Advertisement

மயிலிறகு – 6

 

சங்கலியை அணிவித்தவன், சங்கலியை எடுத்து கையில் பிடித்தபடி, “இங்க பாருங்க… இது வெறும் செயின் மட்டும் தான்…” என்று குரலை தனித்து, இழையினிக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தான்…..

 

அவர்களை விட்டு, சற்று பின்னால் சென்று இருந்த பார்த்த சாரதிக்கு, ஆதவன், இழையினிடம் பேசியது கேட்காமல், அவரிடம் ஆதவன் கூறியது மட்டுமே கேட்டிருந்தபடியால், ஆதவன் கூறிய செய்தியின் பொருளை உணர்ந்தவர் ஒரு நிமிடம் கண்கள் இடுங்க அவர்களை பார்த்தார்….

 

ஒரு நிமிடம், அவரது சிறு கண்கள் கொண்டு அவர்களை கூர்மையாக கவனித்தவர், ஆதவனிடம், “இது வரைக்கும் பார்த்த ஜோடியை விட நீங்க கொஞ்சம் வித்தியாசமானவங்க தான்…. சரி நீ சொல்லறத நான் நம்புவதற்கும் இப்போ என் மனசு தயாரா இருக்கு…

 

ஆனா….” என்று கூறி பார்த்த சாரதி வாக்கியத்தை பூர்த்தி செய்யாமல் கேள்வியாக இழுக்க, ஆதவனோ சலித்து போன குரலில், “இன்னும் என்ன தான் வேணும்…” என்று கேட்க, இழையினியோ அவளது இந்த நிலையில் இருந்து எப்படி தப்பிப்பது என்று குழம்பி நின்று இருந்தாள்.

 

“ரொம்ப சிம்பிள்… என்கூட இன்னும் ஒரு 10 அடி தூரம் வாங்க…. அங்க வந்ததும் உங்களுக்கே புரியும்… அதுக்கு பிறகு, நான் சொல்ற சின்ன விஷயத்த செய்தா போதும்…. உங்ககிட்ட மன்னிப்பு கேட்டு, இந்த ஆதரங்கள அழித்துவிட்டு… நான் போய்டறேன்…” என்று கூற, அப்போது தான் இழையினிக்கு சீராக மூச்சு வந்தது…..

 

அவர் கூறுவதையெல்லாம் ஏன் கேட்க வேண்டும் என்று ஆதவன், இழையினி மனதினில் தோன்றினாலும், அவர்கள் இணைந்திருக்கும் புகைப்படம் அவர் கையில் இருப்பதால், வேறு வழியற்று அவர் முன்னே நடக்க, அவரை பின்தொடர்ந்தார்கள்….

 

இழையினிக்கு, தெரியாத இருவருடன் செல்கிறோம் என்ற பயம் இல்லை… அதற்கு அவளிடம் இரு காரணங்கள் இருந்தன. ஒன்று இன்னும் 10 அடி தூரம் என்று அவர் கூறியது, கோத்தர்களின் குடில் பகுதி நோக்கி தான்… ஆதலால் இன்னும் சற்று முன்னேறினால், ஏதேனும் ஆபத்து வந்தாலும் அவர்களிடம் தஞ்சம் செல்லலாம்… அதோடு இன்னும் 10 அடி தூரத்தில் இருக்க கூடிய இடம் எல்லை சாமி கோவில் தான்… இவை அனைத்தும் இழையினிக்கு சற்று பலத்தை கூட்ட, அமைதியாக நடைப்போட்டாள்….

 

அதே சமயம், அவர் சொல்வதை கேளாமல் இப்பொழுதே கோத்தர்கள் இருக்கும் பகுதியிற்கு சென்றால் என்ன என்று தோன்றினாலும், அவர்களிடமும் இப்புகைப்படத்தை பற்றி பேசவோ, அதை மற்றவர்கள் பார்க்கவோ இழையினி விரும்பாததால் மௌனமாகவே அவர்களுடன் சென்றாள்…

 

இழையினியின் எண்ணம் இவ்வாறாக ஓட, ஆதவனோ, “எனக்கு கல்யாணம் மீது இதுவரை ஈர்ப்பு வந்தது இல்லை… அப்படி வருவதற்கு காரணமா இருந்தது அந்த பெண்னோட பாதம்.. ஏதோ வகையில் எனக்கு அவளை பார்க்கும் ஆர்வமும், அதன் பின் அவள் பேசிய வார்த்தைகளும் அந்த பெண்ணை என்னோட மனசு நேசிக்க ஆரம்பிச்சிடுச்சு….

 

ஆனா அவளோட பாதத்தையும், அவளோட பேச்சையும் ரசிச்ச நான், அவளோட முகத்தை ரசிக்கல… அது ஏன்னு எனக்கு தெரியல… இது என் கூட வர இந்த பெண்ணோட முகத்தை பார்த்த பிறகு, ஏனோ நான் காதலிக்கிற பெண் மீது தோணாத இனம் புரியா உணர்வு, கொஞ்சம் முன்னாடி பார்த்த இந்த பெண் மீது தோணுது….

 

இங்க வந்து இரண்டே நாட்கள்-ல ஏன் என் மனசுல இவ்ளோ போராட்டம்…

 

அதோட ஏன் இப்ப நான் இவர் பின்னாடி போறேன்….?

 

இல்லை, என்னால எந்த பெண்ணிற்கும் கெட்ட பெயர் வரக்கூடாது… அது தான் காரணம்…” என்று அவனது மனம், வாதம், பிரதி வாதம் என்று இரு தரப்பிலும் அதுவே வாதாடிக் கொண்டு இருந்தது…..

 

அவரவர் எண்ணப்போக்கில், அவர்கள் சேரவேண்டிய இடம் வந்தது…

 

எல்லை சாமி கோவில் வந்ததை மினுக் மினுக் என்று மெலிதாக எரிந்துக்கொண்டு இருந்த அகல்விளக்கே பறைசாற்ற, அவர்கள் அவ்விடத்தை நெருங்கினர்….

 

அங்கு வந்ததும் பார்த்தசாரதி, அவரது கையில் வைத்திருந்த டார்ச்சை உயரபிடித்து அங்கு இருந்த சிறு கிளைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்க்க, இழையினியின் இதயம் நின்றே விட்டது….

 

மீண்டும் அவள் இதயம் துடிக்க ஆரம்பித்துவிட்டதா என்றுக்கூட தெரியவில்லை…. அவளது மான் விழிகள், அவர் அவிழ்த்து வந்து ஆதவன் கைகளில் திணித்த மஞ்சள் கயிற்றின் மீதே நிலைத்திருந்தது….

 

அந்த சிறு விளக்கின் ஒளியிலும், ஆதவனது திகைத்த விழிகளும், இழையினியின் பதட்டமான மான்விழிகளும் ஒருவரது திகைப்பை மற்றவருக்கு தெளிந்த நீராக எடுத்துக் காட்டியது….

 

“ஒரு பெண் மனதில் இருக்கும் போது எப்படி, இன்னொருத்தியின் கழுத்தில் இதை கட்டுவேன்” என்று எண்ணமிட்ட ஆதவனது கண் முன்னால் அவன் பார்த்த பாதங்கள் நினைவு வர தொடங்கியது….

 

அவள் பாதத்தில், அந்த கணுக்கால் மச்சத்தில், மயிலிறகாய் இருந்த குதிங்கால் வடிவில், அவனை தொலைத்துதான்… அவள் பின்னே, அவளை தேடி சென்றான் ஆதவன் அன்று….

 

அவன் தம்பியின் மூலம் அவன் கண்டுக்கொண்ட பெண்… அகன்ற விழிகள், தோளை தாண்டி சரிந்து விழுந்த கட்டப்படாத கூந்தல், நவநாகரீக மங்கையாய், உடலோடு ஒட்டி இருந்த அவளது மஞ்சள் நிற சுடிதார்….  பேசும் பொழுது மாதுளை மலராய் குவிந்து விரியும் அவளது அதரம், சாயம் பூசப்படிருந்தாலும், அதுவும் அவளுக்கு அழகாவே இருந்த… அவளது உதட்டின் சாயம் என்று அவன் பார்த்த பெண்ணை ஆதவன் கண் முன் நிறுத்தினான்…..

 

ஆனால் அத்தனை அழகான பெண்ணை , ஆதவன் அவள் அழகிற்காக விரும்பவில்லை….

 

ஒரு சிறு கணுக்கால் மச்சத்தில் அவன் தொலைந்ததனால், இந்த தேடல் தொடங்கியது அவனுள்…

 

சுடலை மூலம் அறிந்துக் கொண்ட அவளது குணங்கள்….அவள் அழகு அவனது மனதில் பதிய வில்லை…என்றாலும் கூட , அவள் குணம்,  அவன் மனதை சுண்டி இழுக்க தான் செய்தது…. இப்படி அவன் மனம் அகப்பட்டுக் கொண்டு இருக்க, இப்போது பார்த்த இப்பெண்ணின் முகத்தை விட்டு ஆதவனால் விழி விளக்க முடியவில்லை…. அவனுக்கு காரணம் விளங்கவில்லை… இரு பெண்கள் மீது நேசமா ? என்ற எண்ணம் தோன்ற, அந்த நொடி ஆதவன் அவனை வெறுத்தான்…..

 

மறுகணமே…. அந்த கணுக்கால் மச்சத்தின் வழி அவன் மனம் பயணிக்க, இப்போது புதிதாக இருக்கும் இப்பெண் மீது அவனுக்கு அளவில்லா கோவம் வந்தது….

 

அவனது மனதால், அவனது நிலையை சரிவர உணரமுடியாததால், இப்படி ஒரு சிக்கலில் தகிக்க எதிரில் நிற்பவளே காரணம் என்று தோன்ற, ஆதவனுக்கு ஏனோ அவன் முன் மலங்க விழித்து நின்ற இழையினியின் மீது கோவம் வந்தது….

 

ஆதவனது எண்ணம் இவ்வாறாக இருக்க, இழையினியின் மனத்திரையில் அவளது தந்தை ராகவனும், சற்று முன் தாய் கூறிய அவளது அத்தையும் கண் முன் நிழலாட, முள்ளில் விழுந்த சேலையாக அவள் நெஞ்சம் தவித்துக்கொண்டு இருந்தது…..

 

தனது தங்கைக்கு மட்டும் கிளம்பும் தருவாயில் அந்த அழைப்பு வராமல் இருந்திருந்தால், இந்நேரம் அந்த போட்டி இல்லாது இருந்திருந்தால், நிச்சயம் இப்படி ஒரு சூழலில் அவள் சிக்கி இருக்க தேவை இல்லை என்ற எண்ணம் எழாமல் இல்லை இழையினியின் மனதினில்….

 

இவர்களின் மனப்போராட்டம், அவர்களது முகத்தில் பிரதிபளித்ததோ…. என்று எண்ணும் அளவு எதிரில் இருந்த பார்த்த சாரதி அவர்களை கண்டுக்கொண்டார்…

 

“என்ன… நீங்க சொல்றத அப்படியே நம்புவேன்னு நினைத்து தான இத்தனை கதையும்… உங்கள போல எத்தனை பேர பார்த்து இருப்பேன்… என்னோட அனுபவம் தான் உங்கள் வயசு… அதை நினைவு வைத்திருந்தா இவ்ளோ பொய் சொல்லி இருக்க தேவை இல்லை…. ” என்று கூறி கடகடவென சிரித்தவர் அவரது கைபேசியில் இருந்த புகைப்படத்தை அவர்களிடம் காட்ட, இழையினி திக் பிரம்மை பிடித்து நின்றாள்.

 

அந்த புகைப்படத்தில் ஒரு படத்தில், ஆதவன் மீது இழையினி வானத்தை பார்த்து படுத்திருப்பது போல, அதை கண்டதும் இழையினி ஆதவனுக்கு பெரிதாக யூகிக்க அவசியம் இல்லாது அவர்கள் விழுந்தவுடன் எடுத்த புகைப்படம் தான் அது என்று அறிந்துக்கொண்டனர்….

 

மற்ற இரண்டு மூன்று புகைப்படங்கள், இழையினி மீது ஆதவன் இருப்பது போல…. இவை அனைத்தும் விபத்தாக இருந்தாலும், படத்தை பார்ப்பவர்களுக்கு நிச்சயம் விபத்து என்ற எண்ணம் தோன்றா…. இந்த துயர நிலையிலும் இழையினிக்கு ஒரு ஆறுதல் என்றால், அது அவளது ஆடை கிழிந்திருப்பது எந்த புகைப்படத்திலும் அதிர்ஷ்டவசமாக பதிவாகாமல் போனது தான்….

 

இழையினிக்கு அப்புகைப்படத்தை பார்த்ததும் அவள் பார்வையை மறைக்கும் அளவு கண்ணீர் அவள் விழிகளில் நிறைந்திருக்க, சிறு சிறு முத்துக்களாக அது உதிர தொடங்கிய நேரம், ஆதவனுக்கு அவள் கண்ணீர் துடைக்கும் எண்ணமே மேலோங்கியது….

 

அந்த புகைப்படத்தினால், ஆதவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் தலை குனிவே…ஆயினும் இழையினியின் கண்ணீர் அவனுக்கு அந்த கணம் பெரிதாக பட்டது…. தான் காதலிக்கும் பெண்னையே மறக்கவைக்கும் அவள் விழி மீது அவனுக்கு கோவம் துளிர்த்தாலும், அந்த விழிகள் கண்ணீர் உதிர்ப்பத்தையும் அவனால் ஜீரணிக்க இயலவில்லை….

 

அதற்கான காரணம் அவனுக்கு கொஞ்சமும் புரியவில்லை….

 

மான் விழிகளில்

மழை பெருகியதோ ?

மன்னவனது நெஞ்சம்

அதில் மெல்ல கரைந்ததோ;

 

அகிலத்தையும்

அவன் மறந்துபோகும்

வல்லமை கொண்டனவோ  

அவளது கண்ணீர் துளிகள்

 

கன்னி அவள்

கண்ணீரை துடைக்க, அவன்

கைகள் உயருது அவள்

கன்னத்தை நோக்கி

உரிமை இல்லாத போதினிலும்….

 

                                                       — ராசி

அந்த நேரத்தில் ஆதவன் எதையும் சிந்திக்கவில்லை… என்ன செய்தால், அவள் மான்விழி கண்ணீரை நிறுத்தும் ? அந்த புகைப்படம் அழிந்தால் மட்டுமே….

என்ன செய்தால் அந்த புகைப்படம் இல்லாமல் போகும், இந்த மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் இட்டால் மட்டுமே….

 

இவை யாவையும் வாயுவின் வேகத்தில் எண்ணிமுடித்தவன், அவனது கையில் இருந்த மஞ்சள் நாணை, அவளது கழுத்தில் தாமதிக்காது கட்டியேவிட்டான்… எல்லை சாமி முன்னிலையில்….

 

நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில், ஆதவனது கைகளினால், இழையினியின் கழுத்தில் மஞ்சள் நாண் அரங்கேறி இருந்தது….. இதை இழையினி மட்டும் இல்லாது பார்த்த சாரதியே எதிர்ப்பார்க்கவில்லை என்று அவரது இடுங்கிய கண்கள், விரிந்து உணர்த்தியது ஆதவனுக்கு…. அந்த மஞ்சள் கயிறு அவள் மார்பில் புரள, அது வெறும் மஞ்சள் நாண் மட்டுமே… நாணின் முகப்பில் மஞ்சள் கிழங்கு இல்லை என்பதை இழையினி புரிந்துக்கொண்டாள். அதை கையில் ஏந்தி பார்த்திருந்த இழையினியின் கண்களில் இப்போது கண்ணீர் நின்று, திகைப்பு குடி ஏரி இருந்தது…

 

இத்தனைக்கும் காரணமான அந்த மனிதன் பார்த்த சாரதி பேச ஆரம்பித்தார்… “ஹ்ம்ம் நம்புறேன்… இது மஞ்சள் கிழங்கு கோர்க்கப்பட்ட தாலி இல்லைதான்… ஆனாலும், இது மஞ்சள் கயிறு… இந்த மக்கள் நம்புற எல்லைசாமிய சாட்சியா வச்சு கட்டி இருக்க தாலிதான் இது, அவள் உன்னோட மனைவியா இல்லாம, இப்படி கட்டுறதுக்கு உனக்கு துணிவு வந்திருக்காது… அதோட நீங்க ரெண்டுபேருமே, அதுல மஞ்சள் கிழங்கு சேர்க்கபடாம இருந்ததை கவனிக்கல. அதை தாலி-னு நினைத்து தான் கட்டி இருக்க, அதுனால, நான், நீங்க சொன்னத நம்புறேன்… இப்பவே நான் அந்த போடோஸ் டெலீட் பண்ணிடுறேன்… உண்மையான கணவன் மனைவி நீங்கன்னு நான் இப்ப முழுமையா நம்புறேன்… என்னை மன்னிச்சிடுங்க ரெண்டு பேரும்” என்று கூறி அவர்கள் முன்னிலையிலே அப்புகைப்படங்களை அழித்துவிட்டார்….

 

மேலும் அவரே தொடர்ந்து, “நான், இதோட காப்பிஸ் அனுப்பியதா சொன்னது பொய் தான்…. இனிமேல் நீங்க பயப்படவேண்டாம்…. தம்பி, உன் பொண்டாட்டியை பார்த்து கூப்பிட்டு போ பா… மன்னிச்சிடு மா… ” என்று ஆதவனிடமும், இழையினியிடமும் அவர் பொதுவாக கூறி செல்ல, இழையினிக்கு இன்னமும் திகைப்பு தீர்ந்தபாடில்லை.

 

அமைதியாக சொல்லி சென்றவர், அவர்கள் வாழ்வில் மறையாத சம்பவத்தை ஏற்படுத்தி சென்றிருந்தார்…

 

ஆதவனுக்கு அவர் பேசி சென்ற வார்த்தைகளே மீண்டும் மீண்டும் ஒலிக்க, இழயினியின் முகத்தில் அவன் பார்வை பதிந்திருந்தது…. ஏனோ அவனுக்கு அவனை ஈர்த்த பாதங்கள் அந்த நொடி நினைவு வர, இவளது கண்ணீரை தாங்க முடியாமல் இதை செய்துவிட்ட அவனுக்கு அடுத்தது என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.

 

நிச்சயம் அவனை முதன் முதலில் ஈர்த்த பெண்ணை அவனால் மறக்க முடியும் என்று தோணவில்லை… அவளது குணங்கள் அறிந்த பின், தனக்காக படைக்கப்பட்ட பெண் இவள் தான் என்று அவன் நெஞ்சம் நம்பி இருந்தததை அவனால் இப்போதும் மாற்ற முடியவில்லை.

 

சில நிமிடங்கள் பதுமையாய் நின்ற இழையினி, அந்த மஞ்சள் நாணை பார்க்க பார்க்க, அவள் அன்னை சற்று முன் கூறியது, அவளது தந்தையை அவமானபடுத்த காத்திருக்கும் அத்தை, தன்னை மலை அளவு நம்பும் தந்தை, அவரிடம் திருமணத்திற்கு சம்மதம் கூறி வந்தது என்று அடுக்கடுக்காக நினைவு வர, பயம், அழுகை, கோவம், இயலாமை என்று அனைத்து உணர்வுகளாலும் பீடிக்கப்பட்டாள் இழையினி.

 

இதை கண்ட ஆதவன், அவன் குழப்பம் மறந்து அவளை சமாதனம் செய்ய முனைய, இழையினியின் குரல் இப்போது ஓங்கி இருந்தது….அவளது இயலாமை இப்போது கோவமாக வெளிவர தொடங்கியது….

 

“போதும், நிறுத்துங்க… உங்ககிட்ட நான் கேட்டேனா ? எனக்கு உதவி வேணும்னு… ஏன் இப்படி தேவை இல்லாம தலையிட்டு என் வாழ்க்கையோட இப்படி விளையாடறீங்க…” என்று அழுகையினூடே கூறினாள் இழையினி

 

“இதோ பாருங்க, நடந்தது உங்களுக்கு தெரியும்… உங்கள காப்பாற்றத்தான் இப்படி செய்தேன்” – என்று ஆதவன் தன்னிலை விளக்கம் கூறி மேலும் அவளை சமாதனப்படுத்த முயல  இழையினியோ எதையும் காதில் வாங்கதவளாக பேச்சை தொடர்ந்தாள்.

 

“நீ யாருனே தெரியாது… எங்க அப்பா..என்னோட குடும்பத்துக்கு நான் என்ன பதில் சொல்வேன்…. நிறைந்த சபைல, அக்ஷதை போட்டு, ஆசீர்வாதம் பண்ண, எங்க அப்பா கை பிடிச்சு கொடுக்கிற வாழ்கை தான் திருமண வாழ்கை…

 

இப்படி நடுகாட்டுக்குள்ள, ரா பொழுதுல, இதோ இதோ …. இது போல ஒரு மஞ்சள் கயிறு கட்டிட்டா அது தாலி ஆகிடாது…. இது கல்யாணமும் இல்லை…. ” என்று கூறி கோவத்தில் அவனது சட்டையை பிடித்து கதறினாள்.

 

இத்தனை தெளிவாக அவளது அறிவு அவளுக்கு பேச சக்தி கொடுத்தாலும், அவளது மனம்,  மஞ்சள் கிழங்கு இல்லாத, அந்த மஞ்சள் கயிற்றையும் தாலியாக என்ன தொடங்கிவிட்டது…. அவளது மனம் அப்படி எண்ண தொடங்கியது அவள் அறிவை எட்டவில்லை. அதை ஏற்கவும் அவளுக்கு மனம் இல்லை….அப்படி அவள் மனம் எண்ண தொடங்கியதால் வந்த பயமே, அவளது கோவத்திற்கு காரணம்….

 

அந்த கோவத்தில், வார்த்தைகள் ஆதவனை நோக்கி நெருஞ்சியாய் அரும்ப ஆரம்பித்தது… நிகழ்ந்த அனைத்துக்கும் அவனையே, இழையினி குறை சொல்ல…. இதுவரை தன்னிடம் யாருமே எதிர்த்து, ஏன் எதிரில் நின்றுக் கூட பேசாத தன்னிடம், அதுவும் சூழ்நிலை காரணமாய் அவன் செய்த செயலை அவள் தொடர்ந்து குற்றம் சாற்ற, வெகுண்டு எழுந்தான் ஆதவன்.

 

அந்த அடர் அந்தகாரத்திலும், ஆதவனது முகம் காலை கதிரவனின் கதிர்களை ஒத்திருந்தது கோவத்தினால்…..

 

“ஸ்டாப் இட்… இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாத, நான் காதலித்த பெண்ணை விட்டுட்டு, உனக்கு அவமானம் வரக்கூடாதுன்னு நான் செய்ததுக்கு, நீ என்னை நிற்க வச்சு கேள்வி கேட்குற…. அது தான் நீயே சொல்லிட்டியே… இது ஒன்னும் தாலி இல்ல… ஜஸ்ட் கயிறு தான் னு… அப்புறம் என்ன… கழட்டி எறிஞ்சிட்டு போக வேண்டியது தான… நானும் இதை தாலி-னு யோசிச்சு உன் கழுத்துல கட்டல… இடியட் இடியட்

 

உனக்கு போய் உதவி செய்யனும்னு நினைச்சது என் தப்பு தான்… என்ன தையிரியம் இருந்தா என் சட்டைய பிடிப்ப… உன்ன… “

 

என்று ஓங்கி அவனது காலை அருகிலிருக்கும் கல்லில் உதைக்க, அவனது பெருவிரல் கிழிந்து லேசாக ரத்தம் கசிய தொடங்கியது…. ஆனால் அதை உணரும் நிலையில் அவன் இல்லை.

 

அவளது விழியை கண்டு தடுமாறியவன், ஏன் அவன் காதலித்த பெண்ணின் முகத்தை பார்க்கும் பொழுது இப்படி ஒரு உணர்வு தோன்றவில்லை…. தானா இப்படி இரு பெண் மீது விருப்பம் கொள்வது என்று குழம்பி தவித்தவன்,அந்த கோவமே அவனுக்கு இழையினி மீது கோவத்தை அளித்தது….அதோடு அவளது பேச்சு, அவன் கோவத்திற்கு தூபம் போட, அவனது வார்த்தைகளிலும் அனல் பறந்தது…..

 

அந்த கோவத்தோடே நின்றவன், மேற்கொண்டு இழையினி ஏதோ பேச முனைய, “நிறுத்து, இது நீ சொன்னது போல வெறும் கயிறு தான்… இதுக்கு மேல என்ன பத்தி ஒரு வார்த்தை பேசாத” என்று உருமியவன் அவளது கழுத்தில் இருந்த மஞ்சள் நாணை கழற்றி எறிந்துவிட்டு விடுவிடுவென நடக்க தொடங்கினான்….

 

அந்த மஞ்சள் கயிறு, அருகிலிருந்த சாமந்தி செடிமீது விழுந்துவிட, அதை பார்த்தபடி நின்று இருந்தாள் இழையினி….

 

அதே நேரம், ராகவன் மரகதம் ராகவனின் அக்கா என்று அவரது குடும்ப ஜோசியர் முன்பு இழையினியின் திருமணதிற்கு ஜாதகம் பார்க்க, அவரோ அவர்களிடம் ஒரு இடியை இறக்கினார்….

 

” நீங்க கொஞ்சம் தாமதமா வந்துட்டீங்க… இந்த தேதி, இந்த நிமிடத்திற்கு,… நீங்க கொடுத்திருக்க ஜாதகப்படி இந்த நிமிடம் உங்க பொண்ணு கழுத்துல தாலி ஏறி இருந்திருக்கணும்…. அது தான் கிரகம் சொல்லுது….

 

ஆனா நம்ம இழையினி பத்தி எனக்கு தெரியாதது ஒன்னும் இல்லை… இந்த நொடி அவள் கழுத்துல தாலி இதுவரை ஏறல, அதனால நிச்சயம் திருமணத்தில் குழப்பம் வரும், மேலும் இழையினிக்கு இரண்டு திருமண அப்படின்னு கட்டம் சொல்லுதும்…

 

இதுக்கு பரிகாரம், எண்ணி ஏழே நாட்கள்-ல உங்க மகள் கழுத்துல மஞ்சள் கயிறு ஏறி இருந்தா…. அவளுக்கு இரு திருமணம் நடக்கிறத தடுக்க முயற்சிக்கலாம்… ஆனா அவளோட விதி படி இரு முறை தாலி ஏறுறதுதான் அவளோட ஜாதகம்…. ” என்று கூறி முடிக்க, இழையினி, ஆதவன் எறிந்த மஞ்சள் நாணை கையில் எடுத்தபடி, தான் மனதில் என்ன உணருகிறோம் என்று புரியாமல் நின்று இருந்தாள்.

 

Advertisement