Advertisement

புயலோ தென்றலோ – 18

 

எத்தனை முயன்றும் சவீதாவிற்குத் தலை வின் வின்னென்று தெறித்ததே ஒழிய வேறு எதுவும் நினைவுக்கு வரவே இல்லை. அவளின் கஷ்டத்தைப் பார்த்தவன் மேற்கொண்டு அவளிடம் கேள்விகள் கேட்காமல், “விற்று சவீ! குழந்தையைப் பாரு. மத்தத நான் பார்த்துகிறேன்” எனக் கூற சரியாகக் கதவை தள்ளிக்கொண்டு பதற்றமாகப் பிரகாஷ் உள்நுழைந்தான்.

 

என்னாச்சு என்ற பரிதவிப்பான கேள்வியில் விக்ரம் திருதிருவென்று முழிக்க, பூரணி எல்லாம் இவனால் தான் என்ற பாவனையைக் காட்ட, நிலைமையைக் கையில் எடுத்தான் கார்த்திக்.

 

“பிரகாஷ் நீ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற?”

 

“கார்த்திக் என்ன ஆச்சுன்னு சொல்லு. வீட்ல கன்னாடிலாம் உடைஞ்சு கிடக்கு. சக்தி..சக்திக்கு ஒன்னுமில்லையே” என அவளை ஆராய்ந்தபடி வினவ,

 

“ஓ அதுவா… ஒண்ணுமில்ல. நான் வெளில போயிருதேன், வீட்ல யாருமில்லை அந்த நேரம் இவுங்களுக்குப் பெயின் வந்திடுச்சு.

 

இவுங்க சத்தம் கேட்டு நான் உள்ள போக முயற்சி செஞ்சேன். ஆனா கதவு உள்பக்கமா பூட்டியிருந்தது. அதுக்குள்ள விக்ரமும் வர, இந்தக் கண்ணாடி கதவை உடைச்சு இவுங்கள இங்க கூட்டிட்டு வந்தோம்.” எனக் கூற, “இப்போ சக்தி நல்லாத்தானே இருக்கா ?” எனப் பிரகாஷ் வினவ, கார்த்திக் ஜாடையாகச் சவீதாவை பார்த்தவன், “நீயே கேளேன் பிரகாஷ்” என்று அவனுடைய பெயரையே அழுத்தி கூறினான்.

 

அந்த அழுத்தம் சவீதா அறிந்துகொள்வதற்காகக் கொடுக்கப்பட்ட அழுத்தம். அதைப் புரிந்துகொண்டவள், நலமாய் இருப்பதாய் தலை அசைக்க அதன் பின் பிரகாஷ் அவள் கைகளிருந்த குழந்தையை ஆசையா பார்த்தபடி சில நொடிகள் நின்றான்.

 

அந்தச் சிசு இமை மூடியிருக்க, பிரகாஷிற்கு அதன் பழுப்பு நிற விழிகள் தெரியவில்லை. தெருந்திருந்தாலும் கூட இந்தக் கோணத்தில் சிந்தித்திருப்பானா என்பது சந்தேகமே.

 

அதற்குள் செவிலியர் வந்து அனைவரையும் வெளியேற சொல்ல, கார்த்திகேயன் இனி அனைத்தும் என்னுடைய பொறுப்பு என்பதை அவளிடம் கண்ணில் தையிரியம் கூறி வெளியேற, திக்கு திசை தெரியாமல் இருக்கின்ற நிலையிலும் அனைத்தையும் கார்த்திக் சரிசெய்வான் என அவள் மனம் சத்தியம் செய்யாத குறையாய் அவளிடம் கூற, மெல்ல தன் குழந்தை மீது கவனத்தைத் திருப்பினாள்.

 

மறுபுறமோ கார்த்திக் பிரச்சனைக்கு வெளியே இருந்து சிந்திக்கத் தொடங்கியிருந்தான். வழக்கை வழக்காக மட்டுமே இனி சிந்திக்கவேண்டுமென்று உறுதி எடுத்தவன் இதில் சம்மந்தப்பட்டுள்ளவள் தன் மனைவி என்றும் இதனால் பாதிக்கப்படப்போவது தன் குழந்தையென்றும் சிந்திப்பதை வலுக்கட்டாயமாக நெஞ்சிலிருந்து வெளியேற்றினான்.

 

சவீதாவின் கார்த்திக், கார்திகேயனான்.

 

மருத்துவமனையிலேயே அமர்ந்திருந்தவன் ஒவ்வென்றாக மனதில் வரிசைப்படுத்தத் தொடங்கினான்.

 

சவீதா காட்டேஜில் மயங்கிய நிலையில் கிடந்தவள் எப்படி வெளியே வந்தாள்? இதுவே அவனின் முதல் கேள்வி. உள் செல்லும் பொழுது வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தவள் செல்லும்போது இடவில்லை. அதே சமயம் அவள் கையெழுத்து போடும் நிலையிலும் இல்லவே இல்ல. அந்த இடத்தின் காவலன் சவீதா மறுபடியும் வந்த வழி திரும்பவில்லை என்று கூறினான். ரிசார்டின் வழியாகச் செல்ல வாய்ப்பு இருந்தும் அதிலும் சவீதா வெளியேறவில்லை. ஏனென்றால் அனைத்துக் கண்காணிப்பு காமெராவையும் இவன் ஆராய்ந்தே இருந்தான்.

 

அடுத்தததாக, கொலை செய்யப்பட்டவன் மேல் விழுந்த கத்தி குத்து. அதுவும் ஆழமாக இறங்கவில்லை. அதை வைத்து பார்க்கும் பொழுது, அதை ஒரு பெண்ணே செய்திருக்க வேண்டும். அந்தப் பெண் நிச்சயமாகச் சவீதா கூறிய பெண்ணாகத் தான் இருப்பாள். சவீதா அவர்களைக் கணவன் மனைவி என்று எண்ணியிருக்க, இறந்து போனவனுக்குத் திருமணமே ஆகவில்லை. அப்படியென்றால் அந்தப் பெண் யார் ? இப்போது எங்கிருக்கிறாள்? இதுவே அவனுடைய இரண்டாவது கேள்வி.

 

கொலை செய்யப்பட்டவனின் கத்தி காயத்தோடு சேர்த்துத் தலையில் பலமான அடி. அந்த அடியின் வீரியத்தை வைத்து நிச்சயம் அதை ஓர் ஆண் தான் செய்திருக்க வேண்டுமென்பது மருத்துவர்கள் கருத்து. ஆனால் அவ்விருவர் மட்டுமே தனித்திருந்ததாகத் தான் சவீ கூறினாள். ஆனால் நிச்சயம் இதில் வேறொருவன் சம்மந்தப்பட்டுள்ளான். அந்த மூன்றாம் நபர் யார் ? அவன் எப்படி வந்தான் ? இதுவே மூன்றாவது கேள்வி.

 

இவை அனைத்தையும் விட, சவீ எதற்காகக் கைபேசியை அன்று மறந்து வந்திருந்தாள். ஒருவேளை அவள் கையோடு எடுத்துவந்திருந்தால் இத்தனை அசம்பாவிதம் நடந்திருக்காது. குறைந்தபட்சம் சவீக்கு நடந்ததாவது தடுக்கப்பட்டிருக்கும். மேலும் அவள் கைபேசியில் இப்படியொரு காணொளியை அனுப்பியவர் யார் ? அதனால் அவருக்கு என்ன லாபம் ? இதுவே அவனின் நான்காவது கேள்வி.

 

கண்டுபிடிக்கும் முறைகளைத் தன்னுள் வரிசைப்படுத்திக்கொண்டான்.

 

“அவள்! செத்தவனோட சண்டையில இருந்த பொண்ணு, அவ தான் இங்க முக்கியமான ஆளு. அவ ஒருத்திய பிடிச்சா எல்லாம் எல்லாமே வெளிச்சத்துக்கு வந்திடும்.

 

நாம தேடுற பொண்ணு ஒன்னு கொலைசெய்யப்பட்டவனோட ஒண்ணா உள்ள வந்திருக்கணும். இல்ல தனியா வந்திருக்கணும். எப்படி வந்தானு தெரிஞ்சா வேற தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கு.” எனத் தனக்குள் எண்ணிக்கொண்டவன், வேகமாகக் கூர்க் காவல் நிலையத்திற்கு அழைத்தான். அங்கே அவனுக்கு இருக்கும் நம்பகமான ஆளை பயன்படுத்தி, கொலை செய்யப்பட்ட நாளென்று வைத்திருந்த வரவு பதிவேட்டையும் ரிசார்டின் கண்காணிப்பு காமெராவின் தொகுப்பையும் உடனடியாக அனுப்பிவைக்குமாறு கூறினான். அவர்களும் முன்பே அதையெல்லாம் திரட்டி வைத்திருந்ததால் அனைத்தையும் உடனே அனுப்ப, சவீயிடம் கூறிவிட்டு பூரணியின் மேற்பார்வையில் அவளை விட்டு விரைந்து முல்லை வனம் சென்றான்.

 

சென்றவன் முதல்வேலையாகக் கணினியை உயிர்ப்பித்து, அதில் ஒன்றுவிடாமல் ஆராய ம்ம்ஹும் எந்தவொரு பலனும் இல்லவே இல்லை. முன்பே பார்த்திருந்து தான். எனினும் இப்போது ஏதாவது தெரியவருமா என்றே சிந்தித்தான்.

 

குறுக்குநெடுக்குமாய் அவனின் அறையை அளக்க தொடங்கினான். ஆரம்பித்த இடத்திலே இருப்பதைப் போன்றதொரு பிரம்மை. ஆனால் அந்த எண்ணம் வழக்கை பொறுத்தவரை மட்டுமே. அவனுடைய சொந்த வாழ்வும் வசத்தமும் அவனுக்குக் கிடைத்தாயிற்று. ஆனால் அதைக் கூட அனுபவிக்க முடியாமல் இங்கு அல்லாடிக்கொண்டிருக்கிறான்.

 

இங்கிருந்து ஆவது ஒன்றுமில்லை என்று உணர்ந்தவன், தொலைத்த இடத்தில் தடயத்தைத் தேடுவதே சிறப்பென்றெண்ணி குட்ட கிராமம் நோக்கி பயணிக்க முடிவெடுத்தான். ஆனால் அந்தப் பயணத்தில் அவன் மட்டுமே! அதில் அவன் தெளிவாய் இருந்தான்.

 

சவீதா தன்னைக் கீழாய் பார்ப்பதை ஒருபோதும் விரும்பாதவள். அப்படியிருக்கத் தான் பிறந்து வளர்ந்த இடத்தில் அவர்களின் சந்தேகப் பார்வையைப் பொறுத்துக்கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ மாட்டவே மாட்டாள். அதே நேரம் சட்ட சிக்கல்களும் நிரம்பவே வருவதற்கு வாய்ப்புண்டு. அவளுக்கும் குழந்தைக்குத் தற்சமயம் பாதுகாப்பு இந்த முல்லைவனம் என்று தீர்க்கமாக நம்பினான்.

 

எடுத்த முடிவுகளை விக்ரமை அழைத்துத் தெரியப்படுத்தியவன், சவீதாவின் அருகில் யாருமில்லாத பொழுது விக்ரமின் கைபேசியில் அழைத்து அவன் கூர்க் சென்று வருவதாய் அறிவிக்க மீண்டும் அவளுள் பயப்பந்து உருள தொடங்கியது.

 

முன்பொருமுறை இப்படித்தான் சொல்லிச்சென்றான். அதன் பின் என்ன என்ன நடந்ததென்று இன்றுவரையிலும் கூட அவளால் அனுமானிக்க முடியவில்லை. அதே நேரம் நிகழ்ந்திருந்த அனைத்தும் கேடான ஒன்றே என அவளுக்குத் தோன்றவே, மீண்டும் அவனுடைய பிரிவா ? என்று எண்ணி எண்ணி மருகினாள்.

 

ஆனாலும் இதெயெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் கார்த்திகேயன் இல்லை. சவீதா குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கக் கைரேகை பரிசோதனை, மருத்துவ அறிக்கை என அனைத்தும் உதவும் தான். ஆனால் அதுமட்டும் போதாதே. சவீ குற்றவாளியில்லை என்பதைச் சட்டத்திற்கு நிரூபிக்க அது போதுமானதாய் இருக்கலாம். ஆனால் அவள் வாழ்ந்த சமுதாயத்திற்கு அது போதாதே!

 

அதோடு அவனிடம் ஒரு பணி ஒப்படைக்கப்பட்டு இப்படி நின்றதாக அவன் சரித்திரத்தில் இல்லை. இனியும் அப்படி இருக்கக் கூடாதென்று திட்டமாக முடிவெடுத்தான்.

 

பிரகாஷிடம் அவசர அலுவல் என்று கூறியவன், விக்ரமை பார்த்துக்கொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பி வந்திருந்தான். வந்தவுடன் அவனுடைய முதல் வேலையாக விக்ரமிற்கு அழைத்துச் சவீதாவை தனியே எந்தச் சூழலிலும் விடவேண்டாம் என்பதே. ஏனோ அவனுக்கு மனது நெருடலாகவே இருந்தது.

 

ரிசார்டிக்குச் சென்றவன், கொலை செய்யப்பட்ட நாளை மட்டுமல்லாது அதற்கு முன்னதாக இருந்த ஒரு வாரத்திற்கான பதிவை பெற்றான். ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்தான். கழுகு பார்வை என்று சொல்வார்களே, அப்படியிருந்தது கார்த்திகேயனின் பார்வை.

 

இவனின் கோணத்தில் யாரும் சிந்தித்திருக்காததால் வேறு யாருக்கும் கிடைக்காத தகவல் கிடைத்தது. ஏன் இவனுமே இந்தக் கோணத்தில் சிந்திருக்கவில்லை. எங்கே சிந்திப்பது சவீதா தான் அதை முழுமையாக ஆண்டுகொண்டிருந்தாளே!

 

அந்தத் தகவல் ரிசார்ட்டில் பின்புறவழியாக இணைக்கப்பட்டிருந்த அருணின் காட்டேஜிற்குச் செல்லும் வழி. ஆம்! கொலை செய்யப்பட்டிருந்தவனின் பெயர் அருண். அந்த வழி பொதுவான மக்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டிருப்பதை முன்பே கார்த்திகேயன் அறிந்திருந்தான். ஆனால் அந்த வழியில் ஒரு பெண்ணும் ரிசார்டின் ஊழியரும் சென்று கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தான். அவர்கள் சென்ற தினம் கொலைசெய்யப்பட்ட இரு தினங்களுக்கு முன்பு.

 

யாரும் பயன்படுத்தாத வழியில் ரிசார்டின் ஊழியரும் முகத்தை மறைத்த நிலையில் ஒரு பெண்ணும் அருண் தங்கியிருக்கும் காட்டேஜ் நோக்கி செல்வது கார்த்திக்கினுள் சந்தேகத்தைக் கிளப்ப, புயலெனச் செயலில் இறங்கினான்.

 

தன்னுடைய இரண்டு அதிகாரிகளை அழைத்துக்கொண்டவன், ரிசார்டின் அலுவலறையை அடைந்தான். அங்கே பணிபுரிகின்ற அனைவரையும் ஒன்றிணைத்தான்.

 

ஒருவார காலப் பதிவுகளைக் கண்டத்தில் இதுமட்டுமே நெருடலாய் பட, தேடல் வேட்டையைத் தொடங்கியிருந்தான். ரிசார்டின் ஊழியர்களை அவன் நிறுத்தி ஒவ்வொருவரையும் ஊடுருவும் பார்வை பார்த்ததே அங்கிருந்தோருக்கு அச்சத்தை வஞ்சகமில்லாமல் அள்ளி வழங்கியது.

 

ஒவ்வுருவரின் மீதும் சந்தேகம் நிறைந்த தீனப்பார்வை. அவர்களை ஊடுருவி கூறுபோடும் பார்வை. மெல்ல அவன் அழைத்து வந்திருந்த அதிகாரிகளிடம் சமிங்கை செய்ய, உடன் வந்த ஆண் அதிகாரி ஆண் ஊழியர்களின் பக்கமும் பெண் அதிகாரின் பெண் ஊழியர்களின் பக்கமும் நின்றுக்கொண்டனர்.

 

“இவுங்கள சிறப்பா கவனிங்க. ஒருவேளை இதுல இருக்கவங்க நம்மகிட்ட வந்துட்டா இனி வாழ்க்கையில நரகத்த மட்டும் தான் பார்ப்பாங்க” என அவர்களை அச்சுறுத்தும் வகையில் தன் அதிகாரிகளிடம் கூற, நேரடியாக அவன் விசாரணையில் அவர்களிடம் இறங்காத போதும் அவன் கூறிய தோரணையே அவர்களுக்குப் பீதியை உண்டாக்கியது.

 

“சார் எங்களையெல்லாம் ஏன் நிக்க வச்சிருக்கீங்க” என ஒருவன் கேள்வி எழுப்பினாலும் அஃது உள்ளே போன குரலிலே இருந்தது.

 

அதற்குப் பதில் கூறாமல் சட்டமாக நின்றவன், அருகிலிருந்த மற்றவனைக் கண்காட்ட, அவன் கூறினான்.

 

“என்ன தெரியாத போலப் பேசுறீங்க? உங்க முதலாளிய கொன்னுட்டு எதுவும் தெரியாத போலக் கேள்விகேட்டா உங்கள நம்பணுமா ?” என அசைட்டையாகக் கூற அதுவரை என்ன ஏதென்று தெரியாமல் பயத்துடன் நின்றவர்கள் இதைக் கேட்டவுடன் சட்டென்று பயத்தின் உச்சியை அடைந்தனர்.

 

“சார், நாங்க எதுவும் பண்ணல” எனத் தங்களுக்குள் அவசரமாக முணுமுணுக்க, “நீங்கனா நீங்க இல்ல பா. உங்கள ஒருத்தன். ஒரு ஆண் அப்புறம் ஒரு பெண். அதுக்கான எல்லாத் தகவலும் கிடைச்சிருச்சு. அந்த ஆளுங்க யாருனு நீங்களே சொல்லிட்டா நல்லது. இல்லனா ரொம்பக் கஷ்டப்படுவீங்க. கொலை செஞ்ச அந்த ஆளுங்க மட்டுமில்ல இங்க நிக்கிற ஒட்டுமொத்த பேரும் அவனுக்கு உடந்தையா இருக்கீங்கன்னு” எனக் கூற, மீண்டும் சலசலப்பு.

 

அந்தச் சலசலப்பை வந்த அதிகாரிகள் நிறுத்த முயல, ம்ஹும் முடியவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்கா தருணம் பளார் என்ற சப்தம் நொடியில் அந்த இடத்தை அமைதியில் மூழ்கடிக்க, ஒருவன் சுருண்டு கீழே விழுந்திருந்தான்.

 

என்ன ஏதென்று அனைவரும் உணரும் முன்னர் நடந்திருக்க, அடி வாங்கியவனின் முகம் கன்றிச் சிவந்திருந்தது. தட்டுத்தடுமாறி அவன் எழ முயல மீண்டும் கார்த்திகேயனின் கை ஓங்க, கார்த்திக் கேள்வியே கேட்கவேண்டிய அவசியமே இல்லாததைப் போன்று, “ஐயோ சார் வேணாம் சார். நா நா சொல்லிடறேன். என்னை அடிக்காதீங்க ” என அப்படியே கார்த்திக்கின் கால்களைக் கட்டிக்கொண்டு கதறினான்.

 

அந்த நேரம் விக்ரமின் அழைப்பு வர, சவீதாவிற்கு என்னவோ ஏதோவென்ற எண்ணத்தில் அழைப்பை ஏற்க அதில் ஒலித்தது சவீதாவின் குரல்.

 

“கார்த்திக் …. கார்த்திக்… ” எனப் பதற்றமாகக் குரல் ஒலித்தது.

 

“என்ன என்ன ஆச்சு சொல்லு. பதறாத”

 

“நான் அந்தப் பொண்ண…. பொண்ண பார்த்தேன் கார்த்திக். இங்க ! இங்க பார்த்தேன்” என்று அதிர்ச்சி விலகாமலே சவீதா கூறினாள்.

 

Advertisement