Advertisement

புயலோ தென்றலோ – 15

 

“காதலா? அதுவும் அவன் மேல ? யார் சொன்னது ?’’ என்ற சவீதாவின் வார்த்தைகளாக அந்தக் காணொளி தொடங்கியது. சவீதாவின் முகத்திலும் அத்தனை அலட்சியம் ! அத்தனை ஆணவம் ! இப்படியொரு முகத்தை இதுவரை கண்டிராத கார்த்திகேயன் திகைப்புடன் மேலும் பார்க்க தொடங்கினான்.

 

“அப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டது?” எனக் கேள்வியாக அந்தக் காணொளியில் ஓர் ஆண் குரல் மட்டும் ஒலித்தது. முகம் தெரியவில்லை. காணொளி முழுவதும் சவீதா மட்டுமே இருந்தாள். இடையிடையே அவ்வப்போது முகம் காட்டாது ஆண் குரல் மட்டும்.

 

“கல்யாணம் செஞ்சுக்கிட்டா? காதலுனு யார் சொன்னது ?”

 

“கல்யாணம் பண்ணிக்க வேறென்ன காரணம் இருக்க முடியும்?”

 

“பாதுகாப்பும் பணமும்”

 

“புரியல. நீ என்ன சொல்லுற ?”

 

“ஆமாம், எனக்கு இந்தக் காதல் கல்யாணமெல்லாம் இஷ்டமும் இல்லை பிடிக்கவும் பிடிக்காது. என்னைக் கட்டுப்படுத்திற எந்த விஷயமும் எனக்கு செட்டே ஆகாது.

 

ஆனா இந்தச் சொசைட்டில தனியா வாழவும் முடியாதே. அதுக்குத் தான் அவனைக் காதலிக்கிறத போல நடிச்சேன்.

 

என் இஸ்டத்திக்கு நான் ஆடம்பரமான வாழ்க்கை வாழனும். அதுக்குச் சம்பாரிக்கவும் எனக்காகச் செலவு பண்ணவும் ஓர் ஆள் வேணுமே”

 

“அப்போ நீ அவன் கூட நல்லபடியா குடும்ப நடத்தி குழந்தை குட்டின்னு வாழ போறதில்லையா?”

 

“என்னது குழந்தையா? நான் என்ன அவனைப் போல முட்டாளா ? நான் சொல்ற பொய்யவே கண்டுபிடிக்க முடியாத முட்டாளுக்குக் குழந்தை வேற பெத்து கொடுக்கணுமா ?

 

எனக்கு எந்தக் கம்மிட்மெண்ட்ஸும் பிடிக்காதுனு சொன்னேன்ல”

 

“ஐயோ அப்போ உன் புருஷனோட ஆசை? கனவு ?”

 

“அவன் ஆசையெல்லாம் எப்பவும் கணவாவே இருக்கும். அதுல எந்தச் சந்தேகமும் இல்ல”

 

“நீ இப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சா மனுஷ தொங்கிடுவான். இருந்திருந்து உன்ன பொய் தேடி பிடிச்சான் பாரே.அவனைச் சொல்லணும்”

 

“என்னது அவன் என்னைத் தேடி பிடிச்சானா?” எனக் கூறியவள் இதழ் மடித்து அலட்சியமாகச் சிரித்தபடி, “பாக்க வச்சேன், தேட வச்சேன், கடைசியா என் பின்னாடி எதோ மாறி அலையவைச்சேன். நம்பிக்கை இல்லையா?

 

அவன் என்ன பாத்த முதல் நாளிருந்து எல்லாமே நான் போட்ட நாடகம். என்ன பண்ண ? வசதியான வாழ்க்க சும்மா கிடைக்குமா ?”

“எல்லாம் சரிதான். ஆனா நீ நினைக்கிற அளவுக்கு அவனால உனக்குச் செலவு பண்ணமுடியாது. அவன் ஆசை கனவா போகுதா இல்ல உன்னோட ஆசை கனவா போகுதான்னு பொறுத்து இருந்து தான் பார்க்கணும்”

 

“நீ என்ன சொல்லுற? அவனுக்குத் தான் நிறையச் சொத்து இருக்கே”

 

“இருக்குது இல்ல. இருந்துச்சு.! அவன் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்திருக்கான். அதனால உனக்குப் பைசா தேறாது”

 

“நீ சொல்றது உண்மையா?”

 

“நான் உண்ட பொய் சொல்லி என்ன பண்ண போறேன். சத்தியமான உண்மை”

 

“அவன் என்ன ஏமாத்திட்டான். இதுக்கு அவன் நிச்சய அனுபவிப்பான். சொத்து இல்லாத வெறும்பையன நம்பியா இந்தக் கல்யாணத்த பண்ணிக்கிட்டே.

 

அவன அலையவிடுறேன். ஒரு நாயப் போல எனத் தேடி அலைய விடுறேன்” என்று சவீதா ஆக்ரோஷத்துடன் கூறியதோடு அந்தக் காணொளி நிறைவு பெற, கார்த்திக் பார்த்ததை நம்ப முடியாமல் அப்படியே உறைந்து நின்றான்.

 

அவளின் பாவனைத் தோற்றம் அலட்சியம் திமிரென்று அவன் பார்க்க நேரிட்ட அனைத்தும் கார்த்திகை வேரோடு சாய்த்தது. நம்புவதா வேணாமா எனச் சில நொடிகளே உழன்றான். மறு கணமே, “இல்ல! இது நிச்சயமா உண்மையா இருக்காது. சவீதாவோட வீடியோல யாராச்சும் வாய்ஸ் கொடுத்து டப் பண்ணியிருப்பாங்களோ ? ஆமாம் அப்படித் தான் இருக்கும். இது கண்டிப்பா எடிட்டட் வீடியோ தான்.

 

சவீதா எங்க காதல இப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல” என எண்ணியவன் ஏதோ ஓர் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு, அந்தக் காணொளியை அனுப்பி அதன் உண்மையை மிகவும் ரகசியமாக ஆராயும் படி கூறினான். இது போல வழக்குகள் தொடர்பாக நிறையப் பார்ப்பதால் அவர்களும் மிகவும் ரகசியமாக இதைக் கையாண்டனர். அப்படிச் சோதித்து அவர்கள் கூறிய வார்த்தை கார்த்திக்கின் பயத்தை ஊர்ஜித படுத்தி, நம்பிக்கையை வேரோடு அழித்தது.

 

அவர்கள் கூறிய வார்த்தையே மீண்டும் மீண்டும் அவன் காதினுள் ஒலித்தது. அவர்களின் வார்த்தை அவனைக் கூனி குறுகி வைத்தது. இந்த உலகத்தில் தன் அடையாளமே தெரியாத இடத்திற்குச் சென்று விடவேண்டும் என்ற வெறியை அவனுள் கிளப்பிவிட்டது.

 

அந்த வார்த்தைகள், “சார், நீங்க இப்ப அனுப்பிய வீடியோ 100 % ட்ரு. அப்பாடா ! யாரு சார் இந்தப் பொண்ணு. இப்படிப் பேசுது. கேட்ட எங்களுக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு. பாவம் அந்தப் பொண்ணோட புருஷன்.

 

இந்த மாதிரி பொண்ணுங்க இப்பலாம் அதிகம் ஆகிட்டாங்க போல. அவன் மட்டும் பார்த்தா அயோ வேணாம் சார். ரொம்பப் பரிதாபத்துக்குரியவன் அவன் தான் சார். ஆனாலும் இவள பத்தி கொஞ்சம் கூடவா தெரியாம போச்சு அவனுக்கு.

 

இந்த அளவுக்கா சார் நம்புறது ? அவன் ஏமாளியா இருக்கப் போய் தான சார் இந்த மாதிரி பொண்ணுங்க ஈஸியா ஏமாத்துறாங்க” என இன்னும் ஏதோ கூற வந்தவனைத் தடுத்த கார்த்திக், “ஸ்டாப் இட். கேஸ் விஷயத்துல இன்வோல்வ் ஆகக் கூடாதுனு உங்களுக்குத் தெரியாதா ?” எனச் சத்தம் போட்டுவிட்டு அழைப்பை துண்டித்தான்.

 

சவீதாவின் முட்டாள், இந்தக் காணொளியை சோதித்தவர்களின் பரிதாபத்துக்குரியவன், ஏமாளி என்ற வார்த்தைகள் கார்த்திக்கினுள் அழிக்க முடியாத ஆறவே ஆராத காயத்தை ஆழமாக ஏற்படுத்தியது. கண்ணாடி முன் நின்றவன் அவமானத்தால் தாடை இறுக நின்றிருந்தான்.

 

“அவனை எனத் தேடி அலைய விடுறேன்” என இறுதியாக அவள் கூறிய வார்த்தை கார்த்திக்கின் தன்மானத்தைச் சீண்டியது. அதிலும் குழந்தை என்ற ஒன்று அவள் எப்போதுமே பெற்றுக்கொள்ளமாட்டாள் என்ற வாக்குமூலம், அவனைப் புரட்டிப்போட்டது. அவன் மீது காதல் வைக்க அவளென முட்டாளா என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவமான வலியை தந்தன.

 

அவளின் ஒவ்வொரு வார்த்தையும் அவனைச் சவீதாவை வெறுக்க வைத்தது. அந்த வீடு அந்த இடம் அனைத்தும் அவனுக்கு நரகமாகவே தோன்றவே, அங்கிருந்து கிளம்பியவன் தான். மீண்டும் அந்த வீட்டிற்குத் திரும்பவே இல்ல.

 

அவளை முழுவதுமாக வெறுத்துவிட்டதாய் எண்ணம் கொண்டிருக்க, இன்று அவளுக்கு ஒன்றென்றால் மீண்டும் துடித்தெழுகின்ற மனத்தை எண்ணி வெக்கி தலை குனிந்தான். சவீதா கூறியதை போன்றே அவன் முட்டாள் தான் போலும் என அவனே அவனை எண்ணிக்கொண்டான்.

 

வந்த நாள் முதல் தன்னை யாரென்றே தெரியாது என்பதாய் நடித்தவள், சற்று முன் கூட அவனின் செய்கையை அத்தனை அருவருப்பாகப் பார்த்தவள், இறுதியாக அவனை மாமா என்றழைத்து விட, “அப்போ இத்தனை நாளா என்ன தெரியாத போல நடிச்சிருக்க ? முன்னாடி காதலிக்கிறத போல நடிச்ச! இப்போ இப்படி.

 

ஒருவேளை இந்தச் சொத்தெல்லாம் பார்த்ததும் மனசு மாறிட்டாளா?

 

ஆனா குழந்தையே பெத்துக்கமாட்டேனு சொன்னாலே… ஒரு வேல அவளுடைய கைய மீறின நிலையில தான் அவளுக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்குமோ.

 

கொஞ்ச நேரம் முன்னாடி நான் குழந்தை பிறக்கிறது பத்தி பேசுனேனே! அதுனால இத சாக்கா வச்சு என்ன மறுபடியும் முட்டாளாக்க பாக்குறாளோ ?

 

ஆமாம்! அப்படிதான் இருக்கும்.

 

ஆனா மறுபடியும் நான் உன்ன நம்பத் தயாரா இல்ல. என்னோட குழந்தை ? என்னோட குழந்தைக்கு எதுவும் ஆகக்கூடாது.

 

அம்மா ! அம்மா நீ தான் சாமியா இருந்து என் குழந்தையைப் பத்திரமா இந்தப் பூமிக்குக் கொண்டு வரணும். நீ தான் என்ன விட்டு போயிட்ட. என் குழந்தை அவ எனக்கு நிச்சயம் நல்லபடியா வேணும்மா” எனச் சிறு குழந்தை போலக் கண் மூடிய தன் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான்.

 

“மிஸ்டர்” என்ற மருத்துவரின் அழைப்பில் கண் திறந்தவன், “அவுங்களுக்குப் பிரஷர் ஜாஸ்தி ஆகிடுச்சு. பனிக்குடமும் உடையற ஸ்டேஜ் ல இருக்குது. பிரஷரை குறைக்க ட்ரை பண்றோம். அவுங்க மயக்கமும் தெளியல.

 

சோ சி-செக் தான் சான்ஸ் நிறையா இருக்கு. நீங்க ஒரு சைன் பண்ணிடுங்க. சிஸ்டர் பார்ம் கொடுப்பாங்க” எனக் கூற, கார்த்திகையும் மீறிய வார்த்தைகள் வெளிப்பட்டன.

 

“டாக்டர்… சவீ, சவீ க்கு ஒன்னும் ஆகிடாதே! ரெண்டு பேரையும் காப்பித்திடுங்க ப்ளீஸ்” எனக் கூறினான்.

 

“நாங்க எங்கனால முடிஞ்ச எல்லாத்தையும் நிச்சயம் பண்ணுறோம். முதல்ல சைன் பண்ணுங்க! லேட் பண்ணாதீங்க” எனத் துரிதப்படுத்தி உள்ளே செல்ல, கார்த்திக் பதற்றத்தின் உச்சத்திலிருந்தான்.

 

விக்ரமும் தன் செயலினால் ரொம்பவே காயப்பட்டிருந்தான்.

 

”உண்மைய வெளில கொண்டுவரேனு உயிருக்கே ஆபத்தைத் தர வேலைய நான் செஞ்சுட்டேன். அயோ ஜியோட மனைவிக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிட கூடாது” என மனதார வேண்டிக்கொண்டான்.

 

ஒருமணி நேர போராட்டம் இப்படியாகக் கழிய உள்ளிருந்து தகவல் வருவதாய்க் காணவில்லை. விக்ரம் மனசாட்சி அவனை மெல்ல மெல்ல கொள்ளத் தொடங்கியது.

 

“ஜி, என்ன என்ன மன்னிச்சிடுங்க… நான் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல”

 

“நீ என்ன சொல்லுற விக்ரம்?”

 

“ஆமாம் ஜி. நான் தான், சக்தியை சவீதானு அவுங்க வாயலையே சொல்ல வைக்க அந்த யானையை ஏற்பாடு பண்ணேன். எந்தத் தப்பான இன்டென்சனும் இல்ல ஜி.

 

நான் ஒன்னு நினைக்கப் போய் அஃது இப்படி ஆகிடுச்சு” என முழுவதுமாக விக்ரம் கூறி முடிப்பதற்குள் விக்ரமின் சட்டையைக் கொத்தாகப் பற்றியிருந்தான் கார்த்திக்.

 

“என்ன வேலை பண்ணியிருக்க? உன்ன நான் இப்படிப் பண்ண சொன்னேனா ?” எனக் குரலை உயர்த்த, அதே நேரம் ஒருபுறமிருந்து பூர்ணிமாவும் மறுபுறமிருந்து ஒரு செவிலியரும் வந்தனர்.

 

இங்க சத்தம் போட கூடாதெனக் கண்டிப்புடன் கூறிவிட்டு செல்ல, அதே சமயம் பூர்ணிம வந்து ஏதோ கூற வர, அடக்கப்பட்ட குரலில் கார்த்திகேயன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

 

விக்ரம் கெஞ்சலாக ஏதோ கூறவர பூரணிமா கோவமாக ஏதோ கூறவர, இருவரையும் “உஷ்…” என விரல் காட்டி தடுத்தான்! எச்சரித்தான்!

 

“சவீக்கும் என் குழந்தைக்கும் ஒண்ணுமில்லை அவுங்க நல்லா இருக்காங்கனு தெரியிற வரைக்கும் ஒரு வார்த்தை, ஒரு வார்த்தை கூடப் பேச கூடாது. இங்க நிக்காதீங்க யாரும். கெட் லாஸ்ட்” எனக் கர்ஜிக்க, அவனின் பார்வையின் வீரியத்தில் இருவரும் தன்னிச்சையாக ஓரடி பின்னகர்ந்தனர்.

 

தழைத்த குரலில் பூரணியும் விக்ரமிற்கு மட்டும் கேட்கும்படியாக, ” கொஞ்சம் வறீங்களா? உங்ககிட்ட தனியா பேசணும்” எனக் கூறியவளின் குரலில் கோபமும் கண்டிப்பும் இருந்தது.

 

விக்ரமின் குற்ற உணர்ச்சியும் பூர்ணிமாவும் கண்டிப்பிற்குப் பணிந்தனர். பூரணியுடன் விக்ரம் செல்ல கார்த்திக் இருப்புக் கொள்ளாமல் அப்புறமும் இப்புறமும் நடந்தான்.

 

“கங்கிராஸ் கார்த்திக்” என்ற மருத்துவரின் வார்த்தைகள் கேட்கும்வரை கார்த்திக்கின் நிலையைச் சொல்லி புரியவைக்கவோ பார்த்து புரிந்துகொள்ளவே முடியாது. அனுபவிப்பவர்களால் மட்டுமே அறிந்துகொள்ளக் கூடியவை.

 

“டாக்டர் என்ன ஆச்சு? சவீக்கும் குழந்தைக்கும் ஒன்னும் இல்லைல. நல்லா இருக்காங்க தானே ?. இரண்டு பேரும் நல்லா இருக்காங்கனு மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்” எனக் கூற, சிறிய சிரிப்புடன், “இரண்டு பேரும் நல்லா இருக்காங்க. உங்களுக்குப் பெண் குழந்தை. பேபி எட்டாவது மாசமே பொறந்துடனால, கொஞ்ச நேரம் இன்குபேட்டர்ல வைக்கணும். அந்தப் பொண்ணு கண் முழிச்சதும் பீட் பண்ண சிஸ்டர் கொடுப்பாங்க.

 

சீக்கிரம் கண் முழிச்சிடுவாங்க. ரூம் ஷிப்ட் பண்ணினதும் நீங்க போய்ப் பாக்கலாம்” எனக் கூறி செல்ல, குழந்தையை எப்போது பார்போதும் என்று அவனுடைய மனம் தவியாய்த் தவித்தது.

 

அவனின் தவிப்பிற்கு விடையாய் மூடிய இமைகளுக்குள் அவளின் கருவிழி அசைய, மெல்ல மெள்ள கண் திறந்தவள் மங்கலாகத் தெரிந்த கார்த்திக்கின் உருவத்தைப் பார்த்து, “மாமா” என மிகவும் பலவீனமாக உச்சரித்தாள்.

 

மீண்டும் மாமாவென்ற அழைப்பு அவனை அவளின் செய்கைகளை நினைவூட்டிட இத்தனை நேரமிருந்த பதற்றம் குறைந்து அவள் மீது கோபம் வர தொடங்கியது. ஆனாலும் எதையும் அவன் வெளிக்காட்டவில்லை.

 

“எனக்கு நம்பிக்கையே இல்ல! நான் உங்கள மறுபடியும் பார்க்க…. பார்ப்பேன்னு. கண்ணு மூடுறப்போ கடைசியா நீங்க தான் மனசு முழுக்க. ஆமாம் மாமா! உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லணும். நமக்கு குழந்தை…..” என மெள்ள மெள்ள வார்த்தைகளை உச்சரிக்க, “இல்ல நீ எதும் சொல்ல வேணாம்! குழந்தை என்னோடது. அவ என் பொண்ணு” என முகத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு கூறிவிட்டு இதற்குச் சவீதாவின் பதில் நிச்சயம் மறுப்பாளென்று எதிர்பார்க்க, முன்னைவிடச் சற்றே தெளிந்த முகத்துடன் இதழ் விரித்து, “அதுக்குள்ள பொண்ணு தான் பிறக்கும்னு சார் முடிவே பண்ணிடீங்களா ? சார் அதுக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு” எனக் கூறி மெல்லிதாக புன்னைகைக்க, இப்போது கார்த்திக் அதிர்ந்தான்!

 

Advertisement