Advertisement

புயலோ தென்றலோ – 12

 

“சக்தி மா, என்ன சொல்றீங்க? இப்படிச் செய்யக் கூடாதா ? எங்களுக்குத் தெரியாதே” எனக் கூற, “ஆமாம் இரண்டா வெட்டினா சுளையெல்லா வெட்டுப்பட்டிடு. அப்படிச் சுளை உடைஞ்சிடுச்சினா அப்புறம் கொஞ்சம் நேரம் கூடத் தாக்கு பிடிக்காது. தண்ணீ விட்டது போலச் சலசலன்னு போய்டு.

 

நான் சொல்றத போலப் பண்ணுங்க.

 

அந்தப் பழத்தோட அடிபாகத்துல இருக்கிற சுழியில கத்திவிட்டு நெம்பி மேலோட லேசா பிறிங்க.”எனக் கூற அப்படியே செய்தனர்.

 

“அட! பரவாயில்லையே சக்தி தூள் கிளப்புற. இதெல்லாம் உனக்கெப்படி தெரியும் ?” என வினவியபடி பிரகாஷ் அங்கே வர, படிகளில் நின்றுகொண்டிருந்த விக்ரமின் தோளின் மீது அணைவாய் கைபோட்டபடி சேர்த்தழைத்து வந்தான்.

 

விக்ரம் உடன் வருவதைக் கவனித்துவிட்டு சக்தியின் முகத்தில் ஏதோ மாற்றம். ஆனால் அதை என்னவென்று விக்ரமால் சரியாகக் கணிக்க முடியவில்லை.

 

“சொல்லு சக்தி? எனக்கு இப்படியொரு பழம் இருக்கிறதே தெரியாது. ஆனா உனக்கு இவ்ளோ டீடெயில்ஸ் தெரிஞ்சிருக்கே.” என வினவ , பிரகாஷின் கேள்விக்குப் பதிலளிக்காமல், சக்தி வேறொரு கேள்வியைக் கேட்டுவைத்தாள்.

 

“அப்படியா? அப்போ எப்படிச் சார் இந்தப் பழத்த வாங்கினீங்க ?” எனக் கேட்டவளின் சந்தேகப் பார்வை விக்ரமிடம் நிலைத்தது.

 

“இதோ விக்ரம் தான் காரணம். அவருக்கு ரொம்பப் பிடிச்ச பழமாம்” எனக் கூறிவிட, விக்ரமின் திருட்டு முழி சட்டென்று மாடியிலிருந்த பலகணிக்கு சென்று மீண்டது. அதைக் கவனித்துவிட்டவள், மெல்ல சாமர்த்தியமாகவும் யதார்த்தமாகவும் பார்ப்பவள் போல் மேல் பார்க்க, அங்கே கார்த்திக் நின்றதை கவனித்து, அவர்கள் அறியாதவாறு சமாளித்தபடியே கொஞ்சமும் பதற்றம் கொள்ளாமல், அவனைக் காணாதவள் போலத் திரும்பிக்கொண்டாள்.

 

“என்ன சார் கேட்டிங்க? எனக்கு எப்படித் தெரியும்னா, நான் மார்க்கெட் ல ஒருதடவ பாத்தே. சரி சாப்பிடுங்க. விக்ரம் சார்க்கும் பிரகாஷ் சாருக்கும் கொடுங்க” எனக் கூறிவிட்டு செல்ல முயன்றவளை விக்ரம் தடுத்தான்.

 

“எனச் சக்தி? இதை உடைக்க இவ்ளோ உதவி பண்ணினீங்க. சாப்பிடாம போறீங்க. சொல்லுங்க பிரகாஷ்” என அவளை இருக்க வைக்க முயல, அவளோ, “எனக்கு இந்த வாடை சுத்தமா பிடிக்கல. உடைக்கத் தான் வழி சொன்னே. ஆனா சாப்பிட முடியும்னு தோணலை”எனக் கூற, பிரகாஷும் விக்ரமும் வற்புறுத்த, வேறு வழியில்லாமல் ஒரு சுளை எடுத்து வாயில் வயித்தவள் சட்டென்று குமட்டிக்கொண்டு வாஷ்பேசின் ஓட, பிரகாஷும் பதற்றம் கொண்டு பின்னோடு சென்றான்.

 

அதை மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக்கிற்குக் கட்டுக்கடங்காத கோபம்.

 

எதற்காக இந்தத் திட்டத்தைக் கைலெடுத்தான் என்பதை மறந்தவனாய் சவீதாவின் பின் செல்லும் பிரகாஷின் மீது கோபம் கொண்டான். அதே நேரம் மூச்சு வாங்கி ஓய்ந்து களைப்பாகத் தெரிந்த சவீதாவின் மீது தன்னை மீறிய அக்கறை ஏற்படுவதை நினைத்து தன் மீதும் கோபம் கொண்டான். இப்படியொரு சூழ்நிலையை உருவாக்கிய சவீதாவின் மீதும் கோபம் கொண்டான்.

 

எதற்காக வந்தான் ? என்ன செய்துக்கொண்டிருக்கிறான் ? என எதுவும் அறியாதவனாக நின்றிருந்தான்.

 

எதிலும் தோல்வியுறாதவன் எதையும் சாதித்துத் தன் பணியில் வெற்றியை மட்டுமே சுவைத்திருந்தவன் முதல் முறையாக எப்படிக் கையாள்வதென்று தெரியாமல் தவித்தான்! தளர்ந்தான்!

 

இவன் இப்படியாகத் தவித்திருக்க, பிரகாஷின் துணைகொண்டு உணவு மேஜைக்கு வந்தவள், தன்னை ஆசுவாச படுத்திகொண்டு மெல்ல விக்ரமின் முகத்தைப் பார்த்தாள். அவனது முகத்திலும் பதற்றமே.ப்ரகாஷிடமும் அவனைக் குற்றம் சாட்டும் பாவனை!

 

எப்பொழுதும் விக்ரமிடம் முகம் கொடுத்து பேசாதவள், இன்று பேச விழைந்தாள்.

 

“எனக்கொன்னுமில்லை. எனக்கு இந்தப் பழம் சுத்தமா பிடிக்காது. அதான் இப்படி ஆகிடுச்சு. ஆனா உங்களுக்குப் பிடிக்குமே! நீங்க சாப்பிடுங்க”எனக் கூற, விக்ரம் முன்பை விட இப்போது தான் அதிக அதிர்ச்சி அடைந்தான்.

 

அவனுக்கும் அந்த வாடை பிடிக்கவே இல்லை! அதை அவனின் முகபாவத்திலிருந்து கண்டுகொண்ட சக்தி வீம்பிற்கே அவனை உண்ண வைக்க முனைந்தாள்.

 

“ஹ்ம்ம் சாப்பிடுங்க விக்ரம் சார். சொல்லுங்க பிரகாஷ் சார்” என அவன் சற்று முன் தனக்குச் செய்ததை அவனுக்கே திரும்பச் செய்தாள்.

 

வேறு வழியே இல்லாமல் அதைச் சாப்பிட்டவன், “எம்மாடியோ இவ லேசுப்பட்டவ இல்ல” எனத் தனக்குள் எண்ணிக்கொண்டான்.

 

விக்ரமின் நிலையைப் புரிந்துகொண்ட சக்தியின் பார்வை விக்ரமிடம், “இன்னொருதடவ எண்ட இதெல்லாம் வேணாம்” என்பதாய் பாவனைக் காட்ட, “அம்மாடியோ! என்னா பொண்ணுடா? வச்சு செய்யுது” என எண்ணிக்கொண்டான்.

 

படிகளில் ஏறியவள் அங்கே நின்றிருந்த கார்த்திகை கொஞ்சமும் இலட்சியம் செய்யாமல் அவனைக் கடந்து தன் அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்தமர்ந்து விழி மூடினாள். மூடிய அவளுடைய விழிகளுக்குள்ளும் கார்த்திக்கின் பழுப்பு விழிகள் அவளை இழுத்தன. என்ன முயன்றும் கார்த்திக்கின் சிந்தனையை அவளால் தடுக்கவே முடியவில்லை.

 

கார்த்திக்கின் நினைவு சக்தியை ஆட்டுவித்தது! அதற்கேற்ப ஆட அவளுடைய மனமும் தயார் நிலையில் இருந்தது. அதை உணர்ந்தவள் திடுக்கிட்டு விழி பிரிக்க, மீண்டும் அவனின் பழுப்பு நிற விழிகளே!

 

அவளை ஆழ்ந்து நோக்கி ஆழ இழுத்துச் சென்றுக்கொண்டிருந்தது.

 

‘என்ன செய்கிறாய் மனமே? அதைச் செய்யாதே ! நினையாதே !’ என்ற மனதின் கூக்குரல் காற்றோடு கலக்க, சக்தியின் விழிகள் மட்டும் கார்த்திக்கின் பழுப்பு நிற விழிகளுக்குள் ஆழ்ந்து அமிழ்ந்து மூழ்கிக்கொண்டிருந்தது.

 

மெல்ல இதழ் பிரித்தவள், “இந்த ப்ரவுன் ஐஸ், நான் எப்பவும் பார்த்துட்டே இருக்கணும் கார்த்திக்” என்ற சொற்களைக் கனவில் உச்சரிப்பது போல உச்சரிக்க, அவளது எதிரில் நிஜத்தில் நின்றுக்கொண்டிருந்த கார்த்திக்கின் இருதயத்தை அவளுடைய வார்த்தைகளும் குரலும் வேரோடு பிடிங்கி எரிந்தன.

 

மீண்டுமொருமுறை கேட்க முடியுமா என எண்ணி ஏங்கிய வார்த்தைகளை அவன் கேட்டுவிட்டான். ஆனால் அது வரமா சாபமா என அறியாமல் நின்றான். இப்படி இன்று பேசிய இதே குரல் தான் அன்று அப்படிப் பேசியது. அதையும் மறக்க முடியாமல், சட்டென்று அடிபட்ட புலியாய், “மறுபடியும் என்ன சொல்லி ஏமாத்த இந்த வார்த்தையைச் சொல்லுற சவீ….” என உறும, சக்தி திடுக்கிட்டாள்.

 

அப்போது தான் தன்னுடைய படுக்கையில் தன் அருகில் அமர்ந்திருந்தவனைக் கண்டவள் திடுக்கிட்டு விழித்தாள்.

 

ஆம் ! சக்தி கட்டிலில் சாய்ந்து அமர்ந்து விழிமூடியிருக்கக் கார்த்திக்கின் கண்கள் தந்த அவஸ்தையால் மூடிய இமைகளுக்குள்ளும் கருவிழிகள் அங்குமிங்கும் அலைமோதின. அவள் ஓய்ந்து களைந்து படுக்கையறை சென்றதை பார்த்த கார்த்திக்கின் கால்கள் அவனின் மூளையின் கட்டளைகளை ஒதுக்கிவிட்டு அவளைத் தேடி வந்தன.

 

அவள் அமர்ந்திருந்த கோலம் அவனுள் வலியை ஏற்படுத்த நூலிழை இடைவேளையில் அவளருகில் அமர, கண்திறந்தவள் முன் கார்த்திக்.

 

எந்தப் பழுப்பு நிற விழிகளின் நினைவிற்கு அஞ்சி விழிதிறந்தாளோ அதே கண்கள் அவள் முன்னாலிருக்க அதையும் தன்னுடைய கற்பனையே என்றெண்ணிக்கொண்டு கனவில் கூறுபவளை போன்று என்ன சொல்கிறோம் என்பதே அறியாதவள் போல சொல்ல, அதைக் கேட்டவனின் குரலில் கோபம்.

 

அப்போது தான் கார்த்திக் அங்கே நினைவில் இல்லாமல் நிஜத்தில் அமர்ந்திருப்பதை உணர்ந்தவள் முகத்தில் பதற்றம். பெரும் குற்றத்தை செய்யும் நொடியில் கையும் களவுமாகப் பிடிப்பட்டதைப் போன்றதொரு பதற்றம்.

 

அதே பதற்றத்துடன் சட்டென்று கட்டிலிலிருந்து எழுந்தவள் தடுமாறப் போக, நொடியும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் கார்த்திக்கின் ஒரு கரம் அவள் கை பிடித்தும் மறு கரம் அவள் இடையை ஆதரவாய் பற்றியும் நிறுத்தியது.

 

அவனை இத்தனை அருகில் கண்டவள் தன் நிலை மறந்தவளாய் விருட்டென்று எழுந்து நின்றவள் தடுமாறிய போது ஒரு நொடி அவள் உயிரே அவளிடமில்லை. அந்தப் பயம் பதற்றம் அவளுக்கானதல்ல! தன் குழந்தைக்கானது!

 

கார்த்திக் சக்தியின் தடுமாற்றம் அறிந்த நொடி மின்னல்வேகத்தில் அவளைப் பிடித்த பிறகே நிம்மதியாய் உணர்ந்தாள். வயிற்றில் கைவைத்து ஒரு முறை ஆசுவாசமாய் மூச்சை உள்ளிழுத்துவிட்டவள், மனதோடு குழந்தையிடம் “ஒண்ணுமில்லை குட்டி. பயந்துட்டியா? சாரி கண்ணம்மா” எனப் பேசிக்கொண்டிருந்தாள்.

 

இது சக்திக்கு வழமையே. கருத்தரித்திருப்பதாய் அறிந்த நாள் முதல் இந்நாள் வரை தன் கருவில் இருக்கும் சிசுவோடு மனதோடு உரையாடுவதையே நிம்மதியாக எண்ணி பேசிக்கொண்டிருப்பாள். அதே இன்றும் அவள் செய்துக்கொண்டிருக்க, கார்த்திக்கின் ஸ்பரிசத்தை ஒரு சில நொடிகள் உணரவே இல்ல.

 

ஆனால் கார்த்திக் உணர்ந்தான்! சக்தியின் இடையைப் பிடித்துத் தாங்கியிருந்த கார்த்திக் சக்தியினுள் சவீதாவை உணர்ந்தான். மெல்ல மெல்ல அவனுடைய கைகள் ஆதரவாகவும் ஒரு வித எதிர்பார்ப்புடனும் மேடிட்ட வயிற்றை மெல்ல வருட, உள்ளிருக்கும் சிசு என்ன உணர்ந்ததோ இத்தனை நேரம் அமைதியாய் தன் தாய் வயிற்றுள் துயில் கொண்டிருக்கச் சட்டென்று அசைந்தது.

 

கார்த்திக் இதுவரை உணர்ந்திராத உணர்வுக்குள் தள்ளப்பட்டான்! சிலிர்த்தான்! பிரமித்தான்! தன் குழந்தையை அந்நொடியே கைகளில் ஏந்தியவனைப் போன்று கண்ணீரை கண்டிராத அவன் கண்கள் ஆனந்தத்தில் கலங்கியது. ஒரு துளி தான். ஒரே துளி அவனுடைய ஒட்டுமொத்த இன்பத்தின் சாட்சியாய் சக்தியின் வயிற்றின் மீது பதித்திருந்த கார்த்திக்கின் விழியில் திரண்டிருந்தது.

 

குழைந்தை அசையவே மீண்டும் மெல்ல வருட, இம்முறை அசைவு இன்னும் அதிகமாக, “சவீ! சவீ குழைந்தை அசையிறா” எனச் சந்தோசமாகக் கூற இவைகள் அனைத்துமே சில நொடிகளில் நிகழ்ந்திருக்க, சக்தியை பார்த்த கார்த்திக் அவளின் அந்நிய பார்வையில் ஸ்தம்பித்தான். ஓரடி பின்நகர்ந்தான்.

 

“கார்த்திக், நீங்க என்ன பண்ணினீங்க? என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி கண்கள் சிவந்து வினவ, கார்த்திக்கும் இத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சி முழுவதும் வடிந்தவனாய் கோபம் கொண்டான்.

 

“என்னோட அனுமதி இல்லாம ரூம்க்கு வந்தது மட்டுமில்லாம என் பெட்ல உக்காந்து இப்ப என்… என்ன ச்சி” எனக் கூறியபடி முகத்தைச் சுழித்தவள் வெளியே போ என்பதாய் கைகள் உயர்த்தி வாசலை காட்ட, கார்த்திக் அவளின் முகபாவத்திலும் தோரணையிலும் கோபத்தின் உச்சியைத் தொட்டான்.

 

அந்தக் கோபம் அவன் மீதே அவனுக்கு வந்தது! மீண்டும் இவளுடன் இணைய நினைத்த மனதின் மீது வந்தது. அவள் கூறிய வார்த்தைகளை மறந்து போன புத்தியின் மீது வந்தது. இருந்தாலும் அவள் சொன்னவுடன் கிளம்பி செல்ல அவன் தன்மானம் இடம் தராத காரணத்தால் அடக்கப்பட்ட கோபத்துடன், “சவீதா.. நான் ஒன்னும் உன்மேல ஆசைப்பட்டுத் தொடைல. இன்னும் சொல்ல போன உன் முகத்த பார்க்க கூடச் சுத்தமா எனக்குப் பிடிக்கல.

 

நீ விழுந்திடாம இருக்க மட்டும் தான் பிடிச்சேன். அதுனால…” என மேற்கொண்டு ஏதோ கூறவந்தவனைத் தடுத்தவள், “ஓ விழுகாம என்ன பிடிசீங்களா ? இல்ல நான் விழறதுக்கே காத்திருந்தீங்களா ? இப்ப இங்க இருந்து உடனே கிளம்பலான நான் பிரகாஷ் சார கூப்பிடவேண்டி இருக்கும்”எனக் கூறிவிட்டு மறுபுறம் திரும்பி நிற்க, மீண்டுமொருமுறை இதே வீட்டில் அவமானம் படப் பிடிக்காதவனாய் அங்கிருந்து செல்ல முனைய, “ஒரு நிமிஷம்”என்ற குரல் அவனைத் தேக்கியது.

 

என்னவென்று திரும்ப, “மறுபடியும் சொல்றேன். நான் சவீதா இல்ல! சக்தி!” என நிமிர்வுடன் கூற அவனுடைய கோபத்தையும் மீறி அந்நொடி அவனின் சவீதா அவனிற்குப் புதிதாகத் தெரிந்தாள்!

 

அறைக்கு வந்த கார்த்திக்கின் மனதில் சவீதாவின் மாறுபட்ட பேச்சு முரணாய் தோன்றியது.

 

முதலில் அவனுடைய கண்களைப் பார்த்தபடி அவள் கூறியதும் பின்பு அவனுடைய ஸ்பரிசத்தால் ஒரு சில நொடிகள் கட்டுண்டு பிறகே சுயத்தைப் பெற்றவளாய் கோபம் கொண்டதையும் மீண்டும் மீண்டும் மனதில் ஓட்டி பார்த்தான்.

 

“இந்த ப்ரவுன் ஐஸ், நான் எப்பயும் பார்த்துட்டே இருக்கணும் கார்த்திக்” என்ற வார்த்தைகளை அவர்களின் திருமணத்திற்குப் பிறகு அவன் கண்ணோடு கண் பார்த்தபடி காதலுடன் கூறிக்கொண்டிருந்தாள். மெல்ல மெல்ல கார்த்திக்கின் நெஞ்சம் பழையதை எண்ணதொடங்கியது.

 

“ஹ்ம்ம் மேடம் என்ன புதுசா ஏதோ சொல்றீங்க”

 

“இல்ல, புதுசா இல்ல. நீங்க பட்டர்ப்ளை பார்க் பார்க்க முதல் முறையா வந்தீங்களே அப்போவே அப்போவே என்னை அறியாமலே உங்க கண்ண இந்த ப்ரவுன் ஐஸ்-அ பார்த்துட்டே இருந்தேன்.

 

அப்புறம் கோவில்ல! அப்புறம்…” என மேற்கொண்டு கூற போனவளை தடுத்தவன், “அடி பாவி! அப்போ மாமனை சைட் அடிச்சிட்டு வெளில எதுவுமே கட்டிக்காம என்ன வேணா வேணானு சொல்லிட்டு என்னை அலைய விட்டிருக்க.

 

இதுக்கு உனக்குக் கண்டிப்பா தண்டனை குடுக்கணுமே…எப்படி குடுக்கலாம்? உன்ன எனக்கு முத்தம் கொடுக்கச் சொல்லவா? இல்ல நான் உனக்குக் கொடுக்கவா ?” என வினவியபடி அவள் மீது சரிய, “அதெல்லாம் எதுவுமில்லை இப்போ. நம்மளை சேர்த்துவச்ச முருகன் சன்னதிக்கு போகணும். போய் ரெடி ஆகுங்க” என எழுந்தாள்.

 

“ஒகே போலாம்…ஆனாலும் நீ என்னை லவ் பண்ணினதை மறச்சு என்னை அவாய்ட் பண்ணதுக்கு கண்டிப்பா உனக்குப் பனிஷ்மென்ட் இருக்கு”

 

“நான் ஏன் உங்களை வேணாம்னு சொன்னேன்னு தெரியுமா?

 

“ஐயோ வேண்டா தாயே. நீ என்னை வேணாம்னு சொன்னதுக்கு என்ன காரணம்னு எனக்கு தெரியவே வேண்டாம்… இப்போ மட்டுமில்ல! எப்பயும் வேண்டாம! புரியுதா? ஆளவிடு.

 

சரி இப்போ முருகனுக்கு நன்றி சொல்லமட்டும் தான் போறோமா சவீ ?”

 

“இல்ல! நன்றியோடு சேர்த்து புது அப்பிளிகேஷன் போட போறே”

 

“அடி பாவி! என்கிட்ட பேசுறதவிட நீ உன் முருகன் கிட்டதா நிறையப் பேசுற. சரி என்ன அப்பிளிகேஷன் ?”

 

“அது….., அது வந்து எனக்குச் சீக்கிரமே எனக்கு உங்களோட கண்ண அப்படியே உரிச்சு வச்சமாதிரி ஒரு குழந்தை வேணும்”

 

“சவீ, இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல. கல்யாணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளவேவா ?”

 

“இதுல என்ன இருக்கு. எனக்கு என்னோட புருஷன போல ஒரு குழந்தை வேணும். அத நான் கேக்குறேன். உங்களுக்கென்னவா ?”

 

“ஒகே ஒகே இதுக்கு எதுக்குக் கோவப்படுற! கேளு கேளு. நானும் கேப்பேன்”

 

“அப்படியா? நீங்க என்ன கேப்பிங்க ?”

 

“என் பொண்டாட்டி ஆசைய நிறைவேத்து. ஆனா புள்ள மட்டும் பெண் குழந்த வேணும்னு கேப்பேன்”

 

“ஏன்? அப்படி. பையன்னா வேணான்னு சொல்லிடுவீங்களா ?”

 

“எங்க அம்மாவ ரொம்ப மிஸ் பண்றே சவீ! என் பொண்ணு ரூபத்துல நான் எங்க அம்மாவ சீக்கிரம் பார்க்கணும்”எனக் கூற, சவீ அவன் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டாள்.

 

மெல்ல அதிலிருந்து வெளிவந்தவன், சவீயின் வயிற்றில் அவன் உணர நேர்ந்த குழந்தையின் அசைவை மீண்டும் எண்ணி எண்ணி பூரித்தான்.

 

“என்னோட பொண்ணு!” என மெல்ல முணுமுணுத்தான்.

 

அந்தச் சிசுவின் ஒர் அசைவு அவனை அவன் வந்த பணியை இருக்கின்ற சூழலை அனைத்தையும் மறக்க வைத்தது. அந்தச் சிசு இந்தப் பூமில் ஜனிக்கும் நொடிக்காக ஏங்க வைத்தது.

 

இவை அனைத்தையும் கார்த்திக், சவீ அறியாமல் விக்ரம் தெரிந்துகொண்டான். கார்த்திக்கின் பின்னோடு வந்தவன் சவீதாவின் அறையில் நடந்ததையும் தற்போது கார்த்திக்கின் தளர்ந்த தோற்றத்தையும் கண்டு ஒரு முடிவெடுத்தான்.

 

“ஜி சொல்றது போல இது சக்தி இல்லை. ஜி கிட்டையே அவரோட கண்ண பார்த்து பேசினாங்க. அப்புறம் கோபமா பேசுறாங்க. இதுல ஏதோ கண்டிப்பா இருக்கு.

 

இதுக்கு நான் ஒரு முடிவுகட்டுறேன். கண்டிப்பா இன்னும் ஒரு வாரத்துக்குள்ள உண்மைய வெளில கொண்டுவரேன்” எனக் கூறிக்கொண்டான்.

 

Advertisement