Advertisement

புயலோ தென்றலோ – 20

 

ஓய்ந்த தோற்றத்துடன் ஆயிரம் சிந்தனைகளுடன் உள் நுழைந்தவனை இந்த நிலையில் நிச்சயமாகச் சவீதா எதிர்பார்க்கவே இல்லை.

 

“என்னாச்சு கார்த்திக்?” எனப் பதற்றத்துடன் வினவ, அவள் முகம் பார்ப்பதை தவிர்த்தான். ஆனால் அதைச் சரியாகச் சவீதாவினால் புரிந்துகொள்ள இயலவில்லை. “உங்கள தான் கேக்குறே. என்னதான் ஆச்சு ?”

 

“என்ன…” எனத் தொடங்கியவன் சட்டென்று பேச்சை நிப்பாட்டி, “பாப்பா எங்க?” என வினவ, நொடியும் தாமதிக்காமல் உள் சென்று தங்கள் குழந்தையைக் கொண்டு வந்து அவன் கைகளில் கொடுத்தாள்.

 

தன் மகளைக் கைகளில் வாங்கியவன் கண்களில் நீர் திரையிட்டது. .

 

அழறானா? என்பது போலத் தோன்ற சவீதா கார்த்திகை ஆராய்ந்தாள். ஆனால் அதற்குள் தன்னை நிலை படுத்திக்கொண்டவன், எதுவந்தாலும் எதிர்கொண்டு ஆகவேண்டும் என்ற முடிவெடுத்தான்.

 

சவீதாவிடம் ‘சொல்லிவிடு சொல்லிவிடு’ என்று மனம் அரற்ற, அந்த நேரம் சரியாக விக்ரம் வந்து சேர்ந்தான்.

 

அவனின் பதற்றம் மேற்கொண்டு கார்த்திகை சொந்த வாழ்வை பற்றிய சிந்தைகளைக் களைந்து கடமையில் தள்ளியது. அதுவும் இப்பொழுது மிகவும் முக்கியமான ஒன்றே. சவீதாவை இதிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டுமே. இந்த எண்ணம் தோன்றியதுடன் வேகமாகக் கவனத்தை அதில் திருப்பினான்.

 

“சவீ! நான் உன்கிட்ட நிறையப் பேசணும். ஆனா இப்ப இல்ல. நா விக்ரம் கூடப் போறேன். பாப்பாவ பாத்துக்க” எனக் கூறிவிட்டு வந்த அலுப்பு கூடக் குறையாத நிலையில் கிளம்பி சென்று விட்டான்.

 

அன்றிலிருந்து மூன்று நாட்கள் எங்கெங்கோ அலைந்தனர். வால்பாறையின் மூலைமுடுக்குகளில் சுற்றி திரிந்தனர். எப்போது வீட்டுக்கு வருகிறான் எப்போது செல்கிறான் என்றே சவீதாவினால் கணிக்க முடியாத நிலை. பிரகாஷிற்கும் கூட அதே நிலை தான். வீட்டிலிருக்கும் சமயங்களில் குழந்தையின் அருகிலே தவம் கிடப்பான். சவீதாவிடம் உண்மையைக் கூறி அவள் விபரீத முடிவுகளை எடுத்துவிட்டால் என்ற கேள்வி மனதில் குடைய ஆரம்பித்துவிடுவே, தன் குழந்தையோடு வீட்டிலிருக்கும் நிமிடங்களைக் பொக்கிஷமாக எண்ண தொடங்கினான். சவீதா அருகில் இருந்தும் அவளை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இல்லவே இல்லை.

 

“என்ன கார்த்திக் பிரச்சனை? ஏன் என்கிட்ட முகக்கொடுத்து பேசமாட்டறீங்க ? நா எதுவும் தப்பு பண்ணிட்டேனா ?” என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல் தவித்தவன் மனதினுள், “நீ பண்ணல. தப்பு செஞ்சவன் நான்தான்” என முணுமுணுத்துக்கொண்டான். சவீதாவோ, சக்தியாக இன்னும் எத்தனை நாள் தான் தொடரவேண்டும் எனவும் அவன் அவளிடம் பேசக்கூட வராததற்குக் காரணம் மற்றவர்களின் கண்களுக்கு அது தவறாகத் தோன்றிவிடும் என்பதாலே என நினைத்துக்கொண்டாள்.

 

ஆனால் அப்படியே விடுவது சரி இல்லையே… “கார்த்திக்கிட்ட கண்டிப்பா பேசணும்” என நினைத்தவள், குழந்தையோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தவனைப் பின்னிருந்து மெல்ல தோள்களைத் தொட்டாள்.

 

“கார்த்திக், எதுனாலும் பேசுங்க… பேசாம உள்ளுக்குளே வச்சிருந்தா அது உறவுக்கு நல்லதில்லை. இப்பதான் நமக்கே நமக்குன்னு புதுச் சொந்தம் வந்திருக்கு. நம்ம வாழ்க்கையில என்ன நடந்ததுன்னே எனக்குப் புரியாத புதிரா இருக்கு.

 

இப்படி எல்லாமே விடுகதையா இருக்கு இதுல நீங்க வேற முகக் கொடுத்து பேசாட்டி என் நிலமை என்னதான் ஆகு.

 

எதுக்காக இப்படி இருக்கீங்க ?” எனக் குரல் கமறியபடியும் அனைத்தும் சரியாகிடவேண்டுமென்றும் அவன் முன் நின்றாள்.

 

ஆனால் கார்த்திக்கின் மனதோடு சேர்ந்து உதடுகளும் இறுக மூடிக்கொண்டன. அதற்குக் காரணம் அச்சமே. அச்சம் என்பதை அறியாதவன் எந்தச் சூழலிலும் எதையும் கையாளும் திறமை உள்ளவன் இன்று கலங்கித்தான் நின்றான்.

 

சவீதாவும் குழந்தையும் அவனுக்கு இன்றியமையாதவர்கள். அவர்களை இழக்க அவன் மனம் விரும்பவே இல்லை. நடந்ததைக் கூறாமல் மறைக்கலாம், ஆனால் அதற்கு அவனுக்கு மனம் இல்லை. உண்மையை உரைத்தே ஆகவேண்டும் தான். ஆனால் அது இத்தனை சீக்கிரமா என பரிதவித்தான்.

 

நின்றவள் சட்டென்று அவன் முன் மண்டியிட்டு, “ப்ளீஸ் சொல்லுங்க கார்த்திக்” எனக் கூற அவள் கண்களில் நீர் பெருகியது. முகமும் வலியில் சுருங்க நொடியும் தாமதிக்காமல் “சவீ சிசேரியன் பண்ணின உடம்பு. இப்படி டக்குனு உக்காரலாமா ? எழுந்து கட்டில்ல உக்காரு. ப்ளீஸ் நானே நொந்து போயிருக்கே. பண்ணுன தப்புக்கு எத தின்னா பித்த தெளியும்னு தெரியாம இருக்குறேன். எந்தத் தப்பு நீ செய்யல.

 

எல்லா என்னோடதுதான். நா பேசுனா நீ என்ன விட்டு போய்டுவியோன்னு பயமா இருக்கு சவீ” என அவள் கைகளைப் பிடித்து அதிலே தன் முகத்தினை அழுத்தி குரல் கமற கூற, சவீதா பதறிப்போனாள்.

 

“நீங்க என்ன சொல்றீங்க? என்ன டென்ஷன் ஆக்காதீங்க ப்ளீஸ். கேஸ்ல எதுவும் தப்பா ஆகிடுச்சா ? நா எந்த வகைலயாச்சு சம்மந்தப்பட்டுட்டேனா ? இல்ல வேற எதுவுமா? என்னனு சொல்லுங்க கார்த்திக்” எனப் பதறினாள்.

 

“இல்ல! நா இருக்குற வரைக்கும் உனக்கு இதுல ஒன்னு ஆகாது. உன்ன வெளில கொண்டுவந்து உனக்கும் பாப்பாக்கும் பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்குறது என் பொறுப்பு. ஆனா ?”

 

“என்ன ஆனா?”

“நா உங்க கூட இருக்குறதும் இல்லாம போறதும் நீ எடுக்கப் போற முடிவுலதா இருக்கு” எனக் கூறி நிறுத்த, இப்போது சவீதாவிற்குப் பதற்றம் போய்ப் பயம் தொற்றிக்கொண்டது.

 

“என்ன பயமுறுத்தாதீங்க. என்ன தான் பிரச்சனை?”

 

“தப்புப் பண்ணிட்டேன் சவீ!” எனக் கூறியவன் இறுகிய முகத்தோடு எழுந்து ஜன்னல் புறமாகத் திரும்பி நின்றுகொண்டான்.

 

“தப்பா? என்ன தப்பு ?” என பார்வைகளை கூர்மையாக்கி வினவினாள்.

 

“நம்பிக்கை வைக்கல. உறவுக்கு அஸ்திவாரம் நம்பிக்கை. அது எனக்கு இல்லாம போச்சு” எனக் கூற அவன் முன் வந்தவள், தன் புறமாக அவனைத் திருப்பிக் கண்களை ஊடுருவிய படி பார்த்துக்கொண்டே, “எதுனாலும் தெளிவா சொல்லுங்க” எனக் கூற, கார்த்திக் நடந்த அத்தனையும் ஒரே மூச்சாகக் கூறி முடித்தான்.

 

அவன் கூறியதை கேட்டவள், கற்சிலையாய் சமைந்து நின்றாள்.

 

தன்னைத் தன் கணவன் நம்பவில்லையே என அவளின் மனம் துடிதுடித்தது. அவன் கூறியவற்றை ஜீரணிக்க வெகுவாக முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

 

“சவீ! என்ன மன்னிச்சிடுனு கேட்க கூட எனக்குத் தகுதி இல்ல…” என்று மேற்கொண்டு எதையோ கூறவந்தவனைக் கை அமர்த்தித் தடுத்தவள், “போதும் ! பேசமாடீங்களா என ஏங்குனதுக்கு நிறையப் பேசி மொத்தமா கொன்னுட்டிங்க. இனியும் பேசி என்ன புதைச்சிட வேணா. ஆனா நா கேக்குறே கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.

 

ஒரு சில கேள்வி தான். சொல்ல முடியுமா ?” எனக் கூறிய சவீதாவின் குரலில் என்ன இருந்ததென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

“கேளு சவி. என்ன வேணும்னாலும் கேளு”

 

“அந்த வீடியோ பார்த்தீங்களே, அப்போ என்ன பத்தி என்ன நினைசீங்க?” தீர்க்கமாக அவனையே பார்த்தபடி வினவினாள்.

 

“பணம்!…………… பணத்துக்காகத் தான் என்ன கல்யாணம் செஞ்சன்னு” எனத் தடுமாறியபடி கூற, அவளோ, “நீங்க கல்யாணம் பண்ணின பிறகு தான் உங்களுக்குச் சொத்து இருந்ததையும் அதையும் வேணாம்னு உதறி தள்ளிட்டு வந்ததையும் சொன்னீங்க. அப்போ முன்னாடியே எனக்கு எப்படித் தெரிஞ்சிருக்கும்னு நீங்க யோசிக்கலியா? ஒரு தடவ கூட யோசன வரலியா ?” என வினவ கார்த்திக்கிற்குச் சுரீரென்று அடித்ததைப் போன்றதொரு பிரம்மை.

 

அவள் கேட்டதென்னவோ இந்தக் கேள்வியைத் தான், ஆனால் அதில் மறைந்திருந்த பொருள், நீ யாரென்றே தெரியாமல் காதலுக்காக உனக்கே உனக்காக மணந்தேனே. என்னய்யா நீ சந்தகேப்பட்டாய் என்பதாய் இருந்தது.

 

பதில் பேசவோ விளக்கவோ எதுவுமே கார்த்திக்கிடம் இல்லை.

 

“சரி, அத விடுங்க. இந்தக் கேஸ்க்கு என்னதா பார்க்க போறீங்கன்னு தெருஞ்சு தானே வந்தீங்க?”

 

“ஆமாம்”

 

“நீங்க நினைச்சிருந்தா, இதுக்குப் பிடிவாதமா வர மறுத்து வேறொரு அதிகாரிய நியமிச்சிருக்கலாம் இல்லையா?”

 

“ஆமாம்”

 

“இங்க வந்து நான் கர்பம்னு தெருஞ்சதும் உங்களுக்குத் தோணினது என்ன? உங்க அம்மா மேல சத்தியம் பண்ணி உண்மைய மட்டும் சொல்லுங்க”

 

அவளின் இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில்கூறுவதென்று தடுமாற்றத்தோடே, “சவீ ! நான் அந்த நிலையில அப்படி யோசிச்சது தப்புதான்…ஆனா எனக்கு வேற வழி தெரியல” எனக் கூற, சவீதா அவன் தொடங்கிய வாக்கியத்தில் சுக்கு நூறாக உடைய தொடங்கியிருந்தாள்.

 

இவன் தான் அவனோடு வாழ்ந்த வாழ்க்கையும் சந்தேகப்பட்டுவிட்டானா என அவள் மனம் கலங்கி துடிக்க, கார்த்திக் அந்த வார்த்தைகளைக் கூறினான் .

 

“பிறந்ததும் என் குழந்தைய நான் தூக்கிட்டு போயிரணும்னு எதுக்காகவும் அவ உன்கிட்ட வளரக்கூடாதுனும் நினைச்சே.

 

தப்புதான்..பெத்தவள விட்டு புள்ளைய பிரிகிறது தப்புதான். நா அப்படி நினைச்சிருக்கக் கூடாது. ஆனா என் குழந்தையை என்னால விட முடியாதுனு தோணிச்சு” எனக் கார்த்திக் கூற, சவீதாவிற்குப் போன உயிர் திரும்பி வந்தது.

 

அவள் மனம் அந்தத் துயரத்திலும் சற்று நிம்மதி அடைந்தது. “அப்பாடா” என்று உணர்ந்தது.

 

“ரொம்பத் தாங்க்ஸ். நல்லவேளை என் ஒழுக்கத்தைச் சந்தேகப்படலியே. அதுவே போதும்…இந்த ஒரு வார்த்த நான் உயிர் வாழவும் என் பொண்ண மரியாதையா வாழவைக்கவும் போதும். இனி உங்ககிட்ட தெருஞ்சுக்க எதுவுமில்லை. வெளில போங்க” என அமைதியான குரலில் ஆனால் உறுதியாகக் கூற, கார்த்திக் ஏதோ கூற முனைந்தான்.

 

ஆனால் சவீதா மேற்கொண்டு அவனிடம் எதுவும் பேச விருப்பமில்லாமல், “வெளிய போறீங்களா இல்ல நானும் குழந்தையும் போகணுமா ?” என வினவ, கார்த்திக் மொத்தமும் இழந்தவனாய் வெளியே வந்தமர்ந்தான்.

 

விக்ரமும் அங்கே தான் தன் கணினியில் ஏதோ உருட்டிக்கொண்டிருந்தான்.

 

அப்போது எஸ்டேட் வரை சென்று வந்த பிரகாஷ் கார்த்திக்கின் எதிரில் வந்தமர்ந்தான். “என்ன கார்த்திக் ? உன்ன ஆளே பாக்க முடியல. இப்படி ஓடி ஓடி உழைக்கிற. ஆமாம் எதோ கம்பனில வேல பாக்குறேனு சொன்ன. என்ன வேல எங்க இருக்கு ? எதுவுமே சொல்லல” எனக் கால்களை நீட்டி நன்றாகச் சோபாவில் சாய்ந்து அமர்ந்தபடி வினவினான்.

 

“நீ கண்டிப்பா தெரிஞ்சிப்ப பிரகாஷ்… ஆமாம் நீ எங்க போயிட்டு வர?”

 

“ஒரு வேல விஷயமா…இந்த பக்கம் நமக்குக் கொஞ்சம் செல்வாக்கு இருக்கு. அதுனால ஏதாவதுனா நம்மளையும் உள்ள இழுத்துவிடறாங்க. இன்னைக்கு ஓர் எஸ்டேட் முடிக்கணும்னு சொன்னாங்க. அதான்…ஆமாம் நீயும் இங்க அலஞ்சிட்டே இருக்கன்னு வள்ளி சொன்னா (வேலைக்கார பெண்). என்ன வேலைனு சொல்லு. என்னால முடியுதான்னு பார்க்கிறேன் ”

 

“கண்டிப்பா…உன்னால மட்டும் தான் முடியும்” எனக் கூறியபடி இரண்டு தினசரிகளை எடுத்து பிரகாஷின் முன் வைத்தான்.

 

“என்ன? என்னால மட்டும் தான் முடியுமா ? அப்படியென்ன வேலை ?” என வினவியபடி, சற்று நிமிர்ந்து உக்கார, பிரகாஷின் முகத்தில் மாற்றம். அந்த மாற்றம் நிச்சயமாக அந்தத் தினசரிகளைப் பார்த்த பிறகே.

 

“நீ என்ன சொல்ற கார்த்திக். எனக்குப் புரியல” எனச் சிறு தடுமாற்றத்துடனு பிரகாஷின் குரல் ஒலித்தது.

 

“புரியலையா? பதில் பேச பிடிக்கலையா ? இல்ல அதுவும் இல்லனா அன்னைக்கு உன் அம்மா என அவமான படுத்தி வெளில அனுப்புனப்ப உனக்கும் இதுக்கும் சம்மந்தமே இல்லாதது போல இருந்தியே, அதே போல இப்பவும் இருக்கப் போறியா ?” என உறும, கார்த்திக்கின் கேள்விகளில் அதிர்ச்சி அடைந்தான் பிரகாஷ்.

 

இவன் குரல் உயர்த்திப் பேச உள்ளிருந்த வேலை ஆட்களும், சவீதாவும் வெளியே வர, வேலை ஆட்களை வெளியே அனுப்ப சொல்லி விக்ரமிடம் ஜாடை காட்ட, அவன் அவர்களை அனுப்பிவைத்தான்.

 

மற்ற சமயமாக இருந்திருந்தால் கார்த்திக் நிச்சயமாகக் குரலையும் உயர்த்தி இருக்கமாட்டான். பழையதையும் மீண்டும் உயிர்ப்பித்திருக்க மாட்டான். ஆனால் சற்று முன்னான சவீதாவுடனான பேச்சு இப்படிப் பேசவைத்தது. அன்று கார்த்திக் அனாதையாக நின்றதற்கும், இன்றும் அதே நிலையில் நிற்கபோவதற்கும் ஏதோவொரு வகையில் பிரகாஷ் காரணமென்று தீவிரமாக எண்ணம் கொண்டான். அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை.

 

“சொல்லு” என்ற சொல் கட்டளையாகக் கார்த்திக்கிடமிருந்து.

 

“கார்த்திக்! நான் அன்னைக்கு உனக்கு ஆதரவா பேசாதது தப்பு தான். அப்போ அது எனக்குச் சாதாரணமா தோணிச்சு. அது உனக்கு எவ்ளோ வலிச்சிருக்கும்னு எனக்கு இப்போ புரியுது. ஆனா அதுக்கும் இதுக்கும் முடிச்சி போடாத” என உள்ளே போன குரலிலே மீண்டும் கூறினான்.

 

“ஓ சாதாரண விஷயமா? அவுங்க என் அப்பா அம்மா ஆனாலும் உனக்கும் சித்தப்பா சித்தி தானே டா? உன்மேல எவ்ளோ அன்பு வச்சிருந்தாங்க. அவுங்க இறந்து காரியம் பண்றதுக்கு முன்னாடியே உங்க அம்மா என்னென்ன பேசுனாங்க ?

 

என்ன பேசியிருந்தாலும் பரவாயில்ல. ஆனா அவுங்க பேசினது என் அம்மாவோட ஒழுக்கத்த பத்தி. சொத்துக்காக என்ன வேணும்னாலும், யார் கூட வேணும்னாலும்……” என முழுவதுமாகக் கூற முடியாமல் கோவத்தில் கன்றி சிவந்த முகத்தோடு டீபாயின் மீது ஓங்கி ஒரு குத்துக் குத்தினான்.

 

“அப்படி அவுங்க பேசினப்ப, நீயும் சும்மா… சும்மாதானே இருந்த? எதாவது ஒரு வார்த்த ஒரே ஒரு வர்த்த எனக்கு ஆதரவா பேசணும்னு தோணுச்சா ? அட அதுகூட வேணா, உன்ன புள்ளமாதிரி பாத்துகிட்டே என் அம்மாக்கு இப்படிப் பழி வராம பேசணும்னாச்சு தோணுச்சா ? இல்லையே.

 

உண்மையிலேயே சொத்துகாகக் கொலை கூடப் பண்ண தயங்காதவங்க யாரு தெரியுமா ? உன் அம்மா. அதுனாலதான் அப்பா அம்மா இல்லாதவனை மனச கொண்ணு வீட்டைவிட்டு துரதிட்டா முழு ஆஸ்தியும் தன் மகனுக்கு வரும்னு நினச்சு பேச கூடாத வார்த்தையெல்லாம் பேசுனாங்க.”

 

இந்தச் சொத்துதான் வேணும்னா எண்ட சொல்லியிருந்த மறுபேச்சு பேசாம எழுதி கொடுத்துருப்பேனேடா ? அதுக்காக நிறைஞ்ச சபையிலே ஊருமுன்னாடி இப்படித் தரக்குறைவா பேசி செத்தவங்கள மறுபடியும் மறுபடியும் சாகவச்சது பத்தாதுன்னு இப்ப மறுபடியும் என் வாழ்க்கையில விளையாட பாக்கறியா ?

 

சொல்லு. உனக்கு என்ன துரோகத்த அப்படிப் பண்ணி தொலைச்சுட்டேன்னு எனக்குச் சத்தியமா புரியல. அனாதையா இந்த ஊரவிட்டு போக வச்சீங்க. எனக்குன்னு ஒரு குடும்பம் மனைவின்னு வாழ ஆசைப்பட்டா, அவளையும் இங்க கூப்டு வந்து யாருன்னே அவளுக்கே அவளைத் தெரியாத மாதிரி வச்சிருக்க. என்ன தான் டா வேணும் ? சொல்லி தொல” என விரக்தியோடும் கோவத்தின் உச்சியிலும் கார்த்திக் பேச பேச, பேசிய அனைத்துமே சவீதாவிற்குப் புதிய செய்தி.

 

கார்த்திக்கின் கண்ணீர், விரக்தியை காட்டிய குரல் என்று அனைத்துமே சவீதாவை வெகுவாகப் பாதித்தது. அவனின் நிலையை அவள் புரிந்துகொண்டாள் என்பதை விட உணர்ந்தாள் என்பதே நிதர்சனம்.

 

சற்று முன் தன் கண்ணீருக்கு காரணமாவனின் கண்ணீரை காண சகிக்காதவளாய் நின்றிருந்தாள். ஆனாலும் அவன் அருகில் செல்ல அவளின் கால்களுக்கு விருப்பமில்லை. நின்ற இடத்திலே நின்றிருந்தாள். கொஞ்சமும் அசையவே இல்ல.

 

அதே சமயம் பிரகாஷிற்கோ இவனோட வாழ்க்கையை இப்பவும் நான் கெடுத்துட்டேனே என்ன சொல்றான் என்ற சிந்தனையே.

 

“நீ என்ன சொல்ற கார்த்தி. எனக்குப் புரியல ?”

 

“எனக்கும்தான் புரியல. என் பொண்டாட்டி சவீதாவை சக்தின்னு பேரு வச்சு அங்க இருந்து ஏன் இங்க கூப்டு வந்த ? என் வாழ்க்கையைக் கெடுத்தது போதாதா ? உன் அம்மாக்கு உனக்கு என்ன தான் வேணும் ? தப்புத் தப்பு நீங்க ரெண்டு பேரு மட்டுமில்ல. உன் பொண்டாட்டிக்கும் என்ன வேணும் ? எதுக்கு என் வாழ்க்கையில விளையாடறீங்க ?” என அதே கோபத்துடன் வினவ, பிரகாஷ் தன் மனைவியைக் குறித்த பேச்சு வரவும் சட்டென்று அமைதியானான்.

 

“என்ன பேச்சு வரலியா? கூர்க் ரிசார்ட்ல நடந்த கொலையில உன் மனைவிக்குப் பங்கு இருக்கு. செத்து போன அருண் கூட உன் பொண்டாட்டி இருந்திருக்காங்க. நீயும் கூர்க் போயிருக்க.

 

இதுக்கெல்லாம் எண்ட ஆதாரம் இருக்கு. ஆனா சவீதாவை நீ தான் இங்க கூப்பிட்டு வந்தனு எண்ட சரியான ஆதாரம் இல்லாட்டியும் அத உன்ன தவிர வீர யாரும் பண்ணியிருக்க முடியாது. உன் பொண்டாட்டிய காப்பாத்த எந்தச் சாட்சியும் இருக்கக் கூடாதுனு இவளை இங்க கூப்டு வந்து வச்சு என் வாழ்க்கையோட விளையாடிட்டியே.. உன்ன என்ன பண்ணலாம்? நீயே சொல்லு” என அப்புறமும் இப்புறமுமாக நடந்தபடி உறும, பிரகாஷிற்குப் பயத்திற்குப் பதிலாய் குற்ற உணர்ச்சி வந்தது.

 

தப்பு பண்ணிட்டோம் என்ற உணர்வு வரவே அவன் முகமும் அதையே பிரதிபலித்தது.

“சக்தி…சக்தி உன்னோட பொண்டாட்டியா? நீ உண்மையதா சொல்றியா ? பார்த்த அன்னைக்கே ஏன் இத நீ சொல்லல”

 

“அத உண்ட சொல்லி இனி எதுவும் மாறப் போறதில்லை. ஆனா மறுபடியும் நீ என்னோட வாழ்க்கையில விளயாடிட்ட. அவளை அந்த ஊர்லயே விட்டு வந்திருந்தா கொலைக்குச் சாட்சியா இருந்திருப்பா. ஆனா இப்போ அவளையே சந்தேகப்படுற நிலையில கொண்டு வந்து விட்டுட்டியே டா….

பொண்டாட்டி கொலைகாரினு புருஷண்ட்டையே விசாரிக்க கேஸ் கொடுக்குற நிலைமைக்கு என்ன தள்ளிட்ட”

 

“கேஸ்? அதும் நீ விசாரிக்கிறியா ? நீ யாரு கார்த்திக். இப்பவாது சொல்லு”

 

“ஆமாம் நான் கார்த்திக் தான். ஆனா இங்க இருந்து அவமானப்பட்டுப் போன கார்த்திக் இல்ல இப்ப. சிபிஐ கிரைம் பிரான்ச் ஸ்பெசல் ஆபிசர். உன் மனைவி பண்ணின கொலையும் அதை மறைக்க நீ பண்ணின பித்தலாட்டத்தையும் கண்டுபிடிக்க வந்தவன். உன் தம்பியா நான் இங்க வரல.

 

நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்க இன்னும் எத்தனை பேரு வாழ்க்கையைச் சீரழிக்கப் போறீங்க ?

 

உன் பொண்டாட்டியோட தப்ப மறைக்கவும் தப்பவைக்கவும் யாரோட வாழ்க்கையில வேணுனாலு விளையாடற சீப்பானா ஆளா நீ ? நீ தா இப்படி இருக்கன்னா, ஒரு பொண்ணா இருந்துகூட இன்னொரு பொண்ண இப்படி வைக்க எப்படி மனசு வருது? அவளாம் நிஜமாவே ஒரு பொண்ணா ? ” என முகம் சுழிக்க, “போதும்….” எனக் கத்தியே விட்டான் பிரகாஷ்.

 

“என் பொண்டாட்டி தான் கொலை பண்ணினானு சொல்லுறியே… அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?” என இப்போதும் விடாமலே பிரகாஷ் வினவ, “அத உண்ட சொல்லணும்னு அவசியமில்லை. இருந்தாலு சொல்றேன், கொலை நடக்குற இரண்டு நாளுக்கு முன்னாடி உன் மனைவி கூர்க் போயிருக்கா. போனவ அருணோட ரிசார்ட்ல தங்கிருக்கா. அதுக்கான சிசிடிவி பூட்டேஜ் பில் எல்லாம் எண்ட இருக்கு. நீ அதுக்கு மறுநாள் கூர்க் வந்திருக்க. நீயும் அதே ரிஸார்ட்ல வேற அறையில தங்கியிருக்க. அதுக்கான ஆதாரமும் இருக்கு.

 

அருண் கூட உன் மனைவி அவனோட காட்டேஜ்ல ஒரு நாள் தங்கியிருக்கா, காட்டேஜ் வாட்ச்மான் சாட்சி இருக்கு. இது நீ அங்க போறதுக்கு முன்னாடியே நடந்திருக்கு. அடுத்த நாள் வெளில ஓர் இடத்துல உன் மனைவிக்கும் அருணுக்கும் வாக்குவாதம் போயிருக்கு. அந்த வாக்குவாதத்துக்குச் சாட்சியா அங்க இருக்க ரிசார்ட் கிளப் டான்சர் இருக்கா. வாக்குவாதம் நடந்தப்ப தான் நீ சரியா அந்த ரிஸார்டுக்கு வந்து சேர்ந்திருக்க.

 

உன் மனைவியை நீ ரிசார்ட்ல எங்கயும் மீட் பண்ணல. இன்னும் சொல்ல போன பதிவாகியிருக்கக் காட்சிகள் வச்சு அங்க தான் உன் பொண்டாட்டி இருக்கானு உனக்குத் தெரியவே இல்ல.

 

நீங்க ரெண்டு பேரும் போறதும் வரதும் தனித் தனியாவே பதிவாகியிருக்கு. அதுக்குப் பிறகு கொலை நடக்குற முன்னாடி உன் மனைவி காட்டேஜ் போயிருக்கா, அடுத்து கொஞ்ச நேரத்துல சவீதா பட்டர்ப்ளை கார்டன் விஷயமா அங்க போயிருக்கா. அருண உன் மனைவி மட்டுமில்லாம பெர்ஸனலா நிறையப் பொண்ணுங்க பாக்க வரதும் அவுங்ககிட்ட கையெழுத்து வாங்காம அனுப்புறதயும் வாட்ச்மென் வழக்கமா வச்சிருக்கான்.

 

ஆபிஸ் வேலைக்கு வரவங்ககிட்ட மட்டும் தான் சைன் வாங்குறது அங்க வழக்கம். அதுனால உன் மனைவி உள்ள போனது பதிவாகல, அதுக்குப் பிறகு போன சவீதாகிட்ட கையெழுத்து வாங்கிருக்காங்க.

 

உள்ள போன சவீதா சத்தம் கேட்டு பார்க்க உன் மனைவிக்கு அருணுக்கு வாக்குவாதமும் கைகலப்பும் நடந்ததைப் பார்த்திட்டு வாட்ச்மன் கூப்பிட போயிருக்கா. ஆனா அங்க அவன் இல்ல. சவீதா வந்த கொஞ்ச நேரத்துலையே அவன் தம் அடிக்கக் கடைக்குப் போக, அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீ உள்ள போயிட்ட.

 

உன்ன சவீதா பாக்கல. உள்ள போன நீ, உன் பொண்டாட்டி இருந்த இடத்துக்குப் போயிருக்க, அங்க நிலமை கை மீறி போகவும் ஏதோவொரு வழில உள்ள போய் உன் பொண்டாட்டிக்கு ஆதரவா அருணோட மண்டையில கட்டைய வச்சு அடிச்சிருக்க. அவன் விழுந்ததும் அந்தக் கட்டைய தூக்கி எரிஞ்சிருப்ப, அது சவீதா மேல பட்டிருக்கும்.

 

நீ வரதுக்கு முன்னாடியோ இல்ல சரியா அந்த டைம்ல உன் பொண்டாட்டி அருண கத்தி வச்சு குத்திருக்கணும்.

 

ஏன்னா போஸ்ட்மாட்டம்ல கத்தியால குத்தினது ஒரு பொண்ணுனும், தலைல கட்டையால் அடிச்சது ஒரு ஆண் அப்படினும் சொல்லியிருக்கு. அங்க இருந்து நீயும் உன் மனைவியும் வெளில போக முயற்சி செஞ்சப்ப, மயங்கி கிடந்த சவீதாவை பாத்துருக்கணும்.

 

அவ கண்ணு முழுச்சா, நீங்க செஞ்ச கொலைக்குச் சாட்சி ஆகிடும்னு பயந்து சவீதாவை உங்ககூடத் தூக்கிட்டு வந்துடீங்க. வந்ததும் அவளுக்கு அவளை யாருனே தெரியாத நிலையில இருக்கவும் உங்களுக்கு வசதியா போய்டுச்சு.

 

என்ன நான் சொல்றதெல்லாம் சரியா ?

 

அதுக்கு அப்புறமும் நீ சும்மா இருக்கல. தன்ன யாருனு தெருஞ்சுக்கச் சவீதா நிச்சயமா உண்ட கேள்வி கேட்க அத சமாளிக்க நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்திருக்க. அவளைத் தேடி உன்னோட ஆளுங்களையே அனுப்பி வச்சிருக்க. நீ பிளான் பண்ணின படி நீயே போய்க் காப்பாத்தி சவீதாவே பயந்து வேற எங்கயும் போகணும்னு நினைக்காத அளவுக்கு இந்தச் சமுதாயத்து மேல பயத்த வரவச்சு இந்த வீட்டுக்குள்ளையே வச்சிருந்திருக்க.

 

ரொம்ப அருமையான பிளான் தான். ஆனா எங்க தெரியுமா நீ மாட்டுன, சவீதா சாட்சியா வந்திட கூடாதுனு நினச்சு உன் மனைவியை ஒளிச்சு வச்ச நீ, அவளோட போட்டவ அந்த ரூம்ல இருந்து எடுக்காம விட்டுட்ட.

 

அதே போலப் பேப்பர்ல விளம்பர கொடுத்த நீ, வால்பாறை முழுக்க அந்தச் செய்தி பரவாம இருக்க இந்த வீடு இருக்குற தெருவுக்கு மட்டும் வர பேப்பர்ல சுமார் பத்தே பத்து பேப்பர்ல மட்டும் விளம்பரம் வரது போல உன் செல்வாக்கை வச்சுப் பண்ணியிருக்க.

 

எல்லாப் பேப்பர்லயும் வந்தா நிஜமாவே சவிதாவை தேடி யாரவது வந்திடுவாங்களோனு பயந்து நீ பண்ணின காரியம்தான் உன் மேல எனக்குச் சந்தேக வர காரணம்.

 

சவீதாக்கு டெலிவரி அப்போவே பழசு நினைவு வந்திடுச்சு. அவ தற்செயலா உன் மனைவி போட்டோ பார்த்திட்டு எனக்குச் சொல்லிட்டா. விக்ரம் உன் மனைவியோட போட்டோவை எனக்கு அனுப்பிவைக்க, அத வச்சு கூர்க் ல எல்லாத்தயும் ஆதாரத்தோடு சேகரிச்சிட்டுட்டேன்.

 

இப்போ உன் மனைவியும் நீயும் கம்பி எண்ண போறது உறுதி. அதுனால மேற்கொண்டு எதுவும் தெரியாதுன்னு நடிக்காம, உண்மைய சொல்லு” எனக் கூற, “எந்த உண்மைய ?” எனப் பிரகாஷ் விரக்தியோடு கேட்டான்.

 

“உன் மனைவிய கைதுபன்ன அவ எங்கனு சொல்லு?” எனக் கார்த்திக் உறுமலாகவே வினவ, “நான் சொல்லுறேன். ஆனா செத்தவள எப்படிக் கைது செய்வனு நீ சொல்லு” எனக் கூற, சவீதா விக்ரம் கார்த்திக் என அனைவரும் ஸ்தம்பித்தனர்.

 

“ஆமாம்! இப்ப அவ உயிரோட இல்ல” எனக் கூறி நிறுத்திய பிரகாஷின் முகத்தில் அத்தனை வேதனை.

 

Advertisement