Advertisement

புயலோ தென்றலோ – 19

 

“நீ பதட்டமாகாத. பொறுமையா பேசு… பக்கத்துல விக்ரம் இருக்கானா?”

 

“ஆமா இருக்காரு”

 

“சரி விக்ரமட்ட போன கொடு”எனக் கூற, அவளும் ஒன்றும் பேசாமல் விக்ரமிடம் கொடுக்க, அவன் கையில் வாங்கிக் காதுகளுக்குக் கொடுத்தான்.

 

“சொல்லு கார்த்திக்”

 

“சவீ என்ன சொல்றான்னு சரியா பார்த்து முடுஞ்ச அளவு தகவல் திரட்டு. இங்க ஒரு முக்கியமான விசாரணையில இருக்கேன். எந்தக் காரணக் கொண்டு அந்தப் பொண்ண விட்றாத. அவ ரொம்ப முக்கியம்” எனக் கூறி விக்ரமின் பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்திருந்தான்.

 

உண்மையில் அவன் இதுவரையிலும் குற்றவாளி யாரென்று கண்டறியவில்லை. ஆனால் கண்காணிப்புக் கருவியில் பதிவாகியிருந்த காட்சியில் தெரிந்த இருவரில் ஒருவனின் முகம் மட்டும் தெளிவாகப் பதிவாகியிருக்க அவனுடன் காட்டேஜ் இருக்கும் திசை நோக்கி சென்ற பெண்ணின் முகம் தெளிவாகத் தெரியவில்லை.ரிசார்டின் ஊழியர்களும் எவன் என அடையாளம் தெரிந்தும் அனைவரையும் கார்த்திகேயன் வரவைத்ததின் நோக்கம், இந்த விசாரணையின் பொது ஒவ்வொருவரின் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளை அறியவே.

 

இவன் மட்டும்தானா ? அல்லது கூட்டாக உள்ளனரா ? என அறியவே இந்த ஏற்பாடு. சக அதிகாரிகள் பேசும்பொழுது இவன் நின்ற அனைவரின் முகத்தையே ஆழ்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

 

அதில் மற்றவர்களுக்கு எதுவும் புரியாத பதற்றமே தெரிந்தது. ஆனால் அடிவாங்கியவன் மட்டும் திருட்டு பார்வையுடன் நின்றிருக்க, இவன் மட்டும்தான் சம்மந்தப்பட்டுள்ளான் என்ற முடிவுக்கு வந்தான்… அதிலும் அவனை அரைந்ததற்குக் காரணம் எதையேனும் மறைக்கவேண்டும் என்று நினைத்தால் கூட மறைக்கும் எண்ணம் நின்றவர்களுக்கு வர கூடாது என்பதற்காகவே இந்த அடி.

 

“சொல்லு” என்பதைக் கார்த்திகேயன் ஒற்றைச் சொல் சொல்ல, “சார் நீங்க நினைக்கிறத போல நான் கொலபண்ற அளவு தில்லானா ஆள் இல்ல. இன்னும் சொல்லப்போனா இங்க வேல இல்லாட்டி கஞ்சிக்கு நாதி இல்லாதவ. என்னோட நிலமை அய்யாக்கு நல்லா தெரியும்.

 

அவரு எண்ட ஒரு வேல கொடுத்தாருங்க. அத நான் செய்யலைன்னா என் வேல போயிடும்னு சொன்னாரு. மனசுக்கு ஒப்பாட்டியும் அந்த வேலைய நான் செஞ்சேன். அதுக்குமேல இந்தக் கொலை எல்லா என்னால கனவுல கூட நினைக்க முடியாது சார். என்ன நம்புங்க சார்” எனக் கதறி அழுதான்.

 

சக அதிகாரி ஒருவன் அவனைத் தூக்கி நிறுத்தி, “அப்படி என்ன வேல பாத்துக்கொடுத்த?” என்று வினவ, சிறு தடுமாற்றத்துடனே, பெண் ஊழியர்களைச் சங்கடமாகப் பார்த்துக்கொண்டு, “இல்ல பொண்ணு விஷய. அது முதலாளி கொஞ்ச அப்டி இப்டி. அவர பார்க்க பொண்ணுங்க வருவாங்க. யாருக்கு தெரியாம நான் அவுங்கள…” எனத் தடுமாறியவன் மென்று முழுங்கியபடியே “அவர்கிட்ட விட்டுடுவேன்” அவ்ளோதான் தெரியும்ங்க எனக் கைகளால் முகத்தை மூடியபடி அழ தொடங்கினான்.

 

“சரி கடைசியா எப்பவிட்ட?” எனக் கார்த்திகேயன் வினவ, “அய்யா சாக இரெண்டு நாள் முன்னாடி” என யோசித்தபடியே கூறினான்.

 

“நல்லா யோசிச்சு சொல்லு. அதுக்கு அப்புறம் வேற யாரும் வரலியா ?”

 

“இல்ல சார்! ரிஸார்டுல இருந்துட்டு யாரும் அய்யாவை பார்க்க போகல. போயிருந்த எனக்குத் தெரிஞ்சிருக்கும்.”

“சரி அன்னைக்கு நீ விட்ட பொண்ணு இப்ப எங்க இருப்பா” என வினவ, இவன் ஒரு விலாசத்தைத் தர, இவனைக் காவலில் வைக்கும்படிகூறிவிட்டுப் பெண் அதிகாரியை மட்டும் அழைத்துக்கொண்டு அந்தப் பெண் இருக்கும் இடம் நோக்கி சென்றுகொண்டிருந்தான்.

 

மறுபுறமோ, சவீதா காட்டிய பெண்ணைக் கண்டு மேற்கொண்டு எப்படி என்ன செய்வதென்று தெரியாமல் விக்ரம் குழப்பத்தில் சிக்கியிருந்தான். சவீதாவிற்கும் அதே மன நிலை தான். குழைந்தை பெற்று ஒருவாரமே ஆகியிருந்த நிலையில் அதன் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க முடியாமல் ஒன்று மாற்றி ஒன்று வர உழன்று துவண்டு போனாள்.

 

கார்த்திகேயன் அறிவான்! இப்போது பார்க்க செல்லும் பெண் இந்தக் கொலையைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று. ஏனெனில் அவள் தான் வந்த அன்றே சென்றுவிட்டாளே. அதோடு சவீதா வேறு தான் பார்த்த பெண் வால்பாறையில் இருப்பதாகக் கூற, நிச்சயம் இவளாக இருக்காது என்று அறிந்தே அங்குச் சென்றான். காரணம் ஏதேனும் ருசுவோ தொடர்போ கிடைக்கக் கூடுமென்று.

 

அவன் எண்ணம் பொய்த்து போகவில்லை.

 

அந்தப் பெண் முதலில் மிரண்டாலும் பிறகு மெல்ல வாய்திறந்தாள்.

 

தான் அருணை அவ்வப்போது சந்தித்தது உண்மை தான் என்றும் அதைத் தவிரத் தனக்கும் இதற்கும் சம்மதம் இல்லை என்று இவள் கூற, கார்த்திகேயன் அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.

 

“சரி நீ அவனைக் கடைசியா எப்ப பார்த்த?”

 

“கொலை நடந்ததுக்கு முதல் நாள் பார்த்தே” என மெல்லிய தடுமாற்றத்துடன் கூறினாள்

 

“அப்படியா? ஆனா , நீ அருண் காட்டேஜ் போனது இரண்டு நாளுக்கு முன்னாடி தான. அப்படியிருக்க இப்படிச் சொல்லுற ? எங்ககிட்ட இருந்து எதையும் மறைக்க மாத்தி பேசுறியா ?” எனச் சந்தேகத்துடன் வினவ, “இல்ல இல்ல . நான் பொய் சொல்லல. மாத்தியும் பேசல. என்ன நம்புங்க, நீங்க சொன்ன தேதிலயும் பார்த்தே, அதுக்கு அடுத்த நாளு பார்த்தேன்”

 

“அப்படியா? எங்க பார்த்த ? ”

 

“வெளில, கொஞ்ச ஒதுக்குபுறமான ஏரியா அது. அங்க ஒரு பொண்ணுகூடக் கொஞ்சம் க்ளோசா இருந்தாரு”

 

“க்ளோஸானா?”

 

“அது, கட்டிபிடிச்ச போல…”

 

“ஓ … மேல சொல்லு”

 

“ஆனா அந்தப் பொண்ணு ஏதோ கோவமா இருந்தது போல. இவர விலக்கி நிப்பாட்டி ஏதோ வாக்குவாதம் போல இருந்தது”

 

“சரி? என்ன பேசிக்கிட்டங்கா ?”

 

“எனக்குத் தெரியல. ஆனா அங்க தான் என் விதி விளையாடறிச்சு. நான் பேசாம போயிருக்கணும். அத விட்டுட்டு அருண்கிட்ட போய், அந்தப் பொண்ணுக்கு என்ன ரேட்னு கேட்க, அந்தப் பொண்ணு ஓங்கி என்ன ஒரு அடி அடிச்சா பாக்கணும்” எனக் கூறியபடி கையைஎடுத்து தன் கண்ணத்தில் வைத்துக்கொண்டாள். ஏதோ அப்போது தான் அடிவாங்கியவளை போல.

 

“அந்த அடியே பேசிச்சு சார். அந்தப் பொண்ணு அப்படியில்லன்னு… தேவ இல்லாம உள்ள வந்து பேசி பெரிய பிரச்சனையைப் பண்ணிட்டே. அப்போ அருண் என்ன பார்த்த பார்வை இருக்கே. இப்போ நினைச்சாலும் எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது. அந்தப் பொண்ணு கிளம்ப, அருண் முறச்சிட்டு அவ பின்னாடியே போனான். திரும்ப வந்தா என்ன செய்வானோனு ரொம்பப் பதட்டமா இருந்தேன். ஆனா இரண்டு நாள் கழிச்சு அவன் செத்து ட்டானு தகவல் தான் வந்துச்சு. அதுவும் பேப்பர்ல பார்த்து தெருஞ்சுகிட்டே” எனக் கூறி முடிக்க, கார்த்திகேயன் நிதானமாக அந்தக் கேள்வியைக் கேட்டான்.

 

“ஓ திரும்பவந்தா அருண் எதாவது செய்வான்னு பயந்து முந்திக்கிட்டு நீ அவனைக் கொன்னுட்டியோ?” எனக் கேட்க அப்பெண்ணிற்கு மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்கியது.

 

“சார்..” என அவசரமாக ஏதோ கூறவற, அதைத் தடுத்தவன், “சும்மா சொல்லி பாத்தேன். உண்மை சீக்கிரம் வெளில வரும். இனிமேல் நீ எங்க ஆளுங்க கிட்ட கேட்காம எங்கயும் வெளில போகக்கூடாது. புருஞ்சுதா ? மீறி தப்பிக்கப் பாத்த எங்க இருந்தாலும் வந்து தூக்கி மொத்த கேஸ் யும் உன் மேல எழுதிடுவேன்.

 

என்ன வெளில தப்பிக்க ஐடியா இருக்கா ?” என ஒரு பிரவத்தை மட்டும் ஏற்றி இறக்கி வினவ, அவள் தலை தானாக இல்லை என்பதாக ஆடியது.

 

அவளை மிரட்டியவன், அனைத்தையும் ஆவணப்படுத்திவிட்டு விக்ரமிற்கு அழைக்க, விக்ரம் கூறிய செய்தியில் ஸ்தம்பித்தான்.

 

“நிலம இன்னும் சீரியஸ் தான் ஆகுது. சரி நான் சொல்றபடி பண்ணு. ரொம்ப ரகசியமா இருக்கட்டும். சவீதாக்கு கூட இது தெரியவேணாம். நீ தனியா காரியத்துல இறங்கு.

 

நானும் இங்க சவீதா பத்தி தெருஞ்சுக்க ஒரு விஷயம் மிச்சமிருக்கு” எனக் கூறியபடி அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என்ற விஷயங்களை விக்ரமிடம் கூற, விக்ரம் மிகவும் கவனமாக உள்வாங்கிக்கொண்டான்.

 

அதோடு விக்ரமையும் சில தகவல்களைச் சேகரித்து உடனே தனக்கு அனுப்புபடி கூறிவிட்டு நேராக அவன் சென்ற இடம் குட்ட கிராமத்தில் உள்ள அவர்களின் வீடு.

 

அந்த வீடு காதலான நினைவுகளை இனிக்க இனிக்க அவனுக்கு ஊட்டியது. எங்கும் சவீதாவே நிறைந்திருந்தாள். அவளை இத்தனை நாட்களாய் தவறவிட்ட தன் மனதை தன் மனமே சாடியது. அந்தச் சாடல், அப்படியொரு காணொளியை அனுப்பியவனைக் கண்டறியும் உத்வேகத்தையும் அளித்தது.

 

ஆனால் அந்த எண் அப்போதே பயன்பாட்டில் இல்ல என்று வந்திருந்ததால் அந்த எண்ணை கொண்டு அனுப்பியவனைக் கண்டறியும் வழி இல்லாது போனது. மேலும் அந்த எண் இறந்து போன ஒருவரின் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. இவையெல்லாம் முன்பே தெரிந்தது தான். ஆனால் அதே விஷயம் இப்போது புதிதாக அவனுக்குத் தெரிந்தது.

 

அஃது அனைத்துமே திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. தற்செயலாகச் சவீதா பேசியதை அவர்கள் பதிவு செய்து அனுப்பவில்லை. திட்டமிட்டு அவளைப் பேச வைத்து, அதைப் பதிவுச் செய்து அனுப்பியுள்ளார்கள். அப்படி அனுப்ப காரணம் என்ன ? அவர்களுக்கும் சவீதாவிற்கும் என்ன பகை ? இதுவே அவனுடைய சிந்தனையாக இருந்தது.

 

“இந்த வீடியோல எங்கயும் எந்த மாற்றமும் பண்ணல. எதையும் வெட்டல சேர்க்கல. முழுசுமே சவீதாவே பேசியிருக்கா. அத தான் நாம அன்னைக்கே கண்டுபிடிச்சுட்டோமே. வெட்டாம சேர்க்காம இப்படியொரு வீடியோ எப்படிச் சாத்தியமாச்சு ? சவீதா எந்த அர்த்தத்துல இதெல்லாம் சொன்னா…?” எனக் கேள்வி எழுப்பியபடி மீண்டும் அதையே யோசிக்கச் சட்டென்று கார்த்திகேயனின் முகம் பிரகாசமானது.

 

“எதையும் அந்த வீடியோல புதுசா சேர்க்கல. ஆனா எதையாச்சும் வெட்டியிருந்தால். சவீதா பேசுன முழுப் பதிவா இது இல்லாம இருந்தால் ? அப்படியிருந்தாலும் வீடியோவை பாதிக் கட் பண்ணியிருந்தாலும் அஃது எத வச்சுப் பதிவு செஞ்சாங்களோ அதுலதான் இருக்கும்.

 

வெட்டப்பட்ட பகுதி இந்தப் போன்ல இருக்க வாய்ப்பில்லை” என எண்ணியபடியே, சவீதாவின் கைபேசியை உயிர்பிக்க, அது வெகு நாட்களாக அனைத்து வைக்கப்பட்டிருந்ததால் உடனடியாக வேலை செய்யவில்லை.

 

சார்ஜ் போட்டும் அஃது உயிர் பெறாததால், சற்றுத் தொலைவு தான் என்றாலும் மடிகேரிவரை தாமதிக்காமல் அவளின் கைபேசியுடன் சென்றான். ஒரு கைபேசி பழுது பார்க்கும் கடைக்குச் சென்றவன், சில நூறுகளைத் தாராளாமாய் அள்ளிக்கொடுத்து அவசரமென்று வலியுறுத்த, அவர்களும் துரிதமாகச் செயலில் இறங்கி வேலையைத் தொடங்க ஆயுத்தமானார்.

 

“என்ன சார் கம்பளைண்ட்? போன் ஆன் ஆகலையா இல்ல போன்ல அழிஞ்சுப்போன தகவல் எதுவும் எடுத்து தரணுமா ?” என வினவ, சட்டென்று யோசித்தவன், “இரண்டும்” எனக் கூறினான். இப்படிக் கூறியதால் ஏதேனும் தகவல் கிடைக்கக் கூடுமா என உறுதியாகத் தெரியாது தான். ஆனாலும் ஏதாவது தெரியவந்தால் ? அந்தக் கேள்வி அவனுள் எழுந்தவுடன் “இரண்டும்” எனக் கூறியிருந்தான்.

 

கடையிலே அமர்ந்து வேலை முடியும்வரை காத்திருந்து, கடைக்காரன் வேலை முடிந்தது எனக் கூறும் வரையிலும் பதற்றமான நிலையிலே கார்த்திகேயன் இருந்தான்.

 

அதை உயிர்ப்பிக்கும் வரையிலும் கூட அவனின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டதே ஒழிய வேரோடு பிடிங்க எறியப்படவில்லை. ஆனால் அதை உயிர்பித்து அதிலிருந்த சில காணொளிகளைக் கண்ட பிறகு கார்த்திக் அதிகமான குற்ற உணர்ச்சியில் சிக்கி தவித்தான்.

 

ஆம்! அதில் முக்கியமான இரண்டு காணொளிகள் இருந்தன. அவை அவனுக்குப் புதிது. ஒன்றை ஓடவிட, சவீதா வெக்கம் கலந்த மகிழ்ச்சியுடன் தோன்றினாள்.

 

“மாமா… என்ன ஆச்சர்யமா இருக்கா? மாமான்னு கூபிட்றேன்னு. நீங்க எத்தனையோ நாள் கேட்டும் நா உங்கள கூப்பிடவே இல்ல. அதுக்குக் காரணம் இப்ப கூப்பிடணும்னு தான். நம்மளும் ஒரு குடும்ப ஆகப் போறோம் மாமா. நமக்கே நமக்குன்னு ஒரு பாப்பா வர போகுது.

 

உங்கள நேர்ல பார்த்து எப்படா சொல்லுவோம்னு எனக்கு ரொம்ப ரொம்பச் சந்தோசமா இருக்கு. இப்போதான் உறுதி ஆச்சு. அப்புறம் ஏன் டி இப்படிப் போன்ல தனியா பொலம்புறனு கேக்குறீங்களா ?

 

என்னபண்ண ? நீங்க எப்ப வருவீங்களோ. இப்ப இருக்க அதே சந்தோஷத்தோட உங்ககிட்ட சொல்றத பதிச்சு வச்சுக்கப் போறேன். அதுக்குத் தான்.

 

இல்ல இது சரியா வராது. நான் நேர்ல சொல்றபோல இருக்காதே. இத நான் அழிச்சிடறேன். நிஜத்துல நீங்க இருக்கும் போது நிழல் படம் எதுக்கு? வேணம்ல…

 

ஆனா மறுபடியும் மாமான்னு சொல்லி பார்ப்போமா ?

 

மாமா மாமா மாமா ” எனப் பேசியதோடு அந்தக் காணொளி நிறைவு பெற காணொளியில் சவீதாவின் கண்களில் தெரிந்த வெக்கம் கலந்த சந்தோசத்தைக் கண்டவன் கண்களில் குற்ற உணர்ச்சி மேலோங்கியது.

 

அடுத்தக் காணொளியை காண, அது மீண்டும் சவீதா அன்று பேசிய அதே காணொளி தான். அதைப் பார்க்க விருப்பமில்லாமல் அணைக்கச் சென்றவன், தனக்குள், “என்ன ? ஒரே வீடியோ இரெண்டு முறை இருக்கு. அப்போ ஒன்னுதானே இருந்தது” என எண்ணியபடியே அதை ஓடவிட, அன்று அவன் பார்த்ததை விடவும் நீளமாகச் சென்றுக்கொண்டே இருந்தது.

 

கார்த்திக் சரியாகப் புரிந்துகொண்டான். ஒரு காணொளியில் முழுவதுமாகப் பதியப்பட்டிருக்க மற்றொன்றில் சிலதை வெட்டி மாற்றியுள்ளார்களென்று. அதிலிருந்த சாராம்சம் இதுவே.

 

“என்ன விஜய் ஓகேயா? இது போல எடுக்குற படத்துக்கு டயலொக் வந்தா போதும்ல ? உன் ஆர்ட்டிஸ்ட் வச்சே நீ பண்ண வேண்டியது தான. நா எவ்ளோ அவசரமா கிளம்பிட்டு இருக்கேன், இப்போ போய் இப்படி இம்ச பண்ற” எனச் சவீதா அலுப்புடன் கூற, அந்த முகம் தெரியாத நபர் அவளுக்குப் பதில் கூறினான்.

 

“இல்ல சவீ! இந்தப் பொண்ணு ஜூனியர். இதுக்கு நடிப்பு சுத்தமா வரமாட்டிக்கிது. யாராச்சும் பண்ணி காமிச்சா பண்ணும்னு தான் உன்ன கூப்பிட்டேன். உனக்குத் தான் மோனோ ஆக்ட்டிங் செமையா வருமே. ஸ்கூல்ல கூடச் செம சூப்பரா பண்ணுவல. அதுனாலதான் ப்ளீஸ் கோச்சுகாத”

 

“அதெல்லாம் சரி! ஆனா எனச் சவீனு கூப்பிடாத. அவர் மட்டும் தான் என்ன சவினு கூப்பிடனும்”

 

“ஓ? இன்னும் எத்தனை நாளைக்கு”

 

“என்ன சொல்ற விஜய்.?”

 

சிறு தடுமாற்றத்துடன், “இல்ல குழந்தை வந்துட்டா உனக்குச் செல்ல பேரு இல்லனு சொல்ல வந்தேன்” எனக் கூற, “சரி, நான் கிளம்புறேன் விஜய். ஒரு ரிசார்ட் ல ஆர்டர் கிடைச்சிருக்கு. பாப்போம்” எனக்கூறிவிட்டு செல்ல, காணொளி சிறு அசைவுகளுடன் காட்சிகளைக் காட்டாமல் ஆட, ஒரு சில நொடிகளில் இத்தனை நேரம் அதைப் பதிவு செய்துகொண்டிருந்தவன் அவன் முகத்தின் புறமாகத் திருப்பி ஒரு விஷம முறுவலுடன் அணைத்தான். அதோடு அந்தக் காணொளி முடிந்திருந்தது. அவனுடைய முகமும் அதில் தெளிவாக பதிவாகியிருந்தது.

 

அடுத்த நொடி கார்த்திகேயன் எதைப் பற்றியும் சிந்திக்கவில்லை. அவன் மனம் முழுவதும் காணொளியில் விஷம சிரிப்புடன் இருந்தவனின் முகமே அழுத்தமாகப் பதிந்திருந்தது. அவனின் முகத்தை வைத்து தன்னுடைய அனைத்து செல்வாக்கையும் உபயோகித்தவன் அடுத்த இரண்டே மணி நேரத்தில் அவனைப் பிடித்திருந்தான்.

 

எந்தக் கேள்வியும் கேட்காமல் அவன் கன்னங்கள் பழுக்கும் வரை அரைந்த பின்னே ஒரே வார்த்தையில் தன் கேள்வியை எழுப்பினான்.

 

“எதுக்காக?”

 

கார்த்திகேயனின் கண்கள் அவனைத் தீனமாகப் பார்த்த பார்வையில் சர்வமும் விஜய்க்கு அடங்கியது. மேற்கொண்டு கார்த்திகேயனின் கால்களில் விழுந்து கதறியவன், தான் சவீதாவை ஒருதலையாகக் காதலித்ததை சொல்ல தொடங்கினான்.

 

“சார் நான் ரொம்ப வருசமா சவீதாவை காதலிக்கிறேன். ஒரு நாள் அவகிட்ட… இல்ல இல்ல அவுங்ககிட்ட காதல் சொல்ல வந்தப்பத்தான் நீங்க கல்யாணம் பத்தி சவீதா கூடப் பேசிட்டு இருந்தீங்க.

 

உங்கள மறைஞ்சு இருந்து பார்த்த எனக்கு அவ்ளோ வலி கோவம். ஆனா சவீதா மறுக்கவும் எனக்குச் சந்தோஷமும் கூட.

 

அப்புறம் சவீதாகிட்ட எப்படியாச்சும் என் லவ்வ சொல்லணும்னு வந்தப்ப, அவ உங்கள நினைக்க ஆரம்பிச்சது தெரிஞ்சிது. அத எப்டியாச்சு மாத்தனுனு நினைச்சே.

 

அதுக்காக அவுங்ககிட்ட நயமா பேசி நைசா கோவில் கூப்டு போனே. பூசாரியை வச்சு மனசுல நினைச்சிருக்கக் காரிய நடந்தா உயிர் பலி கேக்கும்னு சொல்ல வச்சேன். இதுக்கு மாத்து வழி காட்டு முருகன் கோயில் போன கிடைக்கும்னு சொல்ல வச்சேன்.

 

வெள்ளி கிழமையும் வந்துச்சு. கோயில் போயிட்டு வர வழியில எதாவது ஒன்னு பண்ணி சவீதாவை முழுசா என்னோட சவீதாவை மாத்தணும்னு நினைச்சிருந்தே. ஆனா அன்னைக்கு சரியா நா வெளியூர் போய் ஆகவேண்டிய கட்டாயம் வந்திடுச்சு.

 

சரி வந்து இத பண்ணிக்கலாம்னு போயிட்டு வந்து பாத்தா இங்க நான் பார்த்த சவீதா , உங்களோட மனைவியா இருந்தாங்க.

 

என்னால அத தாங்க முடில. நா அனுபவிச்ச வலி கொஞ்சநஞ்சமில்ல. அது சொன்னாலும் உங்களுக்குப் புரியாது சார். ஆனா சவீதாவை என்னால விட்டு தர முடியல. உங்ககிட்ட இருந்து பிரிக்கணும்னு நினைச்சே. அதுக்கு முன்னாடி பயமுறுத்தணும்னு நினைச்சே.

 

அதுனால தான் அப்படி ஒரு வீடியோ எடுத்தேன்.

 

ஆனா அத எடிட் பண்ண முன்னாடியே என் பிரண்ட் சவீ போனுக்கு அப்படியே அனுப்பிட்டான். என் முகம் தெருஞ்சு நான் பிரச்சனைல மாட்டிற கூடாதுனு, அவசர அவசரமா சவீதாவை தேடி போனேன்.

 

சவீதா ரிசார்ட்கு கிளம்பிட்டு இருந்தாங்க. அது இதுனு காரணச் சொல்லி போன வாங்குனே. சவீதாக்கு தெரியாம டெலிட் பண்ணினே. பண்ணுனது போன் சரியா ஆப் ஆகிடுச்சு.

 

சரி பரவ இல்லனு அப்படியே கொடுத்துட்டு நான் போயிட்டேன்.

 

நினைச்சது போலவே தேவையான சீன் மட்டும் வச்சு மறுபடியும் சவீதாவுக்கு அனுப்பிட்டு பதிலுக்காகக் காத்திருந்தேன். ஒரு நாள் முழுக்க ரியாக்க்ஷனும் வரல ஆளும் வரல.

 

மறுநாள் போலீஸ் வரவும் ரொம்பப் பயந்துட்டேன். அப்புறம் ஏதேதோ சொன்னாங்க. எனக்கு அதெல்லாம் மனசுல நிக்கல. அப்பாடி நம்ம தப்பிச்சுட்டோம் அப்படினு நினச்சு சவீதாவை மறக்க தொடங்குனே. நான் பண்ணின எல்லாமே தப்புதான் சார் . என்ன விட்ருங்க சார் ப்ளீஸ்” எனக் கதறி அழ, மீண்டும் ஓர் அரைப் பளார் என்று விழ சுருண்டு விழுந்தான். விஷயம் அறிந்த அவன் பெற்றோர்களும் விஜயிடம் மண்டியிட்டு கதற, அவன் மீது ச்சீய் என்பதாய் அலட்சிய பார்வையைச் செலுத்திவிட்டு உயிர் பிச்சை என்கிற ரீதியில் அங்கிருந்து புறப்பட்டான்.

 

மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி! சவீதாவை என்ன சொல்லி சந்திப்பேன்? அவளது கண்களை இனி ஒருமுறையேனும் நேருக்கு நேராகப் பார்க்க முடியுமா என்ற கவலை கார்த்திகை ஆட்டிப்படைத்தது. மீண்டும் நிராதரவாய் நிர்ப்பதாய் அவனுள் ஓர் எண்ணம் உருவானது. அவளைச் சந்திக்கும் துணிவு துளியும் அவனிடம் இல்லாமல் போனது.

 

Advertisement