Advertisement

மயிலிறகு – 22

 

எத்தனை குழப்பங்கள், வேதனைகள், சோதனைகள், எதிர்காலம் பற்றிய பயம் என்று அனைத்தும் வந்தாலும்…. அந்த குழப்ப நேரங்களில், நாம் உயிராய் நினைப்பவர்கள் அல்லது நம்மை உயிராய் நினைப்பவர்கள் லேசாக ஓரிரு வார்த்தைகள் ஆறுதலாக சொன்னால் கூட அது நமக்கு யானை பலத்தை தருமாம்….அந்த பலம் தான் இப்போது இழையினியின் நெஞ்சம் பெற்றுள்ளது….

 

இழையினி தெளிந்த மனநிலையில், அவள் என்ன செய்யவேண்டும்… ஆதவனிடம் என்ன கேட்க வேண்டும், என்ன சொல்ல வேண்டும் இப்படி பலவாறாக யோசித்தவள், தெளிந்த முகத்துடன் வர, அங்கே நிவனும், இதழாவும் பேசிக் கொண்டு இருக்க, மகிழன் அமைதியாக அமர்ந்திருந்தான்…..

 

மகிழன் மனதில், என்றுமே இல்லாத வெறுமை இன்று சூழ்ந்திருப்பதாய் அவன் உணர்ந்தான்… அவனது மனமோ, “இதழா விற்கு நம்மள சுத்தமா பிடிக்கவில்லையோ… அதுனால தான் நம்ம எப்போ பேச வந்தாலும், நம்மள அவாய்ட் பண்ணினாளோ… இது நமக்கு தான் புரியவில்லையோ….” என்று அவனது மைண்ட் வாய்ஸ் முதன் முதலாக, வருத்தமாக தனக்குள் பேசிக்கொண்டு இருந்தது…

 

எப்பொழுதுமே, உற்சாகமாக இருக்கும், அவனது மனதின் குரல் இன்று, உற்சாகம் முழுதும் வடிந்தவிட்ட நிலையில் பேசிக்கொண்டு இருந்தது….

 

இழையினி அவர்கள் அருகினில் வரவும், நிவன் எழுந்து, “அண்ணி வாங்க… உங்க சிஸ்டர் ஸ்வீட்டா பேசுறாங்க… நீங்களும் வாங்க அரட்டை அடிக்கலாம்….” என்று கூற, இழையினியோ, “இல்ல தம்பி, நீங்க பேசுங்க… எனக்கு உள்ள வேலை இருக்கு…. ” என்று மறுத்து கூறி நடக்க, செல்கின்ற அக்காவை, “அக்கா… நம்ம மீசை… ஹாங்.. நம்ம அப்பா எங்க அக்கா… ” என்று சுற்றம் கருதி, தனது அப்பாவின் செல்ல பெயரை சொல்லாது, அப்பா என்று மரியாதையாக விழித்து கேட்க, இழையினியோ, “அப்பா… தோப்பு வர போய் இருக்காங்க டா… ” என்று கூறி, தனது தாயையும், மாமியாரையும் தேடி சென்றாள்….

“எந்த பக்கம் போனாரு மா இழையினி” – மகிழன், ராகவன் எங்கு சென்றார் என்று அறியும் பொருட்டு வினவ, “கிழக்கு பக்கம் அண்ணா…” என்று கூறிவிட்டு செல்ல, மகிழனோ மனதினுள், “கிழக்கு பக்கம் போனா, குமிழ் தோப்புல வரும், அங்க எதுக்கு…. ஆதவன பார்க்கவோ… ஆனா அவன் இவுங்க எல்லாரும் கிளம்பினதும் அவனுக்கு தகவல் சொல்ல சொன்னானே…. இப்ப இவருகிட்ட எதுவும் பேசிடுவானோ… கோபமா போனது போல இருந்தது.. ராகவன் சார், ரொம்ப நல்ல மனுஷன்….” என்று எண்ணியவன், வேகமாக, தகவலை தெரிவித்து, மாமானாரிடம் அவனது கோபத்தை காட்டவேண்டாம் என்று கூறும் பொருட்டு ஆதவனது எண்னிற்கு அழைக்க, அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலையே, ஆதவனது தொலைபேசி சத்தம் ஒலிக்க, அதை பார்த்த மகிழன், “ஐயோ போன் விட்டுட்டு போய்ட்டானே… ” என்று எண்ணமிட, அதற்குள் நிவன், “ஒ அண்ணா போன் மிஸ் பண்ணிட்டு போய்ட்டாங்களா… சரி நான் போய் கொடுத்திட்டு வரேன்…” என்று எடுத்துக் கொண்டு விடு விடுவென நடக்க, மகிழனோ இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் முழித்தான் ஒரு நிமிடம்…..

 

அவனும் நிவன் பின்னோடு செல்லலாம் என்று முடிவெடுக்க, அந்த நேரம் சரியாக ருத்ரன், மகிழனிடம் தேங்காய் ஏற்றுமதி பற்றி விவரம் கேட்க, முன்னறைக்கு வர, மகிழனால் சட்டென்று கிளம்ப இயலாமல் போனது…

 

அங்கே குமிழ் மர தோப்பில்…..

 

தோப்பின் ஒரு புறம் ஓடுகள் வேய்யப்பட்ட, ஒரு விசாலமான மர கிடங்கு இருக்க, அங்கே குமிழ் மரங்களை தர வாரியாக பிரித்துக்கொண்டு இருக்க, அசலூரில் இருந்து வந்த ஒரு சிலர், *தோலக் இசை கருவி செய்வதற்காய், ஆதவனிடம் குமிழ் மரங்களை பேரம் பேசிக்கொண்டு இருந்தனர்….

 

*தோலக் குறிப்பு : இந்தியாவின் மத்தள இசைக்கருவிகளில் புகழ்ப்பெற்றது தோலக் எனப்படும் மத்தளம். நடுவில் பெரியதாகவும் கடைசியில் சிறியதாகவும் இருக்கும் இந்த மத்தளம்.

 

ஆனால் இன்று ஆதவன் நல்ல மனநிலையில் இல்லாததால், அவன், மர கிடங்கில் இருக்கும் ஒருவனை அழைத்து, அந்த வியாபாரிகளை கவனிக்கும் படி சொல்லிவிட்டு திரும்ப, எதிரில் ராகவனை பார்த்தவன் மனதில், “என்னோட இழையா-க்கு இவரு தான் முக்கியம்…. என்னை விட, இங்க ஏன் வராரு… அவ தான் வரேன்னு குதிக்கிறாள, அப்படியே கூப்பிட்டு போகவேண்டியது தானே….” என்று எண்ணமிட்டான்.

 

“மாப்பிள்ளை.. கொஞ்சம் தனியா நம்ம பேசலாமா.. இல்ல எதுவும் சோலியா இருக்கீகளா? ” ராகவன் ஒரு மாமனாராக வினவ

 

“இல்ல பா…. சொல்லுங்க… ” குரலில் பிடிப்பு இல்லை ஆதவனுக்கு…

 

“சரி வாங்க.. இன்னும் கொஞ்சம் தள்ளி போய் பேசலாம்….” – ஆதவனின் குரல் மாற்றத்தை கண்டுக்கொண்டவராக ராகவன்.

“உங்களுக்கும் இழையினிக்கும் ஏதோ ஒன்னு சரி இல்லை… அது என்னனு எனக்கு தெரியாது… அதுல நான் தலையிடவும் விரும்பல.. ஆனா ஒரு அப்பாவா நான் சொல்ல வேண்டியதை உங்ககிட்ட சொல்லிடுறேன்… பொதுவா எனக்கு அறிவுரை சொல்ல பிடிக்காது.. யாருக்கும் சொல்லமாட்டேன்… ” – ராகவனது குரலில் ஒரு தந்தையின் பாசம் மட்டுமே வெளிப்பட்டது.

 

“உங்ககிட்ட இழையா எதுவும் சொன்னாளா? ” – இப்போது ஆதவன் குரலில்  கோபம் அப்பட்டமாக வெளிப்பட்டது. கணவன் மனைவிக்குள் இருக்கும் சண்டையை, குழப்பத்தை, கணவனிடம் பேசாது, தன் தந்தையிடம் ஒப்புவித்தாளா? என்ற கோபம் அது.

 

ஒரு சிறு சிரிப்புடன் ராகவன் ஆரம்பித்தார்….

 

” என் பொண்ணு என்கிட்ட வாய் திறந்து எதுவும் சொல்லனும்னு அவசியம் இல்லை மாப்பிள்ளை… இது நான் பெருமையா சொல்லல, ஒரு அப்பாவா, அவள புரிந்து சொல்லுறேன்….” – ராகவன் தன்மையாக கூற,

 

“போதும்… எப்ப பாரு, அவ அப்பா அப்பானு உருகுறா… கல்யாணம் ஆனா பிறகும் கூட, அவளோட வாழ்க்கையில எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை… என்னோட மனைவி எனக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்னு எதிர்ப்பார்க்கிறதுல என்ன தவறு இருக்கு…

 

இப்ப கூட, உங்க கூட கிளம்புறதுக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம கிளம்ப தயார் ஆகிட்டா.. இதுக்கு என்ன அர்த்தம் ?

 

அவள உயிரா நேசிக்கிற எனக்கு இதை எதிர்ப்பார்க்கிற உரிமை கூட கிடையாதா… ? உங்களுக்கு தெரியுமா , நான் அவள காதலிச்சது… அவள உயிரைவிட அதிகமா நேசிக்கிறது…” – கோவமாக ஆதவனது குரல் ஓங்கிக் கொண்டே போனது….

 

“தெரியும்” – அசராமல் ராகவனது குரல் திடமாக ஒலித்தது…

அந்த ஒற்றை வார்த்தையை கேட்டவுடன், ஆதவன் சற்று நிதானத்திற்கு வந்தான்… மேற்கொண்டு பேசாமல், அவரே சொல்லட்டும் என்று அமைதி காத்தான்…

 

“நீங்க காதலிச்சதும் தெரியும், அந்த மஞ்சள் கயிற என் பொண்ணு தாலியா நினைச்சதும் தெரியும்… ஆனா என்ன கொஞ்சம் தாமதமா தெரிஞ்சுகிட்டேன்…

 

எப்படி இப்ப உங்களுக்குள்ளே இருக்க கருத்து வேறுப்பாடு, இழையினி சொல்லாமலே எனக்கு தெரியுதோ… அதே போல தான்.. என் பொண்ணு உங்கள கணவனா நினைக்க ஆரம்பித்துவிட்டாள், அப்படிகிறதும் அவள் சொல்லாமலே தெரிஞ்சுகிட்டேன்….

 

உங்களுக்கு அன்னைக்கு அவள திருமணம் செய்துக் கொடுக்க காரணம், நீங்க அவளை நேசிச்சது, அவள் உங்கள தவிர வேற யாரையும் மணக்க மனசளவுல தயாரா இல்லாதது… திருமணம் செய்ய, மனவிருப்பம் மட்டும் போதும் மாப்பிள்ளை.. ஆனா வாழறதுக்கு, புரிதல் ரொம்ப முக்கியம்…

 

இப்ப நான் வந்தது, உங்களுக்கு எந்த அறிவுரையும் சொல்ல இல்லை… புரிதல் இல்லாம, இரண்டு பேரோட அன்பு பிரியக்கூடாதுன்னு….சரி மாப்பிள்ளை.. நான் வரேன்.. ஊருக்கு ரவைக்குள்ள போகணும்…. நாங்க மட்டும் தான்…

 

இழையினி எங்க கூட வரல, இதை நான் சொல்லல… அவளே வரல அப்பா-னு சொல்லிட்டா….” என்று கூறிவிட்டு, துண்டை உதறி தோளில் போட்டபடி நிமிர்ந்த நடையுடன் ராகவன் நடந்தாலும், அவரது நடை சற்று தளர்வாகவே இருந்தது….

 

இந்த சம்பாஷனை சற்று தனித்த இடத்தில் நிகழ்ந்திருந்தாலும், அண்ணனின் கைபேசியை கொடுக்க வந்த நிவனுக்கு முழுதுமாக கேட்டுவிட, ராகவன் தளர்ந்த நடையுடன் செல்வதை பார்த்து, அவருக்கு முன்னே வேகமாக, வீட்டை நோக்கி புயலென விரைந்தான் இளநிவன்.

ஆதவன் பார்த்த நாள் முதல், ராகவனின் நடை இப்படி இருந்ததில்லை என்பதனால், ஆதவனது நெஞ்சம் குறுகுறுக்க, செல்கின்ற தனது மாமனாரை வேகமாக தடுத்தான் ஆதவன்….

 

“அப்பா… ஒரு நிமிஷம்” என்று வேகமாக, அவரிடம் முன்னேறியவன்… சற்று தயங்கி, பிறகு அவனது தயக்கத்தை சரி செய்துக்கொண்டு, கோபம் என்ற சொல்லே அறியாதவன் போல, எதையும் யோசித்து பேசும் தன்மை கொண்ட பழைய ஆதவனாக அவரிடம் பேச தொடங்கினான்…

 

“உங்ககிட்ட கோபமா பேசி இருக்க கூடாது… நான் இதுவரை தவறு செய்தது கிடையாது… ஆனா இப்ப உங்ககிட்ட பேசின முறை தவறு…அதுக்காக… ” என்று பேசிக்கொண்டு இருந்தவனை தடை செய்தார் ராகவன்…

 

“மாப்பிள்ளை.. என்னோட மாப்பிள்ளை மீது எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு… உங்களுடைய கோபம் என் மீது இல்லை… பாப்பா உங்களுக்கு முக்கியத்துவம் தரவில்லையோ அப்படிங்கிறது தான்.. அந்த கோபம் உங்கள் மீதும், அப்புறம் உங்க மனைவியின் மீதும் தான்… நீங்க மன்னிப்புன்னு சொல்ல கூடாது மாப்பிள்ளை…என்கிட்ட மட்டும் இல்ல.. வேற யார்கிட்டயும்.. என் மாப்பிள்ளை சரியா தான் நடந்துப்பாரு…

 

கொஞ்சம் நேரம் முன், உங்க குரல் உயர்ந்ததுக்கு காரணம் கோபம் இல்ல.. என் பாப்பா மீது வச்சிருக்க பாசம்…என்னால புரிஞ்சுக்க முடியும்… ” என்று நீளமாக பேசி முடித்தவரை ஆச்சர்யமாகவும், மெச்சுதலாகவும், மரியாதையாகவும் பார்த்தான் ஆதவன்.

 

“உங்ககூட கொஞ்சம் பேசணும் அப்பா.. ” என்று ஆதவன், ராகவனிடம் கூற, மருமகன் சொல்ல வருவதை நிதானமாக காதுக் கொடுத்து கேட்டார் ராகவன். அவ்விருவரும் பேசுவது மிக ரகசியமாக இருந்தது… ஆதவன் மனதில் புதைத்திருந்த விஷயங்கள் யாவும் இப்போது ராகவன் மட்டும் அறிந்திருந்த ஒன்றாக மாறியது…. ராகவனுக்கோ…. ஆதவன் மனதில் இருப்பதை கேட்டபின்னர், அவரால் ஆதவனின் எதிர்ப்பார்ப்பை தவறாக எண்ணமுடியவில்லை… ஆதவனின் மனதை தெளிவாகவே உணர்ந்துக்கொண்டார்….

 

அதே நேரம், வீட்டிற்கு சென்ற இளநிவன், வேகமாக வேதா அம்மாளை தேட, அவர் தனித்திருப்பது அறிந்து, அவரிடம் ஆதவன் நடந்துக்கொண்ட விதத்தை கூற, வேதா அம்மாளோ, “வேணாம் இளா, இதை யார்கிட்டயும் சொல்லாத.. நான் நானே அவனிடம் கேட்குறேன்… ஏன் ஆதவன் இப்படி நடந்துக்கிறான்… சரி இப்ப அவுங்க கிளம்பட்டும், பிரவு பேசலாம் இதை பற்றி… ” என்று கூறிவிட்டு, அவர் வந்தவர்களை உபசரிக்க சென்று விட, நிவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

 

தாய், ஆதவனிடம் கேட்பதுக்கு முன், அவன் இதை ஆதவனிடம் பேச முடிவெடுத்திருந்தான்……

 

ஆதவனுக்கு ஏனோ ராகவனிடம் அவன் மனதிலிருப்பதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது போலும்… அதற்கு காரணம், அவன் மனதில் இருப்பதை சொல்ல நினைத்ததோ…அல்லது அவனது அடுத்த வேண்டுகோளுக்கு அடிபோடவோ…அது அவனுக்கே தெரியாது…

 

“இது தான் காரணம் அப்பா.. எனக்கு முதன்மையா இருக்கணும்…நான் ஆசைபடுற அன்பு, என் இழையாகிட்ட இருந்து எனக்கு தான் முதல்ல வரணும்…எனக்கு உங்க மீது, மரியாதை, பாசம் எல்லாம் இருக்கு….ஆனா ஏனோ இழையாக்கு நான் தான்…அப்படின்னு ஒரு எண்ணம் வந்திடுச்சு… உங்களுக்கு புரிகிறதா அப்பா… ? எத்தனை பேர் இருந்தாலும், எனக்கு இழையா தான் என் வாழ்க்கையில முதல்ல… அதே போல அவளுக்கு நான் இருக்கணும்னு ஆசைபடறேன்… ” – என்று ஆதவன் தன்மையாகவும், அதே சமயம் திடமாகவும் கூற, அவனின் மனதை இத்தனை நேரம் கேட்டவர், ஆதவனின் வார்த்தைகளில் இருந்து, ராகவன் உணர்ந்துக் கொண்டது, ஆதவன் இழையினி மீது வைத்திருக்கு அளவு கடந்த பாசம் மற்றும் உரிமை.

 

இதை கேட்ட ராகவன் நிலையோ… இத்தனை வருடமாய்…யாரை உலகம் என்று எண்ணினாரோ, யாருக்காக சிரித்தாரோ, யாருக்காக குழந்தையாய் மாறி, அக்குழந்தையுடன் விளையாடினாரோ…யாரை பார்க்காமல் பொழுது இல்லை என்று நினைத்தாரோ…அந்த மகளை விட்டு சற்று தள்ளி நிற்க சொல்லி நாசுக்காக கேட்கும் மருமகன்….தான் உயிரை வைத்திருந்த மகள் மீது, இன்னொருவன் உயிரை வைத்திருக்கிறான்… காதலானாக, கணவனாக… வாழ்க்கை துணைவனாக….

 

ஆனால் இழையினி பிறந்தது இருந்தே, அவளின் சுகங்களை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த ராகவனுக்கு, அவளுக்காக அவரின் பழக்கவழக்கங்களை மாற்றி கொண்ட ராகவனுக்கு,  அவளது திருமண வாழ்க்கையின் சுகம் இப்போது பெரிதாக தோன்ற, அவரின் இடத்தையும் இப்போது மாற்றி கொள்ள மனதை தயார் செய்துக்கொண்டார்…

 

பெண் குழந்தைகளுக்கு, நினைவு தெரிந்தநாள் முதல், நாயகனாய் வலம்வருவது அவர்களது தந்தை என்றால், திருமணத்தின் பின் நாயகனாக உருவும் பெறுவது கணவன்…. இந்த இருவரில், பெண்ணின் மனதில் முதலிடம் பிடிப்பது அவர்களது தந்தையே… ஆனால் அதை அவர்களின் கணவர்கள் விரும்புவதில்லை…. இது தொண்ணூறு சதவீத பெண்களின் வாழ்க்கையில் வந்தாலும், பெண்ணின் நலன் கருதி அவர்களது உரிமையை விட்டுக் கொடுப்பவர்கள் தந்தையே…..

 

மனது லேசாக தள்ளாடினாலும், அதை வெளிக்காட்டாது, “என் பாப்பாவை, என்னைவிட அதிகம் நேசிக்கும் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்திருக்கிறேன்” என்ற மனநிறைவோடு ராகவன் புன்னகைக்க, அந்த புன்னகையின் பொருள் உணர்ந்து ஆதவனும், “தேங்க்ஸ் அப்பா… போலாமா.. இழையா வெயிட் பண்ணுவா…” என்று கூற, இருவரும் புன்னகையுடனே வீட்டை அடைந்தனர்.

 

வீடு சேர்ந்து சிறிது நேரத்தில், ராகவனது குடும்பம் கிளம்பி செல்ல, இதழா மகிழனை மதிக்காது, நிவனிடம் மட்டும் சொல்லி செல்ல, அதை மகிழன் கவனிக்க தவறவில்லை.

 

அன்று இரவு… வெகு நேரம் ஆகியும் இரு ஜீவன்களுக்கு உறக்கம் பிடிக்கவில்லை…. ஒன்று ஆதவன்..நாளை மனைவியிடம் பேசவேண்டும் என்று எண்ண, மறுப்புறம் பாட்டி அறையில் துயில் கொள்வது போல படுத்திருந்த இழையா….மறுநாள் ஆதவனிடம் பேசவேண்டியவற்றை மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்து பார்த்து உறக்கம் தொலைத்தாள்…

 

அவளுக்கு மனதில் இன்னமும் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன… முக்கியமாக அவனிக்காவை பற்றி…ஆனால் எப்பொழுதும் போல, அவள் தந்தை ஆசானாக மாறி அவளுக்கு சொன்ன கதையின் தார்மீகத்தை எண்ணி, மனதில் குழப்பம் மறைந்து திடம் வந்தது… நாளை பேசிய பிறகு, அனைத்துமே சரியாகும் என்று எண்ணம் அவளுள் துளிர் விட்டு, பெரிய விருக்க்ஷமாக வளரத்தொடங்கி இருந்தது…

 

மறுநாள் பொழுது அழகாக விடிந்தது…ஆனால் இன்றும் மேகங்கள் புடை சூழ, வானம் இருட்டிக்கொண்டு வந்தது…. ஜோசியர் சொன்னப்படி நிச்சயம் பரிகாரம் செய்யவேண்டும் என்று பாட்டி பிடிவாதமாக நின்றுவிட, இழையினி தவிர்த்து அனைவரும் புறப்பட்டுக் கொண்டு இருந்தனர்…

 

ஆதவன், அன்று விடிவதற்கு முன்னே களத்து வீட்டிற்கு சென்றவன், நெற் மூட்டைகள் மழையில் சேதாமாகத வகையில் பன்ணை ஆட்களை கொண்டு பத்தரப்படுத்திவிட்டு வந்தான்…

 

ஆதவனது வண்டி சத்தம் கேட்டு, மேல் மாடியில் இருந்து, ஜன்னல் வழியாக இழையா வருகின்ற தனது கணவனை ஆசையாக பார்த்தாள்… இன்று, இன்றோடு அவர்கள் விரதம் முடிவதனால், பாட்டி சொல்லின் பேரில் அவர்களது அறையை சுத்தம் செய்யவே அவள் அப்போது மாடிக்கு வந்திருந்தாள்… அறையில் சுத்தம் செய்தாலும், நொடிக்கொருமுறை கண்கள், இமை கொட்டுவதை போல…நிமிடத்திற்கு ஒரு முறையாவது இழையினி வாசலை பார்க்க தவறவில்லை….

 

அவன் வருகையை பார்த்தவுடன், இந்த சில கால பிரிவின் பிறகு, வந்தவனுக்கு ஏதேனும் வேண்டுமா என்று கேட்டு கவனித்து கொள்ளும் ஆர்வமுடன் அவள் வேகமாக வர, அதே நேரம் உள்ளே வந்த ஆதவனை, நிவன் மாடி படிகளின் அருகினில் நின்று அழைத்தான்…. ஆதவனுக்கு அவனது செய்கை புதிதாக தோன்றினாலும், என்னவென்பது போல, நிவனிடம் கேட்க, நிவனோ, “அண்ணா…வீட்ல யாருக்கும் தெரிய கூடாதுன்னு தான் இப்படி மறைவா பேசுறேன்…அண்ணியோட அப்பா என்ன பண்ணினாரு…அவரு எவ்ளோ பெரிய மனுஷன்…அவர போய் இப்படி மரியாதை குறைவா பேசிட்டியே… உன்ன கேள்வி கேட்குற அளவு நான் இன்னும் வளரல தான்… ஆனா நீ பண்ணினது ரொம்ப தப்பு அண்ணா…” என்று கூறிவிட்டு, அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் செல்லும் தம்பியை பார்த்த ஆதவன் பிருவம் சுருக்கினான்.

 

தன்னை எதிர்த்து பேசாத தம்பி தன்னை கேள்விக்கேட்டதை நினைத்து திகைத்து நின்றது ஆதவன் மட்டும் இல்லை… ஆதவனை காண, ஆசையுடன் ஓடி வந்த இழையினியும் தான்… மாடி படிகளில் இறங்க எத்தனித்தவள், இவர்கள் பேசுவது தந்தையை பற்றி என்று அறிந்து நிற்க, அடுத்து அவள் கேட்ட விஷயங்களில்…. அவள் மனம் துடிதுடித்து போனது…”என்னோட அப்பா வா…மரியாதை குறைவா… இவரு பேசினாரா? ” என்று மீண்டும் மீண்டும் எண்ணி அதிர்ச்சியில் அசையாது நின்றது…

 

அதன் பின், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட, இளநிவன் கூட, அவனுடைய நண்பர்களை காண சென்றுவிட, ஆதவனும் ஏதோ அவசர வேலை என்று, கிளம்பியவர்களின் பின்னோடு சென்றுவிட. இழையினி மட்டும் மீண்டும் வாடிய செந்தாமரையாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் முற்றத்தினில்….

 

கணவன் மீது கோபம், தனது உயிருக்கு நேரான தந்தையை எந்த காரணத்தை கொண்டு ஆதவன் அவமதித்தான் என்ற கோபம்….

 

வருத்தம்… யார் முன்னிலையிலும் தலை தாழ்ந்து நின்று பழகிறாதவர், தன் கணவன் பேச்சுக்கு மௌனமாய் வந்தது… தன் மீது கொண்ட பாசத்தினாலே… அதற்கு தான் தான் காரணம் என்ற வருத்தம்….

 

இப்படி பலதரப்பட்ட உணர்வுகளில் பீடிக்கப்பட்டிருந்த இழையினியின் மனம், நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இருந்தது….

 

இதுவரை இருட்டிக்கொண்டு இருந்த மேகம், இப்போது தூறல் சிந்த தொடங்கி இருந்தது…. முற்றத்தில், மயில் மாணிக்க கொடியினில் அருகே அமர்ந்து கணவனின் வருகைக்காக ஆவசேத்துடன் அவள் அமர்ந்திருக்க, அவளின் ஆவேசத்தை தணிக்கும் பொருட்டு, மழை சிந்தியதோ… தெரியாது…. ஆனால் தூறல் சிறுது நேரத்தில் வேகமெடுத்து சடசடவென கொட்ட தொடங்க, அந்த மழையை உணரும் நிலையில் கூட இழையினி இல்லாது, அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்…

 

மழை துளிகளில் நனைத்திருந்த சிவப்பு மயில்மாணிக்கம்…. சிரிப்பது போல பார்ப்பவர்களுக்கு தோன்ற, அதன் அருகினில் அமர்ந்திருந்த இழயினியோ இன்னும் ஒரு மலராய் தோன்றினாலும்… அவள் முகமும், அந்த மலர்களை போல சிவந்திருந்தாலும், அது கோபத்தில் தான் சிவந்திருக்கிறது என்று பார்ப்பவரும் அறியும் வண்ணம் அமர்ந்திருந்தாள் அந்த அன்னம்…

 

வெளில் சென்ற ஆதவன், மழையின் காரணமாய்.. வீட்டிற்கு விரைந்துவர, வழி எங்கும் சிந்தும் மழைத்துளிகளில், அவனது காதல் மனைவின் முகம் பார்த்துக்கொண்டே வர, முற்றத்தில் முழுவதுமாய் நனைந்திருந்தப்படி அமர்ந்திருந்த அவனது மனைவியின் முகம் பார்த்தவன் திடிக்கிட்டான்…

 

“இழையா… ” – மனைவின் அருகில் நெருங்கியப்படி ஆதவன்

 

” இழையா.. ஏன் இப்படி உக்காந்து இருக்க… உடம்புக்கு ஏதாவது வந்திடபோகுது..முதல்ல எழுந்திரு..உள்ள வா…”  – அவளது தோளை தொட்டப்படி, அக்கறை கலந்த கண்டிப்புடன் ஆதவன் கூற, அவனது கையை விளக்கியப்படி இழையா எழுந்து நின்று, நேருக்கு நேராக, அவனது விழிகளோடு, இவளது விழிகளை உறவாடவிட்டாள்…

 

“போதும்… எதுக்கு இந்த அக்கறை..இத்தனை நாளா இந்த அக்கறை உங்களுக்கு இல்ல… இப்போ எதுக்கு….

 

நீங்க காதலிச்ச பொண்ண உங்களால கல்யாணம் செய்துக்க முடியல… சூழ்நிலையால இரண்டு முறை எனக்கு நீங்க தாலி கட்டுனீங்க… அதுக்கு பிறகு உங்க பழைய காதல பற்றி, நம்ம முதலிரவு-ல பேச வந்த பொழுது என்ன சொன்னீங்கனு நினைவு இருக்கா…?

 

நான் தான் உங்க மனைவின்னு… நான் தான் உங்க வாழ்க்கையின் சரி பாதின்னு… ஆனா உங்க முன்னாள் காதலி அவனிக்காவ பார்த்ததும், உங்க மாற்றம், உங்க பேச்சு… அதுக்கு பிறகு என்கிட்ட இருந்து விலகி இருக்குறதுன்னு உங்களோட நடவடிக்கைகள் முழுசா மாறிடுச்சு….

 

என் மேல உள்ள கோவத்தை என் அப்பா மேல காட்டி இருக்கீங்க… அவரு எப்பேர்ப்பட்டவரு தெரியுமா.. ? அவர பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…. அவ்ளோ தூரம் என்ன பிடிக்கலனா, கல்யாணம் பணிக்காம இருந்திருக்க வேண்டியது தான… ?

 

ஏன் இப்படி என் மனசோட விளையாடறீங்க… ? உங்களுக்கு என் மனச பத்தி என்ன கவலை…. உங்களுக்கு உங்க பழைய காதல் தான் முக்கியம்… யாருனே தெரியாம, தாலிய கட்டிட்டு நீங்க போய்டீங்க.. வெளில சொல்லவும் முடியாமா, மெல்லவும் முடியாம, நீங்க கட்டின அந்த மஞ்ச கயிற கழுத்துலயும், உங்க முகத்த நெஞ்சுலயும் வச்சு… நீங்க தான் என் கணவன்னு, அந்த ஆரியன் கூட எனக்கு கல்யாணம் ஆககூடாதுன்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல…அது உங்களுக்கு பெருசு இல்ல… ஏன்னா உங்களுக்கு உங்க பழைய காதல் தான் முக்கியம்

 

உங்கள எதிர்ல வச்சுக்கிட்டு, யாரோ ஒருத்தன் பக்கத்துல மணமேடைல நிக்கிறது நெருப்பு மீது நிக்கிறது போல நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்… அது உங்களுக்கு பெருசு இல்ல… ஏன்னா உங்களுக்கு உங்க பழைய காதல் தான் முக்கியம்

 

கல்யாணம் ஆனா நொடி, எனக்கு அப்பத்தான் போன என் உயிரே வந்தது போல இருந்தது… அப்ப என் மனசுல வந்த நிம்மதி.. இந்த உலகத்துல எந்த வார்த்தை கொண்டும் விவரிக்கமுடியாத இன்பம்… அது உங்களுக்கு பெருசு இல்ல… ஏன்னா உங்களுக்கு உங்க பழைய காதல் தான் முக்கியம்

 

உங்கள எப்ப நேசிக்க ஆரம்பிச்சேனே தெரியல.. ஆனா ஏன் நேசிக்க தொடங்குனேனு நீங்க என்ன இப்ப யோசிக்க வச்சுட்டீங்க…

 

அதுனாலத்தான எனக்கு இத்தன வலி… இப்போ கடைசியா, என் மேல இருக்க வெருப்ப, நான் உயிரா நினைக்கிற என் அப்பாகிட்ட கூட காமிச்சு இருக்கீங்க… அவரு மட்டும் இல்லனா நம்ம கல்யாணமே நடந்து இருக்காது.. என் மனசு தெரிஞ்சு உங்ககூட எனக்கு கல்யாணம் செய்து வச்சாரு… ஒ அவரு தான் என்ன கல்யாணம் செய்துக்க காரணம்..அதுனால தான் அவர்கிட்ட அப்படி நடந்துக்கிட்டீங்களோ….” என்று சீரும் எரிமலையாக பொங்கி எழுந்தாள் இழையினி…

 

அவளின் எதிரில் நின்ற ஆதவன் நிலைமையோ, அவள் பேசுவது முதலில் புரியாமல், ஏன் இவள் அவனிக்காவை இழுக்கின்றாள் என்று அறியாது , தம்பி மனைவியை ஏன் இழுக்கின்றாள் என்று அவள் மீது கோவம் துளிர்த்தாலும், அவள் அடுத்தடுத்து பேச பேச, அவன் மீது அவன் மனைவி கொண்ட நேசம் வெட்டவெளிச்சமாக தெரியவர, அவன் மனதில் இதுவரை இருந்த ஒட்டு மொத்த கோப தணலும், குளிர் தரும் உறைபனியாய் மாறியது, நிமிடத்தில்…

 

அவனுக்கு பேச வாய்ப்பே தராமல், பேசிக்கொண்டே போகும் மனையாளை தடுக்க வலி இல்லாமல் தவித்த ஆதவனின் நெஞ்சம் இப்போது மனைவி கோவத்தில் வெளிப்படுத்திய அவளது காதலை எண்ணி எண்ணி சந்தோஷ கூச்சல் போட்டது….

 

சாது மிரண்டால் காடு கொள்ளாது…என்ற பழமொழிக்கு ஏற்ப, இத்தனை காலம் அமைதியின் உருவமாய்…அதிர்ந்து கூட பேசாதவளாய் இருந்த இழையினி… தனக்காக தன் தந்தை அவமானப்பட்டார் என்று எண்ணி, பொங்கி எழ… அதில் அவளது நேசம் கொண்ட நெஞ்சம் அவளது காதலையும், அவளை அறியாமலே அவள் கணவனிடம் உணர்த்திவிட்டிருந்தது….

 

கணவன், தந்தை என இரு வேறு உறவுகளில் சிக்கி தவித்த இழையினி… தந்தைக்காக கோபம் கொண்டாள்..ஆனால் அந்த கோபத்திலும், எனது கணவன்… அவனிடம் கேட்க எனக்கு உரிமை உண்டு என்று உறுதி காட்டினாள்…. இதே வேலையை, ஆதவனை தவிர வேறு யார் செய்திருந்தாலும் அவளது நடவடிக்கை இப்படி இருந்திருக்காது… ஆனால் செய்தவன் அவளது கணவன்… ஆதலால் தான் இத்தனை கோவம், இத்தனை வருத்தம், இத்தனை ஆதங்கம்…

 

அவள் பேசிக்கொண்டே போக, பொறுத்து பொறுத்து பார்த்த ஆதவன், அவனை பேசவிடாது பேசிக்கொண்டே இருக்கும் அவளது இதழை முரட்டுத்தனமாக மூடினான், அவனது இதழ் கொண்டு…. அவனிடம் இருந்து திமிறிய இழயினியை அசையவிடாது கட்டுக்குள் வைத்திருந்தவன்….சிறிதுநேரத்தில் விடுவிக்க, மீண்டும் இழயினியின் கோப வார்த்தைகள் உதிர தொடங்கும் முன், அவளை முற்றத்தை விட்டு இழுத்திருந்தான்…..

 

“ஒரு நிமிஷம்…. ” என்று அவனின் இழையாவிடம் கடினமாக வரவழைக்கப்பட்ட குரலில் கூறிய ஆதவன், தனது மாமனாருக்கு கைபேசியில் அழைக்க, மறுமுனையில் அவர் அழைப்ப ஏற்க, ஒலிபெருக்கியில் கைபேசியை வைத்தவன்… ராகவன் பேசுவது தெளிவாக இழையினி கேட்க்கும் படி செய்தான்….

 

“அப்பா… நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்க கூடாது….” என்று உண்மையான வருத்தம் தோயிந்த குரலில் ஆதவன் ஆரம்பிக்க, “ஐயோ மாப்பிள்ளை… நீங்க ஏன் மறுப்படியும் அதை ஏன் பேசுறீங்க… பாப்பாக்கு என்கிட்ட என்ன உரிமை இருக்கோ… அதே உரிமை உங்களுக்கும் இருக்கு… இன்னும் சொல்ல போனா.. நீங்க அப்படி பேசினதுல நான் முன்னைவிட ரொம்ப சந்தோசமா இருக்கேன்… என் பாப்பாவ என்னைவிட ஒரு படி மேல நீங்க நல்லா பார்த்துபீங்க… ஒரு பொண்ண பெத்தவங்களுக்கு இதுக்கு மேல என்ன வேணும்… நீங்க பாப்பா கூட மனசுவிட்டு பேசுங்க… பாப்பா-வ பார்த்துகோங்க..ஹா அதை நான் உங்களுக்கு சொல்லவே தேவை இல்லை… ” என்று கூறியப்படி, மேலும் இரெண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அணைக்க, அணைந்தது ஆதவனின் கைபேசி மட்டும் அல்ல…. இழையினியின் கோவமும் தான்….

 

“என்ன இழையா… இதுக்கு இப்ப என்ன சொல்ல போற” – ஆதவன் அவளை நெருங்கியப்படி கேட்க, ஏதும் பேசாமல் மெளனமாக நின்றாள்…

 

“என்னலாம் சொன்ன டி நீ.. பழைய காதலாம்… அவனிக்காவாம்… உன்ன பிடிக்காம கல்யாணம் செஞ்சேணாம்… இன்னும் வேற என்ன கற்பனை வச்சிருக்க….

 

ஏன் டி என்ன பார்த்தா உனக்கு என்ன தோணுது…

 

உன் முகம் கூட தெரியாம, வெறும் உன் பாதமும்… உன் பாத்ததுல இருக்க மச்சத மட்டும் அடையாளமா வச்சுக்கிட்டு, ஒரு பைத்திய காரண போல உன்ன தேடுனேன்… சுடலை மூலமா, உன்ன பத்தி தெருஞ்ச குணங்கள வச்சு உன்ன காதலிச்சே…

 

நீ யாருனே தெரியாம, அன்ணைக்கு அந்த ராத்திரி..உன் கண்ணுல கண்ணீர பார்க்க முடியாம தவிச்சு, உன்ன பத்தி எதுவுமே தெரியாம தாலி கட்டினேன்….

 

அப்ப எனக்கு தெரியாது டி.. நான் தேடுற பொண்ணும் நீயும் ஒண்ணுனு..அன்னைக்கு எனக்கே குழப்பம்.. என் மனசுல முகம் தெரியாத பொண்ண நேசிக்கும் பொழுது, உன்ன பார்த்து ஏன் என் மனசு இழகுதுன்னு தெரியாம குழப்பத்துல வந்த கோபம் தான்… அந்த கயிற கழட்டி எரிந்ததுக்கு காரணம்…

 

அப்புறம் கல்யாணத்துல உன்ன பார்த்ததும் என் மனசு எவ்ளோ துடிச்சதுன்னு எனக்கு மட்டும் தான் டி தெரியும்… அப்ப கூட உன்ன பார்த்து ஏன் நான் இவ்ளோ வேதன படுறேன்..உனக்கு கல்யாணம்னா எனக்கு என்னனு தெரியாம தவிச்சேன்…. அப்புறம் தான் தெருஞ்சது… நான் நேசித்த பெண்ணும், நான் தாலி கட்டின பொண்ணும் ஒண்ணுனு…

 

அதுக்கு பிறகு நடந்தது எல்லாம் கனவு போல நடந்திருச்சு….அதை எல்லாம் புரிஞ்சுக்காம ஏன் டி ஏன் இப்படி பேசியே கொல்லுற… இதுல அந்த அவனிக்கா எங்க வந்தா… ? உங்க அப்பா என்ன புருஞ்சிக்கிட்ட அளவு கூட நீ என்ன புருஞ்சகாம பேசிட்டியே டி….” என்று கூறியவன் விடுவிடுவென மாடி ஏறி சென்று விட, அவன் பேசியதை கேட்டு கொண்டு இருந்த இழையினிக்கு உலகம் வண்ணமயமாக தோன்ற தொடங்கியது….

 

அவன் சென்ற சிறிது நேரத்தில், கணவனை தேடி…அவர்களது அறைக்கு செல்ல..ஈர உடையுடனே… ஜன்னல் வழி தெரிந்த மழை துளிகளில் பார்வையை பதித்தபடி நின்றிருந்தான் ஆதவன்… அவன் மனைவி வருவதை உணர்ந்தும், திரும்பாமல் ஜன்னல் புறமே திரும்பி இருக்க… அவனை பின்னோடு வந்து இறுக அணைத்துக்கொண்டாள் அவனது மனைவி…

 

அந்த அணைப்பில் காமம் இல்லை…இத்தனை நாட்களாய் இருவரது மனதிலும் நடந்துக்கொண்டிருந்த கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு விடை கிடைத்துவிட்ட நிம்மதியும்… முழுக்க முழுக்க காதலும் மட்டுமே நிறைந்திருந்தது….

 

அந்த நேரத்தில், அந்த அணைப்பு இருவருக்கும் தேவைப்பட்டதாய் இருந்தது….

 

அதன் பின்…ஆதவன் கோத்திகிரியில் இருந்து, இன்று வரை நடந்த அனைத்தையும் அவளிடம் பகிர, இழயினியும்…. ஏன் அவனிக்கா மீது இப்படி ஒரு எண்ணம் தோன்றியது அவளுக்கு என்ற காரணத்தையும், ஆரியன் குடும்பம் வந்தது முதல் நடந்த நிகழ்வுகளையும் சொல்லி முடித்தாள்…..

 

இப்படியே நாட்கள் சுகமாக ஓட, அவ்வீட்டின் பெரியவர்களுக்கும் இவர்களது மாற்றம் தப்பவில்லை…. ஆதவனின் பாட்டியிற்கோ, அவரது பூஜையின் காரணமாக தான் இவர்களது அன்பு பெருகி இருகின்றது என்று எண்ணம் தோன்ற அந்த வயசான பெண்மணிக்கு சந்தோசம் பிடிப்படவில்லை…

 

இந்த சந்தோசங்கள் ஊடே அவ்வபொழுது, இழையினி வந்த பொழுது, நடந்த அசம்பாவித நிகழ்வுகளையும்….அதை ஆதவன் சந்தேகித்ததையும் அவன் மறக்காது சிந்திந்துக் கொண்டு தான் இருந்தான்… ஆனால் அடுத்தடுத்து வந்த நிகழ்வுகளில் அவர்களுள் குழப்பம், அதன் பின் அவர்களுள் தெளிவு என காலங்கள் கழிய, இப்போது நினைத்து பார்த்தால், நிகழ்ந்த யாவுமே தற்செயலாக நிகழ்ந்தவை தானோ என்று எண்ணும் அளவு வாழ்க்கை சீராக சென்றுக் கொண்டு இருந்தது…

 

இப்படியே முழுதாக திருமணம் முடிந்து 50 நாட்கள் சென்றிருக்க, அவர்களது திருமண நாளின் 50-வது நாளிற்காக என்ன பரிசு பொருள் வேண்டும் என்று ஆதவன், அவளது மனைவியை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு கேட்க, அவள் மனதில், “தன் அப்பாவுடன் ஓரிரு நாட்கள் கழிக்க வேண்டும்” என்று கூறியவள், வெளியே அதை சொல்லாமல் தவிர்த்தாள்…

 

ஏனெனில்…ஆதவன், அனைத்தும் புரிந்துக்கொண்டாலும்…. இழையினியை விட்டு ஓரிரு நாள் கூட பிரிய அவனுக்கு மனம் இல்லை… இன்னமும் அவன் மனதில் இழயினியின் அன்பு அவனுக்கு தான் முதலில் என்ற எண்ணம் மாறவில்லை… ஓரளவு அதை புரிந்துக்கொண்ட இழையினி இந்த 50 நாட்களில் ஒரு முறை மட்டுமே தனது தந்தையை சந்தித்தால்…அதுவும் முழுதாக மூன்று மணி நேரமட்டுமே… ஏனோ… ராகவனுக்கும் பிரிவின் தாக்கம் இருந்தாலும், அவரது முழு ஆதரவும் ஆதவனுக்கே இருந்தது….அதற்கு காரணம் தான் இழையினிக்கு புரியவில்லை….

 

ஆதவன் வற்புறுத்தி, அவளை செல்லம் கொஞ்சி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க, தந்தையை பார்க்க வேண்டும்…தாய் வீட்டில் இருநாட்கள் இருக்கவேண்டும் என்று சொல்ல தொடங்கிய இழையினி, “த…” என்று தொடங்கியவள் அவசரமாக, “த…தஞ்சாவூர் பொம்மை வாங்கி தரீங்களா….” என்று கூற, ஆதவனோ கடகடவென சிரித்தான்…. அவள் முன்னுச்சியில் முத்தம் வைத்தவன், இப்பொழுதே சென்று வாங்கிவருவதாக… தஞ்சை கிளம்பினான்…..

 

உல்லாசமாக கிளம்பிய ஆதவன், தஞ்சையில் சந்திக்க போகும் நபரையும், அவர் தரும் செய்தியையும் அறியாது… மனைவியைப்பற்றிய நினைவுகளில் பயணித்தான்…..

Advertisement