Advertisement

புயலோ தென்றலோ – 14

 

சக்தியின் பதற்றமான குரல் கார்த்திக்கின் கவனத்தைத் திசை திருப்ப, கார்த்திக் சக்தியை நோக்கி, “சவீ ! பார்த்து. பால்கனியில இப்படி நிக்காத, தள்ளி நில்லு” என வந்துகொண்டிருக்கின்ற யானையைக் கவனிக்காமல் அவளின் நிலையும் நிற்கின்ற இடமும் சரியில்லாததால் கூற, “தள்ளிக்கோங்க! யாராவது இருக்கீங்களா ? காப்பாத்துங்க” எனக் கார்த்திக்கின் வார்த்தைகளை இலட்சியம் செய்யாமல் கார்த்திக்கின் நலனை முன்னிட்டுத் தன்னால் முடிந்த மட்டும் குரல் கொடுத்தாள்.

 

கார்த்திக்கும் யானை நெருங்கிவிட்டதை அறிந்து அங்கிருந்து வேகமாகச் செல்ல, அதுவும் கார்த்திக்கின் பின்னோடு செல்ல, “மாமா….” என்ற குரலுடன் மயங்கி மாடியிலேயே சரிந்தாள்.

 

மயங்கி சரிவதற்கு முன்னால் ஒலித்த அவள் குரலில் உயிரின் வலி நிறைந்திருந்தது….. அத்தனை சப்த்தமாகக் கார்த்திகை மாமாவென்று அழைத்திருக்க, அந்தப் பங்களாவின் வெளியிலிருந்து பைனாகுலர் வழியாக நடப்பவைகளைப் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், “ஓ மை காட்… என்ன இப்படி ஆகிடுச்சு ? குயிக், உங்க யானையை ஸ்டாப் பண்ணுங்க… பாஸ்ட்டா பண்ணுங்க” என அருகிலிருந்தவர்களைத் துரிதப்படுத்த, அந்தச் சர்க்கஸ் யானையின் மாஸ்டர் வேகமாக ஏதோவொரு வித்தியாசமான ஒலி எழுப்ப கார்த்திக்கின் பின் ஓடிக்கொண்டிருந்த யானை சட்டென்று நின்றது.

 

நின்றவுடன் அதன் மாஸ்டர் மும்முறை விசில் ஒலிக்கச் செய்ய வேகமாக ஓசை வந்த திசையில் திரும்பி செல்ல தொடங்கியது.

 

அதற்குள் அவர்களின் கைகளில் பணத்தைத் திணித்த விக்ரம் விரைந்து பங்களாவின் கதவை தாண்டி தோட்டத்திற்குள் ஓடிவர, சவீதாவின் வலி நிறைந்த குரலும் அதன் பின் தொடர்ந்த நிசப்த்தமும் கார்த்திகேயனின் நெஞ்சத்தில் பயத்தை முதன் முதலாக விதைத்தது.

 

“சவீ! சவீ! நான் வந்துட்டேன், ஒண்ணுமில்லை… நீ பயப்படாத” என எதோ அருகிலிருப்பவளிடம் பேசுபவனைப் போன்று முனங்கிகொண்டே வாசல் வர, அஃது உள் பக்கமாகத் தாழிடப்பட்டிருக்கவே, கார்த்திக் இதுவரை தான் அனுபவித்திராத பயத்தை முதன் முறையாகக் கண்டான்.

 

அந்தப் பயம் மரணத்தை அவனுக்கு நேரில் காட்டுவதைப் போல இருந்தது.

 

கார்த்திக் கதவை உடைக்க எத்தனை முயன்றும் கொஞ்சமும் கதவு அசையவில்லை. அத்தனை வலிமையுடன் மரத்தால் இழைக்கப்பட்டிருக்க மோதிய அவனுடைய இரு தோள்களும் வலியில் வின் வின்னென்று தெறித்தது. ஆனால் அஃது எதுவும் கார்த்திக்கின் புத்திக்கு புரியவேயில்லை. புரிந்தாலும் அதை உணரும் நிலையில் கார்த்திக் இல்லவே இல்லை. அவன் நினைவில் தெரிந்ததெல்லாம் சவீதாவும் அவள் இறுதியாக அழைத்த மாமாவென்ற அழைப்பும் மட்டுமே.

 

அவன் கதவை உடைக்கப் போராடிக்கொண்டிருக்கும் பொழுதே விக்ரமும் வந்துவிட, இருவரும் முயன்றும் கூடப் பூட்டிய கதவில் சிறு அசைவு கூட இல்லை.

 

“கார்த்திக், வேற எதாவது வழிதான் யோசிக்கணும். இங்க ட்ரை பண்றது டயம் வேஸ்ட்..” என விக்ரம் கூறியதும், சட்டென்று கதவை திறப்பதை விட்டுவிட்டு ஒரு நிமிடம் யோசித்தான்.

 

மறுகணமே தோட்டத்தில் கிடந்த பெரிய இரும்பு கடப்பாறையை எடுத்தவன் வீட்டை சுற்றி ஓட, விக்ரமும் ஏதும் புரியாமல் அவன் பின்னோடு சென்றான்.

 

முல்லை வனத்தின் அந்தச் சிறப்பு அறையின் புறமாகப் போக, அங்கே முதல் நாள் பிரகாஷ் தன் மனைவிக்காக அமைத்திருந்த பிரத்யோக அறையின் கண்ணாடி கதவுக்கு அருகில் சென்றவன் புயலின் வேகத்தில் அடித்துநொறுக்கி காற்றாய் உள்புகுந்தான்.

 

பின்னோடு சென்ற விக்ரமும் கார்த்திக்கின் வேகத்திற்கு ஈடுகொடுத்தாலும், அவன் மனதில் தன் திட்டம் வெற்றியடைந்த போதிலும், பெரிய விபரீதத்தையும் ஏற்படுத்திவிட்டதை எண்ணி குற்ற உணர்ச்சியுடன் சென்றான்.

 

ஆம்! இந்தத் திட்டம் சக்தியினுள் ஒளிந்திருக்கும் சவீதாவாய் வெளிக்கொணர கார்த்திகை பகடை காயாக நகர்த்தி உருவாக்கிய திட்டம். திட்டம் வெற்றியே! ஆனால் சவீதாவின் நிலை? அவளின் நிலைக்கு ஆபத்தென்றால் விக்ரமின் மனசாட்சி அவனை ஒரு போதும் மண்ணிக்காது.

 

சக்தியின் செயல்களிலிருந்தும் கார்த்திக் கூறிய அவர்களின் பழைய வாழ்க்கையிலிருந்தும் இந்தத் திட்டத்தை விக்ரம் செயல் படுத்த முனைந்தான். சக்தியாக நடிக்கும் சவீதாவிற்குக் கார்த்திக்கின் மீதுள்ள காதல் இன்றும் இருப்பதையும் அவள் கார்த்திகை ஏதோவொரு காரணத்தை முன்னிட்டு தவிர்ப்பதையும் , மீண்டும் மீண்டும் உறுதியாகத் தன்னைச் சக்தியென்று அவள் அடையாள படுத்த முயல்வதிலிருந்தும், விக்ரமிற்கு இதை முடிவுக்குக் கொண்டு வரும் வீரியம் வேரிட்டது.

 

ஆதலால் கார்த்திக் முயன்ற பட்டர்ப்ளை மற்றும் டுரியான் திட்டம் செயல் இழந்துவிட, அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பிய சக்தியை சிக்க வைக்கப் போட்ட திட்டமே யானை திட்டம். யாருமற்ற சூழலில் தான் நேசிக்கும் ஒருவனுக்கு ஆபத்து என்று வரும் போது அதை நிச்சயம் தடுக்க முயற்சி செய்வாள்.

 

அப்படியொரு சூழலில் அன்று கார்த்திக் செய்ததைப் போன்றே இன்று இவள் செய்து யானையை விரட்டுவாள். அப்படிச் செய்யாது போனாலும் ஏதோவொரு விதத்தில் சக்தி சவீதாவாக மாறுவாளென்று அறிந்தே விக்ரம் இதைச் செயல் படுத்தத் தொடங்கினான்.

 

செயல் படுத்துவதற்கு முன்னதாக, முதலில் சென்று ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றான். வேறொரு நபராக நடிப்பவர், அதிமுக்கிய பதற்றமான சூழலில் நடிக்கின்ற கதாபாத்திரத்தை மறந்து ஒரு சில நொடிகளாவது தங்களின் இயல்புக்கு வருவது நிச்சயம், அதோடு கர்பிணி என்பதால் ஆபத்தான இடத்தில அவரில்லாமல் சற்றுத் தூரமாக இருப்பதும் அவசியம், அதோடு சில நிமிடங்களுக்கு மேல் அவர்களைப் பதற்றமான சூழலில் வைக்கக் கூடாது என்று கண்டிப்பான முறையில் அறிவுரை வழங்கியிருந்தனர்.

 

அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டவன் மனதில், “இல்ல கண்டிப்பா சவீதா இதுல ரொம்ப டென்ஷன் ஆக எதுவும் இருக்காது. யானைகிட்ட இருந்து தப்பிக்கிற வழி சவீதாக்கு நல்லா தெரியும். சோ இதைப் பண்ணுங்கன்னு கார்த்திக்கிட்ட சொல்லலாம், இல்லை சவீதாவே கூட அதைச் செய்யலாம். வீட்ல தான் நெட் இருக்கே… கைல அவகிட்ட மொபைலும் இருக்கு. ஆனா அந்த டென்ஷன்ல இதெல்லாம் பண்ணுவாளா ?

 

பண்ணாட்டியும் கூடக் கார்த்திக் மொபைலை இது இருக்குறது தான் தெரியுமே! பண்ண சொல்ல நிறைய வாய்ப்பிற்கு. பார்க்கலாம் நாம நினைக்கிற  எதுவுமே செய்யாம போன கூட ஏதோவொரு வகையில் அங்க இருக்கிறது சவீதானு நிச்சயம் தெரியவரும்” என எண்ணிக்கொண்டான்.

 

இதெயெல்லாம் மனதில் வைத்தவன் தோட்டத்தில் ஆங்காங்கே கேண்டிட் பொருத்தினான். சர்க்கஸ் யானையைத் தன் செல்வாக்கை பயன்படுத்தி வாடகைக்கு எடுத்தான். கார்த்திகையும் சக்தியையும் தனியாக இருக்கும் சூழலை உருவாக்கினான். கார்த்திக் சக்த்தியிடம் அவள் அழைத்ததாகச் சென்று பேசும்படியாகவும் செய்தான்.

 

இதனால் சக்தி கோபப்படுவாள் என்று உணர்ந்தே அந்தப் பொய்யை சொன்னான். கோபம் சண்டையாக மாறும், கார்த்திக் சிறிது நேரமாவது வீட்டிற்கு வெளியே வருவான், அப்படியே வராது போனாலும் விக்ரம் கார்த்திக்கின் கைபேசிக்கு அழைத்துச் சிக்னல் இல்லை என்பது போல அவனை வெளியே வரவைப்பதே அவனுடைய திட்டம்.

 

அதிர்ஷ்டவசமாகக் கார்த்திகே வெளியே வர, நிச்சயம் சக்தி வீட்டில் யாரும் இல்லாத சூழலில் கார்த்திக்குடன் தனித்து இருக்கப் பிரியப்படாமல் தனது அறைக்கே சொல்லுவாள். சப்த்தம் கேட்டு பால்கனிக்கு வருவாள் என ஒவ்வொரு கட்டமாக யூகித்துச் செயல்பட்டான்.

 

கார்த்திக் தற்செயலாகவே வந்துவிட்டதை அறிந்தவன், பைனாகுலர் கொண்டு சக்தியின் அறையைப் பார்க்க அங்கே திறந்த பலகணி வழி அவள் உள்ளிருப்பதை விக்ரம் கண்டுகொண்டான். முன்பே பேசிவைத்திருந்த சர்க்கஸ் யானையைச் சரியாக அந்த மாஸ்டரின் துணைகொண்டு உள் அனுப்பினான்.

 

அந்த யானைக்கு இட்ட கட்டளை உள்ளிருப்பவனைத் துரத்தி பிடித்து ஆசிர்வதிக்க வேண்டும். அவ்வளவே! ஒருவேளை அந்த யானைக்குப் பரிக்ஷயப்பட்ட ஒலி எழுப்பப்பட்டால் அது மீண்டும் தன் எஜமானை நோக்கியே வந்துவிடும். கார்த்திகை அந்த யானை துரத்தியதற்குக் கூடக் காரணம் அதுவே.

 

நினைத்ததைப் போலவே எல்லாம் நடந்தது. ஆனால் சக்தி தேனீக்களின் ஒலியை எழுப்புவதற்குப் பதிலாய் மாமா என்ற அழைப்புடன் மயங்கி சரிந்தாள்.

 

அவளின் மாமா என்ற அழைப்பே வெற்றி தான்! சக்தியுனுள் ஒளிந்திருந்த சவீதா வந்துவிட்டாள் தான்! ஆனால் அவளின் நிலை ?

 

மருத்துவமனையில் விக்ரமின் துணைகொண்டு கார்த்திக் சவீதாவை அனுமதித்துவிட்டு மருத்துவரின் வார்த்தைக்காகப் பதற்றத்துடன் காத்திருந்தான். அவன் எதையும் யோசிக்கும் மன நிலையில் இல்லை. யோசிக்கவும் விரும்பவில்லை. அவனுடைய யோசனைகள் அனைத்தும் சவீதாவின் நிலை மட்டுமே.

 

மருத்துவமனை நடைகூடத்தில் காத்திருந்தவனுக்கு மீண்டும் மீண்டும் சவீதாவின் மாமா என்ற அழைப்பே ஒலித்துக்கொண்டிருந்தது. மெல்ல அவனுடைய இதயம் அந்த அழைப்பின் பின்னிருந்த கதையை வலியுடன் நினைத்து பார்க்க தொடங்கியது.

 

“சவீ! மாமா பெங்களூரு போய் ரிப்போர்ட் பண்ணிட்டுச் சீக்கரம் வந்துடறேன்.அதுவரைக்கும் மேனேஜ் பண்ணிடுவ தானே ?” என நூற்றி ஓராவது முறையாகக் கார்த்திக் காதலுடன் சவீதாவிடம் கேட்டுக்கொண்டிருக்க,

 

“ஐயோ இன்னும் எத்தனை முறை கார்த்திக் இதையே கேட்பீங்க? இது நான் பொறந்து வளர்ந்த இடம். நீங்க கேக்குறத பார்த்தா, எதோ நீங்க வரும் போது நான் கண்காணாத இடத்துக்கு ஓடி போறத போலக் கேக்குறீங்க.

 

ஒழுங்கா நீங்க போயிட்டு கால் பண்ணுங்க.உங்க வேலையெல்லாம் முடுஞ்சதும் சீக்கிரம் உங்க கூட நானும் வந்திடுறேன். நீங்க வீடு பார்க்க ஆரம்பிங்க”

 

“கண்டிப்பா! என் முதல் வேலை அது தான். இப்போ நான் கிளம்புறேன்… மாமாக்கு எதுவும் ஸ்பெஷல் கிடையாதா ?”

 

“ஓ இருக்கே… பை பை…ஸ்பெஷல் பை”

 

“அடிப்பாவி! ஸ்பெசலா எதாவது கேட்டா, பைய ஸ்பெஷல் பைனு சொல்லுற. உன்ன போலப் பொண்டாட்டி இருந்தா எந்தப் புருஷனும் ரொமான்ஸே பண்ணமுடியாது.

 

சரி மாமானு மட்டுமாச்சு கூப்பிடு.

 

எவ்ளோ நாளா கேட்குறேன். ஒருதடவ மாமான்னு சொன்னா என்ன? இதுக்கெல்லாமாடி என்ன கெஞ்ச விடுவ ?”

 

“சொல்லலாம் சொல்லலாம்”

 

“அதான் எப்ப சொல்லுவா? ”

 

“கண்டிப்பா சொல்லுறே! ஆனா இப்ப இல்ல. மனசுல இருந்து உங்களை அந்த நிமிஷம் மாமானு மட்டும் தான் கூப்பிடணும்னு தோணும். அந்த நிமிஷம் நான் உங்களைக் கண்டிப்பா மாமான்னு சொல்லுறேன். போதுமா ?” எனச் சிரிப்புடன் காரத்திற்குச் சவீதா வழியனுப்பினாள்.

 

முகம் நிறைந்த புன்னைகையுடன் சென்ற கார்த்திக் மீண்டும் சந்தோசத்துடன் குட்ட கிராமத்திற்குத் திரும்பினான். பெங்களூருவில் தங்களுக்கென ஒரு வீடை பார்த்து அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்ட அவளுக்கு இன்ப அதிர்ச்சி தருவதற்காக அவளுக்குக் கைபேசியில் கூடத் தகவல் கொடுக்காமல் நேரடியாக வந்து நின்றான்.

 

ஆனால் அவனை வரவேற்றதோ பூட்டிய வீடும் சுற்றி திரிந்த வண்ணத்து பூச்சிகளுமே.

 

மனைவியைக் காணாது, அவளது கைபேசிக்குத் தொடர்புக்கொள்ள அஃது அணைத்து வைக்கப்பட்டிருப்பதாய் பதிவு செய்து வைத்திருந்த குரல் ஒலிக்க, சிறிது நேரம் தோட்டத்தில் உலாவியவன் நினைவு வந்தவனாகப் பட்டர்ப்ளை கார்டனில் இருக்கும் ஒரு சிறிய அலங்கார கூழாங்கற்கள் நோக்கி சென்றான்.

 

முன்பொருமுறை சவீதா, வெளியே செல்லும் சமயங்களில் எவருக்கும் தெரியாதவாறு சாவியை அங்கே வைத்து செல்வது வழக்கம் என்று கூறியது சற்று தாமதமாகவே நினைவு வர, அங்கே சென்றவன் சாவிக்காக ஆராய, வீட்டின் சாவியோடு சேர்ந்து சவீதாவின் கைபேசியும் இருப்பதைக் கண்டு குழம்பினான். அந்தக் கூழாங்கற்களின் குவியலுக்குள் இப்படியொரு ரகசிய பெட்டகம் இருக்கும் என்பதை எவரும் யூகிக்க மாட்டர் ஆதலால் அங்கே வைக்கப்படுகின்ற பொருள் பிறர் கைகளுக்கு அகப்பட வாய்ப்பில்லை.

 

மற்றவைகளைப் பிறகு யோசிப்போம் முதலில் சாவியைக் கொண்டு வீட்டை திறப்போம் என்று சென்றவனுக்கு மீண்டும் குழப்பம். காரணம் அந்தச் சாவி பூட்டை திறக்கவில்லை. அதன் பிறகே கவனித்தான்,பூட்டும் மாற்றப்பட்டுள்ளத்தை.

 

சில மணி நேரங்கள் கடந்தும் சவீதா வரும் வழி காணாததால் அக்கம் பக்கத்தில் இருந்தோரை விசாரிக்கச் செல்ல, ஒரு சிலர் முகம் திருப்ப, ஒரு சிலர் நமக்கெதற்கு வம்பு என்பதாய் ஜன்னலை பூட்டினர். இன்னும் சிலர் மாத்திரம் உண்மையான அக்கறையாலோ மேலும் வதந்திகள் கிடைக்கக் கூடும் என்ற ஆர்வத்திலோ கார்த்திக்கிடம் பேச வந்தனர்.

 

“அட! மாப்பிளை சார். உங்களுக்குத் தெரியாதா..? இங்க பக்கத்துல ஒரு கொலை நடந்திடுச்சு”

 

“ஓ அப்படியா? சவீதா எங்க ? சவீதாக்கு ஒண்ணுமில்லையே” என லேசான பதற்றத்துடன் வினவ, “நல்ல கேட்டிங்க போங்க. அந்தக் கொலையைப் பண்ணுனதே உங்க பொண்டாட்டியா இருக்குமோனு போலீஸ் நேத்து வந்து உங்க வீட்டை சோதனை போட்டு போனாங்க.

 

கொலை நடந்த இடத்துல உங்க பொண்டாட்டி இருந்திருக்காங்க. அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணு எங்க போச்சுன்னே யாருக்கும் தெரியல. இங்க வீட்டுக்கும் வரவில்லை. போலீஸ் வந்து பூட்ட உடைச்சுச் சோதனை பண்ணிட்டு வேற பூட்டு போட்டு பூட்டிட்டு போயிருக்காங்க. ஆமா உங்களுக்கு எதுவுமே தெரியாதா ?

 

பார்க்க அப்பாவி போல இருந்துச்சு. இந்தப் பொண்ணா இப்படினு நம்பவே முடியல” எனக் கூற, இப்பொழுது கார்த்திக்கினுள் குழப்பத்துடன் சேர்ந்து பதற்றமும் தொற்றிக்கொண்டது.

 

அடுத்து அவர்கள் பேசியதை கேட்க அவன் அங்கே நிற்கவில்லை. காவல் நிலையம் சென்று, சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று என அடுத்த இரண்டு நாட்களும் பரபரப்புடனும் பதற்றத்துடனும் கார்த்திக்கிற்குச் சென்றது. ஆனால் பலன் ? அது கிட்டவே இல்லை. சவீதாவை பற்றிய எந்தத் தகவலும் இல்லை.

 

சோர்ந்து தளர்ந்து சவீதாவும் அவனும் வாழ்ந்த வீட்டில் அவளது நினைவுகளைத் தாங்கி நின்றவன் சட்டென்று நினைவு வந்தவனாக, சவீதாவின் கைபேசியை உயிர்ப்பிக்கச் சார்ஜரில் போட்டவன், அஃது உயிர்பிக்கப்பட்டது.

 

கைபேசி உயிர்பிக்கப்பட்டவுடன், கார்த்திக்கின் உயிர் பிடுங்கி எறியப்பட்டதைப் போன்றதொரு வலியை அந்தக் கை பேசியில் வந்திருந்த காணொளி தந்தது..

 

Advertisement