Advertisement

புயலோ தென்றலோ – 17

 

“கார்த்திக், இங்க பாருங்க இந்த ஹாஸ்ப்பிட்டல் நர்ஸ் வந்து எதோ ஒரு பாப்பாவை தூக்கிட்டு வந்து நம்ம பாப்பானு சொல்றாங்க… ” எனக் கூறியபடியே கார்த்திக்கின் பதிலிற்காகக் கலவரத்துடன் அவனின் முகம் பார்த்தாள்.

 

“சவீ! முதல அந்தப் பாப்பாவை உன் கைல வாங்க செஞ்சியா ??”

 

இல்லை என்பதாய் தலை அசைத்தாள்…

 

“கைலவாங்கு சவீ, அதுக்குப் அப்புறமா மத்ததெல்லாம் பேசிக்கலாம்” என ஆழ்ந்த குரலில் கூற, அதில் எதையும் புரிந்துகொள்ள முடியாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்ற கலவரத்துடன் அந்தப் பிஞ்சு பூவை கைகளில் ஏந்த, அவளுள் இன்னதென்று புரியாத உணர்வு.

 

அந்த உணர்வு அவளது உயிர்வரை தீண்டி சென்றது. அதை அவளால் விவரிக்கவே முடியவில்லை. அதை ஆழ்ந்து ரசித்து உணரமட்டுமே முடிந்தது. இந்த நிலையிலிருந்து சவீ விடுபடும் முன்பே, அந்தப் பச்சிளம் மொட்டு மெல்ல தன் இமைகளைத் திறக்க, சவீயின் இருதயம் ஒருமுறை நின்று துடித்தது. மூச்சுக்கு சிரம படுபவளை போன்று தடுமாறியவள், கண்களில் நீர் ததும்பத் தன் கணவனை ஏறெடுத்து பார்க்க, அவனுடைய விழிகளும் ஆனந்தத்தில் அமிழ்ந்து ஆச்சர்யத்தில் விரிந்தன.

 

காரணம், குழந்தையின் கண்கள் கார்த்திகேயனின் அதே பழுப்பு நிறத்தில்.

 

“அப்படினா?…” என அதற்கு மேல் ஏதும் பேச தெரியாதவளாகவோ முடியாதவளாகவோ தடுமாற, கார்த்திக்கின் விழிகள் ஆமாம் என்பதாய் இமை மூடி திறந்து ஆமோதிக்க, அந்த மௌன பாஷை, உரக்க உண்மையை அவளிடம் உரைத்தது.

 

நம்ம குழந்தையா என்பதாய் அவளின் விழிகள் பேச, ஆமாம் என்பதைக் கார்த்திக்கின் கண்ணசைவில் அறிந்துகொண்டவள், மார்போடு தன் குழந்தையை இறுக அணைத்தபடி உச்சி முகர்ந்தாள்.

 

தாயின் இருதயத் துடிப்பை வெகு அருகில் கேட்ட குழந்தையோ கண்களை மெல்ல விரித்து மூடியபடி இதழ் பிரித்துப் புன்னைகையைச் சிந்த, சவீதாவினுள் ஆயிரமாயிரம் கேள்விகள். அவளை அதிகமாக யோசிக்க விடாமல் அவளின் அருகே ஆதரவாய் வந்தவன் குழந்தையோடு தன் மனைவியையும் நின்றவாக்கிலே தோளோடு மிருதுவாய் அணைத்தவன் அனைத்தையும் சொல்ல தனக்குள் மெல்ல ஒத்திகை பார்த்தபடி இருக்க, அவனின் மௌனம் அவளுள் பிரளயத்தைக் கிளப்பியிருந்தது.

 

பூரணி மேலோட்டமாகக் கூறும்படி கண்ணசைவில் சமிங்கை செய்ய, தொண்டையைச் செறுமியபடி ஆரம்பித்தான். சவீதாவை காண வந்த பொழுது அவள் அங்கு இல்லாது போனது, அதன் பிறகு அவளைத் தேடி அலைந்தது, அவள் இறுதியாகச் சென்ற ரிசார்ட்டில் கொலை நடந்தது, பிறகு இவளிருக்கும் இடம் அவனால் கண்டறிய முடியாமல் போனது எனக் கூறியவன் கவனமாக அந்தக் கைபேசியில் அவள் பேசியிருந்த காணொளியையும், அதைத் தொடர்ந்து கார்த்திக் அவள் மீது கொண்ட வெறுப்பையும் கவனமாகத் தவிர்த்திருந்தான்.

 

மறைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை தான் என்றாலும் மறைக்கவேண்டிய கட்டாயத்தில் அவன் இருந்தான். சவீதாவின் தற்போதைய நிலையைக் கண்டவன், பூரணியின் கூற்றையும் உள்வாங்கிக்கொண்டு, சவீதா எதை வேணுமென்றாலும் ஜீரணித்துக்கொள்வாள், ஆனால் தான் அவளை நம்பவில்லையென்றும் வெறுத்துவிட்டோமென்றும் தெரிந்தால் அவளின் நிலை என்னவாகுமென்றே மறைத்தான். அதோடு, அதே அறையில் பூரணியும் விக்ரமும் இருக்க, அந்தக் காணொளியை பற்றியோ அதில் அவள் கூறியிருந்ததைப் பற்றியோ அவன் மனம் பகிர்ந்துகொள்ள விரும்பவே இல்லை.

 

தங்களின் அந்தரங்கம் பிறர் அறியவேணமென்று மட்டுமல்ல, முன்புமே கார்த்திக் விக்ரமிடம் மறைத்திருக்க அது ஏன் என்று கார்த்திக் சிந்தித்திருந்தால் சவீதாவின் மீது தான் கொண்டது கோபமும், அவளைத் தொலைத்துவிட்டோமென்ற இயலாமையும்தானே ஒழிய வெறுப்பு இல்லை என்று அவன் உணர்ந்திருப்பான்.

 

ஆனால் உணர்வதற்குச் சாத்தியமே இல்லை என்பதைப் போன்று அவனைச் சிந்திக்க விடாமல் அடுத்தடுத்த நிகழ்வுகள் நிகழ்ந்துகொண்டே இருந்தது. அவனின் சிந்தனைகளைத் தடை செய்தது சவீதாவின் கேள்வி.

 

“அப்படினா? நான் இருக்க இடம் எப்படித்தான் தெரிஞ்சது ? அதோட இது என்ன ஊரு ?” என வினவியபடியே பார்வையை அறையைச் சுற்றி சுழலவிட, “தமிழ், தமிழில் எழுதியிருக்கு? அப்போ நாம தமிழ்நாட்டுல இருக்கோமா? இங்க எப்படி வந்தோம் ?

 

அந்தப் பொண்ணும் அவனும் எங்க ? கொலைன்னு சொன்னீங்க ? அவுங்க இரெண்டுபேருல யாரு ?” என அன்றய நாளின் நினைவில் இவள் வினவ, இதுவரை மேலோட்டமாகக் கூறியவன், மர்மத்தின் அதி ஆழ காட்சிகளைச் சவீதாவின் மூளை சிந்திக்கத் தொடங்கவே வேகமாகப் பூரணியைக் காண, பூரணி விரைந்து அவளருகில் வந்தாள்.

 

“நீ ரொம்ப சிரம படாத சவீதா, கொஞ்சம் பொறுமையா இரு. ஏதோவொரு அளவுக்கதிகமான அதிர்ச்சினாலே சுயநினைவை சில நாள் இழந்துட்ட. மறுபடியும் நினைவு இப்பதான் வந்திருக்கு. அதிகமான அழுத்தம் மூளைக்குக் கொடுக்கக் கூடாது. மத்தது எல்லாம் அப்புறமா பேசிக்கலாமே” எனப் பொறுமையாகவே கூறினாள்.

 

“இல்ல! எதுவும் தெரியாம இருக்குறது தான் ரொம்பப் படப்படப்பாவும் பயமாவும் இருக்கு. கார்த்திக் என்கூட இருக்குராறுல, எதுனாலும் சொல்லுங்க. இது நடந்திருக்குமோ அது நடந்திருக்குமோ அப்படினு யோசிக்கிறதைவிட இதுதான் நடந்திச்சுன்னு தெரிஞ்சா நிச்சயம் அதிலிருந்து வெளிளவர யோசிக்கலாம். நானே வரலானாலும் என் கார்த்திக் அத பண்ணுவாரு.

 

எதையும் மறைக்காம சொல்லுங்க. நீங்க யாரு ? என்ன எப்படி உங்களுக்குத் தெரியும்?” எனப் பூரணியைப் பார்த்துவினவ, கார்த்திகே தொடர்ந்தான்.

 

“சவீ! எங்களுக்கும் எதுவும் முழுசா தெரியாது. ஆனா அத கண்டிப்பா நான் கண்டுபிடிப்பேன். நீ எப்படிக் கூர்க்ல இருந்து இங்க வந்தன்னு தெரியல. நாம இப்ப இருக்கிறது வால்பாறை. உன்ன இங்க கூட்டிட்டுவந்தது என் பெரியம்மா பையன் பிரகாஷ். உனக்கு இத்தனை மாசமா பழசு எதுவும் ஞாபகத்துக்கு வரல. இங்க உன்னோட ஒரே பிரண்ட் இந்தப் பூரணி மட்டும் தான். இவுங்க முழு பேரு பூரணிமா.

 

எனக்கும் முதல்ல நீ இங்க இருக்கன்னு தெரியாது. அப்புறம் அந்தக் கொலை விஷயமா சம்பத்தப்பட்ட பொண்ணு இங்க இருக்கிறதா ரகசிய தகவல் கிடைச்சது. அப்படிதான் இங்க வந்தேன்’ எனச் சிறிது சங்கடத்துடனே கூற, “நல்லதா போச்சு! இத ஒரு சாக்கா வச்சாவது நான் இருக்குற இடம் உங்களுக்குத் தெருஞ்சுதே.

 

நீங்க என்ன காணோம்னு ரொம்பத் தவிச்சு போயிருப்பீங்கள ? ஆமாம் நீங்க வந்ததும் என்கிட்ட எதையும் நம்மள பத்தின விஷயங்களைச் சொல்லலியா ? உங்கள நான் சொல்லவிடலியோ? அப்படிதான் இருக்கும் !” என கூற, இப்போது பூரணி குற்றம் சாட்டும் பார்வையைக் கார்திக்கின்மீது பதித்தாள்.

 

இதற்கென்ன பதில்கூறுவதென்று கார்த்திக் தடுமாற, சவீதாவே அதையும் தானாகவே கூறிக்கொண்டாள்.

 

“நான்தான் பழசெல்லாம் மறந்துட்டேன்ல, நீங்க சொல்லியிருந்தாலும் எனக்குத் தெரிஞ்சிருக்காது. அதோட நான் உங்ககிட்ட எப்படி நடந்துக்கிட்டேனோ? தெரியல. நான் கர்பமா இருக்குறதுக்கு உங்களுக்கு முன்னாடி தெரியாம இப்போதான் தெருஞ்சதுல.

 

அதுலயும் நீங்க என்ன மன நிலையில இருந்தீங்களோ” என வேதனையுடன் கூற, கார்த்திக் கண் கலங்கியேவிட்டான்.

 

இந்தத் துயரத்திலும் இந்த நிலையிலும் தனக்காக இவள் பார்க்கிறாளே! தான் என்ன செய்தேன். விரட்டிப்பிடித்துக் காதலித்தேன். அவகாசம் தராமல் கரம் பிடித்தேன்! கணவன் என்ற உரிமையையும் எடுத்துக்கொண்டேன்!

 

அவளை ரசித்த நான் காதலித்த நான் அவளின் உணர்வுகளைக் கண்டுகொள்ளாமல் போனேனே !

 

என்பதைப் போன்ற எண்ணங்களே அவனுள். அதுவும் இப்போது சவீதாவின் பேச்சுக்கள் மூலம் இன்னும் இன்னும் குன்றிப் போனான்.

 

எனச் செய்ய எனச் செய்ய என்ற தேடலின் விடையாய் இனியொருமுறை அவளை விட அவன் தயாரில்லை என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டான். தங்களைப் பிரிக்க விதி சதி சட்டம் என்று எதுவுமே இல்லாததைப் போன்று அமைதியான வாழ்க்கையைத் தங்களுக்குள் மலர செய்ய உறுதி கொண்டான்.

 

இப்போதிருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் களைந்து, பிறகு அவளிடம் அனைத்தயும் கூறி தன் மகளோடும் மனைவியோடும் அமைதியான வாழ்வை வாழ நொடிக்கு நொடி ஏக்கம் கொண்டான். ஆனால் அனைத்தும் மனதினில் மட்டுமே!

 

வெளியே தன்னுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்காதவாறு மிகுந்த கவனத்துடன் நடத்துக்கொண்டான்.

 

போதும்! இந்த அவசரம் போதும். இனி இந்த வழக்கில் சவீதாவின் கணவனாக அல்லாமல், தன் மனைவி சம்மந்தப்பட்ட வழக்கு என்று எண்ணாமல் மூன்றாம் நபராய் பிரச்சனைக்கு வெளியிலிருந்து சிந்திக்க வேண்டுமென்று முடிவெடுத்தான். அதற்கான முதல் அடியை எடுத்துவைத்தான்.

 

“சவீ! நான் சொல்றத அப்படியே நீ செய்யணும். ஏன் எதுக்குன்னு கேள்வி வேண்டாம். சரியா ?”

 

சம்மதமாய்த் தலை அசைந்தது.

 

“இங்க இத்தனை நாளா உன்னோட பேரு சக்தி. சவீதா இல்ல. உனக்கு உன்னை யாருனே தெரியல உன் பேரு உட்பட. இங்க இருக்கிற எல்லாருக்கும் உன்ன சக்தியா தான் தெரியும்.என்ன உன் சார் அதாவது பிரகாஷோட தம்பியா தான் தெரியும். உனக்கும் எனக்கும் எந்தச் சம்மதமும் இல்ல.

 

நான் என் நண்பனுக்காக இங்க வந்திருக்கேன். இந்தப் பூரணி நீ இருக்க வீட்டுக்கு பக்கத்தில இருக்குறாங்க. மனோதத்துவ மருத்துவத்துக்கு மேற்படிப்புக்கு காத்திருக்காங்க. பிரகாஷ் யாருனு நான் உனக்குக் காட்டுறேன்.

 

இது தான் இப்போ இங்க இருக்கிற நிலை. இதையே இப்ப நான் சொன்ன வாழ்கையவே நீ இன்னும் கொஞ்ச நாளுக்குத் தொடர்ந்து வாழனும். உன் பேரு சவீதானோ, நான் உன்னோட புருஷனோ நீ இந்தப் பூரணி விக்ரம் தவிர வேறு யாருக்கும் தெரியிறது போல நடந்துக்கக் கூடாது. நான் இதுல பிரகாஷயும் சேர்த்து தான் சொல்லுறேன்.

 

ஏனா பிரகாஷ் நீ என்னோட மனைவின்னு தெரிஞ்சா, வேலைகாரங்ககிட்ட உன்ன அந்த வீட்டோட எஜமானினு சொல்லிடுவான். அப்புறம் அதுவே நமக்குத் தடங்களா போய்டும்” எனக் கூற, சவீதாவினுள் ஆயிரம் கேள்விகள். பூரணிக்கு தான்! ஆனால் எதையும் கேட்கவில்லை.

 

விக்ரமிற்கு மட்டும் கார்த்திக்கின் பாதை புரிந்தது . இவள் சவீதாவென்று வெளி உலகிற்குத் தெரியவந்தால் முதல் கட்டமாக விசாரணைக்கு அழைத்துச் செல்ல படுவாளென்றும், அதோடு மேற்கொண்டு சில சட்ட ரீதியான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுமென்றும் அறிந்திருந்தான்.

 

தற்போது தான் சுயத்திற்குத் திரும்பியவளுக்கு அடுத்தடுத்த பேரதிர்ச்சியைத் தாங்கி கொள்ளும் வலிமை இருக்காது என்று எண்ணியே கார்த்திக் இவ்வாறு கூறுகிறான் என்று விக்ரம் புரிந்துகொண்டான்.

 

சரி என்பதாய் சவீதாவின் பாவனை இருக்க, கார்த்திக் மெல்ல, “நான் இப்ப உன்கிட்ட சில தகவல் கேட்கணும் சவீ. ஆனா ரொம்பப் பதற்றம் இல்லாம உன்னால நிதானமா பதில் சொல்ல முடியும்னா சொல்லு. இல்லனா விற்று. நாம அப்புறம் கூடப் பேசலாம். ஏனா எவ்ளோ சீக்கிரம் இதுல இருந்து வெளில வருமோ அவ்ளோதூரம் நம்ம பொண்ணுக்கு நல்லது” என ஆரம்பிக்க, “நான் சொல்றேன் கார்த்திக். என்ன சுத்தி என்னதான் நடந்திச்சுன்னு நான் தெரிஞ்சுக்கணும். அதோட நான் போன இடத்துல கொலை நடந்திருக்குனு சொல்றீங்க. அங்க நான் இருந்துட்டு காணாம போயிருக்கேன். அப்போ என் மேல சந்தேகம் வந்திருக்கும்ல அங்க ?

 

அதுனால தான நீங்க என்ன பதறாம இருக்கச் சொல்றீங்க ?” என்ன கூர்மையாக வினவ, கார்த்திக் ஆம் என்பதாய் நின்றான்.

 

“நீங்க நம்புறீங்களா கார்த்திக்? அந்தக் கொலைக்கும் எனக்கும் சம்மந்தம் இருக்கும்னு ?”

 

“நிச்சயமா! அப்படி இருக்க வாய்ப்பே இல்ல. இதுவரை எப்படியோ ஆனா இனி உனக்கெதிரா நீயே சொன்னாலும் அதை நான் நம்பமாட்டேன். என்ன நடந்திருந்தாலும் நீ சொல்லு. உன் கூட நான் இருக்கேன்” என அடித்துக்கூற சவீதாவினுள் அப்படியொரு நிம்மதி.

 

“இனி எனக்கெதுக்குப் பதற்றம் கார்த்திக். நான் என்ன பார்த்தேனோ எனக்கு என்ன தெரியுமோ அத நான் அப்படியே சொல்லுறேன். இதுல இருந்து நான் கண்டிப்பா வெளிலவரனும் யாருக்காக இல்லனாலும் என் மகளுக்காக” எனக் கூறியபடி திடமாகவே பேச, பூரணிக்கு கூட அவளின் மன திடம் அதிசயமாய்த் தோன்றியது.

 

தாய்மை தான் ஒரு பொண்ணுக்கு எத்தனை வலிமையைத் தருகின்றது? வேறொரு சமயமாயிருந்தால் இதே சவீதா இத்தனை திடமாக இருந்திருப்பாளா தெரியாது.

 

“சரி, நீ அங்க ஏன் போன? அங்க என்ன நடந்தது ? திரும்ப அங்க இருந்து எப்படி வெளிவந்த ?”

 

“அந்த ரிஸார்ட்ல பட்டர்ப்ளை பார்க் வைக்கணும்னு என்ன தொடர்பு கொண்டாங்க. அந்த ரிஷர்ட்டோட ஒப்பந்தம் போட என்ன ரிஸார்ட்க்கு பின்னாடி இருக்குற அவுங்க ஆபிஸ்க்கு வர சொன்னாங்க.

 

அங்க ஒரு ஆபிஸ் இருந்தது. அதுக்குப் பின்னாடியே காட்டேஜ் ஒன்னும் இருந்தது. நான் அங்க போய்க் காத்திருந்தேன். ரொம்ப நேரமாகியும் யாரும் வரவே இல்ல. அப்போ ஒரு பெரிய சத்தம்” எனக் கூறி அன்றைய நினைவில் மெல்ல நடுங்க தொடங்கினாள்.

 

அவளுடைய பார்வையில் காட்சிகள் விரிய தொடங்கின.

 

சத்தம் பேரொளியாய் இருக்க, என்னவோ ஏதோவொன்று பதற்றத்துடன் சவீதா வெளியே வர, அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த காட்டேஜின் கண்ணாடி ஜன்னலொன்று உடைந்து சிதறியிருந்தது.

 

வேகமாக அதனருகில் செல்ல, இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருக்க, உடைந்த ஜன்னல் வழி இவள் நடந்ததை பார்த்துக்கொண்டிருந்தாள். நடப்பதை தடுக்கலாமா வேணாமா என்ற நிலையில் அவள்.

 

கணவன் மனைவி சண்டை போலத் தெரிகிறதே , மூன்றாம் நபர் உள்நுழைந்து பஞ்சாயத்து செய்வதா என்பதைப் போன்றதொரு எண்ணம். ஓர் அறையில் அவர்கள் தங்கியிருக்க யார் என்னவென்று எதுவும் தெரியாமல் உள்நுழைய அவளுடைய நாகரீக மனது தடை போட்டது. வாக்குவாதம் என்று தெரிந்தது, ஆனால் என்னவென்று அவளால் சரிவர யூகிக்க இயலவில்லை. சட்டென்று அப்பெண் ஒரு பெரிய அலங்கார மரபொம்மையை எடுத்து அவனை நோக்கி வீச, அவன் அப்பெண்ணின் கழுத்தை பிடித்துச் சுவரோடு சேர்த்து மேல்தூக்கினான்.

 

நிலைமை கைமீறி சென்றுகொண்டிருப்பதைப் புரிந்துகொண்ட சவீதா இதற்குமேல் தாமதிக்கக் கூடாது என எண்ணியவளாய், உதவி உதவி என்று கத்த, அது யார் காதிலும் விழாத தொலைவில் அந்த இடம் அமைய பெற்றிருந்தது.

 

உள் நுழையும் வழியும் அடைப்பட்டிருக்க, வேறு வழி இல்லாமல் தன்னை விசாரித்து உள் அனுமதித்த காவலாளியை நோக்கி ஓடினாள். அந்த இடத்திலிருந்து சற்று தூரமே அந்தக் காட்டேஜிர்கான வாயில். அதே காட்டேஜின் பின்புறம் ஒரு வழியிருந்தது. அதுவே அவனுடைய ரிஸார்ட்டை இணைக்கும் வழி. அதைப் பற்றி இவள் ஏதும் அறியாததால், அங்கும் செல்லும் எண்ணமே இல்லாதவளாய் தான் உள் நுழைந்த வழி நோக்கி செல்ல, அங்கே அந்தக் காவலன் இல்லாமல் போனது இவளின் துரதிர்ஷ்டமோ உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண்ணின் துரதிர்ஷ்டமோ.

 

வரும் பொழுது கைபேசி கொண்டு வராததை எண்ணி இப்பொழுது நொந்து போனாள். வேகமாகச் சம்பவம் நடக்கின்ற இடத்திற்கே செல்ல, பெரிய மரக்கட்டை ஒன்று அந்நேரம் மிகச் சரியாகக் கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு வெளியே வரவும் இவள் அந்த இடத்தை அடையவும் சரியாக இருந்தது.

 

நேரடியாகக் கட்டை தாக்கியிருந்தால் இவள் என்னவாகியிருப்பாளோ? ஆனால் கண்ணாடி கதவில் பட்டு கண்ணாடியை சிதறடித்து வந்ததால் அதன் வேகத்தில் சிறு தடுமாற்றம். ஆனாலும் அவளுடைய அதிர்ஷ்டம் அவளுக்கு முழுவதுமாகப் பலன் குடுக்காமல் அவளது தோள்களை உரசி செல்ல, வயிற்றை அணைவாய் பிடித்தபடி தடுமாறி விழ, ஆ என்ற அலறல் ! பின்பு அதுவே மெல்லிய முணங்கள்களாக!

 

விழுந்த வேகத்தில் வயிற்றில் அடிபடாமலிருக்கச் சமாளித்தவள், கல்லில் சென்று மோத பின்மண்டையில் அடிபட மெல்ல மெல்ல கண்கள் சொருக ஆரம்பித்தது. அந்த நொடி, சவீதாவின் மனதில் தன் குழந்தையும், கார்திகேயனையும் நினைவுகளில் சுமந்தபடி மயங்க அவளுடைய கண்களுக்கு உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. ஆனால் மனதின் ஓரத்தில், என் குழந்தை பத்திரமாக இருக்கும், அவரின் கைகளில் கொடுக்க நான் உயிருடன் இருக்கவேண்டுமென்ற சிந்தனையை விடாமல் அரற்றிக்கொண்டிருந்தது.

 

மெல்ல அன்றைய நினைவுகளிலிருந்து வெளிவந்தவளை, “அதுக்கு அப்புறம் ? அங்க இருந்து எப்படி எங்க போன ?” எனக் கார்த்திக் வினவ, பூரணியும் விக்ரமும் பதற்றத்துடன் காத்திருக்க, சவீதா கண்களை இறுக மூடி திறந்தாள்.

 

நினைவுகளை மீட்டி எடுக்கப் பெருமுயற்சி செய்ய அவளுடைய முகத்தில் அதன் வலி தெரியத்தொடங்கியது.

 

Advertisement