Advertisement

மயிலிறகு– 2

 

இதழாவின் கூச்சல் கேட்டு , “இதழா… என்னாச்சு….” என்று இழையினி அவள் அருகில் வர, மரகதமும் பதட்டத்துடன் கேட்க, ராகவன் சிரிப்புடன் இதழாவை அழைத்து, “வாழ்த்துக்கள் குட்டிமா…” என்று கூற, இழையினி அவரை புரியாமல் பார்க்க, ராகவனோ, “இன்னும் புரியலையா… இதழா சத்தம் போட்டது சந்தோசத்துல, நம்ம சின்னக் குட்டி, மாநில அளவுல சிலம்பு விளையாட குன்னூர் போகணும்… நாளை மறுநாள் போட்டி.. மரகதம் காலையில ஒரு முக்கியமான தாக்கலுக்கு காத்துருக்கேன்னு சொன்னேன்ல… அது இது தான்…. நம்ம இழையாவ, பாப்பா ஆசைப்பட்டபடி கோத்தகிரிக்கும், அப்புறம் நம்ம இதழ குன்னூர்-க்கும் அனுப்பலாம்னு யோசிச்சேன்.. காலையிலே எனக்கு இது தெரியும்…பக்கத்து பக்கத்துல தானா, அதோட சின்னக் குட்டிக்கு 2 நாள் தான் போட்டி.. மிச்ச நாள் இரண்டு பேரும் சேர்ந்து தான் இருப்பாங்க…” என்று கூறியபடியே அவரது மீசையை தடவிக்கொண்டு சிரிக்க, அவரின் இரு மலர்களும் அவரின் கைகளை பற்றிக்கொண்டு, “அப்பானா, அப்பா தான்.. ச்வீட் டாடி…” என்று கூறினர்.

 

அவர்கள் பயணம் இனிதே தொடங்கியது…

 

அந்த பயணம் இழையினிக்கு வைத்திருக்கும் மாற்றத்தை அறியாமல் அவள் அந்த கிராமத்தை பற்றிய கற்பனை சிறகுகளை விரிக்க, இதழாவோ மாநில அளவு விளையாட்டு போட்டியில், அரசியல் சூதினால் இதுவரை அவளால் பங்கு கொள்ளமுடியாமல் போக, அந்த வாய்ப்பு இந்த வருடம் அவளுக்கு கிடைத்ததை எண்ணி அகமகிழ்ந்து போனாள்.

 

அவளுக்கு தெரியும், நிச்சயம் ராகவனின் பங்கு இதில் ஏதோ இருக்கிறது என்று. இதழாவின் பயிற்சியாளரும் அங்கே நேரடியாக வந்துவிடுவதாக கூறவும், போட்டி பற்றிய சிந்தையோடு சென்றாள் இதழா…

 

நீலகிரி மாவட்டம்…. பசுமை போர்வை கொண்டு தன் மேனியை மூடிக் கொண்ட மோகன தேவதை….. தன்னுள் அழகிய ஊர்களான  குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியவற்றை அடக்கிக்கொண்டவள்.

 

கோத்தகிரி………………….. ஊட்டியிலிருந்து 27 கி.மீ தொலைவில் உள்ள அழகின் அடையாளம். உலகிலே சிறந்த வானிலை கொண்ட இரண்டாவது இடம்…. அவ்வூரை சுற்றுலா தளமாக தெரியப்பட்ட பகுதிகள் போக, சுற்றுலா பயணிகளின் அப்பாற்பட்ட பகுதியாக கோத்தகிரியில் மிகுதியான இடங்கள் இருந்தன.

 

அந்த அழகிய சூழலில் தான், பழங்குடி மக்களான கோத்தர்கள் வாழ்ந்து வருகின்றனர். தோடர், கோத்தர், இருளர் என்று ஏழு பிரிவை சார்ந்தவர்கள் வெவ்வேறு ஏழு இடங்களில் வாழ்கின்றனர்.

 

இழையினி இப்போது ஆவல் பொங்க சென்ற இடம் கோத்தர்கள் வாழும் பகுதி…..

 

ஊருக்குள் வரும் வழியில், சிறு சிறு குடிசை வீடுகளும், செம்மண் பூசப்பட்ட வாசல்களும், மரத்தினால் செய்யப்பட்ட திண்ணைகளும், வாசலின் முன் பக்கத்தில் மூன்று கல் குவித்து வைக்கப்படிருந்த அடுப்பும் பார்த்த இழையினியின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது. அவர்களின் உரையிடத்தை பார்த்து கண்களில் சந்தோசம் பொங்க அதை ரசித்தாள்.

 

தனது தந்தை மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதாலும், தனது தந்தைக்கும் இந்த மக்களின் நேர்மை, பாசம் பிடிக்கும் என்பதாலும் அவர்கள் அனைவரின் மீதும் ஒரு மதிப்பும், பிரியமும் ஒரு சேர பிறந்தது இழையினியின் மனதினுள்.

 

இதழாவோ தனது போட்டி பற்றியே சிந்தனையில் உழன்றவள், அந்த மக்களின் தலைவரை சந்தித்து ஒரு அறிமுகப்படலத்தோடு போட்டிக்கான ஒத்திகையை பார்க்க எண்ணினாள். ஆதலால் அவளது கருத்தில் அவ்விடமும் அந்த மக்களும் அத்தனை தூரம் பதியவில்லை.

 

ராகவன் சென்று வரும் போதெல்லாம், இழையினியிடம் பகிர்ந்த விஷயங்களையும், இப்பொழுது நேரில் பார்ப்பதையும் பொருத்தி பார்த்து உவகை கொள்ள தொடங்கினாள் இழையினி.  

 

ரங்கனும் சொக்கனும், ஊர் தலைவரை சந்தித்து அறிமுகப்படுத்த இழையினி, இதழாவை பார்த்த அவர்கள் அளவில்லா சந்தோசம் அடைந்தார்கள்…..  

 

இதழாவோ அதோடு பயிற்சிக்கு சென்றுவிட, இழையினி அங்கு இருக்கும் எல்லை சாமி கோவிலை பராமரித்து பூஜை செய்யும் முதியதம்பதியரிடம் வளவளக்க ஆரம்பித்தாள். அவர்களுடனே , அவளின் நேரத்தை செலவிடலானாள். ரங்கனும் சொக்கனும் இருவரையும் சற்று தள்ளி நின்று நிழல் போல பார்த்துக்கொண்டனர்.

 

இப்படியே முழுதாக இரண்டு நாட்கள் கடந்திருக்க, இதழா குன்னூருக்கு பயணமானாள். ரங்கன், இழையினி கூடவே இருப்பதாக கூற இழையினியோ  மறுத்து, “இல்ல ரங்கன் அண்ணா.. நீங்க கிளம்புங்க, இதழா கூட போங்க… இங்க நான் இந்த  தாத்தா பாட்டிக்கூட இருந்துக்கிறேன், இவுங்க எல்லாரும் என்கூட நல்லா பழகுறாங்க… இந்த இடம் கூட எனக்கு இப்ப புதுசா தெரியல, கண்டிப்பா இவுங்கள தாண்டி எனக்கு எந்த பிரச்னையும் வராது… ஆனா குன்னூர் ல போட்டி… வேண்டாதவங்க கூட வர வாய்ப்பு இருக்கு. நம்ம இதழ ரெண்டு பேருமே போய் பார்த்துகோங்க அண்ணா… நான் சொன்னால் கேட்பீங்களா இல்லையா?” என்று கேட்க, இழையினி சொல்லில் அளவுகடந்த மரியாதை வைத்திருந்த இருவரும், மேலும் அந்த இடம் பாதுக்காப்பானது என்று உறுதியாக தெரிந்த பின் இதழாவோடு புறப்பட்டனர்.

 

இழையினியின் கனிவான பேச்சும், அடக்கமான குணமும் அவளை, அந்த மக்களிடம் வெகுவிரையில் சேர்த்திருந்தது…..

 

இதழா புறப்பட்டதும், தன் தந்தையுடன் கைபேசியில் பேச, கைபேசியின் சமிக்கை கிடைக்கிறதா என்று கையில் கைபேசியை ஏந்தியப்படி அவள் அந்த மலை பிரதேசத்தில் நடக்க தொடங்கினாள்.

 

அது திருவிழா காலம் என்பதால், இதன் மேல் ஆர்வம் உள்ள சில பேர் அந்த  பகுதிக்கு படையெடுத்தனர். சமிங்ஞை கிடைக்கிறதா என்று முன்னேறியவள் சற்று தள்ளிவந்துவிட்டத்தை அப்போது தான் உணர்ந்தாள்.

 

ஒரு சில இளம் பெண்கள், ஏதோ ஆய்வு போல் அங்கிருக்கும் விஷயங்களை ஆராய, அதை சிறிது நேரம் பார்த்துகொண்டு நின்றவள், அதன் பிறகு அவளது கைபேசியில், அவள் தந்தையுடன் பேசியவாறே சென்றுவிட்டாள்.

 

அப்பொழுது இரு கண்கள் அவளை முதல் முறையாக நோட்டமிட்டது… அந்த கண்களையோ, அந்த கண்களுக்கு சொந்தக்காரனையோ இழையினி கவனிக்கவில்லை.

 

இரவு அந்த மலைக்காட்டில், அடர் நீலமாக இருள் வெகுவேகமாக ஏறத்தொடங்கியது. கோத்தர்கள் பிரிவில் ஆண்கள் யாவரும் விவசாயம், இரும்பு செய்யும் தொழில், மண்பாண்டம் செய்யும் தொழில் என்று சென்று விட, பெண்கள்  சிறு சிறு கும்பலாக கூடி கூடி சமையலில் ஈடுப்பட்டனர். உன் வீடு என் வீடு என்று இல்லாமல் அனைவருக்கும் ஒன்றாகவே சமைத்தனர்.

 

அன்று இரவு சுட்ட மரவள்ளிக்கிழங்கும், சிறு வட்டவட்டமாக நறுக்கப்பட்ட மூங்கில் குருத்தும், மஞ்சளும் சேர்த்தது செய்யப்பட்ட சாரும் இரவு உணவாக பரிமாறப்பட, தன் தந்தை சொல்லி கேள்விப்பட்ட உணவை உண்ண இழையினி வெகு ஆர்வம் காட்டினாள்.

 

அவர்கள் மாமிசத்தை அதிகம் உண்ணவில்லை, அவர்களின் உணவு முறை முழுக்க சைவமாகவே இருந்தது. என்பது வயதுக்கு மேற்பட்டவர் கூட கண்கண்ணாடி இல்லாமல், கை தடி இல்லாமல் திடகாத்திரமாக அவர்களது பணியை அவர்களே செய்ய இழையினி வியப்பின் உச்சத்திற்கு சென்றாள்.

 

இயற்கையை அவர்கள் வழிப்பட்டு வந்தனர்…. அவர்கள் பொதுவாக திருவிழாவை பற்றி பேச அவர்களில் ஒரு பெண்மணி, “எல்லைச்சாமி க்கு கோழிக்கூப்பிடவே பூசை பண்ணிடுங்க அயித்த… ” என்று அந்த எல்லைச்சாமியை பராமரிக்கும் மூதாட்டியிடம் கூற அவரும் சரி என்பதாய் கூறினார்.

 

இதை பார்த்துக் கொண்டு இருந்த இழையினிக்கு எல்லைச்சாமி என்றால் எந்த சாமி, நம்மை போல அய்யனார் இருப்பாரோ என்று தோன்ற அதை அவள் உடனே மூதாட்டியிடமும் கேட்டாள். அதற்கோ அவர், “இல்ல தாயி.. இங்க எல்லைச்சாமியா நாங்க கும்பிடறது ஒரு மரம்… அது தான் இந்த ஊரையும், எங்களையும் பாதுகாக்குது…நாளைக்கு நீ வா தாயி நான் கூப்பிட்டு போறேன்…. அது போல இங்க சேல மரம்னு ஒன்னு இருக்கு… அது தான் எங்களுக்கு எல்லாம்.. ஆயிரம் வருசமா அந்த தாயி எங்களையும் எங்க மூதாதரையும், எங்க சங்கதியையும் பாதுக்காக்குது…” என்று கூற இழையினியோ, “என்ன ஆயிரம் வருசமா? … நிஜமாவா…” என்று அவளது கண்களை அகல விரித்து கேட்க, அந்த மூதாட்டியோ சிரித்துக்கொண்டே, “ஆமாம் தாயி… இங்க நாங்க எல்லாரும் பாதுக்காப்பா, சந்தோசமா வாழ அருள் புரியிற தெய்வம்… இந்த கோகால அந்த சேல மர பாதுக்காப்புல தான் இருக்கு.. நாளைக்கு சாயும்காலம் அங்க வழிபாடு இருக்கு தாயி..” என்று கூற, புது புது விஷயங்களை முதல் முதலாக கேள்விப்பட்ட இழையினிக்கு ஆர்வமும், சந்தோசம் ஒருங்கே இனைந்தது.

 

“ஆனா பாட்டி, அது என்ன கோகால்…” என்று அவர் வாக்கியத்தில் சொன்ன ஒரு வார்த்தை புரியாமல் கேட்க, அவரோ, “அது இந்த இடம் பேரு தான்.. நாங்க வாழ்ற பகுதிய இப்படி தான் சொல்லுவோம் தாயி.. ” என்று கூறிவிட்டு எழுந்து செல்ல அவள் அந்த இடத்தை ரசித்து, இதுவரை தெரிந்துக்கொண்ட விசயங்களை மனதினில் ஓடவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தாள்.

 

அவள் சிந்தனையை கலைக்கும் விதமாய், அவள் நாசியில் ஒரு சுகந்தம் தவழ, அதை ஆழ்ந்து அனுபவித்தவள்….அந்த மனம் அவளுக்கு நன்கு பரிச்சயப்பட்ட மனமாக இருக்கவே… அடுத்த ஓரிரு நொடிகளில் அதைக் கண்டுக்கொண்டாள். அது பச்சை மிளகின் மனம்… அவள் அமர்ந்து இருந்த மரத்தை சுற்றி மிளகு கொடி படர்ந்து இருக்க, அவள் பார்த்துக் கொண்டு இருக்கும் பொழுதே ஒரு பெண்மணி வந்து பாலில் கலந்து குடிப்பதற்காக அந்த மிளகை பறித்து செல்ல இழையினோ அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழும் முறைமையைக் கண்டு தன்னுள், ‘ஏன் தனது தந்தைக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது’ என்று புரிந்துக்கொண்டாள்.

 

அந்த பகுதியில் இருந்து சற்று எட்ட தள்ளி இருக்கும் அழகிய ஓடை இருக்க, அதில் வெள்ளி கம்பிகள் போல் தெளிர்ந்த நீர் ஓட, கதிரவனின் தங்க கதிர்கள் பிரதிபலிப்பதால்… காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மொத்த ஓடையும் தங்க பாகால் நிரப்பப்பட்டது போல இருக்கும் என்று அவள் தந்தை சொல்லி அறிந்திருந்த இழையினியோ அதை பார்க்க அடுத்தநாள் காலை கிளம்ப ஆயுத்தமானாள்.

 

மூதாட்டியின் குடிலிலே தங்கி இருந்ததால், அவர்களிடம் மட்டும் கூறிவிட்டு, எல்லைச்சாமி கோவிலின் பூசை முன்பு வந்துவிடுவதாக கூறிவிட்டு அடையாளங்கள் கேட்டுக்கொண்டு இழையினி அந்த ஒற்றை அடி பாதையில் நடக்க தொடங்கினாள்.

 

அதே நேரம், அந்த ஓடையை தேடி அவள் அன்னநடை போட்ட அந்த தருணம், ஓடைக்கருகில் இருந்த சிறு சிறு சிதைந்துக் காணப்பட்ட கல்லுக்காலை தனது கேமெராக் கொண்டு புகைப்படமாய் பதிவு செய்துக்கொண்டு இருந்தான் ஆதவன்.

அதை பார்வையிட்ட அவன் நண்பன் மகிழன், “ஆதவா, இப்படி இவ்வளோ சீக்கிரம், ஏன் என்ன எழுப்பி இங்க கூப்பிட்டு வந்த… ஏதோ ட்ரிப் போறதா இருந்தா, சென்னை பெங்களூர் இப்படி எங்கயாவது கூப்பிட்டு போடா… கோயம்புத்தூர், குன்னூர்னு இங்கயே சுத்தி சுத்தி வர… உங்கிட்ட இருக்க அந்தஸ்த்துக்கு.. வெளிநாடு போய் சாப்ட்வேர் , இல்ல வேற எதாச்சும் செய்வனு பார்த்தா, நீ உன்னோட சேர்த்து என்னையும் காடு கழனின்னு சுத்தவிடுற, இப்ப என்னடானா இங்க வந்து இந்த கல்லையும் மண்ணையும் பிளாஸ்டிக் பையில நிரப்பி, போட்டோ வேற எடுக்கிற…” என்று தனது நண்பனான ஆதவன் செயலில் சலித்து பேசிக்கொண்டு இருந்தான் மகிழன்.

 

ஆதவன் – கிராமப் பொருளாதாரம் (ஆக்ரோநோமி) யில் முதுகலை முடித்தவன்.

 

மகிழன் சொல்வது போல அவன் சிதைந்த கல்லுக்காலை புகைப்படம் எடுக்கவில்லை. கல்லுக்காலை சுற்றி செழுமையாக வளர்ந்திருந்த காளான் செடிகளை தான் ஆராயிந்துக் கொண்டு இருந்தான்.

 

ஆம் ஆக்ரோநோமி என்பது விவசாயம் பற்றிய படிப்பு, எந்த மண்ணில் என்ன விளையும், விளைச்சல் காண உகந்த மண்வளம் , நீர்வளம்  தகுந்த காலம் இவை அனைத்தையும் அறிந்து விவசாயம் செய்வது.

 

அவனது தந்தை, தாத்தா பார்த்துக்கொண்டு இருந்த உளவு தொழிலை இன்னும் மேன் படுத்தி அவர்களை நம்பி வாழும் மக்களுக்கும் தொடர்ந்து அவர்களது வயல், தோப்பு இதில் வேலை கொடுத்தவன், சொந்தமாக இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்சாலையும், இப்போது புதிதாக தொடங்கப்பட்ட காளான் உற்பத்தி நிறுவனத்தையும் பார்த்துக்கொண்டான் ஆதவன்.

 

வாரத்தில் இரண்டு நாட்கள், வயல், தோப்பு என்று மேற்பார்வை இடுபவன் மற்ற 4 நாட்கள்  தொழிற்சாலையில் இருப்பான். வாரத்தின் கடைசிநாளான ஞாயிறு அன்று அவனுக்காக செலவிடுவான். ஆயினும் அதுவும் விவசாயம் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். இதை தவிர, அவனது தாத்தாவிற்கும், அப்பாவிற்கும் ஒரு சில வேலைகளை ஒதிக்கி இருந்தான்.

 

ஆதவனின் வீட்டில் அவனது கையே ஓங்கி இருந்தது. மகிழன் – ஆதவனின் ஆருயிர் நண்பன். ஆதவன் இழுத்த இழுப்பிற்கு செல்பவன். ஆதவனின் நலம் விரும்பி. ஆதவன் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவன் எதிரில் மட்டுமே. ஆனால் மனதினுள்  எப்பொழுதும் யார்  பேசினாலும் அவர்களுக்கு மனதினுள் பதில் கூறிக்கொண்டே  தான் இருப்பான்.

 

“மகிழ், இப்ப ஏன் உன்ன இங்க கூப்பிட்டு வந்தேன்னு தெரியுமா?” என்று ஆதவன் கேட்க, மகிழனோ மனதினுள், “வேற எதுக்கு? கல்யாணாம் ஆகதனால  தான்…” என்று கூறினான்.

 

“அதுவும் இந்த குளிர் பிரதேசத்துக்கு” – ஆதவன்

 

“அது தான் டா எனக்கும் புரியவில்லை, பொண்டாட்டிக்கூட தேன்நிலவு வர இடத்துல நான் எதுக்கு டா…” – மகிழனின் மனதினுள்

 

“நம்ம காளான் பாக்டரி ஆரம்பித்தோம்ல புதுசா ” — ஆதவன்

 

“ஏது நம்மளா, நீ னு சொல்லு…”  –  மகிழனின் மனதினுள்

 

“டே மகிழ், நான் சொல்றத கவனி.. இல்லனா……” –ஆதவன்

 

“ஐயோ, கோவப்பட்டுடானே, விட்டுட்டு போய்டபோறான்” என்று மனதினுள் எண்ணிவிட்டு, “ஆதவா, என்னடா நீ, கவனிச்சிட்டு தான் இருக்கேன்… நீ சொல்லுடா”  என்று கூற ஆதவனோ, “மைண்ட் வாய்ஸ் மகிழன்… உனக்கு இந்த பேர நம்ம காலேஜ் பிரிண்ட்ஸ் வச்சது தப்பே இல்ல.. ஒழுங்கா கவனி..” என்று கூறிவிட்டு பேச தொடங்கினான்.

 

“மகிழ், நம்ம இப்போ புதுசா ஆரம்பித்திருக்க காளான் பாக்டரி-ல நல்ல க்ரோத் வரவைக்கதான் இங்க கொஞ்சம் ரிசெர்ச் பண்ணி சாம்பிள் கல்லெக்ட் பண்றேன்… இங்க காளான் அதிக அளவுல ஏ1 குவாலிட்டில வளருது… அதுக்கு காரணம் தெரிந்துக்கொள்ள தான் இப்ப வந்தது, இந்த யுக்தி பயன்படுத்தி நம்ம காளான் படுக்கை செஞ்சா கண்டிப்பா சக்செஸ் தான்…. புரியிதா… ” என்று கூறிமுடித்தான்.

 

அந்த ஓடையை ஒட்டி சில மூங்கில் கூட்டமிருக்க, மூங்கில் கூட்டத்தின் ஒருபுறமாய் இவர்கள் இருக்க, மறுபுறத்தில் இழையினி வந்து அந்த ஓடையின் அழைகை ரசித்துக்கொண்டு இருந்தாள்.

 

அவள் தந்தை கூறியது போலவே கதிரவனின் தங்ககதிர்கள் ஓடையில் பட்டு தெறிக்க, அந்த ஓடை நீரும் தங்கவர்மம் பூசிக்கொண்டது போல ஜொலித்தது…… அந்த நொடி, அவள் தந்தையின் ரசனையை மெச்சியவாறு பார்வையால் பருகிக்கொண்டு இருந்தாள் இழையினி.

 

“என்ன மகிழ், புரிந்ததா…?” – ஆதவன்

 

“புரியவில்லைன்னு சொன்னா விடவா போற…” – மகிழன்.

 

“மகிழ், மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டியா உன் மைண்ட் வாய்ச…” என்று ஆதவன் கூற அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு, “ஆதவா… நான் வேணும்னு செய்யலடா… யார் பேசினாலும் என் கண்ட்ரோல் இல்லாமலே மைண்ட் வாயிஸ் ஓபன் ஆகிடுது… நான் என்ன செய்ய…” என்று கூற ஆதவன் அவனை முறைக்க, மகிழன் தலை கவிழ்ந்துக் கொண்டான்.

 

“முறைபொண்ண கல்யாணாம் பண்ற வயசுல, என்ன முறைக்கிறான்…” என்று மனதினுள் எண்ணிய மறுநொடியே, “ஐயோ  ஐயோ இப்ப தான் திட்டுனான்.. அதுக்குள்ள அகேன் மைண்ட் வாய்ஸா…நோ அமைதியா இரு” என்று அவனது மனதுக்கு ஒரு பூட்டு போட்டுவிட்டு ஆதவனை கவனிக்க தொடங்கினான்.

 

ஆதவனோ வெகு தீவிரமாக அவனது வேலையில் லயித்திருக்க, ஆதவனின் அன்னை கூறியது மகிழனுக்கு நினைவு வர மெல்ல பேச்சை தொடர்ந்தான்….

 

“ஆதவா…. வேதா அம்மா…உன்கிட்ட கடந்த ஒரு வருசமா கல்யாணத்திற்கு சம்மதம் கேட்கிறாங்கா… உன் மனசுல எந்த பொண்ணும் இல்லன்னு எனக்கு தெரியும்… அப்புறமும் ஏன் கல்யாணத்திற்கு பிடிக்கொடுக்க மாட்டேங்கிற… அதுவும் அவுங்க சொல்ற பெண்ணை போய் பார்க்க கூட செய்யாமலே ஏன் வேணாம் சொல்ற…” என்று அவனது வாலுதனத்தை மூட்டை கட்டிவிட்டு ஆதவனின் அன்னை வேதா கேட்க சொன்னதுக்கு இணங்கி மகிழன் கேட்டுக் கொண்டு இருந்தான்.

 

இதுவரை வேண்டாம் என்றுமட்டுமே கூறியவனை யாரும் ஏன் என்று கேட்கவில்லை…. அதற்கு காரணம் ஆதவன் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதை யாரும் கேள்வி கேட்க இயலாது. அது அந்த குடும்பத்தில் அனைவருக்கும் தெரியும்…

 

ஆதலால் ஆதவனே சம்மதம் சொல்லும் வரை காத்திருக்க தொடங்கினர். இன்றுவரை பதில் இல்லாமல் போக, மகிழனின் மூலமாக பேச்சு தொடங்கப்பட்டது.

 

தன் நண்பனின் மூலமாய் தன் மகனின் மனதை அறிய முயன்ற அவன் அன்னைக்கு ஒரு சபாஷ் போட்டுக்கொண்டான் ஆதவன்.

 

மெலிதாக ஒரு புன்னகை அரும்ப, ஆதவன் தொடர்ந்தான்……

 

“ஹ்ம்ம்… இதுவரை இப்படி யாரும் கேட்டது இல்ல… யோசிச்சு பார்த்தா…எனக்கு கல்யாணம் பிடிக்காமல் இல்ல. ஏன்னு தெரியல.. என்னோட மனசுக்கு… சம்மதம் சொல்ல தோனல.. என்னை டிஸ்டர்ப் பண்றமாதி, என் மனசுக்கு நெருக்கமா ஏதோ ஒன்னு அந்த பொண்ணுக்கிட்ட நான் உணரனும், அப்படி ஒரு பெண்ணை நான் இதுவரை சந்திக்கல… ஆனா சந்திச்சா… நிச்சயம் அவள எதுக்காகவும் இழக்கமாட்டேன்…” என்று உறுதியுடன் கூறினான்.

 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே, இழையினி கிளம்ப ஆயுத்தமானாள்… அந்த பகுதியில்  ஈர பதம் அதிகமாக இருந்ததனால், அவளது காலணி-யில் சேரும் சகதியும் படிந்துவிட கிளம்ப எத்தனித்தநேரம், அது அவள் கருத்தில் பட்டது.

 

ஓடையில் கால்களை நீட்டி காலையும் காலணியையும் கழுவ எண்ணியவள், அதை செய்ய முனைந்தபோது, எதிர்பாரா விதமாகவோ அல்லது விதியின் விளையாட்டாகவோ அவளது காலணி நீரோடு போக, வேறு வலி இல்லாது கால்களை மட்டும் அலம்பிவிட்டு அந்த சதுப்பு நிலத்தில் அவளது பாதம் பதிய நடந்து சென்றாள்.

 

அவள் நடந்து செல்லும் போது… மூங்கில் புதர்களில் தெரிந்த இடைவேளை  வழி, அங்கு குழுமி இருந்த காளான் வகைகளை பார்க்க எண்ணிய ஆதவன் காமெராவை மட்டும் கீழ் நோக்கி பிடித்து எதார்த்தமாக சில பல கோணங்களில் காமெராவை கிளிக் செய்ய, இங்கு மகிழனோ பொறுமை இழந்து ஆதவனிடம், “ஆதாவா…எதோ மனசுல இருக்குற எதிர்ப்பார்ப்புன்னு சொல்ற.. அது என்னனு கொஞ்சம் சொல்லுடா…. போட்டோ பிறகு எடுக்கலாம்…ப்ளீஸ் நண்பா..” என்று கூற ஆதவன் அவனுடைய பணியை நிறுத்திவிட்டு மகிழனிடம் கூற தொடங்கினான்… அவனின் ஆழ் மனதின் ஆசையை.

 

இவர்களில் உரையாடாலின் போதே இழையினி பார்க்க வந்த அழகை ரசித்து விட்டு சென்று விட… இப்போது மூங்கில் கூட்டத்தின் மறுப்பக்கமும் யாரும் இல்லாது அழகிய தனிமையே நிறைந்திருந்தது.

 

அளவான சின்ன சிரிப்புடன், இதழ்பிரிக்காமல் நண்பனை பார்த்து புன்னகை சிந்தியவன், சுற்றி இருந்த ரம்யமானா சூழலும், யாருமற்ற அமைதியும் அவனது ஆழ் மன சிந்தனை, முதல் முதலாய் வெளிவர காரணமாய் இருந்தது.

 

“உன் மனசுக்கு எப்ப பிடிச்சு… நீ எப்ப கல்யாணம் பண்ணி, அதுக்கப்பறம் நான் எப்ப பண்ணறது….” என்று மகிழன் கூற “எனக்கு நம்பிக்கை இருக்கு…” என்ற ஒற்றை வாக்கியத்தை மட்டும் கூறிவிட்டு, ஆதவன் ஸ்டைலாக அவனது இடது கரம் கொண்டு அவனது சிகையை கோதிக்கொண்டான்.

 

அப்படியே வளவளத்துக்கொண்டே மகிழன் வர, ஆதவனோ நடந்தபடியே இதுவரை தான் பதிவு செய்திருந்த படத்தை ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினான், மகிழனிடம் ஒரு சின்ன சிரிப்புடன்…. இப்படியே ஒவ்வொரு புகைப்படமாக வர, நடுவினிலே ஒரு புகைப்படம் வர, ஆதவனின் விழி கூர்மை ஆனது.

 

ஈர சதுப்பு நில மண்ணில், தெரியப்பட்ட சிவந்த கால்கள்…. கணுக்காலை சுற்றி இருந்த மெல்லிய வெள்ளி கொலுசு…..குதிங்காலுக்கு மேலாக இருந்த சிறு மச்சம்….

 

அந்த இடத்தில் யார் இருகிறார்கள் என்றும் வேகமாக கண்களை சுழல விட்டப்படியே “மகிழ், இங்க யாராச்சும் இருந்தத பார்த்தியாடா… ” என்று ஆதவன் வேகமாக கேட்க, மகிழனோ, “ஹ்ம்ம் ஆமாம் டா.. கொஞ்சம் முன்னாடி ஏதோ பொண்ணு போனது போல இருந்தது….” என்று மகிழன் கூற, ஆதவனோ மகிழன் கூறியதை உள்வாங்கிக் விட்டு, அந்த கால்தடம் பதிந்த பாதையில் நடக்க தொடங்க, அப்பொழுது ஒரு குரல் அவனின் நடையை தடை செய்தது….

 

Advertisement