Advertisement

புயலின் தென்றல் அவள்….

 

புயலோ தென்றலோ1

நீண்டதொரு மலைப்பாம்பை பிரதிபலிக்கும் விதமாய் வளைந்து நெளிந்து வால்பாறைக்கான சாலை ஓடிக்கொண்டிருக்க, அதில் தங்கு தடையில்லாது கருப்பு நிற ஜீப்பொன்று மலையில் ஏறுவதற்கு ஏதுவான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.மிகவும் லாவகமாக வேகமெடுத்த ஜீப்பை ஓட்டுபவனுக்கு மலைப்பாதையும் அந்த ஜீப்பும் புதிதல்ல என்பதைப் பார்ப்பவர்களால் யூகிக்கமுடியும். வளைந்து நெளிந்து செல்லும் சாலையின் இருபுறமும் கண்களை குளிரவைக்கும் பசுமையும் ஆங்காங்கே இடையிடும் மிதமான மற்றும் அடர்வனப்பகுதியும் நிறைந்திருக்க, அவ்விடத்தின் தட்பவெட்டப்பமும் உடலோடு சேர்த்து மனதிற்கும் இனம்புரியாத இதத்தை அளித்துக்கொண்டிருந்தது.

 

அந்த இதம் ஜீப்பயணிக்கின்ற பகுதிகளில் மட்டுமல்லாது வால்பாறை முழுவதும் பரவிப்படர்ந்திருக்க சாலையில் கடந்து சென்ற ஓரிரு வாகணக்கங்களிலிருந்த ஜனங்களின் முகத்தினில் கூட நிறைந்திருந்தது. ஆனால் ஜீப்பின் ஸ்டியரிங்கை அழுத்தமாகப் பிடித்திருந்தவன் முகத்தினில் மட்டுமல்லாது அகத்தினிலும் இதம் என்பது எள்ளளவும் இல்லாது ஒருவிதயோசனையேநிலைத்திருந்தது. இருந்ததைப் போன்றதொரு பிரம்மை. பார்ப்பவர்களால் அவனைப் பற்றிய கருத்துக்களை யூகிக்கமட்டுமே இயலும், கணிக்க இயலாது. காரணம் அகத்தைக் காட்டும் விழிகளைக் கருப்பு கண்ணாடி கொண்டு மறைத்திருந்தான். கருப்பு திரைவழி இவ்வுலகை அறிந்த அவனது விழிகளை, உலகம் காணும் வாய்ப்பு அரிதே. எப்பொழுதும் அவன் கண்ணின் உடன்பிறப்பாக அமர்ந்திருந்த அந்தக் கண்ணாடி அதுவும் கடந்த சில மாதங்களாக மட்டுமே….

 

அவன் கார்த்திகேயன்….

 

வால்பாறை என்ற பெயரே கார்திகேயனிற்குத் தித்திக்கும் இனிப்பான உணர்வுகளையும், சில கடந்துபோன கசந்துபோன உறவுகளையும் ஒருசேர தோன்றவைத்தது.பிறந்துவளர்ந்த வால்பாறை மலையோ மழலையின் இதமான நினைவுகளை மழைசாரலாய் தூவ, அந்நினைவுகளுடன் இனைந்து அதற்பின் நினைவடுக்குகளில் குமியத்தொடங்கிய உறவுகளின் பொய் பூசல்களும் நஞ்சான வார்த்தை கலவைகளும் கிடுகிடுவென அவனது இதயத்தை உலுக்க, கார்த்திக்கின் நெஞ்சமோ பூகம்பத்தில் சிக்கிய பூக்கொத்தாய் தொய்ந்து உலர்ந்தது.

 

வருவதற்குப் பிரியப்படாத நிலையிலும் வந்தே ஆகவேண்டிய சூழலை உருவாக்கியது அவனின் விதியோ அவளின் சதியோ என்று நூற்றி ஓராவது முறையாக மீண்டும் அடக்கப்பட்ட கோபத்துடன் எண்ணிக்கொண்டவனின் கவனத்தைச் சிதறடித்தது அருகினில் அமர்ந்து வந்துக்கொண்டிருந்த விக்ரமனது குரல்.

“ஜி என்ன எதுவுமே பேசாம வரீங்க. இவ்ளோ அமைதி ஆபத்து ஜி, ஆபத்து” என ஜீப்பில் நிலவிய அமைதிக்கு முற்றுப்புள்ளிவைத்து, பேச்சிற்குத் தொடக்கப்புள்ளி போட்டான்.

“ஆபத்தா? யாருக்கு?” எனத் தனது வலபிருவத்தை ஆள்காட்டிவிரல் கொண்டு லேசாக நெருடியபடி கேட்டவன் கார்த்திக்வே.

 

“என்ன அப்பத்தாவா? நான் எப்ப அப்படிச்சொன்னேன் ஜி. இதுல யாருக்கு அப்பத்தானு வேற கேட்குறீங்க. நான் ஆபத்துனு சொன்னேன்” என்று கார்த்திக் கூறிய ஆபத்தை, அப்பத்தா என்று புரிந்துக்கொண்ட விக்ரமன் கூற, இத்தனை நேரம் தான் போட்டிருந்த இருக்கமென்னும் முகமூடி களைந்து, புன்னகையைப் பூசிக்கொண்டான்.

 

“விக்ரம், உன் ஹியரிங் எயிட் எங்க?” எனப் புன்னைகையுடனும் செய்கையுடனும் வினவ, “ஜி, நம்ம என்னமாதிரி பிலேஸ்க்கு வந்திருக்கும், இங்க போய் அந்தச் செவிட்டு மெஷினை தூக்கிட்டு வர சொல்றீங்க. என் இமேஜ் என்ன ஆகுறது? எனக்கென்ன காதா கேட்காது, ஜஸ்ட் கொஞ்சம் முன்னபின்ன மிஸ் பண்ணுவேன், மத்தபடி நான் ரொம்ப நல்லாவே இருக்கேன்…என்னால அந்த மெசின் இல்லாமலே இருக்கமுடியும்.” என வீரப்பாக முறுக்கினான்.

 

“ஓ அதான் நான் ஆபத்துனு சொன்னதை, அப்பத்தானு புருஞ்சுக்கிட்டியா?”

 

“என்ன அப்பத்தாக்கு ஆபத்தா? ஜி என்ன சொல்றீங்க? நான் முதல்லயே உங்கட்ட கேட்டேன் யாரோட அப்பத்தானு, இப்போ ஆபத்துனு வேற சொல்றீங்க. என்னனு தெளிவா சொல்லுங்க ஜி”

 

“ஒண்ணுமில்லை, நீ கொஞ்சம் சைலெண்டா வா, இல்லேன்னா இங்கவே இறக்கிவிட்டுடுவேன்” என வாயில் கைவைத்துச் சமிக்கை செய்து மிரட்ட, அத்துடன் கப்சுப்வென அடக்கிவாசிக்கத்தொடங்கினான் விக்ரமன்.

 

விக்ரமின் அமைதிக்கு பிறகு கார்த்திக்கின் நெஞ்சம் மீண்டும் நினைவு புயலைகிளப்பிவிடவே மெல்ல அவனது நிம்மதி ஆட்டம்காண தொடங்கியது.

 

வழிநெடுகிலும் பார்த்தக்காட்சிகள் யாவும் தன்னுடைய அன்னையின் நிழலை பிரதிபலிக்க, தழுவிச்சென்ற காற்றோ தந்தையின் அரவணைப்பை உணர்த்திசென்றது. காட்சிகளும் காற்றும் கடந்து செல்வதுபோலவே அவர்களும் அவனைக் கடந்துசென்றுவிட்டார்கள். அவர்களின் அஸ்தமனத்திற்கு பிறகே அவனின் துயரங்களின் உதயம்.

 

எண்ணங்களின் பயணத்துடனே பயணித்தவன் தன்னுடைய பயணத்தின் நிறைவிடமாய் வந்துசேர்ந்தான் அந்தப் பெரிய எஸ்டேட்டிற்கு.

 

“முல்லை வனம்” என்ற எழுத்துக்கள் கருப்புப் பலகையில் பொன் நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருக்க, அதன் மீது பார்வையைப் பதித்தவன் தனது ஆள்காட்டிவிரலை வலபிருவத்தில் வைத்து நெருடியபடியே சிறு யோசனையை ஓடவிட்டான். பெரிய மரக்கதவை திறக்கும்படி காவலாளிக்குச் சமிக்கை செய்ய, இவனை யாரென்று அடையாளம் தெரியாதவன், ஜீப்பின் அருகினில் வந்து யார் என்றும் முல்லைவனத்தில் யாரை பார்க்கவேண்டும் என்று வினவ, நெஞ்சில் மூண்ட எரிச்சலை வெளிக்காட்டாது, “கார்த்திகேயன், உன் முதலாளியிடம் சொல்” எனக் கட்டளை போல் அவனது குரல் ஒலிக்க, காவலாளி இவனது தொனியில் ஏதோ தவறான கேள்வியைக் கேட்டுவிட்டோமோ என எண்ணியபடி அலைபேசியை நோக்கி சென்றான்.

 

தான் பிறந்து வளர்ந்த வீட்டிற்குள் வருவதற்குத் தான் யாரென்று அறிமுகம் தேவையாக இருப்பதையும், தன்னுடைய வீடாகவே இருந்தாலும் வரப்பிரியப்படாத சூழலில் தன்னை வரவைத்தவளையும் எண்ணி எண்ணி மனம் நொந்தான். தன் மனதினுள் “இது தனக்குத் தேவைதானா ? எத்தனையோ நபர்கள் இருக்கும்பொழுது எதற்காக நீ இங்கு வந்தாய் ? வேண்டாம் , இந்நொடி கூட இதிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு கிளம்பிவிடு” என எண்ணங்களை ஓட்டத்தொடங்கினான்.

 

எண்ணங்கள் ஓடத்தொடங்க, அது நிறைவு கோட்டை எட்டுவதற்கு முன்னதாகவே விக்ரமன், “ஜி இதுதான் உங்க வீடா ? சாரி சாரி பேலஸ் ஆ? இவ்ளோ பெரிய ஆளா ஜி நீங்க ? ஆனா ஒர்க் பிளேஸ்ல செம்ம ஹம்பல இருந்தீங்களே” என்ற கேள்வியை முன்வைக்க, “விக்ரம் நான் இப்போ என்னுடைய வீட்டுக்கு வரல, என்னுடைய வேலைக்காக வந்திருக்கிறேன். அது இந்த வீட்ல இருக்கவங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். ஆனா உனக்குத் தெரியும்தானே ?” எனச் சொல்லோடுசேர்த்து சமிங்கையும் செய்து வினவ, அவனின் கூற்றை ஆமோதித்து, “சாரி ஜி. புரியுது உங்க நிலைமை. ஆனால் ஒன்னுமட்டும் புரியல. அது என்னனா ‘என்னுடைய சேலைக்காக வந்துருக்கேன்” சொல்றீங்க. உங்களோட சேலை மீன்ஸ் என்ன பாஸ் ?” என அப்பாவியாக முகத்தை வைத்துவினவா, கார்த்திக் அடுத்து அவனைப் பார்த்த பார்வையில் குளிரிலும் கொதிக்கத்தொடங்கியது விக்ரமின் உடல்.

அதற்குள் காவலாளி வந்து, “அய்யா என்ன மன்னிச்சிடுங்க, நீங்க யாருனு தெரியமா விவரம் விசாரிச்சுட்டேன். நீங்கதான் சின்ன ஐயான்னு தெரியாம பேசிப்புட்டேன். பெரிய அய்யா சொன்ன புறவு தான் விவரதெருஞ்சதுங்க. எம்பொஞ்சாதி சொல்றபடி நான் ஒரு கூறுகெட்டவன்தான் போல. நீங்க முதல்ல உள்ள போங்க” எனக் காலில் விழாத குறையாக மன்னிப்புக்கோரி கதவை திறந்துவிட, கார்த்திக்கிற்கு நிகழ்பவை மீது சந்தேகம் படர்ந்தது…

 

கதவிலிருந்து வீட்டிற்குச் செல்லும்வழிகள் வண்ண வண்ண வளர்ப்பு பூக்களாலும், கைதேர்ந்த தோட்டக்கலைஞனால் செதுக்கப்பட்ட புல்வெளிகளாலும் நிறைந்திருக்க, அனைத்தையும் கண்ட கார்த்திகின் கண்களில் தன்னுடைய கடந்தகாலம் விரியத்தொடங்கியது.

 

வால்பாறையில் கைவிட்டென்னும் பணக்காரர்களில் ஒருவராக வாழ்ந்துவந்தவர் பிரபாகரன். பெரிய எஸ்டேட்க்கு சொந்தமான பரம்பரை செல்வந்தர். அதுமட்டுமல்லாது இரண்டு சிங்கக்குட்டிகளின் தந்தை. மூத்தவன் விஷ்ணு பிரபாகரன், இளையவன் கௌதம பிரபாகரன். மூத்தவன் தனது அந்தஸ்துக்கு ஏற்ப மற்றொரு எஸ்டேட்க்கு உரிமையாளரின் மகள் வசுந்தராவை மணமுடிக்க, கௌதம பிரபாகரனோ தனது மனதுக்கு ஏற்ற ஒருத்தியை தந்தையின் சம்மந்தம் பெற்று மணமுடித்தான். அவள் மலர். பெயருக்கு ஏற்றதுபோல மென்மையானவள். அவர்களின் டிரஸ்டில் படித்துவளர்ந்தவள். தன்னுடைய பெயருக்குப் பின்னால் இருக்கும் பி.ஏ என்ற பட்டத்தைத் தவிர வேறெதுவும் சொந்தமாக இல்லாதவள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு கௌதம பிரபாகரனின் உன்னதமான காதலுக்குச் சொந்தக்காரி. அவனின் மனைவி என்ற ஒன்றே அவளுக்கு இந்த உலகில் போதுமானதாக இருந்தது.

 

வசுந்தராவிடம் பணம் பரவிக்கிடந்த அளவுக்குக் குணம் இல்லாது போனது யாருடைய துரதிர்ஷ்டமோ . ஆனால் அதனால் பாதிக்கப்பட்டது கௌதம் மற்றும் மலரின் செல்ல மகன் கார்த்திக்.அந்த வீட்டின் ஒவ்வொரு கற்களும் தூண்களும் அங்கே உலாவிக்கொண்டிருந்த காற்றும் மலரின் மேன்மை குணத்தையும் கௌதம பிரபாகரனின் ஆளுமையையும் அறனையும் எடுத்துக்கூறும். அவர்களின் வாழ்வு கார்த்திக் வந்த பிறகு இன்னும் வசந்தமாக மாறியது. மூத்தவன் விஷ்ணுவுக்கும் வசுத்துராவுக்கும் பிறந்தவன் பிரகாஷ். கார்த்திகைவிட ஒரே ஆண்டு பெரியவன்.

 

மலரின் மீதும் மலரின் ஏழ்மை மீதும், திடீரென்று எஸ்டேட்டிற்குச் சொந்தக்காரியான அவளின் அதிர்ஷ்டமீதும் எப்போதும் தீராத வஞ்சத்துடன் இருந்து வந்த வசுந்தரா சமயம் கிட்டும்பொழுதுகளில் அதை கார்த்திக்கிடம் காண்பிப்பதுண்டு. பிரகாஷும் கார்த்திக்கும் ஒரே வீட்டின் பிள்ளைகள் என்றாலும் இருவருக்கும் பெரிய பிணைப்பொன்றுமில்லை. அவர்கள் இருவரையும் விளைக்கிவைக்கும் மாயத்திரைசேலை ஒன்றை வசுந்தராவின் செயல்கள் நெய்துவைத்திருந்தன.

 

என்னதான் பிணைப்பு இல்லாவிடுலும் அவர்களுக்குள் க்ரோதமோ விரோதமோ வஞ்சமோ எதுவும் வளரவிடாதபடி மலரின் செயல்கள் அமைந்திருந்தன. இவையனைத்தையும் எண்ணியபடியே அந்தப் பங்களாவின் போர்டிகோவை வந்து அடைந்திருந்தான் கார்த்திக்.

 

வந்துவிட்டான், எந்த வீட்டையும் உறவையும் வேண்டாமென்று உதறி தள்ளி சென்றானோ அந்த வீட்டிற்கே வந்திருக்கிறான். வந்துவிட்டானே தவிர, ஜீப்பிலிருந்து கீழிறங்குவதற்குக் கூட மனமற்றவனாய் அமர்ந்திருப்பவனைச் சுயத்திற்குக் கொண்டுவருவது விக்ரமின் வேலையாகிற்று.

 

“ஜி, வாங்க… என்ன யோசனை. நாம வந்து அஞ்சு நிமிஷத்துக்கு மேல இருக்கும். இறங்குங்க…” என்று உலுக்கியபடியே விக்ரம் கூவிக்கொண்டிருக்க, மெல்ல தனது சிந்தனையிலிருந்து கலைந்தவன், தனக்குள் ஒரு முடிவெடுத்தவனாக இறங்கினான்.

 

“இந்த வேலைய நான் தான் முடிக்கணும். எந்தவொரு விஷயத்துலையும் நான் பின்வாங்கமாட்டேன். அதோட, அவள் எதுக்குப் பதில் சொல்றாலோ இல்லையோ, எனக்குப் பதில் சொல்லி தான் ஆகணும்…நான் வந்துட்டேன் சவீ. ஆனா நீ பார்த்த கார்த்திக்கா இல்ல. நீ பார்க்கவே பயப்படுற கார்த்திக்கா வந்திருக்கேன். எல்லாத்துக்கும் பதில நான் கண்டுபிடிக்கிறேன்” என மனதினுள் எண்ணியவாறே அடியெடுத்துவைத்தான்.

 

அதற்குள் அவர்களை வரவேற்க பிரகாஷ் வாசலுக்கே வந்துவிட, ” கார்த்திக்? எப்படி இருக்க? அன்னைக்கு நடந்த சம்பவத்துக்குப் பிறகு நீ மறுபடியும் இந்த வீட்டுக்கு வராமலே போய்டுவியோன்னு பயந்துட்டேன். நீ வந்ததுல ரொம்பச் சந்தோஷம்டா. எப்படி இருக்க ? இத்தனை நாள் எங்க இருந்த ? என்ன பண்ணின” என அடுக்கடுக்காகக் கேள்விகள் பிரகாஷிடமிருந்து குதித்துக்கொண்டே இருக்க, இதை அனைத்தையும் ஓர் ஆராய்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக், “நீ ரொம்ப மாறிட்ட” என்ற சொற்களை மட்டும் உதிர்த்தான்.

“என்ன? என்ன சொன்ன கார்த்திக் ?” என்று புரியாமல் பிரகாஷ் வினவ,

“நீ ரொம்ப மாறிட்டனு சொன்னேன். நடுவில் ஆறு வருஷம் தானே நம்ம பார்க்கல. அதுக்குள்ள உன்கிட்ட இவ்ளோ மாற்றம்மா?”

“புரியுது கார்த்திக், நீ இங்க இருந்தவரை உன்கிட்ட நான் நிண்டுகூடச் சரியா பேசினது கிடையாது. நீ வீட்டைவிட்டுப் போகும்போது கூட உன்ன தடுக்கணும்னு தோணல. அவ்ளோ ஏன் உனக்குச் சாதகமா நிக்கனும்னு கூட அப்போ எனக்குத் தோணல. ஆனா இப்போ புரியுது. அன்னைக்கு என்னோட அமைதி உனக்கு எவ்ளோ பெரிய வலியும் வேதனையும் கொடுத்திருக்கும்னு.

 

என்ன மன்னிக்கமுடுஞ்ச மன்னிச்சிடுடா…” எனக் குரலில் விரக்தியோடு பேசியவனைப் பார்த்த கார்த்திக்கு அனைத்துமே விசித்திரமாகத் தோன்றியது. ஆனாலும் மன்னிப்புகோருபவனிடம்  வேறு என்ன செய்ய இயலும். அவனும் எதுவுமே நிகழாதவாறு அதைக் கடந்து செல்ல முற்பட்டான்.

 

“சரி விடு இவன் என் பிரண்ட் விக்ரம். விக்ரமுக்கு இங்க எஸ்டேட் வாங்கணும்-னு பிளான் இருக்கு. அதுக்காக தான் வால்பாறைக்கு வந்திருக்கோம். எனக்கு இங்க வரதுக்கு பிடிக்கல. இருந்தாலும் இவனுக்காக தான் வந்தேன். நான் இங்க வந்ததுல உனக்கு…?” என்று தான் சொல்லவந்ததை நிறைவு செய்யாது நிறுத்த, பிரகாஷோ “என்ன கார்த்தி ? இது என் வீடு மட்டுமல்ல. உன்னோட வீடும்தான். நீ இன்னும் பழையதை மறக்கலன்னு நினைக்கிறன். மறப்பது நிச்சயம் சிரமம் தான். ஆனா நடந்த எதுவும் உன்ன இந்த வீட்டுக்கு சொந்தக்காரன் இல்லனு சொல்லாது. ஏன் நீயே சொல்லமுடியாது. நீ இங்க வந்தது எனக்கு ரொம்பவும் சந்தோஷமான விஷயம்” என்று கூற கார்த்திக் சிறுதலையசைப்புடன் விட்டுவிட்டான்.

 

“ஹெலோ விக்ரம், வெல்கம் ஹோம். உங்களுக்கு வேணும்ங்கிற எல்லா உதவியும் நாங்கபண்றோம். வந்த காரியம் தடை இல்லாம நடக்கும்” என பிரகாஷ் வீட்டின் உரிமையாளனாய் விசாரித்துவிட்டு வாழ்த்துக்கூற, விக்ரமோ, “தேங்க்ஸ் பிரகாஷ் ஜி. ஆனா அது என்ன ஏதோ வடை னு சொல்றீங்க?” என பிரகாஷ் தடை என்று கூறியதை வடை என்று உள்வாங்கிப்படியே கேட்டுவிட்டு, மனதிற்குள் “லூசா இருப்பான் போல, எவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்கோம் இப்போ போய் வடை கிடைனு பேசிக்கிட்டு. சரியான சாப்பாட்டு ராமனா இருப்பான் போல” என்ன எண்ணிக்கொண்டான்.

“வடையா? நான் எப்போ அப்படிச் சொன்னேன் ? தடைனு தானே சொன்னேன் விக்ரம்” என வினவ, இதற்கும் விக்ரம் ஏதேனும் தவறாய் பதில்கூறாதபடி கார்த்திக் முந்திக்கொண்டு, “பிரகாஷ் லீவ் திஸ். அவனுக்குக் கொஞ்சம் ஹியரிங் ப்ராப்லம் இருக்கு. பட் ஹீ பீல்ஸ் இட் ரேர்லி” என அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளிவைத்தான்.

“ஓ” என்ற ஒற்றைச்சொல்லோடு முடித்த பிரகாஷ் என்ன எண்ணினான் என்பது அவனுக்குமட்டுமே வெளிச்சம்.

வரவேற்பறை தாண்டி அவர்களை அழைத்துச்செல்ல, விக்ரம் ஓர்நொடி அவ்வீட்டின் பிரம்மாண்டத்தில் ஆடிப்போனான். அவர்களை உபசரித்து அமரவைத்தவன், பணியாட்களை இவர்களுக்குப் பருக தேநீர் கொண்டுவரும்படி பணிக்க, கார்த்திக்கின் விழிகள் வீட்டில் நிகழ்ந்தேறியிருந்த மாற்றத்தை அளவிட்டுக்கொண்டிருந்தன.

 

“என்ன கார்த்திக் அப்படிப் பார்க்கிற?”

 

“இல்ல, உன்கிட்ட மட்டுமில்ல. வீட்லயும் நிறைய மாற்றங்கள்” என கார்த்திக் இன்னமும் பார்வையை விலக்காது கூற, “இரண்டுக்கும் ஒருத்தர் மட்டும் தான் காரணம்.  அவுங்களுக்கு உன்ன அறிமுகப்படுத்துறேன்” எனக் கூறிய பிரகாஷ், தேநீர் அளிக்க வந்த பணியாளிடம், “அம்மாவை நான் கூப்பிட்டேன் சொல்லு” எனக் கூற, விக்ரமும் கார்த்திக்கும் மாற்றத்திற்கான காரணம் பிரகாஷின் அம்மா என்று எண்ண, ஆனாலும் கார்த்திக்கின் மனதில், “இவன் அம்மாவை எப்படி என்னால மறக்கமுடியும்? இவன் எதற்கு அவுங்கள எனக்கு அறிமுகம் செய்யணும் ” என எண்ணியபடியே, வசுந்தராவை பார்ப்பதில் ஆர்வம்காட்டது தான் தேடி வந்தவள் எங்கேனும் தென்படுகிறாளா என நோட்டம்விட்டான்.

காத்திருக்கநேர்ந்த வேளையில் விக்ரம் தனது வாலெட்டை எடுத்து ஏதோ பார்த்துக்கொண்டிருக்க, பிரகாஷ் அவனோடு பேசும் நோக்கோடு, “அப்புறம் விக்ரம் நீங்க என்ன படிச்சிருக்கீங்க ?” என வினவ, அது சரியாக விக்ரமன் காதில் தவறாக விழுந்தது.

“என்ன பர்ஸ் வச்சுருக்கேன்னு கேக்குறீங்களா?”

“இல்ல விக்ரம், என்ன படிச்சுருக்கீங்கனு கேட்டேன்”

“அதைத் தான் நானும் சொல்றேன் பிரகாஷ் ஜி, இது பாஸ்ட் ட்ராக். நல்ல இருக்குல்ல ? என் சாய்ஸ் எப்பயும் பெஸ்டுதான்” எனத் தனக்குத்தானே பதில் கூறிக்கொண்டு தன்னையே புகழ்ந்துக்கொள்ள, பிரகாஷிற்கு ஏன் பேச தொடங்கினோம் என்று தோன்றியது. இருந்தாலும், விக்ரமின் பதிலில் சிரிப்பும் எட்டி பார்க்கவே, அவன் சிரிப்பு மலர்ந்த நொடி அவள் குரல் இசைபோல் ஒலிக்கக் கேள்வியுடன் வந்து சேர்ந்தாள், அவனின் மாற்றத்திற்குச் சொந்தக்காரி.

 

“நீங்களா சிரிக்கிறீங்க?” என வியப்பை காட்டி பெண்குரலொன்று ஒலிக்க, அக்குரலில் என்றும் போல் அன்றும் தன்னைத் தொலைக்கத் தொடங்கியவன் கார்த்திக்கேயனே.

 

“ஹ்ம்ம் நானே தான் உன்ன போலவே இவரும் என் சிரிப்புக்குக் காரணம் ஆகிட்டாரு….இங்க வா, இவுங்கள அறிமுகம் செய்றேன்” எனச் சிறுப்புனுடையே அவளை அழைக்க, அவளின் குரல் கேட்டு திரும்பிய கார்த்திக்கின் விழிகள் அவளது விழிகளை மட்டுமே கவ்விநின்றன.

 

அவனது மனதை ஆட்டுவிக்கும் வல்லமை கொண்ட குரலுக்குமட்டும் சொந்தக்காரியாக அல்லாது, அவனது பார்வையையும் எங்கும் அசையாது கட்டிப்போடும் விழிகளுக்குச் சொந்தக்காரியாகவும் இருந்தாள். முதல் நாள் பார்த்த பொழுது எப்படி உணர்ந்தானோ அப்படியே இன்றும் உணர்ந்தான். இல்லை அவள் அவனை உணரவைத்தாள். அதே மெல்லிசை குரல், அதே நேர்கொண்ட பார்வை. ஆனால் மாற்றம் இருந்தது அன்றுக்கும் இன்றுக்கும். அன்றையநாள் அவளைப்பற்றிய ஆராய்ச்சி கேள்விகள் சந்தோசத்துடன் நிறைந்திருக்க, இன்றோ அவளைப்பற்றிய ஆராய்ச்சி கேள்விகள் சந்தேகத்துடன் நிறைந்திருந்தன.

 

அவளது பூமுகத்தைப் பார்த்தவன் தனக்குள், “இவளா ? இவளா இப்படிச் செய்திருப்பாள்” என்று ஒருமனம் எண்ணம் கொள்ள, மறுமனமோ, “ஏன் செய்திருக்கமாட்டாள்? நானே இவளின் பொம்மலாட்டத்தின் பாவையாக வாழ்ந்தவன் தானே” என எண்ணியது.

 

இவையனைத்தையும் கார்த்திக்கின் நெஞ்சம் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் பிரகாஷோ, “கார்த்திக், என்னோட மாற்றத்திற்கானவங்களும், இந்த முல்லைவனத்தோட மாற்றத்துக்கு உரிமையுள்ளவங்களும், உன்முன்ன நிக்கிற இவுங்கதான்” எனக் கூறியபடியே, “அங்கே ஏன் திவான்க்கு பின்னாடி நிக்கிற, இப்படி நிற்காதனு எத்தனை முறை நான் சொல்றது. பார்த்து மெதுவா இடிச்சுக்காம இந்தப் பக்கம் வா” எனக் கூற மெல்ல அடியெடுத்துவந்தவளை பார்த்த கார்த்திக்கின் விழிகள் இமைக்கும் சக்தியை இழந்தவை போல அப்படியே நின்றன. ஏழுமாதங்கள் நிறைவுற்ற நிலையில் கருவுற்ற நிலவாய் அவன் முன்னிற்க, அதிர்ச்சியில் தன்னையும் மீறி இருந்த இடத்திலிருந்து எழுந்தவன், “சவீதா….” என்ற பெயரைமட்டும் உச்சரித்தபடி இத்தனை நேரம் அணிந்திருந்த தனது கருப்புக்கண்ணாடியை கழற்ற, இவன் சம்மந்தமே இல்லாது சவீதா என்று அழைத்து இப்படி அதிர்ச்சி அடைய காரணம் என்ன என்று பிரகாஷ் சிந்தித்தபடியே, “இவ சவீதா இல்ல. சக்தி” எனத் திருத்தும் செய்ய, கார்த்திக்கின் கண்ணாடி இல்லாத கண்களை ஆழமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

சவீதா என்றழைத்த கார்த்திக்கிடம் பெயரை திருத்தவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவளாய், பிரகாஷ் அழைத்ததன் காரணம் நினைவில்லாதவளாய், தன் முன்னே நின்றிந்த கார்த்திக்கின் ஒருவிதமான காவிகலந்த பழுப்பு நிறவிழிகளை விட்டு பார்வையை அகற்ற முடியாதவளாக நின்றிருக்க, கார்த்திக்கோ தான் வந்த பணிமறந்தவனாய், தான் நிற்கின்ற இடம்மறந்தவனாய், எதிரிலிருப்பவளை தவிர இவுலகமே மறந்தவனாய் குழப்பத்துடனும் கோபத்துடனும் ஏமாற்றத்துடனும் பார்த்துக்கொண்டிருக்க, விதி அவ்விருவருக்கும் பிணைத்திருந்த மாயமுடிச்சுப் பலம்பெற்றுக்கொண்டிருந்தது.

 

விக்ரமிற்குச் சவீதாவை அங்குச் சந்தித்தது அதிர்ச்சியே. அதிலும் கர்ப்பிணியாய் சந்தித்தது பெரும் குழப்பத்தை விளைவிக்க, தன்னைவிடத் தன்னுடைய நண்பன் கார்த்திக்கின் நிலைகண்டு தான் கவலை கொண்டான்.

 

இவை அனைத்தையும் பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருந்த விக்ரம், கார்த்திக்கின் நிலை உணர்ந்து, “ஜி…உங்களுக்கு மேரேஜ் ஆகிடுச்சா ?” என வினவ, அதிர்ச்சியின் உச்சத்திலிருந்த கார்த்திக்கை இந்தக் கேள்வியில் நிஜத்திற்குத் திரும்ப, பிரகாஷ் சொல்லப்போகும் வார்த்தைக்காகக் காத்திருக்கத் தொடங்க, பதில் கூற எடுக்கப்பட்ட நொடி அவகாசமும் யுகமாய் கார்த்திக்கின் நெஞ்சை கிழிக்க, இறுதியில் கார்த்திக்கின் நெஞ்சத்தை சூறையாடி சென்றன, பிரகாஷின் வார்த்தைகள்.

 “ஆகிடுச்சு விக்ரம்”.

 

Advertisement