Advertisement

புயலோ தென்றலோ – 2

 

“ஆகிடுச்சு விக்ரம்” என்ற வார்த்தைகள் வெளிவந்து விழுந்த நொடி, கார்த்திக்கின் நெஞ்சத்தில் பேரடி. என்ன முயன்றும் கோபத்தை ஏமாற்றத்தை தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவனாய், அதேவேளையில் அதை வெளிக்காட்ட இயலாதவனாகவும் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக நின்றான்.

 

“ஏன் சவீ? எதுக்காக இப்படிச் செஞ்ச? இல்ல தப்பு உன்னிடம் இல்ல. என்னுடையது தான்….உன்ன நம்பினது என்னுடைய தப்புதான்” என எண்ணியபடியே, “பிரகாஷ் நான் என் ரூம் க்கு போறேன்” எனக் கூறியபடியே திரும்பியவன் சிறிது நிதானித்து, “இன்னும் என் ரூம் என்னுடைய ரூமாவே தான் இருக்கா ” என வினவ, பிரகாஷ் சிறு தடுமாற்றத்துடன், “இல்ல, அது… அது வந்து கார்த்திக் நீ கோபப்படாதே. இப்போதைக்கு உன்னுடைய ரூம் சக்தி தங்கி இருக்காங்க. கொஞ்சம் டைம் கொடு, நான் சக்திக்கு வேற கெஸ்ட் ரூம் ரெடி பண்ணிட்டு, உன்னுடைய ரூம் உனக்கே தந்துடறேன்” எனத் தடுமாற்றத்துடன் கூற, எப்பொழுதும் தன்னுடைய அறையை மற்றும் அவனுக்கு உரிய பொருட்களை யாரும் பயன்படுத்துவதை அனுமதிக்காதவன், பயன்படுத்துவதைக் கண்டு கோபம் கொள்பவன் இன்று ஏனோ பிரகாஷின் வார்த்தையில் அமைதி காத்தான்.

 

அமைதிகாத்தான் என்பதை விட, இத்தனை நேரம் நெஞ்சில் பரவிய வலி சற்று மட்டுப்பற்றதாய்கூடத் தோன்றியது.

 

அவனுள் இனம் புரியா நிம்மதிப்பரவ, அது அவனது முகத்திலும் மிளிர, ஆனாலும் அதோடு சேர்ந்து கேள்விகளும் நிரம்பத்தொடங்கின. அதே கேள்விகள், விக்ரமன் நெஞ்சிலும் தோன்றியிருக்க வேண்டும். ஆதலாலே, கார்த்திக்கின் கேள்விகள் விக்ரமின் வார்த்தைகளாக வெளிவந்தன.

 

“பிரகாஷ் ஜி, உங்க மனைவி எதற்கு வேற ரூம்-ல தங்கியிருக்காங்க” என்று வினவ, இத்தனை நேரம் கார்த்திக்கின் கண்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தவள் சட்டென்று அவளைப் பிணைத்திருந்த மாயவலை அறுப்பட்டது போலத் திடிரென்று நடப்பிற்கு வந்தாள். மூவரையும் பார்த்தவள், மீண்டும் ஒருமுறை குழப்பம் நிறைந்த விழிகளால் கார்த்திக்கின் பழுப்பு நிற கண்களை சந்தித்தவள்  எதுவுமே கூறாது “சார் எனக்குத் தலை வலிக்குது, நான் ரூம்க்கு போறேன்” என பிரகாஷிடம் கூறியபடி தனது அறை நோக்கி விரைந்தாள்.

 

ஆனால் வந்த பொழுது அவளிடமிருந்த துள்ளல் செல்லும் பொழுது முற்றிலுமாக வடிந்திருந்தது. தளர்ந்த நடையுடன், விழிகளில் மறைக்கப்பட்ட நீருடன், நெஞ்சில் கனத்துடன் வயிற்றில் குழந்தையைச் சுமந்தபடி சென்றவள், தனது அறையில் தாழ் அடைத்து கதவின் மீதே சாய்ந்து அமர்ந்தாள்…

 

“ஐயோ விக்ரம்? என்ன பேசிட்டிங்க? சக்தி என் மனைவி இல்ல. எனக்குத் திருமணம் ஆகிடுச்சுனு தானே சொன்னேன். சக்தி என் மனைவின்னு சொல்லலியே. நீங்க தெரியாமல் பேசியிருந்தாலும், அவளை உங்க வார்த்தைகள் ரொம்பவே காயப்படுத்திருக்கும். இனியொரு முறை இப்படிப் பேசாதீங்க. சக்தி என் வாழ்க்கையில ரொம்ப முக்கியம்” என பிரகாஷ் அறிவிக்க, அவனது விளக்கம் கார்த்திக்கின் கேள்விகளுக்குக் கிட்டிய விடையா அல்லது புதிரா என்று புரியாமல் போனது.

 

இதைக் கூறியவுடன், பிரகாஷ் அங்கே யாருடைய பதிலையோ கேள்வியையோ சந்திக்க நில்லாது சென்றிருந்தான். ஒருவேளை இருந்திருந்தாலும் விக்ரமின் பதிலில் பிரகாஷ் இன்னமும் நொந்துக்கொள்ளத்தான் வாய்ப்பு அமைந்திருக்கும்.

 

“ஜி, உங்க பிரதர் சொன்னதுலாம் ஒகே… ஆனால் என்கிட்ட எங்க வாள் இருக்கு? என்னுடைய வாள் அந்தப் பொண்ண காயப்படுத்துச்சுனு சொல்றாரு” எனப் புரியாமல் வினவ, கார்த்திக்பார்த்த பார்வையில், “விக்ரம் எஸ்கேப்” எனக் கூறியபடி அகன்றான்.

 

கைகளால் தலையை அழுத்திபிடித்தபடி அங்கிருந்த திவானில் விழுந்தவன், தனது கைகளிலிருந்து கருப்புக்கண்ணாடியை ஒருவித விரக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“உங்க பிரவுன் ஐஸ்-அ நான் எப்பவுமே பார்த்துக்கிட்டே இருக்கணும் கார்த்திக்…” என்ற வார்த்தைகள் சவீதாவின் குரலில் அவனது செவிகளுக்கு மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

 

அக்குரலும் வார்த்தைகளும் அவனது பணிக்கு மட்டும்மல்லாது நிம்மதிக்கும் பெரும் தடையாய் இருக்குமென்பதை உணர்ந்தவன், ஒரு முடிவெடுத்தவனாக அந்தக் கண்ணாடியை அணிந்துக்கொண்டான். அஃது அவனது பழுப்பு நிற கண்களுக்கு மட்டும் திரையிடவில்லை. அவனுடைய உணர்வுகளுக்கும் சேர்த்தே திரையிட்டது.

 

சிலநிமிடங்களுக்குப் பிறகு வந்த பணியாள், பிரகாஷின் கட்டளையின் படி விக்ரமிற்கு ஒரு அறையை ஒழித்துக்கொடுக்க, கார்த்திக்கிற்கும் தற்காலிக அறையொன்று ஒதுக்கப்பட்டது.

 

கார்த்திக்கின் அறையில் சவிதாவும், அதற்கு அடுத்த அறையில் சவியின் நினைவுகளைச் சுமந்தபடி கார்த்திக்கும் தம்தம் எண்ணத்தே உழன்றுகொண்டிருக்க, பிரகாஷோ கார்த்திக் மற்றும் சக்தியின்  நடவடிக்கைகளில் சிந்தனையை ஓட்டிக்கொண்டிருந்தான்.

 

அங்கே எப்பொழுதும் அவரவர் பணி அவரவர் அறை என்று அடங்கிவிடச் சிலசமயங்களில் மட்டுமே அனைவரும் சேர்ந்து உணவு அருந்துவர். அதைவிடுத்து முன்பிருந்தே அவ்வீட்டில் ஒன்றும் பிணைப்போ நலவிசாரிப்புகளோ அன்றாடப் பேச்சு சலசலப்புகளோ இல்லாத காரணத்தால் கார்த்திக்கிற்கு அம்மாளிகையின் அமைதி புதிதாகத் தோன்றவில்லை. ஆனால் விக்ரமிற்கு இத்தகைய சூழல் புதிதென்பதால், அவன் அறையை விட்டு வெளியேறி வர, சவி தனது உடமைகளை வேறொரு அறைக்கு மாற்றிக் கொண்டிருப்பது கண்ணில்படவே அவளிடம் சென்று பேசுவோமா என்ற எண்ணம் தோன்ற, பிரகாஷின் கண்டிப்பும், முன்பே கார்த்திக்கூறிய அறிவுரையும் நினைவில் வர, அவளைத் தள்ளி நின்று ஆழம் பார்க்க தொடங்கினான்.

 

சந்தோசத்தை முழுமையாகத் துடைத்தெடுத்தது போன்ற தோற்றம் அவளது முகத்தில். ஒருவித யோசனையும் அச்சமும் முகமெங்கும் பரவியிருந்தது! படர்ந்திருந்தது !.

 

“நம்ம பார்த்த சவியா இது? என்னால நம்பபவே முடியலை. எவ்ளோ உற்சாகமான பெண் இவள். ஆனா இப்போ அதைச் சொன்ன யாரும் நம்பமாட்டாங்க. அதோட இந்தப் பொண்ணு கன்ஸீவா வேற இருக்கா, அதுனால உற்சாகம் இல்லாம இருக்குமா ? இல்லை இதுக்குப் பின்னாடி வேற காரணம் இருக்குமா ? கார்த்திக்ஜி வேற இங்க அபிஷியல் ஒர்க் -னு சொன்னாரு. ஆனா என்னனு இன்னும் டீடைல்ஸ் தெரியல. சரி பார்போம்” எனச் சிந்தனைகளை ஓட்டினான்.

 

கார்த்திக்கின் சிந்தனைகளைச் சுமந்தபடி, தனது உடமைகளையும் சுமந்துகொண்டு வேறு அறைக்குச் செல்ல, அதைக் கவனித்துக்கொண்டிருந்த விக்ரமின் நெஞ்சில் இன்னும் சில கேள்விகள் பிறந்தன.

 

“சவீதா பிரகாஷோட மனைவி இல்லனா? இந்தப் பொண்ணு இங்க என்ன பண்ணுது…அதோட ஊற விட்டு இங்க வந்து இப்படி இருக்கணும்னு என்ன அவசியம். நான் ரொம்ப முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன். ஆமாம் என்னையும் கார்த்திகையும் இந்தப் பொண்ணுக்கு நல்லா தெருஞ்சும் கூட எதுவுமே பேசாம போய்டுச்சு. அதோட அந்தப் பொண்ணு கார்த்திக்கை  பார்த்த பார்வை சாதாரணமானது இல்ல.” என விக்ரமின் மனதோடு கேள்விகள் வேலியிடாத பயிர்களைப் போன்று வளர்ந்துக்கொண்டே சென்றன.

 

அவனது எண்ணங்களுக்கு வேலியிடவென வந்து சேர்ந்தான் பிரகாஷ்.

 

“விக்கி, ஹா… நான் உங்களை விக்கி னு கூப்பிடலாம்ல?” எனக் கேள்வியோடு வந்தவனை விக்கிரம் புன்னைகையுடன் ஆமோதிக்கவும், “அப்புறம் விக்கி, என்ன மன்னிச்சிடுங்க. புதிய ஆள் நீங்க. உங்களுக்குச் சக்தி பத்தி தெரியாம கேட்டுடீங்க. நான் முகத்துல அறஞ்சது போலப் பேசியிருக்கக் கூடாது. அதோட நானும் சக்தி யாருனு தெளிவா அறிமுகப்படுத்தியிருக்கணும். இதுல தவறு என்னுடையது தான்.

 

சக்தி நீயும் இங்க வாமா…” என விக்ரமிடமும், சக்தியிடம் பொதுவாகப் பேசி இருவரையும் அழைக்க, பேச்சுக்குரல் கேட்டு கார்த்திக்கும் அவனது அறை வாயிலில் வந்து கைகளைக் குறுக்கே கட்டியபடி அம்மூவரின் மீதும் குறிப்பாகச் சவீதாவின் மீது பார்வையை ஓட்டினான்.

 

“சக்தி, இவரு விக்கிரம். இங்க ஏதோ எஸ்டேட் வாங்க வந்திருக்காரு. அப்புறம் கொஞ்சம் முன்னாடி பார்த்தியே, அவன் என் தம்பி கார்த்திக். ஆறு வருசத்துக்கு அப்புறம் இப்போதான் இங்க வந்திருக்கான். நீ தங்கியிருந்தது அவனுடைய அறை. உன்ன கெஸ்ட் ரூம் மாற சொன்னதுக்கு  நீ வருத்தப்படாதம்மா, அவனுக்கு அவனுடைய பொருள் பிறர் உபயோகிக்கிறத விரும்பமாட்டான். நீ இப்போ அவன் இருக்கிற அறைல தங்கிக்கோ. இதோ நான் கார்த்திக்கை கூப்பிடுறேன்” எனக் கூறிமுடிக்க, இத்தனை நேரம் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவன் எதுவும் கேளாதவனாய் அங்கே வர, சவிதா கொஞ்சமும் அவளது முகத்தை நிமிர்த்தாமல் பார்வையைத் தளத்தை நோக்கி பதித்திருந்தாள்.

 

“வா கார்த்திக் உன் ரூம் தயார். நீங்க ரெண்டு பேரும் அறையை சேன்ஜ் பண்ணிக்கோங்க” என பிரகாஷ் கூற, சம்மந்தப்பட்ட இருவரோ யாரோ யாரையோ பற்றிப் பேசுகின்றனர் என்பதாய் நின்றிருந்தனர்.

 

“சக்தி நீ எல்லாம் தூக்கி சிரம படாத. அறைய உடனே மாற்றுவது கொஞ்சம் சிரமம் தான். நான் நம்ம வள்ளியை உனக்கு உதவி பண்ண சொல்லுறேன்” எனச் சமையல் செய்யும் வள்ளியை பிரகாஷ் அழைக்க, கார்த்திக்கின் மனதிலோ, “இவளுக்கு ரூம் மாத்திரத்தலாம் ஒரு சிரமமா ? இவள் ஊற பேர ஏன் ஆளையே சாதாரணமா மாத்திரவள். இதுவெல்லாம் இவளுக்கு ஒரு பொருட்டாவே இருக்காது” என வெறுப்புடன் எண்ணினான்.

 

“இதெல்லாம் ஒகே ஜி, ஆனா நீங்க இன்னும் உங்க மனைவி அப்புறம் உங்க அம்மா இருவரையும் அறிமுகம் செய்யவில்லையே. ஏன் உங்க வீடு இவ்ளோ நிசப்தமா இருக்கு” எனக் கேள்வியை விக்கி முன்வைக்க, இத்தனை நேரம் பிரகாஷின் முகத்தில் மலர்ந்திருந்த இலகுத்தன்மை அடியோடு வாடியது.

 

“என்னாச்சு பிரகாஷ், நீ ஏன் டல்லா தெரியுற?” என கார்த்திக் பிரகாஷின் முகவாட்டத்தை வைத்துக்கேட்டாலும், பிரகாஷின் சோகத்திற்குப் பின்னாலும் சவீதாவின் செயல் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகக் கண்கொண்டு அவள் மீது பார்வை பதித்தபடியே வினவினான். ஆனால் அவளது முகத்தில் எவ்வித மாற்றமோ தடுமாற்றமோ இல்லாத காரணத்தினால், தனக்குள் “கைதேர்ந்த நடிகைதான்” எனக் கூறிக்கொண்டான்.

 

“உங்க ரெண்டு பேரோட கேள்விக்கும் நான் பதில் சொல்றேன். என்னுடன் வாங்க” என அழைத்துச் செல்ல சவிதா மட்டும் தனது புது அறையில் பொருந்துவதற்காகத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டாள்.

 

பிரகாஷுடன் சென்ற கார்த்திக்கும் விக்ரமனும் கண்டகாட்சி கார்த்திகிற்கு வருத்தத்தை அளிக்கவில்லை என்றாலும் சந்தோஷத்தையும் வழங்கவில்லை. அங்கே பக்கவாத நோயால் படுத்திருந்தவரை பார்த்த கார்த்திகிற்கு பிரகாஷின் மீது இரக்கமே சுரந்தது. வசுந்தரவினால் தனக்குத் துன்பமே ஏற்பட்டிருந்தாலும், பிரகாஷுக்கு அவள் அன்னையல்லவா. தன்னுடைய அன்னையை அவன் பிரிந்த நொடியில் பட்ட ரணத்தை பிரகாஷ் நித்தம் நித்தம் எதிர்கொள்கிறான் என்று அறிந்த பொழுது அந்த இரக்கம் வசுந்தராவின் மீதும் ஏற்பட்டது.

 

எதுவும் பேசமுடியாத, எழ முடியாத, தன்னுடைய வேலைகளைத் தானே செய்யமுடியாதவராய் வாழ்வதை விடக் கொடுமை வேறென்ன இருக்க முடியும் இந்தப் பூமியில் வாழ்வோர்க்கு. அந்த நரகத்தைத்தான் வசுந்தரா தற்போது அனுபவித்துக்கொண்டிருந்தாள்.

 

“இது எப்படி ஆச்சு?” என்ற கார்த்திக்கின் கேள்வியில், சிறிது தடுமாறி பின், “என்னுடைய நீண்ட நாள் கேள்வியும் இதுதான் கார்த்திக். அம்மாவே வாய் திறந்து சொன்னால் தான் உண்டு. இங்க வேலை செய்றவங்க கிட்டயும் விசாரிச்சுட்டேன். ஆனால் பலன் இல்லை’ எனக் கூறினான் பிரகாஷ்.

 

பிறகு அவன் அங்கிருந்து அவ்விருவரையும் அழைத்துச் சென்ற அறை மிகவும் விசாலமான பிரம்மாண்டமான அறை. கார்த்திக் அங்கிருந்த காலத்தில் அப்படியொரு அறை இல்லவே இல்லை. இப்பொழுதுதான் புதிதாக அவ்வறையைக் கட்டியிருக்கவேண்டும் என்பதை யூகித்திவிட்ட கார்த்திக் இந்த அறை கட்டியபிறகே வீட்டிற்கு முல்லை வனம் என்று பெயரிட்டுள்ளானோ என எண்ணம் கொண்டாலும், அதைக் கேட்காது அறையைச் சுற்றி நோட்டம்விட்டான். முழுக்க முழுக்கத் தேக்கு மரம் கொண்டு இழைத்திருந்தான் பிரகாஷ். அத்தனையும் வேலைப்பாடுகள் அதிகம் நிறைந்த கட்டுமானம். தரைத்தளம் முழுவதும் தேக்குமரம். சுவர்களில் ஓர் ஆளுயரம்வரை அரண்மனையில் காண்பதை போன்று சித்திரங்களும் பூக்களும் மரத்தால் இழைக்கப்பட்டிருந்தன. ஒருபக்கவாட்டு சுவர் முழுவதும் கண்ணாடி போன்ற தடுப்புமட்டுமே இருந்தது. அக்கண்ணாடி தடுப்பை ஒட்டிய விசாலமான பலகனியும், அதில் ரூப் கார்டன் முறையில் வளர்ந்து நின்ற தாவர கொடிகளும் மலர்களும் அவ்வறைக்கு மேலும் அழகு சேர்த்தன. அந்த அறையைக் காண்போரின் மனதினில் ‘முல்லைவனத்தில் ஓர் மலர் அறை’ என்ற எண்ணம் நிச்சயமாக மலர்ந்தே தீரும். அந்தப் பலகனியின் கூரை கூட மிகவும் விசித்திரமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. கூரையில் விழும் மழை நீர் யாவும் ஒரே இடத்தில் தேங்கி, கூரைக்குக் கீழிருக்கும் செடிகளுக்கு அருவி போலக் கொட்டுவதாய் அமைத்திருந்தனர். மழைக்காலங்களில் அதுவொரு இயற்கை நீரூற்றாகவும் மற்றகாலங்களில் சாதாரண அழகு வேலைப்பாடின் வெளிப்பாடாகவும் பார்ப்பவர்களுக்குத் தெரியும்படி அமைந்திருந்தன.

 

மாளிகையைப் பற்றி வருணிக்க இருவரிகள் வேண்டுமானால், அம்மாளிகைக்குள் மறைந்திருந்த இந்த மலர் அறையை வர்ணிக்கக் குறைந்தது இருப்பது வரிகளேனும் வேண்டுவனவாக இருந்தன.

 

இவையனைத்தையும் மூவரும் தம்தம் கண்ணோட்டத்தில் பார்த்தனர். பிரகாஷ் விரக்தியுடனும் விக்ரம் பிரம்மிப்புடனும் கார்த்திக் ஆராய்ச்சியுடனும் கண்டனர்.

 

“கார்த்திக் என் மனைவி பார்க்கணும்னு கேட்டியே, இவள் தான்” என பிரகாஷ் காட்டிய இடத்தில் உறைந்த புன்னைகையுடன் பார்ப்பவர்களை வசீகரிக்கும் அழகுடன் நிழலாய் புகைப்படச் சட்டத்திற்குள் வீற்றிருந்தாள் அவனின் வீட்டரசி.

 

அதைப் பார்த்தவுடன் பிரகாஷின் கூற்றைச் சரியாகப் புரிந்துக்கொள்ள முடியாமல் கார்த்திக்கும் விக்ரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, பிரகாஷ் அவர்களின் பார்வைக்குப் பதிலளிக்கத் தொடங்கினான்.

 

“என் மனைவி, இப்போ நிழலாய் நம்ம முன்னாடி இருக்காள். நிஜத்தில் எங்கிருக்கானு எனக்குத் தெரியல. நான் கொடைக்கானல் எஸ்டேட் போய்ட்டு வரும் பொழுது அவள் வீட்டில் இல்லை. அவளைத் தேடாத இடம்னு இந்த வால்பாறையில் எதுவும் இல்லை. எல்லாக் கம்பளைண்ட்டும் கொடுத்துட்டேன். ஆனாலும் எனக்குப் பதிலும் இல்லை பலனும் இல்லை. நிச்சயம் ஒருநாள் என்னைத் தேடி வருவான்னு நம்பிக்கையோட காத்திட்டு இருக்கேன். இது அவளுக்காக நான் உருவாக்கின அறை. அவள் பெரும்பாலும் தன்னுடைய பொழுதை இங்கேதான் கழிப்பாள். அதுனால இந்த அறைய பார்க்கும் போது எனக்கு அவளுடைய நினைவுகள் அதிகமா வருது. சோ எப்போதும் இது பூட்டியே தான் இருக்கு அவள் இங்கிருந்து சென்ற பிறகு.” எனக் குரலில் விரக்திமட்டுமே நிறைந்திருக்கக் கூறி முடித்தான்.

 

“என்ன பிரகாஷ் நீ? இத்தனை நடந்திருக்கு. பெரியம்மா படுத்தப்படுக்கை ஆகிருக்காங்க. உனக்குத் திருமணம் ஆகிருக்கு, ஆனா திருமணம் நடந்தும் நடவாதவன் போல மனைவியைத் தொலைச்சிட்டு நிக்கிற. என்கிட்டே எதுவுமே சொல்லணும்னு தோணலியா? நம்ம எல்லாத்தையும் பகிர்ந்துகிற அளவுக்கு நெருக்கம் இல்லனாலும், இப்படி எல்லாத்துலயும் என்ன மறக்குற அளவுக்கு நம்ம எதிரிகள் ஆகிட்டோமா? இல்ல பெரியம்மா என் மீது சுமத்தின அத்தனை பழிகளையும் நீயும் நம்புறியா ?” என ஆற்றாமையோடு கார்த்திக்தனது உள்ளதே அரித்த கேள்விகளைக் கேட்க, கேட்கப்பட்ட இக்கேள்விக்குப் பதிலில்லாது அவனின் மனைவியின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

எதையுமே கேட்க கார்த்திக் பிரியம் கொள்ளாவிட்டாலும், அக்குடும்பத்தில் மீண்டும் இணையும் ஆசையும் இல்லாது போனாலும், தன்னை இத்தனை தூரம் வெறுப்பதின் காரணம் என்ன என்ற கேள்வி தொடர்ந்து அவனைத் துரத்திக்கொண்டே வர, இறுதியாகக் கேட்டேவிட்டான். ஆனால் பதில்கூறும் இடத்திலிருந்தவனோ நிழலோவியத்தில் சிரித்துக்கொண்டிருந்தவளை கண்டு கண்ணீர் உகிர்க்க தொடங்கியிருந்தான்.

 

“கார்த்திக்ஜி, இப்போ நீங்க கேட்ட எந்தக் கேள்வியும் உங்க அண்ணன் கவனிக்கவே இல்ல. இல்ல கவினிக்கிற நிலையில் இல்லாதவர் போல நிக்கிறாரு. முதல்ல நாம அவரை இந்தக் அறையை விட்டு கூப்பிட்டு போவோம். பிறகு எதுனாலும் விசாரிப்போம்” எனக் கூற, கார்த்திக்கும் விக்ரமனின் கூற்றில் உள்ள மெய் உணர்ந்து பிரகாஷையும் அழைத்துக்கொண்டு வெளிவந்தனர்.

 

அன்றைய பொழுது முழுவதும் அனைவர்க்கும் தம் தம் கடந்த காலங்களிலும் விடைதெரியா நிகழ்காலச் சம்பவங்களிலும் பூதாகரமாய் எதிர்நோக்கி வரும் எதிர்காலத்திலும் எனச் சிந்தனைகளை ஓட்டிக்கொண்டிருக்க, மறுநாள்பொழுதும் பற்பல மர்மங்களை லாவகமாகத் தன்னுள் புதைத்தபடி, முந்தின இரவு முழுவதும் தன்னுள் புதையுண்டிருந்த சூரியனை தோண்டி வெளியே எரிந்தது. அழகாய் புதுகாலையொன்று மலர்ந்தது.

 

ஆதவன் கதிர்களை முழுமையாக வால்பாறை பணிகளில் ஊடுருவமுடியாது பாதி ஒளியும் மீதி இருளுமென மிகவும் ரம்யமாக அலர்ந்திருந்த அழகிய வேளையில், பறைவைகளில் கீச்சிடும் ஒலிகளுடன் இணைந்து முருகனின் வழிப்பாட்டு பாடலும் காற்றுடன் கலந்து உறவாடியது.

 

காற்றுடன் கலந்த பாடல், கார்த்திக்கின் காதுகளையும் தீண்டிச்செல்ல, அந்தப் பாடல் அதே பாடல் தான் கார்த்திக், சவிதாவை பார்ப்பதற்கு காரணமாக இருந்தது.. எதைத் தன்னுள் நிறைந்தரமாய்ப் புதைக்கவேண்டும் என்று நினைத்தானோ அதை அப்பாடல் முழுமையாகத் தோண்டி எடுத்துவிடவே அவனது எண்ணங்கள் சில மாதங்கள் பின்னோக்கி நகரத் தொடங்கின.

 

குடகு மலை….

 

காவேரியில் நீர் செழித்தோங்க குடகு நாட்டுப் பொன்மலையின் இடி முழங்கவேண்டும் எனச் சங்கத்தமிழ் சிறப்பித்துக் கூறும் குடகு மலையின் பிரம்மகிரி மலைத்தொடரிலும், வயநாடு எல்லையிலும் அமைந்த இருப்பு நீர்வீழ்ச்சியின் ஓசை, இயற்கையின் யாழிசையாய் ஒலிக்க, திரும்புகின்ற திக்கெல்லாம் பசுமை பரவிக்கிடந்தது.

 

நீர் சலசலக்கும் ஓசை, கண்ணெட்டும் தூரம்வரை பசுமை, உடலை மெலிதாக இதமாகத் தாலாட்டும் குளிர், ஆங்காங்கே கீச்சிடும் பறவைகளின் ஒலி, மங்கலான சூரிய வெளிச்சம், மந்தமான மேக கூட்டமெனக் குடகு மலை இன்னொரு அதிசயமாகவே கார்த்திக்கிற்கு தோன்றியது. வால்பாறையை விட்டு வந்தவனை அரவணைத்துக் கொண்டது குடகு மலை. குறிஞ்சியில் வாழ்ந்தவனால் குடும்பத்தைப் பிரிந்தாலும் குறிஞ்சியைப் பிரிவது கடினமாகத் தோன்றவே, பணிமுன்னிட்டோ பயணம் முன்னிட்டோ ஏதோ ஒரு காரணம் பிடித்து மலைகளை ரசிப்பதற்கும் மலைக்காற்றைச் சுவாசிப்பதற்குச் சந்தர்ப்பத்தை உருவாக்கி கொள்வான்.

 

அப்படி அவனாகவே விருப்பப்பட்டு மூன்று மாத பணிக்காக வந்த இடம்தான் குடகின் மடிக்கேரி பகுதி. ஆம், கார்த்திக் தனது பெயரின் பின்னால் மிகவும் வலிமையான பட்டத்தைத் தன் உழைப்பின் மூலம் பொருத்திக்கொண்டான். ‘சென்ட்ரல் பியூரே ஆப் இன்வெஸ்டிகேஷின் ஆபிசர்’ இதுவே அவனது அடையாளம். பெங்களூரு கிளையில் அவனது பணி, இருப்பினும் விசாரணை முன்னிட்டும் குற்றங்கள் முன்னிட்டும் வெவ்வேறு ஊருக்கும் இடத்திற்கும் அவனுடைய அலுவல் மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்க, மலைவாழ் பகுதிகளில் நடக்கும் வேலைகளை விரும்பி பெற்றுக்கொள்வான். அப்படி தற்காலிகமாக, குடகு மலை மடிக்கேரியில் நிகழ்ந்த குற்றத்தின் பின்னணியைக் கண்டறியும் பணிக்காக நியமிக்கப்பட்டவன் அது சம்மந்தமான ரகசிய விசாரணைக்கு இருப்பு நீர்வீழ்ச்சி அருகினில் இருக்கும் வனப்பகுதிக்கு வந்திருந்தான்.

 

வந்திருந்த வேலை நிறைவுபெற, இயற்கையோடு உறவாடும் தனது வேலையைத் தொடங்கினான்.

 

குடகு மலை காற்று அவனது தேகத்தை தொட்டுச் செல்ல, அதில் இருப்பு நீர்வீழ்ச்சியின் சாரலும், மேகதாரகையின் லேசான தூறலும், காட்டு பூக்களின் வாசனைகளும், அருகினில் இருந்த சிறு கோவிலின் மணி ஓசையும் அதோடு சேர்த்துக் கேட்போர்களைக் கட்டிப்போடும் ஈர்ப்புக் கொண்ட அழகிய பெண்குரலும் காற்றில் கலந்து தவழ்ந்து வந்தது.

 

அந்த வனப்பகுதியின் ஒற்றையடி பாதையிலே கண்போன திசையிலே பசுமையைக் கண்களில் நிறைத்தபடி நடந்துக்கொண்டிருந்தவன், காற்றுடன் கலந்துவந்த பாடலின் ஓசைகேட்டு இசைவரும் திசைகளைத் தேடி தேடி தேடலுடன் நடக்கத் தொடங்கினான்.

 

அடர்ந்து வளர்ந்திருந்த நான்கைந்து பலாமரங்களுக்கு நடுவினிலே சிறிய வேசரா வகையிலான கட்டுமானத்தையுடைய கோவில் காணப்பட, அதில் மூன்று சந்நிதிகளே காணப்பட்டாலும் அதில் ஒன்று தமிழ் கடவுள் முருகனின் திருசிலை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது…..

 

சிறிய சந்நிதியின் முன் அழகிய பெண்ணொருத்தி மனமுருகி வேண்டிக்கொண்டிருக்க, பாடியவள் இவளாகத்தான் இருக்கவேண்டும் என யூகித்தவன் அவள் முன் விஜயமானான்.

 

“ஹெலோ, நீங்கதானா?” என எதுவும் விளக்காத கேள்வியோடு விளக்கங்கள் அறிய கார்த்திக் அவள் முன்.

 

“நீங்க என்ன கேக்குறீங்க? யார் நீங்க ?”

 

“சாரி, நான் கார்த்திக். இங்க டூரிஸ்ட். கொஞ்சம் முன்னாடி முருகன் பாட்டு கேட்டுச்சு. அதைப் பாடினது நீங்கலானு கேட்டேன்”

 

“ஆமாம், அதைத் தெருஞ்சு நீங்க என்ன பண்ண போறீங்க?”

 

“பாடலின் குரல் உங்களுடையதுனா, உங்களது பெயரை தெருஞ்சுக்கப் போறேன்.”

 

“நான் அனாவசியமா யாருகிட்டயும் என்னுடைய பெயரை சொல்லவிரும்புறது இல்ல”

 

“ஓ அப்போ பாடினது நீங்கதான். குட். ஒகே…நேம் வேண்டாம் பட் ஆராத்தி காட்டலாமே”

 

“நான் ஏன் உங்களுக்குக் காட்டணும்…”

 

“என்னங்க இது? இந்தக் கோவில்ல நீங்க மட்டும் தான் இருக்கீங்க. இந்தக் கோவிலோ வனத்திலே இருக்கு. வேற யாரும் இல்லை. நீங்க ஆராதனை காட்டிருக்கீங்க. உங்க கையில தீபத்தட்டும் இருக்கு. அப்போ நீங்க காட்டாம வேற யாரு காட்டுவா ?” என இவ்வாறாக கார்த்திக்சற்று முன் சந்தித்த அந்தப் பெண்ணிடம் வார்த்தையாட, அவ்ளோ இவனை எப்படித் தவிர்ப்பது என்ற நோக்கோடு ஆரத்தி தட்டை அவன் முன் நீட்ட, முருகன் சந்நிதியிலே, இருவருக்கும் இடையிலே அழகாக மிளிர்ந்த சிறு தீபத்தை கார்த்திக்கின் கைகள் நீண்டு கண்களில் ஒற்ற முயன்ற நொடி அது சட்டென்று அணைந்துவிட, இதை எதிர்ப்பார்க்காத இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, அப்பெண் சட்டென்று ஓர் அடி பின் நகர்ந்தாள்.

 

ஆரத்தி தீபம் அணைந்தது தற்செயலோ கடவுளின் செயலோ…..

 

Advertisement