உன் பேச்சு நடவடிக்கனு எதுவும் சரியா இல்ல. இப்படியே போச்சுன்னா நீ இங்க வாழ முடியாது”

 

“பார்டா மிரட்டலா? ஐயோ எனக்கு ரொம்பப் பயமா இருக்கே! இதோ பாருங்க உங்க மிரட்டல் உருட்டலாம் எண்ட வேணா. புருஞ்சுதா ?

 

பணத்துக்காகக் கல்யாண செஞ்ச உங்களுக்கே இவ்ளோ இருந்தா, எனக்கு எவ்ளோ இருக்கு. பணம் ஒன்னு வருதுன்னா என்ன வேணுனாலும் செய்வீங்க போலயே. உங்க புள்ள என்ன உங்களுக்குப் பொருளா?

 

யாருக்கு வேணுனா கல்யாண பண்ணி வைப்பீங்க போல. அவனும் உடனே என்ன வேணுனாலும் பண்ணுவான் போலவே. யார்கூட வேணுனாலும் போவான் போலவே..ச்சி..இதெல்லாம் ஒரு பொலப்பா?” எனக் கூறி முகத்தைத் திருப்ப, அப்போதே வசுந்தராவிற்கு அதிகப்படியான அழுத்தம் ஏற்படத் தொடங்கியிருந்தது. ஆனால் அதை இவள் உணரவில்லை. மாமியாரின் முகம் பாராமல் அனைத்தையும் ஒப்பித்துக்கொண்டிருந்தாள்.

 

“இதோ பாருங்க! நா எங்க வேணுனாலு போவே… வருவே வராம கூட இருப்பே. ஒரு வேல நா வராட்டி உங்க பையனுக்கு எனக்குச் சேர வேண்டிய சொத்த பிச்சையா தர சொல்றே. அத வச்சுப் பொழச்சுக்கச் சொல்லுங்க” எனக் கூறிவிட்டு விறுவிறுவென்று நடந்தே விட்டாள்.

 

இதையெல்லாம் மனம் ஒப்பாமல் சொன்னாலும் கூட இப்போது வெண்பாவிற்கு மன நிறைவே. இதன் பிறகு நிச்சயம் எனக்காக இவர்கள் காத்திருக்கவோ தேடவோ தேவை இராது.

 

பிரகாஷிற்கு அவரை மட்டும் விரும்பும் பெண்ணாகப் பார்த்துவைப்பார்கள் என்று எண்ணியபடியே வெளியேறிவள், தன் குடும்பத்திற்கு அழைத்துத் தான் தன் காதலை தேடி செல்வதாகவும் தன்னைத் தேடவேண்டாமென்றும் கூறிவிட்டு கைபேசியை அணைத்துவிட்டாள்.

 

நேராக அருண் சொன்ன இடத்திற்கு வந்தவள், அவனைச் சந்திக்க மாலை வரை காத்திருக்க நேரிட்டது. மாலை அவனைச் சந்திக்கப் போகும் ஆவலைவிடப் பிரகாஷிற்கு அவள் இழைத்த துரோகமே மனதெங்கும்.

 

என்ன முயன்றும் அருணை சந்தித்த சந்தோசம் அவளிடம் இல்லை. அருண் என்னென்னெவோ பேசி அவளைச் சமாதானம் செய்ய இவளின் பேச்சு பிரகாஷை சுற்றியே வந்துகொண்டிருந்தது. தன்னுடைய சொந்த சுயநலத்திற்காக இப்படிச் செய்தது தவறோ என்று எண்ணியவள் இப்போது அது தவறே என நம்பத் தொடங்கியிருந்தாள்.

 

இது சரிவராது என்று எண்ணிய அருண் மயக்க மருந்து கலக்கப்பட்ட குளிர்பானத்தை அவளுக்குக் கொடுத்து, தன்னுடைய தேவையை நிறைவேற்றிக் கொள்ள, மறுநாள் காலையே அவளுக்கு அணைத்தும் புரிந்தது. புரிந்தவுடன் கத்தியவள் அழுதவள் ஆர்ப்பாட்டமும் செய்து பார்த்தாள். ஆனால் அதன் பயன் எதுவுமில்லை என்று அவள் வெகு விரைவில் புரிந்தும் கொண்டாள்.

 

இப்போது பிரகாஷின் கண்ணியதோடு அருணை ஒப்பிட்ட மனம் வேதனையில் கசங்கியது. அருணிடம் தன்னை எத்தனை சீக்கிரம் திருமணம் செய்ய முடியுமோ அத்தனை சீக்கிரம் செய்துகொள் என்று கூற, அவனோ முதலில் உனக்கு விவாகரத்து ஆகட்டும் என்று கூறினான்.

 

“விவாகரத்து ஆகாதவனு தெருஞ்சு தான நேத்து இந்த வேலைய பார்த்த?” என ஆக்ரோஷமாக வினவ, அவளை அணைத்துச் சமாதானம் செய்யும் பொழுதே அருணின் தோழி பெண் என்று ஒருத்தி வந்து நின்றாள். ஆனால் அவள் பேசியதிலிருந்து அருண் பெண்கள் விஷயத்தில் சரியில்லை என்று புரிந்துகொள்ளப் பெரிய அடியை மனதினில் உணர்ந்தாள்.

 

அந்த நொடி தன் பெற்றோர்கள் கூறியது எத்தனை உண்மை என்று அவளுக்குப் புரிந்தது. பிரகாஷின் காதலும் கண்ணியமும் உயர்ந்து நின்றது. மீண்டும் பழைய வாழ்விற்குத் திரும்பச் செல்ல மனம் விழைந்தது. ஆனால் அந்தப் பாவி செய்த காரியத்தால் ஒரு வழி பாதையில் மாட்டிக்கொண்டாள். வேறு வழியே இல்லாமல், அவனின் சமாதானத்தை ஏற்றாள். ஆனால் திருமணம் என்று மீண்டும் மீண்டும் வழியுறுத்திவிட்டு ரிசார்ட்டுக்கு வந்தவள் காதுகளில் அங்கே பணி புரியும் வேளை ஆட்கள் பேசுவது நன்றாகவே கேட்டது.

 

தற்செயலாகவே அதை அவள் கேட்க நேரிட்டதும்.

 

கொலை நடந்தன்று, “இன்னைக்குச் சாய்ங்காலமா வழக்கமா வர மாலாவை பாஸ் காட்டேஜ் அனுப்ப சொல்லிருக்காரு. அனுப்பிடு. அருண் சார் கூப்பிட்டாருனு அந்த மாலாக்கு சொல்லிடு” என அங்கு வேலை செய்பவன் யாரிடமோ தொலைபேசியில் கூறிக்கொண்டிருக்க, வெண்பா ஸ்தம்பித்தாள்.

 

இரண்டில் ஒரு முடிவு வேண்டுமென்றெண்ணி, கையோடு அவளைச் சீரழித்த காட்டேஜிற்கே மீண்டும் சென்றாள். பேச்சு வாக்குவாதம் ஆனாது. அருணின் சுயரூபம் முழுவதும் வெளிப்பட்டது.

 

“ஆமா! அதுக்கென்ன இப்ப ? கஷ்டப்பட்டு நா உஷார் பண்ணி வச்சா வேற ஒருத்தன் நோகாம நொங்கெடுப்பானா ? வெளிநாட்டுக்கு சுத்த போன கேப்ல உனக்குக் கல்யாண நடந்துட்டா நா விற்றுவேனா ? அதா போன் பண்ணி உன்ன லவ் பண்ற போலப் பேசி எனக்காகக் காத்திருக்க வச்சேன். ஏன்னா அடுத்தவங்க உபயோகிக்கிற பொருள் எனக்குப் பிடிக்காது.

 

சரி ஏதோ நடந்தது நடந்து போச்சு. எதுவுமே நடக்காதபோல உன் புருஷண்ட போய்டு. . . இல்ல இங்க தா இருப்பேன்னு அடம் புடிச்சா அப்புற அசிங்கப்பட்டுப் போவ” எனக் கீழ்த்தரமான சிரிப்புடன் கூற, கையில் கிடைத்த மரபொம்மையை அவன் மீது வீசி எரிய, அவன் இலாவகமாக நழுவி கொள்ள, அது கண்ணாடி ஜன்னலில் பட்டு ஜன்னல் உடைந்து பெறும் சத்தத்தை உண்டாக்கியது.

 

இதனால் ஆத்திரம் அடைந்த அருண், அவளைச் சுவற்றோடு சாய்த்து கழுத்தை நெறிக்க அடுத்தடுத்து அந்த விபரித சம்பவங்கள் நிகழ்ந்துவிட்டிருந்தது.

 

கண்ணின் ஓரத்தில் ஒரு துளி கண்ணீர் துளிர்த்திருக்க, “நா ஏன் பிரகாஷ் உங்கள லவ் பண்ணாம போனே. நா ரொம்பத் துர்தர்ஷ்டசாலி இல்ல ? எனக்கு உங்க மேல லவ் வந்திருந்தா நா இப்படிச் சீக்கிர உங்கள விட்டுப் போயிருக்க மாட்டே. இப்ப இன்னு கொஞ்ச நாள் உங்ககூட இருக்கனுன்னு தோணுதே.

 

ஆனா நா அதுக்குத் தகுதியானவை இல்லல?

 

எனக்கு ஒரு ஆச, உங்க கைய ஒருதடவ பிடிச்சுக்கவா ?” எனக் கூற அவனின் கரம் அவளுடைய கரத்தை இறுக பற்றியிருந்தது. அவனின் மற்றொரு கரம் வேகமாகக் காரை ஓட்ட முயன்றது.

 

“நா பொழைக்கமாட்டேன். வாழவும் விரும்பல. நா செஞ்ச தப்புக்குத் தண்டனை இது தான். ஆனா, நா செத்த பிறகு அசிங்கப்படக் கூடாது பிரகாஷ். அதுவும் இவன் என்ன நாசப்பண்ணின விஷயம் வெளில வரக்கூடாது ப்ளீஸ். எங்கயோ கண்காணாம போய்ட்டதா தான் இருக்கணும். எனக்காகப் பண்ணுவீங்களா ?”

 

“உனக்கு ஒன்னு ஆகாது வெண்பா, நீ இப்படியெல்லாம் பேசாத. ஆஸ்பத்திரி இங்க எங்க இருக்குனே தெரியலையே… போகப் போக மல காடவே இருக்கே” எனப் புலம்பியபடி வண்டியை ஓட்ட, “உங்க போன் வேணு பிரகாஷ்” எனக் கண்களைச் சொருகியபடியே கை நீட்ட, பிரகாஷ் போனை அவளிடம் கொடுத்தான்.

 

தன் பெற்றோர்களுக்கு அழைத்தவள், “அப்பா என்ன மன்னிச்சிடுங்க. அந்த அருண் பத்தி நீங்க சொன்னதெல்லாம் உண்மை. அவன நம்புனத்துக்கான கூலிய ஆண்டவ கொடுத்துட்டான். அந்த அருணுகான கூலிய நா அவனுக்குக் கொடுத்துட்டே. கொஞ்ச கொஞ்சமா நா உங்களைவிட்டு போயிட்டு இருக்கேபா. நீங்க பாத்த மாப்பிள இப்பவும் என்ன கைவிடாம காப்பாத்த கூட்டிட்டு போறாரு” எனக் கூறியபடியே அவனுடைய கைகளுக்குள் அடங்கியிருந்த தன் கையைப் பார்த்தபடி புன்னகைக்க முயன்று தோன்றாள்.

 

“ஆனா நா பிழைக்கமாட்டே, வாழவும் விருப்பமில்லை. உங்க மாப்பிள்ளையைப் பாத்துக்கோங்கப்பா” எனக் கூறியபடியே, சட்டென்று வண்டி ஒட்டிக்கொண்டிருந்த பிரகாஷின் தோளில் சரிந்தவள் நிரந்தரமாகக் கண்மூடிவிட்டாள்.

 

பிரகாஷ் கல்யாணமான நாள் முதலாய் வெண்பாவை தன் தோளில் சாய்த்துக்கொள்ள அத்தனை ஆசை கொண்டான். அது இன்று நடந்தேவிட்டிருந்தது. ஆனால் இதுவே முதலும் முடிவுமெனப் பிரகாஷ் நினைக்கையில் அவனை மீறிய பெரிய அழுகை வெடித்தது.

 

வெண்பா…

 

இறுதிவரை அவனைக் காதலிக்கவில்லை தான். ஆனால் இவன் வெண்பாவை தவிர வேறு எந்தப் பெண்ணையும் இதுவரை ஏறெடுத்தும் பார்த்திராதவன் ஆகிற்றே. அவனுடைய மனம் இதுவரை கண்டிராத துயரத்தில் ஆழ்ந்தது.

 

அவளின் இறுதி வார்த்தைகள் அவனின் செய்விக்குள் ஓடிக்கொண்டிருக்க, வெண்பாவின் மானத்தை காக்க வேறெதையும் சிந்திக்காதவனாய் வால்பாறை போவதென்று முடிவெடுத்தான். அதற்கு முன்னதாக, வெண்பாவை பற்றிய எந்தச் செய்தியும் வெளியே வரக்கூடாது என்பதைச் சிந்தித்துத் தூங்குபவளை போல வெண்பாவை காரின் முன்சீட்டியில் அமரவைத்தான்.

 

பெரிய போர்வைக்கொண்டு அவளின் உடலை மூடி இரத்த கரைகளைப் பிறர் அறியா வண்ணம் மறைத்திருந்தான். நேராகச் சிறிய ஆஸ்பத்திரிக்கு சென்றவன், அங்கே சவீதாவை வைத்து பார்க்க அனுமதித்தான். அங்கே அவர்கள் அடிபட்டவரின் பெயரை கேட்க சக்தியென்று வாயில் வந்த பெயரை உச்சரித்தான்.

 

வெண்பாவை காரில் வைத்தபடியே தாங்கள் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு சென்றவன், அவளின் கைப்பையிலிருந்த சாவியைக் கொண்டு இருவருடைய அறையையும் இவனே காலி செய்தான். பில்லயும் இரண்டு அறைகளுக்கும் சேர்த்தே கட்டிவிட்டு, வெண்பா காரில் உறங்கிக்கொண்டிருப்பதாகக் கூற, உள்ளிருந்தே எட்டி பார்த்த அலுவலகர் சரி என்று அவனிடமிருந்து சாவியைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

 

அங்கிருந்து கிளம்பி மருத்துவமனை சென்று மயங்கிக்கிடந்தவளை சந்தித்து வெண்பாவை பற்றி ஏதுனும் அவளுக்குத் தெரியுமா என்று வினவலாம் எனச் செல்ல, அவளோ இன்னமும் மயக்கத்திலே இருந்தாள். மருத்துவர் கண் விழிக்கக் குறைந்தது ஆறு மணிநேரமாகும் என்று கூறவே அதுவரை வெண்பாவின் உடலை வைத்துக்கொண்டு இங்கிருப்பது சிரமம் என்றெண்ணி, சவீதாவை டிஸ்சார்ஜ் செய்து தன்னுடனே அழைத்துச் சென்றான்.

 

கண் முழித்தவுடன் அவளுக்கு எந்த அளவு தெரியும் என்பதை அறிந்துகொண்டு ஒருவேளை தெரிந்தாலும் கூட வெண்பாவை பற்றிய எந்தச் செய்தியும் வெளியே வந்திடாமல் இருக்க எனச் செய்யவேண்டுமோ அதைச் செய்துவிட்டு பிறகு இந்தப் பெண்ணை அனுப்பலாம் என்று எண்ணினான்.

 

பல அதிர்ச்சிகளைச் சந்தித்தவனுக்கு வால்பாறையிலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவனுடைய அன்னை வீட்டில் இல்லை. அது இருள் கவிழ தொடங்கியிருந்த வேளை. சரி எங்கோ வெளியே சென்றிப்பார் என்று எண்ணியவன், அவர் வீட்டில் இல்லாததும் நல்லதிற்கே என எண்ணம் கொண்டான்.

 

தன்னுடைய தோட்டத்திலே தன் காதல் மனைவியை அடக்கம் செய்தவன், இத்தனை நேரமும் மயக்கம் தெளியாமல் இருந்த சக்தியை தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் சேர்த்தான். மருத்துவரை வீட்டிற்கு அழைக்க, வந்தவர் தான் அவனுக்குப் பெரிய அதிர்ச்சியை அளித்துச் சென்றார்.

 

வசுந்தரா பக்கவாதம் வந்து தங்களின் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த வீட்டில் வேலை செய்கின்ற முதியவர் தான் உடன் இருப்பதாகவும் தகவல் கூற, அடித்துப் பிடித்து மருத்துவமனை சென்றான்.

 

பேசும் நிலையில் அவரில்லை. அவரைப் பாக்கும் நிலையிலும் இவன் இல்லை. அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சியென்று மொத்தமாக நொந்துபோயிருந்தான். அப்போது தான் அந்தப் பெரியவர் வந்தார். அங்கே நெடுநாளாகப் பணிபுரிபவர். வசுந்தராவை மருத்துவமனையில் சேர்த்தவர்.

 

சுருக்கமாக வெண்பாவிற்கும் வசுந்தராவுக்கும் ஏற்பட்ட உரையாடலை கூறியவர், வெண்பா சென்ற பிறகு அதே இடத்தில் ஒரு பைத்தியக்காரியை போல உக்கார்ந்து புலம்பிய வசுந்தராவை பற்றிக் கூறினார்.

 

வெண்பாவின் வார்த்தைகள் அனைத்தும் வசுந்தராவுக்கு அவரின் வார்த்தைகளையே நினைவுபடுத்தியிருந்தது. கார்திகேயனை சொத்திலிருந்து விலக்கி தன் மகனுக்கு மட்டுமே ஆஸ்தி வரவேண்டுமென்ற ஆசையில் அன்று கார்த்திகை பார்த்து கூறியதை இன்று வெண்பா தன்னைப் பார்த்து கூறியது தன்னுடைய பாவத்திற்கான தண்டனை என எண்ணி எண்ணி புலம்பியுள்ளார். அந்தத் தண்டனை தன்னை மட்டும் பாதித்ததோடு அல்லாமல் பிரகாஷின் வாழ்க்கையையும் மொத்தமாக அழித்துவிட்டதை எண்ணி அழுந்துகொண்டே இருந்தவர் மெல்ல எழ, சட்டென்று தடுமாறி கீழ் விழுந்தவரின் கை கால்கள் அசைவின்றிப் போய்விட, வீட்டில் வேலை பார்த்தவர் இங்குக் கொண்டு வந்து அனுமதித்திருந்தார்.

 

மற்ற வேலைஆட்களுக்கு முழுதாக விவரம் தெரியாததால் அவர்களை விடுமுறையில் அனுப்பிவிட்டு அந்த விசுவாசியான மனிதர் மட்டும் வசுந்தராவிற்குத் துணையாய் இருந்தார். பிரகாஷின் எண் தெரியாததோடு, நடந்த களோபரத்தில் அவனுக்குத் தகவல் சொல்லவேண்டியது இவருக்குப் பின்னுக்குப் போய்விட்டது.

 

எப்படியும் வந்துவிடுவான் என்றெண்ணி ஹாஸ்ப்பிட்டலுக்கும் அவருடைய வீட்டுக்கும் அலைந்துகொண்டிருந்தார்.

 

அவரின் வாயிலாக அனைத்தயும் கேட்டவனுக்கு அழுக கூடக் கண்ணீரின்றி வற்றியிருந்தன அவனுடைய கண்கள். ஓய்ந்து வீட்டிற்குச் செல்ல கண்விழித்திருந்த சவீதாவோ பிரகாஷிடம் தன்னை யாரென்று கேட்டு அடுத்த அதிர்ச்சியை அவனுக்கு அளித்தாள்…

 

Advertisement