Advertisement

புயலோ தென்றலோ – 13

 

‘சக்தி’ என அவளின் உதடுகள் உச்சரித்தாலும் அவளது பார்வைகள் பாவனைகள் வார்த்தைகள் என எல்லாமும் அவள் சவீதாவென்று கார்த்திக்கிடம் சொல்லிவிட, சொல்ல வேண்டியவள் மட்டும் தான் சக்தி என்பதில் திடமாக இருந்தாள்.

 

அவளது இந்த உறுதி அவள் சக்திதானோ எனக் கார்த்திகே சந்தேகம் கொள்ளும் அளவு அவளுடைய திடமிருந்தது. ஆனால் அஃது உண்மையில்லை, பொய்யென்பது அவள் சற்று முன் தன்னிலை மறந்து கார்த்திக்கிடம் அவள் கூறிய வார்த்தைகளிலிருந்து உணர்ந்துகொண்டான்.

 

அவள் வார்த்தைகள் மட்டுமின்றி, அவள் கழுத்தினில் அவன் அணிவித்த மாங்கல்யமும், தன் தந்தையின் முதல் ஸ்பரிசத்தை முதன் முறையாக உணர்ந்த சிசுவின் அசைவும் அவனுக்கு நிரூபித்தன. ஆனால் இவை அனைத்தும் அவள் அவனின் சவீதா என்பதற்குச் சட்டத்தின் முன் சாட்சியாகுமா ? இல்லை.

 

ஒருவேளை அது சாட்சியாகக் கூடுமென்றாலும் கார்த்திக் தங்களது உறவை தன் குழந்தையைச் சாட்சியாகக் கொண்டு செல்ல ஒரு போதும் நினைக்கமாட்டான்.

 

எதிலும் தாமதிக்காவன்! தாமதப்படுத்தும் வழக்கமில்லாதவன். அந்தச் செய்கையினால் தான் சவீதாவை பார்த்த ஒரே மாதத்தில் அவளைக் காதலித்தான்! காதலிக்கவும் வைத்தான்! தனக்கே உரியவள் ஆக்கிக்கொண்டான்! அப்படிப்பட்ட கார்த்திக் இன்று தாமதிக்கிறான்! தயக்கம் கொள்கிறான்! முதன்முறையாகத் தடுமாற்றமும் கொள்கிறான்!

 

இத்தனை நாள் அவனுக்குள் சவீதாவின் மீதிருந்த கோபம் அஃது அப்படியே உள்ளது. சட்டத்தின் பார்வையில் சந்தேகத்தின் வட்டத்தினுள் இருக்கின்ற சவீதா, அவளும் அப்படியே இருக்கின்றாள். இதிலெதுவும் மாற்றம் ஏற்படவில்லை தான், ஆனால் அவனுடைய குழந்தையை மனதில் கொண்ட கார்த்திக்கின் மனநிலை ? அவளின் நிறைமாத கர்ப்பம்.

 

அது தான் அவனைத் தடுமாறச் செய்கிறது!

 

இவையெல்லாம் அவனை அசைத்தது! யோசித்தான்… இன்னமும் யோசிக்கவேண்டியது இருந்தது! இந்தப் பாசம் அக்கறை குழந்தை மீது மட்டும் தானா ? அல்லது சவீதாவின் மீதுமா ? எதற்காக அப்படிக் கூறினாள்? எதற்காகத் தற்சமயம் தன்னுடைய அடையாளத்தை மறைத்து வாழ்கிறாள் ?

 

இதெல்லாம் அவனை ஆட்டுவிக்கத் தொடங்கிய கேள்விகள்; எதற்கும் விடை தெரியாத போதிலும் விடை நிச்சயமாகத் தெரியவரும், தெரிந்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்தான்.

 

என்ன முயன்றும் இந்தக் காரியத்தில் அதிரடியாய் இறங்க மனம் ஒப்பவே இல்லாத காரணத்தினால் தன்னைச் சிறப்புப்பிரிவில் அமர்த்தி ரகசியமாகக் கண்காணிக்க நியமித்த தன்னுடைய மேலதிகாரியை தொடர்புக்கொண்டான்.

 

மறுமுனையில் அழைப்பை ஏற்றதும், “சார், வி ஆர் நவ் இன் வால்பாறை” எனத் தொடங்கியவன் அடுத்தப் பத்து நிமிடங்களில் ஆங்கிலம் கலந்த கன்னடத்தில் தன்னுடைய தரப்பின் விளக்கங்களை விளக்கி அவகாசம் பெற்றுக்கொண்டான். அவன் கூறியவை இது தான், இங்கே அந்தக் கொலைவழக்கோடு தொடர்புடைய பெண்ணைப் போன்ற சாயலில் ஒரு பெண் இருக்கின்றாள். அவள் சக்தி.

 

அவள் சவீதாவென்று நிரூபிக்கத் தற்சமயம் வலுவான ஆதாரமில்லை. உருவ ஒற்றுமை பயன்படுத்தி நாம் சந்தேகத்தின் பெயரில் கைது மேற்கொள்ளலாம் ஆனால் அப்பெண் நிறை மாத கர்ப்பிணியாக உள்ளாள்.

 

நமது கணிப்பு தவறாய் போகும் பட்சத்தில் ஒரு குற்றமற்றவளை இந்த நிலையில் கைது செய்து ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ அப்பெண் உண்மையில் சக்தியாகவே இருந்தாலோ நாம் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

 

எதுவாகினும் இன்னும் சிறிது காலம் அவளைச் சவீதாவென்று நிரூபிக்கவோ அல்லது சக்தியென்று உறுதிப்படுத்தவோ எனக்கு அவகாசம் வேண்டுமென்று விண்ணப்பிக்கக் கார்த்திக்கின் மீதிருந்த அதீத நம்பிக்கையினால் உடனடியாக அவனுக்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.

 

அனுமதி வாங்கினான் தான். அவள் சக்தியில்லை அப்படியிருக்க வாய்ப்புமில்லை என்று அறிந்தும் அதையே காரணமாகக் காண்பித்து அவகாசம் பெற்றான் தான்.

 

ஆனால் அந்த அனுமதி சவீதா குற்றம் செய்தவளாக இருப்பின் தப்பவைப்பதற்காக இல்லை! அவனுடைய குழந்தைக்காக. குற்றமற்றவளோ இல்லையோ எதுவாகினும் இனிமேல் அவன் வாழ்வில் அவளில்லை. அதுமட்டுமல்ல அந்தக் குழந்தையும் அவளுக்கில்லை. பிறக்கவிருக்கும் மகள் கார்த்திக்கின் உயிர். அதை அவன் விட்டுச்செல்லவோ விட்டுக்கொடுக்கவோ தயாராக இல்லவே இல்லை.

 

குற்றமற்றவளாக இருப்பின் அவளை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பான். அதே நேரம் அவள் குற்றவாளியாக இருந்தால் சட்டத்தின் பிடியில் சிக்கவைப்பான்.

 

ஆனால் ஒருபோதும் தன் கடமைக்கு மாறாய் நடக்கவே கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான். அதே நேரம், விக்ரம் மனதில் பல விபரீத திட்டங்கள் உருவாகிக்கொண்டிருந்தது.

 

அந்த விபரீத திட்டத்தைச் செயல்படுத்த சக்தியின் நடவடிக்கைகளும் வலுவான காரணமாக அமைந்தது. பொதுவாக நாரதர் கழகம் நன்மையில் முடியுமென்று கூறுவர். விக்ரமின் செயல்களோ ஆனந்தத்தையோ அனர்தத்தையோ எதை விளைவிக்க இருக்கிறதென்று விதிக்கே வெளிச்சம்.

 

அவன் அத்தகைய துணிச்சலான விபரீதமான திட்டத்தைச் செயல்படுத்த காரணம் அன்றிலிருந்து அரங்கேற தொடங்கியிருந்தது.

 

சக்தி கார்த்திக்கின் கண்களைப் பார்த்துக் கண்ணிமைக்கக் கூட மறந்தவளாய் கூறிய வார்த்தைகள் அவளைச் சவீதாவென்று அடித்துக்கூற, அவள் கட்டிய கணவனையே கண்டு ஒழிய வேண்டிய அவசியமென்னவென்று ஆராயத் தொடங்கினான். சக்தியின் கவனத்தில் பதியாதவாறு அவளைக் கண்காணித்தவன் அவ்வப்போது கார்த்திக் அறியாமல் சக்தி அவனைப் பார்ப்பதையும் அந்தப் பார்வையில் குழப்பமும் வருத்தமும் மட்டுமே இருப்பதையும் அறிந்துகொண்டான்.

 

கார்த்திக்கிற்கான பார்வையில் வெறுப்பு என்ற ஒன்று சக்தியின் கண்களில் இருந்ததே இல்லை. அவன் முன்னிலையில் முகம் திருப்பினாலும் கோபம் கொண்டாலும் அவள் பார்வையில் மட்டும் வெறுப்பே இல்லாத காரணத்தினால் விக்ரம் அறிந்த ஒன்று சக்தியாக நடிக்கின்ற சவீதாவிற்குக் கார்த்திக்கின் மீது காதல் இருப்பது நூறு சதவீதம் உண்மை என்பதைச் சந்தேகமின்றி அறிந்துகொண்டான்.

 

இப்படிப்பட்ட சூழலில் தான் தற்செயலாக சக்தி யாருடனோ கைபேசியில் உரையாடுவதை விக்ரம் கேட்க நேரிட்டது.

 

“இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு தெரிஞ்சிருந்தா நான் இங்க வந்திருக்கவே மாட்டேன். கார்த்திக் எதுக்காகப் பிரகாஷ் சாரோட தம்பியா இருக்கணும்? அவரு எதுக்காக இங்க வரணும் ? நான் எப்படிப் பட்ட சூழ் நிலையில இங்க வந்தேன்.

 

ஆனா இப்ப நடந்திட்டு இருக்கிறது என்ன ? எனக்கு.. எனக்கு நிஜமாவே கார்த்திகை பார்த்தா ரொம்ப பதட்டமா இருக்கு.

 

அவர் கண்ணுல படமா அவர் முன்னாடி நிற்காம எத்தனை நாள் ஓடி ஒளிய முடியும்னு எனக்குச் சத்தியமா தெரில.

 

அப்படியொரு தப்ப நான் பண்ணியிருக்கவே கூடாது. அந்தத் தப்புனால தான் நான் இப்ப ஓடி ஒளிஞ்சு இருக்கிறே. கார்த்திக் ஏதாவது அதைப் பத்தி கேட்டுடா ?

 

சரி நான் டென்ஷன் ஆகல. பார்க்கலாம்” எனச் சக்தி யாரிடமோ கூறிக்கொண்டிருக்க மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ சக்தியின் முகத்தில் லேசான நிம்மதியும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.

 

இதை முழுவதுமாகக் கேட்டுவிட்டு விக்ரம், “ஆக, இந்தப் பொண்ணு எதுக்காகவோ சக்தியா நடிக்கிது. ஆனா ஜி-ய பாத்து ஏன் டென்ஷன் ? அந்தக் கேஸ்-ல இருந்து தப்பிக்க வந்த இடத்துல கார்த்திக் சார எதிர்பார்க்கலியோ.

 

ஆனா அவரு இந்தப் பொண்ணோட ஹஸ்பண்ட் தானே. தன்னோட புருஷன்கிட்டயே இந்தப் பொண்ணு நடிக்கிது ஏதோ மறைக்கிதுன்னா கண்டிப்பா அது அந்தக் கொலையைப் பத்தின விஷயமாதா இருக்கணும்.

 

அதே சமயம் கார்த்திக் ஜி மேலயும் ரொம்பப் பாசம் வச்சிருக்கு.

 

இந்தப் பாசத்தை வச்சு நாம சக்தியை பேச வைக்கலாம். சக்தியோட வாயாலவே சவீதாவை கொண்டு வரலாம்.” என எண்ணிக்கொண்டிருக்க, அவன் தன்னை நோட்டமிடுவதை சக்தி கவனிக்க தவறவிட்டாள்.

 

இதையெல்லாம் முடிவெடுத்தவன் அடுத்து நேராகச் சென்ற இடம் கார்த்திக்.

 

கார்த்திக் என்ன மனநிலையில் உள்ளான் என்று விக்ரமால் கணிக்க முடியவில்லை. ஏன் அது காத்திக்கிற்கே புரியுமா எனவும் தெரியவில்லை. மெல்ல கார்த்திகை அணுகியவன், “ஜி என்ன இப்படி இருக்கீங்க ? நம்ம வந்த கேஸ்ல எந்த ஸ்டெப்பும் எடுக்காம இருக்கோம்”

 

“ஹ்ம்ம் விக்ரம். என்னோட குழந்தை ! நான் ஏதாவது மூவ் பண்ண போய் அது ரிஸ்க் ஆகிட கூடாது. கொஞ்ச நாள் வெயிட் பண்ணுவோம். நான் கண்டிப்பா குற்றவாளி யாரா இருந்தாலும் என் மனைவியே ஆனாலும் தப்பவிடமாட்டேன்”

 

“எனக்கும் அது தெரியும் ஜி. இதை நீங்க சொல்லவேண்டிய அவசியமே இல்ல. ஆனா எனக்குத் தெரியாத ஒன்னு, சவீதா ஏன் இங்க வந்தாங்க. உங்களைப் பத்தி எதுவுமே நீங்க அவுங்ககிட்ட சொல்லவே இல்லையா?

 

உங்ககிட்ட இருந்து ஒளிய உங்க வீட்டுக்கே வந்திருக்காங்க. உங்க குடும்பப் பின்னணி எதுவுமே தெரியாதா ?

 

கல்யாணத்தை அவுங்கள யோசிக்க விடாம பேச விடமா லவ்வ சொன்ன இரண்டாவது நாளே முடிச்சுடீங்க. அதுக்குப் பிறகு கூடவா உங்கள கேட்கல ?”

 

“ஆமா! சவீதா என்கிட்டே கல்யாணத்திற்கு அப்புற கூட எதுவுமே கேட்கல. காதலை சொல்லும்போதும் ஏத்துக்கும் போது கூட எதுவும் என்ன பத்தி தெருஞ்சுக்கல. என்னை எனக்காகவே காதலிச்சா.

 

எங்க அம்மா என்னோட அப்பாவை காதலிச்சது போல. எங்க அப்பாவோட ஸ்டேட்டஸ் சொத்துனு எதைப் பத்தியும் தெருஞ்சுக்காம காதலிச்சாங்களாம்.

 

அதே போலத்தான் சவீதாவும்!

 

கல்யாணம் அப்போகூட நான் என்ன செய்றேன்னு கேட்டதுக்குக் காரணம் நான் தப்பான தொழில் பண்ணிட கூடாதுனு தான். தாலி ஏறின மறு நிமிஷம் அவ உலகத்துல எல்லாரையும் விட என்ன தான் அதிகமா நம்பினா.

 

அவளோட நம்பிக்கை அவ மேல நான் இன்னும் பைத்தியமாகக் காரணம் ஆகிடுச்சு. இருந்தும் நான் அவகிட்ட என்னப்பத்தின எந்த விஷயத்தையும் மறைக்கல. என் அப்பா அம்மா அவுங்க வாழ்க்கை, மரணம் நான் அதுக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேறியது அப்படினு எல்லாமே சொன்னேன்.

 

ஆனா நான் என் சொந்த ஊரையும் இந்த எஸ்டேட் டீடைல் அப்புறம் பிரகாஷ் பத்தி எதுவும் சொன்னதில்ல. என் பெரியம்மா பெரியப்பா அப்படினு மட்டும் தான் சொன்னேன். மே பீ நான் சொல்லியிருந்தா இங்க இப்ப சக்தி இருக்க வாய்ப்பில்லாம போயிருக்கலாம்”

 

“ஓ… அது தான் விஷயமா…” எனக் கார்த்திக்கின் விளக்கத்தைக் கேட்ட விக்ரம் தனக்குள் மெல்ல கூறிக்கொண்டான்.

 

“அன்னைக்கு அப்படி இருந்த அதே சவீதான் இன்னைக்கு இப்படி இருக்கா…இல்லை சவீதாவா இல்ல. சக்தியா இருக்கா” என ஒரு வித வெறுப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து கார்த்திக் சென்றுவிட்டான்.

 

அதன் பின் விக்ரமின் தீவிரம் இன்னமும் அதிகமானது. குற்றத்தில் சம்மந்தப்பட்டதோடு மட்டுமல்லாமல் இந்நாள் வரை கார்த்திக்கின் மனவேதனைக்குக் காரணமான சவீதாவை வெளியே கொண்டு வர நினைத்தான். சக்தியின் வாக்குமூலமாகவே அவளைச் சவீதாவாகக் கார்த்திக்கின் முன் நிறுத்த திட்டமிட்டான். அதோடு மட்டுமில்லாது சக்தி யாரிடம் பேசினால் என்பதையும் அறிய முயன்றுகொண்டிருந்தான்.

 

இவை எதுவும் கார்த்திக்கின் கவனத்திற்குச் செல்லாமல் பார்த்துக்கொண்டான். விக்ரம் அறிவான், கார்த்திக் தன் பணியில் நேர்மையானவனென்று. சவீதா குற்றவாளியென்றால் அவளை மன்னிக்கவும் மாட்டான் என்றும், ஆனால் அவனுடைய குழந்தை பாசம் தடுக்கவே தடுமாறுகிறான் என்று சரியாகப் பிடித்தவன் கார்த்திக்கின் கண் மறைவில் ஒரு திட்டத்தை உருவாக்கினான்.

 

அந்தத் திட்டத்தின் பகடை காயே கார்த்திக் தான்.

 

அனைத்து வகையான ஏற்பாடுகளையும் மிகவும் நேர்த்தியாகச் செயல்படுத்திவிட்டான். இருந்தாலும் விக்ரமினுள் ஒரு தயக்கம். அந்தத் தயக்கத்ததையும் தகர்த்தெறிந்தது சக்தி மற்றும் பூரணியின் சந்திப்பு.

 

அவ்வப்போது வருவதைப் போலப் பூரணி சக்தியை காண வந்திருக்க, உணவு மேஜையின் மீது கைபேசியை வைத்துவிட்டு பூரணியுடன் சக்தி தோட்டத்திற்குச் சென்றுவிட்டாள். அவளைக் கண்காணித்துக்கொண்டே இருந்தவன் முதல் நாள் குறிப்பிட்ட நேரத்தில் அவள் யாருடன் பேசிக்கொண்டிருந்தாள் என்று அறிய அவளின் கைபேசியைச் சோதிக்க, விக்ரமிற்கு வியப்பும் குழப்பமுமே மிஞ்சியது.

 

காரணம் அதில் பதிவாகியிருந்த பெயர் , ‘பூரணி’

 

சில நிமிடங்கள் மட்டும் இதைப் பற்றி யோசித்தவன், அவர்களைப் பின்தொடர்வது அவசியமென்று உணர்ந்து அவர்களின் பின்னோடு செல்ல, தோட்டத்தில் எப்பகுதியில் அவர்கள் நிற்கின்றார்கள் என தேடுவதில் சில நிமிடங்கள் கரைந்தோடின.

 

மறுபுறமோ, சக்தி தன் கைகளைப் பிசைந்தபடி, “இது தான் என் பிரச்சனை பூரணி” எனக் கூறினாள்.

 

“சரி விடு! ரிலாக்ஸா இரு. நீ பயப்பிடறத போல எதுவும் நடக்காது”

 

“அதெப்படி சொல்லுற பூரணி. எனக்குக் கார்த்திகை பாத்த முதல் நாளே இந்த டென்ஷன் ஆரம்பம் ஆகிடுச்சு. என்னோட குழந்தையை மனசுல வச்சுதான் நான் இன்னும் இருக்கேன்.

 

ஆனா எனக்குச் சரியா வரும்னு தோணல!

 

ஒன்னு அவரு இங்க இருக்கனும், இல்லை நான் இருக்கணும். என் குழந்தையோட எதிர்காலத்திற்காகவாச்சும் நான் போகணும்”

 

“சக்தி! நீ என்ன பேசுறேன்னு புரிஞ்சிதான் பேசுறியா ?”

 

“பூரணி… நீ என் நிலைமை புரியாம பேசிகிட்டு இருக்க”

 

“எல்லாம் புரிஞ்சி தான் பேசுறேன்! நடந்தது உன்னை மீறின விஷயம். இதுக்கு நீ பொறுப்பு இல்லை” எனப் பூரணி கூறிக்கொண்டே திரும்ப அங்கே சரியாக விக்ரம் நிற்பதை பார்த்துப் பேச்சை சட்டென்று நிறுத்திவிட்டாள்.

 

“நீங்க…. நீங்க? இங்க எப்போ எதுக்கு வந்தீங்க ?” எனச் சிறு தடுமாற்றத்துடன் பூரணி வினவ, சக்தியின் முகத்தில் அத்தனை பதற்றம்.

 

“அதை நான் தான் கேட்கணும்… நீங்க இங்க நின்னு என்ன பண்றீங்க? பருப்பு இல்லனு யாராச்சும் கார்டென்ல நின்னு பேசுவாங்களா?

 

கிட்சேன்ல பேசவேண்டிய விஷயத்தைத் தோட்டத்துல பேசுறாங்க.” என அவர்களிடம் கேள்விகேட்டுவிட்டுத் தனக்குத் தானே புலம்புபவனைப் போல அங்கே நில்லாமல் சென்று விட்டான்.

 

நின்றும் பயனில்லையே! இவனை அவர்கள் பார்த்துவிட்ட பிறகு எப்படி ரகசியம் பேசுவார்கள்? ஆதலாலே கிளம்பி சென்றான்.

 

அவன் சென்றுவிட, அப்போதே மூச்சை சீராக விட்ட சக்தி, “நல்லவேளை அவர்க்குச் சரியா காதுகேக்காதது நல்லாத போச்சு. கடைசியா நம்ம பேசினது கேட்டு அவரே எதோ புரிஞ்சிக்கிட்டு போய்ட்டாரு” எனக் கூறிக்கொண்டாள்.

 

சென்றவன் அதோடு விடாமல் தன் திட்டத்தைச் செயல் படுத்த சரியான நேரத்தை எதிர்பார்த்திருந்தான். அதற்காக ரகசியமாகப் பல ஏற்பாடுகளைச் செய்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு வாரகால ஏற்பாட்டின் பிறகு அவனது நாடகத்தை அரங்கேற்றும் நாளும் வந்தது.

 

அவனுடைய ஆபத்தான திட்டம் சக்தியின் பார்வையில் கார்த்திக்கை ஆபத்தான நிலையில் நிறுத்துவது. உதவிக்கு அக்கம் பக்கம் யாருமற்ற சூழலில் அவ்விருவர் மட்டும் இருக்கும்படியான ஒரு சூழலை தான் எதிர்பார்த்திருந்தான். அதுவும் பிரகாஷின் கோவை பயணத்தால் கை கூடியது.

 

காவலாளியையும் தோட்டக்காரனையும் எஸ்டேட்டிற்குச் சாமர்த்தியமாகப் பேசி அனுப்பிவைத்தவன் வேலைக்கார பெண் வள்ளியையும் விடுப்பு கொடுத்து அனுப்பிவிட்டான். பிரகாஷ் முன்பொருமுறை கார்த்திகையும் விக்ரமையும் வைத்துக்கொண்டு கார்த்திகை மனதில் வைத்து இவர் கூறுகின்ற சொல் படி நடந்துகொள்ளுங்கள் எனக் கூற வேலையாட்கள் விக்ரமையும் எஜமானை போலவே பாவிக்கத் தொடங்கியிருந்தனர்.

 

ஆதலால் அவன் கூறவும், மறு பேச்சின்றிச் சென்றனர்.

 

ஏற்பாடுகளை இன்னும் சிறுது நேரத்தில் நடத்த திட்டம்போட்டவன் மறுபடியும் ஒருமுறை தன் கைபேசியிலிருந்து அழைத்து மருத்துவரிடம், “டாக்டர் ஒன்னும் ஆகாதுல?” என வினவ, மறுமுனையில் கூறிய பதிலில் சற்றே நிம்மதி அடைந்து வீட்டை சுற்றி நோட்டமிட்டான்.

 

அங்கே தற்சமயம் இருப்பவர்கள் அவன், கார்த்திக் மற்றும் சக்தி.

 

இதைவிடச் சிறந்த சமயம் சிக்காது என்றுணர்ந்தவன் கார்த்திக்கிடம், “சக்தி ஏதோ பேசணும்னு சொன்னாங்க. நீங்க போறீங்களா ஜி ? நான் வெளில கொஞ்சம் வேலையா போறேன்” எனக் கூற, விக்ரமின் கூற்று கார்த்திக்கிற்குக் குழப்பத்தையும் மீறிய சந்தோசத்தை அளித்தது.

 

அந்த நொடி அவன் மனதிலிருந்த கோவம் கூடக் காணாமல் சென்றிருந்தது. ஏனோ அவளிடம் பேசவேண்டும் என்ற ஆவல் அவனையும் மீறி உந்தியது.

 

ஆனால் விக்ரம் முன் சாதாரணமாகக் காண்பித்துக்கொண்டவன், விக்ரமன் கிளம்பிய பின் சக்தியை நோக்கி சென்றான். லிவிங் ரூமில் ஏதோ சிந்தனைக்கு உட்பட்டவளாக அமர்ந்திருக்க, அவள் முன் சென்று நின்றான் கார்த்திக்.

 

“என்ன பேசணும்?” வீம்பாகவே வெளிவந்தன கார்த்திக்கின் வார்த்தைகள்.

 

“புரியல. நீங்க என்ன சொல்றீங்க ?”

 

“நீ தானே ஏதோ பேசணும்னு சொன்ன. அதுனால தான் வந்தேன் சவீ”

 

“ஐயோ ஆரம்பிச்சுடீங்களா? உங்களுக்கு ஒருமுறை சொன்னா புரியாதா? படிச்சவர் தான நீங்க ? இல்ல புரியாத போல நடிக்கிறீங்களா ? ஒருவேளை பைத்தியமா ? பைத்தியங்கள் கூடச் சில சமயம் புருஞ்சுக்கும்.

 

ஒரு பொண்ணு முகம் திருப்பிட்டு போனாலே பின்னாடி போய்ச் சுத்துறது நல்ல ஆம்பளைக்கு அழகில்லை. அப்படியிருக்க எனக்கு உங்கள பாக்கவே பிடிக்கல. அருவுருப்பா இருக்கு. நான் இருக்குற நிலைமையைக் கூட உங்களுக்கு கன்சிடர் பண்ணனும்னு தோணலில?

 

இதைத் தெருஞ்சும், நான் கூப்பிடவே இல்லாம, நீங்களா வந்து நிக்கிறீங்களே ? உங்களை என்ன சொல்றது ?” என்ற வார்த்தைகள் அளவுக்கதிகமான உஷ்ணத்துடன் வெளிவந்தது.

 

அதோடு சக்தியின் முகம் பாவங்களும் அருவருப்பை வெளிக்காட்டவே கார்த்திக் இத்தனை நாட்கள் கட்டி வைத்திருந்த தடுப்பணைகளை உடைத்தெறிந்தான்.

 

“என்ன? என்ன டி சொன்ன? நானும் போனா போகுது போனா போகுதுனு விட்டா, உன்னோட பேச்சு எல்லை மீறி போகுது.

 

நல்ல ஆம்பளை இல்லனா சொல்லுற? புருஷன வழியணுப்பி வச்சவ, அவன் வீட்டுக்கு வரத்துக்கு முன்னாடியே ஓடி போனியே… இப்ப வரைக்கும் கண் காணாம ஒளிஞ்சு வாழுரியே.

 

குழந்தை உண்டானதக் கூடச் சொல்லாம அந்தக் குழந்தையோட தகப்பாகிட்டயே மறச்சிருக்கியே….உன்ன என்ன சொல்றது. இதெல்லாம் தெருஞ்சும் உன்னோட நாடகத்தை இப்பவரை பொறுமையா சகிசிச்சுகிட்டு இருக்கேன்ல…

 

அதுக்கு நீ கொடுத்தியே ஒரு பட்டம். சபாஷ்….

 

என்ன சொன்ன ? ஹா ? என்ன சொன்ன கொஞ்சம் முன்னாடி ?” எனக் கோவமாகப் பேசிக்கொண்டிருந்தவன், அவளருகே வந்து கைகளை அழுந்த பிடிக்க சக்தியின் முகம் வலியில் சுருங்கியது.

 

அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யாதவன், “என்ன பாத்தா பைத்தியக்காரன் போலத் தெரியுதா ? என் முகத்தைப் பார்த்தா அருவருப்பா இருக்கா ?

 

ஏண்டி நீ நம்ம வீட்ல என்கிட்டே என்ன சொன்ன. என்னோட என்னோட கண்ண எப்பவுமே பார்த்துகிட்டே இருக்கணும் அது தான் உன் ஆசைன்னு சொன்னியா இல்லையா ?

 

நீ போன பிறகு நீ சொன்ன வார்த்தை தான் டி என் காதில கேட்டுகிட்டே இருந்துச்சு. நீ பாக்காத கண்ண நான் இந்த உலகத்துக்குக் காட்டினதே இல்ல நீ போன பிறகு.

 

ஆனா மறுபடியும் உன்ன எப்ப இங்க பார்த்தேனோ அப்போ இருந்து இப்பவர நா மறுபடியும் கண்ணாடிய போடவே இல்ல டி. உன்ன விரும்புறதா ? வெறுக்கிறதான்னு புரியாம நரக வேதனையில இருக்குறே.. அப்போ என்ன பார்த்துகிட்டே இருக்கணும்னு சொன்ன நாக்கு எப்படி இப்போ இப்படிச் சொல்லுது.

 

எழும்பில்லாத நாக்கு எப்படி வேணும்னாலும் பேசலாம்னு நினைச்சியா ? சொல்லு.

 

எதுக்கு? ஊரு பேருனு மாத்தி எதுக்காக இந்த நாடகம் ?” எனக் கண்கள் சிவந்து கை முஷ்டி இறுகி கர்ஜிக்க, சக்தி மிரண்டு விழித்தாள்.

 

“கையை விடு…” என அவள் வலியில் முனங்கியபடி உருவ முயல, “ஓ இப்ப இதுக்கும் ஏதாவது சொல்லேன்…? ச்சி..” எனக் கைகளை உதறியவன், அவள் முன் கை நீட்டி, “என் குழந்தை பிறக்கிற வரைக்கும் தான் உன் நாடகத்துக்கு டைம்” எனக் கூறியபடி அப்படியே வெளியேற, அவனின் இந்தப் பரிமாணத்தில் சக்தியின் நெஞ்சம் படபடவென அடித்துக்கொள்ளத் தொடங்கியது.

 

பயம் கூடாது! பயம் கூடாது ! என மீண்டும் மீண்டும் அவள் நெஞ்சம் அரற்றிய போதும் கால்கள் வேகமாகச் சென்று கதவை தாழிட்டது. மீண்டும் கார்த்திக் உள் வந்துவிடுவானோ என்ற அச்சத்தில்.

 

தோட்டத்தில் தாடை இறுகியபடி அப்படியொரு கோவத்தில் காற்றில் கைகளை ஓங்கி குத்திக்கொண்டிருக்க, சக்தி ஓய்ந்து போனவளாய் மாடிக்கு சென்றாள்.

 

இருவரும் இருவேறு மனநிலையிலிருக்க, அவர்களது கவனத்தைத் திருப்பியது ஒரு பெரிய சப்த்தம்.

 

யானையின் பிளிறல்! வெகு சமீபத்தில் ஒலிக்க, சக்தி வேகமாக மாடியின் பலகணியில் வந்து பார்க்க, அந்த யானை கார்த்திகை நோக்கி ஓடி வந்துக்கொண்டிருந்தது. கார்த்திக்கும் அதைப் பார்த்துவிட, வந்துகொண்டிருந்த யானையோ பார்ப்பதற்குக் காட்டு யானை போல இருக்க, “கார்த்திக் கார்த்திக்…” என்ற சக்தியின் பதற்றமான குரல் எங்கும் ஒலித்தது.

 

Advertisement