Advertisement

மயிலிறகு – 4

 

நிமிர்ந்து பார்க்க, அங்கு நின்றவனோ, நேற்று அந்த பெண்கள் கூட்டத்தோடு வந்த சுடலை என்ற வழிக்காட்டி என்று அறிந்துக்கொண்டு ஸ்நேகமாக புன்னகைத்தாள்.

 

“மேடம், இங்க என்ன பார்த்திட்டு இருக்கீங்க ….” என்று கேட்க இழையினியோ எழுந்து , “இல்ல அண்ணா… இவுங்க எப்படி மால் கட்டுறாங்கனு பார்த்திட்டு இருந்தேன்…” என்று கூறினாள்.

 

“மாலா  அப்படினா என்னமா… ?” என்று சுடலை கேட்க, இழையினியோ அவனை நம்பாமல் ஒரு பார்வை பார்த்து விட்டு, “நீங்க நிஜமாவே ஒரு கைடுதானா ?”  என்று கேட்க, “மேடம், கைடு தான் இப்படி ஏன் சந்தேகம்… நான் இந்த ஊரு கைடு இல்ல.. என்கூட வந்தவங்க, கொடைகானல் ல என்ன கைடா பிடிச்சாங்க… என்னோட திறமையை பார்த்து, அவுங்க இங்கயும் கூப்பிடவும், நானும் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தேன் ,  இந்த ஏரியா பத்தி தகவல் சேகருச்சு சேகருச்சு கொடுத்திட்டு இருக்கேன்… அதுக்காக  நான் ஏமாத்துறேன்னு நினைக்காதீங்க… நான் சரியான  தகவல் சேகரிச்சு  தான் கொடுக்கிறேன்… என் தொழில் அவ்ளோ சுத்தம்.

 

அதான்  குளிர்னு கூட  பார்க்காமா, இப்படி அவுங்க எழுறதுக்கு முன்னாடி, நான் எழுந்து வந்து தகவல் சேகரிக்கிறேன்….” என்று கூற “ஒ” என்ற ஒற்றை சொல்லோடு நடக்க ஆரம்பித்தாள் கோத்தர்களின் குடிலை நோக்கி…

 

“மேடம், மால்-னா என்னனு சொல்லாமலே போறீங்களே….?” என்று வினவ ஒரு நிமிடம் நின்று அவளுக்கு தெரிந்ததை விவரிக்க தொடங்கினாள்.

 

“மால் – அப்படிங்கிறது ஏணி போல… தேன் எடுக்குறதுக்கு, இவுங்க பெரிய பெரிய கொடி எடுத்து அதுல மால் கட்டுறாங்க…. அதை ஏணி போல பயன்படுத்தி போய் தேன் எடுக்குறாங்க….

 

இங்க ஒரு முக்கியமான விஷயம் என்னனா… அந்த தேன் எடுத்து விற்க போறது ஒருத்தர் தான்… மற்றவங்கலாம் அவருக்கு துணை. கீழ நிற்கிற எல்லாருமே, தேன் எடுகுறவரோட மனைவியின் சகோதரர்கள்…

 

மால் கட்டறதுக்கு மனைவியின் சகோதரனை தான் இவுங்க அழைத்து செல்வாங்க… வேறு யாரையும் நம்பமாட்டாங்க…

 

அதுக்கு இவுங்க வழி வழியா ஒரு கதை கூட சொல்றாங்க…

 

அண்ணன் தம்பி ஏழு நபர்கள் இருந்த வீட்ல, ஏழாவது பிள்ளை எல்லாரவிட  சிறப்பானவனா இருந்ததுனால, அவனுடைய ஆறு அண்ணன்களும் பொறாமை பட்டு, இது போல தேன் எடுக்க கூப்பிட்டு போய் இருக்காங்க…

 

அவுங்க சதி தெரியாம, அந்த கடைசி பையன் போக… மால் கட்டும் போது சரியா கட்டாம விட, தேன் எடுக்க போன அவரு பாதாளத்துல விழுந்து இறந்துட்டாராம்….

 

அதுனால இந்த மக்கள் மால் கட்றதுக்கு அண்ணன் விட, மைத்துனன தான் அதிகம் நம்புறாங்க… காரணம், மைத்துனன்க்கு தான் தன்னோட சகோதரி வாழ்வுல அதிக அக்கறை இருக்கும்னு நம்புறாங்க… புரியிதா…” என்று கேட்க “ரொம்ப தேங்க்ஸ் மேடம்….” என்று சுடலை கூறினான்.

 

“நல்ல வேலை எனக்கு அண்ணன் தம்பின்னு யாரும் இல்ல…” என்று சுடலை வாய் விட்டு சொல்ல, இழையினி அவனை பார்த்து, “அண்ணா எல்லாரும் ஒரே போல இருக்கமாட்டாங்க….

 

தம்பிக்காக சகலத்தையும் விடுற அண்ணன்களும் இருக்க தான் செய்றாங்க… ஒரு கசப்பான சம்பவத்தை மட்டும் வைத்து எல்லாத்துக்கும் ஒரு முடிவு எடுக்க கூடாது… இது என்னுடைய கருத்து… ” என்று மென்மையாக கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

 

அவளிடம் சேகரித்த விஷயத்தை கொண்டு மற்றவர்களிடம் வருமானம் பார்க்கலாம் என்று சுடலை வேக நடை போட, ஆதவன் அவன் எதிரினில் வந்தான்….

 

ஆதவனை பார்த்த பிறகு தான்… அப்பெண்ணின் பெயரை அவர்கள் கேட்க சொன்னது நினைவு வர, அவளது பெயரை அடுத்தமுறை மறக்காமல் கேட்க வேண்டும் என்று குறித்துக் கொண்டான் சுடலை….

 

“சார்… அவுங்கள இப்ப கூட பார்த்தேன், ஆனா பெயர கேட்க மறந்திட்டேன்… அடுத்தமுறை கண்டிப்பா விவரம் தெரிந்து சொல்லுறேன்… ” என்று ஆதவனிடம் கூறிவிட்டு அவன் செல்ல போக ஏனோ ஆதவனுக்கு அவள் என்ன பேசி இருப்பாள் என்று தெரிந்துக் கொள்ள மெல்லிய ஆவல் பிறந்தது.

 

“ஒ … அப்படியா… இவ்ளோ சீக்கிரம் எப்படி பார்த்த…?” என்று சாதாரணம் போல வினவ, சுடலையோ ஏதார்த்தமாக, “இந்த பக்கம் என்ன ஏது இருக்குனு பார்க்க வந்தேன்… என் தொழிலுக்கு வேண்டி. அப்ப அவுங்களும் இருந்தாங்க… சரின்னு அந்த பெண் கிட்ட இருந்து ஒரு சில தகவல கேட்டுக்கிட்டேன்…

 

என் தொழிலை பார்க்கனும்ல சார்…” என்று கூற, அவள் என்ன பேசினாள் என்பதை போட்டு வாங்க முடிவெடுத்த ஆதவன், நாசுக்கானா பேச்சால், அவனிடம் இருந்து இழையினி கூறியதை அறிந்துக் கொண்டான்.

 

இது போல விஷயங்களை அறிந்துக்கொள்ளும் அவளது ஆர்வம், ஆதவனை  அவன் பால் சாயவைத்தது என்றால், அவள் அண்ணன் தம்பி அனைவரும் இப்படி பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பது இல்லை என்று கூறிய பண்போ அவளிடம் அளவில்லா மதிப்பை ஏற்படுத்தியது…

 

ஏனோ அவன் வாழ்க்கை பயணத்தில் அவள் இணைய வேண்டும் என்று அவனின் மனம் அந்த நொடி முடிவெடுக்க, வாழ்க்கை பயணம் என்ற சிந்தனை வந்தவுடன் அவள் பாதத்தடங்கள் பதிந்த அந்த சதுப்பு நிலமும், அவள் காலின் புகைப்படமும் அவன் கண் முன் நிழலாடியது….

 

உன் கால்தடம்

என் பாதையானதடி

இன்று வரை தனித்திருந்தேன்

ஒரு தீவாய்

அதில் உன் கால்தடம்

மலர்ந்ததடி பூவாய்

 

காதலே ஒரு தீவுதானோ?

மயிலிறகாய் பதிந்த உன் பாதம்

என் அணுக்களுக்கும்

தேடலை சொல்லிதந்ததடி

காதலெனுந் தீவினிலே

கால்பதித்த மயிலிறகே !!!

                                     — ராசி

 

“சரி … உன் பெயர் என்ன?.. ஹ்ம்ம் சுடலை சரிதான? ” என்று ஆதவன் கேட்க, “ஆமாங்க சார்…” என்று பவ்யமாக பதில் கூற “பணிவு, எல்லாம் இந்த பணம் செய்யும் வேலை” என்று ஆதவன் சுடலையின் பணிவை பார்த்து எண்ணிக் கொண்டான்.

 

அதன் பின், ஆதவன் மனதில் அன்று முழுவதும் அந்த பெண் அவ்வபொழுது தோன்றி தோன்றி மறைந்தாள்… ஆனால் அவன் வர சொல்லி இருந்த ஒரு சில ஆய்வாளர்கள் அங்கு வரவும், அவன் தொழில் தொடர்பாய் சுற்ற நேரிட்டது….

 

ஆதவன், அன்று முழுவதும் காளான் வித்து படுக்கை செய்யும் முறைகளை அறிந்த பின்னர், ஒரு வழியாக அவர்கள் தங்கி இருந்த விடுதிக்கு பொழுது சாயும் காலமாக வர, அங்கு இளன், மகிழன் மட்டும் அல்லாது சுடலையும் இருந்தான்….

 

பேசிக்கொண்டு இருந்த சுடலையை கேள்வியாக பார்த்து, பார்வை உயர்த்த, அதை புரிந்துக் கொண்ட இளனோ, “இல்ல அண்ணா.. பொழுது போகல… இவரு நிறைய விஷயம் சொல்றாரு… வெரி இன்ட்ரஸ்டிங்… ரியலி அண்ணா…” என்று கூறினான்.

 

“அப்படி என்ன…?” என்று வசதியாக சோபாவில் அமர்ந்துக் கொண்டு கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி வினவ, அவன் அமர்ந்த ராஜ தோரணையில் சுடலை எழுந்தே நின்றுவிட்டான்.

 

ஒரு சிறு சிரிப்போடு, ஆதவன் கை அமர்த்தி அவனை அமர சொல்ல, சுடலையும் தலையை சொரிந்துக்கொண்டே அமர்ந்தான்….

 

“என்னனு கேட்டேனே…” என்று மீண்டும் வினவ சுடலை சொல்ல ஆரம்பித்தான்….

 

“சார், அது வந்து…உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு… ” என்று சுடலை தயங்க, ஆதவனோ லெகுவாக, “சொல்” என்பது போல… மென்மையாக சிரித்து கூற மகிழனோ “அட எரிமலை, ஏ.சி காற்றை தருவது போல ஜில்லுனு சிரிக்கிறான்… ஒரு நாள்-ல என்ன நடந்திருக்கும்…?” என்று எண்ணமிட்டான்.

 

“சார்… இந்த கோயம்புத்தூர் பக்கம் பார்த்தசாரதின்னு ஒரு பத்திரிக்க காராவரு இருக்கிறாராம்..” – சுடலை.

 

“நாங்க என்ன இல்லனா சொன்னோம்.. மேட்டர்க்கு வா டா” – மகிழன் மனதினுள்.

 

“அவருக்கு, காதலையும், காதல் பண்றவங்களையும் சுத்தமா பிடிக்காதாம்… காதல கலாசார சீரழிவுன்னு நினைக்கிறவரு…” – சுடலை

 

“ஒரு வேளை காதல்ல பாதிக்கப்பட்டிருப்பாரோ… அதான்… அதே காரணம். நம்ம நல்லா இல்லாட்டி எவனும் நல்லா இருக்க கூடாது… என்னா நல்ல எண்ணம், வெரி குட் பாலிசி ” – மகிழன் மனதினுள்.

 

“அதுவும் பப்ளிக் இடத்துல, சில ஜோடிகள் அப்படி இப்படின்னு இருகிறத பார்த்துட்டா அவ்வளவு தான்… கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாரு… அவுங்கள போட்டோ எடுத்து பேப்பர்ல போட்டு கிழுச்சிருவாறு….” – சுடலை

 

“என்னா கொலைவெறி… ஆசையா இருந்தா பேப்பர் கிழி, அட நாலு வாழை இலைய கூட கிழிக்கவேண்டிதான…அத விட்டு மானத்த கிழிக்கிறாரு… வெரி டெரர் அங்கிள்” – மனதினுள் மகிழன்.

 

அவரு இவ்வளவு நாளா இந்த பக்கம் வரல, இப்போ இந்த திருவிழாக்கு தகவல் சேகரிக்க வந்திருக்காரு போல, இவர பத்தி தெரிந்த காதல் ஜோடிங்க… வேற இடத்துக்கு துண்டை காணோம் துணியை காணோம்னு ஓடுறாங்க… அத தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்…. ” என்று கூறி ஏதோ பெரிய நகைச்சுவை கூறியதுபோல சுடலை சிரிக்க, ஆதவனோ  இளனை பார்த்து ஒரு கண்டன பார்வையை செலுத்த, இளன் வேண்டா வெறுப்பாக லாப்டாப்பை எடுத்துக் கொண்டு வேறு அறைக்கு சென்றான்.

 

“காதல் ஜோடியா… நான் கூட எல்லாரயும் பிடிப்பாறோனு பயந்துட்டேன்.. பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடுறான்… பக்கோடா சாப்பிட்டவன் பல்லு குத்தட்டும்… நமக்கு என்ன? பல்லே கிடையாது… வயசு 29 ஆச்சு.. இன்னும் ஒரு பொண்ணுக்கிட்ட கூட அஞ்சு நிமிஷம் சேர்ந்தது போல பேசமுடியல…” என்று மனதினுள் சலித்துக்கொண்டான் மைண்ட் வாயிஸ் மகிழன்.

 

ஆதவனின் கண்டிப்பான பார்வைக்கு காரணம் இருக்கத்தான் செய்தது…. இளன், இடம்கொடுத்தால் மடத்தை பிடிப்பவன்…. அந்த வீட்டின் செல்ல பிள்ளை… எல்லோரிடமும் அவனுக்கு செல்லமே, நினைத்தது கிடைத்துவிடும் அனைவரிடம் இருந்தும்… ஆதலால் ஆதவன் மட்டுமே அவனிடம் கண்டிப்பு காட்டுவான்….

 

நிவன் உள்ளே சென்றவுடன், சுடலையும் “சார் நான் கிளம்புறேன்…” என்று கூற ஆதவனும் மகிழனும் சம்மதமாய் தலை அசைத்தனர்….

 

ஆதவனுக்கு அவள் நினைவு எழாமல் இல்லை… ஆனால் இனியும் சுடலையிடம் விசாரிப்பதை அவன் விரும்பவில்லை…  அவன் அவளை நேசிக்க தொடங்கி இருந்தான்… அவனே அவளை பற்றி அறிந்து, அவனது நேசத்தை வெளிபடுத்தியோ, அல்லது முறைப்படி பெண்கேட்டோ அவளை திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தான்.

 

அவளுடைய, குணமும், அவளை முதன் முதலில் பார்க்க தூண்டிய அவளின் பாதங்களும் அவன் மனதில் நின்ற அளவு, அவளது பிறை முகம் அவன் நினைவில் இல்லை. அதாவது, அவள் அழகை கண்டு மயங்காமால் அவளது பண்பைக்கண்டு அவனது மனம் அவளின்பால் சரிந்திருந்தது….

 

எப்படியோ… அவன் தீர்மானித்துவிட்டான்…. அவள் தான் அவனின் மனைவி என்று… இதில் மறுபடியும் யோசிக்க எதுவும் இல்லை என்று அவன் மனம் உளமாற நம்பியது….

 

அதே நேரம், இழையினி-க்கு அவளது அன்னை அழைத்திருந்தார்…. “பாப்பா…. நம்ம இதழ்-க்கு நாளை 11 மணியோட போட்டி முடியும்… நம்ம இதழ் வந்ததும் நீங்க ரெண்டு பேரும் வெரசா கிளம்பி, வந்துருங்க… உங்க அப்பா-வோட அக்கா வந்துருக்காங்க டா…அவுங்க வந்தா எப்படி நடந்துப்பாங்கனு உனக்கு தெரியும் தானே… அதுனால வந்திடுங்க டா…” என்று சற்றே உள்ளே போன குரலில் மகளிடம் மரகதம் கூறிக்கொண்டு இருந்தார்.

 

அம்மாவின் உள்ளே போன குரலிலே இழையினி-க்கு புரிந்துவிட்டது. அவளது அத்தை பாக்கியம் தான் இதற்கு காரணம் என்று… இன்னமும் பெண் பிள்ளைகள் வெளியில் செல்வதை ஒப்புக்கொள்ளாத பெண்மணி. ராகவனின் ஒன்றுவிட்ட அக்கா முறை.

 

வெளியில்… ஏன் படிப்பிற்காக கல்லூரி செல்வதை கூட தவறானா கண்ணோட்டத்தில் பார்ப்பவர். “பொம்பள பிள்ளைய வெளிய அனுப்புருயே… அது போய் காதலு, கன்றாவினு பண்ணிட்டு வந்தா, அப்புறம் நீ இப்ப இருக்கது போல திமிரா தலை தூக்கிட்டு இருக்க முடியாது…. தம்பி இந்த அக்கா சொல்றது உனக்கு புரியாம இருக்கலாம்… ஆனா ஒரு நாள் ஊர் முன்னாடி தல குனிந்து நிற்ப. அப்பதாண்டா, என் அருமை உனக்கு புரியும்…. ” என்று பாக்கியத்தின் வார்த்தைகள் நெருப்பு துண்டுகளாய் வந்து விழும்.

 

இது பாக்கியம் பேசுவதில் ஒரு சதவீதமே… அக்கா என்று மரியாதை நிமித்தம் பொறுமையாய் போகும் ராகவனுக்கும், ஒரு நாள் கோவம் கரைபுரண்டது…. சரியாக ஆறு மாதங்களுக்கு முன், இது போல பாக்கியம் வார்த்தைகளை வாரி இறைக்க, தனது பெண்னை குறை சொல்வதை வழக்கமாய் கொண்ட அக்காவின் மீது கோவப்பட்டு ராகவனும் பேச, பாக்கியம் மூக்கை உறுஞ்சிக் கொண்டு அவர் வீட்டிற்கு நடையை கட்டினார்….

 

அதன் பிறகு இப்பொழுது தான் வந்து இருக்கிறார் பாக்கியம்…. வராமல் அவராலும் இருக்க இயலாதே… தம்பியின் மூலம் வரும் வருமானம் ஆறு மாதம் தடைப்பட்டதையே அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை

அவரின் திடீர் வரவிற்கு காரணம் அறியாத இழையினியோ அன்னையிடம்  கேட்க, “பாப்பா, உன் கல்யாண பேச்சு ஓடுதுல, அதை காரணம் வச்சு தான்… இவுங்க இப்ப வராமல் போனாலும், நம்ம உறவுக்காரங்க ஏதாவது சொல்லுவாங்க… அதுனாலா தான் இவுங்க வந்தத அப்பா பெருசா எடுத்துக்கல…. அவரோட அக்காவ விட்டுட்டு நம்ம விஷேஷத்த செய்யவும் முடியாது….

 

ஆனா இவுங்க வந்தது இருந்து…ஒரே கேள்வி.. ‘எப்படி உங்க பொண்ணுக்கு காதல் கீதல்-னு லாம் ஒன்னும் இல்லையா….’அப்படி இப்படி னு பேசுறாங்க பாப்பா… உங்க அப்பா-க்கு தான் கோவம் மூக்கு மேல வருது.

 

வெளில போ-னு சொல்லமுடியாம தவிக்கிறாரு… சரி அத விடு பாப்பா… சிலர் இப்படி தான்… நீங்க பாத்து பத்திரமா வாங்க…” என்று கூறி அழைப்பை துண்டிக்க, இழையினிக்கு அவள் அத்தை பாக்கியத்தை நினைத்து மனதில் ஏந்த முடியாத அளவு கோவம் வந்தது….

 

பாக்கியம் ஏன் தொடர்ந்து இப்படி பேசுகிறார் என்பது இழையினி அறியாத ஒன்று இல்லை… இப்படி பேசி தம்பியின் மனதில் மகளை பற்றிய பயத்தை விதைத்து, கல்லூரிக்கு அனுப்பவிடாமலே  அவருடைய குடிக்கார மகனுக்கு திருமணம் செய்யவே.. ஆனால் ராகவன் அவரின் அக்காவின் பேச்சை மதிக்காது, மகளை படிக்க வைக்க, அன்று இருந்து இது ஆரம்பம் ஆனது….

 

முடிந்த அளவு அவரது பேச்சைக் கொண்டு மற்றவரை துன்புருத்துவத்தில் அத்தனை இன்பம் பாக்கியத்திற்கு…. வந்த கோவத்தோடு அவள் மனதினுள், “இப்படி பேசுற ஒருத்தவங்க முன்னாடி, என் அப்பா எப்பொழுதும் தலை குனியவே கூடாது… அப்படி ஒரு விஷயம் எப்பயும் நடக்கவும்  கூடாது…” என்று நினைத்துக்கொண்டாள்.

 

அவள் நினைவிலே அத்தனை உறுதி இருந்தது…. “என் அப்பா… நிறைந்த சபை ல… எங்க அப்பா பார்க்கிற பையன அவருடைய வார்த்தைக்காகவே கல்யாணம் செய்துக்கணும்… அப்படி நடக்கிற நிமிஷம், அந்த பாக்கிய அத்தை அடுத்த முறை என் அப்பா கிட்ட இது போல இன்னுமொரு முறை பேசக் கூட  யோசிக்கணும்… ” என்று எண்ணமிட்டவள், அவள் திருமணத்தன்று, பாக்கியத்தின் பேச்சுக்கு ஒரு முடிவுக்கட்ட நினைத்தாள்.

 

பாக்கியத்தை பற்றிய எண்ணத்தில் உழன்றவள், கல்யாணக் காரியம் என்று  மரகதம் சொல்லி இருந்ததை கருத்தில் போட்டுக்கொள்ளாமல், தனது கைபேசி எடுத்துக் கொண்டு சிறிது தூரம் நடக்க விழைந்தாள்.

 

அதே நேரம் ஆதவனும், அவளின் எண்ண அலையில் புரண்டவன், அவளை சந்தித்தால் தான் என்ன என்ற எண்ணம் தோன்ற, அவனும் அவனது விடுத்தி விட்டு வெளியில் வந்தான்….

 

இருவரும் எதிர் எதிர் திசையில் ஒருவரை நோக்கி ஒருவர் முன்னேற, அவரவர் அவரவரின் எண்ணங்களில் மூழ்கி இருந்தனர்… அப்பொழுது நேரம் இரவு ஏழு மணியை நெருங்கி இருந்தது. அன்று பௌர்ணமி என்பதனால் நிலவின் வெளிச்சம் பூரணமாக எங்கும் நிறைந்திருந்தது…

 

அந்த பழங்குடியினர் மாலை ஆறு மணிக்கே அவர்களது குடிலுக்குள் தஞ்சம் புகும் வழக்கம் கொண்டவர்கள்… ஆனால் இழையினிக்கு தான் ஆறு மணிக்கே உறங்க செல்வது பெரும் விந்தையாய் இருந்தது…

 

ஓரிரு நாட்கள் அதை கடைப்பிடித்தவள், இன்று தனது அன்னை பேசியபின் , பாக்கியத்தை பற்றிய சிந்தனையில் நடக்க துவங்கினாள். ஆனால் அவள் நடக்க ஆரம்பித்த சிறுது நேரத்திலே, அந்த இயற்கை அழகு அவளது மனதின் பாரத்தை குறைத்து, லேசாக உணரவைத்தது. பெரிய பெரிய மரங்களின் இடைவெளியில் பாய்ந்து வந்த நிலவு வெளிச்சம் சிறு சிறு வட்டமாக ஆக்காங்கே விழுந்து, ஒரு சில இடத்தில் நிழலும், ஒரு சில இடத்தில் வெளிச்சத்தையும் பிரதிபலித்தது…..

 

இப்பொழுது ஆதவனும், இழையினியும் சற்று நெருங்கி வந்துவிட, இருவரும் எதிரில் வருபவரை கவனிக்க தவறினர்….

 

அப்பொழுது உதிர்ந்த இலை சருகுகள் சரசரக்க, இழையினி முதலில் சுதாரிக்க வில்லை… ஒரு சில நிமிடங்கள் அந்த சலசலப்பு சப்த்தம் நீடிக்க, இழையினி இப்பொழுது சுதாரித்து அக்கம் பக்கம் கண்களை சுழல விட சற்று தொலைவில் ஒருவன் வந்துக்கொண்டு இருந்ததை கவனித்தாள்.

 

வந்துக்கொண்டு இருந்தவன் ஆதவனே…. ஆதவனுக்கோ அந்த அதிகபடியான சப்த்தம் எதனால் வருகிறது என்று யோசனை தோன்ற, சப்த்தம் வந்த திக்கில் பார்த்தவன், அங்கே ஒரு பெண் சுற்றும் முற்றும் பார்த்துகொண்டு இருந்தது தெரியவந்தது…  

 

இழையினியின் முகம் ஆதவனுக்கு சரியாக அந்த நிலவு வெளிச்சத்தில் தெரியவில்லை… ஆனால் அவள் பதட்டமாக அங்கும் இங்கும் திரும்பி பார்த்து  கொண்டு இருப்பதை கவனித்தவன், அவனுக்கு எட்டிய சப்த்தம் அவளுக்கும் கேட்டிருக்கிறது என்று புரிந்துக்கொண்டான்…

 

அவள் யார் என்பதை ஆராய முற்பட்ட நேரம் சலசலப்பு அதிகமாகவே, அவனுக்கு இது போல சப்தத்தின் பின்னால் வரும் ஆபத்து ஓரளவு தெரிந்திருந்ததால், சப்த்தம் வருவதற்கு காரணம், காட்டு முள்ளம்பன்றி என்று கண்டுக்கொண்டான்.

 

முள்ளம்பன்றி, தொந்தரவு செய்யப்பட்டால் அல்லது அச்சமுற்றால் முள்ளம்பன்றி தனது முட்களை உயர்த்தி நிமிர்த்தி எதிரியை தாக்கும் என்பதை அறிந்த ஆதவன், அவர்களை பார்த்து அது அச்சம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்ற சிந்தனையோடு அவன் இழையினியின் முன் வேகமாக வர, அதே நேரம் புதரில் இருந்து வெளிப்பட்ட முள்ளம்பன்றியும் அவளுக்கு வெகு அருகில் நின்றது.  

 

வெளியில் வந்த முள்ளம்பன்றி, இழையினிக்கு பின்னால் இருக்க… ஆதவனை நோக்கி நடந்துக் கொண்டு இருந்த இழையினியோ, சட்டென்று அவளுக்கு வெகு அருகில் பின்னால் ஏதோ வந்ததை உணர்ந்து திரும்ப, இப்பொழுது முள்ளம்பன்றியும், இழையினியும் பார்த்தவாறு நிற்க…. இழையினியின் முதுகு புறம் ஆதவனை நோக்கி இருந்தது…..

 

முள்ளம்பன்றி வெளியில் வந்த பிறகும் மறு திசையில் இருந்து சலசலப்பு நீடிக்க, இப்பொழுதும் சப்த்தம் வருவதற்கு காரணம் தெரியாமல் ஆதவன் குழம்ப, வெளிறிய முகத்தோடு இழையினி பின் நோக்கி நடக்க தொடங்கினாள்.

 

முள்ளம்பன்றியை பார்த்தவாறு நடுங்கிய உடலுடன் நின்ற இழையினி, ஆதவனுக்கு இப்பொழுது முதுகு காட்டி நின்று இருந்தாள். அவளது இதழ்கள் பிரிந்து ஒரு முறை, “அப்பா… ” என்று மட்டும் கூற, விடாது ஒலித்துக் கொண்டு இருந்த சலசலப்பில் இப்பொழுது முள்ளம்பன்றி அச்சம் கொள்ள தொடங்கி இழையினியை அதன் எதிரியாகா பாவித்தது…

 

அது விரைவாகப் பின்னோக்கிச் சென்று  தன் பின்புற முட்களினால் இழையினியை மோதித் தாக்க முனைந்த வேலை அதை முன்பே யூகித்தவனாக, ஆதவன் மின்னல் வேகத்தில் இழையினியை இழுக்க, அதே சமயம் இதுவரை கேட்டுக் கொண்டு இருந்த சலசலப்பும் அடங்கி இருக்க,  ஆதவனே எதிர்பாராத நிகழ்வு ஒன்று அங்கே அரங்கேறியது… விதியின் ரூபத்தில்.

 

Advertisement