Advertisement

மயிலிறகு – 21

 

“ஆரி டியர் .. எனக்கு என்ன இப்ப… நான் ஆதவன் சார் கிட்ட.. இல்ல இல்ல.. இனி சார் இல்ல… ஆதவன் மாமா கிட்ட, ஸ்விமிங் கத்துக்க தானே போனேன்… அதுல என்ன ஆகபோகுது.. ஓவரா சீன் கிரியேட் பண்ணாத மேன்… ” என்று அவளுடைய கொஞ்சும் குரலில் கூற, ஆரியனுக்கு, அவள் தன்னை லகுவாக்கவே இப்படி பேசுகிறாள் என்று புரிய.. “யூ நாட்டி…” என்று அவளது மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டினான்…

 

இந்த வார்த்தைகளை கேட்டு தான், கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் இழையினிக்கு அடியோடு சாயிந்தது… ஆதவன் இதற்கு முன், இதே இடத்தில் தனக்கு நீச்சல் சொல்லி தருவதாக கூற, இப்போது எப்படி இன்னொரு பெண்ணிற்கு அவன்…. இவ்வாறாக சிந்தித்தவள், அதற்கு மேல் சிந்திக்க கூட முடியாது, அப்படியே வாடிய கொடியாக தளர் நடையிட்டாள்…

 

அவள் கைகளிலிருந்த குடை நழுவியதையும், அதை கூட உணராது இழையினி தளர்வாக நடப்பதையும் பார்த்த ஆரியன், “அண்ணி அண்ணி” என்று அழைத்து பார்த்தும், எதுவும் பலன் இல்லாது போகவே, “அண்ணா…” என்று குரல் கொடுக்க, கொஞ்சம் முன்னே நடந்துக்கொண்டு இருந்த, ஆதவன் திரும்பி பார்க்க, மனைவியின் நிலை அவனுக்கு என்ன உணர்த்தியதோ வேகமாக, இழையினியிடம் விரைந்து, கீழ் இருந்த குடைய எடுத்து பிடித்து, அவளையும் குடைக்குள் கொண்டுவந்தான்…

 

இழையினியின் கண் முன், அன்று அவளுடன் அவளது கணவன் நீரில் நின்றப்படி, காதல் பார்வை பார்த்ததும்… அவனுடைய பார்வையில் இவள் நாணி சிவந்ததும், என்று ஒவ்வொன்றாக படம் போல அவள் கண் முன் விரிய, அதே நேரம், இன்று ஆதவனின் கைகளில் அவனிக்காவை பார்த்ததும் அவள் கண் முன் விஸ்வரூபம் எடுத்தது…

 

மனம் ஒன்று சொல்ல, அறிவு ஒன்று சொல்ல… ஆகமொத்தத்தில், அவள் அவளின் கட்டுப்பாட்டில் இல்லாமல், அப்படியே நிற்க, ஆதவன் அவள் அருகில் வந்ததையோ, அவளை குடைக்குள் அவனது கை வளைவினுள் கொண்டு வந்ததையோ எதையும் உணரும் நிலையில் அவள் இல்லை….

 

“இழையா.. இழையா..” என்ற குரல் இரண்டு முறை சற்று சத்தமாக கேட்டபின்பே, சுயத்திற்கு திரும்பியவள், தான் கணவனின் கை அணைப்பில் இருப்பதை உணர்ந்து, அவன் மீது ஒரு வெற்று பார்வையை வீசினாள்… ஆனால் அதற்கு காரணம் தெரியாமல் ஆதவன் குழம்பி நிற்கையிலே, ஆரியனும், அவனிக்காவும், “அண்ணா சீக்கிரம் போலாம்.. அடுத்த இடி இடிக்குறதுக்கு முன்…” என்று கூறிவிட்டு, அவனிக்காவை அழைத்து செல்ல, ஆதவனும் இழையினியின் தோளை பற்றிய படி, அவளை அழைத்து செல்ல, அருகில் நடப்பவர்களுக்கு தெரியாதவாறு, இழையினி ஆதவனின் கையை அவள் தோளிலிருந்து அகற்றி, அவன் அருகாமையில் இருந்து சற்று தள்ளி நடக்க, இப்போது ஆதவன் கோவத்தின் உச்சத்தை அடைந்தான்….

 

அவன் மனமோ, “இவ என்ன தான் நினச்சிட்டு இருக்கா… அந்த ஆரியன் இவள பேர் சொல்லி கூப்பிடறத தடுக்கல, புருஷன விட்டு, எவனோ ஒருத்தன் பிடிக்கும் சொன்னதுக்காக, அந்த சமையல் செய்திருக்கா… கல்யாணம் ஆகி ஒரே வாரம் தான் ஆகுது… பெரியவங்க பிரிஞ்சு இருக்க சொன்னாலும், பேசவே கூடாதுன்னு ஒன்னும் சொல்லலியே… ஆரியன், அவனிக்கா நிவன், ஏன் செவ்வந்திகிட்ட பேச கூட இவளுக்கு நேரம் இருக்கு, ஆனா புருஷன கவனிக்க இவளால முடியல, இப்ப, இப்ப கூட தோப்புக்கு வரதுக்கு, வேலை இருக்குனு சொல்லிட்டு, இப்படி ஆரியன் கூட வந்து நிக்கிறா… எல்லா கோவத்தையும் மறந்து, நானே இவகிட்ட வந்தா, கையை தட்டிவிடுறா… இவளுக்கே இத்தன திமிருனா… நான் ஆம்பள டி… எனக்கு எவ்ளோ இருக்கணும்….” என்று எண்ணியது…..

 

பெண்ணின் மனமோ கணவனையும், கணவனின் முன்னால் காதலியையும் நினைத்து கலங்க, ஆணின் மனமோ, பெண்ணவளின் மீது இருந்த அதித காதலால், தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம் மேலோங்க அவள் சிறு செய்கைகளிலும் கோவம் கொண்டு நின்றது…

 

இருவரும் அந்த ஒரே குடைக்குள் நடந்தாலும், அவர்களது மனம் மட்டும் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவேளையை கொண்டிருந்தது… அவனுடன் தோள் உரச நேரிட்டப்போதெல்லாம், சட்டென இழையினி விலக, ஆதவனின் கோவம் ஏறிக்கொண்டே போனது… அதன் பின் நிகழ்வுகள் அனைத்தும் வாயுவின் வேகத்தில் நிகழ்ந்தேறின…

 

ஆரியன் குடும்பம் மொத்தமும் அன்று இரவே கிளம்பி செல்ல, அதன் பின் ஜோசியர் சொன்ன காரணத்தை பிடித்துக்கொண்ட ஆதவனின் பாட்டி, இழையினியை தன்னோடு இருத்திக்கொள்ள, இருவரும் மற்றவர் மீது குற்றம் கண்டுப்பிடித்து, அவர்களுக்குள் மௌன போராட்டம் நடத்த என, நாளுக்கு நாள் இடைவேளை அதிகமானதே தவிர, குறைந்தப்பாடில்லை…

 

ஆயிற்று… இன்றோடு, ஆரியன் அவனிக்கா சென்று 14 நாட்கள் ஆயிற்று… நாளை 15-ஆவது நாள்… ஜோசியர் சொன்னபடி ஆதவன் இழையினி பிரித்திருக்க வேண்டிய இறுதி நாள்…

 

ஆதவன் மனதிலும் சரி, இழையினி மனதிலும் சரி, நாளையை எப்படி எதிர்க்கொள்வது… அந்த நாளை அவர்கள் விருபுகின்றார்களா, இல்லை தவிர்க்க நினைக்கின்றார்களா என்று அவர்களுக்கே புரியவில்லை…ஆனால் ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த கோவம், ஒதுக்கமாக வெளிப்பட்டு, இருவருமே சகஜ நிலையில் இல்லாமல் தத்தளித்தனர்…

 

மனஉளைச்சல் ஆதவனுக்கு இருந்த போதிலும், உழைப்பு அவனை விடாது அழைக்க, தனது தொழிலில் கவனத்தை செலுத்தி தன்னை கொஞ்சம் சமன் செய்துக்கொண்டான் ஆதவன்…. இழையினியும் வீட்டு வேலைகளில் உதவிவிட்டு, வைக்கோற்போர், காடு கழனி என்று ஆங்காங்கே அமர்ந்து, இலக்கில்லாமல் ஒரு வெறித்தபார்வையோடு வளைய வந்தாள் இழையினி… ஆனால் பெரியவர்கள் முன்னிலையில், தேவைக்கேற்ப பேச, அவர்களின் கண்களுக்கு அது பெரிதாக தெரியவில்லை…

 

ஆதவன் இன்று அரிசி மில்லுக்கு சென்றுவிட, மற்றவர்களும் ஒவ்வொரு வேலையில் லயித்திருக்க, பெரியவர்கள் மதியம் உறக்கம் போட சென்று விட, இழையினியின் மனதில் குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்து இருந்ததனால், அவளால் உறங்க இயலாமல் போனது… நேரத்தை பார்க்க, அதுவோ மதியம் மூன்று என்று சுட்டி காட்ட, நேரத்தை நெட்டி தள்ள எண்ணி, நடந்து முன் தாழ்வாரம் வந்தவள், அந்த குழம்பிய மனதோடு… அங்கே குடை விரித்து, பூக்கள் சொரிந்து உய்யாரமாக நின்றிருந்த புன்னை மரத்தருகில் வந்தாள்…

 

அதன் அடிவாரத்தில் அமர்ந்தவள் மனமோ, “கேள்விகள் இத்தன இருந்தும்…எதுக்குமே என்னிடம் பதில் இல்ல… எப்போ இது எல்லாம் சரியாகும்… அவரு காதலிச்ச பெண்ணை இன்னும் மறக்கவில்லையா? இல்ல மறக்க முடியலையா? அப்போ என்கிட்ட காதல் சொல்லியது… ஏன் இத்தனை நாள் என்கூட பேசாமல் இருக்கிறாரு… என்ன ஒதுக்குறாரா? இல்ல நான் ஒதுங்கி இருக்கேனா? அப்படி நான் ஒதுங்கி இருந்தாலும், அது அவரை சுத்தமா பாதிக்கவே இல்லையா ? அவர அது பாதிக்கலனா, நான் அவருக்கு முக்கியம் இல்லன்னு தானே அர்த்தம்…? ” இவ்வாறாக எண்ணி குழம்பிக்கொண்டு இருந்தது…

 

கூட்டம் கூட்டமாக

தேனடையில் குவிந்திருக்கும்

தேனிகளை ரசிக்காத மனம்

தேனை மட்டும்

ஏனோ ருசிக்கின்றது

தேனிகளை

சந்திக்க துணிவு இல்லையென்றால்

தேன் ருசி

நா அறியாமலே போய்விடும்

இல்லறத்தின் பிரச்சனைகளை

சந்திக்க துணிவு இல்லையென்றால்

ஊடலின் பிறகு வரும்

கூடலின் இன்பம்

மனம் அறியாத ஒன்றாய் ஆகிவிடும்

 

                                                                 — ராசி     

 

புன்னை மரத்தடியில் அமர்ந்திருந்த அவள் விழிகள், பின்னி பிணைத்து மண்ணிற்கும் வெளியே தெரிந்த, அதனுடைய பெரிய வேர்களின் மீது படிந்தது…ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்திருந்த வேர்களை பார்த்த அவளது உள்ளமோ, ” இந்த வேர் போல தான்.. என் வாழ்க்கையிலையும் குழப்பங்கள் பின்னி பினைந்திருகிறதோ….இந்த வேர்களை எப்படி பிரிக்க இயலாதோ, அதே போல, என் வாழ்க்கையை விட்டு, இந்த வேதனைகளையும் பிரிக்க முடியாமலே போய்விடுமோ….” என்று எண்ணமிட்டது…

 

அப்படி அவள் குழம்பிக்கொண்டு இருக்கையில், அங்கே இருந்த பல வேர்களிலும், ஒரே ஓர் வேர் மட்டும், சற்று தடித்து, பாம்பு போல வளைந்து நெளிந்து காணப்பட, அதனுடைய ஒரு பகுதி, பாம்பின் தலையை போலவே தடித்து இருக்க, இழையினி மனதில் அது பாம்பாகவே தெரிந்தது…அவளுடைய குழப்பங்களும், பிரச்சனைகளும் தான் இப்படி பாம்பு போல அவளை சுற்றி வளைத்திருப்பதாக அவள் எண்ண ஓட்டம் ஓட தொடங்கியது…அதே எண்ண ஓட்டத்தில், அந்த மரத்தில் சாய்ந்து இமைகளை மூட, மூடிய விழிகளுக்குள், சற்று முன் அவள் உருவகப்படுத்திய பாம்பு, அவளை விழுங்க வருவது போன்ற பிரம்மை ஏற்பட, அவளையும் அறியாமல், “அப்ப்பா…..” என்ற அலறலுடன், திடிக்கிட்டு விழித்தாள் இழையினி…

 

விழித்தவள், அவளுடையது வெறும் பிரம்மையே என்று தோன்ற, ஏனோ அவள் தனித்து இருப்பது போல உணர்ந்தாள்… அந்த நொடி அவளது தந்தை , அவள் கண் முன் நிழலாட, அவள் உதடுகளோ , “அப்பா..உங்கள பார்க்கணும் போல இருக்குப்பா…” என்று முணுமுணுப்பாக உதிர்த்தது….

 

அவளது குழப்பங்கள், வெகுவாக அவளை தனிமை படுத்த, அவள் தனது தந்தையை தேட ஆரம்பித்தாள்… மனதில் அப்பா அப்பா என்று ஜபம் போல ஜபித்தவள் கண்களுக்கு, அவள் தந்தை அவளை நோக்கி வருவது போலவே பிரம்மை ஏற்பட்டது… இன்னமும் இப்படி அமர்ந்திருக்க வேண்டாம், எழுந்து அனைவர்க்கும் காபி கலக்குவோம் என்று எண்ணியவள், கண்களை அழுந்த தேயித்துக்கொண்டு எழ, அங்கு நிஜமாகவே ராகவன் அவளை நோக்கி முன்னேறியபடி “பாப்பா…” என்று அழைக்க, அவ்வளவுதான்..இழையினி கட்டவிழ்த்த கன்றாக, தந்தையை நோக்கி ஓடினாள்….

 

“அப்பா…” என்று ஓடியவள், அவளது கைகளை பற்றிக்கொண்டு, கண்களில் லேசாக கண்ணீர் துளிர்க்க, வாய் முழுதும் புன்னகையாக சிரித்தாள்….

 

“உங்க பொண்ணு ஏங்க இப்படி இருக்கா? கல்யாணம் ஆனா பிறகும், புகந்துவீட்டுல இருக்கோம்னு இல்லாமல், இப்படி அப்பாவ நினைச்சுக்கிட்டு உக்காந்துருக்கா.. ” என்று மகளை குறை சொல்வது போல, ராகவன் பின்னோடு வந்த மரகதம் சொன்னாலும், அவரது மனதிலும், தன் கணவனை போலவே மகளும் பிரிவை நினைத்து வருந்துகிறாள் என்று எண்ணினார்….

 

“ஐயோ உங்க பாசமலர் படத்த, அத்தியூர் அரண்மனையிலையும் ஓட்ட ஆரம்பிச்சுட்டீங்களா? அக்கா போதும்… எங்கள உள்ள கூப்பிடு… உன்ன பார்த்ததும், அப்பா வண்டிய நிறத்த கூட இல்லாம, அப்படியே ஜம்ப் அடிச்சு உன்கிட்ட வந்துட்டாரு…அப்புறம் நான் தான் என் திறமையாள வண்டிய நிப்பாட்டி, அம்மாவை காப்பாத்தி கூப்பிட்டு வந்திருக்கேன்…” என்று வழக்கம் போல இதழா பேச ஆரம்பிக்க, இழையினி, ராகவன், மரகதம் என்று அனைவரும் சிரிக்க, “வாங்க சம்மந்தி….” என்று அழைத்தப்படி ருத்ரன் வேதா அம்மாள் இருவரும் வர, “எப்போ வந்தீங்க.. ஏன் அங்கயே நிக்குறீங்க… உள்ள வாங்க, இழையினி என்னமா…அப்படியே நிக்கிற? அப்பா அம்மாவ உள்ளார கூப்பிடு டா… ” என்று வேதா அம்மாள் கூற, இதழாவோ முந்திக்கொண்டு, “அப்போ என்ன கூப்பிட வேண்டாமா…? ” என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொள்ள, அதை கேட்ட வேதா அம்மாள், “அட என்ன கண்ணு சொல்லிட்ட… நீ தான் முதல்ல…” என்று கன்னம் வழிக்க, மரகதமோ சின்னமகளை கண்டிக்க, என அங்கே அழகிய சூழல் உருவாகியது….

 

“அப்பா.. அம்மா. இதழ்…எல்லாரும் உள்ள வாங்க… ” என்று லேசாக மாறிவிட்ட மனதோடு, வாய் நிறைந்த புன்னகையோடு, இழையினி அழைக்க, அனைவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்… “என்ன அப்பா திடிர்னு..என்ன பார்க்க வந்தீங்களா? ” என்று இழையினி கேட்க, அதற்கு அவரோ, “அப்போ நாங்க வருவது உனக்கு தெரியாதா பாப்பா…” என்ற கேள்வியோடு ருதரனை பார்க்க, அவரோ வேதா அம்மாளை பார்த்தார்…

 

அனைவரும் பார்ப்பதை உணர்ந்த வேதா அம்மாள் சிறு புன்னகை தவழ, “நீ  கொஞ்சம் கலக்கமா இருந்தது போல இருந்துச்சு ராசாத்தி, பெத்தவங்கள பிருஞ்சு வந்தா, அந்த பொண்ணு மனசு கொஞ்ச நாளு இப்படி பாடுபடும்னு எனக்கு தெரியாதா என்ன… அதா உன்ன பெத்தவகள பார்த்தா..கொஞ்சம் கலகலப்பா மாறுவானு வர சொன்னே… உனக்கு சந்தோசம் தர, இந்த அத்தையோட பரிசுன்னு வச்சுக்கோவே…” என்று கூற, ராகவன் உட்பட, அங்கு அனைவர்க்கும் வேதா அம்மாள் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டது…..

 

அதன் பின் அனைவரும் கலந்து உரையாடிப்படி, மாலை சிற்றுண்டியும், காப்பியும் பருக, அந்த நேரம் சரியாக ஆதவனும், ஆதவனை வால் பிடித்துக்கொண்டு மகிழனும் அங்கே வந்து சேர, ஆதவன் மற்றும் மகிழன் இருவருமே அவர்களை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை என்பது அவர்களின்  முகத்தில் ஏற்பட்ட ஆச்சர்யத்தில் அங்கு இருந்த அனைவரும் கண்டுக் கொண்டனர்….

 

அனைவரையும் மருமகனாக வரவேற்ற ஆதவன், ராகவன், மரகதம், இதழா என தனி தனியாக நலம் விசாரித்து, அவர்களுடன் இனக்கமாக பேச, அப்போது தான் இழையினி சற்று நிம்மதியாக மூச்சு விட்டாள்…

 

காரணம், ஆதவன் வீட்டினுள் வருவதை பார்த்ததும், ஒரு நிமிடம் அவனது இத்தனை நாள் செய்கைகள் மனதினுள் ஊர்வலம் வர, எங்கே அவன் தன்னிடம் பேசாமல் இருப்பது போலவே, தனது பெற்றோர்களிடமும் சரியாக முகம் கொடுத்து பேசமாட்டானோ என்ற ஐயம் ஒரு நொடி தோன்றினாலும், அவளது கணவன் வந்தவர்களிடம் வெகு இயல்பாய் பேசியதும், அந்த சூழலில், அழகாக பொருந்திக் கொண்டதும், அவளுக்கு சற்றே நிம்மதி தந்தது…ஆயினும், இத்தனை நேரம் இருந்த உற்சாகம் வடிந்துவிட்டது…. தந்தையை பார்த்ததும், சற்றே பலம் வந்தது போல உணர்ந்தவள், அவளுடைய குழப்பங்களை ஒதிக்கி அவர்களுடன் உரையாடியவள், ஆதவன் இப்பொழுது வந்ததும் தன் குடும்பத்தினரிடம் பேசினாலும், அப்பொழுதும் அவளை ஒரு பொருட்டாக மதிக்காதது, அவளது உள்ளத்தில், தன்னவன் தன்னை தவிர்க்கிறான் என்று ஆழமாக பதிந்தது…

 

அவள் சுற்றம் உணர்ந்து, தனது குழப்பங்களையும், துயரங்களையும் வெகு சிரமப்பட்டு, முகத்தில் பிரதிபலிக்காமல் பாடப்பட, அது ஓரளவு வெற்றியும் பெற்றது…ஆனால் அவள் மான் விழிகள் மட்டும், அவளின் துயரத்தை ஒழிக்க தவறியது…

 

அப்போது, ஆதவன் ஒரு அலைப்பேசி அழைப்பு வர, எழுந்து வெளியே செல்ல, ராகவனது குடும்பத்தினர் கொண்டு வந்த பழங்கள், பூ, தேங்காய், வாழை என்று கூடை கூடையாக கொண்டு வர, மகளை பார்க்க வந்த ராகவனோ இழையினிக்கு ஒரு தங்க சங்கிலியும் கொண்டு வந்திருந்தார்…

 

அவர், பெண் கொடுத்த வீட்டிற்கு வரும் போது கொண்டு வந்த பொருட்களும், மகளுக்கு போட்ட நகைகள் பத்தாது என்று மேலும் ஒன்று கொண்டு வந்ததையும் பார்த்த ஆதவனின் தாத்தா, பாட்டி இருவரும், “நமக்கு ஏத்த இடம் தான்… எதுலயும் குறைஞ்சவங்க இல்ல” என்று எண்ணமிட்டனர்.

 

பிறகு சற்று நேரத்தில், கிளம்பவேண்டும் என்று ராகவன் கூற, அனைவரும் அவர்களை இன்று ஓர் நாள் தங்கி செல்லுமாறு வற்புறுத்த, ராகவனோ நாசுக்காகவும்,அதே நேரம் மரியாதையாகவும், “பொண்ணு கட்டிக்கொடுத்திட்டு, கை நனைக்கலாம்…ஆனா ரா தங்குறது அம்புட்டு சரியா வராது… உங்களுக்கு தெரியாதது இல்ல சம்மந்தி, அதோட தூர தேசம்னா, நிச்சயம் நாங்களும் தங்கிருப்போம்.. இந்தா இருக்கு விரலி மல.. ஒரு அழுத்து அழுத்துனா, வந்திடுவோம்.. இதுக்கு எதுக்கு… நாங்க புறப்படணும், சோலி கிடக்கு தங்கச்சி….” என்று ருதரனிடமும், வேதா அம்மாளிடம் பொதுவாக கூற, அவர்களும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.

 

ஆனால் இழையினி மட்டும் எதுவும் கூறாமல் அவர்களை ஏக்கமாக பார்க்க, வேதா அம்மாளோ, “அம்மாடி ராசாத்தி… எப்படியும் பூசைக்கு உன்ன கூட்டி போக போறது கிடையாது… நாங்க தான் பூச பண்ண போறோம்… அந்த கோவிலுக்கு 40 நாள் புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணோ, சமஞ்ச பொண்ணோ வர கூடாது… ஆதவனும் சோலி இருக்கு வரலன்னு சொல்லிப்புட்டான்… நீ வேணுனா, அப்பா கூட போயிட்டு நாளைக்கு சாந்தரம் போல வந்துடுறியா? ” என்று கேட்க, இழையினிக்கும் அப்போது, கிளம்பி சென்றால் மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று தோன்றியது…

 

அவளுக்கு மனதில் அப்படி தோன்றிய உடனே, “அப்பா… அத்தை சொல்றது  போல, நானும் ஊருக்கு வரட்டுமாப்பா.. ஒரே ஒரு நாள்… கிளம்பட்டுமா? ” என்று சிறு குழந்தை போல ஆசையாக கேட்க, அந்த நேரம் சரியாக ஆதவன் உள்ளே நுழைந்தான்.. அவன் காதுகளில் மிக தெளிவாக கேட்டது இழையினியின் வார்த்தைகள்…

 

அவன் மனமோ, “என்ன தான் நினச்சுட்டு இருக்கா.. ? இவளுக்கு எப்பயுமே நான் முக்கியம் கிடையாதா? என்ன ஒரு வார்த்தை கூட கேட்காம, இவளா ஊருக்கு கிளம்புறேன்னு சொல்லுவாளா… ” என்று எண்ணமிட்டது…

 

அவள் அப்படி சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே, உள்ளே வந்த ஆதவன் முகத்தில் அப்பட்டமாக விருப்பமின்மை தெரிய, அதை தெளிவாக புரிந்துக்கொண்டார் ஆதவனின் மாமானார்…

 

இழையினிக்கோ, இங்கேயே இருந்து, தனக்குள் புலம்பி புலம்பி தவிப்பதை விட, ஓர் நாளாவது நிம்மதியாக இருக்கமாட்டோம்மா என்ற எண்ணம் மேல் எழ, கணவனிடம் கேட்க வேண்டும் என்று தோன்றினாலும், அனைவரது முன்னிலையிலும் ஊருக்கு செல்வதை உறுதி படுத்திக்கொள்ள விழைந்தாள்… மன அழுத்தம் அதிகரிக்கும் பொழுது, அதில் இருந்து தப்பித்து, ஒரு நொடியேனும் இழைப்பார மாட்டோமா என்றே எண்ணம் தோன்ற, மற்றதை மறந்து, மாற்றம் தேடும் சிறு பறவை போல உள்ளம் துடிக்கிறது… அந்த நிலை தான் இப்பொழுது இழையினிக்கும்… ஆதலாலே, ஆதவனிடம் கேட்கவேண்டும் என்று கூட தோன்றாமல், அவள் மன அழுத்தம் குறைய பிறந்து வீடு செல்ல துடித்தாள்…

 

மகள் முகத்தையும், மருமகனது முகத்தையும் ஒரு நொடி பார்த்தவர், பேச  தொடங்கும் முன், ஆதவன், “எனக்கு முக்கியமான வேலை இருக்கு… நான் குமிழ் தோப்பு வர போயிட்டு வரேன்… ” என்றுவிட்டு, யாருடைய பதிலுக்கும் காத்திராமல் விருட்டென்று சென்றுவிட, அங்கிருந்த அனைவருக்குமே ஒரு மாதிரி ஆகிவிட்டது…

 

ஆதவன் வேகமாக நடக்க, இதுவரை அமைதியாக இருந்த மகிழனும் அவன் பின்னோடு ஓட, மகிழனிடம் எதையோ சொல்லிவிட்டு ஆதவன் மட்டும் சென்று விட, அது ராகவன் பிருவ மத்தியில் முடிச்சை ஏற்படுத்தியது…

 

ஆதவன் அப்படி சென்றதும், கூம்பிய மாதுளை மலராக, இழையினியின் முகம் வாட, ராகவனோ, “பாப்பா… உன்ன கூப்பிட்டு போறேன்.. ஆனா கிளம்ப இன்னும் நேரம் இருக்கு… அதுவர, நம்ம போய் லட்சுமிய (பசு) பார்த்துட்டு வந்திடுவோமா? இப்ப முழுசா குணம் ஆகிடுச்சா டா.. ? நடமாடுதா சோர்வு இல்லாம… மாப்பிளை சொன்ன படி, அந்த பன்ணை ஆள் பேறு என்ன , ஹா.. மாறன்… அவன் பாம்ப பிடிச்சானா… ” என்று கேட்டுக்கொண்டே எழ, ஆதவன் நடந்துக் கொண்டதில் சிறு சங்கடமாக உணர்ந்த அவ்வீட்டின் பெரியவர்கள், நிலைமையை சகஜமாக்கும் பொருட்டு, இழையினியிடம், “போ தாயி… அப்பா கிட்ட லட்சுமிய காட்டிப்புட்டு வா… ” என்று கூற, இழையினியும் தனது தந்தையுடன் தோட்டத்தின் பக்கம் நடந்தாள்….

 

மரகதமும், வேதா அம்மாளும் பின் கட்டிற்கு சென்றுவிட, பாட்டி வேலை ஆட்களை வேலை வாங்கும் பணியில் ஈடுபட சென்றார்… அங்கே தனித்து விட பட்டிருந்தது, மகிழனும் இதழாவும்… மகிழன் இது தான் வாய்ப்பு என்று ஏதோ பேச தொடங்கும் முன் அங்கு சரியாக வந்து நின்றான் இளநிவன்.

 

“மிஸ் இதழா.. ? ” – நிவன் ஒரு ஆராயிச்சி பார்வையுடன் கேட்க

“ஹ்ம்ம் ஆமாம்.. நீங்க ஆதவன் மாமாவோட தம்பியா? ” – இதழா ஒரு யூகத்துடன் கேட்க

“வாவ்… என்ன உங்களுக்கு தெரியுமா.. நீங்க பியூட்டினு மட்டும் தான் நினச்சேன்… பட் ப்ரில்லியன்ட் டூ….” – நிவன் அவளை கவரும் நோக்குடன் புகழ…

 

இவர்கள் சம்பாஷனை இவ்வாறாக தொடர, மகிழனுக்கு தான் என்னவோ போல் ஆகிற்று… இத்தனை நாளில், இவள் நம்மிடம் இத்தனை சகஜமாய் பேசியது கிடையாதே.. இன்று மட்டும் நிவனுடன் எப்படி இத்தனை இனிமையாய் பேசுகிறாள் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை மகிழனால்.

 

ஒருபுறம் இப்படி இருக்க, மறுப்புறம் இழையினி, அவள் தந்தையிடம் நேரடியாகவே கேள்வியை உடைத்தாள்…

 

“என்கிட்ட எதுவும் கேட்கணுமா அப்பா..? ” – இழையினி நேரிடைய கேட்க

” பரவாயில்லையே! என் பொண்ணு இன்னமும் புத்திசாலியா தான் இருக்கிறா.. ” – ராகவன் மெச்சுதலாய் கூற

“ஏன் பா அப்படி சொல்றீங்க.. ” – இழையினி சந்தேகத்துடன் கேட்க

“ஏன் சொல்றேன்னு உனக்கு புரியலையா.. பாப்பா..?” – ராகவன் ஆராயிச்சி பார்வையுடன்

மௌனம் மட்டுமே பதிலாய் இழையினியிடம்….

“உங்களுக்குள்ள என்ன பிரச்சனையின்னு நான் கேட்க மாட்டேன்… கணவன் மனைவி விஷயத்துல, பெத்தவங்களே ஆனாலும் தலையிடுறது சரி இல்லை… இப்ப நான் என்ன பிரச்சனையின்னு கேட்க வரல, அதை சரி பண்ண கூட நான் எதுவும் செய்ய போறது இல்லை… ” – ராகவன்

“அப்போ..அப்பா எனக்கு ஒரு பிரச்சனையினா, அதை சரி செய்ய மாட்டீங்களா அப்பா…? – இழையினியின் குரல் ஏக்கத்துடன்

“நிச்சயம் இல்ல பாப்பா… உனக்கு பிரச்சனை வந்தா சரி பண்ணவும், தைரியமா அதை எதிர்கொள்ளவும் நான் சொல்லி கொடுத்திருக்கேன்… கூட துணையா எப்பவும் நான் இருப்பேன்.. ஆனா முயற்சி எடுத்து சரி பண்றது உன்னோட கடமை என் பொண்ணு நிச்சயம் பிரச்சனைகளை பார்த்து பயந்து ஓடுற பொண்ணு இல்லை… இது என்னோட நம்பிக்கை… ” – ராகவன் குரல் திடமாக ஒலிக்க

“ஆனா எனக்கு குழப்பமா இருக்கு அப்பா… நான் பிரச்சனையில இருந்து ஒடணும்னு நினைக்கல…” – வருத்தமும் குழப்பமும் தோயிந்த குரலில் இழையினி

“நீ ஒடணும்னு நினைக்கலனா, எதுக்காக பாப்பா ஒரு நாள் ஆச்சும் ஊருக்கு வரணும்னு பிரியப்பட்ட… இது நீ குழப்பத்துக்கு தீர்வ தேடாமல், அதுல இருந்து தப்பிக்கணும்னு தானே நினைக்கிற? ” – ராகவன் ஆசானாக மாறி கேள்வி கேட்க

மௌனம்மட்டுமே பதிலாய் இழையினி….

“இல்ல பா… எனக்கு அவர்ட்ட எப்படி பேசுறதுனே புரியல… நான் என்ன எப்படி புரியவைக்கிறதுணும் புரியல…. எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு அவர்கிட்ட கேட்க, ஆனா அதை கேட்கவும் முடியல, கேட்காம இருக்கவும் முடியல… ” – கண் கலங்க, குரல் கமர ஒலித்தது இழையினியின் குரல்…

“சரி… உனக்கு நான் சின்ன வயசுல எத்தனையோ கதை சொல்லி இருக்கேன்.. இல்லையா ? அதுல சிங்க கதை ஒன்னு  அப்பா உனக்கு அடிகடி  சொல்லுவேன்.. நினைவிருக்கா பாப்பா .. ? ” – கேள்வியாக ஒலித்தது ராகவனது குரல்

“அப்பா.. நான் என்ன சொல்றேன்.. நீங்க இப்ப போய்… ” – சலிப்பாக ஒலித்தது இழையினி குரல்

“பாப்பா.. அப்பா சொன்ன கேட்பியா மாட்டியா? ” – ராகவன்

“சொல்லுங்க அப்பா…” – இழையினி

“உனக்கு அந்த கதைய மறுப்படியும் சொல்லுறேன்… ஒரு காட்டில ஒரு சிங்கம் இருந்ததாம்… அதுக்கு தோழன் னு யாருமே இல்லாம, ரொம்ப தனிமைல இருந்திருக்கு.. ஒரு நாள் தற்செயலா ஒரு கிணற பார்த்திருக்கு, அதில எட்டி பார்த்த சிங்கம் ரொம்ப சந்தோசப்பட்டு இருக்கு… காரணம், அதோட பிம்பம், அந்த கிணத்துல விழுந்து கிணத்துக்குள்ள இன்னும் ஒரு சிங்கம் இருக்கிறது போல இதுக்கு தெருஞ்சிருக்கு… தன்ன போலவே இருக்கிற அந்த பிம்பத்த அதுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு… அப்ப இருந்து அடிக்கடி அந்த கிணத்தடிக்கு வந்து, நல்ல விதமா இது மேல இருந்து செய்க செய்ய, அதோட பிம்பமும், அதையே பிரதிபலிக்க… இந்த உண்மையான சிங்கத்துக்கு ரொம்ப சந்தோசம்… அது தான் தன்னோட நண்பன்னு நினைக்க ஆரம்பிச்சிடுச்சு….

இப்படியே சில காலங்கள் ஓட, ஒரு நாள் இந்த சிங்கம் ரொம்ப கோவமா இருந்திருக்கு, அந்த கோவத்தோடு, அப்படியே வழக்கம் போல அந்த கிணறுக்கு போக, அந்த கிணத்துல தெருஞ்ச இதோட பிம்பமும் கோவத்தை பிரதிபலிச்சிருக்கு…

நிஜமான சிங்கத்துக்கு, அந்த கிணத்துல தெரியிற பிம்பத்தை பார்த்ததும் இன்னும் கோவம் வந்து, உறும, அந்த கிணத்துல பட்டு அதோட கர்ஜனை சந்ததம் எதிர் ஒலிக்க, உணமையான சிங்கத்துக்கு கோவம் எல்லை மீறி போய்டுச்சு… வேகமா, கிணத்துக்குள்ள இருக்குற சிங்கத்தை அடிகிறதுக்காக கோவத்தோடு அந்த கிணத்துல நிஜ சிங்கம் விழ, அதோட அது கதையும் முடுஞ்சது… உனக்கு இந்த கதை மறந்திருக்காதுன்னு நினைக்கிறேன்…. ” – ராகவன்

 

“அப்பா… ” – என்று கண்ணீரோடு, அவரது தோளை பற்றிக் கொண்டாள் இழையா…

“புருஞ்சதா பாப்பா… ” – ராகவன்…

“புருஞ்சது பா.. பிரச்சனைகள பார்க்கிற கண்ணோட்டம் எப்படி இருக்கோ..அதை பொறுத்து தான் எல்லாம்… நான் இப்ப பார்த்திட்டு இருக்குற கண்ணோட்டத்தை நிச்சயம் மாத்துறேன்….” – இழையினி

 

“அது மட்டும் இல்ல குட்டிமா.. அந்த உண்மையான சிங்கம், கிணத்துக்குள்ள இருக்கிறதா நினச்ச, அந்த சிங்கத்துகிட்ட சிரிக்கிற முகத்தை எதிர்ப்பார்த்துச்சு… ஆனா இது தன்னுடைய முகத்த கோவமா வச்சிருந்தது… உண்மையான சிங்கம் அது மட்டும் கோவத்தை கொடுத்திட்டு, மத்தவங்க அதுக்கு சந்தோசத்தை தரணும்னு எதிர்ப்பார்த்திச்சு…

 

நம்ம, அடுத்தவங்க நமக்கு என்ன கொடுக்கணும் அப்படின்னு எதிர்ப்பார்கிறமோ  , அதையே நம்ம மத்தவங்க மீது காட்ட தவறிடுரோம்… இது அந்த சிங்கத்துக்கு மட்டும் இல்ல… நம்ம எல்லாருக்கும் பொருந்தும்… இதுக்கு மேல நீ தான் யோசிக்கணும்… என் பொண்ணு இத்தன நாளா குழப்பத்துல யோசிச்சிருக்கா…

 

இப்போ, இன்னைக்கு, உன்னோட குழப்பத்துல இருந்து வெளில வந்து யோசி…

 

மாப்பிள்ளை உங்கிட்ட என்ன சொல்லனும்னு எதிர்ப்பார்க்கிற.. ? அதை முதல்ல நீ அவர்கிட்ட சொல்லு, அப்புறம் உன் கேள்விகள கேளு…… எல்லாமே சரியாகிடும்… அப்பா உன்கூடவே இருப்பேன்… சரியா குட்டிமா…? ” – ராகவன்

 

இவ்வாறு கூறியப்படி, வாஞ்சையாக இழையினியின் தலையை வருட, இழையினியும் தெளிந்த மனநிலையோடு, “தேங்க்ஸ் பா… நான் ஊருக்கு உங்க கூட வரல…” என்று புன்னகையோடு கூறினாள், ராகவனின் குட்டிமா, ஆதவனின் இழையா…

 

“பாப்பா.. நீ போடா.. நான் பின்னாடியே வரேன்… ” என்று கூறிய ராகவன், மருமகன் சென்ற, வரப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்…

 

மருமகனை தெளியவைக்கும் யோசனையோடு ராகவன் செல்ல, ஆதவனின் செவிகள் மாமனாரின் வார்த்தைக்கு செவிமடுக்குமா அல்லது , ஆதவனின் வார்த்தைகள், ராகவனது நெஞ்சத்தை குத்தி கிழிக்குமா என்று விதி தான் முடிவு செய்யவேண்டும்…

 

Advertisement