Advertisement

புயலோ தென்றலோ – 10

 

மடிகேரியில் அவசரமில்லாமல் இயங்கிக்கொண்டிருந்த பத்திர பதிவு அலுவலகத்தை, கார்த்திகேயனின் சொல், மந்திரம் போல் ஆட்டுவித்தது. அவனை இதுநாள் வரை இப்படியொரு சூழலில் பார்த்திராதவள், அவனின் ஆளுமையையும் அதிகார தோரணையையும் கண்டு பிரமித்தாள். எந்தவொரு தடையும் இல்லாமல் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நிகழ்ந்தன. இல்லை கார்த்திக் அதை நிகழ வைத்திருந்தான்.

 

திருமணத்தைப் பதிவு செய்வதற்கே முன்பே விண்ணப்பித்து எவருடைய ஆட்சேபனையும் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்து, அதன் பிறகும் கூட புதுப் புது விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் எழுகின்ற அலுவலகத்தில் என்ன நடந்ததென்றே புரியவில்லை.

 

ராஜ மரியாதை என்பார்களே, அதை அன்று தான் சவீதா உணர்ந்திருந்தாள்!

 

தன்னுடைய பதவியின் அந்தஸ்த்தை குறிப்பிடாதவன் தனக்குத் தெரிந்த செல்வாக்கான ஆட்கள் மூலம் இதைச் செய்ய வைத்திருந்தான். அதுவும் முதல் நாள் பிற்பகலிற்கு பிறகே… இவை அனைத்தையும் நிகழ்த்திருந்தான். பெரிய மனிதர்களின் செல்வாக்கு பேசவேண்டிய இடத்தில் அதைப் பேசவைத்தான்! பணம் பேசவேண்டிய இடத்தில் பணத்தைப் பேசவைத்திருந்தான்!

 

இது சரியல்ல என்பது அவனது புத்திக்கு தெரியும். ஆனால் மனதிற்கு ? அதற்குச் சவீதாவை மட்டும் தானே தெரியும்.

 

அவளோடு தன்னைச் சேர்த்துப் பார்ப்பவர்கள் மரியாதையாக மட்டுமே பார்க்க வேண்டும் என அவள் எதார்த்தமாகக் கூறிவிட, இத்தனை துரித்ததில் காரியத்தை அரங்கேற்றுவான் என அவனே எதிர்பார்க்காத போது சவீதா இதைச் சிந்திக்காமல் இருந்ததில் வியப்பில்லை.

 

முதலில் உடனடி திருமணம் என்பது அதிர்ச்சி தான் என்றாலும் அவனின் வேகமும் அனைவரையும் ஆட்டுவித்த முறையும் ஒரு பயத்தை அவளுக்குள் விதைத்தது.

 

முதன் முறையாக, “இவன் யார் ? எப்படி இவர்களை ஆட்டுவிக்கிறான் ?” எனக் கார்த்திக் என்ற பெயரை தாண்டிய அவனுடைய அடையாளத்தைச் சிந்திக்கத் தொடங்கினாள்.

 

“என்ன சவீ? ஹாப்பியா ? நம்ம கல்யாணம் இப்ப நடக்கப் போகுது” என உல்லாசமாகச் சட்டை காலரை தூக்கிவிடுவது போன்ற பாவனையுடன் அவன் கூற, அதை ரசிக்கும் மனநிலையில் சவீதா இல்லவே இல்லை.

 

“கார்த்திக் நீங்க யாரு?” எனக் குரலில் நிதானத்தைக் காட்டி வினவினாள்.

 

“என்ன கேள்வி, நான் சவீதாவோட கார்த்திக். இப்ப உன் காதலன் கொஞ்ச நேரத்துல உன் கணவன். இன்னும் ரொமான்டிக்கா சொல்லனும்னா உன்னோட மாமா”

 

“நான் அதைக் கேட்கல. நீங்க யாரு ? கார்த்திக் அப்படிகிறதை தாண்டி நீங்க யாருனு கேட்டேன்”

 

“ஏன் திடிர்னு? என் மேல நம்பிக்கை இல்லையா ?”

 

“நம்பிக்கை இருக்கிறதுனாலதான் இன்னமும் உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கிறேன். உங்க அதிரடியான செயல் என்ன பயமுறுத்தது. இந்த வேகம் என்ன தடுமாறச் செய்யுது.

 

உங்க முன்னாடி இவுங்க காட்டுற பணிவு, நீங்க தப்பான தொழில் செஞ்சிட கூடாதேன்னு மனச அடிச்சிக்க வைக்கிது. சொல்லுங்க கார்த்திக், நீங்க என்ன பண்றீங்க ?”

 

“நா சொல்லாட்டி நீ என்னக் கல்யாணம் பணிக்கமாட்டியா?”

 

“ஆம்!” என்று ஸ்திரமாகக் கூறினாள்.

 

“இதுதா உன் முடிவா?”

 

“இல்லை கார்த்திக். இது என்னோட முடிவில்லை. நம்ம ஆரம்பம். அதுனால உங்களைப் பத்தி நான் தெருஞ்சுகிறது அவசியம்”

 

“நான் ஏன் உன்னை இப்ப அவசர கல்யாணம் பண்ண கூப்பிட்டு வந்தேன்னு தெரியுமா?”

 

ஏன் என்பதாய் பார்வை மட்டுமே சவிதாவிடம்.

 

“நம்மப் பாக்கிறவங்க மரியாதையோடு மட்டுதா பாக்கணும்னு நீ சொன்ன வார்த்தைக்காக. உன்னோட மரியாத எங்கயும் குறையக்கூடாதுனு நினைக்கிற நான் நிச்சயம் மரியாதையான வேலை தான் பாப்பேன். எந்தத் தவறான தொழிலும் பண்ணல.

 

இதுக்கு மேலையும் என்ன பத்தி நீ தெருஞ்சுக்கணும்னு நினச்சா, நான் கண்டிப்பா என்னைப் பத்தி சொல்லிட்டே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என முகத்தை எங்கோ வைத்தபடி கூற, அது சவீதாவை சற்று அசைத்தது.

 

“நாம கல்யாணம் பண்ணிக்கலாம் கார்த்திக். உங்கள நேசிச்ச மனசு நீங்க கெட்டவரா இருந்தாலும் உங்கள விலகி போகுமே தவிர வேற யாரையு தேடி போகாது.

 

என்னோட பயம் உண்மையாச்சுனா உங்க காதலியா பிரியிறதுக்கு பதிலா மனைவியா பிரிவே. நாம கல்யாணம் பண்ணிக்கலா.

 

உங்களோட என்னோட மொத்த ஆயுசுக்கும் தெவிட்ட தெவிட்ட வாழணும்ங்கிற ஆசையோட மட்டும்” எனக் கூறிவிட்டு விறு விறுவென்று முன் நடக்க, சென்றவளின் கரம் பற்றி இழுத்தான்.

 

அவன் புறம் முகம் திருப்பாமலே, “போகலாம் கார்த்திக்” எனக் கூற, “இத  பாத்துட்டு போ” எனக் கட்டளையாய் ஒலித்தது கார்த்திக்கின் குரல்.

 

எதைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் குழப்பத்துடனும் திரும்ப, அவன் கைகளில் பிடித்திருந்த அவனுடைய அடையாள அட்டை அவளிற்கு அலாதியான நிம்மதியை அளித்தது.

 

“நீங்க?” என ஏதோ கூற வர, அதைத் தடுத்தவன், “என்ன இங்க இருக்கவங்க அடையாள தெரிஞ்சுக்க கூடாது. நாம அப்புற பேசலாம்” எனப் புன்னகை முகமாகவே கூற, சவீதாவின் முகத்தோடு சேர்த்து அகத்திலும் மகிழ்ச்சி நிறைந்தது.

 

தங்க சரடில் தாலி கோர்க்கப்பட்டிருக்கச் சவீதா இறுதியாகத் தன்னுடைய கையெழுத்தை ‘சவீதா’வென்று கையொப்பமிட்டுச் ‘சவீதா கார்த்திகேயன்’ என்றானாள்.

 

குட்ட கிராமத்தில் அவளிற்குப் பரிக்சியமானோர்கள் அவள் வீட்டின் முன் சூழ்ந்திருக்க மணக்கோலத்தில் கார்த்திக் சவீதா இருவரும் நின்றிருந்தனர். மடிகேரியில் திருமணத்திற்குப் பிறகு ஒரு நல்ல உயர்தர உணவகத்தில் மதிய உணவை முடித்துக்கொண்டவர்கள், மாலையே குட்ட கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். வரும் வழியில் அவளின் அக்கம் பக்கம் சுற்றத்தினரின் கைபேசி எண்ணெய் வாங்கியவன் சுருக்கமாகச் சவீதாவின் சார்பாகத் தங்களின் திருமணத்தை அறிவித்துவிட்டு மற்றவர்களுக்கும் கூறும்படி கூற, அஃது அவசியமே இல்லை என்பதாய் அனைவரிடமும் தானாகச் செய்தி பரவியிருந்தது.

 

வயதான பெண்மணி ஒருவர் வாய் நிறைந்த புன்னகையுடன் ஆலம் கரைக்க, மற்றவர்களும் அகமே மகிழ்ந்திருந்தனர். ஒரு சிலர் மாத்திரம் தங்களைத் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்று குறைபட, சவீதாவோ மனதினுள், “அட இவ என்கிட்டையே சொல்லலியே! நான் எப்படி உங்ககிட்ட சொல்ல” என ஆனந்தமாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்.

 

“அட எப்படிம்மா இந்த மாப்பிளையைப் பிடிச்ச. ஆள் இலட்சணமா இருக்காரே. ஹ்ம்ம் என் பொண்ணுக்கும் தான் நகைநட்ட சேர்த்து வச்சு தேடுறேன். ஒன்னும் சரியா அமையமாட்டிங்கிதே” என வஞ்சகத்துடன் வினவ,

 

“அட நா எங்கம்மா பிடிச்சே. அவரு தான என்ன பிடிச்சிருக்காரு” எனத் தன் கரத்தை பிடித்திருந்த கார்த்திக்கின் கரத்தை பார்த்தபடி நக்கலாக மனதினுள் எண்ணிக்கொண்டாள்.

 

“மாப்பிள என்ன தொழில் பன்றாரு?” என்ற கேள்வி கார்த்திகை நோக்கி கேட்கப்பட, “அட இவன் என்ன பண்ணுறான்னு தெருஞ்சுக்க நானே மூச்சுவாங்க பத்து நிமிஷம் பேசின பிறகுதா உண்மைய சொன்னா. உங்ககிட்டையா சொல்ல போறா ?” என மனதிற்குள் எண்ணிக்கொள்ள, சட்டென்று அவளை நினைத்து அவளிற்கே ஆச்சர்யம் ஆனது.

 

காரணம் அவளின் பெற்றோர்களின் இழப்பின் பிறகு அவள் இந்த நொடிக்கு முன்வரை ஒருமுறைகூட இந்தப் பழைய துள்ளலில் பேசியதோ எண்ணியதோ கிடையாது. ஆனால் இன்று அவள் அதே பழைய துடுக்கான பேச்சுடன் அளவான புன்னகையுடன் நிற்கின்றாள் என்றால் அதற்குக் காரணம் கார்திகையன்றி வேறு எவருமில்லை எனத் தெளிவாக அக்கணம் உணர்ந்துக்கொண்டாள்.

 

அவளுடைய எண்ணப்போக்கில் அவள் உழன்று கொண்டிருக்க, அங்கே கூடியிருந்த மக்கள் தம் தம் மொழியில் அவனிடம் வினா எழுப்பிக்கொண்டிருந்தனர்.

 

தங்களது தந்தை காலத்திலேயே வந்து அங்கே நிரந்தரமாகத் தங்கிவிட்ட தமிழ் மக்கள் தமிழிலும், கேரளாவின் எல்லை சமீபத்திலிருப்பதால் சிலர் மலையாளத்திலும், இன்னும் சிலர் கர்நாடாக மாநிலத்தின் மொழியான கன்னடத்திலும் இன்னும் சிலர் அங்கே பரவலாகப் பேசப்பட்ட துளு மொழியிலும் அவனிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க அனைத்து மொழியிலும் அவரவர்க்கு ஏற்ப பதிலளித்தான்.

அவனுக்கு இக்கேள்விகளுக்குப் பதிலளிப்பது அவசியமற்றதே. ஆனாலும் அதைத் தன்னுடைய மனைவிக்காகச் செய்தான். அவள் பிறந்து வளர்ந்த ஊர். எவனோ ஒருவனுடன் வந்திறங்கினாள் என்ற பேச்சு இப்போது மட்டுமல்ல எப்போதுமே கூடாது என்பதற்காகவும் தங்களது அவசர திருமணம் மற்றவர்களின் வாய்களுக்கு அவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் அதை கவனமாய்க் கையாண்டு தன் மனைவியின் மரியாதைக்காகப் பொறுமையாகப் பதிலளித்தான்.

 

அதைப் பார்த்துக்கொண்டிருந்த சவீதாவிற்கு ஆனந்த அதிர்ச்சியே. சிறுவயதிலிருந்து வளர்ந்த தனக்கு இந்த மக்களின் பலதரப்பட்ட மொழிகள் தெரிவதில் வியப்பில்லை. ஆனால் கார்த்திக்கிற்கும் அனைத்தும் தெரிந்திருப்பது ஆச்சர்யத்தை அளித்தது.

 

‘இவன் அனைத்திலும் வல்லவன்! என்னவன்!’ என்ற கர்வம் அவளுள் மேலோங்கியது.

 

அதிலொரு சிறு வாண்டு கன்னடத்தில், “அங்கிள், ஆண்ட்டி மேரேஜ் ஆகிட்டா உங்க கூட வந்திடுவாங்கலாமே. அப்போ இந்தப் பட்டர்ப்ளைஸ் எல்லாம் நான் வச்சிக்கவா? நான் சாக்லேட் லாம் கொடுப்பேன்” என மழலை மொழியில் கூற, “உனக்கு உன் கவலை” எனச் சவீதா அதற்கும் மனதினுள் பதில் கூறியவள் சட்டென்று திகைத்தாள்.

 

“ஆமா! நான் கார்த்திக்குடன் தானே இருந்தாகவேண்டும். அப்போ எங்க அப்பா அம்மா வாழ்ந்தவீடு ? என்னையே நம்பி வாழற இந்த வண்ணத்துப் பூச்சிகள்? இதையெல்லாம் எப்படி நா ஒரே நாளில் உதறி தள்ளிவிட்டு வர முடியும் ?” எனச் சிந்தனைகள் ஓட ஆரம்பித்தது.

 

அந்தச் சிந்தனைகள் மனதில் எழ சட்டென்று அவள் முகம் கூம்பியது. அதைக் கவனித்துவிட்ட கார்த்திக் சூழ்ந்திருந்தவர்களை மெல்ல விலக்கி, அவளை உள் அழைத்துச் சென்றான்.

 

அனைவரும் ஆசியும் வாழ்த்தும் கூறி சிறிது நேரத்தில் களைந்து சென்று விட, தனிமையில் அவன் கேட்ட முதல் கேள்வி, “என்னாச்சு சவீ ? எதுக்கு டல்லாகிட்ட?”

 

“உடனே நா உங்ககூட இங்க எல்லாத்தையும் விட்டுட்டு வந்திடணுமா கார்த்திக்?” என முகத்தைக் குழந்தை போல் வைத்து வினவியவளை அள்ளி அனைத்து ஆறுதல் கூறும் உத்வேகம் கார்த்திக்கினுள் பிறந்தது.

 

உரிமையுடன் அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி, “இல்ல! நீ இங்க இரு. நான் வந்து வந்து போறேன். கொஞ்சம் மந்த்ஸ் போகட்டும். நீ எப்போ கம்போர்ட்டா பீல் பன்றியோ அப்போ நாம பெங்களூருக்கு ஷிபிட் ஆகலாம்”

 

“உங்களுக்கு வந்து போறது அலைச்சல் தானே? அதோட நீங்க இல்லாமலு நா எப்படி இருப்பே”

 

“அலைச்சல் தான். ஆனா, நா நிரந்தரமா பெங்களூர்லயும் இருக்க முடியாது. எங்க ஜாப் வருதோ அங்க மாறிட்டே தா இருப்பேன். இப்போ இன்னும் டென் டேஸ் லீவு இருக்கு. கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்றே.

 

அப்புற பெங்களூரு போய் ரிப்போர்ட் பண்ணுறே. பண்ணிட்டு இந்தப் பக்கம் இருக்கிற கேஸ் கிடைக்கித்தானு பாக்கிறேன். இல்லைனாலும் நான் எவெரி வீக் உன்ன பாக்க வந்திடுறேன்,

 

ஓகேயா?

 

பட் சவீ, எல்லாம் கொஞ்சம் மந்த்ஸ் தான்! அப்புறம் நீ என்கூட நிரந்தரமா ஷிபிட் ஆகிடனும். என்னால உன்னைப் பிரிஞ்சு ரொம்ப நாள் இருக்க முடியாது.” என அவளுடைய மூக்கை பிடித்து ஆட்டியபடி கூறிவிட்டு அவன் நெற்றியால் அவளின் நெற்றில் மெல்ல முட்ட, சந்தோசமாக அவன் தோள் சாய்ந்தாள்.

 

ஆனால் மெய்யென்னவென்றால், சவீதா அவனுடன் உடனடியாகக் கிளம்ப ஆயுத்தமாக இருந்தாலும் உடனடியாக அவளை அழைத்துப் போக முடியாத சூழலே. அவனுடைய பணியும், மாறிக்கொண்டே இருக்கும். பணி செய்யும் இடமும்.

 

குற்றங்களோடும் மோசடிகளோடும் தொடர்புடைய அவனுடைய அலுவல் அவளிற்கு அச்சுறுத்தலாய் இருத்திட கூடாதென்று உறுதியாக இருந்தான். சிறிது காலம் அவள் பிறந்து வளர்ந்த இடத்திலே பாதுகாப்பாய் இருக்கட்டும் என்று எண்ணியவன் விரைந்து தங்களுக்கான இல்லத்தைத் தான் பணிசெயும் இடத்தில் உருவாக்கும் எண்ணமும் கொண்டிருந்தான்.

 

இதன் பிறகு ஊர் ஊராக அலையாது ஒரே இடத்தில் பணி மாற்றமும் கேட்பதென்று முடிவுசெய்திருந்தான்.

 

நாட்கள் அவர்களின் அழகான காதலுடனும் புரிதலுடன் கூடிய தாம்பத்தியத்துடனும் வேகமாகக் கரைந்தது!

 

ஒவ்வொரு நாளையும் சவீதா கார்த்திக்கிற்குப் புதிதாகத் தெரிந்தாள். கார்த்திக் சவீதாவின் ஓவ்வொரு நிமிஷத்தையும் அவனையே காதலிக்கும்படி செய்தான்!

அவளை காதலித்தான்!

அவளையும் காதலிக்கும்படி செய்தான்!

 

அவனுடைய அலாதியான அன்பில் சவீதா திக்குமுக்காடினாள். சந்தோச வர்ணங்கள் நிறைந்த அவர்களது வாழ்க்கையை வண்ணத்துப் பூச்சிகள் மேலும் அலங்கரித்தன.

 

கிட்டத்தட்ட அவனுடைய விடுப்பே மேலும் ஐம்பது நாட்கள் நீடித்திருக்க, விடுமுறை முடியும் நாளும் வந்தது. அந்த நாள், தனக்குள் ஆயிரம் மர்மங்களை ஒளித்து வைத்திருந்ததை அறியாமல் ஆயிரம் பத்திரம் சொல்லி கார்த்திக் குடகிலிருந்து பெங்களூரு நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்திருந்தான்!

 

அன்று தான் அவளைத் தான் காணப்போகும் கடைசி நாள் என அவனும் அறியவில்லை! அவளும் அறியாமல் தான் இருந்திருக்க வேண்டும். இல்லை சவீதா முன்பே இதை அறிந்திருந்தாளா ? அது கார்த்திக் அறியாத ஒன்று.

 

Advertisement