Advertisement

புயலோ தென்றலோ – 16

 

அதிர்ச்சி குழப்பம் சிந்தனை எனக் கார்த்திகேயன் சில நொடிகள் அமைதிகாட்க அவனுடைய மதியோ, “இல்ல இவள நம்பவே நம்பாத! அவ உன்ன அவ பின்னாடி சுத்த வச்சதே ட்ராமனு அவளே சொல்லியிருக்கா.

 

இத்தனை நாள் நடிச்சிட்டு இப்போ பழசெல்லாம் மறந்த போல மறுபடியும் ஒரு சீன் கிரியேட் பண்ண பாக்குறா” என எடுத்துரைக்க, தனது ஆள்காட்டி விரல் கொண்டு புருவத்தை லேசாக நெருடியவன், ஒரு முடிவோடு, “போதும்” என்ற சொல்லை மிகக் கடினமாக உச்சரிக்க, அதற்குள் விக்ரமும் பூரணியும் விரைந்து வந்தனர்.

 

“ஜி ஒரு நிமிஷம்” எனத் தடுக்க, கடுப்புடனே விக்ரமை பார்த்தான்.

 

“நீங்க இவரு பிரண்ட் தானே? நீங்களும் இங்க தான் இருக்கீங்களா ?” என விக்ரமிடம் கேள்விகேட்டவள் பக்கத்திலிருந்த பூரணியைப் புதிதாகப் பார்ப்பவள் போலப் பார்த்தபடி கார்த்திக்கிடம், “கார்த்திக் அடிபட்டத்துல நம்ம குழந்தைக்கு எதுவும் ஆகலில? டாக்டர் ஒன்னும் இல்லனு சொன்னாங்கதானே ?” எனப் பரிதவிப்புடன் கேட்டபடி தனது குழந்தை இருக்கும் வயிற்றை ஆசையாக வருட போக வேகமாக வந்த பூரணி சவீதாவின் கைகளை இதமாக பற்றித் தடுத்தாள்.

 

“உங்க குழந்தை ரொம்ப நல்லாவே இருக்கு! நீங்க கவலை படவேண்டாம். கைல ட்ரிப்ஸ் ஏறுது. அசைய கூடாது. நாங்க டாக்டர் பார்த்திட்டு இப்போ வந்துடுறோம்.

 

அதுவரைக்கும் அசையாமா இருப்பீங்களாம்.

 

கார்த்திக் நீங்க சொன்னா தான் கேப்பாங்க போல. சொல்லுங்க” எனக் கூற, “என்னடா நடக்குது” என மனதில் நினைத்தவன் , விக்ரம் மற்றும் பூரணியின் சமிங்கையில், “சவீ! நாங்க வந்திடறோம். அதுவரைக்கும் சுத்தமா அசைய கூடாது” எனக் கூற சவீதா கார்த்திக்கின் வார்த்தையை அப்படியே கேட்டுக்கொண்டாள்.

 

வெளியே மருத்துவமனை வளாகத்தில் அம்மூவரும் நிற்கப் பூரணி அவளுடைய இயல்புக்கு மாறாய் மிகவும் கோவமாக இருந்தாள்.

 

“நான் பொதுவா எந்த விஷயத்துலயும் அவசரமோ கோபமோ படமாட்டேன். ஆனா நீங்க இரண்டு பேரும் பண்ணின பண்ண இருந்த காரியத்தை நினச்சா என்னால கோவப்படாம இருக்கவே முடில” எனப் பூரணி கோவத்தில் பொரிந்து தள்ள, அப்போதும் கார்த்திக் அலட்சியமாகவே நின்றிருந்தான்.

 

“ஜி, நாம தப்பா நினச்சுட்டோம். சவீதா அம்னிஷியா பேஷண்ட். அதுனால தான் அவுங்க நம்மள , அஃதாவது உங்களை அவுங்களுக்குத் தெரியல” என விக்ரம் கூற, “அடுத்த டிராமாவா ?” என மீண்டும் அதே அலட்சிய பாவனையே கார்த்திக்கிடம்.

 

“டிராமா இல்ல கார்த்திக். நான் சொல்லுறத பொறுமையா கேளுங்க. நான் சைகாட்டிக் ஸ்டுடென்ட். என்னோட சீப் கிட்ட நான் சக்தியை அதாவது சவீதாவை கன்சல்ட் பண்ணியிருக்கேன்.

 

அவளுக்குத் தன்னோட பேருகூட நினைவில்லை” எனத் தளதளத்த குரலில் கூற, “நீங்க என்ன சொல்றீங்க ?” எனச் சற்றே கவனமானான் கார்த்திக்.

 

“ஆமாம்! வால்பாறை ஹேர்பின் பெண்ட் ஒன்னுல மயங்கிய நிலைல கிடந்தானு பிரகாஷ் சார் தான் கூட்டிட்டு வந்து டிரீட்மெண்ட் பண்ணினாரு. கண்ணு முழுச்சவளுக்கு, தான் யாருனே தெரியல.

 

எந்த ஊரு பேரு என்ன எதுவுமே தெரியல. அவ கன்ஸீவ இருக்குறது கூட நாங்க சொல்லித்தான் அவளுக்குத் தெரியும். தனக்குக் கல்யாணம் ஆனதையோ கணவன் யாருணோ எதுவுமே அவளுக்கு ஞாபகம் இல்ல.

 

கல்யாணம் ஆகிருக்குனே அவ போட்ருந்த நகையில இருந்த தாலியில இருந்து தான் கண்டுபிடிச்சோம்.

 

பிரகாஷ் சார் ஸ்டேஷன்-ல கம்பளைண்ட் பண்ணினாரு. இப்படியொரு பொண்ணு இங்க இருக்கிறதா தகவல் சொல்லி. ஆனா ப்ரெஜனம் இல்ல.

 

நியூஸ் பேப்பர்ல ஆட் கூடக் கொடுத்தாரு. அதைப் பார்த்து இரெண்டு பேரு வந்தாங்க. தங்களைச் சவீதாவோட ஹஸ்பண்ட் அப்புறம் மாமியாருனு சொல்லிக்கிட்டு கூப்பிட்டு போனாங்க.

 

பிரகாஷ் சார் கூட ரொம்பச் சந்தோஷமாவே அனுப்பி வச்சாரு. அனுப்பிட்டு இவரு பின்னோட வேற வேலையா போக, முன்னாடி போன காருக்குள்ள சவீதா துள்ளுறதும் கத்துறதும் கேட்க உடனே அவரு ஆளுங்கள எதுத்தமாதிரி வர சொல்லி இரண்டு பக்கமும் வளைச்சி பிடிச்ச பிறகு தான் தெரிஞ்சிருக்கு, கூட வந்த பொம்பளை, பொண்ணுங்க தொழில் பண்றவலாம்.

 

தன்னை மறந்த பொண்ணுனால ஈஸியா ஏமாத்தி கூப்பிட்டு போலாம்னு வந்துருக்காங்க. நல்லவேளை பிரகாஷ் சார் இரண்டாவது முறையா காப்பாத்திட்டாரு.

 

அப்புறம் ஒருமுறை மார்க்கெட் போனபோது அவளுக்குத் தெரிஞ்சவுங்கன்னு இரண்டு பேரு வந்து இவகிட்ட வம்பு வளக்கவும் சவீதா அதோட சில மாசம் வெளில போறதே நிறுத்திட்டா.

 

செக் அப் கூட நான் அவளுக்கு துணையா போவேன்.

 

அதுலிருந்து எல்லாரையும் சந்தேகக் கண்ணோட பார்க்க ஆரம்பிச்சுட்டா. அதுனாலதான் நீங்க இரண்டு பேரு சொல்றத நம்புறதா வேணாமான்னு அவ குழப்பத்துல இருந்தா.

 

ஆனா அதே சமயம் உங்கள பார்க்கிறப்ப அவளையும் மீறி உங்க மேல எதோ சொல்ல முடியாத உணர்வு வர, அத நம்புறதா வேணாமான்னு குழப்பம். முன்னாடி நடந்த கசப்பான சம்பவம் எல்லாம் சேர்த்து அவளுக்குள்ள பயம் தான் அதிகமாச்சு.

 

அதுக்குக் காரணமும் நீங்க தான்.

 

அவளைப் பார்த்த முதல் நாளே நீங்க ஆதாரத்தோடு சொல்லியிருந்தா அவளுக்கு இந்த நிலைமை வந்திருக்காது” எனக் கூற, கார்த்திக் பேச்சற்று நின்றான்.

 

மேலும் அவளே தொடர்ந்து, “அவ உங்கமேல கோவப்பட்டதுக்குக் காரணம் அவளே அறியாம உங்ககிட்ட அட்ராக்ட் ஆக ஆரம்பிச்சா. உங்க கண்ண பார்த்தா அவன் கண்ட்ரோல் லூஸ் பண்ணினா.

 

அது அவளுக்குப் பயத்த கொடுத்திச்சு. வயித்துல குழந்தையோட இருக்கிற நிலையில தான் யாருனே தெரியாம இருக்கிற சூழ்நிலைல உங்கள பார்த்தா அவளையும் மீறி வர இனம் புரியாத உணர்வ பார்த்து பயந்தா. ரொம்ப ரொம்பப் பயந்தா.

 

அவளோட இந்த உணர்வு உங்களுக்குத் தெரியாம மறைக்கத் தான் அந்தக் கோபம். அதையும் மீறி ஒருநாள் என்ன சொல்றோம்னே உணராம உங்ககிட்ட ஏதோ பேசிட்டாளாம்.

 

அதுக்கு அப்புறம் அவளைப் பத்தி நீங்க ரொம்பக் கீழா நினைச்சிடுவீங்களோனு பயந்தா.

 

ஆனா அந்த முறைமட்டுமில்லை. நிறைய முறை உங்ககிட்ட பேசின வார்த்தைகள் எல்லாமே அவளுடைய கண்ட்ரோல் மீறி வந்த விஷயம்.

 

அவளோட நிலையே தெரியாத போது உங்கமேல வர உணர்வுக்கு இந்தச் சமுதாயம் என்ன பேருவைக்குமோ அந்தப் பேரு அவளுக்கு மட்டுமில்லாம அவளோட குழந்தையையும் பாதிச்சிடுமோனு ரொம்பப் பயந்தா.

 

அவளைப் பத்தி எந்தத் தகவலும் தெரியாத நிலையில கூட அவளோட ஒழுக்கத்துக்கு எந்தத் தப்பான பெயரும் வந்திட கூடாதுனு ரொம்பக் கவனமா தான் நடந்துப்பா. பிரகாஷ் சார் கிட்ட கூட அதிகமா ஒருவார்த்தை பேசமாடா. சாரும் ரொம்பக் கண்ணியமான மனுஷன். அவர் மனைவி வெண்பாவை தவிர வேற யாரையும் ஏர் எடுத்து பார்க்காத ஆளு.

 

வெண்பா காணாம போன பிறகு துடிச்சு போன மனுஷன் எப்பயும் அடிக்கடி பொண்டாட்டி ஞாபகமா தனியாவே இருக்க ஆரம்பிச்சாரு. எப்பவும் அவரோட மனைவி பதியே யோசிச்சிட்டு அந்த வீடே நரகமா போய்டுச்சு.

 

அது எல்லாத்தையும் மாத்தினது சக்தி தான். உங்க சவீதா தான். தன்னையும் தேத்திகிட்டு தனக்கு ஆதரவு கொடுத்த வீட்டுக்கும் வெளிச்சத்தைக் கொண்டு வந்த பொண்ணு தான் சவீதா. வெண்பா நிச்சயம் கிடைப்பாங்கனு சார் நம்புறதுக்கு முக்கியமான காரணமும் சவீதாதான்.

 

இந்த நிலையில வேற எந்தப் பொண்ணா இருந்தாலும் இவ்ளோ திடமா இருக்கமாட்டாங்க. ஆனா அவ்ளோ திடமான பொண்ணே உங்ககிட்ட தடுமாற ஆரம்பிச்சாள்.

 

இப்படிப்பட்ட சக்தி சாரி சவீதா உங்ககிட்ட ஏன் தடுமாறனும் ? உங்களுக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்குனா அதை ஏன் நீங்க முன்னாடியே தெளிவா பகிரங்க படுத்தல? சில சமயம் உங்ககண்ல தெரிஞ்ச நெருக்கமும் பல சமயம் தெரிஞ்ச வெறுப்பும் ஏற்கனவே குழம்பி இருந்தவளா இன்னும் குழப்பமாக்குச்சு.

 

அவ மட்டுமில்ல, நானும் உங்கள பத்தி அனலைஸ் பண்ண ஆரம்பிச்சேன்.

 

அப்போதான் அவ உங்க கண்ண பாத்து பேசினது என்கிட்டே சொல்லி ரொம்பத் துடிச்சு போய்ட்டா. ஆனா எனக்கு என்ன தோணிச்சுனா, நிச்சயம் உங்க ரெண்டுபேருக்கும் எதோ சம்மந்தமிருக்கு. உங்களோட ப்ரெசென்ஸ் அவளையும் மீறி அவளைப் பேச வைக்கிது.

 

நிச்சயமா இதே தொடர்ந்தால் பழசு எல்லாமே சவீதாக்கு நினைவு வந்திடும்னு தோணிச்சு. அதுனால அவ இங்க இருந்து தூரமா போறேன்னு சொன்ன போது தடுத்தேன். நான் போன்ல சொன்ன சமாதானம் அவளை முழுசா கன்வின்ஸ் பண்ணல. அதுனால நேர்ல பார்த்து சொன்னேன்.

 

அப்போகூட உங்க பிரண்ட் தற்செயலா வந்தாரு போல. சவீதா உங்கள பத்தி பேசினது அவரு தெரிஞ்சிகிட்டா இன்னும் அவமானம் ஆகிடும்னு ரொம்ப டென்ஷன் ஆகிட்டா.

 

நல்லவேளை, உங்க பிரண்ட் வேற புருஞ்சுகிட்டாரு.

 

இதுல ரியலி நான் சர்ப்ரைஸ் ஆகுற விஷயம் என்னனா, உங்க சவீதா உங்கள எந்த அளவு நேசிச்சிருந்தா எல்லாத்தயும் மறந்த ஸ்டேஜ்லயும் உங்கமேல உள்ள உணர்வும் உங்ககிட்ட பேசின அதே வார்த்தைகளும் தோணிருக்கும்.

 

இத சாத்தியப்படுத்தினது அவ உங்கமேல வச்சிருக்கக் காதல். இப்போ சவீதா பேசினதிலிருந்து அவுங்க முழுசா சரி ஆகிட்டாங்கனு தோணுது.

 

ஆனாலும் முழுசா நீங்க சந்தோச படமுடியாது. ஏன்னா அவுங்க 5 மாசம் பின்தங்கி இருக்காங்க. அவுங்களுக்குக் குழந்தை பிறந்தது சந்தோசமான விஷயமானாலும் அதையே அவுங்க மூளை எப்படி எடுத்துக்கும்னு தெரியல. மனித உறுப்புல ரொம்பச் சென்சிடிவ் ஹியூமன் பிரைன்.

 

நீங்க அவளைவிட்டு விலகியிருந்தது அப்புறம் உங்க கோவம் ஏன்னு எனக்குத் தெரியாது, ஆனா உங்க கோவம் இதெல்லாம் அவளுக்கு இப்ப எந்தக் காரணத்துக்காகவும் சொல்லிடவே சொல்லிடாதீங்க.

 

அவுங்க மூளைக்கு அதிகமான ஸ்ட்ரெசோ பிரசரோ கொடுக்கவே கொடுத்திடாதீங்க. இங்க இருந்து போன பிறகு என் சீப்கிட்ட கூப்பிட்டு போறேன்” எனக் கூறி முடிக்கக் கார்த்திக் இன்னும் அதிர்ச்சி விலகாமலே நின்றான்.

 

விக்ரமோ கவிழ்த்த தலையை நிமிர்த்தவே இல்லை. அவனைப் பார்த்த பூரணி, “நீங்க பண்ணினது ரொம்ப ரொம்ப ஆபத்தான விஷயம். ஆனா அதிர்ஷ்டவசமா அதுவே நல்லதா முடிச்சிடுச்சு.

 

அவ புருஷனுக்குப் பிரச்சனை அப்படிங்கிற அதிர்ச்சியோ, இல்ல கீழ மயங்கி விழுந்த போது முன்னாடி அடிபட்ட அதே இடத்துலே அடிப்பட்டதோ. ஏதோ ஒன்னு சவீதாக்கு நினைவு வந்திடுச்சு.

 

மறுபடியும் இப்படியொரு விஷயத்தைக் கனவுலயும் பண்ணனும்னு நினைக்காதீங்க” எனக் கண்டிப்புடன் கூறிவிட்டு,

“ஹ்ம்ம் நான் இந்தமுறை விஷம்னு சொல்லல, விஷயம்னு சொன்னேன்” எனக் கூறி மெல்ல இதழ் பிரிக்க, விக்ரம் இன்னும் தலையைக் கவிழ்த்துக்கொண்டான். கவிழ்த்தபடியே, “நீங்க இவ்ளோ ஹெல்ப் பண்ணினால சொல்றேன். எனக்குக் காது நல்லாவே கேட்கும். அப்புறம் நீங்க தோட்டத்துல பேசியதும் நான் தெளிவாவே கேட்டேன். ஆனா முதல் பாதிக் கேட்கமுடில. அதுனால வந்த குழப்பம் தான்.

 

நாங்க இங்க ஏன் வந்தோம், கார்த்திக் சவீதாக்கு நடுவுல என்ன பிரச்சனை அதெல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா எங்களுக்கு உங்க உதவி இன்னமும் தேவை படும். நீங்க இங்க நடந்த எதுவும் இப்போதைக்கு வெளில சொல்லாதீங்க. நீங்களும் ஒரு டாக்டர் தானே.

 

பேஷண்ட் பத்தின எந்தத் தகவலும் மத்தவங்களுக்குக் கொடுக்காதீங்க. நான் சொல்றது பிரகாஷ் ஜியும் சேர்த்து தான்.

 

உங்ககிட்ட எல்லாத்தயும் நாங்க தெளிவா சொல்லுறோம் அப்புறம். இப்போ சவீதாவ பார்க்கலாம்” எனக் கூற, பூரணியோ விக்ரமின் பேச்சிலிருந்து, “இந்த விஷயம் இதோடு முடியல போல. இனி தான் ஆரம்பிக்கப் போகுதா ?” என எண்ணியபடியே, “என்னால உங்களுக்கு உதவி பண்ண முடியும்னு நான் உத்தரவாதம் தர முடியாது. சவீதாக்கு முழுசா குணமாக நான் உதவி செய்வேன். அதுக்குமேல என்ட எதிர்பார்க்கவேணாம். வேணும்னா இங்க நடந்த எந்த விவகாரத்தையும் வெளில சொல்லல.

 

நீங்க காதுகேட்காமை இருக்குறத போல நடிக்கிற அளவுக்குனா நிச்சயம் விஷயம் பெருசு. இதுல நான் உள்ள வர விரும்பல. ஆனா உங்கனால சவீதாக்கு ஆபத்து வந்தா, அப்போ நான் உங்கள பத்தி பிரகாஷ் சார்கிட்ட சொல்லிடுவேன்” என எச்சரிக்க, விக்ரம் சம்மதமாய்த் தலை அசைத்தான்.

 

இதிலெதுவும் கார்த்திக்கின் மனம் ஈடுபடவே இல்லை. அவனுடைய சிந்தனை முழுவதையும் சவீதாவே ஆக்ரமித்திருந்தாள். அவனுள் சவீதாவை பற்றிய ஆயிரம் கேள்விகள். தொலைத்த நினைவுகளுக்குள்ளும் கார்த்திக்கின் பிம்பம் தோன்றுயதென்றால், அவனுக்கொரு ஆபத்தென்றதும் அவனை நினைவில்லா நொடியிலும் அவனுக்காக நெஞ்சம் துடிக்கிறதென்றால் , அவை அனைத்தையும்விட அவனுக்காகவே இழந்த நினைவுகளை அவள் மூளை மீட்டு எடுக்கிறதென்றால் அவளின் காதல் தான் எத்தகையது.

 

பிறக்கவிருக்கும் குழந்தையின் மரியாதையை இன்றே சிந்திக்கிறாளென்றால் அவள் எப்படிக் குழந்தையை வெறுக்கும் குணம் கொண்டவளாக இருக்க முடியும் ?

 

மூளை நினைவுகளைத் தான் மறக்குமே ஒழிய அடிப்படை குணத்தை அல்ல. ஆழ்மனதில் புதைந்துள்ள நேசத்தையோ பண்பையையோ அல்லவே அல்ல. இவை அனைத்தும் தான் கார்த்திக்கின் மனதில் வலம் வந்தன.

 

இப்படிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டவளால் எப்படி அப்படிப்பட்ட வார்த்தைகளைத் திமிராகவும் அலட்சியமாகவும் கூற முடியும் ? என்ற கேள்வி முதன் முறையாகக் கார்த்திக்கினுள் எழுந்தது.

 

“நெவர்! நிச்சயமா சவீதா அப்படிப் பேசினத்துக்குப் பின்னாடி ஏதோ இருக்கு. நான் அதைக் கண்டுபிடிக்கிறேன். கண்ணு முழுச்சதும் ஏதோ சொன்னாலே.

 

ஆஹ், கண்ண மூடும்போது நான் மட்டும்தான் அவளோட நினைப்புல இருந்தேனு.. அப்போ அன்னைக்குச் சவீதாக்கு என்ன நடந்துச்சு ? எப்படி இந்தக் கேஸ்ல இன்வோல்வ்வானா? கூர்க்ல இருந்தவ எப்படி வால்பாறைக்கு வந்தா? எதுக்காக இங்க வரணும் ?

 

அந்த வீடியோ எப்படிச் சவீதா போன்க்கு வந்தது ? அவளுக்கு எதிரான ஆதாரம் எப்படி அவளோட போன்ல ?

 

எல்லாத்தையும் எதையும் மிச்சமில்லாம எல்லாத்தையும் கண்டுபிடிக்கிறேன்” எனத் தனக்குள் கூறிக்கொள்ள, ஒரு செவிலியர் வந்து, “சார், குழந்தையைப் பீட் பண்ண கொண்டு போனா, நீங்க கூட்டிட்டு வந்தவங்க, குழந்தையை வாங்க மாற்றங்க. நீங்க கொஞ்சம் வாரீங்களா ?” எனச் சலிப்புடன் வந்து கூற, மற்ற மூவரும், “ஐயோ அவசரப்பட்டுட்டாங்களே” எனப் பதற்றத்துடன் எண்ணியபடி அவளின் அறை நோக்கி விரைந்தனர்.

 

மற்ற இருவரை விட, கார்த்திக் கலக்குத்துடனே அவள் முன் நின்றான்!

 

Advertisement